அகுஸ்து (ராயன்) AUGUSTUS Bible Dictionary
“அகுஸ்து” என்னும் கிரேக்கப் பெயருக்கு – Augoustos – “பரிசுத்தம்” “reverant, holy” என்று பொருள்.
ரோமப்பேரரசின் முதலாவது இராயன் அக்ட்டாவியன் (Octavian) என்பவராவார். இவருக்கு அகுஸ்து என்னும் பட்டம் கொடுக்கப்பட்டது. லூக்கா இவரை “அகுஸ்து இராயன்” “Caesar Augustus” என குறிப்பிடுகிறார் (லூக்கா 2:1). அகுஸ்து இராயன் கி.மு. 63 ஆம் வருஷத்தில் பிறந்தார். இவர் ஜூலியஸ் சீசருடைய உறவினர்.
கி.மு. 43 ஆம் வருஷத்தில் அக்ட்டாவியன், லெபிடஸ் (Lepidus), மார்க் ஆன்டெனி (Mark Antony) ஆகியோர் உதவி இராயர்களாக (Second Triumvirate) அறிவிக்கப்பட்டார்கள். இம்மூவரும் இராயருடைய ஆட்சி பொறுப்பையும், அதிகாரத்தையும் பகிர்ந்து கொண்டார்கள். கி.மு. 31 ஆம் வருஷத்தில் கிரேக்கு தேசத்தில் ஆக்டியம் யுத்தம் (Battle of Actium) நடைபெற்றது. இந்த யுத்தத்தில் மார்க் ஆன்டெனி அக்ட்டாவியனிடம் தோற்றுப் போனார். இதன் பின்பு, அகட்டாவியன் ரோமப்பேரரசின் இராயனாரார். ரோமப்பேரரசை இவர் 44 வருஷங்களுக்கு மேல் ஆட்சி புரிந்தார். கிபி. 14 ஆம் வருஷத்தில் இவர் மரித்தார். இவருடைய ஆட்சிக்காலத்தில் இயேசு கிறிஸ்து பிறந்தார் (லூக்கா 2:1).
அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. லூக்கா 2:1
அகுஸ்து இராயனுடைய ஆட்சிக்காலத்தில் ரோமப்பேரரசில் குழப்பமும், யுத்தமும் இல்லாமல் அமைதி நிலவிற்று. இதனால் இவருடைய ஆட்சிக்காலத்தில் மிகப்பிரமாண்டமான கட்டிடங்கள் கட்டப்பட்டன.
அகுஸ்து இராயனுடைய மரணத்திற்குப் பின்பு, அகுஸ்து என்னும் பட்டம் ரோமப்பேரரசர் அனைவருக்கும் சூட்டப்பட்டது. அப் 25:21,25 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் “அகுஸ்து இராயன்” அக்ட்டாவியனைக் குறிக்கவில்லை. இந்தப் பெயர் நீரோ (Nero) மன்னனைக் குறிக்கிறது.
அதற்குப் பவுல், தான் இராயருக்கு முன்பாக நியாயம் விசாரிக்கப்படும்படிக்கு நிறுத்திவைக்கப்படவேண்மென்று அபயமிட்டபோது, நான் அவனை இராயனிடத்திற்கு அனுப்புமளவும் காவல்பண்ணும்படி கட்டளையிட்டேன் என்றான். அப்போஸ்தலர் 25:21
இவன் மரணத்துக்குப் பாத்திரமானதொன்றையும் செய்யவில்லையென்று நான் அறிந்துகொண்டதினாலும், இவன்தானே இராயனுக்கு அபயமிட்டபடியினாலும், அவரிடத்தில் இவனை அனுப்பும்படி தீர்மானம்பண்ணினேன். அப்போஸ்தலர் 25:25