1. அந்நிய பாஷையில் பேசுவது அவசியமா?
சகோ.மோகன் சி. லாசரஸ்
இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனாகிய பரி. பவுல், யசு கிறிஸ்து கொரிந்து பட்டணத்தில் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட தேவப் பிள்ளைகளுக்கு எழுதும்போது, “தேவப் பிள்ளைகளாகிய, நீங்களெல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்” (1 கொரி. 14:5) என்று சொல்கிறார்.
தேவ மனிதனாகிய பரி. பவுல், தன் சொந்த விருப்பத்தை அப்படி எழுதவில்லை. “வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப் பட்டிருக்கிறது.” (2 தீமோ. 3:16) என்ற வேத வசனத்தின்படி, பரி. பவுல் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு, தேவனுடைய விருப்பத்தை விசுவாசி களுக்கு எழுதியிருக்கிறார் (2 பேதுரு 1:21).
நம்மை இரட்சித்த தேவனுடைய விருப்பம். நாமெல்லோரும் பரிசுத்த ஆவியினால் நிறைந்து, அந்நிய பாஷைகளைப் பேச வேண்டும் என்பதுதான்!
“இந்த அனுபவம் அன்றைக்கு இருந்த கொரிந்து சபை விசுவாசிகளுக்குத்தான்; நமக்கு அல்ல” என்று சிலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். அப்படி அல்ல. அவசியமில்லாத ஒன்றை, ஆவியானவர் வேதத்தில் எழுதி வைத்திருக்க மாட்டார்.
ஆவிக்குரிய வரங்களைக் குறித்தும், அந்நிய பாஷையில் பேசி, தீர்க்கதரிசனம் சொல்வதைக் குறித்தும், இரண்டு அதிகாரங்களில் (1 கொரி. 12,14) ஆவியானவர் எழுதி வைத்திருப்பாரானால், இது தேவப் பிள்ளைகளுக்கு எத்தனை அவசியமான காரியம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்!
“அன்பே பெரியது, அன்பு இருந்தால் போதும், இந்த ஆவிக்குரிய அனுபவங்கள் அவசியமில்லை” என்று நினைக்கிறவர்கள் உண்டு. அன்பில்லாமல் ஆவிக்குரிய அனுபவங்கள் இருந்து, ஒரு பிரயோஜனமுமில்லை. அதே விதமாக, அன்பு எத்தனை முக்கியமோ; அப்படியே ஆவிக்குரிய அனுபவங்களும் நமக்கு மிகவும் அவசியம்.
ஆகவேதான், ‘அன்பை நாடுங்கள்;” என்று எழுதின ஆவியானவர், “ஞானவரங்களையும் விரும்புங்கள்; விஷேசமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்.” (1 கொரி. 14:1) என்றும் எழுதி வைத்திருக்கிறார்.
இதே ஆவியானவர்தான். “நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்.” (1கொரி. 14:5) என்றும் சொல்கிறார்.
இந்த அந்நிய பாஷை என்றால் என்ன? இதனால் நமக்கு என்ன பிரயோஜனம்? என்பதை வேத வசனத்தின் மூலம் நாம் அறிந்து கொண்டால், இந்த அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள நம் உள்ளமும் வாஞ்சிக்கும்.