3. அந்நிய பாஷையில் பேசுகிறவன் தேவனோடு பேசுகிறான்!

 


3. அந்நிய பாஷையில் பேசுகிறவன் தேவனோடு பேசுகிறான்!

சகோ.மோகன் சி. லாசரஸ்

அந்நிய பாஷை பேசுகிறதினால் உண்டாகிற ஆசீர்வாதங்கள் என்ன?

‘… அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில்

பேசுகிறான்.” (1கொரி. 14:2) அந்நிய பாஷையில் பேசுகிறவன், தேவனிடத்தில்

பேசுகிறான். அதாவது, தேவனிடத்தில் இரகசியம் பேசுகிறான். “அந்நிய பாஷை பேசினால், அதன் அர்த்தத்தைச் சொல்ல வேண்டும்” என்று, சிலர் சொல்வார்கள். அது அறியாமையினால் சொல்கிற காரியம்.

‘இரகசியம்’ என்றாலே, மற்றவர்களுக்குத் தெரியாமல் இரண்டு பேர் பேசிக் கொள்வதுதான் இரகசியம். மற்றவர்கள் புரிந்து கொள்வதுபோல் பேசுவது இரகசியமல்ல. ஒரு விசுவாசியும், ஆண்டவரும் இரகசியம் பேசுகிற அனுபவம்தான், அந்நிய பாஷையில் பேசுகிற அனுபவம்.

என்னோடு வேதாகமக் கல்லூரியில் படித்த ஆங்கிலோ இந்திய வகுப்பைச் சார்ந்த ஒரு சகோதரர், எனக்கு நெருங்கிய நண்பர். ஒரு சமயம், அவருடைய வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தேன். அவர்கள், தங்கள் வீட்டில் ஆங்கிலத்தில்தான் பேசிக் கொள்வார்கள். சில சமயங்களில் வித்தியாசமான ஒரு மொழியில் பேசுவதைக் கவனித்தேன். அது ஆங்கில உச்சரிப்பைப் போலிருக்கும்.

ஆனால், ஒன்றும் விளங்காது; ஒரு வார்த்தைகூட புரியாது. ‘இது என்ன பாஷை?” என்று என் நண்பரிடத்தில் கேட்டேன். அதற்கு அவர், “இது எங்கள் குடும்பத்தார் மாத்திரம் பேசக்கூடிய இரகசிய பாஷை. நாங்கள் மற்றவர்களுக்குத் தெரியாமல் எங்கள் குடும்பக் காரியங்களைப் பேசிக் கொள்ள நாங்கள் உருவாக்கிய பாஷை. ஆங்கில வார்த்தைகளோடு ஒரு சில எழுத்துக்களைச் சேர்த்துப் பேசுவோம். எங்களைத் தவிர, வேறு யாராலும் இதைப் புரிந்து கொள்ள முடியாது” என்றார்.

இப்படித்தான் ஆண்டவரும், தன் பிள்ளைகள் தன்னோடு இரகசியம் பேசுவதற்காகக் கொடுத்த பாஷைதான் அந்நிய பாஷை என்பது. ஒரு தேவனுடைய பிள்ளை, பரிசுத்த ஆவியினால் நிறைந்து, அந்நிய பாஷையில் பேசும்போது, ஒருவரும் அதைப் புரிந்து கொள்ள முடியாது.

ஆனால், தேவன் அதைப் புரிந்து கொள்வார். ஏனென்றால், அவர்கள் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறார்கள்.

நீங்களும் தேவனோடு இரகசியம் பேச விரும்புகிறீர் களா? அந்நிய பாஷையில் பேசுகிற அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

Leave a Reply