7. அந்நிய பாஷையும், தீர்க்கதரிசனமும்

 


7. அந்நிய பாஷையும், தீர்க்கதரிசனமும்!

சகோ.மோகன் சி. லாசரஸ்

“அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்தி விருத்தி உண்டாகப் பேசுகிறான்; தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான்;…ஆதலால் நீங்கள் தீர்க்க தரிசனஞ்சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்” (1 கொரி. 14:4,5) என்று பவுல் அப்போஸ்தலன், ஆண்டவரின் விருப்பத்தை எழுதுகிறார்.

அந்நிய பாஷை பேசுகிறவர்களை தீர்க்கதரிசனம் சொல்கிறவர்களாகவும் கர்த்தர் பயன்படுத்துகிறார். இதில் இரண்டு அனுபவங்கள் உண்டு.

ஒன்று, அந்நிய பாஷை பேசுகிறவர்களே, அந்நிய பாஷை பேசி, தீர்க்கதரிசனம் சொல்வதுண்டு.

எபேசு பட்டணத்தில் விசுவாசிகளை பவுல் சந்தித்தபோது. பரிசுத்த ஆவியானவரைக் குறித்து அவர்களுக்குச் சொல்லி; “…பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.” (அப்.19:6)

மற்றொன்று. ஒருவர் அந்நிய பாஷைகளைப் பேசும்போது, மற்றொருவர் அதன் அர்த்தத்தைச் சொல்வது.

பல ஆண்டுகளுக்கு முன்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கிராமத்திற்கு ஊழியத்திற்காகச் சென்றிருந்தேன். அந்த ஊரில் ஆலயம் கிடையாது. ஒரு ஸ்கூல் கட்டிடத்தில்தான் (C.S.I) ஆராதனை நடைபெற்றது.

ஒருநாள் இரவு, கூட்டம் முடிந்ததும், ஜெபம் பண்ணுவதற்கு அந்த ஸ்கூல் கட்டிடத்தில் கூடினோம். அந்த இடம் நிரம்பத் தக்கதாக ஜனங்கள் கூடி விட்டார்கள்.

அந்தக் கிராமத்தில் ஆலயம் கட்ட வேண்டும். என்று, அந்த மக்களுக்கு அதிக விருப்பம். நாங்கள் கூடி, தேவனைத் துதித்து, ஜெபித்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று ஆவியானவர் சொன்னார்: “யாவரையும் அமைதியாக இருக்கச் சொல், நான் பேச வேண்டும்” என்றார். யாரைக் கொண்டு? எப்படிப் பேசுவார்? என்று எனக்குத் தெரியாது.

ஆவியானவர் சொன்னபடியினால், “யாவரும் அமைதியாயிருங்கள், கர்த்தர் பேசப் போகிறார்” என்றேன். யாவரும் அமைதியானார்கள்.

அப்பொழுது, ஒரு தாயார் மீது பரிசுத்த ஆவியான வர் இறங்கினார். அவர்கள் அந்நிய பாஷைகளைப் பேசி,தீர்க்கதரிசனம் சொன்னார்கள். அந்த சபையிலுள்ள பாவங்களைக் குறித்தும், மனந்திரும்ப வேண்டும்’ என்றும் பேசினார்கள்.

உடனே யாவருக்குள்ளும் பாவ உணர்வு உண்டா யிற்று. சபை ஊழியர், சபை கமிட்டி அங்கத்தினர்கள், பெரியவர்கள், சிறியவர்கள் எல்லோரும் கண்ணீர் விட்டு அழுதார்கள். அந்த அழுகையின் சத்தத்தைக் கேட்டு. ஊரே திரண்டு வந்து விட்டது. சுமார் அரை மணி நேரம் கழிந்தது. ஆவியானவர் சொன்னார்: யாவரையும் அமைதியாயிருக்கச் சொல். நான் மறுபடியும் பேச விரும்புகிறேன்” என்றார்.

யாவரும் அமைதியானவுடன், மற்றொரு சகோதரி மீது பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அவர்கள் அந்நிய பாஷைகளைப் பேசி, தீர்க்கதரிசனம் சொன்னார்கள்: “உங்களுக்கு இரங்கினேன், உங்கள் விருப்பத்தின்படி ஆலயத்தைக் கட்டித் தருவேன்” என்று வாக்குக் கொடுத்தார். பாருங்கள். ஆவியானவர் பேசினபடியே அந்தக் கிராமத்தில் உடனே ஆலயம் கட்ட கர்த்தர் வழிகளைத் திறந்தார்.

சில மாதங்கள் கழித்து, அந்த சபைப் பெரியவர்கள் என்னைப் பார்க்க வந்தார்கள். “அன்று ஆண்டவர் சொன்னபடி ஆலயம் கட்டப்பட்டு விட்டது. நீங்கள் எங்கள் ஊருக்கு வர வேண்டும்” என்று அழைக்க வந்தார்கள்.

ஆதித் திருச்சபையில் மாத்திரமல்ல, இன்றும் ஆவியானவர் சபைகளில் அருமையாய் கிரியை செய்கிறார். நாம் அவருக்கு இடம் கொடுத்தால், அவர் நம் வாழ்விலும் அற்புதமாகக் கிரியை செய்வார்.

மற்றொரு சமயம், ஒரு முழு இரவு ஜெபத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு ஜெப நேரத்தில் எல்லோரும் ஆவியில் நிரம்பி, அந்நிய பாஷைகளைப் பேசிக் கொண்டிருந்தபோது, ஒரு சகோதரன் மாத்திரம் மிகவும் சத்தமாக அந்நிய பாஷைகளைப் பேசினார்.

அப்போது ஜெபத்தை நடத்தின சகோதரர், மற்றவர் களை அமைதியாய் ஜெபிக்கக் கேட்டுக் கொண்டார். அங்கிருந்த இன்னொரு சகோதரன் மீது ஆவியானவர் இறங்கினார்.

முந்திய சகோதரன் பேசின அந்நிய பாஷைக்கு இவர் அர்த்தம் சொல்ல ஆரம்பித்தார். அவர் அந்நிய பாஷை பேச, இவர் அர்த்தம் சொல்ல, அதன் மூலம் ஆவியானவர், வந்திருந்த ஒவ்வொருவரோடும் பேசினார். சில நிமிடங்கள் கழித்து, மற்றொரு சகோதரி அந்நிய பாஷையில் சத்தமாய் பேச ஆரம்பித்தார்கள். உடனே முந்திய சகோதரன் அமைதியாகி விட்டார்.

அப்பொழுது, மற்றொரு சகோதரன், அந்த அந்நிய பாஷைக்கு அர்த்தம் சொல்ல ஆரம்பித்தார். வந்திருந்த யாவரும் இதன் மூலம் ஆறுதலும், பக்தி விருத்தியும் அடைந்தார்கள்.

இதைக் குறித்துத்தான் பரிசுத்த பவுல், “யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்று பேர்மட்டில் அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும். அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்.” (1 கொரி. 14:27,28) என்று சொல்கிறார்.

‘சபையில் அந்நிய பாஷையில் பேசக் கூடாது’ என்று பவுல் கூறவில்லை; அந்நிய பாஷைக்கு அர்த்தம் சொல்கிற, அதாவது பாஷைகளை வியாக்கியானம் பண்ணுகிற வரம் பெற்றவர்கள் சபையில் இருந்தால் சபையில் பேசலாம் (1 கொரி. 12:10) என்றுதான் சொல்கிறார்.

அர்த்தம் சொல்கிறவர்கள் இல்லாவிட்டால், சபையில் சத்தமாக அந்நிய பாஷைகளைப் பேசி, மற்றவர்களுக்கு இடைஞ்சல் உண்டாக்காமல், உங்களுக்கும், தேவனுக்கும் தெரிய அமைதியாக அந்நிய பாஷைகளைப் பேசலாம் (1கொரி. 14:28).

சபையில் கூடி வரும்போது, இந்த ஒழுங்குகளைப் பின்பற்ற வேண்டும். மற்றபடி தனித்து நீங்கள் ஜெபிக்கும்போது, அது ஆண்டவருக்கும், உங்களுக் கும் உள்ள காரியம், நீங்கள் ஆவியில் நிரம்பி, அந்நிய பாஷையில் பேசலாம், பாடலாம். துதிக்கலாம். ஆண்டவர் அதை விளங்கிக் கொள்வார்.

ஆகவே, இந்த ஆவிக்குரிய அனுபவங்களை நாடுங்கள். அதைக் குறித்து வேதத்தில் வாசித்து, தியானியுங்கள் (1 கொரி. 12, 14 அதிகாரங்கள்). ஆவிக்குரிய அனுபவங்களில் தேறும்படி நாடுங்கள் (1 கொரி.14:12).

“இப்படியிருக்க, சகோதரரே, தீர்க்கதரிசனஞ் சொல்ல நாடுங்கள், அந்நிய பாஷைகளைப் பேசுகிற தற்கும் தடைபண்ணாதிருங்கள். சகலமும் நல் லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது.”

(1 கொரி. 14:39,40) “அந்நிய பாஷை பேசுகிறதற்குத் தடை பண்ணா திருங்கள்” என்பது, தேவனுடைய வார்த்தை. அந்நிய பாஷைக்கு விரோதமாய் பேசுகிறவர்கள்; தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாய் பேசுகிறவர்கள்!

அப்படிப்பட்ட வார்த்தைகளுக்குச் செவி கொடாமல், வேத வசனங்களை திறந்த மனதோடு ஆராய்ந்து, சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள். சில ஆவிக்குரிய அனுபவங்களை உங்களால் புரிந்து கொள்ள முடியா விட்டால், அமைதியாக, அதை விட்டு விடுங்கள்.

அந்த ஆவிக்குரிய அனுபவங்களுக்கு விரோத

மாய் பேசாதிருங்கள். ஆவியானவரின் கிரியைகளை யாரும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் கட்டுப்படுத்தி விட முடியாது. பவுல் அப்போஸ்தலனுடைய ஆவிக்குரிய சில காரியங்களை எல்லோராலும் விளங்கிக் கொள்ளமுடியவில்லை. சிலர் அதற்கு எதிராகப் பேசினபடியால், இயேசுவின் சீஷனாகிய பரி. பேதுரு அதைக் குறித்து இப்படி எழுதியிருக்கிறார் பாருங்கள்:

“…நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்; எல்லா நிருபங் களிலும் இவைகளைக் குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேத வாக்கியங் களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத் தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்.

ஆதலால் பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து,

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின்கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்.” (2 பேதுரு 3:15-18).

பாருங்கள்! பவுல் அப்போஸ்தலன் சொன்ன சில ஆவிக்குரிய காரியங்கள், பேதுரு அப்போஸ்தலனுக்கு அறிகிறதற்கு அரிதாயிருந்ததாம்! என்றாலும், அவர் அந்த ஆவிக்குரிய காரியங்களுக்கு விரோதமாகப் பேசவுமில்லை, எழுதவுமில்லை.

நமக்கு எச்சரிப்பு உண்டாகத்தான் ஆவியானவர் இதை வேதத்தில் எழுதி வைத்திருக்கிறார்.

அநேக ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு சகோதரி. வியாதிப்பட்ட தன் கணவருக்காக ஜெபிக்க, அவரை என்னிடத்தில் அழைத்து வந்தார்கள். அவர் எலும்பும். தோலுமாக இருந்தார். இழுப்பு வியாதியினால் பாதிக்கப்பட்டு, பேசக்கூட முடியாமல், மூச்சு விடமுடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். அவருடைய வேதனையைப் பார்த்து எனக்கு மிகவும் பாரம் உண்டாயிற்று.

அவருடைய சுகத்திற்காக பாரத்தோடு ஜெபிக்க ஆரம்பித்தபோது, ஆவியானவர் என்னைத் தடுத்து நிறுத்தினார். “அவன் செய்த பாவத்தினிமித்தம் இந்த வேதனைகளை அனுபவிக்கிறான். அவனுக்காகப் பரிந்து பேசாதே” என்று ஆவியானவர் திருவுளம் பற்றினார். “எந்தப் பாவத்தையும் மன்னிக்கிற இரக்கமுள்ள தகப்பனல்லவா நீர்! இவரை மன்னித்து, சுகமாக்கும்!” என்று மன்றாடஆரம்பித்தேன்.

“மன்னிக்கவே முடியாத பாவத்தை இவன் செய்திருக்கிறான். விட்டுவிடு” என்று ஆண்டவர் சொன்னபோது, என் உள்ளம் அதிர்ச்சி அடைந்தது, “இயேசுவால் மன்னிக்க முடியாத ஒரு பாவம் உண்டா?” என்று. என் உள்ளத்தில் கேள்வி எழும்பினபோது, ஆவியானவர். மாற்கு 3:28,29 வசனங்களை என் கண் முன் நிறுத்தினார். அதை எடுத்து வாசித்தேன்.

”மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்லுகிறேன்: மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்தத் தூஷணங்களும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்;

ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான் என்றார்.” (மாற்கு 3:28,29) என்று,இயேசுவே சொல்லியிருக்கிறார்.

இந்த வசனத்தின் மூலம், ‘இந்த சகோதரர் பரிசுத்த ஆவிக்கு விரோதமாய் பேசியிருக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன். “நீங்கள் எப்போதாவது பரிசுத்த ஆவிக்கு விரோதமாய் பேசினதுண்டா?” என்ற அவரிடம் கேட்டபோது, அவர் ஆச்சரியத்தோடு என்னைப் பார்த்தார்.

உடனே, அவருடைய மனைவி, “நான் எத்தனை முறையோ சொன்னேன்; கேட்கவில்லை. இவர் ஒரு சபையில் ஊழியராக (உபதேசியாராக) பணி செய்கி றார். ஆலயத்தில் பிரசங்கிக்கையில் அந்நிய பாஷையை பரியாசமாகப் பேசி, கிண்டல் செய்வார். அந்நிய பாஷையில் பேசுகிறவர்களைப் பரியாசம் பண்ணி, பிரசங்கம் பண்ணுவார். ஆண்டவருக்கு விரோதமான இந்தப் பாவத்தைச் செய்யாதிருங்கள்” என்று, நான் பல முறை சொல்லியும், இவர் கேட்க வில்லை!” என்று வருத்தத்தோடே சொன்னார்கள்.

ஆவியானவருக்கு விரோதமாய் பேசி, மன்னிக்க முடியாத பாவத்தைச் செய்து விட்டீர்கள், இதில் ஊழியனாகிய நான் ஒன்றும் செய்ய முடியாது!” என்று சொல்லி, அவரை வேதனையோடு அனுப்பினேன். அவரும் வருத்தத்தோடே சென்றார். சீக்கிரத்திலே மரணம் அடைந்து விட்டார்.

தயவு செய்து ஆவியானவருக்கு விரோதமாக, தூஷணங்களைப் பேசாதிருங்கள். உங்களால் ஆவிக்குரிய சில அனுபவங்களைப் புரிந்து கொள்ள முடியா விட்டால், அமைதியாகி விடுங்கள். உங்களுக்கே கேடு வரத்தக்கதாக ஆக்கினைகளைத் தேடிக் கொள்ளாதீர்கள். நீங்கள் சொல்கிற விளக்கங்கள், உங்களுக்குச் சரியாக இருக்கலாம்! ஆனால், அதுவே சில வேளைகளில் தேவனுடைய பார்வையில் குற்றமாயிருக்கலாம்!

மிரியாம், தேவ மனிதனாகிய மோசேக்கு விரோத மாய் பேசினபோது, அவளுக்கும், ஆரோனுக்கும் அவர்கள் பார்வையில் அது சரியாகத்தான் தெரிந்தது. ஆனால், கர்த்தருக்கு அது கோபத்தை உண்டாக்கிற்று. மிரியாம் தனக்கே கேட்டை வருவித்துக் கொண்டாள்(எண். 12:1-10). ஆகவே, வீண் வாக்குவாதம் பண்ணு வதை விட்டு விட்டு, வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஆவிக்குரிய அனுபவங்களை நாம் நாட வேண்டும். ஆவிக்குரிய கிருபைகளையும், வல்லமைகளையும் பெற்று, ஆண்டவருக்குச் சாட்சியாக மாற வேண்டும்.

மெர்லின் கரோதர் என்கிற ஒரு தேவ மனிதர். இராணுவத்தில் போதகராகப் பணி செய்து கொண்டிருந்தார். “இரட்சிப்பின் அனுபவம் பெற்று, ஊழியம் செய்த இந்தப் போதகர், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றுக் கொண்டால், இன்னும் வல்லமையோடு ஊழியம் செய்யலாமே” என்று சில விசுவாசிகள் வாஞ்சித்தார்கள்.

அவரை ஒரு ஆவிக்குரிய முகாமிற்குச் செல்லும்படி அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். தன் சபையின் தேவப் பிள்ளைகள் சொல்கிறார்களே என்று, அவர் தன் நண்பரையும் அழைத்துக் கொண்டு. அந்த முகாமிற்குச் சென்றார். அங்கு கூடி வந்திருந்த தேவப் பிள்ளைகள் பரிசுத்த ஆவியினால் நிறைந்து, அந்நிய பாஷைகளைப் பேசுவதையெல்லாம் பார்த்தபோது, அவருக்கு அது விகற்பமாகத் தெரிந்தது.

ஒருநாள் அந்தக் கூட்டங்களை நடத்துகிற தாயாரை அவர்கள் தனித்து சந்தித்தார்கள்.

அவர்கள், இவர்களுக்கு பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளைச் சொல்லி, அவர்கள் இருவர் மேலும் கை வைத்து அபிஷேகத்திற்காக ஜெபித்தார்கள். சில நிமிடங்கள் ஜெபித்து விட்டு, “ஏதாவது மாற்றம் தெரிகிறதா?” என்று கேட்டார்கள்.

அதற்கு மெர்லின் கரோதர், “என் உள்ளத்தின் ஆழத்தில் எனக்குத் தெரியாத பாஷையை யாரோ பேசுவதைப் போல் உணர்கிறேன்” என்றார்.

“ஆவியானவர் உங்களுக்குள் வந்து விட்டார். இப்பொழுது வாய் திறந்து பேசத் தொடங்குங்கள்.” (அப். 2:4) என்றபோது, “நான் இருக்கிற சபையில், இந்தப் பரிசுத்த ஆவியானவரின் நிறைவு, அந்நிய பாஷைகளையெல்லாம் நம்ப மாட்டார்கள். நான் அந்நிய பாஷைகளைப் பேசினால், என்னைத் தவறாகப் பேசுவார்கள்” என்றார்.

“மற்றவர்கள் உங்களைப் பரிகாசமாய் பேசுவார்கள் என்பதற்காக, ஆண்டவர் தருகிற இந்த விலையேறப் பெற்ற பொக்கிஷத்தை நீங்கள் இழக்கப் போகிறீர்களா?” என்று அந்தத் தாயார் கேட்டபோது, “யார் என்ன சொன்னால் என்ன? எனக்கு இந்த ஆசீர்வாதம் வேண்டும். நான் அதை இழக்க விரும்பவில்லை” என்று சொல்லி, ஆவியானவருக்கு இடம் கொடுத்தார். உடனே ஆவியில் நிரம்பி, அந்நிய பாஷையில் பேசஆரம்பித்தார்.

பல நிமிடங்கள் அந்நிய பாஷை பேசிப் பேசி களைப்படைந்தவரானார். இருவரும் தாங்கள் தங்கியிருந்த அறைக்கு வந்தார்கள். சரீரம் களைப்படைந்திருந்தாலும், தூங்க மனம் வரவில்லை.

பரிசுத்த ஆவியினால் உண்டான சந்தோஷம்! இருவரும் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தார்கள். “இன்னும் கொஞ்ச நேரம் ஜெபிக்கலாமா?” என்றார்கள். இருவரும் பல மணி நேரங்கள் ஆவியில் நிரம்பி, அந்நிய பாஷைகளைப் பேசி மகிழ்ந்தார்கள். இந்த அனுபவத்திற்குப் பிறகு. அவருடைய ஊழியமே வித்தியாசமாக மாறிற்று. திரளான மக்களுக்கு ஆசீர்வாதமாக மாறினார்.

பாருங்கள்! இந்த ஆவிக்குரிய கிருபைகளைப் பெற்றுக் கொள்வது, கடினமாக காரியமே அல்ல! நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவதைக் காட்டிலும், ஆண்டவர் அதை உங்களுக்குக் கொடுக்கஅதிக விருப்பமுள்ளவராயிருக்கிறார். நீங்கள் விசுவாசித்துக் கேட்டால் போதும், கட்டாயம் உங்களுக்கு இந்த அனுபவத்தைக் கர்த்தர் தருவார்.

சிலர் வந்து, “நான் அந்நிய பாஷை பேச வேண்டும். அதற்காக ஜெபியுங்கள்” என்று கேட்பார்கள்.

உங்களுக்கு முதலாவது தேவை. அந்நிய பாஷையல்ல. முதலாவது, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட வேண்டும். பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு விட்டால், அந்நிய பாஷை தானாக வந்து

விடும். நாமாக அந்நிய பாஷை பேசுவதல்ல.

ஆவியானவரால் நிரப்பப்படும்போது, ஆவியானவர் மூலம் நாம் பேசுகிற பரலோக பாஷைதான் அந்நிய பாஷை.

வெறுமனே அந்நிய பாஷைகளைப் பேச முயற்சிக்காதீர்கள். பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட இடங்கொடுங்கள். ஆவியானவர் உங்களை நிரப்பும்போது, ஆவியானவரே உங்கள் நாவைப் பயன்படுத்தி, அந்நிய பாஷையில் பேசுவார்.

இந்த அனுபவத்தில் வளர வளர, வெளியில் தெரியாமலே உங்கள் இருதயத்தில் ஆவியில் நிரம்பி, அந்நிய பாஷையில் பேசிக் கொண்டேயிருக்கலாம். அருகில் இருக்கிற மக்களுக்குத் தெரியாமலேயே, உங்கள் இருதயத்தில் அந்நிய பாஷைகளைப் பேசலாம். இந்த அனுபவத்திற்குள் நீங்கள் வந்து விட்டால், உங்கள் இருதயத்தில் நீங்கள் எப்பொழுதும் கர்த்தரோடு ஐக்கியப்பட்டுக் கொண்டிருக்கலாம்.

ஜெப அறையில் ஜெபிக்கும்போது மாத்திரமல்ல, பிரயாணத்தில் இருக்கும்போதும், வேலைகளைச் செய்து கொண்டிருக்கும்போதும் ஆவியில் நிரம்பி, இருதயத்தில் கர்த்தரோடு பேசிக் கொண்டிருக்கலாம்!

இப்படிப்பட்ட அருமையான, மகிமையான இந்த அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். இன்றநீங்கள் பெற்றுக் கொள்ளலாம்! இப்பொழுது பெற்றுக் கொள்ளலாம்! இருக்கிற இடத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்!

இந்தச் செய்தியை வாசிக்கிற நீங்கள் எல்லோரும் அந்நிய பாஷைகளைப் பேசும்படி, கர்த்தர் விரும்புகிறார். தேவ ஊழியக்காரனாகிய நானும் விரும்புகிறேன். நீங்களும் விருப்பத்தோடு இந்த ஜெபத்தை ஏறெடுங்கள்: உமக்கு ஸ்தோத்திரம்! தேற்றரவாள அபிஷேக நாதரே,

னாகிய பரிசுத்த ஆவியானவருக்காக, ஸ்தோத்திரம்! ஆவியானவர் அருளும் அந்நிய பாஷைகளுக்காக, ஸ்தோத்திரம்! இந்தச் செய்தியின் மூலமாக என்னோடு பேசினதற்காக, உமக்கு ஸ்தோத்திரம்!

ஆண்டவரே, நானும் அந்நிய பாஷைகளைப் பேச விரும்புகிறேன்! என்னை உம்முடைய பரிசுத்த ஆவி யினால் நிரப்பும்! அந்நிய பாஷையில் பேசுகிற கிருபையைத்தாரும்!

எனக்கு நீர் கொடுத்த அபிஷேகத்திற்காக, உமக்கு

ஸ்தோத்திரம்! அந்நிய பாஷையில் பேசுகிற கிருபைக்காக,

உமக்கு ஸ்தோத்திரம்!

நான் பேசுகிற அந்நிய பாஷையின் அர்த்தத்தை நான் அறிந்து கொள்ள கிருபை தாரும்! பரிசுத்த ஆவிக்குள்ளே பெலன் கொள்ளவும், எப்போதும் பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தில் களிகூரவும் கிருபை தாரும்!

நீர் கொடுத்த இந்த கிருபையின் ஆசீர்வாதங்களுக் காக, உமக்கு ஸ்தோத்திரம்!

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்,

ஆமென்! ஆமென்!

Leave a Reply