யூதர்களின் சோக வரலாறு – 7

 

யூதர்களின் சோக வரலாறு – 7

 

 

ஜெர்மனியில் நாஜிக்கட்சியின் தோற்றம் ஹிடீலர் அரசியலில் நுழைதல்

 

“சகல யூதரையும் அழித்துக்கொன்று நிர்மூலமாக்கவும் அவர்களைக் கொள்ளையிடவும் அஞ்சற்காரர் கையிலே ராஜாவின் நாடுகளுக் கெல்லாம் கட்டளைகள் அனுப்பப்பட்டது… சூசான் நகரம் கலங்கிற்று (எஸ்.3:13,15)

 

மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட நாச விளைவு

 

கிழக்கு போலிஷ் (Eastern polish) நகரமாகிய லவோவ் (LVOV) என்ற இடத்தில் அங்கு வாழ்ந்த உக்ரெயினைச் சேர்ந்தவர்கள் (UKRAINI NS) 50 யூதர்களை ஒரே சம்பவத்தில் கொன்று குவித்தனர்.

 

1919 பிப்.15ம் நாள் தொடங்கி அவ்வாண்டின் இறுதிக்குள்ளாக புரோஸ்குரோவ் (PROSKUROW) என்ற உக்ரெயின் நகரில் சைமன் பெட்லூரா (SIMON PETLURA) என்ற உக்ரெயின் தேசியத் தலைவரின் (UKRA- INIAN NATION ALIST LEADER) தலைமையிலான இயக்கத்தினர் 60,000 யூத மக்களை சிறிதேனும் மனிதாபிமானம் இன்றி கொன்று குவித்தனர். யூதர்கள் சாரிஸ்ட் ரஷ்யாவில் (TSARIST RUSSIA) முன்பு எவ்விதமாகக் கொல்லப்பட்டார்களோ அதைக்காட்டிலும் மிகக்கொடூரமான முறையில் படுகொலைகள் நடந்தன. இதைக் குறித்து சீயோனியத்தலைவர் கெய்ம் வெய்ஸ்மேன் (Chaim weizmann, the Zionst Leader) தனது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் “புதிதாக விடுதலைப் பெற்றிருக்கும் போல்ஸ் (POLES) நாடு யூத மக்களை முற்றிலும் கொன்றழித்துவிடும் செயலில் மிகவும் தீவிரமாக இறங்கி செயல் படுகின்றது. ரஷ்யர்களிடமிருந்து கற்றுக்கொண்ட கொடூர முறைமை களையேக் கையாளுகின்றனர். எங்களால் என்ன செய்ய முடியும்? நாங்கள் பெலனற்றவர்களாயிருக்கிறோம். நாங்கள் கேள்விப்படுகிற அழுகுரலின் செய்திகள் எங்கள் இருதயத்தையே பிளப்பதாக உள்ளன’ எழுதியுள்ளார். என்று

 

1919 டிச.18ம் நாள் பிரிட்டிஷ் தூதுவர் (BRITISH DIPLOMAT) போல்ஷ் நாட்டில் நடந்த சம்பவங்களைக் குறித்து இவ்வாறு எழுதியுள்ளார். “அநேக யூதமக்கள் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் என்று கருதப்பட்டுக் கொல்லப் பட்டார்கள். ஆனால் உண்மையிலேயே அவ்வாறான ஆதரவாளர்கள் அல்ல. எனினும் அப்படியொரு காரணத்தைச் சொல்லிக் கொல்லப்பட்டார்கள். அநேக யூதப் பெண்கள் கைது செய்யப்பட்டு எந்த விசாரணையுமின்றி சிறையிலடைக்கப்பட்டனர். அவர்கள் நிர்வாணமாக்கப்பட்டு சவுக்கால் அடிக்கப்பட்டனர். அவ்வாறு அடிக்கப்பட்டபின் நிர்வாணமாக இராணுவ வீரர்கள் மத்தியில் நடந்து செல்ல வைப்பார்கள். பின்னர் அவர்கள் கல்லறைத் தோட்டத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அவர்களுடைய கல்லறைக் குழியை அவர்களையே தோண்ட வைப்பார்கள். பின்னர் அவர்களைத் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இறையாக்கி அவர்கள் தோண்டிய குழியிலேயே போட்டுப் புதைத்துவிடுவார்கள். இப்படிக் கொல்லப்பட்டவர்களில் அநேகர் மிகவும் மரியாதைக்குரியவர்கள். அநேகர் பள்ளி ஆசிரியைகளாக பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள்”.

 

போருக்குப் பின் ஜெர்மனியின் நிலை

 

ஜெர்மனியில் முதல் உலக யுத்தத்திற்குப்பின் யுத்தத்தால் உடைந்து போன ஜெர்மனியை கட்டி எழுப்ப மிகவும் பாடுபட்டனர். அதில் யூதமக்கள் மனப்பூர்வமாகப் பங்கெடுத்தனர். அப்போதிருந்த புதிய அரசின் உள்துறை அமைச்சர் யூத இனத்தைச் சேர்ந்த ஹீகோ பிரியுஸ் (HUGO PREUSS) இருந்தார். அவர் அரசின் அரசியல் சாசனத்தை வடிமைத்தார் (DRAFT OF WEIMER CONSTITUTION). அது ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் மிகச் சிறந்த மக்களாட்சி அமைப்பாக இருந்தது. வால்தர் ரத்தனு (WALTHER RATHNAU) என்ற மற்றொரு யூதர் ஜெர்மனியில் புனரமைப்பு அமைச்சராகவும் பின்னர் வெளியுறவு அமைச்சருமாகவுமிருந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மத்தியிலும் ஜெர்மனியின் தோல்விக்கு யூதர்களே காரணம் என்ற பகைமைக் குரலை எழுப்பினார்கள். அதைத் தொடர்ந்து தலைநகராகிய பெர்லினிலேயே யூதர்களுக்கும் யூதர் அல்லாதவர்களுக்கும் பெரும் கலவரம் ஏற்பட்டது. நாஜி கட்சியின் தோற்றம்

 

இந்த சூழ்நிலையில் ஜெர்மனியில் நேஷனல் சோசியலிஸ்ட் ஜெர்மன் ஒர்க்கர்ஸ் பார்ட்டி (NATIONAL SOCIALIST GERMAN WORKERS’ PARTY) என்ற சிறிய அரசியல் கட்சி உருவாயிற்று. இக்கட்சியே மிகக்குறுகிய காலத்திற்குள்ளாக “நாஜி” என்று பெயர் பெற்றது. (NATIONAL என்ற சொல்லை ஜெர்மானியர்கள் NAZIONAL என்றே உச்சரிப்பார்கள். அந்த உச்சரிப்புச் சொல்லின் முதல் நான்கு எழுத்து அதாவது NAZI என்ற சொல்லே அக்கட்சியின் பெயராயிற்று). 1920 பிப்.25ம் நாள் அக்கட்சி முனிச் (MUNICH) நகரில் வைத்து தங்களது 25 அம்ச திட்டத்தை வெளியிட்டது. (TWENTY FIVE POINT PROGRAMME) அத்திட்டத்தின் முக்கிய அம்சம் என்னவெனில், தேசியம் அதாவது தேசிய உணர்வு உள்ள ஜெர்மனி (NATIONALISTIC GERMAN), யுத்தத்தில் இழந்த காலனிகளை மீண்டும் கைப்பற்றி அகண்ட ஜெர்மனி (Great Germany) உருவாக்கப்பட வேண்டும். இரத்த பந்த ஜெர்மானிய (GERMAN BLOOD) இனத்தார் மட்டுமே ஜெர்மானியர். மற்ற இனத்தார் அனைவரும் நாட்டைவிட்டு வெளியேற்றப்படவேண்டும். இதன் அடிப்படையில் யூதர்கள் இந்தநாட்டின் குடிமக்களாக இருக்க முடியாது. அவர்கள் வெளியேற்றப்படவேண்டும் என்பதே அக்கட்சியின் முக்கிய கொள்கைகளாக இருந்தன. இக்கட்சி துவக்கப்படும்போது 60 உறுப்பினர் மட்டுமே இருந்தனர். ஜெர்மனியில் அப்போது 18,000 யூதர்கள் இருந்தனர்.

 

அடால்ஃப் ஹிட்லர் அரசியலில் நுழைதல்

 

அடால்ஃப் ஹிட்லர் ஒரு முன்னாள் இராணுவ வீரன். முதலாம் உலக யுத்தத்தின் முடிவுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பு அக்டோபர் 1918ல் மேற்கத்திய முன்னணியில் (WESTERN FRONT) யுத்தக்களத்தில் காயப்பட்டு சிகிச்சை பெற்று அதோடு இராணுவத்தை விட்டு வெளியேறி யவன். நாஜி கட்சியின் 25 அம்ச திட்டத்தை அதிலும் குறிப்பாக யூதர் களுக்கு விரோதமான திட்டத்தை வடிவமைத்த மூவர் குழுவில் ஹிட்லரும் ஒருவர். அதைத் தொடர்ந்து ஹிட்லர் அக்கட்சியின் நிர்வாக அமைப்பின் ஏழாவது பதவி நிலைக்கு உயர்த்தப்பட்டார். (SEVENTH IN THE PARTY’S HIERACHY).

 

1920 ஆகஸ்ட் 13ம் நாள் முனிச் நகரில் திரளான மக்கள் கூட்டத்தில் இரண்டு மணிநேரம் “நாங்கள் ஏன் யூதர்களுக்கு விரோதமாயிருக்கி (SU றோம்” (WHY WE ARE AGAINST THE JEWS) என்ற தலைப்பில் பேசினார். அதின் மையக்கருத்து என்னவெனில் “யூத இனமக்களின் மேலாண்மை’ PREMACY) ஜெர்மனியில் மாத்திரமல்ல ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் பெருகி வருகிறது. அவர்களது வளர்ச்சி ஆபத்தானது. வரயிருக்கும் “அந்த ஆபத்திலிருந்து விடுதலை பெற்றாகவேண்டும்” என்பதுதான். அதோடு ஒரு புதிய கொள்கைக் குரலை உருவாக்கினான். “உலகத்தில் யூதர் அல்லா தோர் அனைவரும் ஒன்றுபடுங்கள் ஐரோப்பியா முழுவதும் வாழும் மக்களே உங்களை நீங்களே விடுவித்துக்கொள்ளுங்கள்” இதுதான் அக்குரல் (“ANTI -SEMITES OF THE WORLD UNITE! PEOPLE OF EUROPE FREE YOUR. SELVES”), (சீமைட் SEMITES என்ற சொல் முக்கியமாக யூதர்களையும் பாலஸ்தீன அரேபியர்களையும் அசீரிய இனத்தையும் உள்ளடக்கிய சொல்) அதோடு மட்டுமின்றி முதற்கட்டமாக யூத இனத்தவர் நம்முடைய நாட்டை விட்டு அப்புறப்படுத்தப்படவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திப்பேசினார்.

 

நாழியின் புயல்படை (STORM TROOPS) 1921 ஆகஸ்ட் 13ம் நாள் “புயல் படை” என்ற பெயரில் நாஜி கட்சியைக் காக்கவும் அதற்கு விரோதமானவர் மீது எதிர்நடவடிக்கை எடுக்கும் நோக்குடன் ஹிட்லர் ஒரு படையை உருவாக்கினான். முதலில் தற்காப்புப் படை (A MEANS OF DEFENCE) என்ற தோற்றத்தோடு ஆரம்பிக்கப்பட்டாலும் பின்நாட்களில் அது ஒரு தாக்கும் படையாகவும் உருவாயிற்று (OFFENSIVE FORCE). தாக்குதலுக்கான பயிற்சியும் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. குறுகிய காலத்திற்குள்ளாக அவர்களுக்கென காவி நிற (BROWN) இராணுவம் போன்று சீருடை கொடுக்கப்பட்டது. அணிவகுப்பு மற்றும் படைப்பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. காலப்போக்கில் அப்படையினர் “காவிச்சட்டைப்படை” என்று அழைக்கப்பட்டனர். வெகு சீக்கிரமே நாஜி கட்சியினரின் உறுப்பினர்களின் எண்ணிக்கை மூவாயிரமாக உயர்ந்தது. கட்சியின் சின்னமாக ஸ்வஸ்திகா (SWASTIKA) வடிவமைக்கப்பட்டது. ஸ்வஸ்திகா என்ற சொல் சமஸ்கிருத வார்த்தை (SANSKRIT TERM). அதற்கு செழுமை (FERTILITY) என்று அர்த்தம். அந்த ஸ்வஸ்திகா கட்சி கொடியிலும், கட்சித் தோரணங்களிலும் அவர்கள் அணியும் ஷர்டின் (shirt) மார்பு பக்கம் அணியும் சின்ன மாகவும், கைகளில் அணியும் (ARMBAND) சின்னமாகவும் மாறியது.

 

நாஜி கட்சியும், அடால்ஃப் ஹிட் லரும், காவி சீருடையணிந்த புயல் படை ஆகியோரின் செயல்பாடுகள் எந்த அளவுக்கு யூத மக்கள் மீது பாய்ந்தது எந்த அளவுக்கான நாசத்தை உண்டுபண்ணியது என்பதையும் கவனிக்கலாம்.

 

யூதர்களுக்கு விரோதமான பகைமை உணர்வை உருவாக்குதல்

 

நாஜிக் கட்சியினர் முதற்கட்டமாக யூதமக்கள் மீது திட்டமிட்ட பகை உணர்வை உருவாக்கினார்கள். ஜெர்மானிய இன வாலிபர் முகாம்களை (YOUTH CAMPS) நடத்தி யூதர்கள் மீது பகைமை உணர்வை ஊட்டி வளர்த் தார்கள். தொடக்கப்பள்ளியிலுள்ள மாணவர்களின் பிஞ்சு உள்ளங்களில் யூத விரோதத்தை ஊட்டி ஒன்றுமறியாத உள்ளங்களை கல்லான இருதயமாக மாற்றினார்கள். அவர்களிடத்தில் நாய்க்குட்டிகளையும் பூனைக் குட்டிகளை யும் கொடுத்து அவைகளை சித்திரவதை செய்து மனச்சாட்சியில் எந்த பதட்டமுமின்றி “யூதன் செத்தான், யூதன் செத்தான்” என்று சத்தமிட்டு அவற்றைக் கொல்லுவதற்கு பயிற்சியளித்து யூதக்குழந்தைகளை கொல்லு வதற்கு ஆயத்தப்படுத்தினார்கள். காலப்போக்கில் ஜெர்மானிய இளைஞர்கள் கூட மனச்சாட்சியில் சூடுண்டு உணர்வற்றவர்களாகி யூதக் குழந்தைகளை எரியும் அடுப்பில் போடும் அளவுக்கு காட்டு மிராண்டித்தனத்தை உண்டாக் கினார்கள். அவர்கள் இருதயம் கல்லாயிற்று. சுருக்கமாகச் சொன்னால் அவர்கள் கற்றறிந்த காட்டுமிராண்டிகளானார்கள் (EDUCATED BARBARIANS).

 

அடிக்கடி பொதுக்கூட்டங்களையும், ஆங்காங்கே தெருமுனைக் கூட்டங்களையும், ஊர்வலங்களையும் நடத்தி கொடிய, அற்பமான

வார்த்தைகளை யூதர்களுக்கு விரோதமாக எழுப்பி விரோதத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியது மாத்திரமல்ல முதல் உலகமகா யுத்தத்தின்போது

ஜெர்மானியர்களுக்கு ஏற்பட்ட தோல்விக்கும், அதன் விளைவாக ஜெர்மன் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கும், பொருளாதார நெருக்கடி களுக்கும், திடீரென்று ஏற்பட்டிருக்கும் பண வீக்கத்திற்கும் யூதர்களே

காரணம் என்று அவர்களைக் குற்றம்சாட்டி யூதப் பகைமை உணர்வை வளர்த்தார்கள்.

 

யூத விரோதப் போக்கை ஹிட்லரின் கட்சி மாத்திரமல்ல சில தீவிரவாத இயக்கங்களும் யூதர்களுக்கு விரோதமாகச் செயல்பட்டு அப்பாவி யூதர்களை கண்ட இடங்களிலும் தாக்க ஆரம்பித்தார்கள். இதன் விளைவாக ஹிட்லரின் கை இன்னும் ஓங்கிற்று. தனது யூத விரோதக்கொள்கைக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது என்று எண்ணி ஹிட்லர் பெருமிதம் கொண்டான். இதன் விளைவாக யூதமக்கள் உரிமையோடு வெளியே சென்று வர முடியாமல் பெரும் பீதியில் வாழ்ந்தனர்.

 

வால்தெர் ரெத்தனோவ் படுகொலை

 

வால்தெர் ரெத்தனோவ் (WALTHER RATHENAU) யூத இனத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு பெரும் வியாபாரி. சிறந்த கல்விமான். முதலாம் உலக யுத்தத்தின் போது ஜெர்மன் அரசின் வெளிஉறவு அமைச்சராக இருந்தார். இவர் உயர் ஸ்தானத்தில் இருந்தது யூத இன மக்களுக்கு நல்ல பக்க பலமாக இருந்தது. ஹிட்லரின் நாஜிக் கட்சியினர் இவர் மீது ஜெர்மானியர்களின் நலனுக்கு விரோதமாக செயல்படுகிறவர் என்று இவர் மீது விரோதப் போக்கை உருவாக்கினார்கள். அவர்கள் சொல்லுவதற்கு ஏதுவாக ஜெர்மன் அரசு ரஷ்ய அரசோடு ஒரு உடன்படிக்கை (TREATY) செய்தது. அதன்படி உலகப் போரின் போது ஜெர்மனுக்கு சொந்தமான சில இடங்களை ரஷ்ய அரசுக்கு விட்டுக்கொடுத்துவிட்டது. அந்த உடன்படிக்கைக்கு வால்தெர் ரெத்தனோவ் தான் காரணம் என்று பகைமை உணர்வைத் தூண்டினார்கள். நாஜிக் கட்சியினர் வெளிப்படையாகவே தெருக்கூட்டங்களில் “கடவுளாலும் நிராகரித்துத் தள்ளப்பட்ட அருவருக்கத்தக்க யூதனான வால்தெர் ரெத்தனோவை அழித்தொழியுங்கள்” (KNOCK OFF WALTHER RATHENAU, THE DIRTY GOD-DAMNED JEWISH SEED) என்ற முழக்கம் மேலோங்கிற்று. இந்த வார்த்தைகள் அவர்மீதான பகைமையுணர்வு உச்சகட்டத்தை அடைந்தது. அதன் விளைவாக 24.6.1922 அன்று அவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

 

24.6.1922 காலை அவர் தன் காரை ஓட்டிக்கொண்டு தன் வெளி உறவு அமைச்சகத்திற்குச் சென்று கொண்டிருக்கும்போது பின் தொடர்ந்து வந்த மெர்ச்சீட்ஸ் கார் அவர் சென்ற காருக்கு முன்பாகச் செல்ல முயற்சித்தது. மெர்ச்சீட்ஸ் பக்க வாட்டில் வந்ததும் பின் சீட்டில் அமர்ந்திருந்த எர்வின் கெம் (ERWIN KEM) MP.18 என்ற சப்மிஷின் துப்பாக்கியால் ரெத்தனோவை நோக்கி மிக நெருங்கிய தூரத்தில் மாறிமாறி சுட்டான். ரெத்தனோவ் உடனே மரண மடைந்தார். பின் சீட்டில் எர்வின் கெம்மோடு அமர்ந்திருந்த ஹெர்மான் பிஷ்செர் (HERMANN FISCHER) அந்த காருக்குள் ஒரு கிரிளேடை வீசினான். காரை ஓட்டிய எர்னஸ்ட் டெக் கொவ் (ERNST TECHOW) சாமர்த்தியமாக காரை ஓட்டித் தப்பிவிட்டனர். இவர்கள் மூன்று பேர் தவிரவும் இக்கொலையைச் செய்ய சதித்திட்டம் தீட்டிய 7 பேர் இருந்தனர். அதில் சிலர் பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தீவிர தேசியவாதிகள் (ULTRA- NATION-ALISTS) என்ற ஆர்கனைசேஷன் கான்சல் (OC – ORGANISATION CONSUL) என்ற இரகசிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். ஜுலை 17ம் நாள் கொலையாளிகள் எர்வின் கெம்மும், ஹெர்மான் பிஷ்செரும் ஒன்றாக ஒரு இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டனர். அந்த வேளையில் இரண்டு துப்பறியும் காவலர்கள் (DETECTIVE POLICE) மட்டுமே இருந்தனர். கூடுதல் காவலர்கள் வருவதற்குள்ளாகவே ஒரு காவலர் கெம்மை தலையில் குண்டு பாய சுட்டு வீழ்த்திவிட்டார். ஹெர்மான் பிஷ்செர் தன்னையே சுட்டுக் கொண்டு மரணமடைந்தான். வால்தெர் ரெத்தனோவை கொலை செய்வதின் மூலம் ஜெர்மனியில் ஒரு புரட்சி வெடிக்கும் அப்பொழுது ஆர்கனைசேஷன் காண்செல் என்ற இரகசிய தீவிரவாத தேசியவாதிகள் ஆட்சியைப் பிடித்து சர்வாதிகார ஆட்சியை நிறுவலாம் என திட்டமிட்டிருந்தனர். ஆனால் அது செயல்படாமல் போயிற்று.

 

வால்தெர் ரெத்தினோவ் கொலை செய்யப்பட்டதைக் குறித்து ஹிட்லர் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திப் பொதுக்கூட்டத்தில் பேசினார். ஆகவே அவனை நீதிமன்றம் நான்குவார சிறைத்தண்டனை வழங்கியது. 1922 ஜூலை 28ம் நாள் சிறையிலிருந்து வெளியே வந்ததும் யூதர்களுக்கு விரோதமாக மிகவும் ஆக்ரோசமாக செயல்பட ஆரம்பித்தான். “நம்முடைய பயங்கர எதிரியாகிய யூதர்களுக்கு எதிராக நிற்க எங்களோடு நில்லுங்கள். எப்பொழுதும் எல்லா வேளையிலும் எங்களோடு நில்லுங்கள்” என்று ஹிட்லர் அறைகூவல் விடுத்தான். 1923ம் ஆண்டு நூரம் பெர்க்கில் நாஜிக் கட்சியை சேர்ந்த ஜுலியஸ் ஸ்டெய்செர் (JULIUS STREICHER) யூதர்களுக்கு விரோதமாக டெர்ஸ்டர்மர் (DERSTURMER) என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தான். அப்பத்திரிக்கையில் தலைப்பு வாசகமே “யூதர்கள் நம்முடைய துர்அதிர்ஷ்டம்” (THE JEWS ARE OUR MISFORTUNE) என்பதுதான். யூதர்களை ஒரு தீய சக்தியாகவே சித்தரித்தனர். (PORTRAYED JEWS AS AN EVIL FORCE) பகைமை உணர்வை ஊக்குவித்தனர்.

 

ஹிட்லர் கைது செய்யப்படல்

 

1923 நவம்பர் 9ம் நாள் முனிச் நகரில் பெரும்புரட்சியை உருவாக்கி ஜெர்மனின் ஆட்சியைக் கைப்பற்றி தேசியக்குடியரசு (NATIONAL REPUBLIC) என்று பிரகடனப்படுத்த திட்டமிட்டு நாஜிக்கட்சி செயல்பட்டது. ஆனால் அது வெற்றியடையாத நிலையில் ஹிட்லர் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசதுரோக குற்றச்சாட்டை வனைந்து 1924 ஏப்.1ம் நாள் 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அவர் சிறையிலிருந்த காலத்தில் தான் கடந்து வந்த வாழ்க்கைப் பாதையையும் தன்னுடைய எண்ணங்களையும் எழுதி “என்னுடைய போராட்டம்” என்று தலைப்பிட்டு (MEIN KAMOF = MY STRUGGLE) புத்தக வடிவாக்கினார். எட்டுமாதம் கழித்து ஹிட்லர் பரோலில் விடுதலை செய்யப்பட்டார். தான் ஆக்கிய “என்னுடைய போராட்டம்” என்ற புத்தகத்தின் முதல் பாகத்தை 1925 ஜூலை 18ம் தேதி வெளியிட்டார். அப்புத்தகம் முற்றிலும் யூத மக்களுக்கு விரோதமாக விஷத்தைக் கக்குவதாக இருந்தது. மார்க் சிசமும் ஜுடாயிசம் இவ்விரண்டும் ஜெர்மானியர்களுக்கு விரோதமான வல்லமைகள் என்றும் அவ்வல்லமைகள் அரசியலுக்குள் புகுந்து ஐரோப்பா முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திட்டமிட்டு செயல் படுகின்றன என்றும் யூத இனம் அழிக்கப்படவேண்டும் என்ற மையக் கருத்தில் அப்புத்தகத்தை ஆக்கியிருந்தார். ஜெர்மனியில் இந்த இனம் அழிக்கப்படாத வரை ஜெர்மனி ஒரு மிகப்பெரிய தேசமாகத் தலைதூக்கவே முடியாது என்ற கருத்தையும் வலியுறுத்தி முடித்திருந்தார்.

 

நாஜிக் கட்சியின் வளர்ச்சி

 

இப்புத்தகம் மிக வேகமாக விற்பனை ஆயிற்று. ஜெர்மனியில் ஹிட்லரின் கருத்து வேரூன்றிற்று. இதற்கிடையில் 1926 மே 25ம் நாள், உக்ரெனியன் தேசிய தலைவரான சைமன் பெட்லூராவின் (SIMON (PETLURA) கோஷ்டியினர் 1919 பெப்ர வரியில் 60,000 யூதர்களை உக்ரெய்ன் நாட்டில் கொன்று குவித்ததின் எதி ரொலியாக பாரிஸ் நகரில் இருந்த சைமன் பெட்லூராவை 6 ஆண்டு களுக்குப் பின்னர் பட்டப்பகலில் ஷாலோம் ஸ்கெவார்ஸ்பாட் (SHALOM SCHW-ARZBARD) என்ற யூதன் கொலை

 

செய்தான். “என்னுடைய அப்பாவி யூத மக்களுக்காக நான் செய்ய வேண்டிய கடமையைச் செய்கிறேன். யூதர்களின் இரத்தத்தைச் சிந்தியமைக்கு காரணமாயிருந்தவரை நான் பழிவாங்கப் போகிறேன் ”என்று கொலை சம்பவத்திற்கு சிலமணி நேரங்களுக்கு முன் தன் மனைவிக்குக் கடிதம் எழுதியுள்ளான். ஷாலோம் ஸ்கொவார்ஸ்பாட்டுடைய பெற்றோரும் 14 மிக நெருங்கிய உறவினர்களும் சைமன் பெட்லூராவின் யூதர்களுக்கு விரோத மான நடவடிக்கையில் கொல்லப்பட்ட 60,000 யூதர்களுள் அவர்களும் கொல்லப்பட்டார்கள். இதுவே அவனது பழிவாங்கும் உணர்வை மேலோங்கச் செய்துவிட்டது. சைமன் பெட்லூராவின் கொலையின் எதிரொலி ஜெர்மனி யில் அதிகமாக இருந்தது. ஹிட்லரின் நாஜிக் கட்சியினர் ஜெர்மானிய இளைஞர்களை ஒன்றுபடுத்த சரியான வாய்ப்பாக பயன் படுத்திக்கொண்டனர். 1926 டிச.10ம் நாள் அப்புத்தகத்தின் இரண்டாவது பாகம் வெயிடப்பட்டது. அதிலும் யூத பகைமை உணர்வே மேலோங்கி நின்றது. நாஜிக் கட்சியின் வளர்ச்சி வேகமடைந்தது. 1926ல் 17,000ஆக இருந்த உறுப்பினர் பட்டியல் 1927ல் 40,000ஆக உயர்ந்தது. 1928 மே மாதம் நடந்த ஜெர்மானிய தேசிய 4 தேர்தலில் ஹிட்லரின் நாஜிக்கட்சி போட்டியிட்டு 12 இடங்களையும் பிடித்தது. இந்நிலை நாஜிக்கட்சியினருக்கு பெரும் உந்துதலாக மாறிற்று. 1926 ஜூலை 4ம் தேதி “இளம் நாஜிஸ்” (YOUNG NAZIS) என்ற பெயரில் ஹிட்லர் இளைஞர் படை ஒன்றை திரட்டினார். அதோடு கருஞ்சட்டை அணிந்த பாதுகாப்புப் படை (PROTECTION SQUAD) ஒன்றை உருவாக்கினார்.

 

ஜெர்மனியின் பராளுமன்றத்தில் (REICHSTAG) 12 இடங்களைப் பிடித்து ஹிட்லரின் நாஜிக்கட்சிக்கு அனுகூலமான சூழ்நிலைகள் உருவாயின. எதிர் பாராத அளவுக்கு வேலையில்லாத திண்டாட்டம் பெருகியது. ஆளும் கட்சிக்கு ஆதரவாகயிருந்த கம்யூனிஸ்ட்கட்சி தொடர்ந்து ஆதரவளிக்கத் தயங்கியது. வேலையில்லாத திண்டாட்டம் நாளுக்கு நாள் பெருகிற்று. தொழிற்சாலைகளிலும் வியாபார ஸ்தலங்களிலும் மந்தநிலை ஏற்பட்டது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. நாஜிக் கட்சியினர் இந்த சூழ்நிலையை யும் பயன்படுத்தி யூதர்கள் வைத்திருக்கும் சொத்துக்களை வெளிப்படையாக வெகுவாய்க் கண்டிக்கத் தொடங்கினார்கள். ஜெர்மனி சந்தித்துக் கொண் டிருக்கும் பொருளாதார நெருக்கடி யூதர்களின் சதித்திட்டமே அன்றி வேறில்லை என திட்டவட்டமாக பிரகடனப்படுத்த ஆரம்பித்தார்கள். இதைத் தொடர்ந்து 1930 ஜனவரி முதல் நாள் பெர்லினில் காவிச் சீருடைய அணிந்த புயல் படையினர் எட்டு யூதர்களைப் பட்ட பகலில் எந்தவித காரணமின்றித் தாக்கிக் கொலை செய்தனர். அதைத் தொடர்ந்து ஹோட்டல்கள், தியேட்டர்கள், யூத ஜெப ஆலயங்களுக்கு செல்வோரை மானபங்கம் படுத்துவதும், கொல்வதுமாக நடந்துகொண்டனர்.

 

1930 செப்டம்பர் மாத பொதுத் தேர்தலின்போது நாஜிக்கட்சியின் புயல் படையினர் யூதர்களையும், அரசுக்கு ஆதரவாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியினரையும், அரசியல் எதிராளிகளையும் மிரட்ட ஆரம்பித்தனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது மிரட்டியது மாத்திரமல்ல 78 யூதர்களைத் தாக்கிப் படுகாயப்படுத்தினார்கள். செப்.14ம் தேதி நடந்த தேர்தல் 12 உறுப்பினர்களைப் பெற்றிருந்த நாஜிக்கட்சி 107 இடத்தைக் கைப்பற்றியது. அதன் விளைவு ஜெர்மனியின் இரண்டாவது பெரிய கட்சியாக மாறியது. புதிய பாராளுமன்றத்தின் தொடக்க நாளில் பெர்லின் நகரில் அநேக யூதர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர். யூதர்கள் நடத்திய டெப்பார்ட்மென்டல் ஸ்டோர்கள் அடித்து நொறுக்கி நாசம் செய்யப்பட்டன. யூதர்களில் முக்கிய மானவர்களின் வீடுகள் தகர்க்கப்பட்டன. நாஜிக் கட்சியினர் பாராளு மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும், கட்சியில் முக்கிய மானவர்களும் பாராளுமன்றத்திற்குள் நுழையும்போதே அவர்கள் கட்சி கோஷமாகிய “ஜெர்மனியே விழித்தெழு, யூதர்களை ஒழித்துக்கட்டு” {GERMANY AWAKE, DEATH TO JEWS) என்று முழங்கிக்கொண்டே உள்ளே சென்றனர்.

 

இதன் pdf file உங்களுக்கு தேவை என்றால் தயவு செய்து 25 வினாடிகள் காத்திருக்கவும் Download Timer Countdown முடிந்தவுடன் Download Button தெரியும்.

You have to wait 25 seconds.

Download Timer

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *