யூதர்களின் சோக வரலாறு 6
பகைமை உணர்வின் வரலாறு – முதலாம் உலக யுத்தம்
“நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப் போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை. துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை. கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை ” (2 கொரி.4:8,9).
பகைமை உணர்வின் வரலாறு
இஸ்ரவேல் மக்கள் மீதுள்ள பகைமை உணர்வு மிகவும் ஆழ்ந்து ஐரோப்பா முழுவதும் பரவிப்பாய்ந்திருந்தது. இதற்கு அந்தந்த நாடுகளில் ஒரு குறிப்பிட்டக் காரணம் சொல்லப்படாவிட்டாலும் இஸ்ரவேல் மக்களின் உண்மை நிலை அறிந்துகொள்வதற்கு முன்பாகவே அவர்கள் மீது தப்பெண்ணம் (PREJUDICE) கொண்டவர்களாக இருந்தார்கள். நாம் முன்பு கண்டதுபோல எகிப்தின் மன்னன், ஒரு யுத்தம் உண்டாகுமானால் இவர்கள் தங்களது பகைஞர்களோடு சேர்ந்துவிடுவார்களோ என்றும் அவர்கள் பலுகிப் பெருகிப் பலத்தவர்களாக இருப்பதால் அவர்கள் மீது எரிச்சலும் ஏற்பட்டதாகக் காண்கிறோம் (யாத். 1:9,12). அதன் காரணமாக அவர்களைக் கொடுமையாக நடத்தியதாகவும் காண்கிறோம். இஸ்ரவேல் மக்களைக் குறித்த இப்படிப்பட்ட எண்ணங்கள் நூற்றாண்டுகள் உருண்டோடியும் மாறாததாக இருந்தன.
பாபிலோனிய சாம்ராஜ்யத்தின் மிகப்பெரிய இராஜா நேபுகாத்நேச்சார் கி.மு.605ல் இஸ்ரவேல் மக்களைத் தோற்கடித்து அநேகமாயிரம் மக்களைச் சிறைக் கைதிகளாக பாபிலோனுக்குக் கொண்டு சென்றனர். பாபிலோனிய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் மேதிய பெர்சிய சாம்ராஜ்யம் ஆளுகைக்கு வந்தது. அந்த சாம்ராஜ்யத்தை கி.மு.486 முதல் கி.மு.465வரை அகாஸ்வேரு இராஜா ஆட்சி செய்துவந்தான். அந்த கால கட்டத்திலும் யூத மக்களுக்கு விரோதமாக சகல பிரபுகளுக்கும் மேலாக உயர்த்தப்பட்டிருந்த ஆகாகியனான ஆமான் பெரும் பகைமை உணர்வை உருவாக்கி அவர்களை முற்றிலும் அழித்தொழிக்க சதித்திட்டம் தீட்டினான். அகாஸ்வேரு இராஜாவிடம் அவன் சொன்னதைப் பாருங்கள். “உம்முடைய ராஜ்யத்தின் சகல நாடுகளிலுமுள்ள ஜனங்களுக்குள்ளே ஒருவித ஜனங்கள் சிதறுண்டு பரம்பியிருக்கிறார்கள்; அவர்களுடைய வழக்கங்கள் சகல ஜனங்களுடைய வழக்கங்களுக்கும் விகற்பமாயிருக்கிறது; அவர்கள் ராஜாவின் சட்டங் களைக் கைக்கொள்ளுகிறதில்லை; ஆகையால் இப்படி விட்டிருக்கிறது ராஜாவுக்கு நியாயமல்ல. ராஜாவுக்குச் சம்மதியானால், அவர்களை அழிக்க வேண்டுமென்று எழுதி அனுப்பவேண்டியது; அப்பொழுது நான் ராஜாவின் கஜானாவிலே கொண்டுவந்து செலுத்த பதினாயிரம் தாலந்து வெள்ளியை எண்ணிக் காரியக்காரர் கையில் கொடுப்பேன் என்றான்” (எஸ்தர் 3:8,9). இப்படிப்பட்ட பகைமை உணர்வே காலாகாலங்களாகத் தொடர்ந்தது.
யூதமக்களுக்கு விரோதமான வதந்திகளும் தாக்குதல்களும்
ஐரோப்பிய நாடுகளில் பரவியிருந்த இஸ்ரவேல் மக்கள் பல இன்னல் களைச் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்களாகவும் தீண்டத் தகாதவர்கள் போலும் கேவலமாகக் கருதப்பட்டார்கள். ஐரோப்பிய நாடுகளிலும் குறிப்பாக இத்தாலியிலும் இஸ்ரவேல் மக்கள் “கெட்டோ’ (GHEETO) என்று அழைக்கப்படுகிற குறிப்பிட்ட எல்லைக்குள் காலனி குடியிருப்புகள் போல குடியிருக்கச் செய்தனர். அடிமைகளைப்போல நடத்தப் பட்டார்கள். ரஷ்ய தேசத்தில் பேல் (PALE) என்று அழைக்கப்படுகிற குறிப்பிட்டுக் கொடுக்கப்படுகிற இடத்தில் மட்டும்தான் அவர்கள் வாழ வேண்டும். அநேக பொய்யான குற்றச்சாட்டுகளை அவர்கள் மீது புனைந்து பகைமை உணர்வை வளர்த்து அவர்களை பொது மக்களே தாக்கும் அளவுக்கு (MASS VIOLENCE) அவர்கள் நெருக்கப்பட்டார்கள். அநேக இடங்களில் இஸ்ரவேல் மக்கள் கிறிஸ்தவக் குழந்தைகளைக் கொன்று அவர்களின் இரத்தத்தைக் கொண்டு பஸ்கா அப்பங்கள் (PASSOVER BREAD) தயாரிக்கின்றனர் என்று பொய்யை உண்மைபோன்று ஆக்கி வதந்திகளைக் கிளப்பிவிட்டனர். இந்த “இரத்த அவதூறுகள்” (BLOOD LIBELS) விளைவாக ஆங்காங்கே பல இடங்களில் இஸ்ரவேல் மக்கள் தாக்கப்பட்டார்கள்.
நெருக்கத்திலும் சோர்ந்து போகாத யூதமக்கள்
இந்த சூழ்நிலையின் காரணமாக இஸ்ரவேல் மக்களின் பிரதிச் செயல் எப்படியிருந்தது? ஒரு சிறு கூட்டத்தார் அந்தந்த மக்களோடு இசைந்து அவர்கள் கலாச்சாரத்திற்கு ஒத்துப்போகவும் அவர்களைத் திருப்திசெய்து வாழவும் தங்களை மாற்றிக்கொண்ட னர். ஒரு கூட்டத்தார் யூதமக்கள் என்ற தனித்துவத்தைக் காத்துக்கொள்ளவும் அந்த தேசத்தினர் தங்களை
அந்நாட்டின் அங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் போராடி வந்தனர். வேறு சிலர் தாங்கள் பின்பற்றும் யூத கலாச்சாரமும், அவர்கள் பின்பற்றும் ஆராதனை முறைமைகளையும் நெருக்கங்கள் மத்தியிலும் தவறாது கைக்கொண்டுவருவதில் மிகவும் உறுதியாக இருந்து செயல் பட்டனர். இதன் காரணமாக மேற்கு ஐரோப்பாவின் பகுதியில் (WESTERN EUROPE) இஸ்ரவேல் மக்களுக்கு ஒரு புதுவாழ்வு மலர்ந்தது. அவர்கள் அரசியலில் இறங்கினார்கள். பாராளுமன்றங்களில் சிலர் உறுப்பினர்களா னார்கள். விஞ்ஞானம், மருத்துவம் போன்ற பகுதிகளில் இறங்கி அநேகர் நல்ல முன்னேற்றத்தைக் கண்டார்கள். சமுதாயத்தில் உயர் அந்தஸ்தை (ARIS TOCRATIC JEWS) அநேகர் எட்டினார்கள். ஆனால் கிழக்கு ஐரோப்பாவில் (EAST ERN EUROPE) சூழ்நிலைகள் யூதமக்களுக்கு முற்றிலும் மாறாக இருந்தது. ஆனாலும் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறதுபோல “நாங்கள் எப் பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை. துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை. கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை” (2 கொரி.4:8,9) என்ற உள்ளணர்வும் உறுதியும் உள்ளவர்களாயிருந்தனர்.
சாரிஸ்ட் ரஷ்யாவின் (TSARIST RUSSIA) உயர்மட்டத்தில் நிலப்பிரபுக்களும், இரண்டாம் மட்டத்தில் ரோமன் கத்தோலிக்கர்களும், மூன்றாவது மட்டத்தில் பாலிஷ் மொழி பேசுவோர் (POLISH – SPEAKING) அடுத்த மட்டத்தில் சாதாரண நிலையிலுள்ள மக்களாக இருந்தனர். அதற்கு அடுத்த மட்டத்தில் 18ம் நூற்றாண்டில் குடியேறிய ஜெர்மானிய வழிவந்தோர் ஆவர் (DESCENDANTS GERMAN SETTLERS). இவர்கள் ஜெர்மன் மொழி பேசுகிற சிறு விவசாயிகளாகவும் புராட்டஸ்டான்ட் கிறிஸ்தவர்களாகவும் இருந்தனர். யூதமக்கள் மேற்ச் சொன்ன அனைவருக்கும் கீழ்மட்டத்தில் இருந்தனர். அவர்கள் வீடுவீடாகச் சென்று பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளாகவும் (PEDLARS) சிறு வியாபாரிகளாகவும் (SMALL MERCHANTS) இருந்தனர். அனைத்து மட்டத்திலுள்ள மக்களால் அற்பமாகக் கருதப்பட்டவர்களாயிருந்தனர்.
முதலாம் உலகப்போர்
ஆனாலும் முதலாம் உலகப்போர் துவக்கத்திற்கு முன்பாக யூதமக்கள் அந்தந்த நாட்டின் இராணுவத்தில் சேர்ந்தனர். ஆரம்ப நாட்களில் யூதர்களை இராணுவத்தில் சேர்த்துக்கொள்வதில் எதிர்ப்புகள் தோன்றினாலும் அவர்கள் சார்ந்திருந்த நாட்டிற்கு உண்மையுள்ளவர்களாகக் கண்டபடியால் எதிர்ப்புகள் மறைந்தன. எனினும் சில இராணுவப் பிரிவுகளில் மாத்திரம் யூதர்களைச் சேர்த்துக்கொள்வதில்லை. ஆகஸ்ட் 1914ல் முதலாம் உலகப் போர் ஆரம்பித்தது. யுத்தக் களத்தில் யூத இராணுவ வீரர்கள் பதுங்கு குழிகளிலிருந்து எதிராளிகளை சுட்டனர். எதிராளிகளின் பதுங்கு குழிகளிலும் யூத இராணுவ வீரர்கள் இருந்தனர். ஜெர்மன் நாட்டிலிருந்த யூத இராணுவ வீரர்கள் ஜெர்மனுக்கு உண்மையுள்ளவர்களாக பிரிட்டிஷ் யூத இராணுவ வீரர்களுக்கு விரோதமாகச் சுட்டனர். பிரிட்டிஷ் யூதர்கள் ஜெர்மன் யூதர்களின் குண்டுகளுக்குப் பலியானார்கள். ஜெர்மன் யூதர்கள் பிரிட்டிஷ் யூதர்களின் குண்டுகளுக்கும் பலியானார்கள். ஜெர்மன் இராணுவத்தின் மொத்தம் 6,15,000 இராணுவ வீரர்களில், 1,00,000 ஜெர்மன் யூதர்களா யிருந்தனர். பல ஆயிரக்கணக்கான யூதர்களும், யூதர் அல்லாத இராணுவ வீரர்கள் யுத்தகளத்தில் மரணத்தை சந்தித்தனர். முதலாம் உலகம்போரில் ஜெர்மன் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். லட்விக் ஹாஸ் (Dr.LUDWIG HASS) யுத்தக்களத்தில் மரணமடைந்தார். அவர் ஒரு பிரபல்யமான யூதர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மன் யூத இராணுவ வீரர்களுள் 12,000 பேர் யுத்த களத்தில் இராணுவச் சீருடையிலே ஜெர்மன் நாட்டிற்கு உண்மை யுள்ளவர்களாக மரணத்தை சந்தித்தனர். ஆஸ்ட்ரோ ஹங்கேரியன் (AUSTRO – HUNGARIAN) இராணுவத்திலிருந்த யூதர்கள் ரஷ்யா, செர்பியன், இத்தாலி ஆகிய நாடுகளின் யூத இராணுவத்தினருடன் யுத்தம் செய்தனர். இருதரத்தாரிலும் யூத இராணுவத்தினர் மரணமடைந்தனர். 1918 நவம்பர் மாதம் முதலாம் உலக யுத்தம் முடிவுக்கு வந்தது. யுத்தக்களத்தில் அவர்கள் காட்டிய வீரச்செயல்களுக்காக பாராட்டு பட்டியலில் (ROLL OF HONOUR) யூத இராணுவ வீரர்கள், கடற்படையினர், விமானப்படையினர் ஆகியோரின் எண்ணிக்கைகள் நிறைவாக இருந்தன. அதேபோல இராணுவ மருத்துவ மனையிலும் யூத இராணுவ வீரர்களே அதிகம்பேர் இருந்தனர். கல்லறைத் தோட்டத்திலும் யூதர்களின் கல்லறையில் வெவ்வேறு நாடுகளின் கொடிகள் நாட்டப்பட்டிருந்தன.
உலகப்போரின் முடிவு
முதலாம் உலக யுத்தத்திற்குப்பின் ஐரோப்பியா முழுவதிலும் சூழ் நிலைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. போலந்து நாட்டில் அதிகமான யூதர்களிருந்தனர். ஹங்கேரி இராஜ்ஜியத்தில் (HUNGARIAN KINGDOM) 4,73,000 யூதர்கள் வாழ்ந்தனர். ருமேனியாவில் சுமார் அதே எண்ணிக்கை யுள்ள யூதர் களிருந்தனர். ஜெர்மனியில் 4,90,000 யூதர்களும், செக்கோஸ்பேவேக்கி யாவில் 3,50,000 யூதர்களும் பிரான்சில் 2,50,000 யூதர்களும் இருந்தனர். முதலாம் உலக யுத்தத்தின் முடிவைத் தொடர்ந்து உலக நாடுகளின் கூட்டமைப்பு ஒன்று உருவாயிற்று (LEAGUE OF NATIONS). அனைத்து நாடுகள் எடுத்துக்கொண்ட உடன்படிக்கையின்படி உருவான அக்கூட்டமைப்பு இனி மேல் நாட்டிற்கு நாடு யுத்தமே இருக்கக்கூடாது என பிரகடனப்படுத்தியது. அதோடு மாத்திரமல்ல ஒவ்வொரு நாட்டிலும் சிறுபான்மையினரின் பாதுகாப்பும், உரிமைகளும் காக்கப்படவேண்டும் என்ற உத்தரவாதம் தரப் படவேண்டுமென்றும் வலியுறுத்தியது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு நாடுகளில் சிறுபான்மையினராயிருந்த யூத மக்கள் சட்டப்படி, சமூக வாழ்விலும், பொருளாதார வாழ்விலும், கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் சம உரிமை கேட்க ஆரம்பித்தனர். அதுவரை அற்பமாகவும் அடிமைகளாகவு மிருந்த யூதமக்கள் சம உரிமை கேட்டவுடன் உயர் மட்டத்திலிருந்த மக்கள் யுத்தகாலத்தில் அவர்கள் சார்ந்திருந்த நாட்டிற்காக ஜீவனையும் கொடுத்தத் தன்மையையும் குறுகிய காலத்திற்குள்ளாக மறந்து யூத மக்களுக்கு விரோதமாகக் கொதித்தெழுந்தனர். நடந்த விபரீதங்கள் பட்டியலிடமுடியாத அளவு பெரிதாயிற்று.