பரிசுத்த வேதாகமம் அறிமுகம் Introduction to The Holy Bible with pdf

 

 பரிசுத்த வேதாகமம் அறிமுகம் Introduction to The Holy Bible

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும். கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமான அனைத்து தேவ பிள்ளைகளுக்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். இந்தக் கட்டுரையை மிகுந்த கவனத்தோடும் ஜெபத்தோடு பல புத்தகங்களில் இருந்த செய்திகளை தொகுத்து உங்களுக்கு வழங்கி இருக்கிறோம். இந்தக் கட்டுரையில் நாம் படிக்க இருக்கும் தலைப்புகளின் பட்டியலை இப்பொழுது பார்க்கலாம்.

 1. பரிசுத்த வேதாகமத்தில் உள்ள  வரலாற்று புத்தகங்கள்
 2. கவிதை புத்தகங்கள்
 3. தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள்
 4. நிறுபங்கள் ( கடிதங்கள்)
 5. பரிசுத்த வேதாகமத்தில் உள்ள இதர புத்தகங்கள்
 6. வேதாகமத்தின் ஆசிரியர் எழுதியவர்கள்
 7. வேதாகமம் எழுதப்பட்ட காலம்
 8. தள்ளுபடி ஆகமங்கள் (THE APOCRYPHAL BOOKS)
 9. புதிய ஏற்பாட்டு புத்தகங்கள்
 10. பரிசுத்த வேதாகமத்தில் உள்ள மொழிகள்
 11. பரிசுத்த வேதாகமத்தை எழுத பயன்படுத்தப்பட்ட பொருட்கள்
 12. பரிசுத்த வேதாகமத்தின் இலக்கிய நயம்
 13. வேதாகமம் ஒரு அறிவியல் களஞ்சியம் என்பதற்கு சில சான்றுகள்
 14. வேதாகமத்தின் மையக்கருத்து
 15. பரிசுத்த வேதாகமத்தின் மொழி மாற்றங்கள்
 16. தமிழில் பரிசுத்த வேதாகமம் பிறந்த வரலாறு
 17. பரிசுத்த வேதாகமத்தை குறித்த பிற தகவல்கள்

தேவன் தம்மை வெளிப்படுத்துவதற்காக, தமது மிகுந்த அன்பினால், ஜீவிக்கிற தேவனுடைய வார்த்தையை கிறிஸ்துவாக உலகத்திற்கு அனுப்பினார். ஜிவிக்கிற வார்த்தையாகிய கிறிஸ்துவை பற்றி நாம் கற்று கொள்ளுவதற்காக, எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தைகளே பரிசுத்த வேதாகமம் ஆகும்.

வேதாகமம் என்பது பழைய ஏற்பாடு என்று அழைக்கப்படும் 39 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பும் புதிய ஏற்பாடு என்று அழைக்கபடும் 27 புத்தகங்களின் தொகுப்பும் இணைந்ததாகும். “ஏற்பாடு என்பது உடன்படிக்கை என்று பொருள்படும்”. இந்த அறுபத்து ஆறு புத்தகங்களையும் பெரும்பாலும் ஒவ்வொரு தனி மனிதனைக் கொண்டு பரிசுத்த ஆவியானவர் எழுதினார்.

எடுத்துக்காட்டு: பிரசங்கி, மத்தேயு, ரோமர். ஆனால் சங்கீதங்கள் நீதிமொழிகள் ஆகிய புத்தகங்கள் பலர் எழுதினவற்றின் தொகுப்பாக அமைந்துள்ளது. வேதாகமத்தின் ஆங்கிலப் பெயரான பைபிள் என்பது புத்தகங்கள் என்று பொருள்படும் “பிப்ளியா” என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து வந்துள்ளது.

தெய்வத்தைப் பற்றிய எழுதும் நூல்களைப் வேதம் என்றும், தெய்வீக நூல்கள், சட்ட நூல்கள் , தூய நூல்கள் போன்றவற்றை ஆகமங்கள் என்றும் அழைப்பது தமிழ் மரபு. இச்சொற்களை இணைத்து வேதாகமம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. வேதாகமம் தேவனால் நமக்கு வெளிப்படுத்தப்பட்ட புத்தகமாகும். எனவே இதை மறைக்கப்பட்டது என்று பொருள் கொள்ளும் திருமறை என்று அழைப்பதும் எந்த மொழியிலும் இல்லாத வார்த்தையாகிய விவிலியம் என்று அழைப்பதும் பொருத்தமானது அல்ல.

வாழ்க்கைக்கு வழிகாட்டியாக தேவனால் வெளிப்படுத்தப்பட்டு அருளப்பட்ட வேதாகமும் ஆனது யாவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டுள்ளது. திறந்த மனதுடன் கவனமாக கற்போர்க்கு எளிதில் விளங்கக் கூடிய புத்தகமாகும். வேதாகமத்தில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதி வரலாறாகவும் மூன்றில் ஒரு பகுதி தீர்க்கதரிசனமாகவும் உள்ளது. வேண்டுதல்கள் துதித்தல் அறிவுரைகள் போன்றவை அதன் மீதமுள்ள பகுதியில் உள்ளன.

பரிசுத்த வேதாகமத்தில் உள்ள  வரலாற்று புத்தகங்கள் (History books in the Holy Bible)

ஆதியாகமத்திலிருந்து எஸ்தர் வரை பழைய ஏற்பாட்டின் 17 புத்தகங்களும் மத்தேயு முதல் அப்போஸ்தலர் நடபடிகள் வரை புதிய ஏற்பாட்டின் 5 புத்தகங்களும் வரலாற்று புத்தகங்கள் ஆகும்.

ஆதியாகமம் முதல் உபாகமம் வரை உள்ள புத்தகங்களை ஐந்தாகமம் என்று கூறுவது உண்டு. மனிதனின் படைப்பு பழையகால மனிதர்களின் வாழ்க்கை போன்றவற்றை எழுதியவர்களுக்கு ஆவியானவர் கற்றுத் தந்தார். மனிதனின் கட்டுக்கதைகளையும் பாரம்பரிய கற்பனை கதைகளையும் எழுதாமல் ஆவியானவர் கூறினதையே எழுதினர்.

மேலும் எழுதினவர்களின் காலத்தில் நடந்த வற்றிலும் வரலாற்றிலும் எவைகளை எழுதவேண்டுமென்று ஆவியானவர் ஏவினாரோ அவைகளே எழுதப்பட்டன.

கவிதை புத்தகங்கள் (Books of Poetry in the Bible)

யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஆகியவை கவிதை நூல்கள் ஆகும். புலம்பல் நூல் கவிதைகளால் ஆனது. எனினும் அது பெரிய தீர்க்கதரிசிகளில் நூல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆபகூக் ஒரு கவிதை நூலாக இருந்தாலும் அது சிறிய தீர்க்கதரிசிசன நூல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கவிதை நூல்களை வேதாகமத்தின் இதயம் என்று சிலர் குறிப்பிடுகின்றனர். யோபுவின் வரலாறு என்ற நூலில் வரலாற்றை விட கருத்துக்கள் மிகுதியாக இருப்பதினால் அதின் நடையை கருத்தில் கொண்டு அதை கவிதை நூல்களில் ஒன்றாக கருதுகின்றனர்.

தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் (Books of the Prophets in the Bible)

இரகசியங்களை வெளிப்படுத்துவதையும் பிற்காலத்து நிகழ்ச்சிகளை முன் உரைப்பதையும் தீர்க்கதரிசனம் என்று அழைக்கிறோம். தீர்க்கதரிசிகளை கருத்தில் கொண்டு அவர்களின் நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த நூல்களில் சில வரலாற்றுப் பகுதிகளும் தரப்பட்டுள்ளன.

ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஆகிய ஐந்து நூல்களும் பெரிய தீர்க்கதரிசிகளின் நூல்கள் எனவும் ஓசியா முதல் மல்கியா வரை உள்ள 12 நூல்களும் சிறிய தீர்க்கதரிசிகளின் நூல்கள் எனவும் கருதுகின்றனர்.

புதிய ஏற்பாட்டில் கடைசி நூலான வெளிப்படுத்தின விசேஷம் தீர்க்கதரிசன நூலாகும்.

நிருபங்கள் ( கடிதங்கள்) (Epistles in the Bible)

புதிய ஏற்பாட்டில் ரோமர் முதல் பிலேமொன் வரை 13 நூல்கள் குறிப்பிட்ட சபைகளுக்கு அல்லது தனி மனிதருக்கு பவுல் எழுதிய கடிதங்கள்ளாக அமைகின்றன.

எபிரேயர் நிருபம் பழைய ஏற்பாட்டிற்கு  ஒரு விளக்கமாக அமையும் கடிதமாகும் இந்த நிருபத்தை எழுதியது யார் என்பதில் குழப்பம் இருக்கிறது.

யாக்கோபு முதல் யூதா வரை உள்ள ஏழு நூல்கள் பொதுவான கடிதங்கள் எனக் கருதப்படுகின்றன.

பரிசுத்த வேதாகமத்தில் உள்ள இதர புத்தகங்கள் (Other books in the Holy Bible)

 1. யோசுவாவின் காலத்தில் நிலவியல் நூலொன்று தயாரிக்கப்பட்டது (யோசு 18:9).
 2. சாமுவேல் அரசியலை குறித்து ஒரு நூல் எழுதினார் (1சாமு 10:25).
 3. யாசேர் என்பவரின் நூல் பண்டைய கால மக்களுக்கு நன்கு தெரிந்திருந்தது (யோசு 10:13; 2சாமு 1:18).
 4. சாமுவேல், நாத்தான், காத், இத்தோ, அகியா ஆகியோரின் நூல்களும் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது (1 நாளா 29:30; 2 நாளாக 9:29).

இந்த நூல்கள் இப்போது இல்லை இது போன்ற பல நூல்கள் பழக்கத்தில் இருந்தன.

வேதாகமத்தின் ஆசிரியர் எழுதியவர்கள் (Author of the Holy Bible)

வேதாகமம் முழுவதற்கும் ஆசிரியராக பரிசுத்த ஆவியானவர் செயல்பட்டார். தெரிந்துகொள்ளப்பட்ட சுமார் 40 பரிசுத்தவான்களுக்கு ஏவுதல் தந்து தாம் தாம் கூறுகின்றவற்றை அவர்கள் எழுதும்படி செய்தவர் ஆவியானவரே.

வேதாகமம் எழுதப்பட்ட காலம் (The time when the Holy Bible was written)

வேதாகமத்தின் பழமையான எழுத்தாளரான மோசே கி.மு. 16,17ஆம் நூற்றாண்டுகளின்போது எழுதினார். பழைய ஏற்பாட்டின் இறுதி நூல்கள் கி.மு. 5ஆம் நூற்றாண்டுகளில் எழுதபட்டவைகள்.

புதிய ஏற்பாட்டு நூல்களில் முதலாவதாக எழுதப்படதாக கருதப்படும் 1 தேசலனிகெயர் நிருபம் பவுலால் கி.பி.50 இல் எழுதப்பட்டது என கருதுகின்றனர். வேதாகமத்தின் நூல்களில் கடைசி நூலான வெளிப்படுத்தின விசேஷம் கி.பி. 90 இல் இருந்து கி.பி.105 ற்குள் எழுதபட்டது என கருதுகின்றனர்.

தள்ளுபடி ஆகமங்கள் (THE APOCRYPHAL BOOKS) ஒரு பார்வை

அப்போக்ரைபா என்றால் “மறைக்கப்பட்டது” அல்லது “மூடப்பட்டது” என்று
பொருளாகும். கனோனின் விதிகளை சில புத்தகங்கள் நிறைவேற்றவில்லை. அவைகள்:-

 • 1) 1 எஸ்ரா
 • 2) 2 எஸ்ரா
 • 3) தோபித்
 • 4) யூடித்
 • 5) எஸ்தரின் ஒய்வு
 • 6) சாலொமோனின் ஞானங்கள்
 • 7) பிரசங்கிகள்
 • 8) பாரூக்
 • 9) மூன்று எபிரெய குழந்தைகளின் பாடல்கள்
 • 10) சூசன்னாவின் வரலாறு
 • 11) பாகாலும் வலுசர்பமும்
 • 12) மனாசாவின் ஜெபம்
 • 13) 1 மக்கபேயர்
 • 14) 2 மக்கபேயர்
 • 15) எரேமியாவின் கடிதம்.

1546ல் டிரென்ட் ஆலோசனை கூட்டத்தில் ரோமன் கத்தோலிக்க சபை இந்த
புத்தகங்களை ஏற்றுக் கொண்டாலும் புரட்டாஸ்தாந்து சபைகள் இவை பரிசுத்த
ஆவியின் ஏவுதலினால் எழுதப்பட்டவை அல்ல என நிராகரித்து1546ல் டிரென்ட்
ஆலோசனை கூட்டத்தில் ரோமன் கத்தோலிக்க சபை இந்த புத்தகங்களை ஏற்றுக்
கொண்டாலும் புரட்டாஸ்தாந்து சபைகள் இவை பரிசுத்த ஆவியின் ஏவுதலினால்
எழுதப்பட்டவை அல்ல என நிராகரித்து விட்டனர்.

ஒருவேளை இப்புத்தகங்களில் வரலாற்று உண்மைகளும் திறமைகளும் இருந்தாலும்
இவைகள் கீழ்காணும் காரணங்களால் தள்ளப்படுகின்றன.

 1. * தள்ளுபடி ஆகமங்களை எழுதிய ஆசிரியர்கள் எவரும் தெய்வீக ஏவுதலை
 2. தெரிவிக்கவில்லை. சிலர் இதனை மறுக்கின்றனர் (எ.கா. 1மக் 4:46; 2மக்
 3. 2:23,15,38)
 4. * அநேக கிரேக்க மொழிபெயர்பில் இவைகள் இடம்பெற்றாலும் எபிரெய பதிப்பில்
 5. இவைகள் இடம்பெறவில்லை.
 6. * கி.பி.90ல் ஜெனிவாவில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் யூதர்கள் இவைகளை
 7. ஏற்றுக் கொள்ளவில்லை.
 8. * இவைகளில் பொய்யான வரலாறும், இடங்களும், தவறான வருடங்களும், உண்மையற்ற
 9. கட்டுகதைகளும் காணப்படுகின்றன.
 10. * வேதம் கூறும் தரமான உபதேசங்களுக்கு மாறாக சில பொய்யான உபதேசங்களை
 11. இவைகள் உபதேசிக்கின்றன. (தற்கொலை, தாக்குதல், மரித்தோருக்கான ஜெபம் போன்ற
 12. காரியங்களை நியாயப்படுத்துகின்றன)
 13. * இயேசுவும் புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களும் இந்த புத்தகங்களிலிருந்து ஒரு
 14. குறிப்பும் எடுத்து கொள்ளவில்லை. ஆனால் மற்றவைகளிலிருந்து நூறு கணக்கில் குறிப்பிடுகின்றனர்.
 15. * ஆதிகால சபைபிதாக்களான ஒரிஜன், ஜெரோம், டட்டுலியன், ஜெருசலேம் கிரிஸ்,
 16. தேர்ட்டுலியன் மற்றும் ஆத்ரசியஸ் போன்றோர் இவைகளை ஏற்று கொள்ளவில்லை.
 17. * முதல் நான்கு நூற்றாண்டுகளில் வேதம் சம்பந்தப்பட்ட ஆலோசனை கூட்டங்களில்
 18. இவைகள் அங்கிகரிக்கப்படவில்லை
 19. * லூதரும் சீர்திருத்தவாதிகளும் இவைகளை நிராகரித்தனர்
 20. * சீர்திருத்த காலங்களில் இருந்த ரோமன் கத்தோலிக்க அறிஞர்களும் தள்ளுபடி
 21. ஆகமங்களை நிராகரித்தனர்.

நமது வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில் இருப்பவருடன்

1) 1 எஸ்ரா
2) 2 எஸ்ரா
3) தோபித்
4) யூடித்
5) எஸ்தரின் ஒய்வு
6) சாலொமோனின் ஞானங்கள்
7) பிரசங்கிகள்
8) பாரூக்
9) மூன்று எபிரெய குழந்தைகளின் பாடல்கள்
10) சூசன்னாவின் வரலாறு
11) பாகாலும் வலுசர்பமும்
12) மனாசாவின் ஜெபம்
13) 1 மக்கபேயர்
14) 2 மக்கபேயர்
15) எரேமியாவின் கடிதம்.

என்ற நூல்களும் அக்கால மக்களிடம் இருந்தது. இந்நூல்களை ஆராய்ந்த யூத மதத் தலைவர்கள் மேலே கூறப்பட்டுள்ள காரணங்களுக்காக ஏற்கவில்லை.

தாங்கள் ஏற்றுக் கொண்ட நூல்களின் தொகுப்பை யூதர்கள் வேதாகமும் என்று அழைக்கின்றனர். யூதர்களின் வேதாகமமும் நமது கையில் இருக்கும் பழைய ஏற்பாடும் ஒன்றே.  புத்தகங்களின் வரிசையில் மட்டும் சில மாற்றங்கள் உள்ளன. யூதர்களாலும் ஆதி கிறிஸ்தவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படாத இந்த தள்ளுபடி ஆகமங்க ளை கி பி பதினாறாம் நூற்றாண்டில் தங்கள் வேதாகம பதிப்பில் ரோமன் கத்தோலிக்க சபையினர் இணைத்து கொண்டனர்.

புதிய ஏற்பாட்டு புத்தகங்கள் (New Testament books)

புதிய ஏற்பாடு காலத்தில் அனேகர் கிறிஸ்துவை குறித்து எழுதினர் (லூக்கா 1:2). தனித்தனியான சிறு நூல்களாகவும் கடிதங்கள்ளாகவும் அனேக நூல்கள் பயன்படுத்தப்பட்டன. இவற்றுள் எவற்றை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ஆதி திருச்சபை தலைவர்களும் பல சங்க தலைவர்களும் ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

இறுதியாக கிபி நான்காம் நூற்றாண்டில் அலெக்சாண்டரியவில்  சபை தலைவராயிருந்த அத்தனேசியஸ் என்பவரின் பரிந்துரையின்படி நமது புதிய ஏற்பாட்டிலுள்ள 27 நூல்களையும் ஏற்றுக்கொண்டனர்.

பரிசுத்த வேதாகமத்தில் உள்ள மொழிகள் (Languages ​​in the Holy Bible)

பழைய ஏற்பாட்டில் பெரும்பகுதி எபிரேய மொழியில் எழுதப்பட்டது. அதிலுள்ள எஸ்றா 4:8-6:18; 7:12-26; எரேமிய 10:11; தானியேல் 2:4-7:28 என்ற பகுதிகள் மட்டும் அரமேயு மொழியில் எழுதப்பட்டது.

இப்பகுதிகளை எழுதினவர்கள் பாபிலோனிய அரசு உலகின் பேரரசாக இருந்தபோது எழுதினார். பாபிலோனில் பயன்படுத்தப்பட்ட அரமேய மொழியில் எழுதினார்.

அக்கால யூதர்களுகலில் அநேகருக்கு எபிரேயு மொழியும் அரமேயுமொழி யும் தெரிந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய ஏற்பாடு முழுவதும் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது.

பரிசுத்த வேதாகமத்தை எழுத பயன்படுத்தப்பட்ட பொருட்கள் (Materials used to write the Holy Bible)

விலங்குகளில் தோள்களை நன்கு எழுதுவதற்கு ஏற்ப சிறப்பான முறையில் பதப்படுத்தப்பட்டு அதில் எழுதுவதற்கு என்று தயாரிக்கப்பட்ட சிறப்பான மையைப் பயன்படுத்தி எழுதினார். இவற்றை தோள் சுருள்கள் என்பர்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட தோல் சுருல்கள் இன்றும் பத்திரமாக பாதுகாக்கப்படு வருகின்றன. கேரளாவில் காலிகட் என்ற இடத்தில் உள்ள யூத ஜெப ஆலயத்திலும் இத்தகைய சுருள்கள் இன்றும் இருக்கின்றன.

எகிப்து நாட்டில் சனலில்லிருந்து தட்டையான *பாபினாஸ்* என்னும் எழுது பொருட்கள் தயாரிக்கப்பட்டு அவற்றில் எழுதும் வழக்கம் ஏற்பட்டது. இக்காலத்தில் *பேப்பர்* என்று அழைக்கபடும *காகிதம்* இவ்வகையைச் சார்ந்தத  ஆகும்.

பரிசுத்த வேதாகமத்தின் இலக்கிய நயம் (The grammatical style of the Holy Bible)

 1. உரைநடை
 2. கவிதை
 3. உருவகங்கள்
 4. உவமைகள்
 5. புதிர்கள்
 6. பழமொழிகள்

ஆகியவை வேதாகமத்தில் பல இடங்களில் காணப்படுகின்றன.

வேதாகமம் ஒரு அறிவியல் களஞ்சியம் என்பதற்கு சில சான்றுகள் (Some evidence that the Bible is a scientific repository)

 1. நிலவியல்
 2. புவியியல்
 3. தாவரவியல்
 4. விலங்கியல்
 5. வானியல்

போன்ற பல அறிவியல் சார்ந்த குறிப்புகளை வேதாகமத்தில் காணப்படுகின்றன. முதல் முதலில் எழுதப்பட்ட வேதாகம நூலாகிய யோபுவின் நூலில் (கிமு 15ஆம் நூற்றாண்டு) நட்சத்திரங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

 1. பொருளியல்
 2. வணிகவியல்
 3. வரலாறு
 4. கட்டடக்கலை
 5. உலோக வடிவம்
 6. வேளாண்மை

போன்றவற்றைப் பற்றியும் குறிப்புகள் வேதாகமத்தில் உண்டு.

வேதாகமத்தின் மையக்கருத்து (The central theme of the Bible)

வேதாகமத்தை ஒரே சொல்லில் கூற வேண்டுமெனில் அது *கிறிஸ்து* என்பதாகும். ஜீவிக்கிற வார்த்தையாகிய கிறிஸ்துவைப் பற்றி எழுதப் பட்டதே எழுதப்பட்ட வார்த்தையாகிய வேதாகமும.*

வரலாறு என்பது அவரது கதையே (History is his story). வரலாற்றை கிமு கிபி எனப் பிரித்த வரலாற்று நாயர்கனும் அவரே. வேதத்தின் பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு என்ற பிரிவுகளுக்கு காரணமும் கிறிஸ்துவே.

பரிசுத்த வேதாகமத்தின் மொழி மாற்றங்கள் )Translation of the Holy Bible)

யூதர்கள் தங்களுடைய வேதாகமம் மான பழைய ஏற்பாட்டை ஏறக்குறைய கிமு 285 இல் கிரேக்க மொழி மாற்றம் செய்தனர். இம்மொழி மாற்றத்திற்கு *செப்த்துவாஜிந்த்* என்று பெயர். அதில் சில பிரதிகளில் தள்ளுபடி ஆகமமும் சேர்க்கப்பட்டுள்ளது.

கிபி இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் ரோமர்களின் மொழியான *லத்தின்*, எகிப்தியரின் மொழியான *காப்டில்*,  சீரியரின் மொழியான *சிரியாக்* போன்ற மொழிகளில் பழைய ஏற்பாடு மொழிமாற்றம் செய்யப்பட்டது.

கிபி 383 இல் முதலாம் தாமஸ்கஸ் என்ற போபின் வேண்டுகோளுக்கு இணங்க ஜெரோம் என்பவர் பழைய ஏற்பாட்டை லத்தீன் மொழிக்கு மொழிமாற்றம் செய்ய தொடங்கி சுமார் 27 ஆண்டுகளில் முடித்தார்.  இந்நூல் வல்கேட் என்று அழைக்கப்படுகிறது.

பல நூற்றாண்டுகளாக உரோமன் கத்தோலிக்க சபை பிரிவின் தலைமை,
தங்கள் போதகர்கள் தவிர மற்றவர்கள் வேதத்தை வாசிப்பது தடை செய்யப்பட்டிருந்தது.

வேதத்தை மொழி மாற்றம் செய்யவும் கற்கவும் முற்பட்ட அனேகர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். விக்லிப் என்பவர் கிபி 1380 ல் புதிய ஏற்பாட்டையும் 1382 இல் பழைய ஏற்பாட்டையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார்.

கி பி பதினாறாம் நூற்றாண்டில் டின்டெல் என்பவர், வேதாகமத்தின் ஆங்கில மொழியாக்கத்தில் ஈடுபட்டு ரத்த சாட்சியாக மரித்தார். அவரது மொழியாக்கம் பிற்கால ஆங்கில வேதாகமத்திற்கு அடித்தளமாக அமைந்தது. புதிய ஏற்பாட்டையும் பழைய ஏற்பாட்டின் பெரும் பகுதியையும் அவர் ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்தார். அவரது நண்பரான
கவர்டேல் என்பவர் ஆங்கில வேதாகமத்தை 1535 இல் வெளியிட்டார்.

அதன்பின் வெளியிடப்பட்டதில் மிகவும் புகழ்பெற்றதும் பலரால் பயன்படுத்தப்பட்டு வருவதும் ஜேம்ஸ் அரசரின் அனுமதிக்கப்பட்ட பதிப்பு (king James version) ஆகும். ஸ்காட்லாந்தின் ஆறாவது ஜேம்ஸ அரசர்
இங்கிலாந்தின் முதலாவது ஜேம்ஸ் அரசர் ஆனார்.

அவர் வேதாகமத்தை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்வதற்கு என சிறந்த வல்லுனர்களை தெரிவு செய்து கவனமாக பணிபுரியும படி் செய்தார். அதன் பயனாக இந்த வேதாகமும் கிபி 1611 இல் வெளியிப்பட்டது. தற்சமயம் அனேக ஆங்கில வேதாகமம் பதிப்புகள் உண்டு.

கிபி 15ஆம் நூற்றாண்டில் ஜோகான் மென்றலின் என்பவரால் கிபி 1466 இல் ஜெர்மன் மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட வேதாகமமும் அச்சடிக்கப்பட்டது. இதுவே உலகின் முதலில் அச்சடிக்கப்பட்ட வேதாகமும் ஆகும். மார்டின் லூதர் புதிய ஏற்பாட்டை 1521 இல் ஜெர்மன் மொழியாக்கம் செய்தார். தொடர்ந்து பழைய ஏற்பாடு நூல்களை 1532 லும் தல்லுபடியாகமங்களை 1534 லும் ஜெர்மன் மொழியில் வெளியிட்டார்.

தமிழில் பரிசுத்த வேதாகமம் பிறந்த வரலாறு (History of the Holy Bible written in Tamil)

இந்தியாவில் இலக்கிய வரலாற்றில் தமிழ் மொழிக்கு இரண்டு தனிச்சிறப்பும் மேன்மையும் உண்டு. அதில் ஒன்று இந்திய மொழிகளிலேயே தமிழ் மொழியில் தான் முதன் முதலில் புத்தகம் அச்சிடப்பட்டது. இது தமிழுக்கு ஓரு தனிச்சிறப்பு. அதுவும் இந்தியாவிலேயே முதன் முதலாக அச்சிடப்பட்ட அந்த நூல் நமது பரிசுத்த வேதாகமம் தான் என்பது தமிழ் மொழியின் மற்றொரு தனிச்சிறப்பு.

தமிழ் மொழியில் வேதாகமம் மொழி பெயர்க்கப்படுவதற்கு முக்கிய காரணமாயிருந்தவர் டென்மார்க்கு தேசத்தின் அரசன் நான்காம் பிரடெரிக். இந்தியாவின் மேல் இருந்த ஊழிய பாரம் அவரை மிஷனரிகளை அனுப்புமாறு தீவிரம் கொள்ளச் செய்தது. அதன் விளைவாக ஜெர்மானியரான 23 வயது சீகன் பால்க் இந்தியாவிற்கு மிஷனரியாக பணியாற்ற வந்தார்.

சீகன் பால்க் தனது 16ஆவது வயதில் இரட்சிக்கப்பட்டார். இந்த அனுபவத்திற்கு பின்பு கல்லூரி மாணவராக இருக்கும் சமயத்தில் பின்வரும் சவாலான வார்த்தைகளை அவர் கேட்க நேர்ந்தது. “புறஜாதியார் தேசத்திலே ஒரே ஒரு ஆத்துமா இரட்சிக்கப்படுவது, ஐரோப்பாவில்லுள்ள ஒரு கிறிஸ்தவ தேசத்தில் 100 ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவதற்கு சமம்”.

இந்த வார்த்தைகளின் மூலமாக தேவன் சீகன் பால்க்கை மிஷனரி ஊழியத்திற்கு அழைத்தார். சந்தேகம், உபத்திரவம், அடிக்கடி உண்டாகும் சரீர சுகவீனம் என இவைகளின் மத்தியில் சீகன் பால்க் தேவனுடைய அழைப்பை ஏற்றுக் கொண்டு இந்தியாவிற்கு மிஷனரியாக செல்ல தன்னை ஆயத்தப்படுத்தினார். ஆனால் அது அவருக்கு ஒரு சவாலாகத் தான் இருந்தது.

ஏனெனில் ஐரோப்பா கண்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அனைத்து கிறிஸ்தவ சமுதாயமும் வெளி நாட்டிற்கு மிஷனரியை அனுப்பவது வீண் என்றும், விருதா ஊழியம் என்றும் நம்புகின்ற ஒரு காலமாக அந்நாட்கள் இருந்தன.

ஒரு வழியாக எல்லா எதிர்ப்புகளையும் கடந்து 1705 ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் நாள் தன் நண்பர் – 29 வயது நிரம்பிய ப்ளூட்சுடன் சேர்ந்து இந்தியாவிற்கு பிராட்டஸ்டண்டு சபையால் அனுப்பப்பட்ட முதல் மிஷனரிகளாக தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள்.

7 மாத கடல் பிராயணத்தின் முடிவில் அவர்கள் இந்தியாவின் தரங்கம்பாடியில் வந்து சேர்ந்தனர். அன்று கப்பலில் இருந்து அவர்களை கரைக்கு அழைத்துச் செல்ல ஒருவரும் இல்லை. எனவே கடற்கரைவில் இறங்க முடியாமல் அநேக நாட்களாய் கப்பலிலேயே உண்ண உணவும் இல்லாமல் காத்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

இறுதியாக, அந்த கப்பல் இருந்த பக்கமாக மீன் பிடிக்க வந்த ஒரு படகில் ஏறி கரை நோக்கி போனார்கள். அவர்கள் இருவரும் இந்திய மண்ணிலே கால் வைத்த நாள் இந்தியாவின் சுவிசேச சரித்திரத்திலே மறக்கமுடியாத நாள்.1706ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி காலை 10 மணிக்கு தரங்கம்பாடியில் அவர்கள் இறங்கினார்கள்.

ஆனால், டேனிஷ் கிழக்கிந்திய அதிகாரிகளுக்கு இவ்வருகை வெறுப்பையே தந்தது. மன்னரால் அனுப்பப்பட்டிருந்த இருவரும் தங்கள் வேலைகளை கண்காணித்து அரசருக்கு தெரியப்படுத்தும் உளவாளிகளாக இருக்கலாம் என சந்தேகித்தனர்.

அதன் காரணமாக, முறையான உபசரிப்பு இல்லை, தங்க நல்ல இடம் கொடுக்கப்படவில்லை. எனவே, சீகனும் அவர்து தோழரும் போர் கைதிகளையும், போர்ச்சுகீசிய அடிமைகளையும் அடைத்து வைக்கும் கூரைகளில் தங்கினர். டேனிஷ் கிழக்கிந்திய கம்பனியால் போதுமான அனுசரிப்பு இல்லாவிட்டாலும், இந்தியாவில் தங்கியிருந்த ஜெர்மானியர்கள் அவருக்கு உதவினர். ஆங்கிலேயர்களும் தங்கள் உதவியை அளித்து சீகன்பால்க்கின் மிஷனரி ஊழியத்தை தாங்கினர். இந்தியாவில் தங்கள் காலனி ஆதிக்கத்தை நாட்ட டென்மார்க், போர்ச்சுகல், ஃபிரான்ஸ், இங்கிலாந்து என பல ஐரோப்பிய தேசங்கள் தங்களுக்குள் போராடி வ‌ந்த நேரமது. இருந்தாலும், அவர்கள் ஒன்றிப் போனது இது போன்ற‌ சில மிஷனரி ஊழியங்களில் தான்.

சீகன்பால்க் டேனிஷ் மன்னரால் அனுப்பப்பட்ட போதகரெனினும், அவர் கிறிஸ்துவின் சுவிசேஷ பணிக்காக தன்னை அர்ப்பணித்ததால் அவருக்கு உதவ ஜெர்மானியர்களும் ஆங்கிலேயர்களும் முன்வந்தனர்.

சீகன் தன் அருட்பணியைத் தொடங்கினார். அவருக்கு இடையூறு அளித்த மற்றொன்று மொழி. தமிழ் மொழி அறியாது சுவிசேஷத்தை அறிவிக்க திணறினார். இத்திணறல் அவரை தமிழ் மொழி கற்றுக்கொள்ள வகை செய்தது.

அப்போது அவருக்கு முதலியப்பா என்ற இந்தியரும் ஒரு தமிழ் மொழி புலவரும் உதவிக்கரம் கொடுத்தனர். அவர்களது உதவியோடு தமிழ் மொழியை கற்றுக் கொண்டார். 5000த்திற்கும் மேலான தமிழ் வார்த்தைகளைத் திரட்டி மனனமிட்டுக் கொண்டார்.

சிறுக சிறுக இலக்கண இலக்கியங்களை பயின்று, கடற்கரை மணலில் சில எழுத்து பயிற்சிகளை மேற்கொண்டு தமிழில் நல்ல தேர்ச்சிப் பெற்றார். தனக்கு கிடைத்த அருட்கொடைகளைக் கொண்டு இந்தியர்களுக்காக ஒரு சுவிசேஷ பள்ளியை ஆரம்பித்தார், மேற்கத்திய மொழிகளில் எழுதப்பட்ட பரிசுத்த வேதாகமங்கள், சுவிசேஷ புத்தகங்கள், பாடல் புத்தகங்கள், தியான நூல்கள் முதலிய பல நூல்கள் அடங்கிய ஒரு நூலகமும் அவரால் நிறுவப்பட்டது. இங்கிருந்து இந்தியாவின் பல இடங்களுக்கு நூல்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

அவரது முயற்சியால், புராட்டஸ்டன்டு கிறித்துவ ஆலயம் ஒன்று இந்தியாவில் கட்டப்பட்டது. முந்நூறு ஆண்டுகளைத் தாண்டி நிற்கும் பழமையான  தமிழ் லுத்தரன் திருச்சபை தான் அந்த ஆலயம்!

சீகனது சுவிசேஷப் பணிக்கு பெரும் இடையூறு செய்தவர் ஹாசியஸ் (அக்கால டேனிஷ் கிழக்கிந்திய கம்பனியின் கவர்னர்). இந்தியர்கள் கிறிஸ்தவர்களாக மாறினால் மேற்கத்திய வியாபாரம் பாதிக்கப்படும் என ஹாசியஸ் கருதினார். எனவே மிஷனரிகளால் நற்செய்தி அறிவிக்கப்படாமல் இருக்க பல இன்னல்களை கொடுத்தார்.

அதே நேரத்தில் பல ஐரோப்பியர்கள் தங்கள் வீட்டு வேலைகளுக்கு இந்தியர்களை பயன்படுத்தி வந்தனர், அடிமை வர்த்தகமும் இலகுவாக நிலவி வந்தது. இச்செயல்களெல்லாம் வேதத்திற்கு எதிரானவை என சீகன் பால்க் மக்களிடையே போதித்து வந்தார்.

ஹாஸியசின் கொள்கையை மீறி சுவிசேசமும் அறிவிக்கப்பட்டது. சீகனின் திருப்பணிகள் கவர்னருக்கு வெறுப்பை உண்டாக்கின. அதன் விளைவாக, இரவு வேளை ஒன்றில் ஜெபத்தில் ஈடுபட்டிருந்த சீகன் பால்க்கை போலீசார் கைது செய்தனர். நான்கு மாதம் சிறை தண்டனை அனுபவித்தார். சிறைவாசத்தின் போது, சுவிசேசத்திற்காக ஒரு கிறிஸ்தவன் அனுபவிக்கும் இன்னல்களின் பாக்கியத்தை உணர்ந்தார். அவைகளை விவரிக்கும் இரண்டு நூல்களையும் எழுதினார்.

சிறைவாசத்திற்கு பின்பு, சீகனின் அருட்பணி தொடர்ந்தது. பல மக்கள் கிறிஸ்துவுக்குள்ளாக வழி நடத்தப்பட்டனர். இருப்பினும் தமிழ் மொழியில் வேதாகமம் இல்லாதது ஒரு பெரிய இழப்பாக இருந்தது. தமிழில் பரிசுத்த வேதாகமத்தை மொழிப் பெயர்ப்பதின் மூலம் பல தமிழ் மக்களுக்கு சத்தியத்தை அறிவிக்க முடியும் என சீகன் உணர்ந்தார்.

அதனால், கிறிஸ்துவுக்குள் வந்த தமிழ் மக்களும் ஆழமான உண்மைகளை அறிந்து கொண்டு, இயேசு கிறிஸ்து காட்டிய வழிக்குள் நிலைத்திருப்பார்கள் என கருதினார். எனவே அதற்கான பணிகள் தொடங்கின. கருத்தோடு வேதாகமத்தை தமிழ் மொழியில் எழுத தொடங்கினார்.

பரிசுத்த வேதாகமத்தில் ஒவ்வொரு வார்த்தையையும் மொழிபெயர்க்கும் போது அதற்குச் சரியான பதங்கள் கிடைக்காமல் சிரமப்பட வேண்டியிருந்தது. அதற்குரிய வார்த்தைகளை ஆராய பல இலக்கியங்களை சீகன் பால்க் ஆய்வு செய்தார். கத்தோலிக்க சபையார் பயன்படுத்தி வந்த சில வார்த்தைகளை தனது மொழி பெயர்ப்பில் பயன்படுத்தினார். மேலும் ஸ்கிமிட்டின் கிரேக்க புதிய ஏற்பாடு, லத்தீன் வல்கேட், மார்ட்டின் லூத்தரின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு ஆகியவற்றை தனது மொழி பெயர்ப்புக்கு ஆதாரமாக வைத்துக் கொண்டார். இதற்காக இரவு பகலென பாராது நேரமெடுத்து உழைத்தார்.

இறுதியில் தேவ ஒத்தாசையோடு அந்த கடின முயற்சியில் வெற்றியும் பெற்றார். மனித வாழ்வின் இருளை அகற்றும் ஒளியாகிய தேவ வார்த்தைகள் அடங்கிய முழு புதிய ஏற்பாட்டையும் 1711 மார்ச் 31இல் மொழிபெயர்த்து முடித்தார்.

மொழிபெயர்த்த இப்புதிய ஏற்பாட்டை அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டுமானால் பல பிரதிகள் எடுக்க வேண்டும். அதற்கு அவைகளை அச்சேற்ற வேண்டுமென விரும்பினார். அந்த நாட்களில் இந்தியாவில் எங்கும் அச்சகங்கள் கிடையாது.

எழுத்து ஓலையும், காகிதத்தில் மையினால் எழுதுவதுமே பழக்கமாக இருந்தது. எனவே ஜெர்மனியில் உள்ள தனது நண்பர்களுக்கு இதைத் தெரியப்படுத்தினார். அவர்களின் நன்கொடையால் அச்சு எந்திரமும் அச்சு எழுத்துக்களும் கப்பல் மார்க்கமாக இந்தியாவின் மண்ணில் தரை இறங்கியது. இவைகளை அச்சேற்றும் பணி 1713ஆம் வருடம் தொடங்கியது.

காகிதப் பற்றாக்குறை அச்சு எழுத்துக்கள் கிடைக்காமை ஆகிய தடைகள் இருந்தாலும் தேவ கிருபையால் எல்லாத் தடைகளையும் தனது கடின முயற்சியால் சீகன் பால்க் மேற்கொண்டார். 1715ஆம் வருடம் ஜூலை மாதம் 15ஆம் நாள் தமிழ் புதிய ஏற்பாடு அச்சாகி வெளிவந்தது.

“தேவனுக்காக நாம் எடுக்கும் பிராயசங்கள் ஒரு நாளும் வீணாகாது” என்பது சீகன் பால்க்கின் வாழ்வில் உண்மையானது. இப்படியாகத்தான் நம் கரங்களில் தவழும் இந்த அரிய பொக்கிஷம் அன்று வெளி வந்தது. அது மட்டுமா? இந்தியாவிலேயே தமிழிலேயே அச்சடிக்கப்பட்ட முதல் நூல் பைபிள் என்ற மகிமை உண்டானது.

தேவனுக்கே மகிமை உண்டாகட்டும். மேலும், பழைய ஏற்பாட்டையும் மொழிபெயர்க்கும் பணியில் சீகன் பால்க் ஈடுபட்டார். ரூத் புத்தகம் வரை மொழிபெயர்த்திருந்த சமயத்தில் தீடீரென சரீரத்தில் ஏற்பட்ட பெலவீனத்தினால் 1719ஆம் வருடம் பிப்ரவரி 23ஆம் நாள், தனது 37ஆம் வயதில் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை விட்டு கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

தனது மரண நாளில் காலை எழுந்து குடும்ப ஜெபம் செய்தபின் தனக்கு விருப்பமான பாடலை பாடுமாறு செய்து அப்படியே தேவ இராஜ்ஜியம் கடந்து சென்றார். அவர் விட்டுச் சென்ற மீதி பழைய ஏற்பாட்டுப் பகுதிகளை சென்னையில் மிஷனரியாக பணிபுரிந்த ஜெர்மானியர் பெஞ்சமின் சூல்ச் ஐயர் முடித்து அச்சேற்றினார்.

சீகன் பால்க்கின் வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் பாடம் நாம் எவ்வளவு நாட்கள் வாழ்கிறோம் என்ற நீளத்தை விட கர்த்தருக்காய் எவ்வளவு சாதித்தோம் என்ற ஆழம் தான் முக்கியம் என்பதே. அனேக தியாகங்களுக்குப் பிறகுதான இந்த பரிசுத்த வேதாகமம் வந்தது என்பதை நமது கரத்தில் இருக்கும் வேதாகமத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் படிக்கும்போதும் பார்க்கும்போதும் நினைவில் வைத்துக் கொள்வோம்.

அப்படியானால் இந்த புனித நூலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? அவைகளை நம் கால் மிதிபடும் இடத்தில் வைக்காமல் அல்லது பாடல் புத்தகங்களுக்கு பேப்பர் வெயிட்டாக பயன்படுத்தாமல் தேவனின் வார்த்தைகளின் மேன்மையை உணர்ந்தவர்களாய் அதை மிகுந்த ஜாக்கிரதையோடு காத்துக் கொள்வோம். அந்த வார்த்தைகளை அனுதினம் தியானிப்போம், அவைகள் நம்மை நித்திய வாழ்வுக்கு நேராய் வழிநடத்தும். ஆமென்.

பரிசுத்த வேதாகமத்தை குறித்த கூடுதலான தகவல்கள் (More information on the Holy Bible)

 1. வேதத்தில் உள்ள மொத்த அதிகாரங்கள் — 1189.
 2. பழைய வேதாகமத்தில் உள்ள அதிகாரங்கள் — 929.
 3. புதிய வேதாகமத்தில் உள்ள அதிகாரங்கள் — 260.
 4. அதிக வசனங்கள் உள்ள அதிகாரம் — சங்கீதம் 119.
 5. குறைவான வசனங்கள் உள்ள அதிகாரம் — சங்கீதம் 117.
 6. மத்திய அதிகாரம் – அதாவது மேலே கூறப்பட்டுள்ள 117 மற்றும் 119 க்கு நடுவில் உள்ள — சங்கீதம் 118.
 7. சங்கீதம் 118 க்கு முன்புள்ள அதிகாரங்கள் — 594 .
 8. சங்கீதம் 118 க்கு பின்புள்ள அதிகாரங்கள்– 594 .
 9. மொத்த அதிகாரங்கள் -1188
 10. (594+594)+1(மத்திய அதிகாரம்)=1189.
 11. மத்திய வசனம் — சங்கீதம் 118:8.
 12. சங்கீதம் 118:8 — கர்த்தர் மேல் பற்றுதலாய் இருப்பதே நலம்.
 13. சிறிய வசனம் யோவான் 11:35 இயேசு கண்ணீர் விட்டார்.
 14. பெரிய வசனம் (தமிழில்)– தானியேல் 5:23.
 15. வேதாகமத்தின் கடைசி வார்த்தை “ஆமென்”
 16. வேதாகமம் மூன்று மொழிகளில் எழுதப்பட்டது – எபிரேயம், அரமிக், கோய்னிக் கிரேக்க மொழி
 17. வேதாகமத்தில் 66 புத்தகங்கள் உள்ளன – இந்த எண்ணில் ஒன்றை கூட்டினால் 666 ஆகிவிடும்.
 18. இப்புத்தகங்கள் எழுதப்பட்ட வருடங்கள் சுமார் 1500 கி.மு விலிருந்து 100 கி.பி வரை. (மொத்தம் 1600 வருடங்கள்)
 19. வேதாகமம் சுமார் 40 நபர்களால் எழுதப்பட்டது. இதில் பலர் மற்றவர்களை பார்த்ததோ, அவர்களை பற்றி கேள்விப்பட்டதோ கிடையாது.
 20. பலர் மற்றவர்கள் எழுதினதை படித்தது கூட கிடையாது. இவர்கள் உலகின் பல பகுதிகளில் பிறந்தவர்கள்.
 21. மூன்று மொழிகளில் எழுதப்பட்டது.
 22. இவர்களில் படிக்காதவர்கள் (மீனவர்கள், ஆடு மேய்ப்பவர்கள்)
 23. முதல் படித்த ஞானி (சாலமன்) வரை எழுதியுள்ளனர்.
 24. உலகின் பல சட்டங்கள் வேதத்தின் அடிப்படையில் எழுதப்பட்டவை.
 25. வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள 3000 -க்கும் மேற்பட்ட தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியுள்ளன. இன்னும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீர்க்கதரிசனங்கள் நிறைவேற உள்ளன.
 26. உலகிலேயே அதிகமாக ஆராய்ச்சி செய்யப்படும் புத்தகம் வேதாகமம்.
 27. உலகிலேயே அதிகமாக படிக்கப்படும் புத்தகமும் வேதாகமம்.
 28. ஆங்கில வேதாகமத்தில் 3000 – க்கும் மேல் “கர்த்தர் சொன்னதாவது” என்று பொருள்பட எழுதப்பட்டுள்ளது.
 29. அதிக புத்தகங்கள் பரிசுத்த பவுல் (மொத்தம் 13 புத்தகங்கள்) புதிய ஏற்பாட்டில் எழுதியுள்ளார்.
 30. பழைய ஏற்பாட்டில் முதல் ஆகமங்களை மோசே எழுதினார்.
 • சமீபத்தில் ஒரு விஞ்ஞானி ஒரு மனிதன் தன்னிடம் காண்பிக்கப்பட்ட எந்த ஒரு பட்டியலிலும் ஏழு காரியங்களை சரியாக நினைவில் வைத்துக் கொள்ள முடியும் என்று கண்டுபிடித்திருக்கிறார்.
  மற்றொரு விஞ்ஞானி ‘அதனால்தான், ஏழு என்கிற காரியம் நாம் இருக்கிற இந்த உலகில் அடிக்கடி காணப்படுகிறது.

உதாரணமாக,

ஏழு உலக அதிசயங்கள்,
ஏழு ஸ்வரங்கள்,
ஏழு கடல்கள்,
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு,
வாரத்தில் நாட்கள் ஏழு,
வானவில்லின் நிறங்கள் ஏழு.’ என்று கூறினார்.

அது சரியென்றாலும், வேதத்தில் ஏழு என்கிற எண் மிகவும் விசேஷித்தாய் இருக்கிறது.
அதை குறித்து ஆராய்ந்தால் மிகவும் அற்புதமான ஒரு எண்ணாக இந்த ஏழு (7) திகழ்கிறது. இந்த எண் வேறு எந்த எண்களைக் காட்டிலும் அதிகமான முறை உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
ஏழு என்ற எண்ணும், அதின் பெருக்கு தொகையான எண்களுமே அதிகமாக வேதத்தில் காணப்படுகிறது.

 • ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என பொருள்படும்.
 • தேவன் ஏழாவது நாளில் ஓய்ந்திருந்து அந்த நாளை பரிசுத்தப்படுத்தினார்.
 • ஆபிரகாமுக்கு ஏழு ஆசீர்வாதங்கள் ஆதியாகமம் 12:2-3-ல் கூறப்படுகிறது.
 • பிரதான ஆசாரியன் ஏழு முறை பலியின் இரத்தத்தையும், அபிஷேக எண்ணெயையும் கர்த்தருக்கு முன்பாக கிருபாசனத்தின் மேல் தெளிக்க வேண்டும்.
 • யோசுவா எரிகோவை சுற்றி வந்தபோது, ஏழு ஆசாரியர்கள், உடன்படிக்கை பெட்டியை சுமந்தபடி, ஏழு எக்காளங்களை முழக்கி, ஏழாவது நாள், ஏழு தடவை சுற்றி வந்து ஜெயத்தை சுதந்தரித்தார்கள்.
 • வெளிப்படுத்தின விசேஷத்தில் ஏழு சபைகளைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது.,
 • ஏழு பொன்குத்து விளக்குகள்,
 • ஏழு நட்சத்திரங்கள்,
 • ஏழு முத்திரைகள்,
 • ஏழு எக்காளங்கள், ஏழு கண்கள்,
 • ஏழு ஆவிகள்,
 • ஏழு கோபகலசங்கள்,
 • ஏழு இடிமுழக்கங்கள்,

என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

 

 • சங்கீதங்களில் 126 சங்கீதங்கள் தலைப்புகளோடு உள்ளன. (7×18)
  அவைகளில் ஏழு பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

  • 1. தாவீது (56 சங்கீதங்கள் எழுதப்பட்டுள்ளன)
   2. கோராகின் புத்திரர் (11)
   3. ஆசாப் (12)
   4. ஏமான் (1) (சங்கீதம் 88)
   5. ஏத்தான் (1) (சங்கீதம் 89)
   6. மோசே (1) (சங்கீதம் 90)
   7. சாலமோன் (1) (சங்கீதம் 72)
 • புதிய ஏற்பாட்டில் ஏழு சங்கீதங்களின் வசனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

 • சங்கீதம் 69 -ன் வசனங்கள் புதிய ஏற்பாட்டில் ஏழு தடவை வருகின்றன.

 • யோவான் சுவிசேஷத்தில் ஏழு அற்புதங்களை குறித்து எழுதப்பட்டிருக்கிறது.

 • மத்தேயு சுவிசேஷம் 13-ம் அதிகாரத்தில் ஏழு உவமைகள் கூறப்பட்டிருக்கின்றது.

இன்னும் எத்தனையோ வசனங்கள் ஏழு என்ற எண்ணை பயன்படுத்தி சொல்லப்பட்டிருக்கிறது.
அடுத்த முறை நாம் வேதம் வாசிக்கும்போது, ஏழு என்ற எண் வரும்போது நிறுத்தி, தேவன் இந்த இடத்தில் என்னிடம் என்ன சொல்ல விரும்புகிறார்? என்று யோசித்து, அவருடைய ஞானத்திற்காக ஜெபிப்போம். கர்த்தருடைய ஞானம் அளவற்றது. அவருடைய வார்த்தைகளில்தான் எத்தனை பொருள்கள் அடங்கியிருக்கின்றன!

இந்த அற்புத தேவனை தெய்வமாக கொண்டிருக்கும் நாம் எவ்வளவு பாக்கியவான்கள்!
ஆமென் அல்லேலூயா!

 • முழு வேதாகமத்தையும் சத்தமாக தெளிவாக வாசிக்க சுமார் 70 மணி நேரம் ஆகும்

 • வேதத்தில் உள்ள அதிகாரங்கள் பிரிக்கப்பட்ட வருடம் 1227 A.D

 • உலகத்திலயே அதிகமாக விற்பது பரிசுத்த வேதாகமமே.

 • ஒரு நிமிடத்திருக்கு சுமார் 58 வேதாகமங்கள் கொடுக்கப்படுகிறது. (நீங்கள் இதை வாசிப்பதற்குள்ளாக நூற்றுக்கணக்கான வேதாகமங்கள் பரிமாறியிருக்கும்)

 • சுமார் 2000 (கிறிஸ்துவுக்கு பின்) வருடங்களாக பலர் வேதாமத்தை அழித்துவிட வேண்டும் என்று அதை எரித்தனர், கிழித்தனர், வேதாகமத்தை தடுத்தனர். ஆனால் 1200 க்கும் மேற்பட்ட மொழிகளில் அச்சடிக்கப்பட்டு உலகம் முழுவதும் ஒரு நாளிற்கு சுமார் 168,000 வேதாகமங்கள் கொடுக்கப்படுகிறது.

இன்னும் பல உண்மைகள், வேதாகமத்தின் அதிசயங்கள் எண்ணில் அடங்காதவைகள்.
இறுதியாக… உலகில் பல புத்தகங்கள் அறிவை கொடுக்கும், பல சந்தோசத்தை கொடுக்கும்.
ஆனால் பரிசுத்த வேதாகமம் ஒன்று தான் அறிவு, சந்தோசத்தோடு சமாதானத்தையும் இருதய மாற்றத்தையும் கொடுக்கும்.
அது இயேசுவை, அவர் அன்பை காட்டும், இரட்சிப்பை கொடுக்கும், பரலோக ராஜ்ஜியம் சேர்க்கும்.
இப்பொழுது உங்கள் வேதாகமத்தை எடுத்து படியுங்கள்.
அது வெறும் காகிதமல்ல…..
பரிசுத்த தேவனின் வார்த்தைகளை தாங்கி நிற்கும் உயிருள்ள இதயத்துடிப்புக்கள்.

 

Download pdf

Leave a Reply