வெளிப்படுத்தின விசேஷம் – 1:1-10 விளக்கம்
-
சகரியா பூனன்
வெளிப்படுத்தின விசேஷம் – 1:1, 2, 3
“ சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக்
காண்பிக்கும் பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம். இவன் தேவனுடைய வசனத்தைக் குறித்தும், இயேசுகிறிஸ்துவைப் பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான். இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது”
வெளிப்படுத்தின விசேஷ முழு புத்தசுத்திற்கும் இந்த முதல் மூன்று வசனங்களும் ஓர் முன்னுரையாக அமைகின்றது. இதில் 7 அடிப் படை அம்சங்கள் குறிக்கப் பட்டிருப்பதைப் பாருங்கள். இவ் அடிப்படை அம்சங்களை நாம் பின் பற்றாவிட்டால், இதன்மூலம் தவறான நோக்கத்தையே பெற்று; தவறான அணுகுமுறையில்; தவறான கருத்துக்களையே கற்றுக்கொள்ளும் அபாயத்தில் வீழ்வோம். ஆகவே இந்த 7 – அடிப்படை அம்சங்களைக் கருத்துடன் வாசியுங்கள்!
1. முதலாவது, தேவனே நமக்கு வெளிப்படுத்திக் காண்பிக்க வேண்டும்!
“வெளிப்படுத்தப்பட்ட” (REVELATION) என்ற வார்த்தையின் கிரேக்கபதமானது “அப்போகிளாப்ஸஸ்” என்பதாகும். இதன் பொருள் என்னவெனில், “திரை விலகியது” என்பதாகும். அதாவது, இதுவரை மூடியிருந்த திரை இப்போது விலகித் திறந்துவிட்டது! இதை நாம் எப்போதும் மனதில் கொள்ளவேண்டும். ஏனெனில், இப்புத்தகத்தில் வலுசர்ப்பங்கள்; குத்துவிளக்குகள்; மிருகஜீவன்கள்; கோபகலசங்கள்; தூதர்களின் எக்காளங்கள் போன்றவைகளை நாம் வாசிக்கிறோம். இவைகளையெல்லாம் நாம் மனுஷக சாமர்த்தியத்தால் அறிந்து கொள்ளவே முடியாது. ஆம், இவைகளை நமக்குத் தேவனே “திரை விலக்கி” வெளிப்படுத்த வேண்டும்.
ஒருவேளை இவ்வுலகத்தில் நீங்கள், ஓர் Ph.d. பட்டம் பெற்ற அறிவுப் பெட்டகமாய் இருக்கலாம். ஆயினும் இதில் காணும் சத்தியங்களை அறிந்துகொள்வதற்கு உங்களின் உலக அறிவு சிறிதும் பிரயோஜனப்படாது! தேவன் தன் காரியங்களை நமக்கு வெளிப்படுத்து வதற்கான அடிப்படைத் தகுதி என்ன தெரியுமா? அவருக்குப் பயப்படுகிற பயமும், தாழ்மையுமே! அதாவது, தன் ஆண்டவரை எல்லாவற்றிலும் பிரியப்படுத்துவதற்காக, பாவம் செய்வதற்குப் பயந்து ஜீவிப்பவர்கள்!! தேவன்மேல் கொள்ளும் இவ்வித பயபக்தியே, நம்மை இப்புத்தகத்தின் வெளிப்பாட்டிற்குள் நடத்தத் தகுதிப்படுத்துகின்றது.
2. தன் ஊழியக்காரர்களுக்கே (அடிமைகளுக்கே) காண்பிக்கிறார்!
“இவைகளைத் தம்மூடைய ஊழியக்காரர்களுக்குக் காண்பிக்கும் பொருட்டு என முதல் வசனம் குறிப்பிடுவதைக் கவனியுங்கள். இவைகள் ‘எல்லோருக்கும்’ காண்பிக்கப்பட மாட்டாது. தன் ஊழியக்காரர்களுக்கு, அதாவது தன் அடிமைகளுக்கே (BOND – SERVANTS) அவர் காண்பிக்கிறார். ஓர் ஊழியன் என்பதற்கும், ஓர் அடிமை என்பதற்கும் பெருத்த வித்தியாசம் உள்ளது. 8-மணி நேர வேலை என்ற வரையறையோடு தன் உரிமைகளை மனதில்கொண்டு “சம்பளத்திற்காக” வேலை செய்பவன்தான் ஓர் ஊழியன்.ஆனால் அடிமையோ, தன்னையே தன் எஜமானுக்கு சொந்தமாக்கியவன்!“ஆண்டவரே, என் முழு ஜீவியமும் உம்முடையது; என் எதிர்காலத் திட்டங்கள் உமக்குரியது; என் பணம் உம்முடையது; என் நேரங்கள் உம்முடையது; என் வீடு, படிப்பு… நான் சொந்தமாய் வைத்திருக்கும் அத்தனையும் உமக்கே உரியது!!” என்று முழுமையாகத் தன்னை தேவனுக்கு ஒப்புக்கொடுக்கும் அடிமைகள். நீங்கள் இப்புத்தகத்தை உட்கார்ந்து வாசித்துக் கொண்டேயிருக்கலாம், “ஆனால்” மேற்கூறியபடித் தன்னை ஒப்புக்கொடுத்த அடிமைகளுக்கு மாத்திரமே வெளிப்பாடு தருவதற்கு இயேசுகிறிஸ்து வாஞ்சையோடு ஆயத்தமாய் உள்ளார்.
3. அடையாளங்கள், சின்னங்கள் (SIGNS and SYMBOLS) மூலம் காண்பிக்கிறார்!
“தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரராகிய யோவானுக்கு அடையாளங்கள் மூலம் வெளிப்படுத்தினார்” என்றே ஆங்கில KING JAMES VERSION முதல் வசனத்தின் கடைசிப்பகுதி குறிப்பிடுகின்றது. இப்புத்தகம் முழுவதிலும் அடையாளங்களும், சின்னங்களும் (SIGNS and SYMBOLS) சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உதாரணமாக, குத்துவிளக்குகள்; வலுசர்ப்பங்கள்; மிருகஜீவன்கள்; கோபகலசங்கள் போன்றவைகள். இவைகளை எழுத்தின்படி பொருள்படுத்த முடியாது அவைகள் ஆவிக்குரிய அர்த்தங்கள் பொதிந்தவை! புதிய ஏற்பாட்டின் 26-புத்தகங்களில் இப்புத்தகத்தில் மாத்திரமே அடையாள – சின்னங்கள் மூலமாகத் தேவன் பேசுவது குறிப்பிடத்தகுந்த விசேஷமாகும். இந்த அடையாளங்களுக்குச் சரியான வியாக்கியானத்தை வழங்கப் பரிசுத்த ஆவியின் உதவியே நமக்கு முற்றிலுமாய் தேவைப்படுகிறது.
4. இது தேவனிடமிருந்து புறப்பட்ட நேரடியான வார்த்தைகள்!
“இவன் தேவனுடைய வசனத்தைக் குறித்து… அறிவிக்கிறான்” (வச.2. எல்லா வேதவாக்கியங்களுமே தேவனுடைய வார்த்தைகள்தான், ஆனால் ஆணித்தரமாக, ” இது தேவனுடைய வார்த்தைகள்” என ஆங்கில மொழிபெயர்ப்பு குறிப்பிடுகின்றது. உதாரணமாக, 19-ம் அதிகாரம் 9-ம் வசனம், “இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள்” என்று குறிப்பிடுவதைக் கவனியுங்கள். இதுபோல வேதாகமத்தின் எந்த ஒரு இடத்திலும் திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்லப்படவே இல்லை. அதற்கு காரணம் யாதெனில், இந்த வெளிப்படுத்தின விசேஷத்தை வாசிக்கும் அநேகருக்கு இதில் கூறப்பட்டவைகள் எல்லாம் உண்மையாகவே தேவனுடைய வார்த்தைகள்தானா? என்ற சந்தேகம் எழுவதற்கு வாய்ப்பு உண்டு. எனவேதான், “இது தேவனுடைய வார்த்தைகள்” என வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது. மேலும், வெளி.22:18, 19-ம் வசனம், “இந்தப் புத்தகத்தில் உள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் … எச்சரிக்கிறதாவது : ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளைத் தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப் போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், ‘பரிசுத்த நகரத்திலிருந்தும், அவனுடைய பங்கைத் தேவன் எடுத்துப்போடுவார்,” என்று கடுமையாகக் கூறுவதைக் கவனியுங்கள். இதுபோன்ற கடும் எச்சரிக்கை, வேதாகமத்திலுள்ள வேறு எந்தப் புத்தகத்திற்கும் தரப்படவில்லையே!! பார்த்தீர்களா, தேவன் இந்தப் புத்தகத்திற்குத்தான் எத்தனை அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்!! ஆம், இவைகள் தேவனுடைய நேரடி வார்த்தைகள். இவைகள் நமக்குத் தரப்பட்டதின் நோக்கம் என்ன? 2 தீமோ.3:16,17 அதற்கான விடையளிக்கிறது, “வேத வாக்கியங்களெல்லாம்
தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக என வாசிக்கிறோம். ஆம், நாம் தேறினவர்களாக அல்லது பூரணராக மாறும்படிக்கே வேதவாக்கியங்கள் நமக்கு அருளப்பட்டிருக்கிறது.
இந்த வெளிப்படுத்தின விசேஷப் புத்தகமும், நம்மைப் பூரணராக்கும் (Perfect) நோக்கத்திற்காகவே தரப்பட்டுள்ளது. இதற்கு மாறாக, எதிர்காலங்கள் எப்படி? என துருவி ஆராய்வதற்காக அல்ல! இன்று அநேகர் இப்படித்தான் “தீர்க்கதரிசன கால அட்டவணை” யைக் (Prophetic Chart) கற்று, எதிர்காலத்தை அறிந்துகொள்ள வேண்டும் வேட்கையோடு இப்புத்தகத்தைப் என்ற படிக்கிறார்கள். ஆனால், நான் இந்தப் புத்தகத்தை அறிந்து கற்றுக்கொள்ள வாஞ்சிக்கும் முழுநோக்கமும்,”தான் பூரணமடைய வேண்டும்” என்பது மாத்திரமே பிரியமானவர்களே,
உங்கள் நோக்கமும் இதுதானா? அப்படியானால் நாம் இப்புத்தகத்தைக் கற்றுக்கொள்ளும்போது, பூரணராவதற்கு ஏதுவான நல்ல பலனைக் கண்டடைவோம் என்பது திண்ணம்!
5. இப்புத்தகம் இயேசுகிறிஸ்துவின் சாட்சியையே பிரகடனம் செய்கிறது!
“இயேசுகிறிஸ்துவைப் பற்றிய சாட்சியைக் குறித்தும்” (வசனம் 2) என்று வாசிக்கிறோம்.
செய்கிறது. இப்புத்தகம் எதிர்காலத்தைப் பற்றிய சாட்சியை அல்ல, இயேசுகிறிஸ்துவையே சாட்சியாகப் பிரசுடனம் இப்புத்தகத்தை முற்றிலும் கற்றுக்கொள்ளப்போகும் நாம், எதிர்காலத்தை எட்டி நோக்கப்போவது கிடையாது. ஆனால், “எதிர்காலத்தை ஆளுகை செய்யும்” இயேசுகிறிஸ்துவையே உற்று நோக்கப்போகிறோம். நாம் எதிர்காலத்தை நோக்குவோமென்றால், என்னை எதிர்காலத்தின் “தடுக்கம்” அல்ல, பூரண சமாதானமும் இளைப்பாறுதலுமே என்னைத் தழுவிக்கொள்ளும்! இதை உறுதிசெய்யும்படி வெளி. 19:10-ம் வசளம், “இயேசுவைப் பற்றின சாட்சியே தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது” எனச் சொல்லுகிறது. உண்மையான எந்த தீர்க்கதரிசனமும் இயேசுகிறிஸ்துவையே எப்போதும் சாட்சியாகப் பிரகடனப்படுத்தும். எனவே நாம் பிரதானமாகச் சம்பவங்களையல்ல, சம்பவங்களை தனக்குள் கீழ்ப்படுத்தி ஆளுகை செய்யும் இயேசுகிறிஸ்துவையே நம் மனதில் நிறைத்து அவரையே உற்று நோக்கப்போகிறோம்! அப்படியென்றால், இப்புத்தகத்தைக் கற்று முடிக்கும்போது, இயேசுகிறிஸ்துவின் நிறைவான தரிசனத்தால் நாம் ஆட்கொள்ளப்படுவோம் என்பது உறுதி!
6. இவைகளைக் கேட்டு, கீழ்ப்படிவதற்கென்றே தரப்பட்டுள்ளது!
(இதன் மூலம் விசேஷ ஆசீர்வாதம் வாக்களிக்கப்பட்டுள்ளது)
“இந்த தீர்க்கதரிசன வசனங்களை கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான் கள்” (வசனம் 3). இது மிகவும் முக்கியம். நாம் இப்புத்தகத்தை நன்றாய்ப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது பிரதாளமல்ல! கீழ்படிதலே பிரதானம்!! ஆனால் இன்றோ, அநேகர் இப்புத்தகத்தை நன்றாய் புரிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் வாசிக்கிறார்கள். அது தவறு. அதில் எந்தவித ஆசீர்வாதமும் கிடையாது. இந்த மூன்றாம் வசனத்தைச் சற்று கவனித்து வாசியுங்கள், அதில் “இதில் எழுதியிருக்கிற கோபகலசங்கள் எதைப்பற்றி எடுத்துக்கூறுகிறது என்பது பற்றியும்; எக்காளங்கள் எதைப்பற்றி எடுத்துக்கூறுகிறது என்பது பற்றியும்; மிருகங்கள் எதைப்பற்றி எடுத்துக்கூறுகிறது என்பது பற்றியும் நன்றாய்ப் புரிந்து கொண்டவர்கள் பாக்கியவான்கள்!” என்றா எழுதப்பட்டிருக்கிறது? இல்லவே இல்லை. “இதில் எழுதியிருக் கிறவைகளை கைக்கொள்ளுகிறவர்களே பாக்கியவான்கள்” என்றுதான் கூறப்பட்டுள்ளது. கேட்கிற காதும்; காண்கிற கண்ணும் உடையவர் களாய்த் தேவனுடைய வார்த்தைகளைக் கண்டு அதைக் கைக்கொள்ளுகிறவர்கள்! “தேவனுக்குக் கீழ்ப்படிவதே” நாம் இப்புத்தகத்தை கற்கும் நோக்கமாய் இருக்கவேண்டும் என, இப்புத்தகத்தின் ஆரம்பத்திலேயே முன்னுரையாகக் கூறப்பட்டி ருப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்!! வேதப்புத்தகத்தின் எல்லா வசனங்களையுமே கருத்தாய்க் கைக்கொள்ளுகிறவர்கள் பாக்கிய வான்களே. ‘இருப்பினும்’ ”இந்தப் புத்தகத்தின் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதி யிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள்” என்றல்லவா கூறப்பட்டுள்ளது. இந்த பாக்கியம் அல்லது ஆசீர்வாதம் விசேஷமானதன்றோ! “ஆண்டவரே! எனக்கு இந்த ஆசீர்வாதம் வேண்டும்” என்றே வாஞ்சித்து ஜெபிக்கிறேன். இது உங்களுக்கும் வேண்டாமோ? இந்த ஆசீர்வாதம் உங்களுக்கும் வேண்டுமென்றால், இப்புத்தகத்தில் கூறப்பட்டவைகளில், சில காரியம் உங்களுக்குப் புரியாவிட்டாலும் பரவாயில்லை .. அதற்கு அப்படியே “கீழ்ப் படிந்துவிடுங்கள்,” அதுபோதும்! அது எப்படியெனில், நீங்கள் சாப்பிடும் உணவு உங்கள் உடலின் ஜீரண மண்டலத்தில் (Digestive Sys tem) சென்று எவ்வாறு இரத்தமும் சதையுமாக மாறுகிறது என விளக்கிச் சொல்வதற்கு நீங்கள் அறியாதவர்களாய் இருக்கலாம். ஆயினும், நீங்கள் உண்ணும் உணவு இரத்தமும் சதையுமாக மாறிவிடுகின்றதே! நாம் காணப்போகும் வேதவசனங்கள் சிலவற்றை நீங்கள் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். பரவாயில்லை, அதுவல்ல பிரதானம். கீழ்படிதலே பிரதானம்! உங்களின் ஜீரண மண்டலம் வேலை செய்கின்றதா? அதுபோதும். ஜீரண மண்டலத்தின் வேலையை சிறப்பாய் விளக்கிக் கூறும் ஓர் டாக்டரின் ஜீரண மண்டலம் வேலை செய்யாவிட்டால் என்ன பிரயோஜனம்?! இவ்விதம் நாம் முடிவடைந்துவிட்டால் அந்நிலை மிகப் பரிதாபம். ஆம், வெளிப்படுத்தின விசேஷத்தின் அதிகாரங்களை நன்றாய் விளக்கி, தூள்பறக்க அதை வியாக்கியானம் செய்துவிட்டு, முடிவில் தன் அன்றாட ஜீவியத்தில் தேவனுக்கு கீழ்ப்படிய அறியாத ஓர் அவலநிலை!! எனவே, சத்தியத்தின் அறிவும் + கீழ்ப்படிதலுமே, நமக்கு ஜீவனை அளிக்கிறது.
7. மற்றவர்களுக்கும் வாசித்துப் பிரகடனம் செய்யும்படி தரப்பட்டுள்ளது!
(இதன் மூலமாகவும் விசேஷ ஆசீர்வாதம் வாக்களிக்கப்பட்டுள்ளது) மூன்றாம் வசனத்தின் முதல் பகுதியில் கூறப்பட்டுள்ள “இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும்” என்பதின் பொருள் என்னவெனில், “இப்புத்தகத்தை மற்றவர்களுக்கும் உரத்த குரலில் வாசித்து காட்டவேண்டும்” என்பதேயாகும். அவ்வாறு செய்பவர்கள் பாக்கியவான்கள்! முதலாம் நூற்றாண்டில், “அச்சுக்கூடங்கள்” இல்லாமல் இருந்தது. அந்நாட்களில் சபைகளில் இருந்த விசுவாசி களுக்கு, இப்போது நாம் ஒவ்வொருவரும் கையில் வைத்திருப்பதுபோல் பைபிள் கிடையாது.யோவான், தன் கைப்பட எழுதின ஒரே பிரதியைத்தான் மற்ற சபைகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பினான். சபையிலுள்ள ஒருவர், வாரத்திற்கு ஒருநாள் சபையைக் கூடிவரச்செய்து நிருபத்தில் எழுதப்பட்டிருப்பதை எல்லா ஜனங்களுக்கும் வாசிப்பார். ஆம், நாம் இப்புத்தகத்தின் மூலம் கற்றுக்கொள்ளப்போவதைப் பிறருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதே இவ்வசனத்தின் பொருளாகும். இன்று அநேக கிறிஸ்தவர்கள், தாங்கள் பெறுவதை மற்றவர்களுக்கும் கொடுக்காததால் “சவக்கடலாய்” (Dead Sca) தேங்கிவிட்டனர். இவர்கள் ஆவிக்குரிய மரணத்தையே அடைகிறார்கள். நீங்கள் பெறுவதை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்காவிடில், இவ்வித மரணமே சம்பவிக்கும்!.
முதல் மூன்று வசனங்களில் முன்னுரையாகத் தரப்பட்டிருக்கும் ஏழு அடிப்படை அம்சங்களையும் நம் மனதில் நிறைத்துக் கொள்வோமாக, அப்போதுதான் நாம் பிரயோஜனமற்ற குறுக்குப் பாதைகளுக்கு நம்மை விலக்கிப் பாதுகாத்துக்கொள்ள முடியும். இப்போது, நாம் தேவன் நமக்கு இப்புத்தகத்தின் மூலம் தர விரும்புவதை, செவ்வையான நேர்வழியில் நடந்து பெற்றிட தீவிரம் கொள்வோமாக!
வசனம் 4 to 8: விளக்கம்
யோவான் ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும், உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக ஆமென். இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென். இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும் ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம் பற்றுகிறார்.
“கிருபையும், சமாதானமும் நமக்கு உண்டாகக்கடவது” என்ற ஜெபத்தோடு யோவான் துவக்குகிறார். இந்த வார்த்தைகளை நாம் பழைய ஏற்பாட்டில் அதிகமாய் வாசிப்பது கிடையாது. ஆனால் புதிய ஏற்பாடு அநேக இடங்களில் “கிருபை” என்ற வார்த்தையைத் தன்னகத்தே கொண்டுள்ளது. கிருபை என்பதற்கு, “என் தேவைக்கு ஏற்ப தேவன் வழங்கும் உதவி” என்றே அர்த்தமாகும். என் தேவை வெறும் பாவ மன்னிப்புதானோ? அப்படியானால் அதை மட்டுமே தேவன் எனக்கு வழங்குவார்! மாறாக, “ஜெய ஜீவியம்” எனது தேவை என்பதை தேவன் காண்பாரென்றால், எனக்கு ஜெய ஜீவியத்தையும் இனிதே வழங்கிடுவார்!!
மேலும், தேவன் அருளும் இன்னொரு மிகப்பெரிய ஈவானது, “இயேசுகிறிஸ்துவினால் உங்களுக்கு சமாதாளமும் உண்டாவதாக” என்பதுதான். நம் இருதயத்தில், நம்மை குற்றப்படுத்தும் ஆக்கினையை அல்ல, சமாதானத்தையே இயேசு புதிய உடன்படிக்கையில் நமக்கு கொண்டு வந்தார்.
பின்பு, திரியேக தேவனுடைய நாமத்தினால் வாழ்த்துக்களை வழங்குகிறார். முதலாவதாக, நிகழ்காலத்திற்கு நித்தியமானவரும்; கடந்த காலத்திற்கு நித்தியமானவரும்; எதிர்காலத்திற்கு நித்தியமானவருமான சர்வ வல்லமையுள்ள நம் நித்திய பிதா. இரண்டாவதாக, திரித்துவத்தின் மூன்றாவது நபரைக் குறிப்பிடும் “அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்” (வச.4). இந்த வசனத்தைக் கேட்டவுடன், ஏழு வித்தியாசமான பரிசுத்த ஆவியானவர் என தவறாய்ப் புரிந்து கொள்ளக்கூடாது. இப்புத்தகத்தில் உள்ளவைகள் “அடையாள வார்த்தைகள்” (Signify) என்பதை நினைவிற் கொள்ளவேண்டும். “ஏழு வித” (Seven Fold) ஊழியத்தைப் பெற்ற பரிசுத்த ஆவி என்பதே இதன் பொருள். மூன்றாவதாக, திரித்துவத்தின் இரண்டாவது நபரான, “உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதல் எழுந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும்” (வச.5) என்று வாசிக்கிறோம். சதா காலமாய் உயிரோடிருக்கும்படி கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்ததாலேயே அவர், “மரித்தோரிலிருந்து முதல் பிறந்தவர்” என அழைக்கப்படுகிறார். லாசரு, யவீருவின் மகள் போன்ற சிலர் உயிரோடு எழுந்தபோதும், மீண்டுமாக அவர்கள் மரணத் தையே அடைந்தார்கள்! ஆனால் நித்திய காலமாய் என்றும் மரிக்காமல் இருக்கும்படி உயிர்த்தெழுந்த முதல் நபர் இயேசுகிறிஸ்து ஒருவரே!
மேலும், “பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசு கிறிஸ்து” (வச.5) என வாசிக்கிறோம். இது மிகவும் முக்கியம்!.இந்த வாக்கியம் இயேசுகிறிஸ்துவை சாட்சியாகப் பறைசாற்றுகின்றது. நாம் இப்புத்தகத்தில் அந்திக்கிறிஸ்துவைப் பற்றியும், இன்னும் நடைபெறப் போகும் பல நிகழ்ச்சிகளைப் பற்றியும் வாசிப்பதற்கு முன்பாக “இவ்வையகத்தைத் தன்னகத்தே கொண்டு ஆளுகை செய்யும் அதிபதி, நமதாண்டவர் இயேசுகிறிஸ்துவே” என முதலிலேயே வாசித்து அறிவது
எத்தனை பெரிய ஆறுதல்! வானத்திற்கும் பூமிக்கும் உரிய சகல அதிகாரமும் அவர் கையிலன்றோ உள்ளது!!
மேலும், “நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாவதாக” (வச.6) என்றும் வாசிக்கிறோம். பார்த்தீர்களா! “நம்மிடத்தில் அன்புகூருபவர்”. இதுவும் புதிய உடன்படிக்கையின் ஓர் உச்சிதமான செய்தியாகும்!! எப்போதோ அன்புகூர்ந்தவர் என்று கடந்த காலத்தில் குறிப்பிடாமல், இப்போது அன்புகூருபவர் என்று நிகழ்காலத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். ஆம், நம்மை சதா காலமும் அன்புகூரும் ஆண்டவர்!
மேலும், “நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி” என்று வாசித்தோம். இதுவும் புதிய உடன்படிக்கையின் ஓர் மகோன்னத செய்தியே ஆகும். “நம்மைக் கழுவினார்” என்ற மொழிபெயர்ப்பைவிட, “நம்மை விடுவித்தார்” என்பதே சரியான மொழிபெயர்ப்பாகும். புதிய ஏற்பாட்டின் முதல் வாக்குத்தத்தத்தை மத்தேயு 1:21-ம் வசனத்தில் வாசிக்கிறோம். கர்த்தருடைய தூதன் யோசேப்பை நோக்கி, “அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” என்றான். வெறும், பாவங்களை “மன்னிப்பார்” அல்ல, பாவங்களை “நீக்கி”>இரட்சிப்பார்! தம்முடைய இரத்தத்தினாலும், சிலுவையின் மரணத்தினாலும் நம்மை “பாவத்திலிருந்து விடுவிக்கும்” இயேசு! புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகத்தின் முதல் பக்கமும், முழு வேதாகமத்தின் கடைசிப் புத்தகத்தின் முதல் பக்கமும் இந்த உன்னத செய்தியைப் பிரகடனம் செய்வதைக் கவனித்தீர்களா? இதுபோலவே, புதிய ஏற்பாட்டின் ஒவ்வொரு சபையும் இந்தச் செய்தியையே பிரதான ஆரம்பமாகத் தன்னில் கொண்டிருக்க வேண்டும்.
புதிய ஏற்பாட்டின் மற்றொரு மகத்துவமான செய்தியை 6-ம் வசனம் கூறுவதைக் கேளுங்கள், இந்தப் பூமியின் ராஜாக்களை தன்னகத்தேக் கொண்டு ஆளுகை செய்யும் அதிபதியாக இயேசு இருக்கிறார் என வாசித்தோம். இங்கே, “நம்மையும் ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினார்” என்று வாசிக்கிறோம். இப்பூமிக்கடுத்த ராஜ்ஜியத்தை ஆளும், இம்மண்ணுக்குரிய ராஜா அல்ல. என் சரீரத்தில் நான் காணும் “எல்லா ஆசைகளையும் இச்சைகளையும்” அடக்கி ஆளும் ஆவிக்குரிய ராஜா! கோபத்திற்குமேல் நான் ராஜா! பொருளாசைக்குமேல் நான் ராஜா..!! ஆம், அவைகளல்ல, நானே அவை களை ஆளுகின்றேன். இதற்கு மாறாக, இந்த உலகமோ ” “ஆசைகளுக்கும் இச்சைகளுக்கும்” அடிமையாகியிருக்கும் அடிமைகளால் நிறைத்திருக் கின்றதே. ஆனால் நம்மையோ இயேசு விடுதலை செய்து ராஜாக்களாக்கி விட்டார்!!
நம்மை ராஜாக்களாக மாத்திரமல்ல, “ஆசாரியர்களுமாக்கினார்?” இதுவும், புதிய ஏற்பாட்டின் மிகப் பிரதானமான செய்தியேயாகும். இன்று, மனுஷிகப் பாரம்பரியத்தை ஏற்படுத்தி ஸ்பெஷலாக ஒரு குழுவினரைப் “பாதிரிகளாக” அல்லது “ஆசாரியர்களாக” ஏற்படுத்தி யிருக்கின்றனரே, அதெல்லாம் குப்பைகள். சத்தியவேதமோ, இயேசுகிறிஸ்து நம் ஒவ்வொருவரையும் ஆசாரியர்களாக்கியிருக்கிறார் ( பேதுரு 2:9) என்றே கூறுகிறது. பழைய ஏற்பாட்டில் ஒரு குறிப்பிட்ட ஜனமே ஆசாரியர்களாகத் தெரிந்தெடுக்கப்பட்டனர். ஆனால், புதிய ஏற்பாட்டிலோ “ஒவ்வொரு விசுவாசியும்” (ஆணாயிருந்தாலும், பெண்ணாயிருந்தாலும்) ஆசாரியர்களே! நாம் ஆசாரியர்கள் என்பதற்காக, ஒரு விசேஷமான நீண்ட உடுப்பை உடுத்திக்கொள்ள வேண்டியதில்லை. அதுவெல்லாம் பழைய ஏற்பாட்டு ஆசாரியர்கள் கடைப்பிடித்தனர். புதிய ஏற்பாட்டிலோ, நாம் “நமக்குள்ளாக” (INSIDE) விசேஷ உடுப்பை உடுத்துகிறோம். அந்த உடுப்பு என்ன? “பரிசுத்தத்தின் வஸ்திரமே” அந்த உடுப்பு! இதைத்தான் ஆண்டவர் தன் வார்த்தையில், “பரிசுத்தத்தின் அலங்காரம்!” என பரவசத்தோடு கூறியுள்ளார். இவர்களே புதிய உடன்படிக்கையின் உண்மையான ஆசாரியர்கள். மேலும், பழைய ஏற்பாட்டின் ஆசாரியர்கள் பலிபீடத்தில் தங்கள் பலிகளைச் செலுத்தினார்கள். புதிய ஏற்பாட்டின் ஆசாரியர்களாகிய நாமோ, பலிகளை “நமக்குள்ளேயே” செலுத்துகிறோம். சுயத்தையும், இச்சை களையும் பலிகளாகச் செலுத்தி தேவனைப் பிரியப்படுத்தி ஜீவிக்கிறோம்.
இந்த 6-ம் வசனத்தில், “… தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக” என்றும் வாசிக்கிறோம். இது, புதிய ஏற்பாட்டின் மற்றுமோர் முக்கியமான செய்தியாகும். ஆம், தேவன் நம்முடைய “பிதா.” பழைய ஏற்பாட்டிலோ, ஜனங்கள் தேவனைப் பிதா என்று ஒருபோதும் அறிந்ததேயில்லை. இன்றோ, நமக்கு இயேசுவின் தந்தை நம் தந்தையுமாவார்! மேலும், “அவருக்கு (இயேசுகிறிஸ்துவுக்கு) மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்” என்றும் வாசிக்கிறோம். சகல மகிமையும் இயேசுகிறிஸ்துவுக்கே செலுத்தப்பட வேண்டும் என்பது புதிய ஏற்பாட்டின் பிரதான செய்திகளில் ஒன்றாகும். இந்த சத்தியத்தை நாம் ஒருக்காலும் மறவாதிருக்கக்கடவோம்!!
கடைசியாக, 7-ம் வசனம் புதிய ஏற்பாட்டின் மிகப் பிரதான மற்றொரு செய்தியான இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பறைசாற்றுகின்றது, “இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாம் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.” இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையை இவ்வுலகம் பகிரங்கமாகக் காணும் என, இப்புத்தகத்தின் ஆரம்பத்திலேயே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அப்போஸ்தலர்களில் ஒருவர் கூட இயேசுகிறிஸ்து “இரகசியமாய்” வருவார் CT C கூறவில்லை. இந்த ‘இரகசிய வருகை’ உபதேசம் சுமார் 150 ஆண்டு களுக்கு முன் மேற்கத்திய நாடுகளிலிருந்து தோன்றியதாகும். ஆக, 4 முதல் 7 வசனங்களில் புதிய ஏற்பாட்டின் பிரதானமான எல்லா உபதேசங்களும் பரிசுத்தாவியானவரால் இரத்தினச் சுருக்கமாய் வழங்கப்பட்டிருப்பது, மிகவும் அருமை!
“நான் அல்பாவும் ஓமெகாவும்,” “இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர்” (வச.8). பார்த்தீர்களா! அவர் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்!! ஆம், நடைபெறப்போகும் எல்லா சம்பவங்களுக்கும் அவரே சர்வ வல்லமையுள்ள கர்த்தர். அது மாத்திரமல்ல, அவர் அல்பாவும் ஓமெகாவுமானவர். இந்த கிரேக்க வார்த்தைக்குச் சமமான ஆங்கில அர்த்தம் யாதெனில், “A-யும் Z-ம்” ஆகும். அதாவது, அவரே ஆரம்பமும் அவரே முடிவுமானவர். ஒன்றும் தோன்றாமல் இருந்தபோதும் அங்கு அவர் இருந்தார்! எல்லாம் முடிவுறும்போதும் அங்கு அவர் இருப்பார்!! அதாவது, ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார் : “அடுத்த ஆண்டு எனக்குத் தெரியாமல் ஓர் நிகழ்ச்சி நடைபெற்று என்னை அதிர்ச்சிக்குள்ளாக்க முடியாது!” என்பதேயாகும்.
இன்றைய எதிர்காலத்தை எதிர்நோக்கியிருக்கும் ஒவ்வொரு விசுவாசியும் “உன்னதத்தில் அமர்ந்து தேவன் அரசாளுகின்றார்!” என்ற உண்மையை நெஞ்சார உணர்ந்து அறிந்திருக்க வேண்டியது மிக மிக முக்கியம். பாருங்கள், இப்புத்தகத்தின் கடைசி அதிகாரத்திலும் ‘நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்” என எழுதப்பட்டுள்ளது (வெளி. 22:13). அதாவது, வெளிப்படுத்தின விசேஷத்தின் முழு செய்திகளுமே, முதல் அதிகாரத்தில் “நான் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்”… கடைசி அதிகாரத்தில் “நான் ஆதியும் அந்தமுமானவர்” என்ற இரு அடைப்பு குறிகளுக்கு இடையில்தான் அடங்கியுள்ளது! இதை நீங்கள் தெளிவாகக் காணவில்லையென்றால், இனி உலகில் நடைபெறப்போகும் நிகழ்ச்சிகளைக் காணப்போகும் நீங்கள் குழப்பத்திற்கு ஆளாவீர்கள் என்பது திண்ணம். எனவேதான் தேவன் முதலாவதாகத் “தன்னை வெளிப்படுத்திக்கொண்டு” இப்புத்தகத்தை ஆரம்பிக்கிறார்.
ஏழு மகிமையான சத்தியங்கள் :
நமக்கும் நம் ஆண்டவருக்கும் இடையே கொண்டுள்ள உறவு, செழித்தோங்கி இருக்கவேண்டுமென்றால், நாம் இதுவரை தியானித்த ஏழு முக்கியமான சத்தியங்களில் நாம் ஸ்திரப்படவேண்டியது மிகவும் அவசியமாகும்:
1. ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் அனைத்தும் முழு நம்பிக்கைக் கும் பாத்திரமானவைகள்,
2. மனுஷனுடைய மாபெரும் சத்துருவாகிய மரணத்தின்மீது அவர்
கொண்ட ஜெயம்,
3. வானத்திலும் பூமியிலுமுள்ளீ யாவற்றின்மீதும் அவர் பெற்றிருக்கும் சம்பூர்ண அதிகாரம்,
4. நம்மீது அவர் கொண்ட நித்தியமான மாறாத அன்பு,
5. பாவத்தின் வல்லமையிலிருந்து நம்மை விடுதலை செய்திடும் அவரது மகத்துவம்,
6. அவருடைய பிதாவே இப்போது நம்முடைய பிதாவாய் இருக்கும்
மேன்மை,
7. இப்பூமியில் தன்னுடைய ராஜ்யத்தை ஸ்தாபித்திட வரும் அவரது இரண்டாம் வருகை.
நாம் எதிர் கொள்ளப்போகும் இக்கடைசி நாட்களில் உறுதியாகவும் சிறிதேனும் அசைக்கப்படாமலும் இருக்க வேண்டுமென் றால், மேற்கண்ட ஏழு சத்தியங்களிலும் நாம் வேர்கொண்டு நிலைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
வசனம் 9 : விளக்கம்
உங்கள் சகோதரனும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன் பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப் பற்றிய சாட்சியினிமித்தமும், பத்மு என்னும் தீவிலே இருந்தேன்.
இவ்வசனத்தில் ஓர் விசேஷத்தைக் கண்டீர்களா? இயேசுவின் சீஷர்கள் 11-பேர்களும் மரித்து, இப்போது மீதியாயிருக்கும் ஒரே சீஷன்தான் இந்த யோவான்! மேலும், இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்து பரத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு தேவனோடு நடந்து சுமார் 65-ஆண்டுகள் வாழ்ந்தவனுமாவான். இச்சமயத்தில் தனக்கென்று ஓர் “புகழ் பட்டம்” சூட்டிக்கொள்ள தகுதியுடையவன் இந்த யோவான் மாத்திரமே! தன்னை, ரெவரண்ட் தந்தை என்றோ அல்லது பாஸ்டர் என்றோ அல்லது போப் என்றோ தனக்கு “பட்டம்” சூட்டி யோவான் கூறியிருந்திருக்க முடியும். ஆனால் இயேசுவோடு சேர்ந்து 34 வருடங்கள்
நடந்தும்கூட, சுமார் 65-ஆண்டுகள் பரிசுத்த ஆவிக்குள்ளாக இயேசுவோடு இணைந்து நடந்து பரிசுத்தத்தின் உயர்மட்டத்தை அடைந்த இந்த உத்தம சீஷன் முடிவில் தன்னை எங்ஙனம் அழைத்துக்கொள்ளுகிறார்? “உங்கள் சகோதரன்!” அவ்வளவுதான்!! மேலாக மகிமையில் உயர்த்தப்பட்ட இயேசு மாத்திரமே “தலை யானவர்” அல்லது “தலைவர்” என அழைக்கப்பட பாத்திரர். நீங்களும், நானும் சாதாரண சகோதர சகோதரிகள் மாத்திரமே (மத்தேயு 23:8-11),
மேலும், “இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திர வத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன் பங்காளனாயிருக்கிற” என வாசிக்கிறோம்.
ஆம், இயேசுகிறிஸ்துவின் உண்மை சீஷனாயிருக்க விரும்பும் ஒவ்வொருவரும் உபத்திரவங்களையும், துன்பங்களையும் கடந்துதான் வரவேண்டும். ஏனெனில், அநீதி நிறைந்த இவ்வுலகத்திற்கு எதிராக நீதியும்; குறுக்கு வழி தேடும் இவ்வுலகத்திற்கு எதிராக நேர்வழியையும்; உலகத்தையும் பிசாசையும் ஆராதிக்கும் இவ்வுலகில் தேவனுடைய சத்தியத்தையும்; நிலைநிறுத்தி வாழ்கின்றோமே அதினிமித்தமே இந்த உபத்திரவங்கள்! ஓர் ஏர்-கண்டிஷன் குளு குளு ஓட்டலின் சாய்வு நாற்காலியில் ஒய்யாரமாய் அமர்ந்துகொண்டா இத்தெய்வ தரிசனங்களை யோவான் கண்டார்? இல்லை! அவர் துன்புறுத்தப் பட்டார்! ஓர் தேசத்துரோகியைப்போல பத்மு என்னும் தீவில் கொடுமையாய் நாடு கடத்தப்பட்டபோதுதான் இத்தரிசனங்களை அவர் கண்டார்!!
மேலும், “. தேவ வசனத்தினிமித்தமும் இயேசுகிறிஸ்து வைப்பற்றிய சாட்சியினிமித்தமும்.. பத்மு தீவிலே இருந்தேன்” என வாசிக்கிறோம். ஆம், தேவனுடைய “முழு ஆலோசனைகளையும்’ பிரசங்கித்து இயேசுகிறிஸ்துவுக்கு சாட்சியாய் இருந்தபடியால் யோவான் உபத்திரவப்பட்டார். இந்த உபத்திரவத்தின் நடுவில்தான் அவர் “வெளிப்பாடு” பெற்றார்! இதே வழிமுறையை கடைப்பிடித்தே தேவன் நமக்கும் வெளிப்பாடு தருகிறார். நம் ஜீவியத்தில் அடையும் துன்பங்கள் சோதனைகள் மத்தியில்தான் தேவன் தன் வார்த்தையில் நமக்கு வெளிப்பாடு தந்திடுவார். இவ்வாறாகப் பாடுகளின் மத்தியில் நம்மைப் பெலப்படுத்தும் “அந்த வார்த்தைதான்” இதேபோலப் பாடுகளுக்குள் பிரவேசிக்கும் சகோதர சகோதரிகளைப் பெலப்படுத்தும்படி நாம் உபயோகிக்க ஏதுவாகிறது. இங்கே துலங்கமாய் துலங்கி நிற்கும் செய்தியைக் கேளுங்கள்! கோணலும் மாறுபாடுமான இவ்வுலகின் மத்தியில் தேவனுடைய வார்த்தைகளுக்கு உண்மையுள்ளவர்களாய் இருப்பதினிமித்தம் அடையும் பாடுகளையும் எதிர்ப்புகளையும் இயேசுகிறிஸ்துவின் சீஷனாய் இருந்து சந்தித்திட நாம் ஆயத்தமாய்
இல்லையென்றால், இந்த வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தை நாம் ஒரு துளிகூட புரிந்துகொள்ளவே முடியாது!
தங்கள் விசுவாசத்திற்கு எவ்வித எதிர்ப்பும், துன்பமும் ஏற்படாமல் ‘குஷி’ வாழ்க்கை வாழும் இங்கிலாந்திலிருந்துதான் முதன்முறையாக (19-ம் நூற்றாண்டில்) “இயேசு இரகசியமாய் வந்து, தன் சபையை மகா உபத்திரவத்திற்கு முன்பு இவ்வுலகத்திலிருந்து எடுத்துக்கொள்வார்” என்ற உபதேசம் தோன்றியது.ஆனால் இயேசுவோ, இந்த உலகத்தில் உங்களுக்கு உபத்திரவங்கள் உண்டு, ஆகிலும் திடன்கொள்ளுங்கள். நான் உலகத்தை ஜெயித்தேன் (யோவான் 16:33) எனக் கூறினார். ஆம், இன்று உபத்திரவங்களை சகிப்பவர்கள் மாத்திரமே இயேசுகிறிஸ்துவின் ராஜ்யத்தில் பங்காளிகளாய் இருப்பார்கள் என யோவான் மேலும் கூறுகிறார்.
வசனம் 10: விளக்கம்
“கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காள சத்தம் போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன்.”
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து யோவான் அப்போஸ்தலனிடம் பேசியதே இந்த சத்தம் என்பதை நாம் அறிவோம். இங்கு “கர்த்தருடைய நாளில்….’ என்று கூறுகின்றார். அதாவது, வாரத்தின் முதல்நாளாகிய ஞாயிற்றுக்கிழமையைத்தான் இங்கு குறிப்பிடுகின்றார். இந்த நாளில் தான் கிறிஸ்து மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்தார். இந்த நாளை, ஆதிக் கிறிஸ்தவர்கள் ‘கர்த்தருடைய நாள்” என பெயர் சூட்டி மகிழ்ந்தனர். யூதர் களோ தங்களுக்கு “ஓய்வுநாளைப்” பிரதானமாகக் கொண்டிருந்தார்கள். ஆனால் சீஷர்களோ இயேசுகிறிஸ்து வாரத்தின் முதலாம் நாளில் உயிர்த்தெழுந்த நாளையே தொடர்ச்சியாக நினைவுகூர்ந்தனர். ஆம், ஆதிக் கிறிஸ்தவர்களிடம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமோ, புனித வெள்ளி ஆசரிப்போ அல்லது ஈஸ்டர் கொண்டாட்டமோ அல்லது வேறெது வுமோ இல்லை! நாட்களின், பண்டிகைகளின் ஆசரிப்பிலிருந்து, இன்று புதிய உடன்படிக்கையானது ஜனங்களுக்கு விடுதலையளித்துள்ளது.
இக்கர்த்தருடைய நாளில் நான் ஆவிக்குள்ளாகி ஆண்டவரின் சத்தத்தைக் கேட்டேன் என யோவான் கூறுகிறார். சற்றே கவனி யுங்கள் …! யோவானுக்குக் கிட்டிய இப்பொற்பாக்கியம் நமக்கும் உண்டு! நான் பரிசுத்தாவிக்குள்ளாய் நிறைந்து வாழ்ந்து, பாவத்திற்கு அதிகம் உணர்வுள்ளவனாகவும்; சுத்த மனசாட்சியைக் காத்துக் கொள்பவ னாகவும்; ஆண்டவருடைய பார்வையில் தாழ்மையில் தரித்து நடப்பவ னாகவும் இருந்தால், நானும் ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்க முடியும்! … ஓர் வானொலிப்பெட்டியைப்போல!! நாம் கேட்கமுடியாத பல சப்தங்கள் நிறைந்த ஓர் அறையில், வானொலிப்பெட்டியை இயக்கி
அதைச் சரியான அலைவரிசையில் வைத்தால் “கணீர்” என்று அச்சப்தத்தைக் கேட்கிறோமே, அதுபோல்தான்!! யோவான் ஆவிக்குள்ளாய் இருந்து, சுத்த மனசாட்சியைக் காத்துக்கொண்டு, சரியான அலைவரிசையில் தன்னை வைத்துக்கொண்டபடியால், ஆண்டவருடைய சத்தத்தைக் “கணீர்” என்று தெளிவாகக் கேட்டார். காரியம் இப்படியாய் இருக்க, இன்று அநேக விசுவாசிகளிடம் காணும் பரிதாபம் கேளீர்! தேவன் அவர்களோடு பேசுகிறார், ஆனால் அவர்களோ கேட்பது இல்லை! ஏன்? அவர்களின் வானொலிப்பெட்டி “சரியான அலைவரிசையில்” இல்லை!? அது, உலகத்தின் சார்பில் முடுக்கப் பட்டுள்ளது…எப்படி அதிக பணம் சம்பாதிக்கலாம்? என்னைக் குறித்து தவறாய் தூற்றிக்கொண்டிருக்கும் அந்த மனிதனிடமிருந்து என்னை நியாயப்படுத்தித் தற்காத்துக்கொள்வது எப்படி?.. என் குடும்ப சொத்தின் பங்கைப் பெறுவது எப்படி? … இப்படி ஏராளம், ஏராளம்! இதனிமித்தம், சாத்தான் 24-மணி நேரமும் ஒலிபரப்பிக் கொண்டிருக்கும் பொய், கசப்பு, பதட்டம்… ஆகிய அவனின் குரலையே கேட்கிறார்கள்!
இப்படிப்பட்டவர்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்கவே முடியாது. ஆனால் இவர்களோ, “தேவன் எங்களிடம் பேசவில்லையே?” என்பார்கள். அவர் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்! உங்கள் வானொலிப்பெட்டி சரியான அலைவரிசையில் முடுக்கப்படவில்லை, இதுதான் உண்மை. யோவானும் ஆவிக்குள்ளாக இல்லாமலிருந்தால், அவரும் ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டிருக்கமுடியாது. ஆனால் யோவானோ, “நான் ஆவிக்குள்ளாய் இருந்தேன். அவருடைய சத்தத்தைக் கேட்டேன்” என செம்பீரித்துக் கூறுகிறார். இதை வாசிக்கும் சகோதரனே, சகோதரியே, நாம் கடைசி நாட்களை நெருங்கிவிட்டோம். கிறிஸ்துவின் வருகையும் மிகவும் சமீபமாகிவிட்டது. இப்போது உங்களை வருந்திக்கேட்டு புத்தி சொல்லுகிறேன், “பாவத்திற்கு உணர்வுள்ளவர் களாய் இருங்கள், சுத்த மனசாட்சி கொண்டிருங்கள், தாழ்மையில் தரித்து தேவனுடைய பார்வைக்கு முன்பாக மாத்திரமே ஜீவியுங்கள்.” ஆம், உங்களை பரிசுத்தாவிக்குள் தொடர்ச்சியாய் காத்துக்கொள்ளுங்கள்!