4. அந்நிய பாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்தி விருத்தி உண்டாகப் பேசுகிறான்

 


4. அந்நிய பாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்தி விருத்தி உண்டாகப் பேசுகிறான்!

சகோ.மோகன் சி. லாசரஸ்

அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்தி விருத்தி உண்டாகப் பேசுகிறான்;” (1கொரி.14:4)

அந்நிய பாஷையில் பேசப் பேச, உங்களை அறியாமலேயே உங்கள் பக்தி விருத்தியடையும். நீங்கள் வெறும் பக்தியோடு இருந்தால் போதாது, உங்கள் பக்தி விருத்தியடைய வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். அதற்குத்தான் இந்த அனுபவத்தைக் கர்த்தர் நமக்குத் தருகிறார். வேதத்தில் சொல்லப்பட்ட மற்ற வரங்களெல்லாம் மற்றவர்களு டைய பிரயோஜனத்திற்காகத்தான்.

தீர்க்கதரிசனம்-சபையின் பக்தி விருத்திக்காக! (1கொரி.14:4),

குணமளிக்கும் வரம்-மற்றவர்களுடைய

சுகத்திற்காக! அற்புதங்களைச் செய்யும் சக்தி-மற்றவர்களுடைய நன்மைக்காக!

ஆவிகளைப் பகுத்தறிகிற வரம்-மற்றவர்களுடைய விடுதலைக்காக!

இப்படி எல்லா வரங்களும் மற்றவர்களுடைய பிரயோஜனத்திற்காக நமக்கு அருளப்பட்டிருக்கிறது. ஆனால், அந்நிய பாஷையில் பேசுவதுதான், பேசுகிற நம்முடைய பக்தி விருத்திக்காக அருளப்பட்டிருக்கிறது.

ஆகவேதான், நாம் எல்லோரும் அந்நிய பாஷை யில் பேச வேண்டுமென்று ஆண்டவர் சொல்கிறார்.

“அந்நிய பாஷையில் பேசாவிட்டால், பக்தி விருத்தியடையாதா?” என்று ஒரு கேள்வி எழும்பலாம்! நாம் பக்தியில் விருத்தியடைய பல வழிகள் இருக் கலாம். ஆனால், நம்முடைய பக்தி விருத்தியடைய ஆவியானவர் சொல்லியிருக்கிற காரியம், அந்நிய பாஷையில் பேசுவதுதான்.

என் சொந்த அனுபவத்தில் இதை நான் அனுபவிக்கிறேன். ஜெப நேரத்தில் பரிசுத்த ஆவியில் நிரம்பி, அந்நிய பாஷையில் பேசப் பேச, என் சோர்புகள் மாறி, என் ஆவியில் புது உற்சாகம் வருவதையும், ஆண்டவர் மீது அளவில்லாத அன்பு வருவதையும், என் பக்தி விருத்தியடைவதையும் உணர்கிறேன்.

“அன்புதான் ஒழிந்து போகாது; அந்நிய பாஷைகள் ஒழிந்து போகும்;

ஆகவே, அன்புதான் முக்கியம்; அந்நிய பாஷை ஒழிந்து விட்டது: இப்போது அந்நிய பாஷை கிடையாது” என்று, 1 கொரி. 13:8ம் வசனத்தை சுட்டிக் காட்டுகிறவர்கள் உண்டு.

அன்புதான் பெரியது. அன்பில்லாமல் எந்த வரம் இருந்தாலும் பிரயோஜனமில்லை என்பதை யாரும் மறுக்க முடியாது. அதே சமயத்தில், அந்நிய பாஷை யும் முக்கியம் என்பதை வேதம் கூறுகிறது.

“அந்நிய பாஷை ஒழிந்து விட்டது” என்பது, ஒரு தவறான புரிந்து கொள்ளுதல். “அந்நிய பாஷை ஒழிந்து விட்டது” என்று வேதத்தில்

சொல்லப்படவில்லை. “அந்நிய பாஷைகளானாலும்

ஓய்ந்துபோம்” என்றுதான் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது (1 கொரி.13:8).

இதனுடைய அர்த்தமென்ன?

ஒரு தேவனுடைய பிள்ளை, ஜெப நேரத்தில் சில மணி நேரங்கள் அந்நிய பாஷையில் பேசலாம்; 24 மணி நேரமும் பேசிக் கொண்டிருக்க முடியாது. பேசிப் பேசி, ஓய்ந்து போவார்கள்.

ஆனால், 24 மணி நேரமும் அன்பை வெளிப் படுத்த முடியும். இதைத்தான் ஆவியானவர் அப்படி எழுதி வைத்திருக்கிறார்.

ஆனால், இதை சிலர் தவறாக வியாக்கியானம் செய்து, “அந்நிய பாஷை ஒழிந்து விட்டது; இப்போது இல்லை” என்று தவறாகப் பிரசங்கிக்கிறார்கள்.

கர்த்தர் இவர்களை மன்னிப்பாராக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *