யூதர்களின் சோக வரலாறு – 1
1. இஸ்ரவேல் சுதந்திர நாடாக மாற வித்திட்ட தியோடர் ஹெர்சல், கெய்ம் வெய்ஸ்மேன்
எருசலேம் தேவாலயம் கி.பி.70ம் ஆண்டு தீத்துராயானால் ஒரு கல்லின் மேல் ஒரு கல் இல்லாத அளவுக்கு அழிக்கப்பட்டது. தொடர்ந்து வந்த ரோம சாம்ராஜ்ஜியத்தின் கொடிய மாமன்னர்களால் யூதர்கள் கி.பி.70 தொடங்கி கி.பி.135ம் ஆண்டுக்குள் முற்றுமாகத் தங்கள் நாட்டைவிட்டு உலகமெங்கும் சிதறடிக்கப் பட்டனர். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் இஸ்ரவேல்
மக்களைக் குறித்து “பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப் போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்” (லூக்.21:24) என்று இயேசு முன்னுரைத்தது துல்லியமாக நிறைவேறியது. ‘சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்” (you shall be a peculiar treasure unto me) (யாத். 19:5) என்றும் நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் கெய்ம் வெய்ஸ்மேன் 1874-1952 (வ.6) என்று வாக்குத்தத்தம் பெற்ற மக்களுக்கு ஏன் இப்படி சம்பவித்தது? பரிசுத்த ஜாதியாய் இருக்கவேண்டிய மக்கள், தேவனுடைய சொந்த சம்பத்தாயிருக்க வேண்டிய மக்கள் தேவனை விட்டு வழிவிலகிச் சென்று விக்ரக ஆராதனைக்கும் அது தொடர்பான அருவருப் பான காரியங்களிலும் இறங்கினர். ஆகவே தேவன் அவர்கள் அந்நிய தேசத்தாரால் சிறைப்பிடிக்கப்படவும் உலக முழுவதும் சிதறடிக்கப்படவும் அனுமதித்தார். ஆனாலும் அன்பின் தேவன் அவர்களை முற்றுமாய்க் கைவிட்டுவிடவில்லை. எசேக்கியேல் தீர்க்கதரிசி மூலமாக சிதறடிக்கப்பட்ட மக்களை மீண்டும் கூட்டிச் சேர்த்து இஸ்ரவேல் தேசத்தை உங்களுக்கு மீண்டும் கொடுப்பேன் (எசே.11:16,17) என்று முன்னுரைத்தபடியே இஸ்ரவேல் மக்களுக்கு சொந்த நாட்டைக் கொடுக்க சித்தம் கொண்டார்.
எகிப்து தேசத்தில் 400 ஆண்டுகள் அடிமைகளாக இருந்த மக்களை விடுவித்து வாக்குத்தத்தம் செய்யப்பட்ட பாலும் தேனும் ஓடுகிற செழிப்பான கானான் தேசத்திற்கு வழி நடத்திச் செல்ல தேவன் மோசேயைத் தெரிந்து கொண்டதுபோல சிதறடிக்கப்பட்ட மக்களை மீண்டும் இஸ்ரவேல் என்ற நாட்டைக் கொடுத்து அவர்களை ஒன்று சேர்க்க தேவன் 19ம் நூற்றாண்டின் இறுதியில் தியோடர் ஹெர்சல் (Theodor Herzl) என்ற ஒரு யூதரைத் தெரிந்து கொண்டார். அவர் ஹங்கேரியிலுள்ள புடாபெஸ்ட் என்ற நகரில் ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் 1860ம் ஆண்டு பிறந்தவர். இவர் ஓர் கற்றறிந்த மேதை. ஒரு சட்ட நிபுணர் (Doctor of Law) பெரிய அறிவாளி (intellectual). ஜெர்மன், பிரெஞ்ச், ரஷ்யன் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்.
பிரான்ஸ் இராணுவத்தில் பணியாற்றி குற்றம் சாட்டப்பட்ட ஆல்பிரட் டிரேபஸ் (Alfred dreyfus) என்பவரைக் குறித்துத் தகவல்கள் சேகரிக்க பிரான்ஸ் இராணுவம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க 1894ல் பாரிசுக்குச் சென்றார். அது தொடர்பாக தகவல்கள் சேகரிக்க இன்னும் பல நாடுகளுக்குச் செல்லும் சூழ்நிலையும் ஏற்பட்டது. இராணுவம் ஆல்பிரட் டிரேபஸ் மீதான தேச துரோகம் (treason) என்ற குற்றச்சாட்டில் விசாரணை முடித்து அவருக்குத் தண்டனை வழங்கி டெவில்ஸ் தீவில் (devil’s island) சிறை வைத்தது. ஆல்பிரட் டிரேபஸ் ஒரு யூதர். அவர் மீதான குற்றச்சாட்டும் தீர்ப்பும் தவறானது என்ற ஒரு பிரச்சனை கிளம்பியது. தியோடர் ஹெர்சல் பல நாடுகள் சென்ற அனுபவத்தில் யூதர்கள் அவர்கள் சிதறடிக்கப்பட்டிருக்கும் நாடுகளில் அவர்கள் கடந்து செல்லும் கொடிய பாதைகளை அறிந்திருந்தார். அவர்கள் மீதான பகைமை உணர்வையும் அறிந்து அவருடைய இருதயத்தில் குத்தப்பட்டார். 1896ல் “யூதருக்குத் தனி நாடு” (The Jewish State) என்ற புத்தகத்தை எழுதினார். அதை உலகமெங்குமுள்ள யூத மக்களுக்கு விநியோகம் செய்தார். அதுவே இஸ்ரவேல் தனிநாடாக மாறுவதற்கு ஒரு வித்தாக மாறியது. அப்புத்தகம் சிதறடிக்கப்பட்ட யூதமக்களுக்கு சுதந்திர வேட்கையை அனல்மூட்டி எழுப்பியது. ஆகஸ்ட் 1897 ஸ்விட்சர்லாந்து நாட்டிலுள்ள வாஸ்ஸெல்ஸ் நகரில் யூதர்களுக்கான மாநாட்டைக் கூட்டினார். 1897 ஆகஸ்ட் 24ம் நாள் உலக சீயோனியச் சங்கத்தை (World Zionist Organisation) துவக்கினார். யூதர்களுக்குத் தனியாக இஸ்ரவேல் நாடு அமைய அயராது பாடுபட்டார். 1904ம் ஆண்டு தனது 44வது வயதில் மரித்தார். அவர் எழுப்பிய சுதந்திரதீபம் அணையாது வளர்ந்து. 1948ம் ஆண்டு அவர் இறந்த 44வது ஆண்டில் இஸ்ரவேல் சுதந்திர நாடாக மாறியது. இன்று வல்லரசு நாடாக உருவாகிக்கொண்டிருக்கிறது.
அதைத் தொடர்ந்து இஸ்ரவேல் தனிநாடாக துளிர் விட்டு எழும்புவதற்கு உறுதுணையாக இருந்தவர் ரஷ்யாவில் பிறந்து வளர்ந்த யூதராகிய கெய்ம் வெய்ஸ்மேன் (Chaim Weizmann). அவர் 1904ம் ஆண்டு தன்னுடைய 30வது வயதில் இங்கிலாந்தில் குடியேறினார். உலக சீயோனியர் சங்கத்தில் தீவிரமாக செயல் படலானார்.
மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் (Univer sity of Manchester) இரசாயனத்துறையில் (Chemistry Department) பேராசிரியராகப் பணியாற்றினார். முதலாம் உலக மகா யுத்தத்தின்போது பிரிட்டன், ஜெர்மன் தேசத்தோடு தோல்வியடைந்துவிடுமோ என்ற நிலவரத்திலிருந்தது. அந்த நெருக்கமான சூழ்நிலையில் கெய்ம் வெய்ஸ்மேன் என்ற இரசாயனப் பேராசிரியர் மக்காச் சோளத்திலிருந்து அசிடோன் (Ac etone) என்ற எவ்வித நிறமுமற்ற ஒருவகை திரவத்தைத் தயாரித்தார். இந்த அசிடோன் கண்டுபிடிப்பு துப்பாக்கி, பீரங்கி வெடிகுண்டு (shells) போன்ற இராணுவ ஆயுதங்கள் தயாரிப்புக்கும் பராமரிப்புக்கும் பயனுள்ளதாக அமைந்தது. சரியான நேரத்தில் கண்டுபிடித்த அந்த கண்டுபிடிப்பே பிரிட்டனின் வெற்றிக்குக் காரணமாக மாறிற்று. அந்த யுத்தத்தின் போது பாலஸ்தீன தேசம் துருக்கியரின் ஆளுகையின் கீழ் இருந்ததை 1917ம் ஆண்டு பிரிட்டன் அதையும் மேற்கொண்டு பாலஸ்தீனத்தைப் பிடித்தது. ஆகவே முதலாம் உலக யுத்தத்தில் கெய்ம் வெய்ஸ்மேனின் கண்டுபிடிப்பே பிரிட்டனின் வெற்றிக்கு வழிவகுத்தது. ஆகவே பிரிட்டீஷ் அரசு அவரைக் கௌரவப்படுத்தும் வகையில் ஒரு வெகுமதியைக் கொடுக்க ஏற்பாடு செய்தபோது அவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அப்படியானால் அவருடைய விருப்பம்தான் என்ன என்று கேட்டபோது யுத்தத்தில் துருக்கியரிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட பாலஸ்தீன தேசத்தில் இஸ்ரவேல் மக்கள் குடியேற அனுமதிக்கவேண்டுமென்றும் இஸ்ரவேல் தனி நாடாகத் தங்களுக்குக் கொடுக்கப்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டு பால்போர் பிரகடனத்தின்படி (Balfour declaration) முதல் கட்டமாக இஸ்ரவேல் மக்கள் குடியேறும் உரிமையும் பின்னர் தனி நாடாக கொடுக்கப்படும் என்ற உத்தரவாதமும் கொடுக்கப்பட்டது. இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் பால்போர் பிரகடனப்படி 1948ம் ஆண்டு பாலஸ்தீன தேசம் இஸ்ரவேல் தனி நாடாகத் துளிர்த்து எழுந்தது.
தேவன் எசேக்கியேல் தீர்க்கதரிசி மூலமாக “இதோ நான் இஸ்ரவேல் வம்சத்தாரை அவர்கள் போயிருக்கும் ஜாதி களிடமிருந்து அழைத்து, சுற்றிலிமிருந்து அவர்களைச் சேர்த்து அவர்களை அவர்கள் சுயதேசத்திலே வரப்பண்ணுவேன்” (எசே.37:21) என்று முன்னுரைத்த வாக்குத்தத்தின்படியே அவர்களுக்கு சுய தேசத்தைத் திரும்பக் கொடுத்து அங்கு குடியேறவைத்தார். எத்தனை நூற்றாண்டுகள் கடந்து சென்றாலும் தேவன் அவருடைய வாக்குத்தத்தத்தில் எவ்வளவு உண்மையுள்ளவராயிருக்கிறார் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
தியோடர் ஹெர்சலின் மேன்மையான விசுவாசம் குறிப்பிடத்தக்கதாகும். 1896ல் அவர் எழுதிய “யூதருக்குத் தனி நாடு” என்ற புத்தகம் 52 ஆண்டு களில் (1948) இஸ்ரவேல் நாடு தனிநாடாக மாறியது என்றால் அது ஆச்சரியமானதே. எனினும் தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற கரிசனையுள்ளவராயிருந்தபடியால் அதை வாய்க்கச் செய்தார். தியோடர் ஹெர்சல் தம்முடைய மரண சாசனத்தில் “இஸ்ரவேல் தனிநாடாக விரைவில் உருவாகும். அப்பொழுது என்னுடைய கல்லறையைத் தோண்டி எலும்புகளை எடுத்து அவைகள் எருசலேமில் புதைக்கப்பட வேண்டும்” என்று எழுதியிருந்தார். இஸ்ரவேல் மக்கள் அதைக் கனப்படுத்தி அவருடைய எலும்புகளைத் தோண்டி எடுத்து வந்து 1949 ஆகஸ்ட் 10ம் நாள் எருசலேம் நகரில் ஒரு மலை உச்சியில் மீண்டும் அடக்கம் செய்தனர். அந்த மலைக்கு அவருடைய நினைவாக “ஹெர்சல் மலை” என்று பெயர் சூட்டினர். யோசேப்பு எவ்வாறு தேவன் உங்களை சந்திக்கும்போது “என் எலும்புகளை இவ்விடத் திலிருந்து கொண்டு போவீர்களாக” (ஆதி. 50:25) என்று கேட்டுக் கொண்டானோ அதுபோலவே ஹெர்சலும் விரும்பியுள்ளார்.
தியோடர் ஹெர்சல், கெய்ம் வெய்ஸ்மேன் போன்றோர் சுமார் 19 நூற்றாண்டுகளுக்கு முன் இழந்த சுய தேசத்தை எத்தனை தலைமுறையினர் மாறினாலும் அதை மீண்டும் அடைவதற்கு எவ்வளவு வாஞ்சையுள்ளவர் களாகயிருந்து விடாமுயற்சியோடு பிரயாசப்பட்டு பெற்றுக்கொண்டார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். எழுத்தின்படியான சுய தேசத்தை அடைவதற்கு இவ்வளவு பிரயாசப்படுவார்களானால், தங்களது எலும்புகள் தங்களுடைய சுயதேசத்தில் புதைக்கப்படவேண்டும் என்ற வைராக்கியம் இருக்குமானால் நம்முடைய ஆவிக்குரிய சுயதேசத்தைக் குறித்த நாட்டம் எவ்வாறு இருக்கிறது என்பதை சிந்தித்துப்பாருங்கள். நம்முடைய சுயதேசம் எது? அப்போஸ்தலனாகிய பவுல் “நம்முடைய குடியிருப்போ பரலோகத் திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” (பிலி.3:20) என்று கூறுகிறார். அப்படியானால் பரலோகமே நம்முடைய சுயதேசம். பரலோகத் திற்கு இப்பொழுதே நமக்குக் குடியுரிமை (citizenship) கொடுத்துள்ளார். அதுமாத்திரமல்ல கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எனும் இரட்சகர் வந்து நம்மை அங்கு அழைத்துச் செல்ல வரயிருக்கிறார் என்று வாசிக்கிறோம். யாருக்கு அவர் குடியுரிமை கொடுப்பார்? உலகம் முழுவதும் சிதறடிக்கப்பட்ட யூதர்கள் எவ்வாறு தங்கள் சொந்த நாட்டிற்கு உரிமையோடு திரும்பி னார்களோ அதேபோல “புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல. உள்ளத்திலே யூதனானவனே யூதன்” (ரோம.2:28,29) என்று சொல்லப் பட்டிருப்பதுபோல ஆவிக்குரிய இஸ்ரவேலர்களாகிய நமக்கே பரலோகத்தில் பிரவேசிக்கும் குடியுரிமையைக் கொடுத்திருக்கிறார். “உள்ளத்தில் யூதன்’ என்பது யாரைக் குறிக்கிறது? “விசுவாச மார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக” (கலா.3:7) அவர்கள் புறஜாதியாராக இருந்தாலும் விசுவாசத்தினாலே அவர்களை நீதிமானாகக் கருதி விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படு கிறார்கள் (வ.8,9) என்று வாசிக்கிறோம். ஆகவே நாமே ஆபிரகாமின் சந்ததியார். நாம் ஆவிக்குரிய இஸ்ரவேலர்.
யோசேப்பும், தியோடர் ஹெர்சலும் தங்களுடைய எலும்புகள் எருசலேமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு புதைக்கப்படவேண்டுமென்று அவர்களுடைய சுயதேசத்தைக் குறித்து அவ்வளவு வைராக்கியமா யிருந்தனர். இஸ்ரவேல் மக்கள் அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுத்தனர். ஆனால் நம்முடைய நிலை என்ன? நம்முடைய எலும்புகள் மரித்து உலர்ந்துபோனாலும் ஆவி உட்பிரவேசிக்கும்போது அவைகள் உயிரடைந்து காலூன்றி நிற்கும் என்பதை எசேக்கியேல் தீர்க்கதரிசிக்கு எலும்புகளின் பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் சென்று காட்டினார். (எசே. 37:1-14). ஆனால் நமக்கோ “கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, (கிறிஸ்துவுக்குள்) உயிரோடிருக்கும் நாமும் (மறுரூபமடைந்து) கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்” (1 தெச. 4:16,17) என்று வாசிக்கிறோம். அவர் வந்து நம்மை அழைத்துச் செல்லயிருக்கிறார் என்றால் அது எவ்வளவு பெரிய சிலாக்கியம் என்பதை சிந்தித்துப்பாருங்கள். ஆயத்தப்படுவோம். நம்முடைய சுய தேசத்திற்குச் செல்லும் நாள் மிக சமீபம்.
எருசலேமிற்காக இயேசு கண்ணீர் விட்டார்
‘அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது, உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது. உன்னைச் சந்திக்குங் காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி, உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப் போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின் மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும் என்றார்” (லூக்கா 19:41-44).