36 ஆம் சங்கீதம் விளக்கம்
(கர்த்தருடைய தாசனாகிய தாவீது இராகத்தலைவனுக்கு ஒப்புவித்த சங்கீதம்.)
துன்மார்க்கனின் இரண்டாவது சங்கீதம்
பொருளடக்கம்
1. துன்மார்க்கனின் பத்து பாவங்கள் – (36:1-4)
2. தேவனுடைய பத்து குணாதிசயங்களும் நீதிமானின் மீது ஆசீர்வாதங்களும் – (36:5-9)
3. நீதிமான்களுக்காக நான்கு விண்ணப்பங்கள் – (36:10-11)
4. துன்மார்க்கனின் முடிவு – (36:12)
தாவீது முப்பத்து ஆறாவது சங்கீதத்தில் பாவத்தையும், துரோகத்தையும், துன்மார்க்கத்தையும், அக்கிரமத்தையும் பற்றிச் சொல்லுகிறார் (சங் 36:1-4). தாவீது இதன்பின்பு, தேவனுடைய நன்மையையும் அவருடைய இரக்கத்தையும் பற்றிச் சொல்லுகிறார். தேவன் பொதுவாக சர்வசிருஷ்டிகளின்மீதும் இரக்கமுள்ளவராகயிருக்கிறார். சர்வசிருஷ்டிகளையும் போஷித்துப் பராமரிக்கிறார் (சங் 36:5,6). கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு விசேஷித்த ஆசீர்வாதங்களையும், விசேஷித்த சிலாக்கியங்களையும் கொடுக்கிறார் (சங் 36:7-9).
தேவன் நல்லவராகவும், கிருபை மிகுந்தவராகவும் இருப்பதினால், அவருடைய பரிசுத்தவான்களெல்லோருக்காகவும் தாவீது உற்சாகமாய் ஜெபம்பண்ணுகிறார் (சங் 36:10). கர்த்தர் தாமே தன்னைப் பாதுகாத்துக்கொள்ளுமாறும் (சங் 36:11), சத்துருக்களின்மீது தனக்கு ஜெயங்கிடைக்கவேண்டுமென்றும் (சங் 36:12). தாவீது பயபக்தியோடு ஜெபம்பண்ணுகிறார்.
நாம் முப்பத்து ஆறாவது சங்கீதத்தை கர்த்தருடைய சமுகத்தில் பயபக்தியாய்ப் பாடும்போது, நம்முடைய இருதயம் பாவத்தை வெறுத்து அதை ஒதுக்கித் தள்ளிவிடும். நமக்குள் பாவத்தின்மீது வெறுப்பு உண்டாகும். தேவனுடைய கிருபையிலும், இரக்கத்திலும், அன்பிலும் நமக்குப் பிரியமுண்டாகும். கர்த்தருடைய கிருபையில் நாம் திருப்தியடைந்திருப்போம். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் இந்த சங்கீதத்தின் வாத்தியங்களை அர்த்தம் உணர்ந்து, பயபக்தியோடு பாடவேண்டும்.
அக்கிரமம் சங் 36 : 1-4
சங் 36:1. துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்; அவன் கண்களுக்குமுன் தெய்வபயம் இல்லை.
சங் 36:2. அவன், தன் அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படுமளவும், தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே இச்சகம் பேசுகிறான்.
சங் 36:3. அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; புத்தியாய் நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான்.
சங் 36:4. அவன் தன் படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, நல்லதல்லாத வழியிலே நிலைத்து, பொல்லாப்பை வெறுக்காதிருக்கிறான்.
துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு 36:1
துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்; அவன் கண்களுக்குமுன் தெய்வபயம் இல்லை (சங் 36:1).
இந்த சங்கீதத்தின் தலைப்பில், தாவீதைப்பற்றிச் சொல்லும்போது, “”கர்த்தருடைய தாசனாகிய தாவீது” என்று சொல்லப்பட்டிருக்கிறது. பதினெட்டாவது சங்கீதத்திலும், முப்பத்து ஆறாவது சங்கீதத்திலும் மாத்திரமே, தாவீது, “”கர்த்தருடைய தாசன்” என்று அழைக்கப்படுகிறார். மற்ற சங்கீதங்களில் தாவீதுக்கு இந்த பட்டம் கொடுக்கப்படவில்லை. இதற்கான காரணமும் நமக்கு சரியாகத் தெரியவில்லை.
தாவீது மெய்யாகவே கர்த்தருடைய தாசன் தான். தாவீது மாத்திரமல்ல கர்த்தருடைய பிள்ளைகளெல்லோருமே, கர்த்தருடைய தாசராகவே இருக்கிறோம். தாவீது ஒரு ராஜாவாகவும், ஒரு தீர்க்கதரிசியாகவும் இருக்கிறார். அதே சமயத்தில் அவர் கர்த்தருடைய தாசனாகவும் இருக்கிறார். கர்த்தருடைய தாசராகயிருப்பது நமக்குக் கிடைத்திருக்கிற மிகப் பெரிய சிலாக்கியம்.
தாவீது இந்த சங்கீதத்தின் ஆரம்பத்தில் துன்மார்க்கத்தின் தீய சுபாவத்தைப்பற்றி விவரிக்கிறார். பாவத்திற்கான காரணங்கள், பாவத்தின் பல்வேறு நிறங்கள், பாவத்தின் வேர்கள், அதன் கிளைகள் ஆகியவற்றைப்பற்றி தாவீது விரிவாக எடுத்துச் சொல்லுகிறார்.
இருதயத்தில் கசப்பு உணர்வு இருக்கும்போது, அது துன்மார்க்கமான காரியங்களைச் சிந்திக்கும். துன்மார்க்க சிந்தனை துன்மார்க்கமான கிரியைகளை வெளிப்படுத்தும். நமக்குள்ளிருக்கும் கசப்பான உணர்வுகளே எல்லா பாவங்களுக்கும் வேராகயிருக்கிறது. இதுவே பாவங்களுக்கு ஆதாரம். துன்மார்க்கத்திலிருந்துதான் துன்மார்க்கம் உண்டாகிறது. தாவீது துன்மார்க்கனுடைய துன்மார்க்கத்தைப்பற்றி இங்கு விவரிக்கிறார்.
துன்மார்க்கன் துரோகப்பேச்சைப் பேசுகிறான். அவனுடைய கண்களுக்கு முன்பாக தெய்வ பயமில்லை. தெய்வ பயமுள்ளவர்கள் தேவனுடைய பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்து ஜீவிப்பார்கள். தேவன் நம்மோடு செய்திருக்கும் உடன்படிக்கைக்கு மதிப்பு கொடுத்து, அந்த உடன்படிக்கையை மீறமாட்டார்கள். துன்மார்க்கனுக்கோ தெய்வபயமில்லை. ஆகையினால் அவன் தன்னுடைய இருதயத்தில் துரோகப்பேச்சுக்களைப் பேசுகிறான். தேவனுடைய பிரமாணத்திற்கு கீழ்ப்படியாமல், அதற்கு மீறி ஜீவிக்கிறான்.
துன்மார்க்கன் தன்னுடைய பேச்சிலும் கிரியையிலும் கர்த்தரை மகிமைப்படுத்தாமல், அவருக்கு எதிர்த்து நிற்கிறான். இவனுக்கு விரோதமாக தேவகோபாக்கினை எழும்பியிருக்கிறது. கர்த்தர் தம்முடைய நீதியான சிங்காசனத்தில் அமர்ந்திருந்து, துன்மார்க்கரை நீதியாய் நியாயம் விசாரித்து, அவர்களை நீதியாய்த் தண்டித்துவிடுவார்.
“”துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்” என்பது குழப்பமான மொழிபெயர்ப்பாகும். ஏனெனில் துன்மார்க்கனின் துரோகப் பேச்சு நீதிமானின் இருதயத்திற்குத் தெரியவாய்ப்பில்லை. எனவே, இதை இவ்வாறு மொழி பெயர்க்கலாம். “”துன்மார்க்கனுடைய துரோகப் பேச்சு அவனுடைய இருதயத்தில் இருக்கிறது” அல்லது “”துன்மார்க்கனின் இருதயம் பாவத்தைக் கர்ப்பம் தரிக்கிறது. ஏனெனில் அவனிடம் தேவ பயமில்லை”. இருதயத்தின் நினைவை வாய் பேசும் (மாற்கு 7:19-23). பிசாசின் சுபாவமாகிய பாவ ஆவி மனுஷனுக்குள் இருக்கிறது. (யோவான் 8:44; எபே 2:1-3; 1யோவான் 3:8)
துன்மார்க்கனின் பாவங்கள்
1. துன்மார்க்கன், கர்த்தருடைய பிரமாணத்தை மீறுவான் (சங் 36:1)
2. அவனுடைய கண்களுக்கு முன் தெய்வபயம் இல்லை
3. தனக்குத்தானே இச்சகம் பேசுகிறான் (சங் 36:2)
4. அவன் அக்கிரமம் அருவருப்பானதாக இருக்கும்
5. அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது (சங் 36:3)
6. புத்தியாய் நடந்துகொள்வதை விட்டுவிட்டான்
7. நன்மை செய்வதையும் விட்டுவிட்டான்
8. அவன் அக்கிரமத்தை யோசிக்கிறான் (சங் 36:4)
9. நல்லதல்லாத வழியிலே நிலைக்கிறான்
10. பொல்லாப்பை வெறுக்காதிருக்கிறான், பாவத்தை விரும்புகிறான்
தனக்குத்தானே இச்சகம் பேசுகிறான் 36:2
அவன், தன் அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படுமளவும், தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே இச்சகம் பேசுகிறான் (சங் 36:2).
துன்மார்க்கன் தன் பார்வைக்கேற்றபடி, தனக்குத்தானே இச்சகம் பேசுகிறான். தான் பாவம் செய்தாலும், தனக்குத் தண்டனை எதுவும் கிடைக்காது என்று இறுமாப்பமாய் ஜீவிக்கிறான். துன்மார்க்கன் பாவம் செய்யும்போது தான் ஞானமாய் செயல்படுவதாகவும், இதனால் தனக்கு நன்மை உண்டாகும் என்றும் தனக்குள்ளே யோசிக்கிறான். தன்னுடைய துன்மார்க்கத்தினால் தனக்கு அழிவு வரும் என்பது அவனுக்குத் தெரியவில்லை.
இதனால் அவன் அநியாயத்திற்கும் நியாயத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் கிரியை நடப்பிக்கிறான். இப்படிப்பட்ட துன்மார்க்கன் நன்மையை தீமையென்று சொல்லுகிறான். தீமையை நன்மையென்று சொல்லுகிறான். தன்னுடைய மனம் விரும்புகிறதெல்லாவற்றையும் செய்ய தனக்கு உரிமை இருக்கிறது என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறான். துன்மார்க்கன் உரிமை என்னும் பெயரினால் கர்த்தருடைய பிரமாணத்தை மீறி பாவம் செய்கிறான்.
தன்னுடைய பார்வைகேற்றபடி தனக்குத்தானே இச்சகம் பேசுகிற துன்மார்க்கன் கர்த்தருடைய பிள்ளைகளையும் துன்பப்படுத்துகிறான். தான் அநியாயம் செய்தாலும், அது அவனுக்கு நியாயமாய்ப்படுகிறது. இவனுக்கு நீதிக்கும் அநீதிக்கும் வித்தியாசம் தெரியாது. கர்த்தருடைய நாள் ஒன்று வரப்போகிறது. அந்த நாளில் கர்த்தர் தாமே துன்மார்க்கருடைய துன்மார்க்கங்களையெல்லாம் வெளிப்படுத்துவார். அந்த நாளில் துன்மார்க்கனுக்கு தன்னுடைய அக்கிரமம் அருவருப்பானது என்று காணப்படும். அதுவரையிலும் அவன் துன்மார்க்கமான காரியங்களையே செய்வான். இச்சகமான வார்த்தைகளையே பேசுவான். பாவத்தில் ஜீவிப்பான். கர்த்தர் அவனுடைய அக்கிரமத்தின் அருவருப்பை உணர்த்தும்போது, துன்மார்க்கன் பரிதபிப்பான்.
பொல்லாப்பை வெறுக்காதிருக்கிறான் 36:3-4
அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; புத்தியாய் நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான். அவன் தன் படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, நல்லதல்லாத வழியிலே நிலைத்து, பொல்லாப்பை வெறுக்காதிருக்கிறான் (சங் 36:3,4).
துன்மார்க்கன் பாவத்தில் நிலைத்திருக்கும்போது, அவனுடைய துன்மார்க்கமும் துரோகமும் ஆழமாக வேர்விட்டு வளரும். அதிலிருந்து துன்மார்க்கமான கிளைகள் அநேகம் வளரும். துன்மார்க்கன் கர்த்தரை வஞ்சிக்கிறான். அவனுடைய வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது. பாவத்தை ஆசையாய்ச் செய்கிறான். தன்னுடைய சுயஞானத்தினால் தன்னுடைய பாவத்தை மூடி மறைக்க முயற்சி பண்ணுகிறான். தன்னுடைய பாவத்தை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான். அதை கர்த்தரிடத்தில் அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ தேவனுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்வான்.
துன்மார்க்கன் மாய்மாலமாய் ஜீவிக்கிறான். தான் கொடியவனாகயிருந்தாலும், தன்னை நல்லவன் போல் காண்பித்துக்கொள்கிறான். அவனுடைய சிந்தனைகளும் செயல்களும் அக்கிரமத்தினால் நிரம்பியிருக்கிறது. அவன் புத்தியாய் நடந்துகொள்வதையும், நன்மை செய்வதையும் விட்டுவிடுகிறான். நன்மை செய்யவேண்டும் என்னும் விருப்பம் அவனிடத்தில் இல்லை. புத்தியாய் நடந்துகொள்ளவேண்டும் என்னும் ஆர்வமும் அவனிடத்தில் இல்லை. அவன் தன் சுயபுத்தியை நம்புகிறான். சுயபுத்தியை நம்புகிறவர்கள் சீரழிந்துபோவார்கள்.
துன்மார்க்கனுடைய ஜீவியத்தில் நன்மைக்கும் நீதிக்கும் இடமில்லாமல் போயிற்று. கர்த்தர் தன்னுடைய பாவத்தைக் குறித்து தன்னிடத்தில் உணர்த்தும்போது, அவன் தன்னுடைய இருதயத்தைக் கடினப்படுத்துகிறான். கர்த்தருக்குச் செவிகொடுக்க மறுத்துவிடுகிறான். ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தான். ஆனால் அவனுடைய முடிவோ மோசமாயிற்று. அவனுடைய சுயபுத்தியினால் அவனுக்கு ஒரு பிரயோஜனமும் உண்டாகவில்லை.
துன்மார்க்கன் தன் படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசிக்கிறான். நல்லதல்லாத வழியிலே நிலைத்து நிற்கிறான். நன்மை செய்வதை விட்டுவிடுகிறவர்கள் தீமை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். அவர்கள் தங்களுக்கும் தீமை செய்வார்கள். பிறருக்கும் தீமை செய்வார்கள். மற்றவர்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்னும் யோசனை அவர்களிடத்தில் இல்லை.
துன்மார்க்கன் நன்மையைப்பற்றிக் கொள்ளாமலிருக்கிறான். பொல்லாப்பை வெறுக்காதிருக்கிறான். பொல்லாப்பில் பிரியப்படுகிறான். மற்றவர்கள் கஷ்டப்படும்போது துன்மார்க்கன் அவர்களுடைய கஷ்டத்தை நினைத்து சந்தோஷப்படுகிறான். தன்னைப்போலவே மற்றவர்களும் துன்மார்க்கராயிருப்பது இவனுக்குப் பிரியமானதாயிருக்கிறது.
நல்லதல்லாத காரியங்கள்
1. மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல (ஆதி 2:18)
2. அளவுக்கு மீறி செய்கிற காரியம் நல்லதல்ல (யாத் 18:17)
3. பொறுப்பிலிருந்து தவறுதல் (1சாமு 26:16)
4. சிறுமைப்பட்டவர்களை ஒடுக்குதல் (நெகே 5:9)
5. நன்மையானவற்றுக்கு எதிராக அக்கிரமத்தை யோசித்தல் (சங் 36:4)
6. வழக்கிலே நீதிமானைத் தோற்கடித்தல் (நீதி 18:5)
7. ஆத்துமா அறிவில்லாமலிருப்பது நல்லதல்ல (நீதி 19:2)
8. கள்ளத்தராசு நல்லதல்ல (நீதி 20:23)
9. தன்னைத்தானே புகழ்தல், மகிமைப்படுத்துதல் நல்லதல்ல (நீதி 25:21)
10. முகதாட்சிணியம் நல்லதல்ல (நீதி 28:21)
கர்த்தருடைய நன்மை சங் 36 : 5-9
சங் 36:5. கர்த்தாவே, உமது கிருபை வானங்களில் விளங்குகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது.
சங் 36:6. உமது நீதி மகத்தான பர்வதங்கள் போலவும், உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது; கர்த்தாவே, மனுஷரையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.
சங் 36:7. தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழ-லே வந்தடைகிறார்கள்.
சங் 36:8. உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவர்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்.
சங் 36:9. ஜீவஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.
கர்த்தருடைய கிருபை 36:5-6
கர்த்தாவே, உமது கிருபை வானங்களில் விளங்குகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது. உமது நீதி மகத்தான பர்வதங்கள் போலவும், உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது; கர்த்தாவே, மனுஷரையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர் (சங் 36:5,6).
தாவீது இதுவரையிலும்துன்மார்க்கருடைய துரோகப்பேச்சுக்களையும், இச்சகப்பேச்சுக்களையும் பார்த்துக்கொண்டிருந்தார். இதனால் தாவீதின் இருதயத்தில் கலக்கமுண்டாயிற்று. இப்போது தேவனுடைய கிருபையையும் நன்மையையும் நோக்கிப் பார்த்து தன்னுடைய இருதயத்தில் ஆறுதலடைந்திருக்கிறார்.
தாவீது தேவனுடைய கிருபையைப்பற்றித் தியானிக்கிறார். தேவனுடைய கிருபை பரிபூரணமானது. அவருடைய கிருபை வானங்களில் விளங்குகிறது. இந்த உலகத்தில் அநியாயமும், அக்கிரமமும் பெருகியிருந்தாலும், இந்தப் பாவங்களுக்கு கர்த்தர் காரணமல்ல. மனுஷருடைய பாவத்திற்கு நாம் கர்த்தரை குற்றம் சொல்லக்கூடாது. கர்த்தருடைய ஆளுகை நீதியும் நியாயமும் நிறைந்தது. ஆகையினால் இந்த உலகத்தில் காணப்படும் அநியாயத்திற்கு, கர்த்தருடைய நீதியான ஆளுகையைக் குற்றம் சொல்லக்கூடாது.
நாம் மனுஷரையே பார்த்துக்கொண்டிருந்தால், அவர்களுடைய துன்மார்க்கங்களும், துரோகங்களும், பாவங்களும் மாத்திரமே நமக்குத் தெரியும். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் மனுஷரை நோக்கிப் பார்க்காமல் கர்த்தரையே நோக்கிப் பார்க்கவேண்டும். கர்த்தருடைய குணாதிசயங்களை நாம் தியானிக்கவேண்டும். மனுபுத்திரர் பாவிகளாகயிருந்தாலும், கர்த்தர் அவர்களை உடனே தண்டித்து அழித்துப் போடாமல், நீடிய பொறுமையுள்ளவராயிருப்பதை நாம் நினைவுகூரவேண்டும். கர்த்தருடைய பொறுமைக்காக நாம் கர்த்தரைத் துதிக்கவேண்டும்.
மனுஷர் தங்களுடைய பேச்சுக்களினாலும், செய்கைகளினாலும் கர்த்தரை வருத்தப்படுத்துகிறார்கள். அவருக்கு கோபம் உண்டுபண்ணுகிறார்கள். ஆனால் கர்த்தரோ கோபப்படாமல் மிகுந்த பொறுமையோடிருக்கிறார். தம்முடைய நித்திய கிருபையை மனுக்குலத்திற்குக் காண்பிக்கிறார். ஜனங்கள் பாவிகளாகயிருந்தாலும் அவர்களுக்கு மழையை அனுப்புகிறார். ஜனங்களுக்கு சூரியவெளிச்சத்தையும், நல்ல காற்றையும் கொடுத்து மனுக்குலத்திலுள்ள எல்லோரையும் போஷித்துப் பராமரிக்கிறார்.
கர்த்தருடைய சத்தியம் மேகமண்டலம் பரியந்தம் எட்டுகிறது. கர்த்தர் நீதியும், நியாயமும் சத்தியமுமுள்ளவர். அவரே சத்தியபரர். தேவனுடைய சத்தியத்திற்கு அளவே இல்லை. மனுஷன் தன்னுடைய சுபாவத்தில் மாறலாம். ஆனால் தேவனோ நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். தம்முடைய சத்தியத்தில் நிலைத்திருக்கிறார். அவருடைய சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் உயரமாயிருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தில் அநேக மாற்றங்கள் உண்டாகலாம். தேவனுடைய சத்தியமோ மாறாமல், மேகமண்டலங்களைவிட உயரமாய் எழும்பி நிற்கிறது.
கர்த்தர் நீதியும், நியாயங்களுமுள்ளவர். தேவனுடைய நீதி மகத்தான பர்வதங்கள் போல இருக்கிறது. அவருடைய நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது. பர்வதத்தை அசைக்க முடியாது. பர்வதம் காற்றினாலோ, மழையினாலோ அசைவதில்லை. அது நிலைத்து நிற்கும். அதுபோலவே தேவனுடைய நீதியும் மகத்தான பர்வதங்கள் போல நிலைத்து நிற்கும்.
தேவனுடைய ஞானத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியாது. அவர் சர்வஞானமுள்ளவர். தேவனுடைய தெய்வீக திட்டங்களையும் நம்மால் அறிந்துகொள்ள முடியாது. தேவன் தம்முடைய அநாதிகாலத்தில், அநாதியான தீர்மானங்களை எடுத்திருக்கிறார். கர்த்தருடைய நித்திய தீர்மானங்கள், அவருடைய நித்திய ஆலோசனையின் பிரகாரம், அவருடைய நித்திய காலத்தில் ஒவ்வொன்றாய் நடைபெறுகிறது.
தேவனுடைய நியாயங்களை நம்மால் புரிந்துகொள்ள முடியாது. அதன் ஆழத்தை நம்மால் தொடமுடியாது. தேவனுடைய ஆழங்கள், நம்மால் எட்டிப்பிடிக்க முடியாத மகா ஆழமான இடத்திலிருக்கிறது. நம்முடைய சுயபுத்தியினாலோ, சுயஅறிவினாலோ தேவனுடைய நியாயங்களை அளவிடமுடியாது. அதை அறிந்துகொள்ளவும் முடியாது. நம்முடைய ஞானம் குறைவுள்ளது. தேவனுடைய ஞானம் நிறைவுள்ளது. அவரே சர்வஞானமுள்ளவர்.
கர்த்தர் இந்தப் பூமியிலுள்ள மனுஷரையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறார். கர்த்தருடைய கிருபை வானங்களில் விளங்குவதுபோல, இந்தப் பூமியிலும் விளங்குகிறது. கர்த்தருடைய கிருபையினால் வானத்திலிருந்து இந்தப் பூமியில் மழை பெய்கிறது. வானத்திலிருந்து இந்தப் பூமிக்கு சூரிய வெளிச்சம் கிடைக்கிறது. கர்த்தர் தமது கிருபையினால் வானத்தின் ஆசீர்வாதங்களை இந்தப் பூமிக்குக் கொடுக்கிறார். இந்தப் பூமியிலுள்ள தாவர வர்க்கங்கள் கர்த்தருடைய கிருபையினால் முளைத்து வளருகிறது. இவை மனுஷருக்கும் மிருகங்களுக்கும் போஜனமாயிருக்கிறது. கர்த்தர் தாமே தம்முடைய கிருபையினால் மனுஷரையும் மிருகங்களையும் போஷித்துக் காப்பாற்றுகிறார்.
தேவன் நம்மைப் போஷிப்பது அவருடைய தெய்வீக பராமரிப்பு. கர்த்தர் நம்மை தீங்குகளிலிருந்து காப்பாற்றுகிறார். நம்மைப் பாதுகாப்பது மாத்திரமல்ல, நமக்குத் தேவையான நன்மைகளையும் கொடுத்து நம்மைப் போஷிக்கிறார். நம்முடைய ஜீவயஆதாரம் கர்த்தருடைய கரத்திலிருக்கிறது. கர்த்தருடைய கரம் கிருபையுள்ளது. அவர் தம்முடைய கிருபை நிரம்பிய கரத்தினால் நம்மைப் போஷித்து காப்பாற்றுகிறார்.
தேவனுடைய குணாதிசயங்கள்
1. கிருபை – வானங்களை போல உயர்ந்தது (சங் 36:5)
2. சத்தியம் – மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது
3. நீதி – பர்வதங்களை போல மகத்தானது (சங் 36:6)
4. நியாயங்கள் – ஆழமானவை
5. காப்பாற்றுதல் – வியாப்பித்திருக்கிறது
6. கிருபை – அருமையானது (சங் 36:7)
7. சம்பூரணம் – முழுமையானது (சங் 36:8)
8. திருப்தி – பேரின்ப நதி (சங் 36:9)
9. ஜீவன் – ஜீவ ஊற்று
10. வெளிச்சம் – சத்தியம்
பேரின்ப நதி 36:7-8
தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழ-லே வந்தடைகிறார்கள். உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவர்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர் (சங் 36:7,8).
கர்த்தர் தம்முடைய பரிசுத்தவான்களுக்கு விசேஷித்த கிருபைகளையும், விசேஷித்த சிலாக்கியங்களையும் கொடுக்கிறார். கர்த்தருடைய பரிசுத்தவான்கள் அவருடைய செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள். கர்த்தருடைய கிருபை அவருடைய பரிசுத்தவான்களுக்கு மிகவும் அருமையானது. அவர்கள் கர்த்தருடைய ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள். அவர்களுடைய தேவைகளெல்லாம் சந்திக்கப்படும். அவர்களுடைய தாகங்கள் தீர்க்கப்படும். கர்த்தருடைய பிள்ளைகளுக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது.
கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்குப் போதுமானவராயிருக்கிறார். இதனால் கர்த்தரிடத்தில் நமக்குப் பூரண திருப்தி உண்டாகிறது. நாம் கர்த்தருடைய ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைகிறோம். நம்முடைய ஆத்துமாவுக்குத் தேவையான ஆவிக்குரிய போஜனம், கர்த்தருடைய ஆலயத்திலே திருப்தியாய்க் கிடைக்கிறது.
நம்முடைய ஆத்துமா கர்த்தருடைய நன்மையினால் எவ்வளவுதான் நிரம்பியிருந்தாலும், கர்த்தருடைய கிருபை தனக்கு இன்னும் வேண்டும் என்றுதான் நம்முடைய ஆத்துமா சொல்லும். கர்த்தருடைய கிருபையை இன்னும் அதிகமாய்ப் பெற்றுக்கொள்ளவேண்டுமென்று நம்முடைய ஆத்துமா வாஞ்சையோடு காத்திருக்கும். தேவனை பரிபூரணமாகப் பெற்றுக்கொள்ளவேண்டுமென்பதே நம்முடைய ஆத்துமாவின் வாஞ்சை.
அப்போஸ்தலர் பவுல் கர்த்தருடைய சமுகத்தில் தனக்கு உண்டாயிருக்கிற திருப்தியைக் குறித்து பிலிப்பியருக்கு எழுதின நிருபத்தில் “”எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது, நான் திருப்தியடைந்திருக்கிறேன்” (பிலி 4:18) என்று எழுதுகிறார்.
கர்த்தருடைய பிள்ளைகளின் சந்தோஷம் நிலைத்திருக்கும். இது கர்த்தர் கொடுக்கிற சந்தோஷம். இதுவே மெய்யான சந்தோஷம் இந்த சந்தோஷம் சூழ்நிலைகளினால் மாறுவதில்லை. கர்த்தர் தமது பேரின்ப நதியினால், தம்முடைய பிள்ளைகளின் தாகத்தைத் தீர்க்கிறார். தேவன் கொடுக்கிற சந்தோஷம் மெய்யாகவே தெய்வீகமானது. கர்த்தர் தம்முடைய சந்தோஷத்தையே நமக்குக் கொடுக்கிறார்.
கர்த்தர் நமக்குக் கொடுக்கிற சந்தோஷம் கர்த்தருக்குள் ஆரம்பமாகிறது. அது கர்த்தரையே மையமாகக் கொண்டிருக்கிறது. கர்த்தருடைய சந்தோஷம் அவருக்குள் நிறைவடைகிறது. அது கர்த்தருக்குள் முடிவு பெறுகிறது. கர்த்தர் நமக்குக் கொடுக்கிற சந்தோஷம் ஒரு நதியைப்போல நம்மிடத்தில் கடந்து வருகிறது. இது கர்த்தருடைய பேரின்ப நதி. இந்த நதியில் எப்போதுமே சந்தோஷம் நிரம்பி வழியும்.
கர்த்தருடைய பேரின்ப நதி ஒருபோதும் வறண்டு போவதில்லை. அது நித்திய பேரின்ப நதி. கர்த்தருடைய பேரின்ப நதியில், தண்ணீர் ஓடாமல் தேங்கிக் கிடப்பதில்லை. அது எப்போதும் ஓடிக்கொண்டேயிருக்கும். புதிய தண்ணீர் வந்துகொண்டேயிருக்கும். கர்த்தருடைய பேரின்ப நதியில், புதிய இன்பங்களும், புதிய சந்தோஷங்களும், புதிய ஆசீர்வாதங்களும் நமக்கு வந்துகொண்டேயிருக்கும். கர்த்தர் தம்முடைய பேரின்ப நதியினால் நம்முடைய தாகத்தைத் தீர்க்கிறார்.
நம்முடைய மாம்சப்பிரகாரமான சந்தோஷங்கள் ஓடாமல் தேங்கிக் கிடக்கும் தண்ணீரைப்போன்றது. இதில் பசுமையும் இருக்காது. புதுமையும் இருக்காது. இது நம்முடைய தாகத்தையும் தீர்க்காது. கர்த்தருடைய சமுகத்தில் வந்து புறப்பட்டு வருகிற நதி பளிங்கைப்போல தெளிவான தண்ணீருள்ளதாயிருக்கும். அது ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து, கர்த்தருடைய பேரின்ப நதி புறப்பட்டு வருகிறது (வெளி 22:1).
ஜீவ ஊற்று 36:9
ஜீவஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம் (சங் 36:9).
கர்த்தருடைய பேரின்ப நதி கர்த்தரிடத்திலிருந்துதான் புறப்பட்டு வருகிறது. ஜீவஊற்றிலிருந்து ஜீவத்தண்ணீர் புறப்பட்டு வருகிறது. ஜீவத்தண்ணீர் பேரின்ப நதியாக பாய்ந்து ஓடிவந்து நம்முடைய தாகத்தைத் தீர்க்கிறது. இந்த ஜீவஊற்று கர்த்தரிடத்திலிருக்கிறது. கர்த்தர் தாமே தம்முடைய பிள்ளைகளெல்லோருக்கும் ஜீவஊற்றாகவும், ஜீவத்தண்ணீராகவும், பேரின்ப நதியாகவும் இருக்கிறார். கர்த்தருடைய சமுகத்திலிருந்து புறப்பட்டு வரும் பேரின்ப நதியில், நமக்கு தேவனுடைய சந்தோஷங்களும், ஆசீர்வாதங்களும் புறப்பட்டு வருகிறது.
கர்த்தர் வெளிச்சமாயிருக்கிறார். அவர் ஒளியாயிருக்கிறார். அவருடைய வெளிச்சத்திலே நாம் வெளிச்சம் காண்கிறோம். கர்த்தருடைய வெளிச்சம் பரிபூரணமானது. கர்த்தருடைய வெளிச்சத்தில் நாம் ஞானத்தையும், சந்தோஷத்தையும், அறிவையும் பெற்றுக்கொள்கிறோம். கர்த்தருடைய வெளிச்சம் நிறைவானது. இந்த வெளிச்சத்தில் குறைவோ அல்லது மங்கிய பகுதியோ எதுவுமில்லை. இதுவே பூரண வெளிச்சம். கர்த்தருடைய வெளிச்சத்தில் மாத்திரமே, நாம் கர்த்தராகிய வெளிச்சத்தைக் காணமுடியும்.
கர்த்தர் தம்மை தம்முடைய கிருபையினால் நமக்கு வெளிப்படுத்திக் காண்பிக்கிறார். அவருடைய வெளிச்சத்தில்தான் நம்மால் அவரை காணமுடியும். கர்த்தரைப் பார்க்கும்போது அவருடைய பரிபூரணமான கிருபையை நாம் பார்க்கலாம். அவருடைய பேரின்ப நதியின் மூலமாய்க் கிடைக்கும் சந்தோஷத்தினால் நாம் திருப்தியடையலாம். கர்த்தருடைய பேரின்ப நதி நம்முடைய ஆவிக்குரிய தாகம் எல்லாவற்றையும் தீர்த்து வைக்கும்.
கர்த்தருடைய வெளிச்சம் அவருடைய வேதவாக்கியத்தில் பிரகாரசமாய் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் சமுகத்தில் நம்மால் தேவனுடைய வெளிச்சத்தை காணமுடியும். இயேசுகிறிஸ்துவே இந்த உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறார். இயேசுகிறிஸ்து என்னும் வெளிச்சத்தில் மாத்திரமே நம்மால் வெளிச்சமாயிருக்கிற தேவனை காணமுடியும். மற்ற வெளிச்சங்களெல்லாம் தேவனை காண்பதற்குப் போதுமானதாயிராது. அவை குறைவுள்ள வெளிச்சங்கள். கிறிஸ்து மாத்திரமே நிறைவானவர். அவர் மாத்திரமே நிறைவான வெளிச்சமாயும், ஒளியாயும் இருக்கிறவர்.
கர்த்தருடைய வெளிச்சத்தில் நம்மால் சகல சத்தியத்தையும் காணமுடியும். கர்த்தருடைய வெளிச்சம் நமக்கு எல்லா சத்தியத்தையும் வெளிப்படுத்திக் காண்பிக்கிறது. நாம் கர்த்தரோடு ஐக்கியமாயிருப்பதினாலும், கர்த்தருடைய கிருபை நமக்குக் கொடுக்கப்பட்டிருப்பதினாலும், கர்த்தர் நம்மை தம்முடைய நன்மைகளினால் நிரப்புகிறார். நாம் கர்த்தரிடத்தில் பயபக்தியாயிருந்து, அவரை நன்றியுள்ள இருதயத்தோடு துதிக்கும்போது, கர்த்தருடைய கிருபை நமக்கு அதிகமாய்க் கிடைக்கும். துதி பெருகும் போது கிருபையும் பெருகும்.
கர்த்தர் தம்முடைய கிருபையை நமக்குப் பூரணமாய் வெளிப்படுத்திக் காண்பிக்கும்போது, கர்த்தருடைய சமுகத்திலே நமக்கு சம்பூரணமான திருப்தியுண்டாகும். இது கர்த்தருடைய ஆலயத்தின் சம்பூரணமான திருப்தி. இது கர்த்தருடைய பேரின்ப நதியினால் உண்டாகும் சந்தோஷம். இது ஜீவஊற்றிலிருந்து நமக்குக் கிடைக்கிற சமாதானம். கர்த்தருடைய மெய்யான சந்தோஷம் நமக்குக் கிடைக்கும்போது, நம்முடைய ஆவிக்குரிய தாகமெல்லாம் தீர்க்கப்படும்.
தாவீதின் ஜெபம் சங் 36 : 10-12
சங் 36:10. உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும், செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல் உமது நீதியையும் பாராட்டியருளும்.
சங் 36:11. பெருமைக்காரரின் கால் என்மேல் வராமலும், துன்மார்க்கருடைய கை என்னைப் பறக்கடியாமலும் இருப்பதாக.
சங் 36:12. அதோ அக்கிரமக்காரர் விழுந்தார்கள்; எழுந்திருக்கமாட்டாமல் தள்ளுண்டுபோனார்கள்.
உம்மை அறிந்தவர்கள்மேல் 36:10
உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும், செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல் உமது நீதியையும் பாராட்டியருளும் (சங் 36:10).
தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார். அவர் கர்த்தருடைய பரிசுத்தவான்களுக்காக பரிந்துபேசி ஜெபம்பண்ணுகிறார். கர்த்தருடைய கிருபை அவர்களுக்குக் கிடைக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்கிறார். தாவீது கர்த்தருடைய பரிசுத்தவான்களுக்காக ஜெபித்த பின்பு, அவர் தனக்காகவும் ஜெபம்பண்ணுகிறார். துன்மார்க்கருடைய கைகளிலிருந்து கர்த்தர் தாமே தன்னைப் பாதுகாத்தருளவேண்டுமென்று தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார்.
கர்த்தருடைய பரிசுத்தவான்களைப்பற்றி தாவீது சொல்லும்போது அவர்கள் கர்த்தரை அறிந்தவர்கள் என்றும், அவர்கள் செம்மையான இருதயமுள்ளவர்கள் என்றும் சொல்லுகிறார். இவர்கள் கர்த்தரை உண்மையாய் விசுவாசிப்பார்கள். அவர்களுடைய ஜீவியத்தில் மாய்மாலம் இருக்காது. கர்த்தருடைய பரிசுத்தவான்கள் கர்த்தருக்குப் பிரியமானவர்களாயும், பிரயோஜனமானவர்களாயும் இருப்பார்கள். இவர்கள் தேவனுக்கும் மனுஷருக்கும் உண்மையுள்ளவர்களாய் ஜீவிப்பார்கள். இவர்கள் தேவனிடத்திலும் பக்தியாயிருப்பார்கள். மனுஷரிடத்திலும் அன்புகூருவார்கள். இவர்கள் மாய்மாலமில்லாமல் ஜீவிப்பதினால், இவர்களுடைய பேச்சுக்கும் செய்கைக்கும் முரண்பாடு எதுவும் இருக்காது.
கர்த்தரை அறிந்தவர்கள்மேல் கர்த்தர் தமது கிருபையைக் காண்பிக்கவேண்டுமென்று தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார். கர்த்தர் நல்லவர் என்பதை அவர்கள் ருசித்துப் பார்க்கவேண்டும். அவர்கள் கர்த்தருடைய நன்மைகளை குறைவில்லாமல், நிறைவாய்ப் பெற்றுக்கொள்ளவேண்டும். கர்த்தருடைய பரிசுத்தவான்கள் செம்மையான இருதயமுள்ளவர்கள். கர்த்தர் தமது நீதியை அவர்களுக்கு பாராட்டியருளவேண்டுமென்று தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார். தேவனுடைய கிருபை இவர்களுடைய ஜீவியத்தில் கிரியை நடப்பிக்கவேண்டும். கர்த்தருடைய கிரியையெல்லாமே நீதியுள்ளதாயிருக்கிறது.
நீதிமானுக்காக ஏறெடுக்கப்படும் விண்ணப்பங்கள்
1. உம்மை அறிந்தவர்கள் மேல் உமது கிருபையைப் பாராட்டியருளும் (சங் 36:5,6,10)
2. செம்மையான இருதயமுள்ளவர்கள் மேல் உமது நீதியைப் பாராட்டியருளும் (சங் 36:10)
3. பெருமைக்காரரின் கால் என்மேல் வராமல் இருக்கும்படி செய்யும் (சங் 36:11)
4. துன்மார்க்கருடைய கை என்னைப் பறக்கடியாமல் இருக்கட்டும்
அக்கிரமக்காரர் 36:11-12
பெருமைக்காரரின் கால் என்மேல் வராமலும், துன்மார்க்கருடைய கை என்னைப் பறக்கடியாமலும் இருப்பதாக. அதோ அக்கிரமக்காரர் விழுந்தார்கள்; எழுந்திருக்கமாட்டாமல் தள்ளுண்டுபோனார்கள் (சங் 36:11,12).
தாவீது கர்த்தருடைய பரிசுத்தவான்களுக்காக ஜெபித்த பின்பு, அவர் தனக்காகவும் கர்த்தருடைய சமுகத்தில் பயபக்தியோடு ஜெபம்பண்ணுகிறார். கர்த்தர் தாமே தம்முடைய கிருபையினால் தன்னைக் காத்துக்கொள்ளவேண்டுமென்று வேண்டிக்கொள்கிறார். கர்த்தர் தனக்கு கிருபையையும், ஆறுதலையும், சந்தோஷத்தையும், சமாதானத்தையும் தரவேண்டுமென்பதே தாவீதின் விண்ணப்பம். பெருமைக்காரரின் கால் தன்மேல் வரக்கூடாது என்றும், துன்மார்க்கருடைய கை தன்னை பறக்கடிக்கக்கூடாது என்றும் தாவீது ஜெபிக்கிறார்.
துன்மார்க்கர் தங்களுடைய கால்களினால் தாவீதை மிதித்து நசுக்கிவிடக்கூடாது. துன்மார்க்கருடைய கை வஞ்சகம் நிறைந்ததாயிருக்கிறது. அவர்களுக்கு கர்த்தரிடத்தில் பயமில்லை. அவர்கள் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு சத்துருக்களாயிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கைகளினால் கர்த்தருடைய பரிசுத்தவான்களுக்கு தீங்கு செய்கிறார்கள். துன்மார்க்கருடைய கை தன்னைத் தொடக்கூடாது என்றும், தனக்கு அவர்களுடைய கை எந்தத் தீங்கும் செய்யக்கூடாது என்றும் தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார். துன்மார்க்கர் தனக்கு நேராக தங்களுடைய கைகளை நீட்டக்கூடாது என்பதே தாவீதின் ஜெபம்.
துன்மார்க்கர் தாவீதின்மேல் தங்கள் கைகளை நீட்டி குற்றம் சுமத்தக்கூடாது. தாவீது கர்த்தரிடத்தில் விசுவாசமாயிருக்கிறார். துன்மார்க்கர் தாவீதின் விசுவாசத்தை அசைத்து விடக்கூடாது. துன்மார்க்கர் தாவீதுக்கு பல சோதனைகளையும், போராட்டங்களையும் கொண்டு வந்து, தாவீதின் விசுவாசத்தையும், சந்தோஷத்தையும், சமாதானத்தையும் நிலைகுலைய செய்துவிடக்கூடாது. துன்மார்க்கர் மூலமாய் தனக்கு எந்தத் தீங்கும் வரக்கூடாது என்று தாவீது கர்த்தருடைய சமுகத்தில் பயபக்தியாய் விண்ணப்பம்பண்ணுகிறார்.
கர்த்தர் தாவீதுக்கு தம்முடைய கிருபையைக் காண்பிக்கிறார். தாவீதை தம்முடைய வல்லமையினால் பாதுகாத்துக்கொள்கிறார். இதனால் தாவீதுக்கு விரோதமாய் வந்த அக்கிரமக்காரர் விழுந்துவிடுகிறார்கள். அவர்கள் எழுந்திருக்கமாட்டாமல் தள்ளுண்டு போனார்கள். தன்னுடைய யுத்தம் கர்த்தருடையது என்றும், கர்த்தர் தனக்காக யுத்தம் பண்ணுவார் என்றும் தாவீது விசுவாசிக்கிறார். இந்த யுத்தத்தில் கர்த்தரே ஜெயிப்பார் என்றும், அக்கிரமக்காரர் மறுபடியும் எழுந்திருக்கமாட்டாமல் தோற்றுப்போய் கீழே விழுந்துவிடுவார்கள் என்றும் தாவீது விசுவாசத்தோடு அறிக்கை செய்கிறார்.
துன்மார்க்கர் பெருமையில் விழுவார்கள். அவர்களால் அதிலிருந்து எழுந்திருக்க முடியாது சங் 36:11. லூசிபர் தன் பெருமையினால் விழுந்தான் (எசே 28:11-17). மனுஷர் வீழ்ந்து போவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று பெருமையே (எசே 36:12; சங் 31:20; சங் 73:6; நீதி 16:18; மாற்கு 7:22; 1யோவான் 2:16).