ஆழமான ஆவிக்குரிய அனுபவங்கள்! Deep spiritual experiences! With pdf

 

 

ஆழமான ஆவிக்குரிய அனுபவங்கள்!

Bro.Mohan C. Lazarus

அவர் -இயேசு- போதகம்பண்ணி முடித்த பின்பு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன் பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார்.” லூக்கா 5:4.

இயேசு படகில் உட்கார்ந்து பிரசங்கம் பண்ணி முடித்த பிறகு, பேதுருவைப் பார்த்து, “படகை ஆழத்திலே தள்ளிக் கொண்டு போய், வலைகளை வீசுங்கள்.” என்று சொன்னார். அவர் சொன்னபடியே படகை ஆழத்திலே கொண்டுபோய் வலைகளைப் போட்டு, திரளான மீன்களைப் பிடித்தார்கள்.

பொதுவாக, படகை கரையிலே நிறுத்தி வைத்திருக்கும்போது, அதன் பாதிப் பகுதி கடலிலும், மீதிப் பகுதி தரையிலுமாக இருக்கும். அந்தப் படகு கடலின் அலையில் எப்போதும் அடிபட்ட வண்ணமாக ஆடிக் கொண்டேயிருக்கும்.

இப்படித்தான், ஆவிக்குரிய நாமும் இந்த உலகத்தோடு ஒட்டி வாழ்ந்து கொண்டிருக்கும் வரைக்கும், நம்மால் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. அனேகர், “உலகத்திற்குள் பாதி…ஆவிக்குரிய வாழ்க்கைக்குள் பாதி!” என்று, இரட்டை வாழ்க்கை வாழ்கிறதினால்தான், ஆவிக்குரிய வாழ்க்கையின் மெய்யான ஆசீர்வாதத்தை அவர்களால் அனுபவிக்க முடியவில்லை. கொஞ்சம் ஆழமான ஆவிக்குரிய அனுபவத்திற்குள் நாம் கடந்து செல்ல வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். சில காரியங்கள், உங்களுக்குத் தெரிந்ததாகத்தான் இருக்கும். ஆனால், அதைக் குறித்ததான ஒரு தெளிவில்லாமல் நீங்கள் இருக்கக்கூடும்! நீங்கள் அதைக் குறித்துத் தெளிவாக அறிந்து, அதில் உறுதியாகி விட்டால், ஆழமான ஆவிக்குரிய அனுபவத்திற்குள் உங்களால் நிலைத்து நிற்க முடியும். ஆகவே, ஒரு ஆரம்ப நிலையிலிருந்து, ‘படிப்படியாக ஆவிக்குரிய ஆழத்திற்குள் எப்படிச் செல்வது?’ என்பதைக் குறித்து, உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள்!

“…இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.” எபி. 2:4. இரட்சிப்பின் அனுபவத்தைக் குறித்து, “இவ்வளவு

பெரிதான இரட்சிப்பு…!” என்பதாக பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. முதலாவது, தேவனுடைய பிள்ளைகளாக மாறுவது (யோவான் 1:12). இதுதான், கிறிஸ்தவ வாழ்க்கையின் முதலாவது ஆவிக்குரிய அனுபவம். இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவரை நம் உள்ளத்தில் ஏற்றுக் கொள்ளும்போது, “தேவனுடைய பிள்ளைகள்!” என்கிற அனுபவத்தை நாம் பெறுகிறோம். “…ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்…” யோவான் 3:3. அதாவது, “மனந்திரும்புங்கள்…” (மத்தேயு 4:17)

என்று, இயேசு பிரசங்கிக்கத் தொடங்கினார். “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.” (அப். 2:38) என்று, மனந்திரும்புதலைக் குறித்து பரிசுத்த வேதாகமம் சொல்கிறது.

தேவன்…மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.” அப். 17:30.

ஆக, ‘தேவனுடைய பிள்ளைகளாக மாறுவது’, ‘மனந்திரும்புவது”, ‘மறுபடியும் பிறத்தல்’ என்பதெல்லாம், இரட்சிப்பின் அனுபத்தைக் குறிக்கிறது. அவைகள் வெவ்வெறு பெயர்களில் சொல்லப்பட்டாலும், ஒரே அனுபவத்தைத்தான் குறிக்கின்றன. ஒரு மனிதன் இரட்சிக்கப்படும்போதுதான், அவனுக்கு இயேசுவோடு ஒரு தொடர்பு உண்டாகிறது. அப்பொழுதுதான், அவன், “தேவனுடைய பிள்ளை!” என்கிற ஒரு நிச்சயத்திற்குள் வருகிறான். வெறும் பக்தியோடு இருப்பதினால், அவன் தேவனுடைய பிள்ளையாக இருக்க முடியாது. பக்தியுள்ளவர்களைக் கர்த்தர் நேசிக்கிறார். அதே சமயத்தில், பாவிகளையும் அவர் நேசிக்கிறார். (மத்தேயு 9:13, மாற்கு 2:17, லூக்கா 5:32, 15:2, 1 தீமோ. 1:15).

நீங்கள் கர்த்தர் மீது அன்பும், விசுவாசமும் வைத்திருக்கலாம்! சின்ன வயதிலிருந்தே நீங்கள் பக்தியோடு வளர்க்கப்பட்டிருக்கலாம்! தினமும் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து, ஜெபிக்கிற ஒரு அனுபவம்கூட உங்களுக்கு இருக்கலாம்! ஆனாலும், ஒருவேளை நீங்கள் இரட்சிப்பின் அனுபவமே இல்லாமல்கூட இருக்கக் கூடும்!

‘இரட்சிப்பின் அனுபவம்’ என்பது, இயேசுவோடுகூட தனிப்பட்ட முறையில் ஐக்கியப்பட்டிருக்கிற திட்டமான ஒரு அனுபவம்! “நான் மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டிருக்கிறேன். நான் மறுபடியும் பிறந்திருக்கிறேன். இயேசுவின் இரத்தம் என்னைக் கழுவியிருக்கிறது. அந்த இரட்சிப்பின் நிச்சயமும், சந்தோஷமும் எனக்கு இருக்கிறது.” என்று சொல்கிற அனுபவம் உங்களுடைய வாழ்க்கையில் கட்டாயம் இருக்க வேண்டும். அந்த அனுபவத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்களா? யோசித்துப் பாருங்கள். நீங்கள் இரட்சிப்பின் அனுபவத்திற்குள் கட்டாயம் வந்தாக வேண்டும். இதுதான் முதல் அனுபவம்! இந்த இரட்சிப்பின் அனுபவத்தில், முக்கியமான அனுபவம் என்னவென்றால்,

“அவர்கள் என்னைப் -இயேசுவை- பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டுத் தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும் பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்.” அப். 26:18.

இந்த வேத வசனத்தின் மூலமாக, ஒரு முக்கியமான காரியத்தைக் கர்த்தர் சொல்கிறார். “நான் இரட்சிக்கப்பட்டேன்.” என்றால், என்ன அர்த்தம்? “சாத்தானுடைய அதிகாரத்திலிருந்து தேவனுடைய ஆளுகைக்குள் வந்து விட்டேன்!” என்பதுதான். அதுதான்

இரட்சிப்பின் உண்மையான அர்த்தம்!

இந்த இரட்சிப்பின் அனுபவத்தை நீங்கள் பெற்றுக் கொள்ளா விட்டால், “நீங்கள் சாத்தானுடைய அதிகாரத்திற்குள் இருக்கிறீர்கள்!” என்றுதான் அர்த்தம். இது எப்படிக் கிடைக்கிறது?

“கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்;…” எபே. 2:8,

நாம் தேவனுடைய கிருபையினால் இரட்சிக்கப்படுகிறோம். அதாவது, “ஆண்டவரே, என் பாவத்தை மன்னியும். உம்முடைய இரத்தத்தினால் என்னைக் கழுவும். என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பம் தரித்தாள். நான் பாவத்தில் உருவானேன். உம்முடைய இரத்தத்தினால் என்னைக் கழுவி, உம்முடைய பிள்ளையாக என்னை மாற்றி விடும்.” என்று, நாம் உண்மையாக நம்முடைய பாவத்தை அறிக்கை செய்யும்போது, கர்த்தருடைய கிருபை நம் மீது வரும். அவர் நம்முடைய பாவங்களையெல்லாம் மன்னித்து, “தேவனுடைய பிள்ளை!” என்கிற அனுபவத்தை நமக்குத் தருகிறார். அதை எப்படிப் பெற்றுக் கொள்வது? கர்த்தரை விசுவாசத்தோடு துதிக்கும்போது, இரட்சிப்பின் சந்தோஷம் உங்களுக்குள் உண்டாகும். அந்த சந்தோஷம் உங்களுக்குள் இருக்க வேண்டும். ‘இரட்சிப்பு!’ இதுதான் ஆவிக்குரிய வாழ்க்கையின் முதல் அனுபவம். அதை எப்படி நிச்சயித்துக் கொள்வது?

“நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்.” ரோமர் 8:16.

நீங்கள் இரட்சிக்கப்பட்டிருப்பதற்கு என்ன அடையாளம்? சிலர், “நீங்கள் ஏதாவது தரிசனம் பார்த்திருந்தால்தான் இரட்சிக்கப்பட்டதற்கு அடையாளம்!” என்பார்கள். சிலருக்கு அப்படிப்பட்ட சில அனுபவம் இருக்கலாம்! நான் இரட்சிக்கப்பட்ட நாள், இரவு முழுவதும் ஜெபித்து, அதிகாலை 4:00 மணிக்குக் கர்த்தர் என்னோடு பேசினார். அன்றைக்கு ஆவியானவருடைய சத்தத்தை நான் கேட்டேன். இப்படிப்பட்டதான அனுபவம் எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பதல்ல.

பாவியான ஒரு மனிதன், கர்த்தரிடத்தில், “நான் பாவி, என்னை மன்னியும்.” என்று ஒரு நிமிடத்தில் ஜெபித்து விட்டால், அங்கே இரட்சிப்பு உண்டாகிறது. அப்படியானால், கர்த்தருடைய இரட்சிப்பிற்கு முக்கியமான அடையாளம், “நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம்!” என்று கர்த்தருடைய ஆவியானவர் நம்முடைய ஆவியிலே சாட்சி கொடுக்கிறார். வெளிப்படையான அடையாளங்கள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஆனால், “நீ தேவனுடைய பிள்ளை!” என்கிற உள்ளான நிச்சயத்தை ஆவியானவர் கொடுக்கிறார். இந்த சாட்சி உடையவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். இது, முதல் அனுபவம். இந்த இரட்சிப்பின் அனுபவத்தோடு நின்று விடக் கூடாது. அடுத்த ஒரு அனுபவம் இருக்கிறது. அதுதான், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுகிற ஒரு அனுபவம்.

பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்!

இயேசு தன்னுடைய சீஷர்களைப் பார்த்து, “…பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.” (யோவான் 20:22) என்று, ஒரு கட்டளை கொடுத்தார்.

யோவேல் 2:28, அப். 2:17 வசனங்களில், …நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்;…” என்று தீர்க்கதரிசனமாகவே சொல்லப்பட்டுள்ளது. தேவனுடைய வாக்குத்தத்தம் இது! ஆகவே, எல்லோரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட வேண்டும் என்பது, தேவனுடைய சித்தம். பழைய ஏற்பாட்டுக் காலத்தில், ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்து முடிக்க, குறிப்பிட்ட ராஜாக்கள் மீது, தீர்க்கதரிசிகள் மீது, நியாயாதிபதிகள் மீது, சில குறிப்பிட்ட நேரங்களில் ஆவியானவர் இறங்கினார், அவ்வளவுதான்!

ஆனால், புதிய ஏற்பாட்டில் தேவனுடைய வாக்குத்தத்தம் என்னவென்றால், ‘மாம்சமான யாவர் மீதும் என் ஆவியை ஊற்றுவேன்!’ என்பதுதான். இயேசுவை விசுவாசித்து, அவரை ஏற்றுக் கொள்கிற எல்லோர் மீதும் கர்த்தர் தம்முடைய ஆவியை ஊற்ற விரும்புகிறார். இதுதான் தேவனுடைய சித்தம்!

அது மாத்திரமல்ல, என்றென்றைக்கும் உங்களோடு இருக்கிற தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியை உங்களுக்குப் பிதாவானவர் தந்தருள்வார்! இதுதான், புதிய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்கிற நமக்குக் கிடைத்த ஒரு புதிய அனுபவம். “…நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள். அப். 1:4.

“பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து… எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்… (அப். 1:8) என்று இயேசு சொல்லியிருக்கிறார்.

“பெந்தெகோஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.

அப்பொழுது பலத்து காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.

அல்லாமலும்…அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.” அப். 2:1-4.

நாம் இரட்சிக்கப்படும்போதே திரித்துவ தேவன் நமக்குள் வந்து விட்டார். இன்னொரு அனுபவமான அபிஷேகம், ஆவியில் நிறைவது என்றெல்லாம் ஒன்றும் கிடையாது.” என்று வியாக்கியானம் பண்ணக் கூடியவர்களும் இருக்கிறார்கள்!

ஆனால், பரிசுத்த வேதாகமம் தெளிவாக இரண்டையும் வித்தியாசப்படுத்தி நமக்குக் காட்டுகிறது. வேத வசனங்களை நன்றாக வாசித்துப் பார்த்தால், அதைப் பற்றி நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

இரட்சிப்பு வேறு! பரிசுத்த ஆவியினால் நிரம்புகிற அனுபவம் வேறு! ஒருசிலர் இரட்சிக்கப்படும்போதே, பாவத்தை விட்டு மனந்திரும்பும்போதே, கர்த்தர் அவர்களுடைய இருதயத்தை உடனே தமது ஆவியினால் நிரப்பி விடுகிற அனுபவங்களைப் பெற்றுக் கொள்வார்கள். எப்படியென்றால், முதலாவது நாம் இரட்சிக்கப்படும்போது, பரிசுத்த ஆவியானவரின் கிரியை இல்லாமல் இரட்சிக்கப்பட முடியாது. ஆவியானவர்தான் நம்முடைய பாவத்தை உணர்த்தி, நம்மை மனந்திரும்ப வைக்கிறார்.

அதைக் குறித்து அப். பவுல் எழுதும்போது; “நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.

அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின்

அச்சாரமாயிருக்கிறார்.” (எபே. 1:13,14) என்று எழுதுகிறார். நீங்கள் மனந்திரும்பி, இரட்சிக்கப்பட்டு, விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியினால் முத்திரை போடப்பட்டீர்கள். ஆவியின் அச்சாரத்தைப் பெற்றுக் கொண்டீர்கள். அதாவது, நாம் விசுவாசிகளானபோது, “தேவனுடைய பிள்ளைகள்!” என்று ஆவியானவர் நம்மை ஒரு முத்திரை பண்ணுகிறார். இந்த, ‘முத்திரை’ பண்ணப்படுகிற அனுபவம் வேறு! பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுகிற அனுபவம் வேறு! என்பதை நன்றாக நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ள மாட்டாது; அவர் உங்களுடனே வாசம் பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.” யோவான் 14:16,17.

ஏற்கெனவே பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள்ளே இருக்கிறார்! பிறகு ஏன் பெந்தெகோஸ்தே நாளுக்காக இயேசு காத்திருக்கச் சொன்னார்? அவர்கள் மனந்திரும்பி, இயேசுவைப் பின்பற்ற தங்களை அர்ப்பணித்தபோது, பரிசுத்த ஆவியின் முத்திரையைப் பெற்றுக் கொண்டார்கள்.

ஆனால் இயேசு தம்முடைய சீஷர்களைப் பார்த்து, “இது போதாது. பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியானவரின் நிறைவைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.” என்று, சொல்வதைக் குறித்து பரிசுத்த வேதாகமத்தில் வாசிக்கிறோம். சவுல், தமஸ்குவுக்குப் போகிற வழியில் இயேசுவால் தொடப்பட்டு, இரட்சிக்கப்பட்டு, தன்னை முழுவதுமாக அவருக்கு ஒப்புக் கொடுத்து விட்டார். ஆனால், 3 நாட்கள் உபவாசம் பண்ணி ஜெபித்துக் கொண்டிருந்தபோது, 3 நாட்கள் கழித்து, ‘அனனியா’ என்கிற ஒரு தீர்க்கதரிசியைக் கர்த்தர் அனுப்பினார்.

அந்தத் தீர்க்கதரிசி சவுலினிடத்தில் வந்து, …சகோதரனாகிய சவுலே, நீ வந்த வழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான்.” அப். 9:17.

பாருங்கள், சவுல், 3 நாட்களுக்கு முன்பாகத்தான் இரட்சிக்கப்பட்டார்! ஆனாலும், “அவர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட ஒரு தீர்க்கதரிசியைக் கர்த்தர் அனுப்பினார்.” என்று, பரிசுத்த வேதாகமம் சொல்கிறது. அப்படியானால், இரட்சிக்கப்பட்ட அனுபவத்தோடு இருந்து விடக் கூடாது. பரிசுத்த ஆவியின் நிறைவையும் கட்டாயமாகப் பெற்றுக் கொள்ள வேண்டும். எபேசு பட்டணத்திலுள்ள விசுவாசிகள், இயேசுவை ஏற்றுக் கொண்டவர்கள்தான்! இரட்சிக்கப்பட்டவர்கள்தான்! பவுல் அவர்களைச் சந்திக்கும்போது, “நீங்கள் விசுவாசிகளானபோது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “பரிசுத்தாவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள்.” அப். 19:2

பவுல் அவர்கள்மேல் தன் கைகளை வைத்தபோது, அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, அந்நிய பாஷைகளைப் பேசி, தீர்க்கதரிசனம் உரைத்தார்கள்.” என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது. (அப். 19:6).

அப்படியானால், “இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் அனைவரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுகிற ஒரு அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.” என்பதை வேதாகமம் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது.

ஆகவே, “இரட்சிக்கப்பட்டபோதே எனக்கு எல்லாம் முடிந்து விட்டது. என்று நினைத்துக் கொண்டிருக்காதபடி, அடுத்த ஆவிக்குரிய அனுபவமாகிய பரிசுத்த ஆவியின் நிறைவுக்குள் நாம் கடந்து வர வேண்டும். பரிசுத்த ஆவியின் அனுபவத்தை, வாஞ்சித்துப் பெற்றுக் கொள்ள வேண்டும். நாம் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்போது, புதிய பாஷைகளை, அந்நிய பாஷைகளை அவர் நமக்குத் தருவார்!

அந்நிய பாஷைகளைப் பேசுங்கள்!

நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்;” 1 கொரி. 14:5.

அந்நிய பாஷையில் பேசுகிறவன் கர்த்தரோடு பேசுகிறான்! (1 கொரி. 14:1-4). நீங்கள் கர்த்தரோடு பேச வேண்டும். நீங்கள் கர்த்தரோடு நெருங்க வேண்டுமானால், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, அந்நிய பாஷைகளைப் பேச வேண்டும்.

அந்நியபாஷையில் பேசுகிறவன்…. மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.” (1கொரி. 14:2) என்று, பரிசுத்த வேதாகமம் சொல்கிறது.

இரகசியம்’ என்றால், என்ன அர்த்தம்? இரண்டு பேர் சேர்ந்து, யாருக்கும் தெரியாமல் பேசிக் கொள்வதுதான் இரகசியம். இன்றைக்கு, இந்தச் சின்ன ஒரு விஷயத்தைக்கூடப் புரிந்து கொள்ளாதபடி, “பெந்தெகோஸ்தே நாளில் அன்றைக்கு அவர்கள் அந்நிய பாஷைகளைப் பேசியபோது, அது எல்லோருக்கும் புரிந்ததே! இன்றைக்கு இவர்கள் பேசும் அந்நிய பாஷை புரியவில்லையே!” என்பதாக சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

பெந்தெகோஸ்தே நாளில், உலகம் முழுவதும் சுவிசேஷம் எடுத்துச் சொல்லப்படுவதற்கு வித்தியாசமான முறையில் ஆவியானவர் செயல்பட்ட காரியம் அது. பின்பு பரிசுத்த ஆவியானவர் பொழிந்தருளுப்பட்ட பிறகு, பல விதமான பாஷைகள் வெளிப்படவில்லை. அந்நிய பாஷை வெளிப்பட்டது. அதன் அர்த்தம் யாருக்கும் புரியாது.

பேசுகிறவர்களுக்கும், அதைக் கேட்கிற கர்த்தருக்கும் மட்டுமே அது புரியும். அதாவது கர்த்தரும், அந்நிய பாஷை பேசும் விசுவாசியும், ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளக் கூடிய இரகசியம்! “அந்நிய பாஷையில் பேசுவதென்பது, கர்த்தரோடு இரகசியம் பேசுவது’ என்று மட்டுமல்ல, அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினால்…” (1 கொரி. 14:2) என்று, பரிசுத்த வேதாகமம் மிகத் தெளிவாகச் சொல்கிறது.

ஒருவேளை, “அர்த்தம் தெரியாத இப்படிப்பட்ட ஒரு பாஷை தேவையா?” என்கிற ஒரு கேள்வி நம்முடைய உள்ளத்தில் எழும்பலாம்!

நாம் பரிசுத்த ஆவியில் நிரம்பி, அந்நிய பாஷையில் பேசப் பேச, நம்முடைய பக்தி விருத்தியடையும். கர்த்தரோடுள்ள ஐக்கியம் விருத்தியடையும். ஆகவே, நம்முடைய பிரயோஜனத்திற்காகவும், ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் வளர்வதற்காகவுமே கர்த்தர் இந்த அனுபவத்தை நமக்குத் தந்திருக்கிறார். ஆகவேதான், “எல்லோரும் அந்நிய பாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்.” என்று, ஆவியானவர் பரி. பவுல் மூலமாக, தன் விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். (1 கொரி. 14:5).

எனவே, நம்முடைய கர்த்தருடைய விருப்பத்திற்கிணங்க, நாம் எல்லோரும் பரிசுத்த ஆவியில் நிரம்பி, அந்நிய பாஷைகளைப் பேச வேண்டும். அந்த அனுபவத்தை நீங்கள் வாஞ்சித்துப் பெற்றுக் கொள்ள வேண்டும். அனேகர் இந்த அனுபவத்தை மறுக்க மாட்டார்கள். ஆனால், அதைத் தாகத்தோடு கேட்டுப் பெற்றுக் கொள்ள மாட்டார்கள். நாம் அப்படி இருக்கக் கூடாது. நாம் எல்லோரும் இந்த ஆவிக்குரிய அனுபவத்திற்குள் செல்ல வேண்டும். கர்த்தரோடு நாம் பேச வேண்டும்.

அந்தப்படி அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம்பண்ணக்கடவன்.” 1 கொரி. 14:13.

நீங்கள் பேசுகிற அந்நிய பாஷைக்கு அர்த்தம் உண்டு! கர்த்தர் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வார். உங்களுக்கும் அதன் அர்த்தம் தெரிய வேண்டுமானால், தேவ சமூகத்தில் போய், “நான் பேசுகிற அந்நிய பாஷையின் அர்த்தத்தை எனக்கும் விளங்கப் பண்ணும் ஆண்டவரே!” என்று ஜெபத்தில் கேட்டால், கர்த்தர் அதை உங்களுக்கும் விளங்கப் பண்ணுவார்.

1974ம் வருடம் தஞ்சாவூரில் நடைபெற்ற ‘BLESSO’ கூட்டத்தில்தான் நான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றேன். அந்தக் கூட்டத்தில் தேவ ஊழியர் பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய செய்தியைப் பகிர்ந்து கொண்டு, ஜெபத்தில் நடத்தியபோது, நான் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, பல மணி நேரம் அந்நிய பாஷை பேசினேன். பல மணிநேரம் கழித்துத்தான் எனக்கு நினைவே வந்திருக்கிறது! முதல்முறை ஆவியானவர் என் மீது ஊற்றப்பட்டபோது, அன்றையிலிருந்துதான் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, அந்நிய பாஷை பேச ஆரம்பித்தேன். சில வருடங்கள் கடந்தன. பரிசுத்த ஆவியினால் நிரம்புதல், அந்நிய பாஷை பேசுதல், ஆவியில் களிகூருதல் எல்லாம் எனக்குள் இருந்தது. ஆனால், “இந்த அந்நிய பாஷைக்கு அர்த்தம் இருக்கிறது. அதை அறிந்து கொள்ள வேண்டும்.” என்று எனக்கு யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை. எனக்கும் அதைப் பற்றி ஒன்றும் தெரியாது.

ஒரு சமயம், ஒரு ஊழியக்காரர் எழுதிய புத்தகத்தை நான் வாசித்தபோது, “…அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம் பண்ணக்கடவன்.” (1 கொரி. 14:13) என்ற வேத வசனத்தை அதில் குறிப்பிட்டிருந்தார்.

நாம் பேசுகிற அந்நிய பாஷைக்கு அர்த்தம் உண்டு! மற்றவர்களுக்குப் புரியவில்லை என்றாலும், ‘கர்த்தருக்கு அது புரிகிறது!’ என்றால், அது ஒரு அர்த்தமுள்ள பாஷைதான். கர்த்தர் அதை விளங்கிக் கொள்வார். “நாம் பேசுகிற அந்நிய பாஷை நமக்கும் விளங்க வேண்டுமானால், அதற்காக நாம் ஜெபிக்க வேண்டும்.’ என்று சொல்லப்பட்ட வார்த்தை, எனக்குக் கண்களைத் திறந்ததுபோல் இருந்தது. அதன் பிறகுதான், எனக்குள் அதைக் குறித்தான ஒரு தாகம் உண்டானது.

ஒருநாள் நான் வனாந்திரமான ஒரு இடத்திற்கு ஜெபிக்கப் போனபோது, 1 கொரி. 14:13ம் வசனத்தை வாசித்து, “ஆண்டவரே, நான் பேசுகிற அந்நிய பாஷையின் அர்த்தம் எனக்குத் தெரிய வேண்டும். அந்தக் கிருபையை எனக்குத் தாரும்.” என்று, அந்த வேத வசனத்தை வைத்து அதிக நேரம் ஜெபித்துக் கொண்டிருந்தேன்.

திடீரென்று பரிசுத்த ஆவியானவர் என் மீது இறங்கினார். நான் ஆவியில் நிரம்பி, அந்நிய பாஷை பேசினேன். அதன் பிறகு, நான் பேசிய அந்நிய பாஷைக்கு வியாக்கியானம் வந்தது! நான் பேசுகிற அந்நிய பாஷை மூலமாக, தேவ செய்தி வந்தது! அப்பொழுது, “நானே என் கற்பனையில் பேசுகிறேனா? அல்லது பிரம்மையா?” என்று நான் எனக்குள்ளேயே சந்தேகப்பட்டேன்.

அந்தச் சமயத்தில் மறுபடியும் ஆவியானவர், “நான்தான் உன்னோடு பேசிக் கொண்டிருக்கிறேன். நீ சந்தேகப்படாதே.” என்றார். அந்த நாளிலிருந்து என் ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு மாற்றம் உண்டாயிற்று. இப்பொழுது நான் ஆவியில் நிரம்பி, அந்நிய பாஷை பேசினால், “நான் ஆவியில் கர்த்தரைத் துதிக்கிறேனா? ஆராதிக்கிறேனா? ஜெபம் பண்ணுகிறேனா? எதற்காக ஜெபம் பண்ணுகிறேன்? நான் எந்த தேசத்திற்காக ஜெபம் செய்கிறேன்?” அல்லது, “பிசாசோடு யுத்தம் பண்ணுகிறேனா? என் ஆவிக்குள் என்ன நடக்கிறது?” என்கிற காரியங்களை என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது! இதை என்னால் மாத்திரமல்ல, கர்த்தருடைய பிள்ளைகளாக இருக்கிற யாவரும் அவருடைய சமூகத்தில் போய் ஜெபித்து, இதற்கான கிருபைகளைப் பெற்றுக் கொண்டால், அவர்களாலும் விளங்கிக் கொள்ள முடியும்.

நீங்கள் அந்நிய பாஷையில் கர்த்தரை ஆராதிக்கலாம்! அந்நிய பாஷையில் கர்த்தரைத் துதித்துப் பாடலாம்! அந்நிய பாஷையில் விண்ணப்பங்களை ஏறெடுக்கலாம்! அந்நிய பாஷையில் பிசாசை எதிர்த்து, யுத்தம் பண்ணலாம்! இப்படியாக அனேக ஆவிக்குரிய காரியங்களை ஆவியானவர் உங்களை நிரப்பி, நடத்துவார்! உங்களைப் பயன்படுத்துவார்!

இந்த அனுபவத்திற்குள் நீங்கள் வந்து விட்டால், உங்கள் ஜெப வாழ்க்கை மிக ஆச்சரியமாக மாறி விடும். ஆக, அந்நிய பாஷைக்கு அர்த்தம் உண்டு! அதை நீங்கள் உங்கள் இருதயத்தில் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அதுதான் பெரிய சந்தோஷம்! சில சமயம், நான் அந்நிய பாஷை பேசிக் கொண்டேயிருப்பேன். என்னுடைய இருதயம் சந்தோஷத்தில் பொங்கி மகிழும்! “நான் சந்தோஷத்தில் ஆண்டவரைத் துதித்து மகிழ்கிறேன்…” என்று எனக்குத் தெரியும். அந்நிய பாஷையில் துதித்து மகிழ்வதைச் செய்து பாருங்கள், அந்த நேரமே மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

நீங்கள் தமிழிலும் அவரை ஆராதிக்கலாம்! ஆங்கிலத்திலும் ஆராதிக்கலாம்! அந்நிய பாஷையிலும் ஆராதிக்கலாம்! நீங்கள் அதைச் செய்து பாருங்கள், அப்பொழுது நீங்கள் பரலோகத்திற்குள் நுழைவதைப்போல உணர்வீர்கள்! அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக நீங்கள் நிற்பதைப்போல உணர்வீர்கள்! நீங்கள் இயேசுவுக்கு முன்பாக நிற்பதைப்போல உணர்வீர்கள்! உங்களுடைய இருதயம் களிகூரும்! அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை ஆவியானவர் உங்களுக்குத் தருவார்.

இன்றைக்குக் கர்த்தர், உங்களுக்கு இந்த அனுபவத்தைத் தர விரும்புகிறார். இந்த அனுபவத்திற்குள் நீங்கள் இன்னும் ஆழமாகக் கடந்து வர வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். இன்றைக்கு இதன் அர்த்தத்தைக் கர்த்தர் உங்களுக்குச் சொல்லித் தரப் போகிறார். இன்றுமுதல், உங்கள் ஜெப வாழ்க்கையைக் கர்த்தர் மாற்றப் போகிறார். இனிமேல் உங்கள் ஜெப வாழ்க்கை உங்களுக்குக் கடினமாக இருக்காது. நீங்கள் ஜெபத்தை நிறுத்துவதற்குத்தான் கஷ்டப்படுவீர்கள். பரிசுத்த ஆவிக்குள் நிறைந்து விட்டால், கர்த்தர் பரலோகத்தை உங்களுக்குச் சமீபமாகக் கொண்டு வந்து விடுவார்.

சில சமயம், உங்களைச் சுற்றிலும் தேவ தூதர்கள் நின்று பாடுவதை நீங்கள் காண்பீர்கள்! அவர்களோடு சேர்ந்து நீங்களும் கர்த்தரைத் துதித்து மகிழ்வீர்கள்! அப்பொழுது, நேரம் போவதே உங்களுக்குத் தெரியாது. அப்படிப்பட்டதான ஒரு அனுபவத்திற்குள் நீங்கள் வர வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். நீங்கள் கூடி ஜெபிக்கும்போது மட்டுமல்ல, உங்களுடைய தனி ஜெபத்திலும் இப்படிப்பட்டதான அனுபவத்தோடு நீங்கள் கர்த்தரை நெருங்க வேண்டும்.

பரிசுத்த ஆவியின் அபிஷேகம்’, ‘அந்நிய பாஷை’ இவைகளுக்குள் இருக்கிற ஆசீர்வாதங்கள் சொல்லி முடியாதவை. இந்த அனுபவத்தை, பரி. பவுல் பெற்றிருந்ததால்தான், “நீங்கள் எல்லோரும் அந்நிய பாஷை பேச வேண்டும்.” என்று அவரும் வற்புறுத்திச் சொல்வதை, பரிசுத்த வேதாகமத்தில் பார்க்கிறோம். இந்த அனுபவத்தை நீங்கள் வாஞ்சிக்க வேண்டும்.

ஆவியை அவித்துப் போடாதிருங்கள்!

பரிசுத்த ஆவியின் அனுபவத்தை பெற்றுக் கொண்டால் மாத்திரம் போதாது. “ஆவியை அவித்துப் போடாதிருங்கள்.” (1 தெச. 5:19) என்று, பரிசுத்த வேதாகமம் சொல்கிறது. தினமும் பரிசுத்த ஆவியில் நிரம்பி, நீங்கள் ஜெபிக்க வேண்டும். கர்த்தருடைய வசனத்தை சும்மா வெறுமனே கடமைக்காக வாசிக்கக் கூடாது. நீங்கள் வேத வசனத்தை முழங்காலில் நின்று தியானிக்கத் தியானிக்க, பரிசுத்த ஆவியில் நிரம்பி ஜெபிக்க ஜெபிக்க, உங்களுக்குள் அனல் உண்டாகும்! இந்த அனுபவத்திற்குள் நீங்கள் வரும்போது, எப்பொழுதும் கர்த்தருக்காக எழுந்து பிரகாசிக்கிற விளக்காக இருப்பீர்கள்! ஆவியில் அனலாக இருப்பீர்கள்! ஒரு அக்கினி எரிந்து கொண்டேயிருந்தால், எந்த விஷப் பூச்சியும் உள்ளே வர முடியாது. பாம்பு வந்தால்கூட எரிந்து செத்துப் போய்விடும். அதேபோல, நீங்கள் ஆவியில் அனலாக இருந்து கொண்டேயிருந்தால், எந்த விதமான பாவ சோதனைகள் உங்கள் பக்கத்தில் வந்தாலும், உங்களை அவைகள் மேற்கொள்ள முடியாது. அதனால்தான், “…ஆவியிலே அனலாயிருங்கள்;…” (ரோமர் 12:11) என்று, பரிசுத்த வேதாகமம் சொல்கிறது. நீங்கள் ங்கு சென்றாலும், ஆவியில் அனலோடு செல்ல வேண்டும். ஊழியத்திற்குச் செல்லும்போது மாத்திரமல்ல, அதிகாலை எழுந்து, ஆவியில் ஜெபித்து, அந்த அனலோடுதான் நீங்கள் எங்கும் போக வேண்டும்.

அனேகர், ஊழியத்திற்குப் போகும்போது மட்டும் ஆவியின் அனலோடு போகிறார்கள். மற்ற நேரங்களில் அதே ஆவியின் அனலோடு இருப்பதில்லை. அப்படியல்ல, ‘தேவப் பிள்ளைகள்…’ என்றால், 24 மணி நேரமும் ஆவியில் அனலாகத்தான் இருக்க வேண்டும்! உன்னதப் பாட்டில் ஒரு பக்தன் இவ்விதமாக எழுதுகிறார்: “நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது;” (உன். 5:2) என்று. நீங்கள் நித்திரை பண்ணும்போதுகூட உங்கள் ஆவியில் அனலோடு நித்திரை பண்ண வேண்டும். அப்படியிருந்தால், நீங்கள் அதிகாலை எழும்பும்போது, கர்த்தரிடத்தில் பேசிக் கொண்டே எழும்புவீர்கள். உங்கள் சரீரம் நித்திரை பண்ணினாலும், உங்களுடைய ஆத்துமா கர்த்தரோடு இணைந்திருக்கிற ஒரு அனுபவத்தோடு இருந்து கொண்டிருப்பீர்கள். ‘கிறிஸ்தவ வாழ்க்கை’ என்பது, விவரிக்க முடியாத, சந்தோஷமான அனுபவம் நிறைந்த ஒரு வாழ்க்கை!

ஞாயிற்றுக்கிழமை ஆலய ஆராதனைக்குச் சென்று, ஆளோடு ஆளாக காணிக்கை போட்டு விட்டு வருவதல்ல கிறிஸ்தவ வாழ்க்கை. ஒவ்வொரு நிமிடமும் ஆவியானவரோடு களிகூருகிற அனுபவத்தோடு இருப்பதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை. நீங்கள் பிரயாணப்பட்டாலும் ஆவியில் களிகூர வேண்டும். ஒருவேளை உங்களருகில் இருக்கிறவர்கள்கூட, உங்களுடைய ஆவியில் களிகூருதலைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாக, ‘ஏன் இவர் சிரித்து கொண்டேயிருக்கிறார்?’ என்றுகூடச் சொல்லலாம். ஆனால், உங்களுக்கே தெரியாமல் நீங்கள் ஆவியில் களிகூர்ந்து கொண்டேயிருப்பீர்கள். இதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை! இப்படிப்பட்டதான ஒரு அனுபவத்திற்குள் நாம் கடந்து வர வேண்டும். இதைக் கர்த்தர் விரும்புகிறார். இந்த ஆழத்திற்குள் நீங்கள் வந்து விட்டால், பிசாசின் எந்த சோதனையும் உங்களை நெருங்க முடியாது. எந்த சோர்வுகளும் உங்களை மேற்கொள்ள முடியாது. எப்பொழுதும் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். எப்பொழுதும் ஆவிக்குரிய மகிமையோடு இருப்பீர்கள். இப்படித்தான் நாம் இருக்க வேண்டும். கர்த்தர் இதை விரும்புகிறார்.

இதோடு நீங்கள் நின்று விடவும் கூடாது. சிலர், காலா காலமாக ஒரே அந்நிய பாஷைகளைப் பேசிக் கொண்டேயிருப்பார்கள். அவர்களிடம், “எப்பொழுது அந்நிய பாஷைகளைப் பெற்றீர்கள்?” என்றால், “பல வருடங்கள் ஆகி விட்டது” என்பார்கள். ஆனாலும், அந்த நாலு வார்த்தைகளையே திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். நான் அதைப் பரிகாசம் பண்ணவில்லை. அதற்கு மேலேயும் ஆவிக்குரிய வாழ்க்கையில் நீங்கள் வர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமும்கூட. ஆகவே,“புதிதான பாஷைகளைத் தாரும்.” என்று கர்த்தரிடத்தில் கேட்க வேண்டும். ஒவ்வொரு நாளும் புதிய புதிய பாஷைகளைக் கர்த்தர் தருவார். காரணம், நாள்தோறும் கர்த்தருடைய கிருபை புதிதாகவே இருக்கிறது. புல.3:22,23.

வரங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்!

அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்.” 1 கொரி. 14:1.

இந்த வார்த்தை ஊழியக்காரர்களுக்கு எழுதப்பட்டவையல்ல, விசுவாசிகளுக்கு எழுதப்பட்டது. “வரங்கள்’ என்றாலே, ஊழியக்காரர்கள்தான் வரம் பெற்றவர்கள்!” என்று அனேகர் நினைக்கிறார்கள்.

அப்படி அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறபடியினால்தான், இந்த ஆவிக்குரிய ஆசீர்வாதத்தை இழந்து விடுகிறார்கள்.

வரங்கள் ஊழியக்காரர்களுக்கு மாத்திரமல்ல, எல்லா விசுவாசிகளுக்கும்கூட உரியது! ஒன்பது வரங்களும் உங்களுக்குரியது. அதைக் கர்த்தர் உங்களுக்குத் தரப் போகிறார்.

நீங்கள் ஒவ்வொருவரும் வரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.” என்று கர்த்தர் விரும்புகிறார்.

நீங்கள் யாராக இருந்தாலும், வரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் கர்த்தருக்காக எழும்பிப் பிரகாசிக்க வேண்டும். கர்த்தர் அதை விரும்புகிறார். அதனால் வரத்தை விரும்புங்கள். “அன்றியும், சகோதரரே, ஆவிக்குரிய வரங்களைக்குறித்து நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை.” 1 கொரி. 12:1

இது விசுவாசிகளுக்கு ஆவியானவர் எழுதி வைத்திருக்கிறார். அனேகருக்கு இதைப் பற்றித் தெரிவதில்லை. நீங்கள் அதை ஆவலாக வாசித்து அறிய வேண்டும். ஆவிக்குரிய 9 வரங்களைக் குறித்து, சகோ. சாம் ஜெபத்துரை அவர்கள், நீங்கள் சுலபமாகப் புரிந்து கொள்ளும்படியாக, ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்கள். அந்தப் புத்தகத்தை நீங்கள் வாசித்தால், பரிசுத்த வேதாகமத்தின் வெளிச்சத்தில் வரங்களைக் குறித்து நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதை நீங்கள் வாசித்து, கர்த்தருடைய பாதபடிக்குப்போய், “ஏன் அந்த வரத்தை எனக்குத் தரக் கூடாது? நான் உம்முடைய பிள்ளையல்லவா? என்னை நீர் அபிஷேகம் பண்ணவில்லையா? எனக்கு நீர் அந்த வரத்தைத் தர வேண்டும். நான் உமக்குச் சாட்சியாக இருக்க வேண்டும்…ஆண்டவரே!” என்று கேளுங்கள். நீங்கள் அந்த ஞான வரத்தைக் குறித்து அறிந்து கொண்டால்தான், அதை உங்களால் விரும்ப முடியும்.

கர்த்தர், நம்முடைய தகுதியைப் பார்த்து எதையும் தருகிறவரல்ல. அப்படியானால், அவருக்கு முன்பாக நிற்க ஒருவரும் தகுதி உள்ளவர்களல்ல. கர்த்தரிடத்தில் கிருபை வரங்களைப் பெற என்ன தகுதி வேண்டுமென்றால், ‘தகுதி இல்லை.’ என்று யார் நினைக்கிறார்களோ, அதுதான் தகுதி! கர்த்தரிடத்தில் போய், ‘எனக்குத் தகுதி இல்லை.’ என்று சொல்லுங்கள். அவருடைய உள்ளம் குளிர்ந்து விடும். கர்த்தர் சொல்வார், “நீதான் எனக்கு வேண்டும். உனக்குத்தான் இந்த வரங்களைத் தர விரும்புகிறேன்.” என்பார். ‘தகுதி இல்லை.’ என்று சொல்லி, உங்களைத் தாழ்த்திக் கொண்டேயிருங்கள். அப்பொழுது அவருடைய கிருபை வரங்கள் உங்களைத் தொடர்ந்து வரும்.

ஆவிக்குரிய வரத்தை வாஞ்சிக்க வேண்டும். ஆவிக்குரிய எல்லைக்குள் கடந்து போக வேண்டும். இன்னும் வெறும் அந்நிய பாஷைகளை மாத்திரமே பேசிக் கொண்டிருக்கக் கூடாது.

..ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலே அறிவை உணர்த்தும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே

குணமாக்கும் வரங்களும்,

வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.” 1 கொரி. 12:8-10.

இப்படியாக, பரிசுத்த வேதாகமத்தில் 9 வரங்களைக் குறித்து, எழுதப்பட்டிருக்கிறது. மாத்திரமல்ல, இன்னும் சில வரங்களைக் குறித்தும் எழுதப்பட்டுள்ளது. அதாவது ஊழியத்தில் ஞானமாய் செயல்படுவது மற்றும் பல காரியங்களைக் குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஒன்பது வரங்களான:

ஞானத்தைப் போதிக்கும் வசனம்! அறிவை உணர்த்தும் வசனம்!குணமாக்கும் வரம்!அற்புதங்களைச் செய்யும் வரம்! விசுவாசம்!தீர்க்கதரிசனம் உரைத்தல்! வியாக்கியானம் பண்ணுதல்! ஆவியைப் பகுத்தறிதல்! பற்பல பாஷைகளைப் பேசுதல்!

போன்ற 9 வரங்கள் இருக்கின்றன. இந்த 9 வரங்களையும் 3 பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.

1. வெளிப்பாட்டு வரங்கள்!

ஞானத்தைப் போதிக்கும் வசனம்! அறிவை உணர்த்தும் வசனம்! ஆவிகளைப் பகுத்தறிதல்!

இவைகள் காரியங்களை வெளிப்படுத்துகிற வெளிப்பாட்டு வரங்கள்! இந்த வரத்தின் மூலம், நிகழ்காலத்தை அறிந்து கொள்ளலாம்! வரும் காலத்தை அறிந்து கொள்ளலாம்! கர்த்தருடைய இருதயத்தில் இருப்பதை அறிந்து கொள்ளலாம்! ஆவிக்குரிய உலகத்தில் நடக்கிற காரியங்களை அறிந்து கொள்ளலாம்! ஆவிகளைப் பகுத்தறியலாம்! ஆவிக்குரிய உலகத்தில் மறைவாகக் கிரியை செய்கிற சாத்தானின் கிரியைகளையும் இந்த வரத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்! இவைகள் வெளிப்பாட்டு வரங்கள்!

2. பேசக்கூடிய வரங்கள்

பற்பல பாஷைகளைப் பேசுதல்! பாஷைகளை வியாக்கியானம் பண்ணுதல்! தீர்க்கதரிசனம் உரைத்தல்!

நமக்குள் ஆவியானவர் பலமாகக் கிரியை செய்து, அடக்கிக் கொள்ள முடியாதபடி, பேசும்படியான ஒரு ஏவுதலை உண்டாக்குவார். இவைகளை நாம் பேச வேண்டும்.

அந்நிய பாஷை’ என்பது வேறு, ‘பற்பல பாஷைகளைப் பேசுவது’ என்பது வேறு. அந்நிய பாஷையில் பேசுகிற காரியம், கர்த்தருடைய பிள்ளைகளாகிய எல்லோருக்கும் உரியது. இந்த அந்நிய பாஷை எல்லோரும் பேச வேண்டும்.

அதே சமயத்தில், ‘பற்பல பாஷைகளைப் பேசுவது’ என்பது, உலகத்தில் பற்பல இடங்களில் பேசப்படும் பற்பல பாஷை. இந்தக் காரியத்தைக் குறித்து நீங்கள் இது சம்மந்தப்பட்ட புத்தகங்களில் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.

பாஷைகளை வியாக்கியானம் பண்ணுதல்! ஒருவர் அந்நிய பாஷைகளைப் பேசினால், இன்னொருவரால் அதன் அர்த்தத்தைச் சொல்ல முடியும். நீங்கள் கர்த்தரிடத்தில் ஜெபித்தால், அதன் அர்த்தத்தை அவர் உங்களுக்குச் சொல்லித் தருவார். ஒருவர், “சத்தமாக அந்நிய பாஷை பேசுகிறார்’ என்றால், அது சபைக்குரிய செய்தியாக இருக்கும். உங்களால் அதை விளங்கிக் கொள்ள முடியும். சில இடங்களில் ஒருவர் அந்நிய பாஷை பேசுவார். இன்னொருவர் அதற்கு வியாக்கியானம் பண்ணுவார். அந்த வரம் அவர்களுக்குள் கிரியை செய்யும்.

3.வல்லமையின் வரங்கள்!

விசுவாசம்!

குணமாக்கும் வரங்கள்! 

அற்புதங்களைச் செய்யும் சக்தி!

இந்த மூன்று வரங்களும் வல்லமைகளை வெளிப்படுத்தக் கூடிய வரங்கள். கர்த்தருடைய வல்லமையை யாரெல்லாம் வெளிப்படுத்த விரும்புகிறீர்களோ, இந்த வல்லமையின் வரத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

இந்த மூன்று வரங்களும் இணைந்து செயல்படும். ஏனென்றால், விசுவாசம் இல்லாமல் அற்புதங்களைச் செய்ய முடியாது. சாதாரண விசுவாசம் வேறு. விசுவாச வரம் வேறு. இந்த வரம் கிரியை செய்து விட்டால், சிங்கத்தைப்போல் ஒரு பலம் வந்து விடும். கூட்டத்தில் நீங்கள் பிரசங்கம் பண்ணுகிறீர்கள், வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கிறீர்கள் என்றால், கொஞ்சமும் உங்களுக்கு சந்தேகம் இருக்காது. அந்த விசுவாசம் அப்படி உங்களுக்குள் எழும்பும். அந்த வரம், இயற்கைக்கு மேற்பட்ட விதங்களில் ஆவியானவர் கொடுக்கிற வரம். அந்தச் சமயத்தில்தான் பலத்த அற்புதங்கள் நடக்கும். பொதுவான விசுவாசம் எல்லாருக்கும் இருக்கும். ஆனால் விசுவாச வரம் வரும்போது, நீங்கள் வித்தியாசமாக மாறி விடுவீர்கள். அங்கு நடக்கிற அற்புதங்கள் எல்லோரையும் அசைத்து விடும்.

இயேசுதான் மெய்யான ஆண்டவர்!” என்பதை நீங்கள் ஆணித்தரமாக நிரூபித்து விடுவீர்கள்.

அதற்குத்தான் இந்த ஆழமான ஆவிக்குரிய அனுபவத்திற்குள் உங்களைக் கர்த்தர் நடத்துகிறார். நீங்கள் யாரும் சாதாரண ஒரு விசுவாசியாக இருக்கக் கூடாது. நீங்கள் ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக மாற வேண்டும். இயேசுவை வெளிப்படுத்துகிறவர்களாக மாற வேண்டும்.

“…நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து,…உபதேசம் பண்ணுங்கள்.” (மத்தேயு 28:19, 20) என்று, இயேசு கிறிஸ்து சொல்கிறார்.

நீங்கள் சகல ஜனங்களையும் சீஷராக்கி, அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்.” என்று கர்த்தர் சொல்கிறார். நீங்கள் ஞானஸ்நானம் எடுத்தால், அவருக்கு சீஷராக மாறித்தான் ஆக வேண்டும். இயேசுவை அறிவித்தே ஆக வேண்டும். அதாவது, அவருடைய வல்லமையைக் குறித்து மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

நான் ஜெபித்தால், அற்புதம் நடக்கும்.” என்று, அடுத்தவர்களுடைய காரியங்களை அறிந்து ஜெபிக்க வேண்டும். நீங்கள் ஜெபித்து, இந்த வரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த 9 வரங்களில், சிலருக்குள் குறிப்பிட்ட ஒரு வரம் ஓங்கிச் செயல்படும். அந்த குறிப்பிட்ட வரத்தின் மூலமாக நீங்கள் இயேசுவை மகிமைப்படுத்தலாம். உங்களுக்குள் ஓங்கிச் செயல்படும் வரத்தைக்

குறித்து நீங்கள் தெளிவாக அறிந்து கொண்டு. செயல்படுங்கள். அதற்காக நீங்கள் அதிகமாக ஜெபம் பண்ணுங்கள். கர்த்தருடைய வசனத்தை வாசித்து, அதைக் குறித்ததான என்னென்ன காரியங்களெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து, அதில் தேறியவர்களாக மாற வேண்டும். அந்த ஆழமான அனுபவத்திற்குள் நீங்கள் கடந்து போக வேண்டும். இன்றைக்கு, கர்த்தர் உங்களுக்கு வரங்களைக் கொடுக்க வாஞ்சை உள்ளவராக இருக்கிறார்.

நான் உன்மேல் என் கைகளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பிவிடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன்.” 2 தீமோ. 1:6.

கர்த்தர் உங்களுக்கு என்ன வரத்தைக் கொடுத்திருக்கிறார்? அதை உங்கள் மூலமாக எப்படிச் செயல்படுத்துகிறார்? என்பதைக் குறித்து, நீங்கள் ஜெபம் செய்து, அந்த வரத்தை அனல் மூட்டி எழுப்பி, கர்த்தருக்கென்று வல்லமையான சாட்சியாக நீங்கள் எழும்ப வேண்டும்.

கர்த்தரோடு நெருக்கமாக இருங்கள்!

எப்பொழுதும் கர்த்தரோடு நெருங்கி ஜீவிக்கிற ஒரு அனுபவத்திற்குள் தேவப் பிள்ளைகளாகிய நாம் வர வேண்டும். கர்த்தர் நம்மோடு நடக்க விரும்புகிறார்! நம்மோடு பேச விரும்புகிறார்! நம்முடைய சத்தத்தை அவர் கேட்க விரும்புகிறார்! நாமும் கர்த்தரோடு நடக்கிற அனுபவத்திற்குள் நாம் கடந்து வர வேண்டும். இதற்கு, ஞானத்தைப் போதிக்கும் வசனம், அறிவை உணர்த்தும் வசனம் போன்ற வரங்கள் உதவி செய்கின்றன. இந்த வரங்களெல்லாம் கர்த்தரோடு நெருங்கி நடக்க நமக்கு உதவி செய்யும். தேவத் திட்டத்தை அறிந்து கொள்ள, ஆவிக்குரிய சூழ்நிலைகளை அறிந்து கொள்ள இந்த வரங்கள் நமக்கு உதவி செய்யும். ஆனால் உங்களுடைய இருதயத்தில், “நான் இயேசுவோடு இருக்க வேண்டும். அவரோடுகூட நடக்க வேண்டும்.” என்கிற ஒரு வாஞ்சை இருக்க வேண்டும்.

பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் (ஆதாமும், ஏவாளும்) கேட்டார்கள்.” (ஆதி. 3:8) என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது. அப்படியானால், கர்த்தராகிய தேவன் எந்த அளவுக்கு ஆதாமோடும், ஏவாளோடும் நெருக்கமாக இருந்தார் என்பதை இந்த வேத வசனத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். கர்த்தர், ஒரு தகப்பனைப்போல, தன் பிள்ளைகளாகிய அவர்களோடு பேச வாஞ்சையோடு கடந்து வந்து உறவாடினார். அவர்களும் கர்த்தரோடு உலாவினார்கள். அவர்கள் இருவரும் கர்த்தரோடு ஒரு அருமையான ஐக்கியம் வைத்திருந்தார்கள். கர்த்தர் மனிதனை உண்டாக்கியதற்கான நோக்கமும், மனிதனைக் குறித்த தேவனுடைய திட்டமும் இதுதான். கர்த்தரால், அவருடைய சாயலில் உண்டாக்கப்பட்ட, அவருடைய பிள்ளைகளாகிய நாமும்கூட அவரோடு பேசவும், பழகவும் வேண்டும். அவரும் நம்மோடு பேசவும், பழகவும் வேண்டும். அதற்கு நாம் தகுதிப்பட வேண்டும். நம்முடைய உள்ளத்தில் உள்ளதை அவரிடத்தில் சொல்ல வேண்டும். அவரும் நம்மோடு உறவாட வேண்டும். இதுதான் நம் கர்த்தருடைய விருப்பம்! அதற்குத்தான் கர்த்தர் நம்மை சிருஷ்டித்திருக்கிறார். இந்தக் கிருபையை நம்முடைய முற்பிதாவாகிய ஆதாம் இழந்து போனார்.

பரிசுத்த வேதாகமத்தை நீங்கள் நன்றாக வாசித்துப் பார்த்தால், சில பரிசுத்தவான்கள் இப்படிப்பட்டதான ஒரு உன்னத அனுபவத்திற்குள் இருந்திருக்கிறார்கள் என்பதை நாம் நன்றாக அறிந்து கொள்ளலாம். பழைய ஏற்பாட்டுக் காலத்தில், ஒரு மோசே, ஒரு ஏனோக்கு, ஒரு நோவா, ஒரு ஆபிரகாம்…என்று, குறிப்பிட்ட ஒரு சில பரிசுத்தவான்கள்தான் இருந்தார்கள்.

ஆனால் புதிய ஏற்பாட்டுக் காலத்தில், இயேசு கிறிஸ்து மரித்து, தேவாலயத்தின் திரைச் சீலையைக் கிழித்து, நமக்கும், கர்த்தருக்கும் இடையேயான ஒரு உன்னதமான நெருக்கமான பந்தத்தை உண்டாக்கி விட்டார்!

ஆகவே, நாமும்கூட இந்த அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். அதைப் பெற்றுக் கொள்ள, முதலாவது நாம் வாஞ்சிக்கவும் வேண்டும். ‘தேவனோடுகூட நடப்பது.’ என்றால், நாம் கர்த்தரோடு பேசுவது மாத்திரமல்ல, அவரும் நம்மோடு பேச வேண்டும்.

பொதுவாக, நாம் போய் ஜெபத்தில் முழங்கால்படியிட்டு, அவரிடத்தில் பேசி விட்டு வந்து விடுகிறோம். அப்படியல்ல. கர்த்தர் பேசுவதையும் நாம் கேட்க வேண்டும். நீங்கள் மாத்திரம் ஜெபம் செய்து விட்டு, “சரி, கர்த்தர் ஜெபத்தைக் கேட்டார்.” என்று சொல்லிக் கொண்டு, ஜெபத்திலிருந்து எழுந்து வந்து விடுவதல்ல. அவருடைய சமூகத்தில் போய், “ஆண்டவரே, என் ஜெபத்திற்கு என்ன பதில் தருகிறீர்? இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? எனக்குக் கற்றுத் தாரும்.” என்று சொல்லி, அவருடைய பதிலுக்காகக் காத்திருக்கும்போது, அவர் உங்களுக்குக் கற்றுத் தருவார்.

மாறாக நாம் என்ன செய்கிறோமென்றால், ஒருவரோடு நீங்கள் தொலைபேசியில் பேசும்போது, ‘கட…கட..கட’வென்று, எல்லாவற்றையும் அவரிடத்தில் சொல்லி விட்டு, பதிலுக்கு அவரைப் பேச விடாமல் போனை வைத்து விடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் உங்களிடத்தில் என்ன பேசியிருப்பார் என்பது உங்களுக்குத் தெரியாது. காரணம். அவரை நீங்கள் பேசவே விடவில்லை.

அதே போலத்தான் நாமும் ‘கட…கட..கட… ‘வென்று சில நிமிட நேரங்கள் ஜெபித்து விட்டு, கர்த்தர் நம்மோடு பேசுவதற்கு, நாம் அவருக்கு இடம் கொடுக்காமல், கடைசியில், ‘ஆமென்’ என்று சொல்லி விட்டு வந்து விடுகிறோம். கர்த்தரும், “சரி, அவர்கள் பேசுவதை நான் கேட்டேன். ஆனால், நான் பேசுவதைக் கேட்க அவர்களுக்கு விருப்பமில்லை போலும்.” என்று எண்ணி, துக்கத்தோடு சென்று விடுவார்.

ஏனோக்கு, முந்நூறு வருடங்கள் தேவனோடு சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.” (ஆதி. 5:22) என்று, பரிசுத்த வேதாகமத்தில் நாம் வாசிக்கிறோம்.

பழைய ஏற்பாட்டில், தேவனோடு சஞ்சரித்த ஏனோக்கைக் குறித்து கொஞ்சம்தான் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், புதிய ஏற்பாட்டில் அவரைக் குறித்து வாசிக்கும்போது, இயேசுவினுடைய இரண்டாம் வருகையைக் குறித்து ஏனோக்கு தீர்க்கதரிசனம் உரைத்தாராம்! “ஏனோக்கு வாழ்ந்தது எந்தக் காலம்?” என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

ஆனால், “ஏனோக்கு இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறார்!” என்றால், ‘சுமார் 300 வருடங்கள் தேவனோடு அவர் சஞ்சரித்தார்!’ அப்படியானால், “தேவனும், ஏனோக்கும் அப்படி என்னதான் பேசியிருப்பார்கள்?” என்று சற்று யோசித்துப் பார்த்தால், “கர்த்தர் தேவ இரகசியங்களை எல்லாம் மனம் திறந்து ஏனோக்கிடம் சொல்லியிருந்திருப்பார்!” என்றே நினைக்கத் தோணுகிறது.

ஒருவேளை, “ஆபிரகாமை நான் தெரிந்து கொள்ளப் போகிறேன். அவன் மூலமாக நான் பூமியிலே அவனுடைய சந்ததியைப் பெருகப் பண்ணப் போகிறேன். அவர்களுக்கு நான் பாலும், தேனும் ஒடுகிற ஒரு தேசத்தைக் கொடுக்கப் போகிறேன். அதிலிருந்து யூதா கோத்திரத்தில் ஒரு மனுஷ குமாரன் அவதரிக்கப் போகிறார். உலகத்தின் மீட்பிற்காக அவர் சிலுவையில் மரிக்கப் போகிறார். மரித்த மூன்றாம் நாளில் அவர் உயிர்த்தெழுந்து பரலோகத்திற்கு ஏறிச் செல்லப் போகிறார். அதன் பிறகு, கடைசிக் காலத்தில் மறுபடியும் ஆயிரமாயிரம் தூதர்களோடு அவர் மறுபடியும் பூலோகத்திற்கு வரப் போகிறார்…” என்றெல்லாம், அனேக தேவ இரகசியங்களைக் குறித்து இரகசியம் பேசியிருக்கலாம்! அவ்வளவு நெருக்கமான ஒரு Friendship!

ஏனோக்கைப் போல நீங்களும் கர்த்தரோடு நெருங்கிப் பழகி விடுங்கள். அப்பொழுது அவர், தன் இருதயத்தில் உள்ளவைகளை உங்களோடும் பகிர்ந்து கொள்வார்.

ஏனோக்கைப்போல நாமும் கர்த்தரோடு பழக வேண்டும். அவரோடு நடக்க வேண்டும். “அதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்று சற்று யோசியுங்கள். அதற்காக ஜெபியுங்கள்.

“ஏனோக்கு எப்படியெல்லாம் நடந்திருப்பார்? எப்படியெல்லாம் கர்த்தர் அவரோடு பேசியிருப்பார்?” என்று வேத வசனத்தின் வெளிச்சத்தில் தியானித்துப் பாருங்கள்.

ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக் கொண்டார்.” (ஆதி. 5:24).

கர்த்தர் ஏனோக்கைப் பார்த்து, “நீ என் இருதயத்தைப் புரிந்து கொண்ட மனிதன், என்னோடு பரலோகத்திற்கு வா.” என்று சொல்லி, அவனைக் கூட்டிக் கொண்டு போய், தன்னோடுகூட பரலோகத்தில் வைத்துக் கொண்டார். இப்படித்தான் ஏனோக்கு காணப்படாமல் போனார்.

கர்த்தரோடு எப்பொழுதும் நடக்க வேண்டுமென்றால், “கர்த்தருடைய ஊழியக்காரர்களாக, அல்லது தீர்க்கதரிசிகளாக இருக்க வேண்டும்!” என்று அல்ல.

“ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.” ஆதி. 5:22. ஏனோக்கு ஒரு குடும்பஸ்தன்! அந்த நிலைமையிலும் அவர் கர்த்தரோடு சஞ்சரித்தார்!

“நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.” ஆதி 6:9. நோவாவும் குடும்பத்தோடு வாழ்ந்தவர். தன் மனைவி, பிள்ளைகளுக்காக நிலத்தில் உழைத்த ஒரு மனிதன். அவரும் கர்த்தரோடு சஞ்சரித்தார்.

தேவன் ஆபிரகாமோடே பேசிமுடிந்தபின்பு,

அவர் அவனைவிட்டு எழுந்தருளினார்.” ஆதி. 17:22. “கர்த்தராகிய தேவன், ஆபிரகாமிடத்தில் பேசி முடித்த பின்பு, எழுந்தருளிப் போனார்.” என்றால், என்ன அர்த்தம்? கர்த்தர் பரலோகத்தை விட்டு இறங்கி வந்து, ஆபிரகாமுக்கு முன்பாக வந்து நின்று பேசினார். இரண்டு பேரும் சம்பாஷித்தார்கள். பேசி முடித்த பின்பு, “நான் போய்விட்டு வருகிறேன்.” என்று சொல்லி விட்டு கர்த்தர் போனார். எவ்வளவு அற்புதமான ஒரு அனுபவம்! 

ஆபிரகாம், கர்த்தரோடு எவ்வளவு நெருக்கமாக வாழ்ந்திருக்கிறார், பாருங்கள்!

‘பழைய ஏற்பாட்டுக் காலத்து ஆபிரகாமுக்கே அப்படிப்பட்ட ஒரு அனுபவம்!’ என்றால், “புதிய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்கிற நமக்கு எவ்வளவு சிறப்பான அனுபவத்தைக் கர்த்தர் வைத்திருக்கிறார்!” என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

நாம் என்றைக்கு இப்படிப்பட்ட ஒரு அனுபவத்திற்குள் வரப் போகிறோம்? இதற்காக நீங்கள் தனியாக அறையில் போய் ஜெபியுங்கள். இந்த அனுபவத்தை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள். காரணம், நீங்களும் இப்படிப்பட்ட ஒரு அனுபவத்திற்குள் வர வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார். நீங்கள் ஜெபிக்கும்போது, கர்த்தர் உங்களிடம் பேச வேண்டும். ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். நீங்கள் கர்த்தரை நெருங்கி நெருங்கி வந்து, அவரோடு பழகி விட்டால், மிகவும் சுலபமாக விடும்.

ஏனென்றால், கர்த்தரோடு நெருங்க நெருங்க, ‘அவர் எப்படிப்பட்டவர்?’ என்று உங்களுக்குத் தானாகத் தெரிந்து விடும். அவரை நெருங்க வேண்டுமானால், “நாம் எந்த அளவிற்குப் பரிசுத்தமாக இருக்க வேண்டும்? எதை எதையெல்லாம் நாம் கர்த்தரிடத்தில் ஒப்புக் கொடுக்க வேண்டும்?” என்பதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். ஆரம்பத்தில் மணிக்கணக்காக தேவ சமூகத்தில் காத்திருந்த நீங்கள், கர்த்தரோடு எப்போதும் நெருங்கி இருக்கப் பழகி விட்டால், முழங்கால்படியிட்ட கொஞ்ச நேரத்தில் அவர் உங்களோடு பேசி விடுவார்.

இந்தப் பழக்கத்திற்குள் நீங்கள் வந்து விட்டால், நீங்கள் மாறி விடுவீர்கள். கர்த்தர் உங்களை வித்தியாசமாக மாற்றி விடுவார். “நீங்கள் கர்த்தரோடு நடக்கிறீர்கள்!” என்பதை, உங்கள் வீட்டில் உள்ளவர்கள் சொல்லாமலேயே, உங்களை அறிந்து கொள்வார்கள். உங்கள் வீட்டில் நடக்கப் போகும் காரியத்தைக் குறித்து முன்பதாகவே சொல்வீர்கள்.

நன்றாக ஜெபிக்கிற ஒரு தேவ மனிதரை எனக்குத் தெரியும். அவருடைய ஒரு வாலிப மகள் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தாள். அவரும் தன் மகளை பக்தியோடு வளர்த்தார். ஒருநாள் அவர் ஜெபித்து கொண்டிருந்தபோது, அவருடைய மகள், அன்றைக்கு விரும்பத் தகாத ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்த ஒரு காட்சியை கர்த்தர் அவருக்குக் காண்பித்தார். அவள் வீட்டிற்கு வந்தவுடன், தன் மகளை அவர் அன்பாகக் கூப்பிட்டு, எல்லாம் விசாரித்து விட்டு, “சரி, ஏன் நீ இந்த இடத்திற்குச் சென்றாய்? அங்கு உனக்கு என்ன வேலை?’ என்று கேட்டார். அவர் அப்படிக் கேட்டவுடன், அவள் அதிர்ந்து போய் விட்டாள்!

அப்பா, நீங்கள் அங்கு வந்தீர்களா?” என்று கேட்டாள். “நான் வரவில்லை. பரிசுத்த ஆவியானவர் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். எனக்குள்ளிருக்கும் அந்த ஆவியானவர், நீ எங்கே நின்று கொண்டிருந்தாய் என்பதை எனக்குக் காண்பித்து, உனக்காக ஜெபிக்க வைத்தார். அது ஆபத்தான இடம். இனிமேல் நீ அங்கு போகக் கூடாது” என்று சொன்னார்.

என்னை மன்னித்து விடுங்கள், அப்பா. நான் உங்களிடம் சொல்லாமல் போய் விட்டேன். இனி நான் அப்படிப் போக மாட்டேன்.” என்றாள். இனி ஒருபோதும் அவள் அப்படிப்பட்ட காரியத்தைச் செய்ய மாட்டாள், அல்லவா? ஏனென்றால், “நான் எங்கு போனாலும், என்ன செய்தாலும், பரிசுத்த ஆவியானவர் மூலம் அப்பாவிற்குத் தெரிந்து விடும்.” என்று அவளுக்குத் தெரியும். இப்படிப்பட்ட, பரிசுத்த ஆவியானவரோடுகூட ஐக்கியப்படுகிற அனுபவம் ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் ஒரு சின்னக் காரியமானாலும், அதை உதாசீனம் பண்ணாமல், அதன் காரியமாக உங்களோடு பேச வேண்டிய அவசியம் இருந்தால், உங்களோடு பேசி, உங்களை வழி நடத்துவார். இந்த அளவிற்கு நீங்கள் ஆவியானவரோடு நெருங்கி வாழ வேண்டும்.

எனக்குத் தெரிந்த ஒரு போதகருடைய துணைவியார், இப்படியாகத் தன் அனுபவத்தைச் சொன்னார்கள். அவர்கள் தினமும் அதிகாலையில் எழும்பி, அந்நிய பாஷை பேசி ஜெபம் செய்வார்கள்.

ஒருநாள், அவர்களுடைய பிள்ளைகள் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்கள். அன்றைக்கு, பள்ளிக்கூடம் விடுமுறை. அந்த சகோதரி சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஆவியானவர்,

மகளே…’ என்று அந்தச் சகோதரியைக் கூப்பிட்டார். அவர்கள் வேலையை அப்படியே நிறுத்தி விட்டு, ‘ஆண்டவரே…’ என்றார்கள். அப்பொழுது ஆவியானவர், அந்தச் சகோதரியினுடைய ஒரு மகனுடைய பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லி, அவனை உடனே தேடு, போய் பார்.” என்று சொன்னார்.

உடனே, அந்த சகோதரி மிகுந்த பதட்டத்தோடுகூட வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த தன் மகனைப் பார்த்தால், காணவில்லை. ‘எங்கே போயிருப்பான்?’ என்று தேடிப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, தூரத்தில் ஒரு கிணற்றைச் சுற்றி சின்னப் பிள்ளைகள் கூடி நின்று சத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

என்ன நடந்தது?’ என்று விசாரித்து விட்டு, கிணற்றுக்குள் பார்த்தால், அந்த சகோதரியினுடைய மகன் கிணற்றுக்குள் தவறி விழுந்து, அவனுக்கு நீச்சல் தெரியாததினால் தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டிருந்தான். கடைசி நிமிடம் ஓடிப் போய் அவனைத் தூக்கினார்கள். 2 நிமிடம் தாமதித்திருந்தால்கூட அவன் இறந்து போயிருப்பான்.

தன் மகனுக்குப் பெரிய ஆபத்து என்பது, அந்த தாய்க்குத் தெரியவில்லை. ஆனால், கர்த்தருக்குத் தெரிந்து விட்டது. காரணம், இந்த பூமியில் கர்த்தருடைய கண்களுக்கு மறைவானது எதுவுமே இல்லையே!

அந்தச் சகோதரி எப்போதும் கர்த்தரோடு பேசுகிற அனுபவத்தோடு இருந்ததினால், உடனே கர்த்தர் அவர்களோடு பேசினார்.

இப்படியாக, அனேக சமயங்களில் கர்த்தர் நம்மோடு பேச வருகிறார், பேச விரும்புகிறார். ஆனால், நாம்தான் அவர் நம்மோடுகூடப் பேசுவதற்கு இடம் கொடுப்பதில்லை. நாம் அவருடைய சத்தத்தைக் கவனிப்பதில்லை. காரணம், அந்த அனுபவத்திற்குள் நாம் இன்னும் கடந்து வரவில்லை.

நம்முடைய இருதயத்தை அதற்காக நாம் சரிப்படுத்தவில்லை. அதனால்தான், “எனக்கு இப்படிப்பட்ட அனுபவம் இல்லை.” என்று சொல்லிக் கொண்டு, நாம் இப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர் பட்சபாதமுள்ள தேவனல்ல. எல்லோரோடும் அவர் பேச, பழக விரும்புகிறார். “ஆபிரகாம் தேவனுடைய சினேகிதன்!” எனப்பட்டார். (யாக். 2:23).

நீங்களும் கர்த்தருடைய சினேகிதராக மாறி விடுங்கள். “ஆண்டவரே, நீர்தான் என்னுடைய நெருங்கி நண்பன்.” என்று சொல்லுங்கள். இரண்டு பேர் நெருங்கிய நண்பர்களாக இருந்தால், ஒருநாளில், ஒரு தடவையாவது எப்படியாவது பார்த்துப் பேசிக் கொள்வார்கள். அதேபோல கர்த்தரோடு நெருங்கி இருங்கள். தினமும் அவருடைய சினேகிதனாக இருந்து விட்டால், உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையே மாறி விடும்.

சினேகிதர்கள்’ என்றால், ‘நடு இரவு நேரம்’ என்றாலும், ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வார்கள். ஆனால், “கர்த்தரிடம் மட்டும் பேசுவதற்கு நேரமில்லை…”

என்று சொல்லிக் கொண்டிருக்கிறவர்கள், கர்த்தரைத் தங்களுக்குச் சினேகிதர்களாக வைத்திருப்பார்களா?

எவ்வளவு நேரமானாலும் என் கர்த்தரோடு நான் பேச வேண்டும். என் கர்த்தருடைய பாதத்தில் நான் அமர்ந்திருக்க வேண்டும்.” என்கிற ஒரு தாகத்தோடு அவரைத் தேடிக் காத்திருக்கிறவர்கள்தான், அவரோடு சினேகிதர்களாக இருக்க முடியும். நீங்கள் விலைக் கிரையம் கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுக்க ஆயத்தமா? நீங்கள், உங்களுடைய நேரத்தை, உங்களுடைய முழங்கால்களைக் கொடுக்க வேண்டும். அவருடைய பாதத்தில் நீங்கள் அமர்ந்திருக்க வேண்டும். அப்பொழுது கர்த்தர் உங்களோடு பேசுவார்.

ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்;…” யாத். 33:11. ஒருவன் தீர்க்கதரிசியாக இருந்தால், சொப்பனத்தின் மூலமாகவோ, அல்லது தீர்க்கதரிசனத்தின் மூலமாகவோ அவனோடு கர்த்தர் பேசுவார். நீங்கள் இடைவிடாமல் ஜெபிக்கிறவர்களாக, எப்பொழுதும் கர்த்தரோடு நெருங்கி வாழ்கிறவர்களாக இருந்தால், சொப்பனங்கள் மூலமாகவோ, அல்லது தரிசனங்கள் மூலமாகவோ கர்த்தர் உங்களோடு பேசுவார். சிலருக்கு பரிசுத்த ஆவியானவர் மூலமாகக் கர்த்தர் அவர்களுடைய ஆவியில் அதிக நேரம் பேசுவார். இதுதான் தேவ சத்தத்தைக் கேட்பது!

சில சமயங்களில், ஒரு சிலரோடு காதுக்கருகில் பேசுவதுபோலப் பேசுவார். அந்த சத்தம் எல்லோருக்கும் அல்ல, எல்லா நாட்களுமல்ல. சில சமயங்களில் சிலருக்கு காதில் கேட்கும்படியாகப் பேசுவார்.

பெரும்பாலும் கர்த்தர் பரிசுத்த ஆவியானவர் மூலமாக நம்முடைய ஆவியிலே பேசுவார். நாம் பரிசுத்த ஆவியில் ஆவிக்குள் முழுமையாக நிரம்பி ஜெபிக்கும்போது, கர்த்தருடைய சத்தத்தை நம்மால் தெளிவாகக் கேட்க முடியும். சில சமயம் தேவனுடைய சாயலைக்கூட உங்களால் பார்க்க முடியும்! நீங்கள் பரிசுத்த ஆவிக்குள் நிறைந்து விட்டால், அவருடைய சாயலைப் பார்க்கலாம்! அவருடைய சத்தத்தை நீங்கள் கேட்கலாம்! அவர் உங்கள் அருகில் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கலாம்! அப்படிப்பட்டதான அனுபவத்திற்குள் கர்த்தர் உங்களை நடத்துவார். வாஞ்சையோடு கர்த்தரைத் தேடித் தேடி, இப்படிப்பட்டதான ஒரு ஆழமான அனுபவத்திற்குள் நீங்கள் கடந்து போக வேண்டும்.

பழைய ஏற்பாட்டில் மாத்திரமல்ல, புதிய ஏற்பாட்டுக் காலத்தில் அப். பேதுருவின் வாழ்க்கையில்கூட இப்படிப்பட்ட ஒரு அனுபவத்தைப் பார்க்கலாம்.

“பேதுரு அந்தத் தரிசனத்தைக் குறித்துச் சிந்தனை பண்ணிக்கொண்டிருக்கையில், ஆவியானவர்: இதோ, மூன்று மனுஷர் உன்னைத் தேடுகிறார்கள்.

நீ எழுந்து, இறங்கி, ஒன்றுக்குஞ் சந்தேகப்படாமல், அவர்களுடனே கூடப்போ; நானே அவர்களை அனுப்பினேன் என்று அவனுக்குச் சொன்னார்.” அப். 10:19,20.

பாருங்கள், பேதுரு ஒரு சொப்பனத்தைப் பார்த்தார். அதைக் குறித்து அவர் யோசித்துக் கொண்டிருந்தபோது, ஆவியானவர் அவரோடு பேசினார். இங்கே ஆவியானவர் தரிசனத்தில் பேதுருவோடு பேசியதைப் பார்க்கிறோம். முதலாவது தரிசனம்! அதன் பிறகு கர்த்தருடைய வார்த்தை பேதுருவுக்கு வெளிப்பட்டது.

பேதுரு…முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, பிரேதத்தின் புறமாய்த் திரும்பி: தபீத்தாளே, எழுந்திரு என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள்.” அப். 9:40.

பேதுரு, மரித்துப் போயிருந்த தொற்காளுக்காக ஜெபித்தபோது, அவர் ஜெபம் பண்ணி, அந்தப் பிரேதத்திற்கு முன்பாகத் திரும்பி, எழுந்திருக்கச் சொன்னார். ‘ஜெபம் பண்ணினார்…’ என்றால், என்ன அர்த்தம்?

பேதுரு கர்த்தரோடு பேசினார்!’ என்றுதானே அர்த்தம்! பேதுரு கர்த்தரிடத்தில் ஜெபித்தபோது, “அந்தப் பிணத்தோடு பேசு, நான் எழுப்பி விடுகிறேன்.” என்று கர்த்தர் சொல்லியிருப்பார். அந்த நேரத்தில் செய்ய வேண்டிய காரியத்தை, கர்த்தரிடத்தில் கேட்டுத்தான் பேதுரு செய்திருக்க வேண்டும்! அப்படிப்பட்டதான, கர்த்தரோடு கூடிய ஒரு நெருக்கமான அனுபவம் பேதுருவுக்கு இருந்தது என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

அப். பவுல், தன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறித்து எழுதும்போது, “நான்… ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கையில், ஞான திருஷ்டியடைந்து, அவரைத் -இயேசுவை- தரிசித்தேன்.

அவர் என்னை நோக்கி: நீ என்னைக் குறித்துச்

சொல்லும் சாட்சியை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; ஆதலால் நீ தாமதம்பண்ணாமல் சீக்கிரமாய் எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போ என்றார்.” (அப். 22:17,18) என்று இயேசு தரிசனத்தில் தனக்குத் தோன்றி, தன்னிடத்தில் இப்படிப் பேசியதாக எழுதுகிறார்.

இங்கே அப். பவுல் ஜெபித்தபோது, கர்த்தர் அவருக்குத் தரிசனமாகி, அவரை அழகாக வழி நடத்தியதைப் பார்க்கிறோம்.

மாத்திரமல்ல, பவுல் பிரயாணப்பட்டுப் போய் கொண்டிருந்த கப்பல் கடலுக்குள் ஒரு ஆபத்தான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டிருந்தபோது, ஒரு தேவ தூதனை கர்த்தர் பவுலினிடத்தில் அனுப்பியதாகவும், அந்த தூதனானவர் பவுலுக்கு தரிசனத்தின் தோன்றி, “நீ பயப்படாதே, இராயனுக்கு முன்பாக நிற்க வேண்டும். நீ இதில் மரிக்க மாட்டாய். உன் நிமித்தம் உன்னோடுகூட வருகிற எல்லோருக்கும் நான் பாதுகாப்பைப் கொடுப்பேன்.” என்று தரிசனத்தில் தோன்றி, சொல்லச் சொன்னதாக வேதாகமத்தில் வாசிக்கிறோம். (அப். 27:23-25).

மாத்திரமல்ல, பவுலுடைய ஊழியத்தின் பாதையிலும் கர்த்தருடைய ஆவியானவர் அவரை எப்படியெல்லாம் வழி நடத்தினார் என்பதைக் குறித்தும் நாம் வேதாகமத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். அப். 16:6-9).

கர்த்தருக்கும், பவுலுக்கும் இடையே எவ்வளவு அற்புதமான, அருமையான ஒரு தொடர்பு இருந்து கொண்டேயிருந்தது என்று பாருங்கள்!

ஊழியத்தில் மாத்திரமல்ல, நம்முடைய குடும்ப வாழ்க்கையிலும் கர்த்தர் நம்மோடு இடைபட்டுப் பேசுவார். நம்முடைய வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் கர்த்தர் நம்மோடு இடைப்பட்டு, அழகாகப் பேசி, நம்மை சரியாக வழி நடத்துவார்.

எனக்கு ஒரு பழக்கம் உண்டு. அதாவது, நான் சந்தோஷப்பட்டால், அதைக் கர்த்தரிடத்தில் சொல்லி சந்தோஷப்படுவேன். வருத்தமான நேரத்திலும்கூட, “ஆண்டவரே, இது எனக்கு வருத்தமாக இருக்கிறது.” என்று அதையும்கூட அவரிடத்தில் பகிர்ந்து கொள்வேன்.

சில சமயங்களில் பிரச்சனைகளைக் கர்த்தரிடத்தில் கொண்டு போகும்போது, அவர் அழகாக நம்மோடு பேசி, நம்மை சரியாக வழி நடத்துவார். காரணம், அவர் நம்முடைய சினேகிதன்! நம்முடைய தகப்பன்! நாம் மனம் திறந்து அவரோடு பேசப் பழக வேண்டும்.

எல்லாவற்றையும் நீங்கள் அவரிடத்தில் சொன்னால் சந்தோஷப்படுவார். கர்த்தரோடுகூட இப்படிப்பட்டதான பழக்கத்திற்குள் வந்து விட்டால், நீங்கள் கர்த்தரோடு நெருங்கி வாழலாம். அவரோடு பழகலாம். அதே சமயத்தில், அவரோடு விளையாட முடியாது. காரணம், அவர் சர்வ வல்லமையுள்ள தேவன்!

Leave a Reply