6. அந்நிய பாஷையில் மன்றாடும் ஆவியானவர்!

 


6. அந்நிய பாஷையில் மன்றாடும் ஆவியானவர்!

சகோ.மோகன் சி. லாசரஸ்

“…ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக் கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக் கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்.” ரோமர் 8:26.

சில சமயங்களில், பிரச்சனைகள், பாரங்கள் நம்மை நெருக்கும்போது, ஜெபிக்க முடியாதபடி தடுமாறுகிறோம்.

“இந்தக் காரியத்திற்காக எப்படி ஜெபிப்பது?” என்று திகைக்கிறோம். அப்படிப்பட்ட சமயங்களில் ஆவியானவர்தாமே நமக்காக வேண்டுதல் செய்கிறார்.

ஒரு சமயம், எனக்கு வீட்டிலும் பிரச்சனை. ஊழியத்திலும் பிரச்சனை! என் உள்ளத்தை ஒரு பாரம் அழுத்தினது. ஜெபித்துப் பார்க்கிறேன், ஜெபிக்க முடியவில்லை. வேதத்தை வாசித்துப் பார்க்கிறேன். விருப்பமில்லை. “யாராவது வந்து எனக்காக ஜெபிக்க மாட்டார்களா?” என்று எதிர்பார்த்தேன், அன்று யாரும் வரவில்லை!

தனித்து விடப்பட்ட வேதனை, என் உள்ளத்தை அழுத்திற்று. மாலை நேரம் வந்தது, நான் வழக்கமாக ஜெபிக்கச் செல்கிற வனாந்திரத்திற்குப் போனேன். ‘என்ன ஜெபிக்க? எப்படி ஜெபிக்க?’ என்று ஒன்றுமே விளங்கவில்லை. திடீரென்று ஒரு வல்லமை என் மீது இறங்கிற்று. அந்நிய பாஷையில் பேச ஆரம்பித்தேன். அந்நிய பாஷையில் பேசுகிறேன்… பேசுகிறேன்… பேசிக் கொண்டேயிருக்கிறேன். பல நிமிட நேரம் அந்நிய பாஷைதான் என் வாயில் வந்து கொண்டேயிருந்தது.

திடீரென்று, ஒரு மனிதன் மின்சார வல்லமையில் அகப்பட்டு. விடுதலையாவதைப்போல, அந்த வல்லமையிலிருந்து விடுபட்டதை உணர்ந்தேன். “இந்த அனுபவம் புதிதாக இருக்கிறதே! இது என்ன?” என்ற கேள்வி என் உள்ளத்தில் எழுந்தாலும், என் இருதயத்தின் பாரமெல்லாம் நீங்கி, என் உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி வந்திருந்தது. என் இருதயம் இலகுவாய் இருந்ததை உணர்ந்தேன்.

நான் முழங்கால்படியிட்டு, ஆண்டவரிடத்தில் விசாரித்தபோது; “உன் இருதயத்தில் இருந்த துக்கத் தினால் உன்னால் ஜெபிக்க முடியாதபடி பாரம் கொண்டிருந்தாய். ஆவியானவர் உன் மீது இறங்கி, உன் நாவைப் பயன்படுத்தி, உனக்காக வாக்குக்கடங்காத பெருமூச்சோடு பிதாவினிடத்தில் வேண்டுதல் செய்திருக்கிறார்.” என்று விளக்கம் கொடுத்தார் (ரோமர் 8:26).

ஒரு சமயம், ஒரு குழுவாக நாங்கள் ஜெபித்துக் கொண்டிருந்தபோது, ஒரு சகோதரன் ஆவியில் நிரம்பி, அந்நிய பாஷைகளைப் பேசினார். அவர் கண்ணீர் விட்டு அழுது கொண்டே, பெரு மூச்சோடு அந்நிய பாஷைகளைப் பேசினார். நான் அவரைக் கவனித்தபோது, பாஷைகளை வியாக்கியானம் பண்ணுகிற வரம் (1கொரி. 12:10) எனக்குள் கிரியை செய்தபடியினால், அவர் அந்நிய பாஷையில் ஜெபிக்கிறதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு குறிப்பிட்ட பாவத்தை அவரால் விட முடியவில்லை. அதைக் குறித்த வருத்தம் அவருக்கு இருந்தது. அந்தப் பாவத்தை மன்னிக்கும்படியும், அந்த பெலவீனத்திலிருந்து விடுதலை கொடுக்கும்படியும். ஆவியானவர் அவருக்காக பிதாவினிடத்தில் பெருமூச்சுகளோடு மன்றாடி ஜெபிக்கிறதை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது.

…..ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.” (ரோமர் 8:26) என்பது, எத்தனை நிச்சயமான அனுபவம்!

ஆவியானவர் நமக்காக மன்றாடுவது மாத்திரமல்ல, நம் மூலமாக மற்றவர்களுக்காகவும் மன்றாடுகிறார்.

“ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிற படியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்.”

(ரோமர் 8:27)

ஆவியானவர் மற்றவர்களுக்காக, விசேஷமாக பரிசுத்தவான்களுக்காக, தேவ சித்தத்தின்படி வேண்டுதல் செய்கிறார்.

ஒரு சமயம், அதிகாலை இரண்டு மணிக்கு ஆண்டவர் என்னை எழுப்பி, ஜெபிக்கும்படி தூண்டினார். “நான் என்ன காரியத்திற்காக ஜெபிக்க வேண்டும், ஆண்டவரே?” என்று வேண்டுதல் செய்தபோது, ஆவியானவர் ஒரு தேவ மனிதரை என் கண்முன் நிறுத்தி, “இவனுக்காக ஜெபி” என்றார்.

இவர், தன் பிள்ளைகள் காரியமாக ஜெபிக்கும்படி சில நாட்களுக்கு முன்பாக எனக்குக் கடிதம் எழுதி யிருந்தார். “அதற்காக நான் ஜெபிக்க வேண்டுமோ?” என்று நினைத்த மாத்திரத்தில், “அதற்காக அல்ல. அவன் வியாதிப்பட்டு, மரணப் போராட்டத்தில் இருக்கிறான். அவன் விடுதலை பெற ஜெபம் பண்ணு” என்று,ஆவியானவர் தெளிவாகப் பேசினார்.

அவருக்காக நான் ஜெபிக்க ஆரம்பித்தவுடன், பரிசுத்த ஆவியானவர் என்னை ஆட்கொண்டார். நான் ஆவியில் நிரம்பி, அந்நிய பாஷையில் ஜெபிக்க ஆரம்பித்தேன். பெருமூச்சு விட்டு, அழுது கொண்டே ஜெபித்தேன். சுமார் அரை மணி நேர ஜெபத்திற்குப் பிறகு, என் உள்ளத்தில் ஒரு சந்தோஷம் வந்தது.

“ஆண்டவர் பதில் கொடுத்து விட்டார்” என்ற நிச்சயம், என் உள்ளத்தில் வந்தது. ”நான் ஜெபித்து விட்டேன்; இனி படுக்கப் போலாமா?” என்றபோது, ஆண்டவர் இன்னொரு ஊழியரை எனக்குக் காண்பித்து, “இவனுக்காக ஜெபம் பண்ணு” என்றார்.

அவர் கர்த்தருக்காக மிகவும் வைராக்கியமுள்ள ஊழியர். ‘அவருக்காக என்ன காரியத்திற்காக ஜெபிக்க வேண்டும்?’ என்று வேண்டுதல் செய்தபோது, “பொல்லாத மனிதர்களால் உண்டான போராட்டத்தினால் மிகவும் சோர்ந்து போயிருக்கிறான். உயிருக்கே ஆபத்தான போராட்டத்தில் இருக்கிறான்” என்பதை ஆவியானவர் எனக்குக்காண்பித்தார்.

அவருக்காக நான் ஜெபிக்க ஆரம்பித்ததும். ஆவியானவர் என்னை ஆட்கொண்டு. மன்றாடி ஜெபிக்க ஆரம்பித்தார். அந்நிய பாஷையில் சுமார் அரைமணி நேரம் நான் ஜெபித்துக் கொண்டிருந்தேன். அவருக்காக ஆவியானவர் போராடி, மன்றாடி. ஜெபிக்கிறதை என்னால் உணர முடிந்தது.

என் ஆவியில் ஒரு மகிழ்ச்சி வரும்வரை ஜெபித்துக் கொண்டிருந்தேன். அந்த ஊழியருக்காகக் கர்த்தர் ஒரு வாக்குத்தத்தம் கொடுத்து, வெற்றியை உறுதிப்படுத்தினார்.

”ஆண்டவரே, நீர் சொன்ன பரிசுத்தவான் களுக்காக ஜெபித்து விட்டேன். இனி தூங்கச் செல்லலாமா?” என்று நான் கேட்டபோது, “இல்லை, இன்னொருவருக்காகவும் நீ ஜெபிக்க வேண்டும்” என்று. இன்னாருவரைக் குறித்து என்னோடு ஆண்டவர்

அவருக்காகவும் பரிசுத்த ஆவிக்குள் நிரம்பி, அந்நிய பாஷையில் ஜெபிக்க ஆரம்பித்தேன். பதில் பெற்று விட்ட நிச்சயம் வரும்வரை ஆவியானவர் ஜெபத்தில் உதவி செய்தார்.

இந்த மூன்று பேருக்காகவும் நான் ஜெபித்து முடித்தபோது, அதிகாலை நான்கு மணி ஆகியிருந்தது. “இப்பொழுது நீ ஓய்வெடுக்கச் செல்லலாம்” என்று ஆண்டவர் என்னை நடத்தினார்.

அடுத்த நாள் காலை நான் எழுந்ததும், அந்த மூன்று பேருக்கும். நான் ஜெபித்த காரியத்தைக் கடிதத்தில் எழுதினேன். மூன்று பேரிடம் இருந்தும் உடனே எனக்குப் பதில் கடிதம் வந்தது.

முதலாவது சகோதரர், “சில நாட்களாக சரீரம் பாதிக்கப்பட்டு, இரவும், பகலும் தூக்கமில்லாமல் ஒரு மரணப் போராட்டத்தில் இருந்து, நீங்கள் எனக்காக ஜெபித்த அதே அதிகாலை நேரத்தில், ஆண்டவர் என் சரீரத்தில் அற்புத சுகம் கொடுத்தார். அதன் பிறகுதான் என்னால் தூங்க முடிந்தது!” என்று கடிதம் எழுதியிருந்தார்கள். இரண்டாவது ஊழியர். “நீங்கள் குறிப்பிட்டிருந்தபடியே, மனிதர்களால் உண்டான போராட்டத்தினால் மரண பயத்தோடு கலங்கிக் கொண்டிருந்தேன். நீங்கள் ஜெபித்த அன்றிலிருந்து சூழ்நிலையைக் கர்த்தர் மாற்றி விட்டார்” என்று மகிழ்ச்சியோடு எழுதியிருந்தார்.

மூன்றாவது நபரிடமிருந்தும் மகிழ்ச்சியான பதில்

வந்தது. இதுபோல பல சமயங்களிலும், பலருக்காகவும் மன்றாடி ஜெபிக்க ஆவியானவர் என்னை நடத்தியிருக்கிறார், நடத்திக் கொண்டிருக்கிறார்.

இதைக் குறித்துத்தான்,

“எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுத லோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம் பண்ணி, அதன் பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக் கொண்டிருங்கள்.” (எபேசியர் 6:18) என்று வசனம் சொல்கிறது.

“சகல பரிசுத்தவான்களுக்காகவும் ஆவியினாலே ஜெபம் பண்ண வேண்டும்” (PRAY IN THE SPIRIT) என்று இந்த வசனம் கூறுகிறது. “ஆவியினாலே ஜெபம் பண்ணுவது” என்பது, “அந்நிய பாஷையிலே ஜெபம் பண்ணுவது” என்று. தன் அனுபவத்தோடு பரி.பவுல் எழுதியிருக்கிறார் (1கொரி. 14:14).

…நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம் பண்ணினால், என் ஆவி விண்ணப்பம்பண்ணுமே யன்றி, என் கருத்து பயனற்றதாயிருக்கும்.”

1கொரி. 14:14.

அந்நிய பாஷையிலே விண்ணப்பம் பண்ணுகிற அனுபவம், பவுல் அப்போஸ்தலனுக்கு இருந்தது. நாமும் ஆவியில் நிரம்பி, அந்நிய பாஷையில் விண்ணப்பம் பண்ணலாம்! அதாவது, பரிசுத்த ஆவி யானவர், நம் ஆவியோடு இடைபட்டு, நம் நாவைப் பயன்படுத்தி, அந்நிய பாஷையில் ஜெபிப்பது. இதைத்தான், ‘ஆவியிலே ஜெபிக்கிற அனுபவம்’ என்று பவுல் குறிப்பிடுகிறார்.

எப்பொழுதுமே நாம் அந்நிய பாஷையில் ஜெபித்துக் கொண்டிருக்க மூடியாது, ஆகவேதான், …நான் ஆவியோடும் விண்ணப்பம் பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம் பண்ணுவேன்…” (1 கொரி. 14:15) என்று, பவுல் தன் அனுபவத்தைச் சொல்கிறார்.

நாமும் இப்படி ஜெபிக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். ஆகவேதான் ஆவியில் நிரம்பி, அந்நிய பாஷையில் பேசுகிற அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இது வேத வசனத்தோடு கூடிய நம்முடைய அனுபவம்.

சிலர் இந்த ஆவிக்குரிய அனுபவங்களை அறியாதபடியினால், “அந்நிய பாஷைகளைப் பேசுவது அவசியமல்ல” என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

மனிதர்களுடைய வார்த்தைகளுக்குச் செவி கொடாமல், வேத வசனங்களை பரிசுத்த ஆவியான வரின் உதவியோடு ஆராய்ந்து பாருங்கள். ஆவியான வர் சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *