2. பரிசுத்த ஆவியானவரும், அந்நிய பாஷையும்!

 


2. பரிசுத்த ஆவியானவரும், அந்நிய பாஷையும்!

சகோ.மோகன் சி. லாசரஸ்

பெந்தெகோஸ்தே என்னும் நாளில் எருசலேமில் கூடியிருந்த இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் மீது, இயேசு கிறிஸ்து வாக்குக் கொடுத்தபடி, பரிசுத்த ஆவியானவர் பொழிந்தருளப்பட்டார்.

“அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்த ருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.” (அப். 2:4)

பரிசுத்த ஆவியானவர் பொழிந்தருளப்பட்ட அந்த நாளிலேதான் திருச்சபை ஸ்தாபிக்கப்பட்டது. ஆகவே, அந்த நாளில் ஆவியானவர் வித்தியாசமான முறையில் செயல்பட்டதைப் பார்க்கிறோம்.

அன்று, அங்கு கூடி வந்திருந்த ஜனங்களின்பாஷைகளில் அவர்கள் பேசினார்கள். இன்றும் இப்படி

ஆவியானவர் கிரியை செய்வதைக் காணலாம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஒரு பாரம்பரிய சபையின் போதகர் ஒருவர், தன் வாழ்க்கையில் நடந்த ஒரு அனுபவத்தை எனக்குக் கூறினார்: 

அவருடைய கிராமத்தில் ஒரு பெந்தெகோஸ்தே சபையில் கன்வென்ஷன் கூட்டம் நடைபெற்றது. இவரும், இராணுவத்தில் வேலை பார்க்கும் இவரது நண்பரும் வேடிக்கை பார்க்க அந்தக் கூட்டத்திற்குச் சென்றார்கள். அங்கே தேவப் பிள்ளைகள் பரிசுத்த ஆவியினால் நிறைந்து, அந்நிய பாஷைகளைப் பேசி, தேவனைத் துதித்துக் கொண்டிருந்தார்கள்.

இராணுவத்திலிருந்து வந்திருந்த நண்பர், அதை யெல்லாம் பார்த்து பரிகாசம் பண்ணிக் கொண்டி ருந்தார். திடீரென்று அந்தக் கூட்டத்திலிருந்த ஒரு தாயார் சத்தமாக அந்நிய பாஷை பேசினார்கள்.

உடனே இராணுவத்திலிருந்து வந்திருந்த அந்த நண்பரின் முகம் வேறுபட்டது. ஒரு பயமும், திகிலும் காணப்பட்டது. அப்படியே முழங்கால்படியிட்டு ஜெபிக்க ஆரம்பித்தார். அந்தப் போதகருக்கு ஒன்றும் விளங்கவில்லை. “திடீரென்று இவருக்கு என்ன சம்பவித்தது?” என்று ஆச்சரியப்பட்டார். கூட்டம் முடிந்தபோது அந்த நண்பர், “படிப்பறிவில்லாத அந்தத் தாயாருக்கு தமிழே வாசிக்கத் தெரியாது.

ஆனால், அவர்கள் ஹிந்தி பாஷையை ஒரு தவறில்லாமல் பேசினார்கள். அதுவும், நான் இராணுவத்தில் இருந்தபோது செய்த ஒரு பாவத்தைக் குறித்துப் பேசினார்கள். ஆகவேதான், நான் நடுங்கிப் போனேன்” என்றார்.

“இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் நான் பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளையும், அந்நிய பாஷை பேசும் அனுபவத்தையும் விசுவாசிக்க ஆரம்பித்தேன்” என்று அந்தப் போதகர் கூறினார்.

ஒரு இந்துக் குடும்பத்தில் பிறந்து, இயேசுவை அறிந்து கொண்ட ஒரு சகோதரி, தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை இப்படியாக என்னிடத்தில் கூறினார்:

“இயேசுவை அறிந்து கொண்ட சமயத்தில் ஒருநாள், சில தேவப் பிள்ளைகளோடு சேர்ந்து ஜெபிக்கிற சமயத்தில், ஒரு தாயார் ஆவியில் நிரம்பி, அந்நிய பாஷையில் பேசினார்கள். அப்பொழுது இந்த அனுபவங்களெல்லாம் எனக்குத் தெரியாது. என் உள்ளத்தில் பல கேள்விகள் இருந்தது.

திடீரென்று அந்தத் தாயார் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார்கள். என் உள்ளத்தில் என்னென்ன கேள்விகள் இருந்ததோ; எல்லாவற்றிற்கும் அவர்கள் மூலமாக ஆவியானவர் எனக்குப் பதில் கொடுத்தார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்தத் தாயாருக்கு தமிழே வாசிக்கத் தெரியாது. படிப்பறி வில்லாத அந்தத் தாயார், அழகான ஆங்கிலத்தில் பேசியது என்னை ஆச்சரியப்பட வைத்தது. அதன் பிறகு இன்னும் அதிகமாய் இயேசுவில் விசுவாசம் வைக்க ஆரம்பித்தேன்” என்றார்.

பாருங்கள்! பெந்தெகோஸ்தே நாளில் கிரியை செய்ததைப்போல, இன்றும் ஆவியானவர் கிரியை செய்கிறார்.

‘கொர்நேலியு’ என்கிற, நூற்றுக்கு அதிபதியின் வீட்டார் இயேசுவை ஏற்றுக் கொண்டபோது, பரிசுத்த ஆவியானவர் அவர் மீது இறங்கினார். அப்பொழுது அவர்கள் மற்றவர்களுடைய பாஷையில் பேசவில்லை.

அவர்கள் பல பாஷைகளைப் பேசி, தேவனைப் புகழ்ந்தார்கள் (அப். 10:45). எபேசு பட்டணத்திற்குப் பவுல் வந்தபோது, சில தேவப் பிள்ளைகளைச் சந்திக்கிறார்.

பரிசுத்த ஆவியானவரைக் குறித்துக் கேள்விப் படாதிருந்த அவர்களுக்கு, பவுல் பரிசுத்த ஆவியான வரை அறிவித்து, ஜெபிக்கும்போது, “பரிசுத்தஆவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.”(அப். 19:6)

பாருங்கள்! இவர்களும் மற்றவர்களுடைய பாஷையில் பேசவில்லை, அந்நிய பாஷைகளைப் பேசினார்கள்.

பரிசுத்த ஆவியினால் நிறைந்து, அந்நிய பாஷைகளைப் பேசும்போது, பெந்தெகோஸ்தே நாளில் நடந்ததுபோல மற்றவர்களுக்குத் தெரிந்த பாஷையில் பேசவேண்டுமென்பதில்லை.

அந்நாளில் உலகமெங்கும் சுவிசேஷம் எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக, ஆவியானவர் அப்படி செயல்பட்டார். மற்றப்படி பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்போது, யாரும் அறிந்திராத அந்நிய பாஷைகளைப் பேசி, தேவனில் களிகூரலாம்.

பரிசுத்த ஆவிக்குள் நிரம்பி, அந்நிய பாஷைகளைப் பேசுவது, அர்த்தமற்ற அனுபவமல்ல. அப்படி யென்றால், “நீங்களெல்லாரும் அந்நிய பாஷை களைப் பேசும்படி விரும்புகிறேன்” என்று, பவுல் அப்போஸ்தலன் எழுதியிருக்க மாட்டார்.

“உங்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.” (1 கொரி. 14:18) என்று, பரி. பவுல், தன் அனுபவத்தை எழுதியிருக்கிறார்.

அந்நிய பாஷையில் விண்ணப்பம் பண்ணலாம் (1 கொரி. 14:14), அந்நிய பாஷையில் பாடலாம் (1 கொரி. 14:15), அந்நிய பாஷையில் ஸ்தோத் தரிக்கலாம் (1 கொரி. 14:16), அந்நிய பாஷைகளைப் பேசி தீர்க்கதரிசனம் சொல்லலாம் (அப். 19:6). இந்த அனுபவங்களெல்லாம் பவுலுக்கு இருந்தது. ஆகவேதான் அவைகளைக் குறித்து எழுதியிருக்கிறார். இது, பவுல் அப்போஸ்தலனுடைய காலத்தோடு முடிந்து போன அனுபவமல்ல. இன்றும் இந்த அனுபவத்தை நாம் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த அனுபவத்தைப் பெற்ற சிலர் தவறுகிறபடி யினால், “இந்த ஆவிக்குரிய அனுபவம் சரியில்லை” என்று சொல்கிறவர்கள் உண்டு.

இரட்சிக்கப்பட்ட அனுபவத்தைப் பெற்ற சிலர். பின்வாங்கிப் போகிறார்கள். அதற்காக, “இரட்சிப்பின் அனுபவமே இல்லை” என்பது, எவ்வளவு முட்டாள்தனமானது!

அப்படித்தான் இந்த ஆவிக்குரிய அனுபவத்திலும், ஆவியின் நிறைவைப் பெற்று, அந்நிய பாஷை பேசுகிற கோடிக்கணக்கான தேவப் பிள்ளைகள் உலகமெங் கிலும் ஆண்டவருக்குச் சாட்சியாக இருக்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் இந்த அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று

வேத வசனம் சொல்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *