யூதர்களின் சோக வரலாறு – 4 Tragic History of the Jews – 4

 

யூதர்களின் சோக வரலாறு – 4

 

4. எருசலேமின் தேவாலயம்

 

சிதறடிக்கப்பட்ட மக்களுக்கு நடந்தது என்ன என்பதைக் கண்டுகொள் வதற்கு முன்பாக இஸ்ரவேல் மக்களின் தேவாலயத்தின் துவக்கத்தைக் குறித்து (the origin of the temple of God) அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

 

எருசலேமின் தேவாலயம்

 

எருசலேமின் தேவாலயத்திற்கும் அது கட்டப்பட்ட இடத்திற்கும் நீண்டதொரு வரலாற்று பின்னணியிருக்கிறது. எருசலேம் மலைகளும் பள்ளத்தாக்குகளுமுள்ள அழகிய நகரம். சாவுக்கடல் (Dead Sea) மட்டத்திற்கு 3800 அடி உயரமுள்ள மலையில் இந்நகரம் அமைந்திருக்கிறது. மத்திய தரைக்கடலுக்கு கிழக்கே 33 மைல் தூரத்திலும் சாவுக்கடலுக்கு மேற்கே 14 மைல் தூரத்திலும் அமைந்துள்ளது. முழு உலகத்திற்கும் எருசலேம் நகரமே மையமாக அமைந்திருப்பதாக கருதப்படுகிறது. அந்நகரின் மத்தியில் தான் எருசலேம் தேவாலயம் அமைந்திருந்தது. அது அமைக்கப்பட்ட இடம் மோரியா மலை. “பின்பு சாலொமோன் எருசலேமிலே தன் தகப்பனாகிய தாவீதுக்குக் காண்பிக்கப்பட்ட மோரியா என்னும் மலையில் எபூசியனாகிய ஓர்னானின் களம் என்னும் தாவீது குறித்துவைத்த ஸ்தலத்திலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டத் துவக்கினான். அவன் தான் ராஜ்யபாரம் பண்ணின நாலாம் வருஷம் இரண்டாம் மாதம் இரண்டாம் தேதியிலே கட்டத் தொடங்கினான்” (2 நாளா.3:1,2) (கி.மு.960) என்று வாசிக்கிறோம். இந்த மோரியா மலையைக் குறித்து முதல் முறையாக ஆதியாகமம் இருபத்திரெண்டாம் அதிகாரத்தில் காண்கிறோம். அந்த இடம் ஆபிரகாமுக்கு தேவன் அவனுடைய ஒரே குமாரனாகிய ஈசாக்கைப் பலியிடும்படி காட்டிய இடம் “உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேச குமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக் கொண்டு, மோரியா தேசத்துக்குப்போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்” (ஆதி. 22:2). ஆபிரகாம் அந்த இடத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டினான் (வ.9).

 

மோரியா மலைத் தெரிந்தெடுப்பின் சிறப்பு

 

இந்த இடத்தின் சிறப்பையும் நாம் அறிந்துகொள்வது நல்லது. இந்த இடம் தேவன் ஆபிரகாமை சோதித்த இடம். “தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்” (வ.1) (God did tempt Abraham) என்ற வசனத்தில் “சோதித் தார்” என்ற சொல்லுக்கு எபிரேய மூல மொழியில் “நேகா” (Nacah) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பரீட்சித்து அதன் தன்மையை நிரூபிப்பது (Test and Prove its quality) என்று அர்த்தம். (இவ்வசனத்தில் ஆங்கிலத்தில் சொல்லப்பட்டிருக்கும் “Tempt” என்ற சொல் பாவம் செய்யச் தூண்டுகிற பின்னணியில் சொல்லப்படுகிற சொல் (Inducement to sin). ஆனால் Nacah என்ற எபிரேயச் சொல் அதைக் குறிப்பிடுவதல்ல. (No Hint of inducement is implied in this) ஆபிரகாமின் விசுவாசம், கீழ்ப்படிதல், தேவபயம் எத்தன்மையதாக இருக்கிறது என்பதை தேவன் சோதித்தறிய விரும்பினார். ஆகவே ஈசாக்கைப் பலியிடச் சொன்னார். ஆபிரகாம் தேவ கட்டளைக்கு அசைவில்லாத விசுவாசத்தோடு முற்றிலும் கீழ்ப்படிந்து பலிபீடத்தையும் கட்டி ஈசாக்கை பலியிட ஆயத்தமானான். தேவனிடத்தில் வாக்குத்தத்தத்தைப் பெற்று 25 ஆண்டுகள் காத்திருந்து தனது முதிர் வயதில் பெற்றுக்கொண்ட ஈசாக்கைப் பலியிடக் கத்தியையும் ஒங்கிவிட்டான். அந்த நொடிப்பொழுதில் தேவன் தூதன் மூலம் குரல் கொடுத்தார். “ஆபிரகாமே பிள்ளையாண்டான் மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக் கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்” (ஆதி.22:12) என்று வாசிக்கிறோம். அந்த இடத்தில் ஈசாக்கைப் பலியிடுவதற்குப் பதிலாக தேவன் பலிப்பொருளாக ஒரு ஆட்டுக்கடாவைக் கொடுத்தார். ஆபிரகாம் அந்த இடத்திற்கு “யெகோவா யீரே” என்று பேரிட்டான் என்று காண்கிறோம். ஆகவே ஆபிரகாம் பரீட்சையில் வென்ற இடம். “நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன்” என்று நற்சான்று பெற்ற இடம். ஈசாக்கின் ஜீவனுக்குப் பதிலாக (substitution) தேவன் காட்டிய ஆட்டுக் கடாவை பலியிட்ட இடம். மரணத்திற்கு ஒப்புவிக்கப்பட்ட ஈசாக்கை உயிர்த்தெழுதலின் சாயலாக ஜீவனோடு பெற்ற இடம். ஆபிரகாம் தன்னுடைய பகுதியில் தேவனுடைய எதிர்பார்ப்பிற்குச் சரியாக இருந்த படியால் “தேவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்” என்ற விசுவாசத்தின் நிச்சயத்தைப் பெற்றுக்கொண்ட இடம். தேவன் தமக் கென்று ஆலயம் கட்டப்படும் முன் குறித்த இடத்தின் தெரிந்தெடுப்பைப் பாருங்கள். ஆலயங்கள் ஆபிரகாம்கள் உருவாக்கப்பட வேண்டிய இடமாக இருக்கவேண்டும் என்பதே தேவனுடைய எதிர்பார்ப்பு. அதுவே அவருடைய சித்தம்.

 

மோரியா மலையிலுள்ள ஓர்நானின் களம்

 

மோரியா மலையில் அதே இடம் தேவனின் நியாயத்தீர்ப்பின் இடமாகவும் மாறிற்று. தாவீது இராஜா இஸ்ரவேலின் கோத்திரமெங்கும் தன் மக்களின் இலக்கத்தைத் தொகையிட இராணுவத் தளபதி யோவாபுக்குக் கட்டளை யிட்டான். யோவாப் மக்கட் தொகை கணக்கெடுப்பு வேண்டாமென தடுத்தும் தாவீதின் பிடிவாதத்தின் காரணமாக கணக்கெடுப்பு தொடங்கியது. இது தேவனுக்குப் பிரியமில்லாத காரியமாக இருந்தது. ஆனால் தாவீதின் இருதயம் அவனை வாதித்தது “நான் இப்படிச் செய்ததினாலே பெரிய பாவஞ்செய்தேன்; இப்போதும் ஆண்டவரே, உமது அடியானின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; நான் மகா புத்தியீனமாய்ச் செய்தேன்” (2 சாமு.24:10) என்று மன்னிப்பு கேட்டான். ஆனாலும் கர்த்தர் தாவீதிடம் காத் என்ற ஞானதிருஞ்டிக்காரனை அனுப்பினார். “காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: உம்முடைய தேசத்திலே ஏழு வருஷம் பஞ்சம் வர வேண்டுமோ? அல்லது மூன்று மாதம் உம்முடைய சத்துருக்கள் உம்மைப் பின்தொடர, நீர் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போகவேண்டுமோ? அல்லது உம்முடைய தேசத்திலே மூன்றுநாள் கொள்ளைநோய் உண்டாக வேண்டுமோ? இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறு உத்தரவு கொண்டுபோக வேண்டும் என்பதை நீர் யோசித்துப் பாரும் என்று சொன்னான். அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நாம் கர்த்தருடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப் பேனாக என்றான்” (வ.13,14) இஸ்ரவேலில் பெரிய கொள்ளைநோய் தொடங் கிற்று. மக்களில் எழுபதினாயிரம் பேர் செத்துப் போனார்கள் (வ.15) கர்த்தர் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு சங்கரிக்கும் தூதனை நிறுத்தினார். அப்போது கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய அர்வனாவின் போரடிக்கிற களத்திற்கு நேரே நின்றான். (வ.16) (அர்வனாவின் மறு பெயர் ஓர்நான்) அதைக் கண்ட தாவீது கர்த்தரை நோக்கி “இதோ, நான்தான் பாவஞ்செய்தேன்; நான் தான் அக்கிரமம்பண்ணினேன்; இந்த ஆடுகள் என்னசெய்தது? உம்முடைய கை எனக்கும் என் தகப்பன் வீட்டுக்கும் விரோதமாயிருப்பதாக என்று விண்ணப்பம் பண்ணினான்” (வ.17). அப்பொழுது காத் தாவீதினிடம் சங்கார தூதன் நின்ற அந்தக் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படி சொன்னான் (வ.18) தாவீது ஓர்நானின் களத்தை விலைக்கு வாங்கி பலிபீடத்தைக் கட்டி பலிசெலுத்தினான். அந்த இடத்தில் தாவீது இராஜாவின் தவறுக்கு ஒரு பெரிய நியாயத்தீர்ப்பு நடந்தது. ஆகவே அந்த இடம் ஒரு நியாயத்தீர்ப்பின் இடமாகவும் மாறிற்று. இதே இடத்தில் தாவீதின் அறிவுரைப்படி அவனது மகனாகிய சாலொமோன் 2 நாளா. 3:12ல் வாசிப்பதின்படி தேவாலயத்தைக் கட்டினான்.

 

சாலொமோனின் தேவாலயம்

 

சாலொமோன் தேவாலயத்தைக் கட்டிமுடித்து கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்து கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்னே இஸ்ரவேல் சபை யாரெல்லாருக்கும் எதிராக நின்று வானத்திற்கு நேராய்த் தன் கைகளை உயர்த்தி விண்ணப்பம் செய்தான் (1 இராஜா.8:22-66). இதற்குப் பின் கர்த்தர் சாலொமோனுக்குத் தரிசனமாகி “நீ என் சமுகத்தில் செய்த உன் விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன்; நீ கட்டின இந்த ஆலயத்தில் என் நாமம் என்றைக்கும் விளங்கத்தக்கதாக, அதைப் பரிசுத்தமாக்கினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் அங்கேயிருக்கும்” (1 இராஜா.9:3) என்று வாக்களித்தார். ஆனால் “நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்னைவிட்டுப் பின்வாங்கி, நான் உங்களுக்கு முன் வைத்த என் கற்பனைகளையும் என் கட்டளைகளை யும் கைக்கொள்ளாமற் போய், வேறே தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்துகொள்வீர்களாகில், நான் இஸ்ரவேலுக்குக் கொடுத்த தேசத்திலே அவர்களை வைக்காதபடிக்கு நிர்மூலமாக்கி, என் நாமம் விளங்க நான் பரிசுத்தமாக்கின இந்த ஆலயத்தை என் சமுகத்தை விட்டுத் தள்ளுவேன்; அப்பொழுது இஸ்ரவேல் சகல ஜனங்களுக்குள்ளும் பழமொழியாகவும் வசைச் சொல்லாகவும் இருப்பார்கள்” (வ.6,7) என்ற எச்சரிக்கையையும் கொடுத்தார்.

 

ஆண்டுகள் உருண்டோடின. இஸ்ரவேல் மக்கள் தேவனுடைய பிரமாணங்களுக்கும் சட்டதிட்டங்களுக்கும் உணர்வற்றவர்களாக (insensi tive) மாறினார்கள். ஆவிக்குரிய வாழ்விலிருந்து விலகி ஒழுக்கக்கேடு களுக்கும் துன்மார்க்கமான வாழ்வுக்கும் (moral wickedness) இடம் கொடுத்தார்கள். தேவன் சாலொமோன் மூலமாக அவர்களுக்கு எச்சரிப்பு கொடுத்ததுமன்றி அவ்வப்போது தீர்க்கதரிசிகளை எழுப்பி எச்சரிக்கை களைக் கொடுத்தும் செவிகொடுக்காமல் போனார்கள். கர்த்தர் பாபிலோனிய இராஜாவாகிய (தற்போதைய ஈராக்) நேபுகாத்நேச்சாரை எழுப்பினார். கர்த்தர் நேபுகாத்நேச்சாரை “என் ஊழியக்காரன்” என்றழைத் ததைக் காண்கிறோம். “என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவையும் அழைத்தனுப்பி, அவர்களை இந்த தேசத்துக்கு விரோதமாகவும், இதின் குடிகளுக்கு விரோதமாகவும், சுற்றிலுமிருக்கிற இந்த எல்லா ஜாதிகளுக்கும் விரோதமாகவும் வரப்பண்ணி, அவைகளைச் சங்காரத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவைகளைப் பாழாகவும் இகழ்ச்சிக் குறியாகிய ஈசல் போடுதலாகவும், நித்திய வனாந்தரங்களாகவும் செய்வேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (எரே.25:9). தேவனுக்கு விரோதமான முரட்டாட்டமான செயலுக்கும் அவர்களுடைய பாவ ஜீவியத்திற்கான தண்டனையாக நேபுகாத்நேச்சார் படையெடுத்து வந்து எருசலேமையும் தேவாலயத்தையும் அழித்தான். இராஜ குடும்பத்தைச் சேர்ந்தோரையும் அநேக மக்களையும் சிறைக்கைதியாக பாபிலோன் தேசத்திற்குக் கொண்டு சென்றான். சாலொமோனின் ஆலயம் கி.மு.586ல் அழிக்கப்பட்டது. எரேமியா மூலம் தேவன் முன்குறித்த தீர்க்கதரிசனம் நிறைவேறியதைக் காண்கிறோம். எருசலேம் தேவனுடைய ஆலயத்தை இழந்தது. பாபிலோனிய சாம்ராஜ்யம் பெல்ஷாத்சார் கொலை செய்யப் பட்டதோடு முடிவடைந்தது. பெல்ஷாத்சார் தன்னுடைய இராஜ்ஜியம் எங்குமுள்ள பிரபுக்களில் ஆயிரம் பேருக்கு பெரிய விருந்து செய்தான். அதில் திராட்சரசம் பரிமாறுவதற்கு நேபுகாத்நேச்சார் எருசலேம் தேவாலயத்தி லிருந்து கொண்டுவரப்பட்ட பொன், வெள்ளிப் பாத்திரங்களைக் கொண்டு வந்து தானும், தன் பிரபுக்களும் தன் மனைவிகளும் தன் மறுமனை யாட்டிகளும் அதில் குடித்தார்கள். அப்பொழுதுதான் ஒரு கையுறுப்பு சுவரில் “மெனே மெனே, தெக்கேல் உப்பார்சின்” என்று எழுதியது. “தேவன் உன் இராஜ்ஜியத்தை மட்டிட்டு, அதற்கு முடிவுண்டாக்கினார் என்றும் நீ தராசிலே நிறுக்கப்பட்டு குறைவாகக் காணப்பட்டாய் என்றும் உன் இராஜ்ஜியம் மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது” என்று அர்த்தம். அன்று இரவே அந்த விருந்தின்போது பெல்ஷாத்சார் கொல்லப்பட்டான். (தானி.5ம் அதிகாரம்) ஜெனோபோன் (XENOPHON) என்ற வரலாற்று ஆசிரியர் இதைப்பற்றி பெல்ஷாத்சார் இராஜாவால் அநீதி இழைக்கப்பட்ட கேடேட்டாஸ் (GADATAS) மற்றும் கோபிரியாஸ் (GOBRIAS) என்ற இரு பிரபுக்கள் தரியு இராஜாவின் இராணுவத்தினருக்குக் கையாட்களாக இருந்த தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பெல்ஷாத்சாரை அன்று இரவு விருந்தின்போது கொலைசெய்து பழிவாங்கிக் கொண்டனர். தரியு இராஜா இவர்களை சாமர்த்தியமாகப் பயன்படுத்தி எளிதாக இராஜ்ஜியத்தைக் கைப்பற்றினான்.

 

எருசலேமின் வாசம்பண்ணுகிற தேவனே தேவன்

 

மேதிய இராஜ்ஜியமும் பெர்சிய இராஜ்ஜியமும் தங்களுக்குள் ஒப்பந்தத்தை செய்துகொண்டு மேதிய பெர்சிய சாம்ராஜ்யம் உருவாயிற்று (CONFIDERATE OF MEDES AND PERSIA) அதை அடுத்து கோரேஸ் என்னும் பெர்சிய இராஜா (தற்போதைய ஈரான்) ஆளுகைக்கு வந்தான். கோரேஸ் இராஜா தான் இராஜாவாகிய முதலாம் வருஷத்திலேயே ஒரு பிரகடனம் செய்தான். “கர்த்தர் கோரேஸ் இராஜாவின் ஆவியை ஏவினதினாலே அவன் பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் இராஜ்ஜியங்களெல்லாம் எனக்குத் தந்தருளி யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டும்படி எனக்கு கட்டளையிட்டிருக்கிறார்.

 

“அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக் கிறானோ, அவனோடே அவனுடைய தேவன் இருப்பாராக; அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்குப் போய், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டக்கடவன்; எருசலேமில் வாசம்பண்ணுகிற தேவனே தேவன்” (எஸ்றா 1:3) என பிரகடனம் செய்தான். இதே பகுதி 2 நாளா.36ம் அதிகாரத்தின் கடைசி பகுதியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் காணலாம். எருசலேமில் தேவாலயத்தைக் கட்டத் திரும்பச் செல்லுகிற மக்களை ஊக்குவித்தான். திரும்பிச் செல்லுகிறவர்களோடே “அவனுடைய தேவன் இருப்பாராக” என்றும் “எருசலேமிலே வாசம்பண்ணுகிற தேவனே தேவன்” என்றும் பிரகடனப்படுத்தி கட்டளையிடச் சொன்னான். அதோடு மாத்திரமல்ல நேபுகாத்நேச்சார் எருசலேம் ஆலயத்திலுருந்து கொண்டுவந்த சகல பணிமுட்டுகளையும் எடுத்துச் செல்லும்படித் திரும்பக் கொடுத்தான். கோரேசின் பொக்கிஷக்காரன் யூதாவின் அதிபதியாகிய சேஸ்பாத்சாரிடத் தில் எண்ணிக்கொடுத்தான் (வ.8). இந்த சேஸ்பாத்சார் செருபாபேலின் பாபிலோனியப் பெயர். ஏனெனில் செருபாபேல் யூதாவில் அதிபதியாக (GOV ERNOR) இருந்தவன். எஸ்றா இரண்டாம் அதிகாரத்தில் எருசலேமுக்கு ஆலயத்தைக் கட்டச் சென்றோர்களின் குடும்பவாரியாகப் பட்டியலைக் காண்கிறோம். செருபாபேல், நெகேமியா, மொர்தேக்காய், எஸ்றா உட்பட உள்ள பட்டியலைக் காண்கிறோம். “முந்தின ஆலயத்தைக் கண்டிருந்த முதிர்வயதான ஆசாரியரிலும், லேவியரிலும், பிதாக்கள் வம்சங்களின் தலைவரிலும் அநேகர் இந்த ஆலயத்துக்குத் தங்கள் கண்களுக்கு முன்பாக அஸ்திபாரம் போடப்படுகிறதைக் கண்டபோது, மகா சத்தமிட்டு அழுதார்கள்; வேறே அநேகம்பேரோ கெம்பீர சந்தோஷமாய் ஆர்ப்பரித்தார்கள்” (எஸ்றா 3:12) என்று காண்கிறோம்.

 

இதற்கான காரணம் தேவ ஆவியினாலே ஏவப்பட்ட கோரேஸ் இராஜா தான். இந்த கோரேஸ் யார் தெரியுமா? யூதமக்களுடைய ஜீவன் காக்கும்படி “நான் செத்தாலும் சாகிறேன்” என்று சொன்ன பெர்சிய இராஜாவாகிய அகாஸ்வேருவின் மனைவியாகிய யூதப் பெண்ணான எஸ்தரின் மகன்த ன்தான் கோரேஸ். இவன் சிறு வயதாக இருக்கும்போது இஸ்ரவேலின் தேவனைக் குறித்தும் அவருடைய மேன்மையைக் குறித்தும் அவனடைய தாய் எஸ்தர் அவனுக்குக் கற்றுக்கொடுத்து வந்தாள் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். “எருசலேமின் தேவனே தேவன்” என்று கோரேஸ் சொன்னதற்கு இதுதான் காரணம். கோரேஸ் இராஜாவைக் குறித்து மற்றுமொரு விசேஷித்தச் செய்தியுண்டு. இவனது பிறப்பிற்கு சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக இவனது பெயரைக் குறிப்பிட்டே தேவன் முன்னறிவித்துள்ளார். “கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்றும் சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான் (ஏசா.44:28). ஒரு புறஜாதி இராஜாவை “என் மேய்ப்பன்’ என்றழைக்கிறார். ஆகவேதான் தேவன் எருசலேமில் ஆலயத்தைக் கட்டும்படி ஏவினார் என்று காண்கிறோம். புறஜாதி இராஜாவைக் கொண்டும் எருசலேமுக்கு நன்மையானதைச் செய்ததைக் காண்கிறோம். ஆனாலும் 70 ஆண்டுகளுக்குப் பின் செருபாபேலும் அவனோடு நாடுகடத்தப்பட்ட சிலரும் எருசலேமுக்குத் திரும்பி வந்து கி.மு.516ல் இரண்டாவது தேவாலயத்தைக் கட்டி எழுப்பினார்கள். காலப்போக்கில் அதுவும் சரியான பராமரிப்பின்றி அழிந்தது. எருசலேமை ஆண்ட சாம்ராஜ்யங்கள் வீழ்ந்தன, எழுந்தன. கடைசியாக இஸ்ரவேல் தேசம் கி.மு.63ல் ரோம சாம்ராஜ்யத்தின் ஆளுகை யின் கீழ் வந்தது. அப்பொழுது யூதாவின் தேசாதிபதியாகிய பெரிய ஏரோது (Herod, the Great) கி.மு.43ம் ஆண்டு எருசலேமின் தேவாலயத்தைப் புதுப்பித்தான். எருசலேமிலுள்ள கோட்டை, கோபுரங்களைக் கட்டினான். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இப்பூலோக ஊழிய காலத்தில் எருசலேமிலிருந்தது ஏரோதுவின் ஆலயம் தான். ஆனால் அந்த ஆலயமும் நாம் முன்பு கண்டதுபோல கி.பி.70 ஆண்டு தீத்துராயனால் அழிக்கப்பட்டது. இன்று இஸ்ரவேல் மக்கள் தங்களுக்குள்ள ஆலயத்தை இழந்து நிற்கின்றனர்.

ஒரு சிறிய திரைப்பட அரங்குபோல் அமைத்து யூதமக்கள் அனுபவித்த தாங்கொணா உபத்திரவங்களை காட்சித் தொடராகக் காண (Visual presentation) வகை செய்துள்ளனர். அக்காட்சிகளை சிறிய திரையில் மக்கள் காண்பதை மேலே உள்ள படத்தில் காணலம்.

</center >

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *