இராஜாக்களின் முதலாம் புத்தகம்
“
இராஜாக்களின் புத்தகம்” என்று பெயர் பெற காரணம்
1ம், 2ம் இராஜாக்களின் புத்தகங்கள் ஆரம்பத்தில் எழுதப்பட்டபோது ஒரே புத்தகமாகவே இருந்தது.
எபிரேய வேதாகமத்தில் சாமுவேலின் புத்தகம் நிறுத்திய இடத்திலிருந்து இராஜாக்களின் புத்தகம் சம்பவங்களை விபரிக்கிறது.
கிரேக்க மொழிபெயர்ப்பான Septuagint இதை இரண்டு புத்தகங்களாளக பிரித்தது. ஜெரோம் அவர்களால் இலத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட Vulgate என்று அழைக்கப்படும் வேதாகமத்தில் இந்தப் புத்தகத்திற்கு இராஜாக்கள் என்று பெயரிட்டார். அதை தழுவி ஆங்கில மொழிபெயர்ப்பில் “Kings” என்று அழைக்கப்பட்டதை தமிழில் இராஜாக்களின் புத்தகம் என்று அழைக்கின்றோம்.
ஆக்கியோனும் தகவல்களும்
1ம், 2ம் இராஜாக்களின் புத்தகங்கள் யாரால் எழுதப்பட்டவை என்று அறியப்படவில்லை. எஸ்றா, எசேக்கியேல், எரேமியா ஆகியவர்களில் ஒருவர் இதை எழுதியிருக்கலாம் என்று சில வேத விளக்கவுரையாளர்கள் கருதுகிறார்கள்.
400 ஆண்டுகளுக்கு மேலான கால வரலாற்றை உள்ளடக்கியிருப்பதால் இதை தொகுப்பதற்கு பல்வேறு மூல ஆவணங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அதிகாரங்கள் 22
வசனங்கள் 816
வரலாற்றில் இந்த புத்தகத்தின் இடம்
1 இராஜாக்களின் புத்தகம் 120 ஆண்டுகால சம்பவங்களை சொல்லுகிறது. 2 சாமுவேலின் புத்தகம் ராஜாவாகிய சவுல் மரணத்தோடு ஆரம்பிக்கிறது.
1 இராஜாக்களின் புத்தகம் ராஜாவாகிய தாவீது மரணத்தோடு ஆரம்பிக்கிறது.
சவுல் யுத்தக்களத்தில் தற்கொலை செய்துகொண்டு இறந்தான்.
ஆனால் தாவீதோ தனது படுக்கையில் மரித்து எருசலேமில் அடக்கம் செய்யப்பட்டான்.
1 இராஜாக்களின் புத்தகம் சாலொமோனின் ஆளுகையில் ஆரம்பித்து (கிமு 971) அகாசியாவின் ஆளுகை (கிமு 851) வரையுள்ள வரலாற்றை பதிவுசெய்துள்ளது.
இந்த காலப்பகுதியில் கிமு 931 முக்கிய இடத்தை பெறுகிறது. இந்த ஆண்டிலேதான் தாவீது, சாலொமோன் காலத்தில்ஐக்கியமாய் இருந்த இராஜ்யம் இரண்டு இராஜ்யங்களாக பிளவுபட்டது.
இஸ்ரவேலாகிய வடக்கு இராஜ்யம் 10 கோத்திரங்கள்
யூதாவாகிய தெற்கு இராஜ்யம் 2 கோத்திரங்கன்
பொதுவான பார்வை
I.தாவீதின் மரணம் அதிகாரங்கள் 1-2
A.அதோனியாவின் திட்டத்தின் தோல்வியும், சாலொமோன் ராஜாவாகுதலும் அதி 1
B.சாலொமோனுக்கு தாவீதின் ஆலோசனையும், தாவீதின் மரணமும், தலைமைத்துவ மாற்றமும் அதி 2
II.சாலொமோனின் அரசாட்சியின் மேன்மை அதி 3-11
A.ஞானத்திற்காக சாலொமோன் ஜெபித்தல் அதி 3-4
B. ஆலயத்தை கட்டுதல் அதி 5-8
C.சாலொமோனின் புகழ் அதி 9-10
D. சாலொமோனின் வீழ்ச்சியும், மரணமும் அதி 11
III. இஸ்ரவேல், யூதா என்று இரண்டு இராஜ்யங்களாக பிரிதல் அதி 12-15
IV. எலியாவின் வருகையும் ஆகாப் ராஜாவுடனான முரண்பாடும் அதி 16-21
V.ஆகாப் ராஜாவின் மரணம் அதி 22
இஸ்ரவேல், யூதா என்னும் இரண்டு இராஜ்யங்கள்
பென்யமீன் கோத்திரத்தை சேர்ந்த சவுலை, சாமுவேல் முதலாவது இராஜாவாக அபிஷேகித்தல்.12 கோத்திரத்தார் இணைந்து இஸ்ரவேல், யூதா என்னும் ஐக்கிய இராஜ்யத்தை உருவாக்குதல்.
சவுலின் ஆட்சி இடைநிறுத்தப்பட்டு அவனது ஆளுகை இன்னொரு ராஜவம்சத்திற்கு கொடுக்கப்படுதல்.
யூதா கோத்திரத்தானான தாவீது தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு சாமுவேலால் அபிஷேகிக்கப்படுதல்.
சவுலும் அவனது 3 குமாரர்களும் மரித்துப்போன பின் மீதியிருந்த குமாரனான இஸ்போசேத் 11.கோத்திரத்தாரை ஆளுகை செய்தான்.
தாவீது யூதா கோத்திரத்திற்கு ராஜாவானான்.
இஸ்போசேத் கொல்லப்படுவதற்கு முன் இரண்டு ஆண்டுகள் மாத்திரமே ஆட்சி செய்தான்.
இஸ்போசேத்தின் மரணத்திற்கு பின்பு தாவீது இஸ்ரவேலின் 12 கோத்திரங்கள் இணைந்த ஐக்கிய இராஜ்யத்தின் ராஜாவானான்.
ஐக்கிய இராஜ்யத்தின் ராஜாவானான்.
தாவீதின் குமாரனான சாலொமோன் தாவீதிற்கு பின்பு பதவிக்கு வந்து ஐக்கிய இராஜ்யத்தை 40 ஆண்டுகள் ஆண்டான்.
சாலொமோனின் குமாரனான ரெகொபெயாமின் நாட் ரில் இராஜ்யம் இரண்டாய் பிளவுபட்டது.
10 கோத்திரங்களுடன் சீகேம், சமாரியா பட்டணங்களை உள்ளடக்கிய இஸ்ரவேலாகிய வடக்கு இராஜ்யமாகவும், 2 கோத்திரங்களுடன் எருசலேமை தலைநகராகக்கொண்டு யூதாவாகிய தெற்கு இராஜ்யமாகவும் பிளவுபட்டது.
இஸ்ரவேலாகிய வடக்கு இராஜ்யம் 19 ராஜாக்களாலும், யூதாவாகிய தெற்கு இராஜ்யம் 19 ராஜாக்களாலும் 1 ராணியாலும் ஆளப்பட்டது.
இஸ்ரவேலாகிய வடக்கு இராஜ்யம் 5 வெவ்வேறு ராஜவம்சங்களாலும், யூதாவாகிய தெற்கு இராஜ்யம் தாவீதின் வழிவந்த ஒரே ராஜவம்சத்தாலும் ஆளப்பட்டது.
இஸ்ரவேல், யூதா இராஜ்யங்களின் ராஜாக்களில் அதிகமானவர்கள் கர்த்தருக்கு தொடர்ந்து கீழ்ப்படியாதவர்களாகி விக்கிரக வழிபாடுகளுக்குள் விழுந்தார்கள்.
இஸ்ரவேலாகிய வடக்கு இராஜ்யம் (இது இஸ்ரவேல் அல்லது சமாரியா அல்லது எப்ராயீம் என்றும் அழைக்கப்படும்) அசீரிய பேரரசினால் கிமு 731ல் கைப்பற்றபட்டது.
யூதாவாகிய தெற்கு இராஜ்யம் (இது யூதா என்றும் அழைக்கப்படும்) பாபிலோனிய பேரரசினால் கிமு 731ல் கைப்பற்றப்பட்டது.
ராஜாவாகிய சாலொமோனின் வீழ்ச்சி
1. அளவுக்கதிகமான பெருக்கம்
பொன்னும், வெள்ளியும்: சாலொமோன் பொன்னையும், வெள்ளியையும் திரளாக சேர்த்தான் (10:14-21,27)
ஆயிரக்கணக்கான குதிரைகள்: சாலொமோன் எகிப்திலிருந்து திரளாக குதிரைகளை வாங்கிச் சேர்த்தான் (10:26,28-29) ஆயிரம் மனைவிகள்: சாலொமோன் வேறுதேசத்து ராஜாக்களின் குமாரத்திகள் 700 பேரை திருமணம் செய்திருந்தான். அவனுக்கு 300 மறுமனையாட்டிகளும் இருந்தார்கள் (11:1-3)
தேவன் மோசேயைக் கொண்டு நியாயப்பிரமாணத்தை கொடுத்தபோது எதிர்காலத்தில் உருவாகும் தேசம் தனக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கேட்பார்கள் என்பதை அறிந்திருந்தார். ஆகவே ராஜாக்களுக்கான கட்டளைகளையும் தேவன் கொடுத்திருந்தார்
உபா 17:14-20
1. “அவன் அநேக குதிரைகளைச் சம்பாதியாமலும், அநேக குதிரைகளைச் தனக்குச் சம்பாதிக்கும்படிக்கு ஜனங்களைத் திரும்ப எகிப்திற்குப் போகப்பண்ணாமலும் இருக்கக்கடவன்”
2. “அவன் இருதயம் பின்வாங்கிப் போகாதபடி அவன் அநேகம் ஸ்திரீகளைப் படைக்கவேண்டாம்;”
3. “வெள்ளியும் பொன்னும் தனக்கு மிகுதியாய்ப் பெருகப்பண்ணவும் வேண்டாம்”.
4. “அவன் தன் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது…. அவன் இருதயம் பின்வாங்கிப் போகாதபடி…..இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும், இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு. இவைகளின்படி செய்வதற்காகத் தன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்ளும்பொருட்டு…. நியாயப்பிரமாண நூலைப்பார்த்து தனக்காக ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில் வைத்துக்கொண்டு. தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை வாசிக்கக்கடவன்”
நீதிமொழிகள் :30:7-9
7. இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன்; நான் மரிக்கும்பரியந்தமும் அவைகளை எனக்கு மறுக்காமல் தாரும். 8. மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக.9. நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும். என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்.
2. தாராளவாத இறையியல்
சாலொமோன் தேவனுடைய ஆலயத்தை கட்டினான் 1இரா 6:1-14
சாலொமோன் அஸ்தரோத்திற்கும், மில்கோமிற்கும், காமோசுக்கும் மேடைகளை கட்டினான் 1இரா 11:5,7
சாலொமோன் தனது காலத்திய பாரம்பரிய அறிவைக் காட்டிலும் அதிக அறிவுடைய வனாயிருந்து, தாராளவாத கருத்தியல் சிந்தனை கொண்டவனாக தனது நம்பிக்கைகளில் சமரசம் செய்துகொண்டான்.
அவனது தகப்பனாகிய தாவீது தேவனைவிட்டு பின்வாங்கிப்போய் விசுவாசத்துரோகம் செய்வதை குறித்த எற்கனவே எச்சரித்திருந்தான்.
நீ என்ன செய்தாலும், நீ எங்கே போனாலும், எல்லாவற்றிலும் புத்திமானாயிருக்கிறதற்கும். கர்த்தர் என்னைக்குறித்து: உன் பிள்ளைகள் தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் எனக்கு முன்பாக உண்மையாய் நடக்கும்படிக்குத் தங்கள் வழியைக் காத்துக்கொண்டால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கத்தக்க புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்ன வார்த்தையைத் திடப்படுத்துகிறதற்கும், மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி, நீ உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள, அவர் வழிகளில் நடக்கும்படிக்கு அவருடைய காவலைக் காப்பாயாக. (1இரா 2:3-4)
மோசம்போகாதிருங்கள்: ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும். 1கொரி 15:33 அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? 2 கொரி 6:14
*ஆகையால் கர்த்தர் சாலொமோனை நோக்கி: நான் உனக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையையும் என் கட்டளைகளையும் நீ கைக்கொள்ளாமற்போய் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், ராஜ்யபாரத்தை உன்னிடத்திலிருந்து பிடுங்கி. அதை உன் ஊழியக்காரனுக்குக் கொடுப்பேன். (1இரா 11:11)
3. அதிகார துஷ்பிரயோகம்
ஆடம்பரத்தில் பார்வோன்களைப்போல நடந்துகொண்டுதமல்லாமல் பார்வோன்களைப் போலவே மனிதர்களின் பாடுகளை அவன் கண்டுகொள்ளவில்லை. திரளான எண்ணிக்கையில் ஜனங்களை மரங்களை வெட்ட காட்டிற்கு அனுப்பியதோடு. குவாரிகளில் இருந்து கற்களை வெட்டியெடுக்கும் கடின பணிக்கும் அனுப்பினான்.
இஸ்ரவேலரும் கடின வேலைக்கு பலவந்தப்படுத்தபட்டார்கள்.
சாலொமோன் ஆலயத்தை கட்டினாலும் அது அவனுக்கு பெரிய செலவை உண்டுபண்ணவில்லை. ஆலயத்தை கட்டகூடாதபடி விலக்கப்பட்ட தாவீது ஆலயக் கட்டுமானத்திற்கான பொருட்களை பெருமளவில் ஏற்கனவே சேகரித்து வைத்திருந்ததோடு அதற்கான வேலையாட்களையும் தயார் செய்திருந்தான். (1நாளா 22:24)
ஆலயத்தை கட்டுதல் அதி 5-8
20,000 இஸ்ரவேலர்கள் 150.000 கானானியர்கள் 550 மேற்பார்வையாளர்கள்
3500 உதவியாளர்கள்
இரண்டாவது அரண்மனையை கட்டியதுதான் பிரச்சினைக்கான மூலகாரணமாய் அமைந்தது.
சாலொமோன் தனது தகப்பனின் வீட்டில் வாழுவது போதும் என்று இராமல் தனது 700 மனைவிகளுக்காகவும் 300 மறுமனையாட்டிகளுக்காகவும் மிகப் பிரமாண்டமான அரண்மனையை கட்டுவித்தான் (1இரா 7:1-11)
சாலொமோன் கட்டிய வேறு கட்டுமானங்கள் (அதி 7)
அவனது சொந்த அரண்மனை (7:1)
லீபனோன் வனம் என்னும் மாளிகை (7:2) • பார்வோனின் குமாரத்திக்கான மாளிகை (7:8)
தேவாலய வாசல் மண்டபத்தின் தூண்கள் (7:21)
ஆலயத்திற்காக வெண்கலக் கடல் என்னும் தொட்டி (7:23)
• பத்து வெண்கலக் கொப்பரைகள் (7:38)
ஆலயத்துக்குத் தேவையான பணிமுட்டுகள் (7:48,49)
ஒரு ஒப்பீடு அவனுக்கான அரண்மனையைக் கட்டுவதற்கு எடுத்துக்கொண்ட காலம் 13 ஆண்டுகள். ஆனால் ஆலயத்தை கட்ட எடுத்துக்கொண்ட காலம் 7 ஆண்டுகள் மட்டுமே
பார்வோன் தனது குமாரத்திக்கு கொடுத்த வரதட்சணை (9:15-17)
* அவனது மனமகிழ்ச்சிக்காக ஜனங்களை ஒடுக்கினான்.
* அவனது அடங்காத ஆசை அவனது வீழ்ச்சிக்கு வழிகோலியதுமல்லாமல் அவனைத் தொடர்ந்து வந்த சந்ததியையும் பாதித்தது.
இறுதியில் இராஜ்யம் இரண்டாக பிளவுபட்டுப்போக வழிவகுத்தது.
ஓவ்வொரு அதிகாரத்திற்குமான சுருக்க விளக்கம்
அதிகாரம் 1:
தாவீது வயது முதிர்ந்தவனாகி பலவீனப்பட்டு படுக்கை கிடையானான். அதோனியா என்னும் அவனது குமாரன் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசாட்சிக்கு வர முயன்றான். நாத்தானும், பச்சேபாளும் கொடுத்த அழுத்தத்தின் நிமித்தமாய் தாவிது சாலொமோனை ராஜாவாக்கினான்.
அதிகாரம் 2;
தாவீது சாலொமோனுக்கு கொடுத்த கட்டளைகள் (வச2,3) சாலோமோனைக் குறித்த அவனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது. அரண்மனையின் சுகபோகங்களிலும் ஆடம்பரங்களிலும், சொகுசுகளிலும் வளர்க்கப்பட்ட ஒருவனை தனது வாரிசாக நியமிப்பதற்கு தாவீதிற்கு இருந்த தயக்கத்தை வெளிப்படுத்துகிறது. தாவீதின் மரணம் சோக நிகழ்வாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அதோனியாவின் சதித்திட்டம் பதசேபாளிடத்தில் அவன் பண்ணிய விண்ணப்பத்தில் வெளியானது. அதோனியா கொல்லப்பட்டான். அபியத்தர் ஆசாரிய பதவியிலிருந்து விலக்கப்பட்டான். யோவாப் தப்பியோடியபோதும் பிடிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டான். ஒரு சாலொமோன் பெனாயாவை படைத்தலைவனாக்கி சாதோக்கை ஆசாரியனாக்கினான். தாவீதை தூஷித்த சவுலின் வீட்டானாகிய சிமேயி கொல்லப்பட்டான்.
அதிகாரம் 3
சாலொமோன் பார்வோனின் குமாரத்தியை திருமணம் செய்தான். ஆனால் இந்த காலகட்டத்தில் அவன் தேவனை நேசித்தான் (வச3). அவன் சமரசபோக்கை கடைப்பித்ததை இந்த திருமணம் காண்பிக்கிறதோடு தேசத்திலிரந்த விக்கிரகங்களையும் அவன் அகற்ற தவறினான். சாலொமோன் ஞானத்திற்காக வேண்டுதல் செய்தான். அவனது வேண்டுதலி அரசியல் ஞானத்திற்காக இருந்ததேயன்றி ஆவிக்குரிய பகுத்தறிவுக்காக இருக்கவில்லை.
அதிகாரம் 4:
சமாதானமும், செழிப்பும் வார்த்தைகளாக இல்லாமல் அனுபவங்களாயின (வச20, 25,26). சாலொமோன் சமாதானத்தின் அதிபதியாக இருந்தான். தாவீதோ யுத்தவீரனாக இருந்தான. சாலொமோனின் ஞானம் பிரசித்திபெற்றதாயிருந்தது. அவன் எந்தத் துறைகளில் விஷேசமானவனாக இருந்தான் என்பதை வச 32-34ல் காண்க.
அதிகாரம் 5.
சாலொமோன் ஆலயத்தை கட்ட தீருவின் ராஜாவான ஈராமின் உதவியை நாடினான். அவனது வேலையாட்கள் கட்டிடகலை நிபுணர்களாயிருந்தார்கள். அந்தப் பணிக்கு 30,000 இஸ்ரவேலர்கள் 150.000 கானானியர்கள் 550 மேற்பார்வையாளர்கள் 3500 உதவியாளர்கள் தேவைப்பட்டார்கள்.
அதிகாரம் 6:
சாலொமோன் ஆலய கட்டுமானபணியை ஆரம்பித்தல். வனாந்திர ஆசாரிப்புக்கூடார வடிவமைப்பில் கட்டப்பட்டாலும் அதன் அளவு அதைவிட இருமடங்காயிருந்தது. அது அலங்காரமானமாயும், விரிவானதாயும், பெரும் பொருட்செலவு உள்ளதாயும் இருந்தது. ஆலய கட்டுமானத்தின் வர்ணனை வச 7ல் குறிப்பிடப்படுகிறது. ஆலயத்தை கட்டிமுடிக்க 7 ஆண்டுகள் பிடித்தது (வச38). மையப் பகுதியில் அமைந்த ஆலயத்தை சுற்றிலும் பல கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. ஆலயத்தின் கட்டுமான பணிக்கு செலவான தொகையை இன்றைய அமெரிக்க டாலர்களில் கணக்கிட்டால் அது $2,450,000,000 முதல் $4,900,000,000 வரை.
அதிகாரம் 7:
சாலொமோன் வேறு கட்டுமான பணிகளையும் செய்தான். அவனது சொந்த அரண்மனையை 13 ஆண்டுகள் கட்டினான் (7:1), லீபனோன் வனம் என்னும் மாளிகை (7:2) பார்வோனின் குமாரத்திக்கான மாளிகை (7:8) தேவாலய வாசல் மண்டபத்தின் தூ ண்கள் (7:21) ஆலயத்திற்காக வெண்கலக் கடல் என்னும் தொட்டி (7:23) பத்து வெண்கலக் கொப்பரைகள் (7:38) ஆலயத்துக்குத் தேவையான ணிமுட்டுகள் (7:48,49) போன்றவற்றை செய்தான்.
அதிகாரம் 8:
தேவனுடைய பெட்டி மகாபரிசுத்த ஸ்தலத்துக்குள் கொண்டுவந்து வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதும் தேவனுடைய மகிமை ஆலயத்தை நிரப்பியது (வச10,11)
அதிகாரம் 9.
கர்த்தர் சாலொமோனுக்கு இரண்டாம் முறையாக தரிசனமானாகி (வச2) அவனை உற்சாகப்படுத்தினார். கர்த்தர் தாவீதைக் கொண்டு ஒரு உயர்ந்த மனித அளவுகோலை ஏற்படுத்தியிருந்தார். அந்த அளவுகோலைக்கொண்டே பின்பு வந்த ராஜாக்கள் அளவிடப்பட்டார்கள்(வச4). சாலொமோனின் கீர்த்தி உலகெங்கும் பரவியது. ஈராம் அளித்த பொருட்களுக்காக சலொமோன் கொடுத்த பட்டணங்கள் அவனுக்க திருப்தியளிக்கவில்லை,
அதிகாரம் 10:
சேபாவின் ராஜஸ்திரீயின் வருகை சாலொமோன் அன்றைய கால உலகிற்கு கர்த்தரை அறிவிப்பதில் வெற்றிபெற்றிருந்தான் என்பதை புலப்படுத்துகிறது (வச 24யும் பார்க்கவும்). சாலொமோனின் கீர்த்தி பரவியதால் ஜீவனுள்ள மெய்யான தேவனை தொழுதுகொள்ள ஜனங்கள் எருசலேமுக்கு வந்தார்கள் (வச1)
அதிகாரம் 11:
வேதத்தின் பக்கங்களில் சாலொமோன் மிகப்பெரிய தோல்வியாளனாக இருக்கிறான். எந்தகாலத்தில் வாழ்ந்த மனிதர்களை எடுத்துக்கொண்டாலும் அவனுக்கு கிடைத்த சந்தர்ப்பங்கள்போல எவருக்கும் வாய்த்திருக்கவில்லை. தவறான வழிபாடுகளை அகற்ற தவறுவதிலிருந்த அவனது விழுகை ஆரம்பமாகிறது (3:3). அவனது அந்தப்புரத்தில் ஆயிரம் பெண்கள் (1-3). கர்த்தர் அவன்மேல் கோபமானார் (வச9). தேவனுடைய நியாயத்தீர்ப்பின்படி இராஜ்யம் இரண்டாய் பிளவுபட இருந்தாலும் தாவீதின் நிமித்தமாக சாலொமோனின் காலத்தில் அதை தேவன் செய்யவில்லை (வச 12,13). சாலொமோனால் உயர்த்தப்பட்ட யெரொபெயாம் அகியா தீர்க்கதரிசியின் வார்த்தையின்படி வடக்கு இராஜ்யத்தின் பத்து கோத்திரத்தாருக்கு தலைமை ஏற்று ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்தான் (வச 29-31). சாலொமோன் இதை அறிந்து அவனை கொல்லுவதற்கு தேடியபோது அவன் எகிப்திற்கு சென்று சாலொமோன் மரணமடையும்வரை அங்கே யிருந்தான். சாலொமோன் 40 ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
அதிகாரம் 12:
சாலொமோனுக்கு பின்பு அவனது குமாரனாகிய ரெகொபெயாம் ஆட்சிக்கு வந்தான். யெரொபெயாம் எகிப்திலிருந்த திரும்பிவந்து பத்து கோத்திரத்தாருக்கு தலைமை ஏற்று வரியை குறைக்கும்படி கேட்டுக்கொண்டான். ரெகொபெயாம் தனது தகப்பனாகிய சாலொமோனின் ஆலோசனைக்காரர்களாயிருந்த முதியவர்களின் ஆலோசனையை தள்ளிவிட்டு தனது வயதைஒத்த இளவயதுள்ளவர்களின் ஆலோசனைக்கு செவிகொடுத்து வரியை குறைக்கும்படி கேட்டுக்கொண்ட பத்து கோத்திரத்தாரின் கோரிக்கையை உதாசீனப்படுத்தினதுமன்றி வரியை உயர்த்தப்போவதாகவும் அறிவித்தான்(வச10,11). அதனால் ரெகொபெயாம் பத்து கோத்திரத்தாருக்கு தலைமை ஏற்று கிளர்ச்சி செய்தான். 1இராஜாக்களின் புத்தகம் இராஜ்ய பிரிவினையின் காலத்தில எழுதப்பட்டது(வச19). ரெகொபெயாம் தேசத்தை அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் பிரித்தான். அவன் பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி. ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தான். வடக்கு இராஜ்யம் விக்கிரக ஆராதனைக்குள் விழுந்தது (வச 28-30)
அதிகாரம் 13:
தேவன் யெரொபெயாமுக்கு மனந்திரும்ப இன்னுமொரு சந்தர்ப்பம் வழங்கும்படி ஒரு தீர்க்கதரிசியை ஒரு எச்சரிப்போடும் ஒரு அடையாளத்தோடும் அனுப்பினார். யெரொபெயாம் அந்த நேரத்திற்கு மனந்திரும்பியதுபோல காணப்பட்டாலும் முடிவில் விசுவாசத்துரோகத்திற்குள் அமிழ்ந்து போனான்.
அதிகாரம் 14:
யெரொபெயாமின் மீதான தண்டனையை அகியா தீர்க்கதரிசி அறிவிப்பதோடு தாவீதின் அளவுகோலைக்கொண்டு அவன் அளவிடப்பட்டதையும் தெரிவிக்கிறார் (வச8). யூதாவின் ராஜாவான ரெகொபெயாம் ஜனத்தை விக்கிர வழிபாட்டின் பாவத்திற்கு இட்டுச் சென்றான். ஒரினச்சேர்க்கை அதிக அளவில் பெருகியிருந்தது (வச24). எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து அதைக் கைப்பற்றினான். அவன் நகரத்தை கொள்ளையிட்டு சாலொமோன் செய்வித்த பொன் பரிசைகளையும் எடுத்துக்கொண்டான். அவைகளுக்குப் பதிலாக ரெகொபெயாம் வெண்கலப் பரிசைகளைச் செய்வித்தான். இராஜ்யம் பிரிந்தது மாத்திரமல்லாமல் சீரழிவை நோக்கி பயணித்தது. சாலொமின் குமாரனாகிய ரெகொபெயாம் மரித்தான்.
அதிகாரம் 15:
ரெகொபெயாமின் குமாரனாகிய அபியாம் தனது தகப்பனுக்கு பின் ஆட்சிக்கு வந்தான். அவனது தகப்பனைப்போலவே எல்லாப் பாவங்களிலும் அவன் நடந்தான். இஸ்ரவேலிலும், யூதாவிலும் ராஜாக்களுக்கான அளவுகோல் தாவீது என்பது தொடர்ந்தது (வச5) (யெரொபெயாம் வடக்கு இராஜ்யத்தின் ராஜாக்களின் துன்மார்க்கத்திற்கு அளவீடாயிருந்தான்). அபியாம் நல்லதோ கெட்டதோ, சொல்லும் படியாக எதுவும் செய்திருக்கவில்லை. அவனது மரணம் சொல்லப்பட்டிருக்கிறது. தெற்க இராஜ்யமான யூதாவில் அபியாமிற்கு பின்பு ஆசா ராஜாவானான். ஆசா தாவிதோட ஒப்பிடப்படுகிறான் (வச11). தேசத்தின் முதலாவது மறுமலர்ச்சியை ஆசா ஏற்படுத்தினான். ஆசா சிரியாவின் ராஜாவான பெனாதாத்திற்கு லஞ்சம் கொடுத்து இஸ்ரவேல் மீது தொடர்ந்து யுத்தம் செய்ய வைத்தான். ஆசாவிற்கு பின் யோசபாத் யூதாவின் ராஜாவானான். யெரொபெயாமிற்குப் பின்பு அவனுடைய குமாரன் நாதாப் இஸ்ரவேலின் ராஜாவானான். அவன் பொல்லாப்பாதை செய்தான் (வச26). பாஷா அவனுக்கெதிராக சதிசெய்து, அவனைக் கொன்று ராஜாவானான் (வச27,28). பாஷாக்கும் ஆசாவுக்கும் இடையே யுத்தம் தொடர்ந்தது (வச32).
அதிகாரம் 16:
பாஷாவின் பொல்லாப்பான ஆட்சி 25 ஆண்டுகள் நீடித்தது. அவனுக்குப் பின் அவனது குமாரனாகிய ஏலா 2 ஆண்டுகள் ஆண்டான். சிமரி என்னும் ஏலாவின் படைத்தலைவன் அவன் குடித்து வெறித்திருகையில் அவனைக் கொன்றுபோட்டான், சிம்ரி பாஷாவின் குடும்பத்தின் ஆண்களையெல்லாம் கொன்றுபோட்டான். சிம்ரி எழு நாட்கள் மாத்திரமே ஆட்சிசெய்தான். உம்ரி என்னும் இஸ்ரவேலின் படைத்தலைவன் திமரியை முற்றிகையிட்டு அதை கைப்பற்றினான். சிம்ரி தான் இருந்த வீட்டை தீக்கொளுத்தி தற்கொலை செய்துகொண்டான். உமரியும். திப்னியும் நான்கு ஆண்டுகள் தெற்கு இராஜ்யத்த பிரித்துக்கொண்டு ஆண்டார்கள். உம்ரி சமாரியாவை தெற்கு இராஜ்யத்தின் தலைநகராக கட்டியெழுப்பினான். அவன் இஸரவேலைப் பாவம் செய்யப் பண்ணினான் (வச25). அவன் யெரொபெயாமின் சகல பொல்லாத வழியிலும் நடந்தான் (வச26). உமரியின் குமாரனாகிய ஆகாப் அவனுக்கு பின் ஆட்சிக்கு வந்தான் (வச28). அவன் தனது தகப்பனைப் பார்க்கிலும் பொல்லாப்பானவற்றை செய்து மிக மோசமான ராஜாவாக இருந்தான் (வச30). அவன் சீதோனியரின் ராஜாவும், பாகாலின் பிரதான ஆசாரியனுமாயிருந்த ஏத்பாகாலின் குமாரத்தி யேசபேலை விவாகம்பண்ணினான். ஆகாப் செய்ய நினைத்திராத துன்மார்க்கத்தையெல்லாம் யேசபேல் செய்தாள்.
அதிகாரம் 17:
ஆகாப், யேசபேலின் முற்றத்திற்கு வந்த எலியா தீர்க்கதரிசி தன்னுடைய வாக்கில்லாமல் இஸ்ரவேலில் மூன்று வருடங்களுக்கு மழை பெய்யாது என்று தைரியம் கொண்டு அறிவித்தான். அவனது வாக்கின்படியே மூன்று வருடங்கள் மழை பெய்யவில்லை. அந்த இடத்திலிருந்து வியத்தகுமுறையில் வெளியேறுகிறான். கேரீத் ஆற்றங்கரையில் அவன் இளைப்பாறிக்கொண்டிருக்கையில் அதன் தண்ணீரைக் குடித்தான். காகங்கள் அவனை போஷித்தன. கரீத் ஆற்றின் தண்ணீர் வற்றும்வரை அங்கேயிருந்தான்.
அதிகாரம் 18:
எலியா பாகால்களின் தீர்க்கதரிசிகளை சவாலுக்கு அழைத்தான் (வச21-24). 1 எலியாவிற்கு எதிர் நின்றவர்கள் 450 பாகால்களின் தீர்க்கதரிசிகள். பாகால்களின் தீர்க்கதரிசிகளை கொன்றபின் மத்தியதரைக்கடலில் இருந்து பெருமழை வருகிறதை அறிவித்தான்.
அதிகாரம் 19:
எலியா பாகால்களின் தீர்க்கதரிசிகளை கொன்றதை யேசபேலுக்கு ஆகாப் தெரிவித்தான். அவள் எலியாவை கொல்ல சபதம் செய்கிறாள். இதை எலியா அறிந்தபோது பெயர்செபாவுக்குப் போய், அங்கே தன் வேலைக்காரனை நிறுத்திவிட்டு வனாந்தரத்தில் பிரயாணம்போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரினான். அப்போது கர்த்தர் அவனைக் கடிந்துகொண்டு அவனுக்கு முன்பாக மகத்துவமான காட்சியை வெளிப்படுத்தினார்.
(1) பெருங்காற்று உண்டாயிற்று; ஆனாலும் அந்தக் காற்றிலே கர்த்தர் இருக்கவில்லை; (2) பூமி அதிர்ச்சி உண்டாயிற்று பூமி அதிர்ச்சியிலும் கர்த்தர் இருக்கவில்லை.
(3) அக்கினி உண்டாயிற்று; அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை;
அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லிய சத்தம் உண்டாயிற்று. இது எலியாவின் நிலைக்கு முற்றிலும் முரணான நிலை. ஆனால் அந்த அமர்ந்த மெல்லிய சத்த்தில் தேவன் இருந்தார். எலியா ஆபத்தான செயல்படும் இடத்திற்கு திரும்பினான். திரும்பும் வழியில் எலிசாவை அழைத்தான்.
அதிகாரம் 20:
தேவன் ஆகாபிற்கு இன்னுமொரு வாய்ப்பை வழங்கினார். சீரியர்கள் மீது வெற்றி கிட்டும் என்று கர்த்தருடைய தீர்க்கதரிசி வாக்குப்பண்ணுகிறான். கர்த்தர் வெற்றியை கொடுத்தார். அது ஒரு அசாதாரண வெற்றி. அந்த தீர்க்கதரிசி சீரியர்கள் மீண்டும் படையெடுத்து வருவார்கள் ஆனாலும் கர்த்தர் மீண்டும் வெற்றியை தருவார் என்றும் தெரிவித்தான். தேவன் சொன்னபடியே வெற்றியைக் கொடுத்தும் பெனாதாததை கொல்லாமல்விட்டு ஆகாப் தவறு செய்தான். ஆகாபின் மேல் தேவன் தனது தண்டனையை கூறினார் (வச42).
அதிகாரம் 21:
ஆகாப் நாபோத்தின் திராட்சைத்தோட்டத்தை வாங்க முயற்சித்தல். ஆனால் நாபோத் விற்க மறுக்கிறான். யேசபேல் திராட்சைத்தோட்டத்தை பெற்றுதருவதாக வாக்களிக்கிறாள். சதித்திட்டம் தீட்டி நாபோத் கொல்லப்பட்டான். ஆகாப் மகிழ்ச்சியுடன் திராட்சைத்தோட்டத்தை எடுத்துக்கொள் போனான். கர்த்தர் எலியாவை அனுப்பி அவனது கொடுஞ்செயலுக்கான தண்டனையை அறிவித்தான்(வச19). நாபோத் இறந்ததைபோலசே ஆகாபும் இறந்து நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்திலே ஆகாபின் இரத்தத்தையும் நாய்கள் நக்கும். ஆகாப் மனம்வருந்தினான். ஆனால் கர்த்தர் ஆகாபின் மேலும், யேசபேலின் மேலும் சொன்ன தண்டனையை தாமதித்தாரேயன்றி நிறைவேற்றாமல் விடவில்லை.
அதிகாரம் 22:
யோசபாத் ஆசாவுடன் கூட்டணி சேர்ந்து வித்தியாசமாக தோன்றினாலும் அவனது குமாரன் ஆகாப், யேசபேலின் குமாரத்தியை திருமணம் செய்திருந்தான் (2இரா 8:16-17), சீரியருக்கு எதிராக யோசபாத் யுத்தம் செய்வதற்கு முன் ஒரு தீர்க்கதரிசியிடம் விசாரிக்க வேண்டும் என்று சொன்னான் (வச 5,7). மிகாயா என்ற கர்த்தரின் தீர்க்கதரிசி அழைக்கப்பட்டான் (வச8,9). பாகாலின் தீர்க்கதரிசிகளோ ஆகாப் எதை கேட்க விரும்பினானோ அதை அவனுக்குச் சொல்லியிருந்தார்கள். மிகாயா ஆரம்பத்தில் கிண்டலும், கேலியுமாக ஆரம்பித்து (வச15) அபத்தமான ஒரு உவமையை சொன்னான். தேவன் எந்த சிருஷ்டியிடமாவது ஆலோசனை கேட்பதை கற்பனை செய்து பாருங்கள். இது பாகாலின் தீர்க்கதரிசிகள் பொய்யர்கள் என்பதை ஒரு நுட்பமான விதத்தில் தெரிவிப்பது. ஆகாப் மிகாயாவை யுத்தம் முடிந்து ஆவன் வரும்வரையில் சிறையிலடைக்க உத்தரவிட்டான். மிகாயா இறுதியாய் சொன்னது என்னவென்றால் ஆகாப் உயிரோடு திரும்புவதில்லை (வச28). ஆகாப் யுத்தத்தில் தப்பிக்க ஒரு தந்திரத்தை செய்தான். ஒரு சாதாரண போர்வீரனின் உடையை அணிந்துகொண்டு யுத்ததத்தில் பிரவேசித்தான். யோசபாத்தோ ராஜஉடையோடு யுத்தத்தில் பிரவேசித்தான். ஆனாலும் ஆகாப் தப்பவில்லை. எலியாவின் தீர்க்கதரிசனம் நிறைவேறியது (வச37,38). அவனுக்குப் பின் அவனது குமாரன் அகசியா ராஜாவானான். யோசபாத் துக்கத்தோடு வீட்டிற்கு திரும்பினாலும் அறிவு பெற்றவனாய் திரும்பினான். அவன் அகசியாவுடன் கூட்டுச்சேர சம்மதிக்கவில்லை (வச49), 1 இராஜாக்களின் புத்தகம் இரண்டு ஆண்டுகள் ஆட்சிசெய்த அகசியா தனது தகப்பனாக ஆகாபின் வழிகளிலேயே நடந்தான் என்பதோடு நிறைவடைகிறது.