ஆழமான ஜெப வாழ்க்கை! Deep prayer life! With pdf

 

 

ஆழமான ஜெப வாழ்க்கை!

Bro.Mohan C. Lazarus

 

தேவப் பிள்ளைகளாகிய நம்முடைய ஜெபம், மேலோட்டமான ஒரு ஜெபமாக இருக்கக் கூடாது. ஆழமான ஜெப வாழ்க்கைக்குள்ளாக நாம் கடந்து போக வேண்டும். அப்பொழுதுதான் தேவனுடைய வல்லமையை நம்மால் அறிய முடியும்.

நீங்கள் ஒவ்வொருவரும் ஆழமான ஒரு ஜெப அனுபவத்திற்குள்ளாக வர வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். நீங்கள் படிப்படியாக முன்னேறி, ஆழமான ஒரு ஜெப அனுபவத்திற்குள்ளே வந்து விட்டால், உங்களால் ஜெபிக்காமல் இருக்கவே முடியாது. மணிக்கணக்காக ஜெபித்துக் கொண்டேயிருக்கலாம். அப்படிப்பட்ட ஜெபம் உங்களுக்கு ஒரு இனிமையான அனுபவமாக மாறி விடும். எப்பொழுதும் இடைவிடாமல் ஜெபிக்கிற ஒரு இருதயம் உங்களுக்குள்ளே உண்டாகும்.

அந்த ஜெபத்தின் பலனை உடனே நீங்கள் பார்க்கலாம். இதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை! இயேசுவோடுகூட நடந்து அவரோடு சேர்ந்து ஜெபிப்பதென்பது, ஒரு மகிமையான வாழ்க்கை! இந்த அனுபவம் ஊழியக்காரர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு விசுவாசிக்கும் அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தைக் கொடுக்க, கர்த்தர் விரும்புகிறார்.

சின்னப் பிள்ளைகளுக்குக்கூட அந்த அனுபவத்தைக் கொடுக்கக் கர்த்தர் விரும்புகிறார். முதலாவதாக, இதை விசுவாசிக்க வேண்டும். ஜெப வாழ்க்கையிலே நீங்கள் அதிகமாக வளர வேண்டும். அதற்கு நீங்கள் இயேசுவைக் கவனித்துப் பார்க்க வேண்டும். எந்தவொரு காரியமானாலும் உங்கள் கண்கள் இயேசுவின் மீதுதான் பதிந்திருக்க வேண்டும். எந்த ஊழியக்காரர் என்ன சொன்னாலும், அவை எல்லாவற்றிற்கும் மேலாக, ‘இயேசு என்ன சொல்கிறார்?’ என்று பாருங்கள்.

அவருடைய முகத்தை நோக்கிப் பாருங்கள். வேதாகமத்தில் எல்லாவற்றிற்கும் பதில் இருக்கிறது. இந்தக் காரியத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்பிராயம் இருக்கலாம்! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கலாம்! யார் என்ன சொன்னாலும், ‘இயேசு என்ன சொல்கிறார்?’ என்றுதான் பார்க்க வேண்டும். உங்களுடைய கண்கள் எப்பொழுதும், எந்தக் காரியத்திற்கும் இயேசுவின் மேல் பதிந்திருந்தால், நீங்கள் வலது புறம், இடது புறம் விலகாதபடி உங்களால் எல்லாச் சூழ்நிலைகளிலும் சரியாக நடக்க முடியும்.

நம்முடைய ஜெப வாழ்க்கைக்கு மாதிரி யார்?’ என்றால், நம்முடைய ஆண்டவராகிய இயேசு மாத்திரமே! அவர்தான் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

அவர் -இயேசு- அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.” மாற்கு 1:35.

அப்படியானால், இயேசுவைப்போல நாமும் அதிகாலையில் இருட்டோடே எழுந்து ஜெபிக்க வேண்டும். கர்த்தரோடு தனித்திருக்க வேண்டும்.

“அவர் -இயேசு- ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்.” மத்தேயு 14:23.

சாயங்காலத்தில் கூட இயேசு ஜெபம்

பண்ணினார். அப்படியானால், சாயங்காலத்திலும் ஒருமணி நேரமாவது நாம் ஜெபிக்க வேண்டும். “அந்நாட்களிலே, அவர் – இயேசு

ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி

ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.” லூக்கா 6:12. இதை நாம் மறந்து விடக் கூடாது. மாத்திரமல்ல, “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்;” மத்தேயு 26:41.

“எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்…” (லூக்கா 21:36) என்று இயேசு சொல்கிறார்.

காரணம், கடைசிக் காலத்திலே கர்த்தருடைய வருகையிலே நாம் நிலைத்திருக்க வேண்டும். ஆகவே எப்பொழுதும், நம்முடைய ஜெப ஆவியை நாம் காத்துக் கொள்ள வேண்டும்.

பயணம் செய்யும்போதும்கூட ஜெபிக்க வேண்டும். வேலை செய்கிறபோதும் ஜெபிக்க வேண்டும். இதனுடைய அர்த்தமென்ன? நாம் 24 மணி நேரமும் நம் ஆண்டவராகிய இயேசுவோடு பேசிக் கொண்டேயிருக்க

வேண்டும். அதாவது, உங்களுடைய ஆத்துமா இயேசுவோடு எப்போதும் தொடர்பில் இருந்து கொண்டேயிருக்க வேண்டும்.

எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருங்கள்.” என்பதாக இயேசு சொல்லியிருக்கிறார்.

(மத்தேயு 26:41, மாற்கு 14:38). இதுதான் இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிற காரியம். அது மாத்திரமல்ல,

வேதாகமத்தில் நாம் வாசித்துப் பார்க்கும்போது, ‘நாம் என்னென்ன காரியத்திற்காக ஜெபிக்க வேண்டும்?’ என்றும், அதிகமான காரியங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.

..எல்லா மனுஷருக்காகவும்

விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்

பண்ணவேண்டும்.” 1 தீமோ. 2:1.

நமக்காக மட்டுமே நாம் ஜெபித்துக்

கொண்டிருக்கக் கூடாது. எல்லா மனுஷருக்காகவும் நாம் ஜெபிக்க வேண்டும்! உங்கள் கிராமத்திலிருக்கிற எல்லோருக்காகவும் ஜெபியுங்கள். உங்கள் பட்டணத்திலிருக்கிற எல்லோருக்காகவும் நீங்கள் ஜெபிக்க வேண்டும். அதற்குப் பிறகு மாநிலங்களில் இருக்கிற எல்லோருக்காகவும், இந்தியாவிலிருக்கிற எல்லோருக்காகவும் ஜெபிக்க வேண்டும். முக்கியமாக அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்காக பிரதம மந்திரி, ஜனாதிபதி, கட்சித் தலைவர்

கள்…என்று, ஜெபிக்க வேண்டும். முதலமைச்சர்கள், அமைச்சர்கள்,

“தேசத்தை ஆள்கிற தலைவர்களுக்காக ஜெபிக்க

வேண்டும்.” என்று வேதாகமம் சொல்கிறது.

சகல பரிசுத்தவான்களுக்காகவும் ஜெபிக்க

வேண்டும். (எபே. 6:18). “எல்லா தேவ மனிதர்களுக்காகவும், ஊழியர்களுக்காகவும் நாம் ஜெபிக்க வேண்டும்.” என்று வேதாகமம் நமக்குத் தெளிவாகச் சொல்கிறது.

திருவசனம் செல்லும்படியான வாசலைத் தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.” கொலோ.4:4 வேத வசனங்கள் அறிவிக்கப்படவும், அந்த

ஊழியத்திற்கான வழிகளைக் கர்த்தர் திறந்து கொடுக்கவும், அந்த ஊழியத்தை நிறைவேற்ற இருக்கிற தேவ ஊழியர்களுக்காக ஜெபிக்க வேண்டும்.

இப்படியாக, ஜெபத்தைக் குறித்ததான அனேகக் காரியங்களை வேதாகமத்தில் வாசித்து, அறிந்து கொள்ளலாம்.

 

காரியங்களை அறிந்து ஜெபிக்க வேண்டும்!

  • ‘நெகேமியா’ என்பவர், எருசலேமிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு அடிமையாக, பாபிலோன் தேசத்து ராஜாவுடைய அரண்மனையிலே ஒரு பான பாத்திரக்காரனாக இருந்தார். அவருடைய சொந்த தேசமான எருசேலேமிலிருந்து அவருடைய உறவினரும், வேறு சில மனிதர்களுமாக எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு வந்தார்கள். நெகேமியா அவர்களைப் பார்த்தவுடன், மிகுந்த ஆவலோடு, “நம்முடைய தேசம் எப்படியிருக்கிறது? நம் நாடு, நம் எருசலேம் பட்டணம் எப்படியிருக்கிறது? அங்குள்ள மக்கள் எப்படியிருக்கிறார்கள்?” என்று விசாரித்தார். அதற்கு அவர்கள், “பட்டணம் சுட்டெரிக்கப்பட்டிருக்கிறது. ஜனங்கள் எல்லோரும் சிறுமையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கே இருக்கிற கொஞ்ச ஜனம்கூட சந்தோஷமாக இல்லை. எல்லோரும் வேதனையில் இருக்கிறார்கள்!” என்று சொன்ன செய்தியை நெகேமியா கேட்டவுடனே,

“நான் உட்கார்ந்து அழுது, சில நாளாய்த் துக்கித்து, உபவாசித்து, பரலோகத்தின் தேவனை நோக்கி:…பிரார்த்தித்தேன்.” (நெகே.1:1-11) என்று சொல்கிறார்.

தன் மக்களைக் குறித்தும், தன் தேசத்தைக் குறித்தும் விசாரித்த நெகேமியாவிற்குள்ளே தன் தேசத்தைக் குறித்ததான ஒரு பாரம் உண்டாகி, ஜெபம் பண்ணினார். அதேபோல நாமும் நம் தேசத்தில் நடைபெறும் காரியங்களை அறிந்து, தேவ சமூகத்திலே

ஜெபம் செய்ய வேண்டும். தேசத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஊழியங்களைக் குறித்து உங்களுக்குத் தெரியும்.

காரணம், உங்களுக்கு அனுப்படுகிற பத்திரிக்கைகளின் மூலமாக, ஒவ்வொரு ஊழியர்களைக் குறித்தும், அவர்களுடைய ஊழியங்களைக் குறித்தும், நீங்கள் அறிந்து ஜெபிக்கிறீர்கள்.

ஊழியங்களைக் குறித்தும், ஊழியக் காரியங்களைக் குறித்தும் அறிந்து ஜெபிப்பது மட்டும் போதாது. நம்முடைய தேசத்தைக் குறித்தும் நாமே அறிந்து ஜெபிக்க வேண்டும். நெகேமியா தன் தேசத்தை குறித்து அறிந்து ஜெபித்தார்.

நம்முடைய இந்தியா தேசத்தைக் குறித்த அறிவு நமக்கு இருக்க வேண்டும். “எத்தனை மாநிலங்கள் இருக்கிறது? எத்தனை இன மக்கள் இருக்கிறார்கள்? எத்தனை கோடி மக்கள் இருக்கிறார்கள்?” என்று அறிந்து, நாம் தேவ சமூகத்திலே ஜெபிக்க வேண்டும். அவ்வப்போது தேசத்தில் வரக் கூடிய பிரச்சனைகளை அறிந்து நீங்கள் ஜெபிக்க வேண்டும்.

ஜெபிக்கிற நாம், நம் தேசத்தில் நடைபெறுகிற காரியங்களை அறிந்து கொள்ளும்போது, நமக்குள் ஒரு பாரம் உண்டாகும். அதற்காக நாம் ஜெபிக்கும்போது, அந்த ஜெபத்திற்குக் கர்த்தர் உடனே பதில் தருவார்.

பல வருடங்களாக அமெரிக்காவில் மூன்று நாட்கள் உபவாச ஜெபத்தை நடத்தி, அந்த தேசத்திற்காக ஜெபித்து வருகிறோம். ஒருமுறை, அங்கே இந்த மூன்று நாட்கள் உபவாச ஜெபம் நடந்து கொண்டிருந்த சமயத்தில், ஒரு சகோதரர் ஒரு பத்திரிக்கைச் செய்தியை என்னிடத்தில் கொண்டு வந்து கொடுத்தார். அந்தச் சமயத்தில், திரு. ஜார்ஜ் புஷ் அவர்கள் அமெரிக்க அதிபராக இருந்தார். அவர் ஒரு விசுவாசியாக இருந்தபடியினால், அடிக்கடி, ‘God bless America!’ என்று சொல்வார்.

இந்த வார்த்தை சிலருக்குப் பிடிக்கவில்லை. உடனே அவர்கள், ‘God less America!’ அதாவது, “கடவுள் இல்லாத அமெரிக்கா!” என்று ஒரு விளம்பரம் பண்ணி, அதற்காக Washington D.C.யிலுள்ள ஒரு பெரிய இடத்தில் சுமார் பத்து லட்சம் பேர் ஒன்று கூடி, “God less America!” என்று Declare பண்ண வேண்டும். என்று சொல்லி, ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார்கள். நான் அந்தச் செய்தியைப் பார்த்தவுடனே மிகவும் வருத்தப்பட்டேன். ஆனால், நான் அதை அப்படியே விட்டு விடவில்லை.

உடனே நான், அன்றைக்கு ஜெபிக்க வந்திருந்த எல்லோரிடத்திலும், “இந்த God less America கூட்டமே நடக்கக் கூடாது. நாம் எல்லோரும் இதற்காகக் கருத்தாக ஜெபிப்போம்.” என்று சொல்லி, ஜெபித்தோம்.

என்ன நடந்தது தெரியுமா? கர்த்தர் ஜெபத்தைக் கேட்டு, சூழ்நிலையையே தலைகீழாக மாற்றி, அந்தக் கூட்டத்தையே நடைபெறாதபடிக்கு நிறுத்தி விட்டார்! பாருங்கள், நாம் ஜெபிக்கும்போது கர்த்தர் செயல்படுகிறார்!

ஆகவே, எந்த ஒரு காரியத்தையும் ஒரு ஜெபக் குறிப்பாக மாற்றி நாமே ஜெபிக்க வேண்டும். பிள்ளைகளுடைய சின்னச் சின்னக் காரியங்களுக்காக ஜெபிப்பதுபோல, தேசத்திற்கான ஒவ்வொரு சின்னக் காரியத்தையும் அறிந்து, ஜெபக் குறிப்பாகச் சொல்லி ஜெபிக்க வேண்டும். எப்பொழுதும் நம்மைச் சுற்றிலும் நடக்கிற காரியங்களைக் குறித்தும், தேசத்தைக் குறித்தும் ஜெபத்தில் விழிப்போடு இருக்க வேண்டும்.

நீங்கள் ஒவ்வொரு சின்னக் காரியத்திற்காகவும் ஜெபித்துப் பாருங்கள். தேவன் எப்படி செயல்படுகிறார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

சில வருடத்திற்கு முன்பு, ஒரு உபவாச ஜெப முகாமில், டாக்டராக இரு கிற, சகோ. சாம் ஜெபத்துரை அவர்களுடைய மகளோடு பேசிக் கொண்டிருந்தேன். அவளுடைய வேலைக் காரியங்களைக் குறித்து நான் அவளிடத்தில் கேட்டபோது, அவள் பாரத்தோடு என்னிடத்தில் சொன்ன காரியம் என்னவென்றால், “குடிப் பழக்கத்தினால் எத்தனை குடும்பங்கள்

பாதிக்கப்படுகின்றன? எத்தனை குடும்பங்கள் பிரிகின்றன? எத்தனை பிள்ளைகள்

பாதிக்கப்படுகிறார்கள்? இதெல்லாம் என்னுடைய வேலை நேரங்களில் நான் நேரில் பார்க்கிற காரியங்கள்.” என்று சொன்னாள்.

பாருங்கள், “இப்படியாகக் குடும்பங்களெல்லாம் பாதிக்கப்படுகிறதே!” என்று அவளுக்குள்ளும் ஒரு பாரம் இருந்தது. இதற்கு முன்னால், எத்தனையோ முறை, “குடிகாரர்கள் இரட்சிக்கப்பட வேண்டும்…” என்று ஜெபித்திருக்கிறோம்.

உண்மைதான்! ஆனால், அந்த மகள் என்னோடு பகிர்ந்து கொண்ட காரியத்திற்குப் பிறகு, எனக்குள்ளும் ஒரு பெரிய பாரம் வந்தது.

  • இது எவ்வளவு முக்கியமான ஒரு காரியம்! அன்றாடம் நம்மைச் சுற்றிலும் நடக்கிற காரியங்களை, ஒரு செய்தியாகக் கேட்டு விட்டுப் போகக் கூடாது. அதை ஒரு ஜெபக் குறிப்பாக மாற்றி, அதற்காக ஜெபிக்க வேண்டும்.

நெகேமியா எருசலேமிலுள்ள காரியங்களை அறிந்து, அதை ஒரு பாரமாக எடுத்துக் கொண்டு ஜெபிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் ஜெபிக்க

ஆரம்பித்ததினால்தான், அவர் மூலமாய் கர்த்தர் எருசலேமைக் கட்டியெழுப்பச் சித்தமானார்.

நாம் ஒவ்வொருவரும் நெகேமியாவைப் போல மாற வேண்டும். தேசத்திற்கான காரியங்களை அறிந்து நாமே ஜெபிக்க வேண்டும்.

நாம் வசிக்கும் பட்டணத்தைச் சுற்றிலும், அல்லது நம்முடைய கிராமத்தைச் சுற்றிலும் நடக்கிற சம்பவங்கள், காரியங்கள் என்ன? அங்கு கிரியை செய்து கொண்டிருக்கிற விக்கிரகத்தின் காரியங்கள் என்ன? சாத்தானின் அரண்கள் என்னென்ன?” என்று அறிந்து, அதற்காக ஜெபிக்க வேண்டும். நீங்கள் ஜெபிக்க ஜெபிக்க, கர்த்தர் அந்தக் காரியத்திலே செயல்படுவதைப் பார்க்கலாம்.

தீர்க்கதரிசனத்தை அறிந்து ஜெபிக்க வேண்டும்!

  • கல்தேயருடைய ராஜ்யத்தின்மேல் ராஜாவாக்கப்பட்ட மேதிய குலத்தானாகிய அகாஸ்வேருவின் புத்திரனான தரியு ராஜ்யபாரம்பண்ணுகிற முதலாம் வருஷத்திலே,

தானியேலாகிய நான் எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித்தீர எழுபது வருஷம் செல்லுமென்று கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியோடே சொல்லிய வருஷங்களின் தொகையைப் புஸ்தகங்களால் அறிந்துகொண்டேன்.” தானி. 9:1, 2. அந்தச் சமயத்தில் தானியேல், “நாம் கல்தேயர் தேசத்தில் ஒரு அடிமையாக இருக்கிறோம்! கர்த்தர் நம் தேசத்து ஜனத்தை அடிமையாக ஒப்புக் கொடுத்து விட்டார்! அதைக் குறித்து என்ன தீர்க்கதரிசனம் இருக்கிறது? இந்த அடிமைத்தனம் எவ்வளவு நாள்?” என்பதைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, எரேமியா தீர்க்கதரிசனப் புத்தகத்தை வாசித்தார்.

தானியேல் அதை வாசித்துப் பார்த்தபோது, “இதுதான் விடுதலையின் வருஷம்! இப்பொழுதுதான் கர்த்தர் செயல்படப் போகிறார். எரேமியா தீர்க்கதரிசனம் சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறுகிற காலம் இதுதான்!” என்பதை அறிந்து கொண்டார்.

தீர்க்கதரிசனத்தின் மூலமாக தேசத்தில் இனி என்ன நடக்க போகிறது?” என்பதை தானியேல் அறிந்து கொண்ட உடனே, உபவாசம் பண்ணி, இரட்டிலும், சாம்பலிலும் உட்கார்ந்து, ஜெபத்தினாலும், விண்ணப்பத்தினாலும் கர்த்தருடைய முகத்தைத் தேடினார்.

நான் உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என் முகத்தை அவருக்கு நேராக்கி,…என் விண்ணப்பத்தை என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் செலுத்திக்கொண்டிருந்தேன்.” (தானி. 9:3-20) என்று தானியேல் சொல்கிறார்.

தானியேல், தன்னுடைய பாவத்தையும், தன் ஜனத்தின் பாவத்தையும் அறிக்கை செய்து, “ஆண்டவரே! எங்களை மன்னியும், எங்களுக்கு இரங்கும். உம்முடைய தீர்க்கதரிசனத்தின்படி ஜனத்தை விடுதலையாக்கும்!’ என்று, தன் ஜனத்திற்காக, தன் தேசத்திற்காகக் கருத்தாக ஜெபம் செய்தார்.” என்பதாக வேதாகமத்திலே வாசிக்கிறோம்.

அப்படி ஜெபித்ததினால்தான், கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பி, “நீ எனக்கு மிகவும் பிரியமானவன். நீ ஜெபிக்கத் தொடங்கியபோதே கட்டளை வெளிப்பட்டது.” என்று, கர்த்தர் சொல்லச் சொன்னார்.

நாமும்கூட தானியேலைப்போல, “இந்தியாவைக் குறித்து என்ன தீர்க்கதரிசனம்? இந்தியாவிலுள்ள சபைகளைக் குறித்து என்ன தீர்க்கதரிசனம்? இந்தியாவிலுள்ள வாலிபர்களைக் குறித்து என்ன தீர்க்கதரிசனம்? தேசத்தைக் குறித்து தேவ ஊழியர்கள் மூலமாக என்ன வெளிப்பாடு வருகிறது? கர்த்தர் நம் தேசத்தைக் குறித்து என்னென்ன திட்டங்களை வைத்திருக்கிறார்? அடுத்து நம் தேசத்தில் என்ன நடக்கப் போகிறது?” என்கிற காரியங்களை நாம் அறிந்து, அதற்காக ஜெபிக்க வேண்டும்.

இந்நாட்களில் பல தீர்க்கதரிசிகள் மூலமாக, அவ்வப்போது கர்த்தருடைய வார்த்தைகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அனேகருக்கு அதில் நம்பிக்கையில்லை. ஆனால், நீங்கள் அதையெல்லாம் விட்டு, ஜெபம் பண்ணுகிற பிள்ளைகளாக, ‘தேசத்தைக் குறித்து தேவன் என்ன சொல்லியிருக்கிறார்?’ என்பதை அறிந்து, அதற்காகக் கவனமாக ஜெபிக்க வேண்டும்.

சில வருடங்களுக்கு முன்பு, “வாலிபர்களை நான் தேசம் முழுவதும் சேனையாய் எழுப்பப் போகிறேன். வாலிபர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்” என்று கர்த்தர் சொன்னார்.

அதற்குப் பிறகு, கடந்த சில வருடங்களாக வாலிபர்களைக் குறித்து நாங்கள் தொடர்ந்து விசேஷமாக ஜெபிக்க ஆரம்பித்தோம்.

பாருங்கள், இன்றைக்கு நாங்கள் எங்கு போய் கூட்டம் நடத்தினாலும், வாலிபர்கள் ஆயிரம் ஆயிரமாகத் திரண்டு வருகிறார்கள்! இரட்சிக்கப்படுகிறார்கள்! அபிஷேகம் பண்ணப்படுகிறார்கள்! வாலிபர்கள் கர்த்தருக்காக சேனை சேனையாக எழும்ப ஆரம்பித்து விட்டார்கள்!

எந்த ஊழியக்காரர்களைக் கொண்டு கர்த்தர் வெளிப்படுத்தினாலும், அந்த வார்த்தையை நாம் ஏற்றுக் கொண்டு, அதற்காக நாமே ஜெபிக்க வேண்டும். ஒரு தேசத்தில், “இந்த மாதிரியான ஒரு காரியம் நடக்கப் போகிறது!” என்று கர்த்தர் சொல்வாரானால், அந்த தீர்க்கதரிசனத்தை நாம் உள் வாங்கிக் கொண்டு, அதற்காக ஜெபிக்க வேண்டும்.

எரேமியா தீர்க்கதரிசியின் மூலமாகச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனத்தை வைத்து, தானியேல் ஜெபம் பண்ணினார். தானியேலுக்கு எப்படிப்பட்ட ஒரு நல்ல இருதயம் பாருங்கள்! “கர்த்தர் எரேமியா மூலமாகச் சொன்னால், அது எப்படி நடக்கும்? என்னிடம் கர்த்தர் பேசட்டும்…பிறகு பார்க்கலாம்…” என்று தானியேல் சொல்லவில்லை. எரேமியா மூலமாகச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனமானாலும், “அதைச் சொன்னது கர்த்தர்!” என்று தானியேல் திட்டமாக அறிந்திருந்தார்.

ஆகவேதான், தானியேல் அதைச் சரியாகப் புரிந்து கொண்டு, விசுவாசித்து ஜெபித்தார். இந்தியாவைக் குறித்த பல தீர்க்கதரிசனங்களைக் கர்த்தர் தந்திருக்கிறார். இந்தக் கடைசி நாட்களில், தேசத்தைக் குறித்த நல்ல தீர்க்கதரிசனங்கள் மற்றும் “தேசத்தில் கர்த்தர் என்ன செய்யப் போகிறார்?’ என்கிற காரியங்களைக் குறித்த பல வெளிப்பாடுகள், பல தேவ மனிதர்கள் மூலமாக வந்து கொண்டிருக்கின்றன.

அதை நாம் உடனே உள் வாங்கிக் கொண்டு, அதற்காக ஜெபிக்க வேண்டும். அனேக தேவப் பிள்ளைகள் அதற்காக ஜெபிப்பதில்லை. கர்த்தர் ஒரு காரியத்தைக் குறித்து தீர்க்கதரிசனத்தை வெளிப்படுத்தினால், நாம் அதற்காக ஜெபிக்கும்போதுதான் அந்தக் காரியம் நிறைவேறும்.

இந்தியாவிற்கு இது எழுப்புதலின் காலம்! அதற்கான அடையாளங்களை நாம் தேசத்தில் பார்க்கிறோம். “என் ஆவியை நான் எல்லோர் மேலும் அளவில்லாமல் ஊற்றப் போகிறேன்!” என்று கர்த்தர் வாக்குப் பண்ணியிருக்கிறார்.

அப்படியானால், இது கடைசிக் காலம்! அதாவது, ஆவியானவர் ஊற்றப்படுகிற காலம்! ஆக, இப்பொழுது நாங்கள் எங்கு ஊழியத்திற்குப் போனாலும், “உம்முடைய ஆவியை ஊற்றும்!” என்று, கர்த்தர் கொடுத்த வார்த்தையைச் சொல்லி, ஜெபித்து வருகிறோம்.

இப்படியாகக் கர்த்தர் வெளிப்படுத்துகிற தீர்க்கதரிசனங்களை வைத்து, அதைச் சொல்லி, நாமே ஜெபிக்க வேண்டும். அது ரொம்பக் கருத்தான ஒரு ஜெபமாக இருக்க வேண்டும். தானியேல் அப்படித்தான் ஜெபம் பண்ணினார். நாமும் அப்படித்தான் ஜெபிக்க வேண்டும்.

நம்முடைய தேசத்தைக் குறித்து, சபைகளைக் குறித்து, கர்த்தர் என்ன சொல்லியிருக்கிறார்? இனி வரப் போகிற நாட்களைக் குறித்து, முழு இந்தியாவையும் குறித்துக் கர்த்தர் என்ன சொல்லியிருக்கிறார்?” என்று, அதைப் பற்றியெல்லாம் அறிந்து, அதைச் சொல்லி ஜெபிக்க வேண்டும். “யார் மூலமாகவாவது கர்த்தர் சொல்லட்டும்…” என்று எண்ணாதபடி நீங்களே ஜெபிக்கலாம்.

எதற்காக ஜெபிக்க வேண்டும்? கர்த்தர் தீர்க்கதரிசனமாக உங்களோடு பேசுவார். நீங்கள் உங்களையே சாதாரணமாக நினைக்காதிருங்கள்! நல்லதொரு ஜெப வீரனாக (வீராங்கனையாக) மாறி விட்ட உங்களிடம் சொல்லாமல், கர்த்தர் தேசத்தில் எதையுமே செய்ய மாட்டார்.

கர்த்தர், தேசத்தில், தான் செய்யப் போகிற காரியங்களைக் குறித்து உங்களிடத்தில் வெளிப்படுத்துவார். அதை வைத்து தேவ சமூகத்தில் நீங்கள் ஜெபிக்க வேண்டும்.

நாங்கள் பல உலக நாடுகளுக்கு ஜெபம் நடத்தப் போகும்போதெல்லாம், அந்தந்த நாடுகளிலே “என்ன நடக்கும்? எப்படி எழுப்புதல் வரும்?” என்று பல காரியங்களைக் குறித்து கர்த்தர் பேசுவார். அதை வைத்து நாங்கள் ஜெபம் பண்ணுவோம். நாங்கள் அப்படியாக ஜெபிக்க ஜெபிக்க, அந்தக் காரியங்கள் நடக்கின்றன. அந்தந்த நாடுகளில் கர்த்தர் சொன்ன காரியங்கள் நடப்பதை நாங்கள் பார்க்கிறோம்.

இரகசியங்களை அறிந்து ஜெபிக்க வேண்டும்!

தேசங்களில் பல காரியங்கள் இரகசியமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன! அதாவது, மறைமுகமாக பல காரியங்களை தேசத்தில் பிசாசானவன் செய்து கொண்டிருக்கிறான்.

ஆவிக்குரிய உலகத்தில் சாத்தான் பல விதமான

காரியங்களைத் திட்டமிட்டுச் செய்கிறான்.

அப்படிப்பட்ட இரகசியங்களை அறிந்து ஜெபம் பண்ண வேண்டும்.

பொதுவாக, “தேசத்தில் கிரியை செய்கிற விக்கிரக ஆவிகள் அழிய வேண்டும். வேசித்தனத்தின் ஆவிகள் அழிய வேண்டும். இந்த மாதிரியான பிசாசின் கிரியைகள் தேசத்தை விட்டே ஓட வேண்டும்.” என்று நாம் ஜெபிக்கிறோம்.

இதையும் தாண்டி, இன்னும் கொஞ்சம் ஆழமாகக் கர்த்தரோடு நெருங்கினால், நம்முடைய தேசத்தில் எந்தெந்த எல்லைகளிலே பிசாச னவன் எந்தெந்த மாதிரியாக, தந்திரமாகக் கிரியை செய்கிறான்? என்று, கர்த்தர் வெளியரங்கமாக வெளிப்படுத்துவார். கர்த்தர் வெளிப்படுத்துகிற அப்படிப்பட்ட காரியங்களுக்காக ஜெபிக்க வேண்டும்.

இந்த மாதிரியான காரியத்திற்கு வேதாகமத்தில் ஆதாரம் இருக்கிறதா?” என்று பார்த்தால்,

“…நான் என் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், யூதாவின் மூப்பர்கள் எனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிறபோதும், கர்த்தராகிய ஆண்டவருடைய கரம் அங்கே என்மேல் அமர்ந்தது.

அப்பொழுது இதோ, அக்கினிச்சாயலாய்த் தோன்றுகிற ஒருவரைக் கண்டேன்; அவருடைய இடுப்புக்குக் கீழெல்லாம் அக்கினியும் அவருடைய இடுப்புக்கு மேலெல்லாம் சொகுசாவைப்போல் பிரகாசிக்கிற சாயலுமாயிருந்தது.

கைபோல் தோன்றினதை அவர் நீட்டி, என் தலைமயிரைப் பிடித்து என்னைத் தூக்கினார். ஆவியானவர் என்னைப் பூமிக்கும் வானத்துக்கும் நடுவே கொண்டுபோய், தேவதரிசனத்திலே என்னை எருசலேமில் வடதிசைக்கு எதிரான உள்வாசலின் நடையிலே விட்டார்; அங்கே எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தின் ஸ்தானம் இருந்தது.” எசேக். 8:1-3. “நான் உள்ளே போய்ப் பார்த்தபோது, இதோ, சகலவித ஊரும்பிராணிகளும் அருவருப்பான மிருகங்களுமாகிய இவைகளின் சுரூபங்களும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய நரகலான சகல விக்கிரகங்களும் சுவரில் சுற்றிலும் சித்திரந் தீரப்பட்டிருந்தன.” எசேக். 8:10.

இஸ்ரவேல் மூப்பர்கள் எல்லோரும் வீட்டில் உட்கார்ந்திருக்கிறார்கள். எசேக்கியேல் தீர்க்கதரிசியும் அங்கே இருக்கிறார். அப்பொழுது, எசேக்கியேல் தீர்க்கதரிசி, “கர்த்தருடைய கரம் என் மேல் வந்து அமர்ந்தது.

அப்பொழுது இதோ அக்கினி மயமாகத் தோன்றுகிற ஒருவரை நான் கண்டேன்…” என்பதாக, தனக்கு நேர்ந்த அனுபவத்தை எழுதுகிறார். எசேக்கியேலின் தலை மயிரைப் பிடித்து.

வானத்துக்கும், பூமிக்கும் நடுவே கொண்டு போனது யார்? பரிசுத்த ஆவியானவர்! ஆவியானவரின் கரம் இறங்கியிருக்கிறது! கர்த்தருடைய கரம் அவரை எடுத்து, வானத்துக்கும், பூமிக்கும் நடுவே கொண்டுபோய், எருசலேமிலுள்ள தேவாலயத்தின் ஒரு வாசலில் கொண்டுபோய் விடுகிறார். “அங்கே அருவருப்பான ஒரு காரியம் இருந்தது…” என்று எசேக்கியேல் தீர்க்கதரிசி குறிப்பிடுகிறார்.

எசேக்கியேல் தீர்க்கதரியின் சரீரம் வீட்டுக்குள்ளேதான் இருக்கிறது. ஆனால், அவர் ஆவிக்குள்ளாக எடுத்துக் கொள்ளப்பட்டு, எருசலேம் தேவாலயத்திற்குள்ளே கொண்டு போய் விடப்படுகிறார்! அங்கே நடக்கிற அருவருப்பான எல்லாக் காரியங்களும் எசேக்கியேலுக்குத் தெரிகிறது! ஆனால், அந்த ஆலயத்திற்குள் இருக்கிறவர்களால் எசேக்கியேலைப் பார்க்க முடியவில்லை.

ஏனென்றால், கர்த்தர் எசேக்கியேலை ஆவிக்குள்ளாக்கிக் கொண்டுப்போய், அங்கே, உள்ளே நடக்கிற காரியங்களை அவருக்குக் காட்டினார். வெளிப் பார்வைக்கு அது தேவாலயம், ஜனங்கள் எல்லோரும் வந்து ஆராதித்து விட்டுப் போனார்கள். உண்மைதான்! ஆனால், அந்த ஆலயத்திற்குள்ளே இரகசியமாய் அங்குள்ள சில மூப்பர்கள், சில ஆசாரியர்கள் விக்கிரக வணக்கம் செய்து கொண்டிருந்தார்கள்! அந்தக் காரியம், அந்த ஆலயத்திற்குள்ளே இரகசியமாக நடந்து கொண்டிருந்தது. அது வெளியே யாருக்கும் தெரியாது. கர்த்தர் எசேக்கியேலை ஆவிக்குள்ளாக்கி, ஆலயத்திற்குள்ளே கொண்டுபோய், அங்கே நடந்து கொண்டிருந்த காரியங்களைக் காண்பித்து, அதற்காக ஜெபம் பண்ணவும் ஏவினார்.

இப்படியாக, அந்தரங்கத்தில் இரகசியமாக நடக்கிற காரியங்களை, கர்த்தர் நமக்குக் காண்பிக்கிறார். எதற்காக இப்படிப்பட்ட இரகசியமான காரியங்களைக் கர்த்தர் நமக்கு வெளிப்படுத்துகிறார்? என்றால், அந்தக் காரியத்திற்காக ஜெபம் வெளிப்படுத்தி, நம்மை ஜெபிக்க வைக்கிறார். தேவப் பிள்ளைகளாகிய நாம் பரிசுத்த பண்ணுவதற்காகத்தான்! அதாவது, இரகசியங்களை தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்குக் கர்த்தர் ஆவிக்குள்ளே நிரம்பி ஜெபிக்கும்போது, இரகசியங்களைக் கர்த்தர் நமக்கு வெளிப்படுத்துவார். ஆவிக்குரிய உலகத்தைக் கர்த்தர் நமக்குக் காண்பிப்பார். பிசாசானவன் சும்மா இருக்க மாட்டான். தன்னால் முடிந்த அளவுக்கு அவன் போராடுவான்.

“பில்லி சூனியங்கள், மந்திரங்கள் மூலமாக என்னவெல்லாம் செய்யலாம்?” என்று, மிகத் தீவிரமாக பிசாசானவன் யுத்தம் பண்ணிக் கொண்டிருக்கிறான். நீங்கள் ஆவிக்குள் நிரம்பி ஜெபித்தால்தான், ஆவியானவருடைய வெளிச்சத்தில் காரியங்களை அறிந்து கொண்டு, ஜெபிக்க முடியும். இப்படியாக, நாமே தேவ சமூகத்தில் இரகசியங்களை அறிந்து ஜெபிக்க வேண்டும்.

நீங்கள் பரிசுத்த ஆவிக்குள் நிரம்பி ஜெபிக்கும்போது, சில சமயங்களில் கர்த்தர் உங்களை ஆவிக்குரிய உலகத்திற்குள் கொண்டுபோய் நிறுத்துவார். சில சமயங்களில், சாத்தானுடைய எல்லைகளுக்கு உள்ளேயேகூட கர்த்தர் உங்களைக் கொண்டுபோகக் கூடும்! சிலருக்கு கர்த்தர் அப்படிப்பட்ட அனுபவங்களைக் கொடுத்து நடத்துவார்.

கர்த்தர் அப்படிப்பட்ட ஆவிக்குரிய அனுபவங்களுக்குள் நம்மை நடத்துவது, நம்மை நாமே பெருமை பாராட்டிக் கொள்வதற்காக அல்ல. ஜெபத்திற்காகவும், அந்த ஜெபத்தின் மூலமாக கர்த்தருடைய திட்டம் தேசத்தில் நிறைவேறுவதற்காகவும், பிசாசின் தந்திரங்கள் அழிக்கப்படவும்தான் என்பதை நாம் நன்றாகப் புரிந்து கொண்டு நாம் ஜெபிக்கும்போது, கர்த்தர் பெரிய வெற்றியைத் தருவார்.

ஒருமுறை, எங்கள் ஊருக்கு அருகாமையில் இருக்கிற ஒரு விக்கிரகக் கோவிலில், எனக்கு விரோதமாக பில்லி சூனியம் செய்கிற காரியத்தைக் கர்த்தர் என் ஜெப வேளையில் எனக்குக் காண்பித்தார். அதற்காக நான் ஜெபித்தபோது, கர்த்தர் எனக்கு அந்தக் காரியத்தில் ஜெயத்தைக் கொடுத்தார்.

ஒரு சமயம், வட இந்தியாவிலிருக்கிற, எனக்கு அறிமுகமில்லாத ஒரு தேவ ஊழியர், என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “நான் திருநெல்வேலிப் பக்கமே வந்ததில்லை. ஒருமுறை வந்து உங்களையெல்லாம் பார்க்க வேண்டும்.” என்று பேசி விட்டு, எனக்காக ஜெபிக்கும்போது, அந்த ஜெபத்தின் இடையே எங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஒரு ஊரின் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லி, அந்த ஊர் பில்லி சூனியம் வைக்கிறதுக்குப் புகழ் பெற்ற ஊர்.

அந்த ஊரிலுள்ள ஒரு விக்கிரகக் கோவிலில் பில்லி சூனியம் செய்து, உங்களுக்கு விரோதமாகப் பிசாசை ஏவி விடுகிறார்கள். ஆனால், கர்த்தர் உங்களைப் பாதுகாத்து, பிசாசின் கிரியைகளை அழித்துப் போடுகிறார்.” என்று சொன்னார். பாருங்கள், அந்தப் பகுதியிலுள்ள மக்களுக்கு, அந்த ஊரிலுள்ள கோவிலில்தான் பில்லி சூனியம் வைப்பார்கள் என்று பொதுவாகத் தெரியும். ஆனால் சம்மந்தமே இல்லாத, எங்கேயோ இருக்கிற ஒரு தேவ ஊழியருக்கு, இங்கு நடக்கிற, அதுவும் அந்தக் கோவிலுக்குள் நடக்கிற காரியங்கள் எப்படித் தெரிந்தது?

கர்த்தர்தான் அந்த மாதிரியான காரியங்களை அவருக்கு வெளிப்படுத்தினார்! ஜெபிக்கிற தேவப் பிள்ளைகளுக்கு, ஆவியானவர் இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்!

நீங்கள் ஜெபித்தால், முழு இந்தியாவைக் குறித்தும் கர்த்தர் உங்களுக்கு வெளிப்படுத்துவார்! உலகத்தைக் குறித்து வெளிப்படுத்துவார்! நீங்கள் ஜெபிக்க ஜெபிக்க, சாத்தானின் வல்லமை அழிக்கப்படும்! எப்பொழுது சாத்தானின் தந்திரங்கள் வெளிப்படுத்தப்படுகிறதோ, அப்பொழுதே அவன் தோற்று விட்டான்!

…அவனுடைய -சாத்தானுடைய- தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.” (2 கொரி. 2:11) என்று இயேசு சொல்லியிருக்கிறார்.

ந்திய தேசத்தைக் கறைப்படுத்த வேண்டும், இந்திய தேசத்தை சாபத்துக்குள்ளாக்க வேண்டும், இந்திய மக்களையெல்லாம் அடிமைகளாக்க வேண்டும்…” என்று சொல்லி, சாத்தான் இரகசியமாகக் காரியங்களைச் செய்வான்.

இந்த மாதிரியான சூழ்நிலையில், நாம் தேவ சமூகத்திற்குப் போய் ஆவியில் நிறைந்து ஜெபிக்கும்போது, ஆவியானவர் சாத்தானுடைய இரகசியக் காரியங்களை நமக்கு வெளிப்படுத்தி, “இதற்காக ஜெபம் பண்ணு…” என்று நம்மை ஜெபிக்கத் தூண்டுவார். ஜெபித்த உடனே சாத்தானின் கிரியைகள் அழிந்து விடும். இதுதான் இரகசியங்களை அறிந்து ஜெபிப்பது!

அதாவது, சாத்தானின் தந்திரங்களை, கிரியைகளை அறிந்து ஜெபிப்பது! கர்த்தர் சகல இரகசியங்களையும் நமக்குச் சொல்லிக் கொடுப்பார். கர்த்தருடைய ஆவியானவர், இப்படிப்பட்ட கிருபைகளை நமக்குத் தருவாராக!

கர்த்தருடைய இருதயத்தை அறிந்து ஜெபிக்க வேண்டும்!

பொதுவாக, வழக்கத்தின்படி ஜெபிக்கிற பல ஜெபக் காரியங்கள் நமக்கு இருக்கலாம்! மிஷனெரிகளுக்காக, சபைகளுக்காக, தேவ ஊழியர்களுக்காக வழக்கமாக நாம் ஜெபிக்கிறோம்.

நான் வழக்கமாக தமிழ்நாட்டிலிருக்கிற ஒரு மாவட்டத்திற்காக ஜெபம் பண்ணுவேன்.

ந்தியாவிலிருக்கிற ஒரு மாநிலத்திற்காக ஜெபம் பண்ணுவேன். கர்த்தர் எனக்குக் காண்பிக்கிற ஒரு தேசத்திற்காக ஜெபம் பண்ணுவேன். அதோடு மட்டும் நின்று விடாமல், “ஆண்டவரே, உம்முடைய இருதயத்தில் இருப்பதை எனக்கு வெளிப்படுத்தும். நான் ஜெபிக்கிறேன்.” என்று, அவரிடத்தில் நான் கேட்டு அதற்காக ஜெபிப்பேன். நீங்கள் கர்த்தரிடத்தில் கேட்கும்போது, அவர் தன் இருதயத்தில் இருக்கிற பாரத்தை உங்களுக்கு வெளிப்படுத்துவார்.

ங்கள், “எதற்காக ஜெபிக்க வேண்டும்?” என்று கர்த்தர் உங்களுக்கு வெளிப்படுத்துவார். அந்த ஜெப பாரத்தைக் கர்த்தர் உங்களுக்கு உண்டாக்குவார். ‘இதற்காக ஜெபம் பண்ணு…’ என்று, ஆவியானவர் உங்களோடு பேசுவார். அதற்காக ஜெபித்தால், அந்த ஜெபம் அதிக வல்லமை உள்ளதாயிருக்கும். காரணம், நீங்கள் கர்த்தருடைய இருதயத்தை அறிந்து, அவரோடு இணைந்து ஜெபிக்கிறீர்கள்!

சதோம் பட்டணத்தில் பாவம் பெருகி விட்டது. “அதை அழிக்க வேண்டும்!” என்று பரலோகத்திலிருக்கிற கர்த்தர் முடிவு செய்து விட்டார். ஆனால், கர்த்தர் எடுத்த அந்த முடிவைக் குறித்து, பூலோகத்தில் இருக்கிற யாருக்குமே தெரியாது. காரணம், அது தேவ இரகசியம்!

ஆனால் அதே சமயத்தில், சோதோம் பட்டணத்தை அழிப்பதற்காக கர்த்தர் பூமிக்கு இறங்கி வந்தார். கர்த்தராகிய தேவன், தான் ஒரு காரியத்தைச் செய்ய, யாரிடமும் அவர் அனுமதி வாங்க வேண்டிய அவசியமே இல்லை.

ஆனால், கர்த்தர் சொல்கிறார் பாருங்கள்: “நான்

-கர்த்தர்- செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ?” (ஆதி. 18:18) என்று. அதாவது, “என் இருதயத்தில் இருப்பதை நான் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துவேன்…” என்று கர்த்தர் சொன்னார்.

சோதோம், கொமோராவில் பாவம் பெருகி, அது பரலோகம் வரை போய் எட்டி விட்டது. அந்த மக்களை அழிக்கச் சித்தம் கொண்ட கர்த்தருடைய உள்ளத்தில், “நான் உண்டாக்கிய மக்கள், பாவத்தினால் அழிந்து சாகிறார்களே…” என்கிற ஒரு துக்கம். அதை ஆபிரகாம் புரிந்து கொண்டார்.

அதற்காக திறப்பில் நின்று ஜெபிக்க வேண்டும். 6 முறை திரும்பத் திரும்ப ஆபிரகாம் ஜெபித்தார். ஆபிரகாமுடைய அந்த ஜெபத்தைக் கேட்டு, கர்த்தருடைய உள்ளம் சந்தோஷப்பட்டது. அதனால்தான், “ஆபிரகாம் தேவனுடைய சினேகிதன்!” என்று அழைக்கப்பட்டார்.

நீங்கள் வழக்கமாக ஜெபிப்பது தவறல்ல. ஜெபித்து முடித்த பிறகு, “ஆண்டவரே, உமது உள்ளத்தில் ஏதாவது பாரம் இருந்தால் என்னிடத்தில் சொல்லும். நான் அதற்காக ஜெபிக்கிறேன்.” என்று, கர்த்தருடைய சத்தத்திற்காகக் காத்திருக்க வேண்டும்.

அப்படி நீங்கள் அவருடைய சமூகத்தில் காத்திருக்கும்போது, கர்த்தர் உங்களைப் பார்த்து, ஒருவேளை, “அரசியல்வாதிகளைக் குறித்து எனக்குப் பாரமாக இருக்கிறது. நீ அவர்களுக்காக ஜெபம் பண்ணு.” என்று சொல்லக் கூடும்! அதற்காக நீங்கள் ஜெபிக்க ஆரம்பித்தால், உங்களை அறியாமலேயே கண்ணீரோடுகூட ஜெபிப்பதற்கான ஒரு பாரம் உங்களுக்குள் உண்டாகும். அல்லது, ஆவியில் நிரம்பி வைராக்கியமாய் ஜெபிப்பீர்கள். மொத்தத்தில், அந்த ஜெபமே வித்தியாசமாக மாறி விடும்.

சில சமயம், “இந்தியாவிலிருக்கிற செல்வந்தர்களைப் பார். அவர்களெல்லோரும் விக்கிரகத்தினால் தேசத்தைத் தீட்டுப்படுத்துகிறார்கள்! சுயநலவாதிகளாக இருக்கிறார்கள்! அவர்கள் இரட்சிக்கப்பட ஜெபிக்க வேண்டும்!” என்று கர்த்தர் நம்மிடத்தில் உணர்த்துவார். அப்படி அவர் நம்மிடத்தில் உணர்த்தினால், அதற்காக நாம் ஜெபிக்க வேண்டும்.

சில சமயம் கர்த்தர் என்னிடத்தில், “சினிமாத் துறையில் இருக்கிற மக்களைப் பார். அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும்!” என்று சொல்வார். நான் அந்த மக்களுக்காக அனேக முறை கண்ணீரோடு ஜெபித்திருக்கிறேன். இன்றைக்கு, அந்தத் துறையிலுள்ள மக்கள் இரட்சிக்கப்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது.

இப்படியாக, கர்த்தர் தன் இருதயத்திலுள்ள பாரத்தை நம்மிடத்தில் சொல்லி, அதற்காக நாம் ஜெபிக்கும்போது, அந்தக் காரியத்தில் கர்த்தர் கிரியை செய்வதைப் பார்க்கலாம். ஆக, கர்த்தருடைய இருதயத்தின் பாரத்தை நாம் அறிந்து, அதற்காக ஜெபிக்க வேண்டும்.

மலையில் மோசே தேவ சமூகத்தில் காத்திருந்தார். “மலையின் கீழே என்ன நடக்கிறது?” என்று மோசேக்குத் தெரியாது. அங்கே இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் விக்கிரகத்தை உண்டாக்கி, விக்கிரக வணக்கம் செய்து, குடித்து, வெறித்து, நடனமாடிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது கர்த்தர்,

…மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; எகிப்துதேசத்திலிருந்து நீ நடத்திக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக் கொண்டார்கள்.” (யாத் 32:7) என்று சொன்னார்.

அதைக் கேட்ட மோசேக்கு அதிர்ச்சியாக இருந்தது. “கீழே நடக்கிற காரியம் என்ன?” என்று மோசேக்குத் தெரியாது. ஆனால் சகலவற்றையும் அறிந்த கர்த்தர், மோசேயினிடத்தில், “உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக் கொண்டார்கள்.

கீழே சென்று பார்.” என்று சொல்லி விட்டு, “இந்த ஜனங்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள். இவர்களை நம்பிப் பிரயோஜனமில்லை. அவர்களை அழித்து விடுகிறேன். உன்னை நான் பெரிய ஜாதியாக்குவேன்.” என்று கர்த்தர் சொன்னார்.

“அந்த ஜனங்களுடைய பாவம் கர்த்தரைத் துக்கப்படுத்தி விட்டது. கர்த்தர் அவர்கள் மேல் கோபம் கொண்டு, அவர்களை அழிக்கச் சித்தம் கொண்டார்.” என்று, கர்த்தருடைய கோபத்தை மோசே உடனே புரிந்து கொண்டார். மோசே அதோடு நின்று விடாமல், உடனே திறப்பிலே நின்று, “…உமது ஜனங்களுக்குத் தீங்குசெய்யாதபடிக்கு, அவர்கள்மேல் பரிதாபங்கொள்ளும்.” த். என்று சொல்லி, கர்த்தரிடத்தில் கெஞ்சி ஜெபிக்க ஆரம்பித்தார்.

பாருங்கள், மோசேயின் அந்த ஜெபத்தின் நிமித்தம் கர்த்தர் மனம் மாறினார்! “மாறாத தேவன், ஒரு மனிதனுடைய ஜெபத்தினால் மனம் மாறினார்!” என்று வேதாகமத்தில் பார்க்கிறோம்.

அப்படியானால், கர்த்தருடைய இருதயத்தின் பாரத்தை நாம் புரிந்து கொண்டு ஜெபிக்கும்போது, கர்த்தர் அந்தக் காரியத்தில் கிரியை செய்வார்.

“நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்றார்; அப்பொழுது சாமுவேல் மனம் நொந்து, இராமுழுதும் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.” 1சாமு. 15:11.

“சவுலை ராஜாவாக்கியது எனக்குத் துக்கமாய் இருக்கிறது…” என்று, கர்த்தர் சாமுவேலினிடத்தில் சொன்னார். கர்த்தர் ஒரு நிமிடத்தில் தன்னிடத்தில் சொன்ன அந்த வார்த்தைக்காக, சாமுவேல் இரவு முழுவதும் கர்த்தரை நோக்கி மன்றாடினார். ஏனென்றால், “கர்த்தருடைய உள்ளம் துக்கப்பட்டு விட்டதே…” என்கிற ஒரு பாரம் சாமுவேலினிடத்தில் இருந்தது.

..கர்த்தர் மனஸ்தாபப் பட்டதினிமித்தம், சாமுவேல் சவுலுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.” 1 சாமு. 15:35.

கர்த்தருடைய உள்ளம் துக்கப்பட்ட காரியம்,

சாமுவேலைப் பாதித்தது. கர்த்தருடைய இருதயத்தையும், துக்கத்தையும்கூட சாமுவேல் புரிந்து கொண்டார்! தேவப் பிள்ளைகளாகிய நாமும் சாமுவேலைப்போல மாற வேண்டும்.

கர்த்தரோடுகூட அப்படிப்பட்ட நெருக்கமான ஒரு ஜெப அனுபவத்திற்குள் நாம் கடந்து வர வேண்டும். கர்த்தருடைய இருதயத்தின் பாரத்தை நாம் புரிந்து கொண்டு ஜெபிக்க வேண்டும். சில சமயங்களில், கர்த்தர் வித்தியாசமாகப் பேசுவார்.

ஒருநாள் அதிகாலை வேளையில் கர்த்தர் என்னை எழுப்பினார். உடனே எழும்பி, தேவ சமூகத்தில் முழங்கால்படியிட்டு ஜெபிக்க ஆரம்பித்தேன். பொதுவாக நான் ஜெபிக்கும்போது, துதித்து, பாடல் பாடி, ஸ்தோத்திரம் பண்ணி, தேவப் பிரசன்னத்திற்குள் வந்த பிறகு, வசனத்தை தியானித்து, பிறகுதான் ஜெபிக்க ஆரம்பிப்பேன். ஆனால், அன்றைக்கு நான் ஜெபிக்க

முழங்கால்படியிட்ட உடனேயே தேவ பிரசன்னம் என்னை அப்படியே நிரப்பிற்று. அது வித்தியாசமாய் எனக்கு இருந்தது. கர்த்தர் என் கண்களைத் திறந்தார். இயேசு எனக்கு முன்பாக நாற்காலியில் கெம்பீரமாக உட்கார்ந்திருந்தார். அதற்கு முன்பாக நான் அப்படிப்பட்ட ஒரு காட்சியைப் பார்த்ததேயில்லை.

வர் என்னிடத்தில், “முக்கியமான ஒரு காரியத்திற்காக நீ ஜெபம் பண்ண வேண்டும்.” என்று சொல்லி விட்டு, இந்தியாவிலிருக்கிற சிறு பிள்ளைகள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள்? என்பதைப் பற்றி அனேகக் காரியங்களைக் குறித்து என்னோடு பேசினார்.

பிசாசு சிறு பிள்ளைகள் மீது கவனம் வைத்திருக்கிறான்! கருவிலிருக்கிற குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள்! தவறான மருந்துகளினால் குழந்தைகள் அழிக்கப்படுகிறார்கள்! பிறந்த குழந்தைகளைக் கடத்துகிறார்கள்! சிறு பிள்ளைகள் பலி செலுத்தப்படுகிறார்கள்!

பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளைப் புரிந்து கொள்ளாமல், அவர்களை வேதனைப்படுத்துகிறார்கள்! குழந்தைகள் காப்பகத்தில்கூட பிள்ளைகள் பாதிக்கப்படுகிறார்கள்! சில சிறு பிள்ளைகளுக்காக நடத்தப்படுகிற காப்பகங்களில் பிள்ளைகளின் பெயர்களைச் சொல்லி, வெளி நாட்டில் பணம் வாங்கிக் கொண்டு, காப்பகத்திலிருக்கிற பிள்ளைகளைத் தரையில் படுக்க வைத்து விட்டு, தங்களுடைய பிள்ளைகளை மட்டும் வெளி நாடுகளில் படிக்க வைக்கிறார்கள்! நீ அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும்!” என்று, சிறு பிள்ளைகளைக் குறித்து ஒவ்வொரு காரியங்களாகக் கர்த்தர் என்னிடத்தில் பகிர்ந்து கொண்டு, மிகவும் துக்கப்பட்டார்.

உடனே நான் மிகுந்த பாரத்தோடு ஜெபித்தேன். அந்த நாளிலிருந்து சிறு பிள்ளைகளுக்காக நான் ஜெபிக்க ஆரம்பித்தால், அழுகையோடும், கண்ணீரோடும்தான் ஜெபித்து வருகிறேன்.

குழந்தைகளை ஆசீர்வதித்து ஜெபிக்க வேண்டும்!” என்று கர்த்தர் சொன்னபடியினால், எல்லா நற்செய்திக் கூட்டங்களிலும் சனிக்கிழமை சிறு பிள்ளைகளைக் கொண்டு வரச் சொல்லி ஜெபித்து வருகிறேன். ஆக, ஆவியானவர்தான் அந்த ஜெப பாரத்தை நமக்குள் உண்டாக்குகிறார். அது இயேசுவின் இருதயத்தில் இருக்கிற பாரம். அதை ஊழியக்காரர்களுக்கு மாத்திரமல்ல, ஜெபிக்கிற எல்லா தேவப் பிள்ளைகளுக்கும் கர்த்தர் வெளிப்படுத்துவார்.

“வாலிபர்களுக்காக ஜெபிப்பாயா? ஊழியக்காரர்களுக்காக ஜெபிப்பாயா?” என்று, ஜெபத்தை எதிர்பார்த்து, ஜெபிக்கிற மக்களைத் தேடி கர்த்தர் வருவார். மாத்திரமல்ல, “எதற்காக ஜெபிக்க வேண்டும்? எப்படி ஜெபிக்க வேண்டும்?” என்று கர்த்தரே சொல்லித் தருவார்.

ஒருமுறை, ஒரு குறிப்பிட்ட பட்டணத்திற்கு, ஒரு நற்செய்திக் கூட்டத்திற்காகப் போயிருந்தேன். கடைசி நாளன்று மைதானமே நிரம்பி வழியத்தக்கதாக, அனேக புற ஜாதி மக்கள் வந்திருந்தார்கள். நான் தங்கியிருந்த அறையில், அந்த நாள் கூட்டத்தின் ஆசீர்வாதத்திற்காக ஜெபித்துக் கொண்டிருந்தேன்.

திடீரென்று பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அப்பொழுது என் கண் முன்னால், ஒரு காட்சியைக் கர்த்தர் காண்பித்தார். அந்த காட்சி என்னவென்றால், ஒரு சிங்காசனத்தில் கர்த்தர் கெம்பீரமாக அமர்ந்திருப்பதைப் போன்ற ஒரு சாயல் தெரிந்தது. ஆனால், அவருடைய முகம் எனக்குத் தெரியவில்லை.

சுமார் ஆயிரம் சூரியன்கள் ஒன்று சேர்ந்து பிரகாசித்தால் எப்படி இருக்குமோ?அப்படிப்பட்ட ஒரு மகாப் பெரிய வெளிச்சம் பிரகாசித்தது.

அந்த சிங்காசனத்தின் பக்கத்தில் நான் முழங்கால்படியிட்டு, “இந்தக் கூட்டத்தை ஆசீர்வதியும் ஆண்டவரே, ஜனங்களுக்கு அற்புதங்களைச் செய்யும், இந்து மக்களை இரட்சியும்…” என்று சொல்லி ஜெபித்துக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது ஒருவர் என் பக்கத்தில் வந்து, என் தோளில் தன் கையை வைத்து, “அப்படியல்ல என் மகனே, ஆண்டவரே, இந்துக்களாக இருக்கிற என் ஜனங்கள், தங்கள் அறியாமையினால் விக்கிரகத்தை வணங்குகிறார்கள். அதை அவர்களுக்கு மன்னியும். நீர் ஒரு அற்புதம் செய்து விட்டால், அவர்கள் உம்மை கொள்வார்கள். எனக்கு நீர் ஒரு அற்புதம் செய்ததால், நான் உம்மை ‘ஆண்டவர்’ என்று நம்பி, ஏற்றுக் கொண்டேனே! அதேபோல, என் ஜனத்திற்கும் ஒரு அற்புதம் செய்து விட்டால், அவர்களும் உம்மை நம்புவார்களே!” என்பதாக, பல காரியங்களை எனக்குச் சொல்லிக் கொடுத்து, என்னை ஜெபிக்க வைத்தார்.

நானும், அவர் எனக்குச் சொல்லிக் கொடுக்கக் கொடுக்க, மிகுந்த கண்ணீரோடு பல நிமிட நேரங்கள் அழுது ஜெபித்தேன். ஜெபித்து முடித்த பிறகு, “யார் என் பக்கத்தில் வந்து எனக்கு ஜெபிக்கச் சொல்லிக் கொடுத்தது?” என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, “பரிசுத்த ஆவியானவர்தான் எப்படி ஜெபிக்க வேண்டுமென்று சொல்லி கொடுத்தார்.” என்று கர்த்தர் எனக்கு வெளிப்படுத்தினார்.

அன்றைய நாள் கூட்டத்தில் பலத்த அற்புதங்களைக் கர்த்தர் செய்து, தமது நாமத்தை மகிமைப்படுத்தினார். ஆகவே, நமக்கு வழக்கமாகத் தெரிந்திருக்கிறபடி நாம் ஜெபிக்காமல், இன்னும் கொஞ்சம் ஆழமாக ஜெபத்தில் கடந்து செல்ல வேண்டும். கர்த்தர் நமக்குச் சொல்லித் தருவார். அப்படிப்பட்ட உன்னதமான அனுபவத்திற்குள் நீங்களும் கடந்து வர வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.

காரணம், கர்த்தர் இந்த தேசத்தைச் சந்திக்கிற காலம் வந்து விட்டது! அப்படியானால், ஜெபத்தில் இன்னும் தீவிரமாக மாற வேண்டும். அந்த அனுபவத்தைக் கர்த்தர் உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறார்.

சுமார் 15 வருடங்களுக்கும் மேலாக, அமெரிக்காவில் மூன்று நாள் உபவாச ஜெபம் நடத்தி வருகிறோம். ஒவ்வொரு முறையும், கனடா தேச ஊழியத்தை முடித்து விட்டு, அமெரிக்கா தேச ஊழியங்களுக்காகச் செல்வது வழக்கம். ஒருமுறை அமெரிக்கா தேசத்திற்கு ஊழியத்திற்காகப் போக எனக்கு விருப்பமேயில்லை. காரணம், அமெரிக்காவிலுள்ள ஜனங்கள் விக்கிரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த காரியங்களையெல்லாம் பார்த்து விட்டு, “இந்த ஜனங்கள் இப்படி விக்கிரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களே! நாம் அமெரிக்கா தேசத்திற்காக எப்படியெல்லாம் ஜெபிக்கிறோம்? ஆனால் இந்த ஜனங்கள், இப்படி இருக்கிறார்களே!” என்று எனக்குள் ஒரு பெரிய வருத்தம்.

இந்தியாவில் எவ்வளவோ எழுப்புதல், இந்தியாவிற்காக ஜெபித்தால் போதும். இந்த ஒருமுறை மட்டும் அமெரிக்கா ஊழியத்தை முடித்து விட்டு, அதற்குப் பிறகு அமெரிக்கா ஊழியத்திற்குப் போக வேண்டாம்.” என்று நினைத்து, ஊழியத்திற்குச் சென்று விட்டேன்.

கனடா ஊழியத்தை முடித்து விட்டு, வழக்கம்போல அமெரிக்க ஊழியத்திற்காகச் சென்றேன். மனதளவில் எனக்கு அதிக சோர்வாகவேதான் இருந்தது. இரவு 12:00 மணிக்குத்தான் ஓய்வெடுக்கச் சென்றேன். நான் மிகுந்த களைப்பாக இருந்தபடியினால், “அடுத்த நாள் முழுவதும் ஓய்வெடுக்க வேண்டும்.” என்று எண்ணினேன்.

ஆனால், கர்த்தரோ என் திட்டத்தையெல்லாம் முறியடித்து, அதிகாலை 4:00 மணிக்கெல்லாம் என்னை எழுப்பி, ஜெபம் பண்ணச் சொன்னார். நான் உடனே கீழ்படிந்து, ஜெபிக்க முழங்கால்படியிட்டேன்.

அவர் என்னிடத்தில், “மகனே, இந்த தேசத்தை நான் நேசிக்கிறேன். நீயும் நேசிக்க வேண்டும். இந்த தேசத்தை நீ வெறுக்கக் கூடாது.” என்றார். அந்த வார்த்தையை நான் கேட்டவுடனே, “நான் தவறு செய்து விட்டேன், ஆண்டவரே! என்னை மன்னியும். நான் இந்த தேசத்தை நேசித்து ஜெபிக்க வேண்டும். அதற்குப் பதிலாக நான் இந்த தேசத்தை வெறுத்து விட்டேன்.” என்று சொல்லி, கண்ணீரோடு ஜெபித்தேன்.

தொடர்ந்து கர்த்தர் என்னிடத்தில், “இந்த தேசம், என் பிள்ளைகளால் உருவாக்கப்பட்டது. இந்த தேசத்தில் எவ்வளவோ பரிசுத்தவான்களை நான் எழுப்பினேன். எவ்வளவோ ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு தேசமாக இருந்தது. அதனால் நீ இந்த தேசத்தை நேசிக்க வேண்டும்!” என்று சொன்னார்.

அதற்கு நான், “ஆண்டவரே, இந்த ஜனங்கள் விக்கிரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களே!” என்று சொன்னேன். அப்பொழுது கர்த்தர், “நீ அதைப் பார்க்காதே, நீ அரசியல் ரீதியாகப் பார்க்கிறாய். சபைகளைப் பார். சபைகள்தான் இன்றைக்கு சீரழிந்து போய் கொண்டிருக்கிறது. ஊழியக்காரர்களைப் பார், அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். நீ சபைகளுக்கு, ஊழியர்களுக்கு ஜெபித்தால், இந்த தேசத்தில் எழுப்புதல் உண்டாகும். ஊழியர்கள் மாறினால், தேசம் மாறும்!” என்று எனக்குத் தெளிவுபடுத்தினார்.

பிறகு பல வருடங்களாக சபைகளுக்காக ஜெபிக்க ஆரம்பித்தோம். நாங்கள் உபவாசித்து ஜெபிப்பதை பல அமெரிக்க வெள்ளைக்காரர்கள் கேள்விப்பட்டு, “நாங்கள் ஒரு வேளைகூட சாப்பிடாமல் இருக்க மாட்டோமே! எங்களுக்கும் உபவாச ஜெபத்தைக் குறித்துச் சொல்லித் தாருங்கள்.” என்று அமெரிக்க சபைகளில் எங்களை ஊழியங்களுக்காகக் கூப்பிட ஆரம்பித்தார்கள். அவர்களுடைய அழைப்பை ஏற்று, அங்கு கூட்டம் நடத்தி ஜெபத்தைப் பற்றிப் போதித்தபோது, “அமெரிக்கர்கள் இப்படி ஜெபம் பண்ணியதே கிடையாது. இப்படி அழுது ஜெபிக்கிறதை நாங்கள் பார்த்ததே இல்லை.” என்று சொல்லி, சபைப் போதகர் முதலாவது வந்து தன்னை ஒப்புக் கொடுத்தார். விசுவாசிகள் எல்லோரும் ஒப்புக் கொடுத்தார்கள். பாருங்கள், நம்முடைய இருதயத்திற்குள் ஒரு காரியத்தைக் குறித்து, ஒரு தவறான அபிப்ராயம், அல்லது தவறான ஒரு எண்ணம் இருக்கும்! ஆனால் கர்த்தரோ, “எது சரி? எதை நாம் செய்ய வேண்டும்? எதை நாம் செய்யக் கூடாது?” என்று சரியாக நமக்குக் சொல்லிக் கொடுப்பார்.

Leave a Reply