5. அந்நிய பாஷையில் பேசுகிறவன் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம் பண்ணக்கடவன்!
சகோ.மோகன் சி. லாசரஸ்
.அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம் பண்ணக்கடவன்.”(1கொரி.14:13).
“உலகத்திலே எத்தனையோவிதமான பாஷைகள்
உண்டாயிருக்கிறது. அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல.” (1கொரி. 14:10). நாம் பேசுகிற அந்நிய பாஷைக்கும் அர்த்தமுண்டு. மனிதர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், ஆண்டவர் அதைப் புரிந்து கொள்வார்.
பேசுகிற நாமும், நாம் பேசுகிற அந்நிய பாஷையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியும். இதற்காக நாம் விண்ணப்பம் பண்ண வேண்டும்.
1975ம் ஆண்டு. தஞ்சாவூரில் நடைபெற்ற ஆசீர்வாத முகாமில் (BLESSO), ஆண்டவர் என்னை பரிசுத்த ஆவியினால் அளவில்லாமல் நிரப்பினார். பரிசுத்த ஆவியினால் நிறைந்து, அந்நிய பாஷை களைப் பேசி மகிழ்ந்தேன்.
அதன் பிறகு தினமும் தேவ சமூகத்தில் ஜெபிக்கும் போதெல்லாம், பரிசுத்த ஆவியினால் நிறைந்து, அந்நிய பாஷைகளைப் பேசுவேன். ஆனால், நான் பேசுகிற அந்நிய பாஷையின் அர்த்தம் எனக்குத் தெரியாதிருந்தது. ஆனால், அந்நிய பாஷைகளைப் பேசும் போதெல்லாம் கர்த்தருக்குள் பெரிய மன மகிழ்ச்சியும், ஆண்டவர் மீது அளவில்லாத அன்பும் பெருகுவதை உணர்ந்தேன்.
ஒருநாள், நான் வேதத்தைத் தியானித்துக் கொண்டிருந்தபோது, 1 கொரி. 14:13ம் வசனத்தின் மூலம் ஆவியானவர் என்னோடு பேசினார்.
“அந்தப்படி அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம்பண்ணக்கடவன்.” என்று.
“நான் பேசுகிற அந்நிய பாஷைக்கு அர்த்தம் உண்டு. அதை அறிந்து கொள்ள ஆண்டவரிடம் விண்ணப்பம் பண்ண வேண்டும்” என்று ஆவியானவர் திருவுளம் பற்றினார். எனக்குள் ஒரு பெரிய ஆசை எழுந்தது. நான் பேசுகிற அந்நிய பாஷைக்கு அர்த்தம் தெரிய வேண்டுமென்று, விருப்பத்தோடு தேவ சமூகத்தில் ஜெபிக்க ஆரம்பித்தேன். ஆவலோடும், விசுவாசத்தோடும் இந்த வேத வசனத்தைச் சொல்லி, ஜெபிக்க ஆரம்பித்தேன்.
நான் ஜெபித்துக் கொண்டிருந்தபோது, பரிசுத்த ஆவியானவர் என் மீது இறங்கி வந்தார். நான் ஆவியில் நிரம்பி, அந்நிய பாஷைகளைப் பேச ஆரம்பித்தேன். என் உதடுகள் அந்நிய பாஷைகளைப் பேசினது. என் இருதயமோ; அதன் அர்த்தம் தெரிய வேண்டுமென்று தேவனிடத்தில் மன்றாடிற்று.
திடீரென்று, நான் பேசுகிற அந்நிய பாஷைக்கு, என் இருதயத்தில் அர்த்தம் தெரிய ஆரம்பித்தது. முதலில், “இது என் மனப் பிரம்மையாக இருக்குமோ!” என்று எனக்குள் சந்தேகம் எழும்பிற்று. அப்பொழுது ஆவியானவர், அந்நிய பாஷை மூலம் மறுபடியும் என்னோடு பேசினார். “நீ என் வார்த்தைகளை சந்தேகப்படுகிறதென்ன? நான் உன்னோடு பேசிக் கொண்டிருக்கிறேன்” என்று, ஆவியானவர் என் இருதயத்தில் பேசினபோது, நான் விசுவாசிக்க ஆரம்பித்தேன்.
உடனே, அதுவரை இல்லாத ஒரு சந்தோஷம், என் உள்ளத்தில் நிரப்பினது. அந்த நாள்முதல், என் ஜெப நேரம் இன்னும் வித்தியாசமாக மாறிற்று. இப்பொழுது நான் பரிசுத்த ஆவியினால் நிறைந்து, அந்நிய பாஷைகளைப் பேசும்போது, ‘ஆவியானவர் என் மூலமாக என்ன பேசுகிறார்?’ என்பதை என் இருதயத்தில் உணர்ந்து கொள்ள முடிகிறது.
சில சமயங்களில், ஆவியானவர் என் மூலம் அந்நிய பாஷையில் தேவனைப் புகழ்ந்து துதிக்கிறதை உணர்கிறேன் (அப். 10:45, 1 கொரி. 14:16), சில சமயங்களில் ஆவியானவர் எனக்காக மன்றாடுவதை உணர்கிறேன் (ரோமர் 8:26), சில சமயங்களில் அந்நிய பாஷையில் பாடி மகிழ்கிறேன் (1 கொரி. 14:15), சில சமயங்களில் மற்றவர்களுக்காகக் கண்ணீரோடு விண்ணப்பம் பண்ணுவதை உணர்கிறேன் (ரோமர் 8:27, 1கொரி. 14:14)
இப்படி நான் அந்நிய பாஷையில் பேசும்போது, அதன் அர்த்தத்தை விளங்கிக் கொள்கிறபடியினால், அந்த ஜெப நேரம் இனிமையான நேரமாயிருக்கிறது. அர்த்தமுள்ளதாயிருக்கிறது. நீங்களும் இந்த அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். நீங்கள் பேசுகிற அந்நிய பாஷைக்கு அர்த்தத்தை அறிந்து கொள்ளத் தக்கதாக விண்ணப்பம் பண்ணுங்கள். ஆண்டவர், உங்களுக்கும் இந்தக் கிருபையைத் தருவார்.
ஒரு சமயம், ஒரு பட்டணத்திற்கு ஊழியத் திற்காகச் சென்றிருந்தேன். கூட்டம் நடத்துவதற்கு, பலத்த எதிர்ப்பும், பிரச்சனையும் காணப்பட்டது. நான் மிகவும் சோர்ந்து போனேன். இந்தச் சூழ்நிலையில் என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. “யார் மூலமாவது கர்த்தர் என்னோடு பேச மாட்டாரா?” என்று கலங்கினேன். ஒரு வழியும் இல்லாத சூழ்நிலையில் ஜெபிக்க முழங்கால் படியிட்டேன்.
அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் என் மீது இறங்கினார். பரிசுத்த ஆவியினால் நிறைந்து, அந்நிய பாஷைகளைப் பேச ஆரம்பித்தேன். அந்நிய பாஷை மூலமாக ஆவியானவர் என்னோடு பேச ஆரம்பித்தார். “மகனே. பயப்படாதே! நீ பயப்படுகிறபடி ஒன்றும் நடப்பதில்லை! நான் தடைகளை மாற்றித் தருவேன்! என் ஊழியம் தடைப்படாது! நான் உன்னை இங்கே கொண்டு வந்தேன்! என் வல்லமையை விளங்கப் பண்ணுவேன்!” என்று பேசினார். என் உள்ளத்தி லிருந்த பயம், கலக்கமெல்லாம் மறைந்தது.
அதேபோல் கர்த்தர் எல்லாத் தடைகளையும் மாற்றினார். கூட்டம் ஒரு பிரச்சனை இல்லாமல், ஆசீர்வாதமாய் நடந்தது.
பாருங்கள்! இந்த இக்கட்டான நேரத்தில், என்னை ஆறுதல்படுத்த யாரும் இல்லாத சூழ்நிலையில், ஆவியானவரே அந்நிய பாஷை மூலம் என்னோடு பேசி, என்னை தைரியப்படுத்தினார்.
இந்த அனுபவம் எனக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு வரும் இந்த அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். நீங்களும் இதற்காக ஜெபியுங்கள். கர்த்தர், உங்களுக்கும் இந்தக் கிருபையைத் தருவார்.