37 ஆம் சங்கீதம் விளக்கம்

 


37 ஆம் சங்கீதம் விளக்கம்

    மூன்றாவது போதக சங்கீதம் – ஆசீர்வாதங்கள், சாபங்கள் ஆகியவற்றைப் பற்றிய உபதேசம்

    பொருளடக்கம்

        1. பதிமூன்று கட்டளைகள் – கீழ்ப்படித-ன் பத்து ஆசீர்வாதங்கள் – (37:1-11) 

        2. துன்மார்க்கனின் பத்து விதமான விதைப்பும் அறுப்பும் – (37:12-15)  

        3. நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும் இடையே காணப்படும் ஐந்து விதமான வேற்றுமைகள் – (37:16-22)  

        4. நீதிமானின் ஏழு விதமான ஆசீர்வாதங்கள் – (37:23-26)  

        5. மூன்று கட்டளைகள் – நீதிமானின் பத்துவிதமான ஆசீர்வாதங்கள் – துன்மார்க்கனின் இரண்டு விதமான பாவங்களும் சாபங்களும் – (37:27-33)  

        6. நான்கு கட்டளைகள் – நீதிமான், துன்மார்க்கன் ஆகியோரின் முடிவு – (37:34-38)  

        7. நீதிமானுக்கு அருளப்படும் ஆறு ஆசீர்வாதங்கள் – ஆசீர்வாதங்களுக்கான காரணங்கள் – (37:39-40)

    முப்பத்து ஏழாவது சங்கீதம் ஒரு போதக சங்கீதமாகும். இதில் நம்முடைய ஆத்துமாவுக்குப் பிரயோஜனமான பிரசங்கச் செய்திகள் இடம்பெற்றிருக்கிறது. கர்த்தருடைய உபதேசத்தை நமக்குப் போதிப்பதற்காகவே இந்த சங்கீதம் எழுதப்பட்டிருக்கிறது.  இது நமக்கு உபதேசமாகவே சொல்லப்பட்டிருக்கிறது.  இது மஸ்கீல்  என்னும் சங்கீதமாகும்.  இதற்கு  போதக சங்கீதம் என்று பொருள்.

    தேவனுடைய பராமரிப்பு என்னும் ஆகமத்தில் அநேக அத்தியாயங்கள் உண்டு.  ஒவ்வொரு அத்தியாயமும் புரிந்துகொள்வதற்கு மிகவும் கடினமாயிருக்கும்.  தேவன் பட்சபாதமில்லாதவர்.  ஆனாலும் இந்தப் பிரபஞ்சத்தில் துன்மார்க்கர் செழித்திருக்கிறார்கள். நீதிமான்களோ அநேக துன்பங்களையும் பாடுகளையும் அனுபவிக்கிறார்கள்.  சங்கீதக்காரர் தேவனுடைய பராமரிப்பின் இரகசியத்தை இந்த சங்கீதத்தில்  தெளிவாகப் போதிக்கிறார். 

    கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையக்கூடாது.  துன்மார்க்கர் தங்களுடைய துன்மார்க்கமான வழிகளில் செழித்திருக்கும்போது அவர்கள்மேல் நாம் எரிச்சடையக்கூடாது (சங் 37:1,7,8).

    பொல்லாதவர்களைக் குறித்து நாம் ஏன்  எரிச்சலடையக்கூடாது என்பதற்கான காரணங்களையும் சங்கீதக்காரர் விரிவாக எடுத்துச் சொல்லுகிறார். துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைக்கிறான்.  துன்மார்க்கன் கடன் வாங்கி செலுத்தாமல் போகிறான்.  மேலும் துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து  அவனைக் கொல்ல வகைதேடுகிறான் (சங் 37:12,14,21,32). 

    நீதிமான் இரங்கிக் கொடுக்கிறான். நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைக்கும்.  அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும். ஆனாலும்  துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைக்கிறான்            (சங் 37:21,26,30,31).  

    துன்மார்க்கருக்கு அழிவு சீக்கிரம் வரும்                         (சங் 37:2,9,10,20,35,36,38). கர்த்தர் நீதிமானைத் தாங்குகிறார். துன்மார்க்கனுடைய  தீயஆலோசனை அவனையே அழித்துப்போடும்  (சங் 37:13,15,17,28,33,39,40). சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரிப்பார்கள். அவர்கள் மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.  கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களுக்கு  அநேக ஆசீர்வாதங்களை வைத்திருக்கிறார்                            (சங் 37:11,16,18,19,22-25,28,29,37).

    நாம் துன்மார்க்கரைப்பார்த்து எரிச்சலடையாமல், அவர்கள்மேல் பொறாமை கொள்ளாமல், தீமையை விட்டு விலகி நன்மை செய்யவேண்டும்.  அப்போது நாம் என்றென்றைக்கும் நிலைத்திருப்போம். நாம் கர்த்தருக்குக் காத்திருந்து அவருடைய வழியைக் கைக்கொள்ளவேண்டும் (சங் 37:3-6,27,34). 

    பொல்லாதவர்களும் நாமும் சங் 37 : 1-6

    பொல்லாதவர்கள்  (சங் 37:1,2)

    பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே. அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள் (சங் 37:1,2). 

    கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் பொல்லாதவர்களுடைய செழிப்பையும், அவர்களுடைய உயர்ந்த வாழ்க்கை தரத்தையும் குறித்து எரிச்சலடையக்கூடாது. இது  கர்த்தருடைய பிள்ளைகளுக்கு எச்சரிப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. “”பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே, நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே”.  

    தாவீது இந்த வாக்கியத்தை முதலாவதாக தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறார்.  இதுதான் பிரசங்கிக்கிறவருடைய லட்சணம்.  பிரசங்கியார் மற்றவர்களுக்குப் பிரசங்கிப்பதற்கு முன்பாக, தன்னுடைய பிரசங்கத்தை தனக்குத்தானே பிரசங்கிக்கவேண்டும். பிரசங்கியார்  தன்னுடைய செய்தியினால்  உணர்த்தப்படவேண்டும். பரிசுத்தமாக்கப்பட வேண்டும். இப்படி பிரசங்கம்பண்ணினால்தான்  நம்முடைய பிரசங்கம் ஜீவனுள்ளதாயிருக்கும். நம்முடைய பிரசங்கம் நமக்குப் பிரயோஜனமுள்ளதாயிருந்தால்தான், அது மற்றவர்களுக்கும் பிரயோஜனமுள்ளதாயிருக்கும். 

    நாம் இந்தப் பிரபஞ்சத்தை நோக்கிப் பார்க்கும்போது, இதில் பொல்லாதவர்களும் நியாயக்கேடு செய்கிறவர்களும் அநேகர் இருப்பதை பார்க்க முடியும்.   அவர்கள் உலகப்பிரகாரமாக செழித்திருக்கிறார்கள். எல்லா வசதிகளோடும் ஆடம்பரமாய் ஜீவிக்கிறார்கள். அவர்களுடைய வசதியைப் பார்க்கும்போது, நாம் நம்மையும் நோக்கிப் பார்க்கிறோம்.  நாம் கர்த்தருடைய பிள்ளைகளாகயிருந்தாலும் நமக்கு அவர்களைப்போன்ற வசதியிருப்பதில்லை. நாம் நீதியைச் செய்தாலும் நமக்கு உலகப்பிரகாரமான ஆசீர்வாதம் குறைவாகவே இருக்கிறது.

    நாம் பொல்லாதவர்களையும், நியாயக்கேடு செய்கிறவர்களையும் பார்க்கும்போது அவர்களைக் குறித்து எரிச்சலடைகிறோம்.  அவர்கள்மேல் பொறாமைப்படுகிறோம். எரிச்சலும் பொறாமையும் நமக்கு வருகிற சோதனை.  சில சமயங்களில்  நாம் இவர்களைப்பார்த்து நம்முடைய தேவன்மேலேயே எரிச்சலடைகிறோம். தேவன் தம்முடைய பிள்ளைகள்மேல் அன்பாயில்லையென்றும், அவர் தம்முடைய பிள்ளைகளை  ஆசீர்வதிக்கவில்லையென்றும் கர்த்தர்மேல் குறை சொல்லுகிறோம். 

    கர்த்தருடைய சபையார் எளிய நிலமையில் வாழ்வதும், பொல்லாதவர்களும் நியாயக்கேடு செய்கிறவர்களும் செழிப்பாய் வாழ்வதும் கர்த்தருடைய சித்தம் என்று நினைத்து நமக்கு நாமே வேதனைப்படுகிறோம். துன்மார்க்கரைப்போல நமக்கு வசதியான வாழ்க்கையில்லையே என்றும், ஆடம்பரமாக வாழாவிட்டாலும் அடிப்படை தேவைகள்கூட நமக்குச் சந்திக்கப்படவில்லையே என்றும் நினைத்து கர்த்தர்மேல் எரிச்சல் படுகிறோம். 

    துன்மார்க்கரும் நியாயக்கேடு செய்கிறவர்களும் அநீதியான வழிகளில்  தங்கள் ஐசுவரியங்களை சேமித்து குவித்து வைக்கிறார்கள். கர்த்தர் அவர்களைத் தண்டிப்பதில்லை.  அவர்கள் ஐசுவரியவான்கள் ஆவதற்கு கர்த்தரும் அனுமதிக்கிறார்.  அவர்கள்  எந்தவிதமான தடையுமில்லாமல், சுதந்தரமாய் நியாயக்கேடு செய்கிறார்கள். தாங்கள் இச்சித்ததையெல்லாம் பெற்றுக்கொள்கிறார்கள். துன்மார்க்கருடைய செழிப்பான ஜீவியத்தைப் பார்க்கும்போது நாம் சோர்ந்துபோகிறோம். 

    கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் நீதியான காரியங்களை மாத்திரமே செய்கிறோம்.  நியாயக்கேடு செய்யும்போது  நம்முடைய மனச்சாட்சி நம்மை எச்சரிக்கிறது. கர்த்தருடைய வார்த்தை நியாயக்கேடு செய்யாமல் நம்மைத் தடுத்து நிறுத்துகிறது. ஆனாலும் பொல்லாதவர்களைக் குறித்து நாம்  எரிச்சலடையக்கூடாது என்றும், நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளக்கூடாது என்றும் சங்கீதக்காரர்  நமக்குப் போதிக்கிறார்.

    நாம் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள பொல்லாதவர்களையும், துன்மார்க்கரையும், நியாயக்கேடு செய்கிறவர்களையும் பார்ப்பதற்குப் பதிலாக, கர்த்தருடைய சமுகத்தில்  நம்மை  விசுவாச கண்களோடு பார்க்கவேண்டும். நம்மை நாமே விசுவாசத்தோடு பார்க்கும்போதுதான் கர்த்தர் நமக்கு வைத்திருக்கிற மெய்யான ஆசீர்வாதத்தை நம்மால் பார்க்க முடியும். அப்போது நாம் பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையமாட்டோம். நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளமாட்டோம். 

    பொல்லாதவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு போவார்கள். நியாயக்கேடு செய்கிறவர்கள் பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள்.  துன்மார்க்கருக்கு அழிவு சீக்கிரம் வரும்.  சங்காரம் அவர்கள் வாசற்படியில் காத்திருக்கிறது. நியாயக்கேடு செய்கிறவர்களுக்கு நீதியான தண்டனை கிடைக்கும். 

    பொல்லாதவர்களும், நியாயக்கேடு செய்கிறவர்களும் இப்போது ஒருவேளை சுகமாய் வாழலாம். அவர்கள் ஆடம்பரமாய் செலவு பண்ணலாம்.  ஆனாலும் அவர்களுடைய சுகவாழ்வு சீக்கிரமாய் அறுப்புண்டுபோகிற  புல்லைப்போலத்தான் இருக்கிறது. அவர்கள் சீக்கிரமாய் வாடிப்போகிற பசும்பூண்டைப்போலத்தான்  இருக்கிறார்கள். 

    துன்மார்க்கர் உலகப்பிரகாரமாக ஆடம்பரமாயிருக்கலாம்.  இந்த ஆடம்பரமெல்லாம் சீக்கிரத்தில் அழிந்து போகும்.  சீக்கிரத்தில் உலர்ந்துபோகும். அது சீக்கிரத்தில் வாடிப்போகும். அவர்களுடைய ஆடம்பரம்  நிலைப்பதில்லை. அவர்கள் தங்கள் பாவத்தின்  பலனை அறுப்பார்கள்.  நியாயக்கேடு செய்து  ஐசுவரியம் சம்பாதித்தவர்கள் நிலைத்து நிற்கமாட்டார்கள்.  அவர்களுடைய ஐசுவரியமும் அவர்களை விட்டு சீக்கிரத்தில் நீங்கிப்போய்விடும்.

    சங்கீதம் 37 – இல் கூறப்பட்டுள்ள கட்டளைகள்

        1. பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே (சங் 37:1)

        2. நியாயக்கேடு செய்கிறவர்கள் மேல் பொறாமை கொள்ளாதே

        3. கர்த்தர் மேல் நம்பிக்கையாயிரு (சங் 37:3,5)

        4. நன்மை செய் (சங் 37:3, 27)

        5. கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு (சங் 37:4)

        6. உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடு (சங் 37:5)

        7. கர்த்தரை நோக்கி அமர்ந்திரு  (சங் 37:7)

        8. கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திரு  (சங் 37:7,34)

        9. காரியசித்தியுள்ளவன் மேல் எரிச்சலாகாதே

        10. தீவினைகளைச் செய்கிற மனுஷன் மேல் எரிச்சலாகாதே

        11. கோபத்தை நெகிழ்ந்து விடு  (சங் 37:8)

        12. உக்கிரத்தை விட்டுவிடு

        13. பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்

        14. தீமையை விட்டு விலகியிரு (சங் 37:27)

        15. கர்த்தருடைய வழியைக் கைக்கொள்  (சங் 37:34)

        16. உத்தமனை நோக்கியிரு (சங் 37:37)

        17. செம்மையானவனைப் பார்த்திரு

    கர்த்தரை நம்பி நன்மை செய்   (சங் 37:3)

    கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்  (சங் 37:3). 

    நாம் கர்த்தரிடத்தில் நம்பிக்கை வைத்து ஜீவிக்கவேண்டும். நம்முடைய ஜீவியம் விசுவாச ஜீவியமாக இருக்கவேண்டும்.  நாம் கர்த்தரை நம்பி ஜீவிக்கும்போது பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையமாட்டோம். நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளமாட்டோம். நாம் உலகப்பிரகாரமாக  செழிப்பாயிராவிட்டாலும்,  நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குள் செழிப்பாயிருக்கும்.  நம்முடைய ஆத்துமா செழித்திருக்கும்போது நமக்கு துன்மார்க்கர் மேல் பொறாமையிருக்காது. கர்த்தரை நம்பி ஜீவிக்கிறவர்கள் மற்றவர்களைப் பார்த்து கலங்கமாட்டார்கள். 

    சங்கீதக்காரர் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு மூன்று முக்கியமான ஆலோசனைகளைச் சொல்லுகிறார். அவையாவன : 1. நாம் கர்த்தரை நம்பி நன்மை செய்யவேண்டும். 2. நாம் கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கவேண்டும். 3. நம்முடைய வழியை கர்த்தருக்கு ஒப்புவிக்கவேண்டும்.

    கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கிற கடமைகளை நாம் நேர்த்தியாய்ச் செய்யவேண்டும். நம்முடைய ஊழியப்பாதையில்  நாம் கர்த்தரை நம்பி முன்னேறிச் செல்லவேண்டும்.  கர்த்தரை நம்புகிறவர்களுக்கு  இந்தப் பிரபஞ்சத்தில் ஆறுதலும், சமாதானமும் இருக்கும். நாம் கர்த்தரை நம்பி நன்மை செய்யவேண்டும். கர்த்தரை நம்பிவிட்டு, நாம் எப்படி வேண்டுமானாலும் ஜீவிக்கலாம் என்று  கர்த்தர் நமக்கு அனுமதி கொடுக்கவில்லை.  கர்த்தரை நம்புகிறவர்கள் தீமை செய்யக்கூடாது.  அவர்கள் கர்த்தரை நம்பி நன்மையை மாத்திரமே செய்யவேண்டும்.

    நாம் கர்த்தரை நம்பி நன்மை செய்யும்போது, கர்த்தர் நமக்கு இந்த உலகத்தில்  அநேக ஆசீர்வாதங்களை வைத்திருக்கிறார்.  கர்த்தர் நம்மைப் போஷிப்பார். நம்மைப் பாதுகாத்து பராமரிப்பார்.  நாம் தேசத்தில்  குடியிருந்து  சத்தியத்தை மேய்ந்துகொள்வோம்.  இந்த தேசத்திலே நமக்கு குடியிருக்கும் ஸ்தலம் இருக்கும். நாம் எந்தவிதமான குழப்பமுமில்லாமல் அமைதியாக குடியிருப்போம். நம்முடைய ஜீவியத்திற்குத் தேவையான பராமரிப்புக்களை கர்த்தர் பார்த்துக்கொள்வார்.  மெய்யாகவே கர்த்தர் நம்மைப் போஷிப்பார்.  

    “”சத்தியத்தை மேய்ந்து கொள்” என்னும் வாக்கியத்திற்கு, “”நாம் விசுவாசத்தினால் போஷிக்கப்படுவோம்” என்பது பொருளாகும். நீதிமான் விசுவாசத்தினால் பிழைப்பான்.  நாம் கர்த்தரை நம்பி நன்மை செய்யும்போது நமக்கு  நல்ல ஜீவியம் கிடைக்கும்.  நல்ல போஜனம் கிடைக்கும்.  கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் நமக்குச் சித்திக்கும். 

    சங்கீதம் – 37 இல் கூறப்பட்டுள்ள வாக்குத்தத்தங்கள்

        1. நித்திய தேசத்தில் குடியிருப்பாய் (சங் 37:3, 29)

        2. சத்தியத்தை மேய்ந்துகொள்வாய் (சங் 37:3)

        3. உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார் (சங் 37:4)

        4. காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்  (சங் 37:5)

        5. நீதியை வெளிச்சத்தைப் போல விளங்கப்பண்ணுவார் (சங் 37:6)

        6. நியாயத்தைப் பட்டப்பகலைப் போல விளங்கப்பண்ணுவார்

        7. பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள் (சங் 37:9,20,             22, 34, 38)

        8. கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள் (சங் 37:9, 11, 22, 29, 34; மத் 5:5)

        9. சமாதானம் மிகுதியாயிருக்கும் (சங் 37:11)

        10. நீதிமான்களைக் கர்த்தர் தாங்குகிறார் (சங் 37:17,24)

        11. அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்  (சங் 37:18)

        12. ஆபத்துக் காலத்திலே வெட்கப்பட்டுப் போகாதிருப்பார்கள்             (சங் 37:19)

        13. பஞ்சக்காலத்திலே திருப்தியடைவார்கள்

        14. விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை   (சங் 37:24)

        15. கர்த்தர் பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை (சங் 37:28)

        16. அவர்கள் என்றைக்கும் காக்கப் படுவார்கள்

        17. துன்மார்க்கருடைய சந்ததி அறுப்புண்டு போகும்

        18. அவர்கள் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை (சங் 37:31)

        19. கர்த்தர், துன்மார்க்கன் கையில் கொடுப்பதில்லை (சங் 37:33)

        20. ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதில்லை

        21. செம்மையானவனுடைய முடிவு சமாதானம் (சங் 37:37)

        22. இரட்சிப்பு கர்த்தரால் வரும்  (சங் 37:39-40)

        23. இக்கட்டுக் காலத்தில் கர்த்தரே நீதிமான்களுடைய அடைக்கலம்          (சங் 37:39)

        24. கர்த்தரால் உதவி வரும் (சங் 37:40)

        25. துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார் 

    கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு (சங் 37:4)

    கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்  (சங் 37:4). 

    கர்த்தரே நம்முடைய இருதயத்தின் சந்தோஷத்திற்கு காரண கர்த்தாவாயிருக்கிறார். நாம் கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருக்க வேண்டும். அவர் நம்முடைய இருதயத்தின் வேண்டுதல்களை நமக்கு அருள் செய்வார். நாம் கர்த்தரை நம்பி  நன்மை செய்து, கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கவேண்டும். நாம் நன்மை செய்யும்போது, மனமகிழ்ச்சி நம்மைப் பின்தொடரும். 

    கர்த்தரை நம்பி நன்மை செய்யவேண்டும் என்பது ஒவ்வொரு விசுவாசியின் கடமை. இது  நமக்குக் கிடைத்திருக்கிற சிலாக்கியம்.  கர்த்தரை நம்பி நன்மை செய்யும்போது  அவர் நம்முடைய இருதயத்தின் வேண்டுதல்களை நமக்கு  அருள் செய்கிறார். அப்போது நாம் கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருப்போம். கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருப்பது நமக்குக் கிடைத்திருக்கிற மிகப்பெரிய ஆசீர்வாதம்.  

    கர்த்தரை நம்பி நன்மை செய்கிறவர்களுக்கு, கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கிறவர்களுக்கு கர்த்தர் ஒரு உன்னதமான வாக்குத்தத்தத்தைக் கொடுக்கிறார்.  கர்த்தர் நம்முடைய இருதயத்தின் வேண்டுதல்களை நமக்கு அருள் செய்வார் என்பதே கர்த்தருடைய வாக்குத்தத்தம். கர்த்தர் நம்முடைய மாம்சப்பிரகாரமான  ஆசைகளையெல்லாம் நிறைவேற்றுவதாக நமக்கு வாக்குப்பண்ணவில்லை. கர்த்தர் நம்முடைய இருதயத்தின் வேண்டுதல்களையும், நம்முடைய ஆத்துமாவின் வாஞ்சைகளையும்  நமக்கு  அருள் செய்வார்.

    நீதிமானுடைய இருதயம் செம்மையானது.  நீதிமானுடைய இருதயம் கர்த்தரிடத்தில்  துன்மார்க்கமான காரியங்களை  வேண்டிக்கொள்ளாது.  நீதிமானுடைய இருதயம் கர்த்தரை நேசிக்கவேண்டும் என்றும், கர்த்தருக்காக ஜீவிக்கவேண்டும் என்றும், கர்த்தரை அறிந்துகொள்ளவேண்டும் என்றும்,  கர்த்தரைப் பிரியப்படுத்த வேண்டும் என்றும், கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாயிருக்கவேண்டும் என்றும்  வேண்டுதல் செய்யும்.  கர்த்தர் இப்படிப்பட்ட வேண்டுதலை நீதிமானுக்கு அருள் செய்வார்.  

    உன் வழியை கர்த்தருக்கு ஒப்புவி   (சங் 37:5,6)

    உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.  உன் நீதியை வெளிச்சத்தைப்          போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார்  (சங் 37:5,6). 

    கர்த்தரை நம்முடைய ஜீவியத்திற்கு வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.  அவருடைய வழிநடத்துதலுக்கு நம்மை முழுவதுமாய் ஒப்புக்கொடுக்கவேண்டும். அப்போது  கர்த்தர் நமக்கு  காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.  நம்முடைய வாழ்க்கையில்  சில காரியங்கள் குழப்பமாகயிருக்கலாம். நம்முடைய வழிகள்  கரடுமுரடாகயிருக்கலாம். நடப்பதற்கு  கடினமான வழிகளாகயிருக்கலாம்.  சில சமயங்களில்  நம்முடைய வழி கோணலாகயிருக்கலாம். நம்முடைய வழியை கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிருக்கும்போது, கர்த்தர் தாமே  நம்முடைய கோணலான வழியை நேராக்குவார்.  கரடுமுரடான பாதைகளை செம்மையாக்குவார்.  குழப்பமான பாதைகளை சீராக்குவார்.

    கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கிற   கடமை மிகவும் எளிது.  நாம் கர்த்தருடைய வார்த்தைக்கு  சரியாகக் கீழ்ப்படிந்தால்,  சகலமும் நமக்கு சரியாகயிருக்கும். கர்த்தருக்கு  நம்முடைய வழியை ஒப்புவிக்கவேண்டும்.       இந்த வாக்கியத்திற்கு “”கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கவேண்டும்” என்றும் வியாக்கியானம் சொல்லலாம். 

    “”உன் செய்கைகளை கர்த்தருக்கு ஒப்புவி. அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்” (நீதி 16:3). “”கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார். நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்” (சங் 55:22). “”அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” (1பேது 5:7). 

    “”உங்களுடைய வழியை கர்த்தருக்குத் தெரியப்படுத்துங்கள்” என்று செப்துவஜிந்த் பதிப்பில் இந்த வாக்கியம் எழுதப்பட்டிருக்கிறது. நம்முடைய ஜெபத்தில், நம்முடைய வழிகளை கர்த்தருக்கு அறிவிக்கவேண்டும்.  நம்முடைய கவலைகளையெல்லாம் கர்த்தருடைய சமுகத்தில் ஒப்புக்கொடுத்துவிடவேண்டும். கர்த்தர் நமக்கு நன்மையான காரியங்களைச் செய்வார் என்று கர்த்தரிடத்தில் நம்பிக்கையாயிருக்கவேண்டும்.  கர்த்தர் நம்முடைய ஜீவியத்தில் நமக்கு எதைச் செய்தாலும் நாம் திருப்தியடையவேண்டும். 

    நாம்  கர்த்தருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றவேண்டும்.         கர்த்தர் நமக்குக் கொடுக்கிற பராமரிப்புக்களை நன்றியோடு பெற்றுக்கொள்ளவேண்டும்.  கர்த்தரைக் கட்டாயப்படுத்தக்கூடாது.  கர்த்தர் அனந்த ஞானமுள்ளவர். கர்த்தருக்கு நாம் கட்டளையிடக்கூடாது. கர்த்தருடைய சர்வஞானத்திற்கு நாம் கீழ்ப்படிய வேண்டுமேயல்லாமல், நாம் கர்த்தருக்கு  ஒருபோதும் யோசனை சொல்லக்கூடாது.  

    நம்முடைய வழியை கர்த்தருக்கு ஒப்புவித்து அவர்மேல் நம்பிக்கையாயிருக்கும்போது, கர்த்தர் நம்முடைய காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். இது கர்த்தருடைய வாக்குத்தத்தம். கர்த்தரிடத்தில் நம்முடைய வழியை ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிருக்கும்போது, கர்த்தர் தாமே நமக்கு சமாதானத்தைத் தருவார். நம்முடைய ஜீவியத்திலிருந்து பயத்தை நீக்குவார். நம்முடைய ஜீவியத்தின் நோக்கத்தை நமக்குத் தெளிவுபடுத்துவார்.  நம்முடைய இருதயத்தில்  திருப்தியை உண்டுபண்ணுவார்.

    கர்த்தர் நம்முடைய நீதியை வெளிச்சத்தைப்போலவும், நம்முடைய நியாயத்தை பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார். நாம் உலகத்தார் மத்தியில் நீதிமான்களாகக் காணப்படுவோம். நாம் கண்ணியமானவர்களாகவும், உண்மையுள்ளவர்களாகவும், கனமுள்ளவர்களாகவும் உலகத்தார் மத்தியிலே  விளங்குவோம்.  கர்த்தர் நம்மை உயர்த்துவதினால், உலகத்து ஜனங்கள் நம்முடைய உயர்வையும் மேன்மையையும் அங்கீகரிப்பார்கள். 

    நம்முடைய நல்மனச்சாட்சியை நாம் காத்துக்கொள்ளவேண்டும்.  நம்முடைய காரியங்களையெல்லாம் கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுத்து, அவரே அவற்றை பார்த்துக்கொள்வார் என்று  அவர்மேல் நம்பிக்கையாயிருக்கவேண்டும். அப்போது கர்த்தர் மெய்யாகவே நம்முடைய நற்பெயரை  காத்துக்கொள்வார். 

    கர்த்தருக்கு காத்திரு   (சங் 37:7,8)

    கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தயுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன்மேலும் எரிச்சலாகாதே. கோபத்தை           நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு; பொல்லாப்புச்செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்  (சங் 37:7,8). 

    கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் அவரை நம்பி ஜீவிக்கவேண்டும்.  கர்த்தரை நம்புகிற சுபாவம் மாத்திரமே நம்மிடத்தில் நிரம்பியிருக்கவேண்டும். தாவீது  நமக்கு  இது குறித்து  “”கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு” என்று ஆலோசனை சொல்லுகிறார். கர்த்தர் செய்கிற எல்லா காரியங்களையும்  நாம் அறிந்திருக்கவேண்டும். கர்த்தர் நமக்காக செய்கிற எல்லா காரியங்களிலும் நாம்  பரிபூரண திருப்தியோடிருக்கவேண்டும். 

    கர்த்தரை நம்புகிற பிள்ளைகளுக்கு  சகலமும் நன்மைக்கேதுவாகவே நடைபெறும்.  பல சமயங்களில்  அது எப்படி நமக்கு  நன்மையாக நடைபெறும் என்று  நமக்குத் தெரியாமலிருக்கலாம்.  நமக்கு எப்படிப்பட்ட நன்மை நடைபெறும் என்பதுகூட  தெரியாமல் போகலாம்.  ஆனாலும் நம்முடைய கர்த்தர் நமக்காக நன்மையானவைகளை மாத்திரமே செய்வார். கர்த்தருடைய நன்மையான கிரியைகளுக்காக நாம் அவரை நோக்கி அமர்ந்து, அவருடைய கிருபை நிரம்பிய  செய்கைகளுக்காகக் காத்திருக்கவேண்டும்.

    “”கர்த்தருக்குக் காத்திரு” என்னும் வாக்கியத்திற்கு “”ஒன்றும் செய்யாமல் சும்மா சோம்பேறியாகயிரு”  என்பது பொருளல்ல.  இந்த வாக்கியத்திற்கு “”கர்த்தருடைய சமுகத்தில்  பயபக்தியோடு காத்திருப்பது” என்பதே பொருளாகும். நாம் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து  அமைதியாயிருக்கவேண்டும். “”காத்திரு” என்னும் வார்த்தைக்கு, “”கீழ்ப்படிதலோடு  அமைதியாயிரு” என்பதே பொருள். 

    இந்தப் பிரபஞ்சத்தில் நாம் பல்வேறு காரியங்களைப் பார்க்கிறோம்.  அவற்றையெல்லாம் பார்த்து நமக்குள்  எரிச்சல் வந்துவிடக்கூடாது.  நமக்கு தாழ்வு மனப்பான்மையும் வந்துவிடக்கூடாது. காரியசித்தி உள்ளவன்மேலும், தீவினைகளைச் செய்கிற மனுஷர் மேலும் நாம் எரிச்சலாகக்கூடாது. 

    அவர்கள் துன்மார்க்கராயிருந்தாலும் உலகப்பிரகாரமான  ஐசுவரியங்களை அதிகமாய்ச் சேர்த்து வைக்கிறார்கள். இந்த உலகத்தில் அவர்கள் பெரியவர்களாயிருக்கிறார்கள். இந்த உலகத்தில் இருக்கிறவனிலும், நமக்குள்ளிருக்கிற நம்முடைய  கர்த்தராகிய இயேசுகிறிஸ்து  பெரியவர். 

    துன்மார்க்கர்கள் இந்த உலகத்தில் உயரும்போது நாம் அவர்கள்மீது கோபப்படக்கூடாது. அவர்களுக்கு  பொல்லாப்பு செய்யவேண்டும் என்னும் நினைப்பு நமக்குள் வரக்கூடாது.  அவர்கள்மீது  எரிச்சல் படக்கூடாது. நாம் கோபத்தை நெகிழ்ந்து உக்கிரத்தை விட்டுவிடவேண்டும். பொல்லாப்பு செய்ய ஏதுவான எரிச்சல் நமக்குள் காணப்படக்கூடாது.  அவர்களுடைய  சுகவாழ்வைப் பார்த்து நாம் பொறாமைப்படக்கூடாது.  அவர்களைப்போல நாமும் செழிப்பாய் வாழவேண்டும் என்று விரும்பி, துன்மார்க்கரின் தீயவழிகளை பின்பற்றிச் சென்றுவிடக்கூடாது. 

    துன்மார்க்கருக்கு எந்தவித கட்டுப்பாடுமில்லை. அவர்கள் கர்த்தருடைய பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவதில்லை.  கர்த்தர் அவர்களை ஆளுகை செய்வதுமில்லை. ஆகையினால் அவர்கள் தங்கள் மனம் விரும்பிய பிரகாரம் துன்மார்க்கமாய் ஜீவிக்கிறார்கள். அவர்களுக்கு அழிவு நியமிக்கப்பட்டிருக்கிறது. நியாயத்தீர்ப்பு நாளின்போது  அவர்களுக்கு நித்திய வேதனை உண்டாகும். கர்த்தருடைய பிள்ளைகளோ துன்மார்க்கரைப் பார்த்து பொறாமைப்படாமல்,     கர்த்தரைப் பார்த்து சந்தோஷப்படவேண்டும். கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாயிருக்கவேண்டும்.  இந்த உலகத்தில் நாம் கர்த்தருடைய பிள்ளைகளாகயிருப்பது  நம்முடைய சிலாக்கியம் என்று  நாம் கருதவேண்டும். 

    கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் சங் 37 : 9-11

    சங் 37:9. பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்ளோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.

    சங் 37:10. இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை.

    சங் 37:11. சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். 

    துன்மார்க்கமான ஜனங்களின் ஐசுவரியமான வாழ்க்கையைக் குறித்து, கர்த்தருடைய பிள்ளைகள் பொறாமைப்பட வேண்டிய அவசியம் எதுவுமில்லை. பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்.  அவர்களுக்கு தீங்கு சடுதியாய் வரும்.  அவர்கள் ஐசுவரியத்தில் செழித்திருந்தாலும் தேவனுடைய  நீதியான தீர்ப்பு  அவர்களைத் தண்டிக்கும். 

    கர்த்தருடைய பிள்ளைகள் அவருக்குக் காத்திருக்கிறார்கள்.  பரிசுத்தவான்கள் இந்த உலகத்தில் ஜீவிக்கும்போதே கர்த்தர் அவர்களை அதிகமாய் ஆசீர்வதிக்கிறார். துன்மார்க்கருக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகளைவிட, கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.  இந்தப் பூமியில் மெய்யாகவே கர்த்தருடைய பிள்ளைகள்தான் செழித்திருப்பார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். 

    “”சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருளிலும், கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம். பகையோடிருக்கும் கொழுத்த  எருதின்  கறியைப்பார்க்கிலும் சிநேகத்தோடிருக்கும் இலை கறியே நல்லது” (நீதி 15:16,17). “”தன் வழியை  சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம். மூடர்களுடைய வஞ்சனையோ  மூடத்தனம்”    (நீதி 14:8). “”இரு வழிகளில் நடக்கிற திரியா வரக்காரன் ஐசுவரியவானாயிருந்தாலும், நேர்மையாய் நடக்கிற தரித்திரன் அவனிலும் வாசி” (நீதி 28:6). 

    கர்த்தருடைய பிள்ளைகளுக்கு கர்த்தருடைய கரத்திலிருந்து நன்மை வருகிறது.  கர்த்தருடைய கரம் நல்ல கரம்.  அது தம்முடைய பிள்ளைகளுக்கு  விசேஷித்த நன்மைகளைக் கொடுக்கிற கரம்.  கர்த்தர்  இந்த உலகத்திலுள்ள  எல்லா ஜீவராசிகளுக்கும்  பொதுவான நன்மைகளைக் கொடுக்கிறார். கர்த்தர், தம்முடைய பிள்ளைகளுக்கோ,  பொதுவான நன்மைகளோடு, விசேஷித்த நன்மைகளையும் கொடுக்கிறார். 

    கர்த்தருக்காகக் காத்திருக்கிறவர்கள் எல்லா காரியத்திலும் கர்த்தரை சார்ந்திருப்பார்கள். தங்களுடைய தேவைகளையெல்லாம் கர்த்தர் தாமே சந்திப்பார் என்று  விசுவாசித்து, அவரையே எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். இவர்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து ஜீவிப்பார்கள். இப்படிப்பட்டவர்களே பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.  கர்த்தருடைய பிள்ளைகளுக்கு இம்மையிலும் ஆசீர்வாதம் உண்டு.  மறுமையிலும் ஆசீர்வாதம் உண்டு.  நாம் இம்மையில் பெற்றிருக்கிற ஆசீர்வாதம், மறுமையில் பெறப்போகிற ஆசீர்வாதத்திற்கு அச்சாரமாயிருக்கிறது.

    “”சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்” (மத் 5:5) என்று இயேசுகிறிஸ்து தம்முடைய மலைப்பிரசங்கத்தில் உபதேசம் செய்திருக்கிறார். இது சுவிசேஷத்தின் வாக்குத்தத்தம்.  மனத்தாழ்மையுள்ளவர்களுக்கு கர்த்தர் விசேஷித்த ஆசீர்வாதத்தைக் கொடுக்கிறார். சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்  (சங் 37:11).

    நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நமக்கு சமாதானத்தை வைத்துப்போவதாகச் சொல்லியிருக்கிறார். அவர் தம்முடைய சமாதானத்தையே நமக்குக் கொடுக்கிறார். உலகம் கொடுக்கிற பிரகாரம்  அவர் நமக்கு  கொடுக்கிறதில்லை (யோவா 14:27). கர்த்தர் கொடுக்கிற சமாதானத்தை இந்த உலகத்தார் கொடுக்க முடியாது.  சாந்தகுணமுள்ளவர்கள்  கர்த்தர் கொடுக்கிற சமாதானத்தைப்பெற்று மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.

    பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள். அவர்களுடைய ஐசுவரிய வாழ்வு  நிலைக்காது.  கொஞ்சகாலம் மாத்திரம் அவர்கள் ஆடம்பரமாய் ஜீவிப்பார்கள்.  அதன்பின்பு  அவர்களுடைய ஆடம்பரமும் இருக்காது. அவர்களும் இருக்கமாட்டார்கள். தாவீது  பொல்லாதவர்களைப்பற்றிச் சொல்லும்போது, “”இன்னும் கொஞ்ச நேரம்தான். அப்போது  துன்மார்க்கன் இரான். அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவனில்லை” (சங் 37:10) என்று சொல்லுகிறார். ஆகையினால் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் துன்மார்க்கருக்கு விரோதமாய் எரிச்சலடைய வேண்டியதில்லை.  அவர்கள்மீது  பொறாமைப்படவேண்டியதில்லை. 

    துன்மார்க்கன் சங் 37 : 12-17

    சங் 37:12. துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து, அவன் பேரில் பற்கடிக்கிறான்.

    சங் 37:13. ஆண்டவர் அவனைப்பார்த்து நகைக்கிறார்; அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார்.

    சங் 37:14. சிறுமையும் எளிமையுமானவனை மடிவிக்கவும்,   செம்மை மார்க்கத்தாரை விழப்பண்ணவும், துன்மார்க்கர் பட்டயத்தை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள்.

    சங் 37:15. ஆனாலும் அவர்கள் பட்டயம் அவர்ளுடைய இருதயத்திற்குள் உருவிப்போம்; அவர்கள் வில்லுகள் முறியும்.

    சங் 37:16. அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப்பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.

    சங் 37:17. துன்மார்க்கருடைய புயங்கள் முறியும்; நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார். 

    துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைக்கிறான். அவனுடைய துர்ச்சிந்தனை நீதிமானைப் பாதிக்காது. துன்மார்க்கன் தான் விரித்த வலையில் தானே விழுந்துவிடுவான். துன்மார்க்கர்  இருதயத்தில் பெருமையோடிருக்கிறார்கள்.  நீதிமானுக்கு விரோமாய்த் தீங்கு நினைக்கிறார்கள். அவனுக்கு விரோதமாய் பற்கடிக்கிறார்கள்.  கர்த்தரோ துன்மார்க்கருடைய தீயநினைவுகளையும், தீயசெய்கைகளையும்  அவமாக்கிப்போடுவார்.  கர்த்தருடைய பிள்ளைகளுக்குத் தீங்கு செய்ய  துன்மார்க்கருக்கு அனுமதியுமில்லை.  அவர்களுக்குப் பெலமுமில்லை. 

    இந்தப் பூமியில் ஐசுவரியவானாய் வாழுகிற துன்மார்க்கன், “”இது தன்னுடைய நாள்” என்று நினைக்கிறான்.  இது தனக்கு  சாதகமான காலம் என்று யோசிக்கிறான்.  தன்னுடைய நாளில்  தனக்கு நன்மை கிடைப்பதாக தனக்குத்தானே பெருமைப்படுகிறான். ஆண்டவரோ துன்மார்க்கனைப் பார்த்து நகைக்கிறார்.  கர்த்தர் அவனுக்கு நியமித்திருக்கிற நாள் வரப்போகிறது.  அந்த நாளை துன்மார்க்கனால் பார்க்க முடியாது.  அது அவனுக்கு அழிவின் நாள்.  அவன்மீது  அழிவு சடுதியாய் வரும்.  கர்த்தர் அவனுடைய நாளைக் காண்கிறார்.  அவர் அந்த நாளை அறிந்திருக்கிறார்.  

    வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள பல்வேறு விதமான நாட்கள்

        1. கோபத்தின் நாள்(யோபு 20:28;  ரோமர் 2:5)

        2. சோதனை நாள் (சங் 95:8)

        3. ஆபத்து நாள் (சங் 20:1; சங் 102:2)

        4. பராக்கிரமத்தின் நாள் (சங் 110:3)

        5. ஆபத்துக்காலம் (நீதி 24:10)

        6. வாழ்வு காலம் (பிர 7:14)

        7. மரண நாள் (பிர 8:8)

        8. மனமகிழ்ச்சியின் நாள் (உன் 3:11)

        9. கர்த்தருடைய கடுங்கோபத்தின் நாள்  (ஏசா 13:13)

        10. துன்பப்படும் நாள் (ஏசா 17:11)

        11. நீதியைச் சரிகட்டும் நாள் (ஏசா 61:2)

        12. நெருக்கப்படுகிற நாள் (எரே 16:19)

        13. தீங்கு நாள் (எரே 17:17)

        14. ஆபத்தின் நாள் (எரே 18:17)

        15. கோபத்தின் காலம் (எசே 22:24)

        16. இருளும் அந்தகாரமுமான நாள் (யோவே 2:2)

        17. இக்கட்டு நாள் (ஒப 1:14)

        18. கர்த்தர் வரும் நாள் (மல் 3:2)

        19. மனுஷகுமாரன் வெளிப்படும் நாள் (லூக்கா 17:30)

        20. இரட்சணிய நாள் (2கொரி 6:2)

        21. மீட்கப்படும் நாள் (எபே 4:30)

        22. கிறிஸ்துவின் நாள் (பிலி 2:16)

        23. கர்த்தருடைய நாள் (1தெச 5:2;  செப் 1:14-18)

        24. சந்திப்பின் நாள் (1பேதுரு 2:12)

        25. கோபாக்கினியின் மகா நாள் (வெளி 6:17)

        26. சர்வ வல்லமையுள்ள தேவனுடைய மகா நாள் (வெளி 16:14)

        27. நியாயத்தீர்ப்பு நாள் (2பேதுரு 2:9)

        28. தேவனுடைய நாள் (2பேதுரு 3:12)

    கர்த்தர் தம்முடைய நாளில்  துன்மார்க்கனுக்கு நீதியான நியாயத்தீர்ப்பு கொடுப்பார்.  கர்த்தருடைய நாளே துன்மார்க்கனுடைய நாளாக நியமிக்கப்பட்டிருக்கிறது. இந்த நாளைத் தவிர துன்மார்க்கனுக்கு வேறு விசேஷித்த நாள் எதுவுமில்லை.

    துன்மார்க்கன் நீதிமானை அழித்துப்போட முயற்சி செய்கிறான்.  செம்மையும் எளிமையுமானவனை தன்னுடைய பட்டயத்தை உருவி, மடிவிக்க  முயற்சி செய்கிறான். செம்மை மார்க்கத்தாரை விழப்பண்ண வலையை விரிக்கிறான்.  துன்மார்க்கர் நீதிமான்களுக்கு நேராக  தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள். கர்த்தருடைய பிள்ளைகளுக்கு விரோதமாக துன்மார்க்கர் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணுகிறார்கள்.  கர்த்தருடைய பிள்ளைகளோ சிறுமையும் எளிமையுமானவர்களாயிருக்கிறார்கள்.

    நீதிமான்கள் குற்றமில்லாத செம்மை மார்க்கத்தார். இவர்களுடைய பேச்சிலும் செய்கையிலும் உண்மையிருக்கும். முரண்பாடு காணப்படாது.  துன்மார்க்கரிடத்திலோ உண்மையிருக்காது.  அவர்களுடைய பேச்சுக்கும் செய்கைக்கும் சம்பந்தம் எதுவும் இருக்காது. துன்மார்க்கர் தங்கள் இருதயத்தின் பெருமையினால் செம்மையான மார்க்கத்தார்மீது  யுத்தம்பண்ணுகிறார்கள்.  அவர்களுக்கு நேராக  தங்கள் பட்டயத்தை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள். அவர்கள் கர்த்தருடைய  பிள்ளைகளோடு யுத்தம்பண்ணுவதாக நினைக்கிறார்கள்.  ஆனால் மெய்யாகவே அவர்கள் கர்த்தரோடுதான் யுத்தம்பண்ணுகிறார்கள்.  துன்மார்க்கரால் கர்த்தரோடு யுத்தம்பண்ணி ஜெயிக்க முடியாது.  

    துன்மார்க்கர் நீதிமான்களுக்குக் நேராக பட்டயத்தை உருவுகிறார்கள். அவர்கள் உருவிய பட்டயம் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போகும். அவர்களுடைய பட்டயம் அவர்களையே அழித்துப்போடும்.  அவர்கள்  நீதிமான்களுக்கு நேராக  வில்லை நாணேற்றுகிறார்கள். அவர்களுடைய வில்லுகள் முறிந்துபோகும். அவர்களுடைய பட்டயத்தினாலேயே அவர்களுக்கு அழிவு உண்டாகும். 

    துன்மார்க்கர் இந்தப் பூமியில் சடுதியாய் அழிந்துபோகாமல், சம்பிரமமாய் ஜீவித்தாலும், அவர்களால் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு விரோதமாய் ஒன்றும் செய்யமுடியாது. நமக்கு முன்பாக அவர்கள்  பெலமிழந்து காணப்படுவார்கள். முறிந்த வில்லை கைகளில் பிடித்திருப்பார்கள். முறிந்த வில் யுத்தத்திற்கு உதவாது. துன்மார்க்கருடைய துர்ஆலோசனை அவமாய்ப்போகும். அவர்களுடைய  துன்மார்க்கமான ஆலோசனை கர்த்தருடைய பிள்ளைகளை சேதப்படுத்தாது. தங்களுடைய எல்லையைத் தாண்டி துன்மார்க்கரால் ஒன்றும் செய்யமுடியாது. கர்த்தருக்கு ƒவிரோதமாக அவர்கள் யுத்தம்பண்ணினால் அவர்களுக்கு அழிவு நிச்சயம் வரும்.  கர்த்தருக்கு விரோதமாக  அவர்கள் பட்டயத்தை எடுத்தால், அந்தப் பட்டயம்  அவர்களுடைய இருதயத்திற்குள்ளேயே உருவிப்போகும். 

     துன்மார்க்கரிடத்தில் செல்வதிரட்சியிருக்கலாம். நீதிமானுடைய ஐசுவரியம் குறைவாகயிருக்கலாம். அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வதிரட்சியைப் பார்க்கிலும், நீதிமானுக்குள்ள  கொஞ்சமே நல்லது. துன்மார்க்கர் நீதிமான்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணும்போது, துன்மார்க்கருடைய புயங்கள் முறியும்.  கர்த்தர் நீதிமான்களைத்  தாங்குகிறார். துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைக்கிறான். ஆனாலும் அவனுடைய தீயநினைவை அவனால்  செயல்படுத்த முடியாது.  ஆண்டவர் அவனைப் பார்த்து நகைக்கிறார். கர்த்தருடையநாளில் அவனை நீதியாய் நியாயந்தீர்க்கிறார்.  கர்த்தருடைய நாள் துன்மார்க்கனுக்கு அழிவின் நாளாக நியமிக்கப்பட்டிருக்கிறது. 

    துன்மார்க்கர் பட்டயத்தை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள். துன்மார்க்கர் எப்போதுமே செம்மை மார்க்கத்தாருக்கு விரோதமாக எழும்புகிறார்கள். நீதிமானுக்கு இந்த உலகத்தில் துன்பம் உண்டு. அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள். (2தீமோ 3:12).

    ஆனாலும் துன்மார்க்கரின் பட்டயம் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போம்; அவர்கள் வில்லுகள் முறியும் என்பது விதைப்பதை அறுக்கும் பிரமாணம் ஆகும் (கலா 6:7-8). நீதிமானுக்காக ஏற்படுத்தப்பட்ட கண்ணியில் துன்மார்க்கன் விழுவான் (சங் 9:15;      சங் 35:7-8; சங் 141:10).

    உத்தமர்கள் சங் 37 : 18-20

    சங் 37:18. உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்.

    சங் 37:19. அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள்.

    சங் 37:20. துன்மார்க்கரோ அழிந்துபோவார்கள், கர்த்தருடைய சத்துருக்கள் ஆட்டுக்குட்டிகளின் நிணத்தைப்போல் புகைந்துபோவாகள், அவர்கள் புகையாய்ப் புகைந்துபோவார்கள். 

    கர்த்தர் உத்தமர்களின் நாட்களை அறிந்திருக்கிறார். உத்தமர்கள் செய்கிற எல்லா காரியங்களையும் கர்த்தர் விசேஷமாய் கவனிக்கிறார். அவர்களுக்கு என்னனென்ன காரியங்களெல்லாம் நடைபெறும் என்பது கர்த்தருக்குத் தெரியும். கர்த்தருக்கு மறைவான இரகசியம் ஒன்றுமில்லை.  கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு  அவருடைய சித்தமில்லாமல் ஒன்றும் நடைபெறாது.

    நாம் கர்த்தருக்காகச் செய்கிற ஊழியங்களை அவர் கவனித்துப் பார்க்கிறார்.  நாம் ஒவ்வொரு நாளும் செய்கிற ஊழியங்களை  கர்த்தர் தம்முடைய ஞாபகபுஸ்தகத்தில் எழுதி வைத்து, அதற்கேற்ற பலன்களை நமக்குக் கொடுக்கிறார். நாம் கர்த்தருக்காகச் செய்கிற ஊழியம் எதுவும் வீணாய்ப் போகவில்லை.  நம்முடைய ஒவ்வொரு நாள் ஊழியத்திற்கும் கர்த்தர் அதற்குரிய ƒபிரதிபலன்களைக் கொடுப்பார்.  நீதிமான்களுடைய சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்.

    நீதிமான்கள் இந்தப் பூமியில் எத்தனை நாட்கள்       ஜீவித்தாலும், அவர்கள் கர்த்தருக்குப் பிரியமானவர்களாகவும், பிரயோஜனமானவர்களாகவும் ஜீவிப்பார்கள்.  கர்த்தர் நம்முடைய நாட்களையெல்லாம் எண்ணி கணக்கிடுகிறார். நாம் செய்கிற நன்மையான காரியங்களையும் கர்த்தர் எண்ணி தொகையேற்றுகிறார். நாம் ஒவ்வொரு நாளும் செய்கிற நன்மைக்குகேற்ற ஆசீர்வாதங்களை,  நம்முடைய கர்த்தர் நமக்கு  அன்றன்றைக்குக் கொடுத்துவிடுகிறார்.

    கர்த்தருடைய பிள்ளைகளுக்கு பரலோகத்தில் சுதந்தரமுண்டு. நாம்          இந்தப் பூமிக்குரியவர்களல்ல. நாம் பரலோகத்திற்குரியவர்கள்.  நாம் பரலோகத்திலே தேவனுடைய நித்திய இளைப்பாறுதலில் பிரவேசிப்போம்.  நாம் பரலோகத்தில் தேவனுடைய நித்திய சுதந்தரத்தைப் பெற்றுக்கொள்வோம். கர்த்தர் நமக்குக் கொடுக்கிற சுதந்தரம் நம்மோடு என்றென்றைக்கும் இருக்கும். இந்தப் பூமிக்குரிய சுதந்தரம் அழிந்துபோகும்.  அது அநித்தியமானது. கர்த்தர் தம்முடைய  பிள்ளைகளாகிய நமக்கோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்  நித்திய சுதந்தரத்தைத் தருகிறார். 

    உத்தமர்கள் ஆபத்து காலத்திலே  வெட்கப்பட்டுப்போகாதிருப்பார்கள்.  அவர்கள் பஞ்சகாலத்திலும் திருப்தியடைவார்கள். துன்மார்க்கரோ  ஆபத்து காலத்தில் அழிந்துபோவார்கள்.  துன்மார்க்கர் கர்த்தருக்குச் சத்துருக்களாயிருக்கிறார்கள். இவர்கள் ஆட்டுக்குட்டிகளின் நிணத்தைப்போல்  புகைந்துபோவார்கள். துன்மார்க்கர் புகையாய்ப் புகைந்துபோவார்கள். உத்தமர்களோ பஞ்சகாலத்திலும் திருப்தியடைந்து ஜீவிப்பார்கள்.  

    துன்மார்க்கனும் நீதிமானும் சங் 37 : 21-33

    நீதிமான் (சங் 37:21)

    துன்மார்க்கன் கடன்வாங்கிச் செலுத்தாமற்போகிறான்; நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான்  (சங் 37:21). 

     நாம் இந்தப்பிரபஞ்சத்தில் சந்தோஷமாய் ஜீவிக்கவேண்டுமென்றால், கர்த்தரை நம்பி  அவருக்குக் காத்திருக்கவேண்டும். கர்த்தருக்குப் பிரியமான பிள்ளைகளாக ஜீவிக்கவேண்டும். அவருக்குப் பிரயோஜனமுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். நம்முடைய சந்தோஷத்திற்கு கர்த்தர் ஒரு சில வழிகளை நியமித்து வைத்திருக்கிறார்.  அந்த வழிகளில் சென்றால் மாத்திரமே நமக்கு சந்தோஷம் உண்டு.  தாவீது  நம்முடைய சந்தோஷத்திற்கு ஒரு சில ஆலோசனைகளைச் சொல்லுகிறார்.

    நாம் பிறருடைய பொருளை வஞ்சிக்கக்கூடாது. பிறர் பொருளை அபகரிக்கக்கூடாது.  அவரவர்களுடைய பொருள்களை அவரவர்களுக்கு கொடுத்துவிடவேண்டும்.  பிறருக்குரியதை நாம் வைத்துக்கொண்டால் நமக்கு சந்தோஷமிருக்காது.  துன்மார்க்கன் கடன்வாங்கி செலுத்தாமல் போகிறான். நாம் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்றால், நாம் பிறர் பொருளை இச்சியாதிருக்கவேண்டுமென்று  கர்த்தர் சொல்லுகிறார். நாம்                  நீதியாய் நடந்துகொள்ளவேண்டும். யாருக்கும் அநியாயம் செய்யக்கூடாது.  இராயனுக்குரியதை இராயனுக்கும், மனுஷனுக்குரியதை மனுஷனுக்கும், தேவனுக்குரியதை       தேவனுக்கும் செலுத்தவேண்டும்.  பிறருடைய பொருட்களை நமக்குச் சொந்தமாக்கிக்கொள்ளக்கூடாது. 

    நீதிமான் இரங்கிக் கொடுக்கிறான்.  நாம் பிறருக்கு உதவிபுரிய எப்போதும் ஆயத்தமாயிருக்கவேண்டும். பிறருக்கு உதவி தேவைப்படும்போது நம்மால் செய்ய முடிகிற உதவிகளை மனப்பூர்வமாயும், தாராளமாயும் செய்யவேண்டும். கர்த்தர் நமக்கு அநேக நன்மைகளைச் செய்திருக்கிறார். நமக்கு நல்ல ஈவுகளைக் கொடுத்திருக்கிறார்.  கர்த்தருடைய கரத்திலிருந்து நன்மைகளைப் பெற்றிருக்கிற நாம், பிறருக்கும் நன்மை செய்யவேண்டும்.  நம்மைப்போல பிறரையும் நேசித்து அவர்களுக்கு உதவிபுரியவேண்டும்.  

    நீதிமானுடைய இருதயத்தில் கர்த்தருடைய சுபாவம் நிரம்பியிருக்கும்.  கர்த்தர் இரக்கமும் மனதுருக்கமுமுள்ளவர். நீதிமானும் இரக்க குணமுள்ளவனாயிருப்பான். அவன் இரங்கிக் கொடுப்பான்.  மற்றவர்களுடைய துன்பத்தைப் பார்த்து பரிதாபப்படுவான். சில சமயங்களில்  மற்றவர்களுக்குக் கடன்கொடுப்பது, நாம் அவர்களுக்குச் செய்கிற பேருதவியாக இருக்கும். நம்மிடத்தில் கடன் கேட்கிறவர்களுக்கு  முகங்கோணக்கூடாது.  நம்மால் முடிந்த வரையிலும் பிறருக்கு உபகாரம் செய்யவேண்டும்.  யாருக்கும் உபத்திரவம் செய்துவிடக்கூடாது.

    நாம் தீமையைவிட்டு விலகி வரவேண்டும். நன்மை  செய்யவேண்டும்.  அப்போதுதான் நாம் என்றென்றைக்கும் கர்த்தருக்குள் நிலைத்திருப்போம். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் நல்ல வார்த்தைகளைப் பேசவேண்டும். விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணக்கூடிய வார்த்தைகளையும், பக்திவிருத்திக்கு உதவி செய்யக்கூடிய வார்த்தைகளையும் பேசவேண்டும். நம்முடைய வாய் ஞானத்தை உரைக்கவேண்டும்.  நம்முடைய நாவு நியாயத்தைப் பேசவேண்டும்.   இது  நீதிமானின் சுபாவம். நம்முடைய பேச்சு தேவனை மகிமைப்படுத்தவேண்டும். மற்றவர்களுடைய ஆவிக்குரிய நன்மைக்குகேதுவான காரியங்களைப் பேசவேண்டும். 

    இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.  நம்முடைய இருதயத்தில்  தேவனுடைய ஞானம் நிரம்பியிருக்கும்போது, நம்முடைய வாயும்  ஞானத்தைப் பேசும். நம்முடைய இருதயத்தில் நியாயம் நிரம்பியிருக்கும்போது நம்முடைய  நாவு  நியாயத்தைப் பேசும்.  நாம் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் பிறருடைய ஆவிக்குரிய ஜீவியத்தின் வளர்ச்சிக்கு உதவிபுரிய வேண்டும்.  

    நாம் தேவனுடைய வார்த்தைக்கும் அவருடைய சித்தத்திற்கும் கீழ்ப்படியவேண்டும். நாம் கர்த்தருடைய சித்தத்திற்கு மீறி  சிந்திக்கக்கூடாது.  நாம் அவருடைய விருப்பத்திற்கு மீறி  கிரியை நடப்பிக்கக்கூடாது. நம்முடைய சுயசித்தத்தைத் தேவனுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படுத்த வேண்டும். தேவன் அருளிய வேதம் நம்முடைய இருதயத்தில் இருக்கவேண்டும். அப்போது நம்முடைய நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை. 

    நம்முடைய இருதயத்தில் தேவனுடைய பிரமாணம் இருக்கவேண்டும்.  நம்முடைய இருதயத்தில் தேவனுடைய  வார்த்தையில்லையென்றால், நம்முடைய ஜீவியம் மாய்மாலமாயிருக்கும். தேவன் அருளிய வேதம் நம்முடைய இருதயத்தில் இருந்தால்தான், கர்த்தருடைய வார்த்தை நம்மை ஆளுகை செய்யும். நாம் கர்த்தருடைய பிள்ளைகள் என்று சொல்லிக்கொண்டு, நம்முடைய இருதயத்தில்  கர்த்தர் அருளிய வேதம் இல்லையென்றால், நாம் மாய்மாலக்காரராகவே இருப்போம். 

    ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் (சங் 37:22)

    அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுப்புண்டுபோவார்கள்            (சங் 37:22). 

    கர்த்தர் தமக்குக் கீழ்ப்படிந்து ஜீவிக்கிறவர்களை   ஆசீர்வதிக்கிறார்.  கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். கர்த்தருடைய பிள்ளைகளுக்கு அவருடைய சந்தோஷமும், சமாதானமும், ஆறுதலும் கிடைக்கும்.  கர்த்தருடைய பரிசுத்தவான்கள் எல்லா சூழ்நிலைகளிலும் சந்தோஷமாயும், மனஆறுதலாயும் இருப்பார்கள்.  அவர்களுக்கு வாழ்ந்திருக்கவும் தெரியும். தாழ்ந்திருக்கவும் தெரியும். அவர்கள் எல்லா சூழ்நிலையிலும்  மனரம்மியமாயிருக்க கற்றுக்கொண்டிருக்கிறார்கள். 

    கர்த்தருடைய ஆசீர்வாதம் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு செழிப்பைத் தரும். பாதுகாப்பைத் தரும். சந்தோஷத்தையும் சமாதானத்தையும்தரும்.நீதிமான்கள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். இவர்கள்  கர்த்தருடைய ஆசீர்வாதங்களுக்கு சுதந்தரராயிருப்பார்கள். நீதிமான்கள் பூமியை சுதந்தரித்துக்கொண்டு, என்றென்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள். கர்த்தருடைய பிள்ளைகளுக்கு  கானான் தேசத்தின் ஆசீர்வாதம் கிடைக்கும்.  எல்லா நிலங்களின் மேன்மையும் பரிசுத்தவான்களுக்கு  ஆசீர்வாதமாய் கிடைக்கும். 

    கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, அதிலேஎன்றென்றைக்கும் வாசமாயிருக்கும்போது, கர்த்தரால் சபிக்கப்பட்டவர்களோ  அறுப்புண்டு போவார்கள்.  அவர்கள் நிலைத்திருக்கமாட்டார்கள்.  சீக்கிரத்தில் அழிந்துபோவார்கள்.  

    நல்ல மனுஷனுடைய நடைகள் (சங் 37:23,24)

    நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.  அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார் (சங் 37:23,24). 

     கர்த்தர் நம்முடைய செய்கைகளை வழிநடத்துகிறார். நல்ல மனுஷருடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும். அவனுடைய வழியின்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார். நல்ல மனுஷனுடைய செய்கைகளெல்லாம் கர்த்தரை மகிமைப்படுத்தும். நாம் ஒவ்வொரு அடி  எடுத்து வைக்கும்போதும், கர்த்தர் நமக்கு தம்முடைய தெய்வீக ஆலோசனையைச் சொல்லுகிறார்.  நம்முடைய மனச்சாட்சியின் மூலமாய் நம்மோடு பேசுகிறார். எந்த வழியில் நடக்கவேண்டுமென்றும், எந்த வழியில் நடக்கக்கூடாது என்றும் கர்த்தர் நமக்கு ஆலோசனை சொல்லுகிறார். 

    கர்த்தர்  தூரத்திலிருந்து நமக்கு ஆலோசனை சொல்லமாட்டார். நாம் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும், அவர் நம்மோடு கூட நடந்து  நமக்கு ஆலோசனை சொல்லுவார்.  ஒரு சிறு பிள்ளை நடக்கப்பழகும்போது,  அந்தப் பிள்ளையின் பெற்றோர், பிள்ளையின் கால்களைப் பிடித்து நடக்க சொல்லிக்கொடுப்பார்கள்.  சிறுபிள்ளையோ  தன் பெற்றோரைப் பிடித்துக்கொண்டு  நடக்கப் பழகும். அது தன் பெற்றோரை சார்ந்திருக்கும்.  பெற்றோர் தன்னை எங்கெல்லாம் கூட்டிக்கொண்டு போகிறாரோ, அங்கெல்லாம் அந்த சிறு பிள்ளையும் மெதுவாக நடந்துபோகும்.  அதுபோலவே கர்த்தர்  நம்மை கரம்பிடித்து வழிநடத்துகிறார். நம்முடைய நடைகளை உறுதிப்படுத்துகிறார். நம்முடைய நடையின்மேல் பிரியமாயிருக்கிறார். 

    நாம் நடக்கும்போது  பாவத்தின் பள்ளத்திலோ அல்லது அழிவின் பள்ளத்திலோ விழுந்து விடுவதற்கு வாய்ப்புள்ளது.  நாம்  கால் தடுமாறி  பிரச்சனைகளுக்குள் சிக்கிக்கொள்வோம். கர்த்தரோ நம்முடைய நடைகளை உறுதிப்படுத்துகிறார்.  நம்மோடுகூட பாதுகாப்பாக வருகிறார்.  நாம் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை. தமது கையினால் நம்மைத் தாங்குகிறார். நாம் பாவத்தில் விழுந்துவிட்டாலும் கர்த்தர் நம்மை பாவத்தின் பள்ளத்திலிருந்து தூக்கி வெளியே எடுக்கிறார். 

    நல்ல மனுஷன் கீழே விழுந்தாலும் தள்ளுண்டுபோவதில்லை. அவன் ஒரு தப்பிதத்தைச் செய்யும்போது, அந்தத் தப்பிதம் தன்னை மேற்கொள்ளவிடாமல் கவனமாயிருப்பான்.  ஆனாலும் கர்த்தருடைய கிருபை நமக்கு வரும்போது, நாம் பாவத்தில்  விழுந்ததை நினைத்து மனம் வருத்தப்படுவோம். மனம் திருந்துவோம். இதினிமித்தமாய் பாவத்தைக் குறித்த வெறுப்பு நமக்குள் உண்டாகும். பாவத்தின் பள்ளத்தில் முழுவதுமாக மூழ்கிவிடாதவாறு கர்த்தர் நம்மைக் கரம்பிடித்து தூக்கிவிடுவார். 

    பாவத்தில் விழுகிறவர்கள் தேவனுடைய இரட்சிப்பின் சந்தோஷத்தை  இழந்துபோவார்கள். அவர்கள் மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டால் அவர்களுக்கு  இரட்சிப்பின் சந்தோஷம் மறுபடியும் கிடைக்கும்.  கர்த்தர் தாமே பாவத்தின் பள்ளத்தில் விழுந்துவிடாதவாறு  நம்மைத் தமது கையினால் தாங்குகிறார். பரிசுத்த ஆவியானவர்  நம்மைத் தாங்குகிறார். பலப்படுத்துகிறார்.  காயம் கட்டுகிறார்.  குணப்படுத்துகிறார். 

    நல்ல மனுஷன்  கீழே விழுந்தாலும் மறுபடியும் எழுந்திருப்பான்.  ஒரு மரத்தின் இலைகள் உதிர்ந்துபோனாலும், வசந்தகாலம் வரும்போது அந்த மரத்தின் இலைகள் மறுபடியும் தளிர்க்கும். அதுபோலவே நல்ல மனுஷன் விழுந்தாலும் தள்ளுண்டுபோவதில்லை. கர்த்தர்  அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துவார். அவனுடைய நடைகளின்மேல் பிரியமாயிருந்து, அவன் நடக்க வேண்டிய வழியை அவனுக்குக் காண்பிப்பார். 

    நீதிமானுடைய சந்ததி ஆசீர்வதிக்கப்படும்

    நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை. அவன் இரங்கிக்       கடன் கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்  (சங் 37:25,26). 

    கர்த்தருடைய பிள்ளைகளின் அடிப்படைத் தேவைகள் சந்திக்கப்படவேண்டும். நம்முடையஜீவியத்திற்கு ஆதாரமாயிருப்பவைகளை  கர்த்தர் தாமே தம்முடைய கிருபையினால்  நமக்குக் கொடுத்து, நம்மைப் போஷித்துப் பராமரிக்க வேண்டும். தாவீது இளைஞனாகவும் இருந்தார். இப்போது  முதிர்வயதுள்ளவரும் ஆனார். தாவீதின் ஜீவியத்தில்  பல    மாற்றங்கள் உண்டாயிற்று. அவர் தன்னுடைய ஜீவியகாலத்தில் அநேகரை கவனித்துப் பார்த்திருக்கிறார். எல்லா ஜனங்களையும் பார்த்து, முடிவாக, “”நீதிமான்  கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்திற்கு  இரந்து திரிகிறதையும்  நான் காணவில்லை” என்று சொல்லுகிறார். 

    கர்த்தருடைய பரிசுத்தவான்களில் ஒரு சிலர் மிகவும் வறுமையான நிலமையிலிருக்கிறார்கள். நாம் செல்வந்தராகயில்லையென்றாலும், கர்த்தர் நம்மைப் போஷித்துப் பராமரிக்கிறார். நம்முடைய அடிப்படைத் தேவைகளை  கிருபையாகச் சந்தித்து நம்மை ஆதரிக்கிறார். கர்த்தருடைய பிள்ளைகள் கொடிய தரித்திரத்திலிருந்தாலும், அவர்களும் கர்த்தருக்குள் சந்தோஷமாயிருப்பார்கள்.அவர்களுடைய இருதயத்தின் சந்தோஷத்திற்கும், அவர்களுடைய பொருளாதார நிலமைக்கும் சம்பந்தம் இருக்காது.  பரிசுத்தவான்களுடைய சந்தோஷம் கர்த்தரிடமிருந்தே வருகிறது.

    துன்மார்க்கன் தன்னுடைய துன்மார்க்கத்தினால் தரித்திரனாகிறான்.  அவன்  தகாத வழிகளில் ஐசுவரியத்தை சம்பாதித்தாலும், அந்த ஐசுவரியம் அவனுக்கு நிலைப்பதில்லை. அவன் துன்மார்க்கத்தினால் சம்பாதித்த ஐசுவரியத்தை, துன்மார்க்கத்தினால் செலவு செய்து தரித்திரனாகிவிடுகிறான். கர்த்தருடைய பிள்ளைகளோ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள். கர்த்தர் கொடுக்கிற ஆசீர்வாதம் அவர்களிடத்தில் தங்கியிருக்கும். நீதிமான் மாத்திரமல்ல, அவனுடைய சந்ததியும் ஆசீர்வதிக்கப்படும். நீதிமான் நித்தம் இரங்கி கடன் கொடுக்கிறான்.  

    கர்த்தருடைய பிள்ளைகள் பிறருக்கு இரங்கி உதவிசெய்வதினாலோ, கடன் கொடுப்பதினாலோ  அவர்கள் தரித்திரராவதில்லை. ஏழைகளுக்கு இரங்கி கொடுப்பதினால் நமக்கு குறைந்துபோவதில்லை.  நம்மால் நித்தமும் இரங்கி கடன்கொடுக்க முடியும்.  நாம் ஏழைகளுக்கு இரங்கி உதவிசெய்யும்போது, கர்த்தர் நம்மைக் கைவிடமாட்டார்.  நம்முடைய சந்ததி அப்பத்திற்கு இரந்து திரியாது.  பிச்சையெடுக்காது.  நம்முடைய சந்ததி ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.

    கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர் (சங் 37:27-33). 

    தீமையை விட்டு விலகி, நன்மைசெய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய். கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டுபோம். நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள். நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும். அவனுடைய தேவன் அருளியவேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை. துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான்.  கர்த்தரோ அவனை இவன் கையில் விடுவதில்லை; அவன் நியாயம் விசாரிக்கப்படுகையில், அவனை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை (சங் 37:27-33). 

    கர்த்தர் தம்முடைய பரிசுத்தவான்களை ஒருபோதும் கைவிடமாட்டார். தம்முடைய பெரிதான கிருபையினால் அவர் நம்மை  எல்லா துன்பங்களுக்கும், வேதனைகளுக்கும், நெருக்கங்களுக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்.  நமக்கு  நெருக்கங்களும் வேதனைகளும் வரும்போது, அவற்றிலும் கர்த்தர் நம்மைப் பாதுகாப்பார். நாம் தீமையைவிட்டு விலகி நன்மை செய்யவேண்டும் என்று  கர்த்தர் எதிர்பார்க்கிறார். அப்போது நாம் என்றென்றைக்கும் நிலைத்திருப்போம். 

    கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர். நாம் இந்தப் பூமியிலே  சமாதானமாய் வாசம்பண்ணுவோம்.  இந்தப் பிரபஞ்சத்தைவிட்டு  நாம் கடந்துசெல்லும்போது,  நமக்கு  பரலோகத்திலே  நித்திய வாசஸ்தலம்  ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறது. இப்பிரபஞ்சத்தின் ஜீவியத்தைவிட, பரலோகத்தின் ஜீவியம் மிகுந்த ஆசீர்வாதமுள்ளதாயிருக்கும்.  அங்கு நமக்கு நித்திய சந்தோஷம் உண்டாயிருக்கும். பரலோகத்திலே நாம் என்றென்றைக்கும் நிலைத்திருப்போம். 

    கர்த்தர் தம்முடைய பரிசுத்தவான்களை கைவிடமாட்டார். அவர் நம்மை என்றென்றைக்கும் காத்துக்கொள்வார்.  நமக்கு  கர்த்தருடைய சமுகத்தில்  நித்திய பாதுகாப்பு உண்டு. நித்திய பேரின்பம் உண்டு.          நித்திய சந்தோஷமும், நித்திய சமாதானமும் உண்டு.  இந்தப் பூமிக்குரிய காரியங்கள் எதுவும்  நித்தியமானதல்ல.  பரலோகத்தின் காரியங்களே  நித்தியமானது. 

    கர்த்தர் துன்மார்க்கரை சபிக்கிறார்.  கர்த்தரால் சபிக்கப்பட்டவர்கள் அறுப்புண்டு போவார்கள்.  துன்மார்க்கர் மாத்திரமல்ல,  அவர்களுடைய சந்ததியும் அறுப்புண்டுபோகும். நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, அதிலே  என்றென்றைக்கும் வாசமாயிருப்பார்கள்.  இந்தப் பூமி கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கிற தேசம்.  நாம் இதிலே  நம்முடைய ஜீவியகாலம் முழுவதிலும்  வாசமாயிருப்பதற்காக,  கர்த்தர் இந்தப் பூமியை நியமித்திருக்கிறார்.

    நாம் இந்தப் பூமியிலே என்றென்றைக்கும், நித்திய காலமாய்  வாசமாயிருப்பதில்லை.  இந்தப் பூமியும், இந்தப் பூமியில் நம்முடைய ஜீவியமும் அநித்தியமானவை. நமக்கு நித்தியமான ஜீவியம்  பரலோகத்தில் உண்டு. நாம் பரலோகத்திலே  என்றென்றைக்கும் வாசமாயிருப்போம்.  பரலோகமே நம்முடைய நகரம். கர்த்தர் நமக்கு அஸ்திபாரமுள்ள பரலோகத்தை  சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறார். கர்த்தருடைய சுதந்தரத்திற்குப் பாத்திரவான்களாகிய நாம், பரலோகத்திலே என்றென்றைக்கும் வாசமாயிருப்போம்.  அங்கு நீதி வாசமாயிருக்கும். 

    நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைக்கும். அவனுடைய நாவு நியாயத்தைப்பேசும். தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்திலிருக்கும். அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.  கர்த்தர் நீதிமானை ஆசீர்வதிக்கிறார். துன்மார்க்கனோ  நீதிமானுடைய ஆசீர்வாதத்தை அங்கீகரிக்க மறுக்கிறான்.  அவன்மீது பொறாமைப்படுகிறான். நீதிமான் மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான். துன்மார்க்கன் துன்மார்க்கமான சிந்தனையுடையவன்.  அவன்  துன்மார்க்கமான செய்கைகளை நடப்பிக்கிறவன்.  கர்த்தருடைய பிள்ளைகளுக்கு விரோதமாக  அவன் தீங்கு செய்ய வகைதேடினாலும்,  அது அவனுக்கு வாய்க்காது.  கர்த்தர் தமக்குப் பயந்து ஜீவிக்கிற பரிசுத்தவான்களை  பாதுகாக்கிறார்.  

    கர்த்தர் தம்முடைய பிள்ளைகளைத் துன்மார்க்கனுடைய கையில் ஒப்புக்கொடுக்கமாட்டார். கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு நாளின்போது நீதிமானும் துன்மார்க்கனும் நியாயந்தீர்க்கப்படுவார்கள். கர்த்தர் துன்மார்க்கனை ஆக்கினைக்குள்ளாகத்தீர்ப்பார். கர்த்தர்  நீதிமானையோ  ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கமாட்டார். கர்த்தர் நீதிமானுக்கு பரலோகத்திலே நித்திய இளைப்பாறுதலைக் கட்டளையிடுவார்.

    பரிசுத்தவான்களிடம் காணப்படும் சுபாவங்கள்

        1. பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடைய மாட்டார்கள் (சங் 37:1, 7, 8)

        2. நியாயக்கேடு செய்கிறவர்கள் மேல் பொறாமை கொள்ளமாட்டார்கள்        (சங் 37:1)

        3. கர்த்தரை முழுமையாக நம்புவார்கள்  (சங் 37:3, 5, 40)

        4. நன்மை செய்வார்கள் (சங் 37:3)

        5. கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருப்பார்கள்  (சங் 37:4)

        6. தங்கள் வழியைக் கர்த்தருக்கு ஒப்புக் கொடுபபார்கள் (சங் 37:5)

        7. கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்திருப்பார்கள்

        8. கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திருப்பார்கள்          (சங் 37:7, 9, 39)

        9. கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடுவார்கள் (சங் 37:8)

        10. தாழ்மையுடனும், பணிவுடனும் இருப்பார்கள்  (சங் 37:11) 

        11. மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாய் இருப்பார்கள்

        12. நீதிமான்கள், கொஞ்சத்திலும், பஞ்சக்காலத்திலும் திருப்தியடைவார்கள் (சங் 37:16-19) 

        13. ஆபத்துக்காலத்தில் வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமாயிருப்பார்கள்        (சங் 37:19)

        14. நீதிமான், நித்தம் இரங்கிக் கடன் கொடுக்கிறான் (சங் 37:21, 26)

        15. கர்த்தருடைய வழி நடத்துதலுக்குக் கீழ்ப்படிந்து இருப்பார்கள்             (சங் 37:23) 

        16. ஆபத்துக்காலத்தில் விழுந்தாலும் தள்ளுண்டு போகமாட்டார்கள்            (சங் 37:24)

        17. சந்ததி ஆசீர்வதிக்கப்படும் வீடு கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்        (சங் 37:26) 

        18. நீதிமான்கள் நியாயத்திலே உறுதியாயிருப்பார்கள்                       (சங் 37:21, 29, 30)

        19. ஞானமும், நியாயமும் உள்ளவர்கள் (சங் 37:30)

        20. தேவன் அருளிய வேதம் அவர்கள் இருதயத்தில் இருக்கும்      (சங் 37:31, 34)

        21. மனுஷர்களிடையே சத்தியத்தைப் பரப்புவார்கள் (சங் 37:30)

        22. உத்தமமும், செம்மையுமானவர்களுமாய் இருப்பார்கள் (சங் 37:37)   

        23. கர்த்தருடைய இரட்சிப்பை முழுவதுமாக கைக்கொள்ளுவார்கள் (சங் 37:39-40) 

        24. இக்கட்டுக் காலத்தில், கர்த்தரால் விலக்கிக் காக்கப்படுவார்கள்              (சங் 37:39)

    பரிசுத்தவான்களைப் பற்றி சிலசெய்திகள்

    கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது பரிசுத்தவான்களும் அவரோடு வருவார்கள்  (சக 14:5; யூதா 1:14). அவர்கள் கிறிஸ்துவோடு பூமியை ஆளுகை செய்வார்கள் (வெளி 20:4-10). பரலோகத்திலுள்ள புதிய எருசலேமில் அது புதிய பூமிக்கு வரும் வரையிலும் இருப்பார்கள் (வெளி 21:2, 9-10). ஆயிர வருஷ அரசாட்சியில் பரிசுத்தவான்கள் பூமிக்கும் பரலோகத்திற்கும் போய்க் கொண்டிருப்பார்கள். பின்பு புதிய பூமியில் கர்த்தரோடு நித்திய காலமாயிருப்பார்கள் (வெளி 21-22). பரிசுத்தவான்கள் பூமியைச் சுதந்தரிப்பார்கள்

    துன்மார்க்கனுடைய முடிவும் நீதிமானுடைய முடிவும் சங் 37 : 34-40

    கர்த்தருடைய வழியைக் கைக்கொள் (சங் 37:34)

    நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்          (சங் 37:34)

    முப்பத்து ஏழாவது சங்கீதம் தாவீதின் போதக சங்கீதமாகும்.  தன்னுடைய போதகத்தின் முடிவுரையாக தாவீது  துன்மார்க்கனுடைய முடிவைப்பற்றியும், நீதிமானுடைய முடிவைப்பற்றியும் விரிவாகச் சொல்லுகிறார். கர்த்தருடைய நீதிமான்களுக்கு ஒரு கடமை நியமிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள்  கர்த்தருக்குக் காத்திருந்து அவருடைய  வழியைக் கைக்கொள்ளவேண்டும். “”கர்த்தருடைய வழியை கைக்கொள்ளவேண்டும்” என்னும் தீர்மானம்  நம்முடைய மனச்சாட்சியில்  உறுதிப்படவேண்டும். நம்முடைய வழியை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுக்கவேண்டும். அப்போதுதான் நம்மால் சந்தோஷமாய்  கர்த்தருக்குக் காத்திருக்க முடியும். 

    நம்முடைய கர்த்தராகிய தேவன் தம்முடைய வேலையாட்களுக்கு நல்ல எஜமானாகயிருக்கிறார்.  தம்முடைய திராட்சத்தோட்டத்தில் வேலை செய்கிறவர்களுக்கும், தம்முடைய பந்தியில்  காத்திருந்து பணிவிடை செய்கிற வேலைக்காரருக்கும் நீதியான பலனைக் கொடுப்பார். கர்த்தருக்காகக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்பட்டுப் போகமாட்டார்கள்.  கர்த்தர் தமக்காகக் காத்திருக்கிறவர்களை  உயர்த்துவார். அப்போது அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். கர்த்தருடைய பரிசுத்தவான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்காகவே  உயர்த்தப்படுகிறார்கள். தாங்கள் உயர்த்தப்படும்போது, தாங்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும்போது,  துன்மார்க்கர் அறுப்புண்டு போவதையும் காண்பார்கள். 

    துன்மார்க்கன்   (சங் 37:35-38)

    கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன் அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான். ஆனாலும் அவன் ஒழிந்து போனான்; பாருங்கள், அவன் இல்லை; அவனைத் தேடினேன், அவன் காணப்படவில்லை;  நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம்.  அக்கிரமாக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு  (சங் 37:35-38).

    நீதிமானுக்கு இரட்சிப்பு உண்டு. துன்மார்க்கனுக்கு அழிவு உண்டு. நீதிமான் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வான். துன்மார்க்கனோ ஒழிந்துபோவான்.  துன்மார்க்கன் சிறிதுகாலம் செழிப்பாக இருப்பதுபோல சுகமாய் வாழ்வான். ஆனாலும்  அவனுடைய செழிப்பு நிலைத்திருக்காது.  அவன் சிறிதுகாலம் தனக்கேற்ற நிலத்தில்  முளைத்திருக்கிற  பச்சை மரத்தைப்போல  தழைத்தவனாயிருப்பான். ஆனாலும் அவன் சீக்கிரத்தில் வாடிப்போன மரத்தைப்போல பட்டுப்போவான். துன்மார்க்கன் ஒழிந்துபோவான்.  அவன் இருக்கமாட்டான். அவனைத் தேடினாலும், அவனைக் கண்டுபிடிக்க முடியாது. 

    அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்.  அறுப்புண்டுபோவதே  துன்மார்க்கரின் முடிவு. இது கர்த்தருடைய நீதியான தீர்ப்பு.  இந்தத் தீர்ப்பில் மாற்றம் எதுவுமில்லை. இப்பிரபஞ்சத்தில் துன்மார்க்கர் அங்கும் இங்குமாக ஒரு சிலர் அழிந்துபோகிறார்கள். அக்கிரமக்காரர்கள் ஏகமாய் அழிக்கப்படுவார்கள் என்பதற்கு இப்போது இவர்களுடைய அழிவு அச்சாரமாயிருக்கிறது. தேவன் அக்கிரமக்காரரை ஜனங்கள் மத்தியிலிருந்து வேறுபிரிக்கிறார். அவர்களை அழித்துப்போடுகிறார்.  அவர்கள்  நமக்கு எச்சரிப்பாக அழிக்கப்படுகிறார்கள்.  

    கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு நாளின்போது அக்கிரமக்காரர் எல்லோருக்கும் ஆக்கினைத்தீர்ப்பு கொடுக்கப்படும். அப்போது அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள். இப்போது அங்கு ஒருவரும், இங்கு ஒருவருமாக ஒரு சில அக்கிரமக்காரர் அழிக்கப்படுகிறார்கள்.  கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு நாளின்போதோ,   அக்கிரமக்காரர் எல்லோரும் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்.

    தாவீது கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் காண்கிறார்.  அவன்  தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற  பச்சை மரத்தைப்போல தழைத்தவனாயிருக்கிறான். ஆனாலும் அவன் ஒழிந்துபோனதை  தாவீது  பார்க்கிறார்.  தாவீது அவனைத் தேடுகிறார். ஆனால் அந்தத் துன்மார்க்கனை அவரால் காணமுடியவில்லை. 

    அக்கிரமக்காரர் இந்தப் பிரபஞ்சத்தில் கொஞ்சகாலம் செழித்திருப்பார்கள்.  நாம் அவர்களைப் பார்த்து எரிச்சலடையக்கூடாது. அவர்கள்மீது  பொறாமைப்படக்கூடாது.  நாம் அவர்களைப் பார்ப்பதற்குப் பதிலாக    உத்தமனை நோக்கிப் பார்க்கவேண்டும்.  செம்மையானவனை நோக்கிப் பார்க்கவேண்டும். இவர்களுடைய முடிவு சமாதானம். துன்மார்க்கனுடைய முடிவு அழிவு. அறுப்புண்டு போவதே  அக்கிரமக்காரரின் முடிவு. 

    நீதிமான்கள் (சங் 37:39,40)

    நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம். கர்த்தர் அவர்களுக்கு உதவி செய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார்  (சங் 37:39,40).  

    கர்த்தர் நீதிமானை ஆசீர்வதிக்கிறார்.  கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் காத்துக்கொள்கிற நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். கர்த்தர் நீதிமான்களை உயர்த்துவார்.  கர்த்தர் நீதிமான்களை பரலோகத்திற்கு வழிநடத்திச் செல்லுவார். பரலோகத்திலே பரிசுத்தவான்களுக்கு மெய்யான மேன்மையும், மெய்யான மகிமையும், மெய்யான ஆசீர்வாதமும் உண்டு. 

    பரலோகம் புதிய எருசலேமாகயிருக்கிறது.  பரிசுத்தவான்கள்  புதிய எருசலேமின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள். தேசத்தின் வாக்குத்தத்தங்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். கானான் தேசம்  புதிய எருசலேமாகிய பரலோகத்திற்கு அடையாளமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கர்த்தர்  நீதிமானை அவனுடைய எல்லா ஆபத்துக்களுக்கும் மேலாக உயர்த்துவார்.  ஆகையினால்  நாம் எல்லோரும்  உத்தமனையும் செம்மையானவனையும்  நோக்கிப் பார்த்திருக்கவேண்டும். 

    கர்த்தர் உத்தமனுடைய ஜீவியத்தில் என்னென்ன ஆசீர்வாதங்களைக் கொடுக்கிறார் என்று  கவனித்துப் பார்க்கவேண்டும்.  செம்மையானவன் பெற்றுக்கொள்கிற நன்மைகளையெல்லாம் நாம் கவனித்துப் பார்க்கவேண்டும். இவர்களுடைய முடிவு சமாதானமாயிருப்பதை நாம் கண்டுகொள்ளலாம். நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும். இக்கட்டுக்காலத்தில் கர்த்தரே அவர்கள் அடைக்கலம். 

    இரட்சிப்பு கர்த்தருடையது. கர்த்தர்  நீதிமான்களுக்கு உதவிசெய்து, அவர்களை  இக்கட்டுக்காலத்தில் விடுவிப்பார்.  நீதிமான்கள்  கர்த்தரை நம்பியிருக்கிறார்கள். ஆகையினால் கர்த்தர் அவர்களைத் துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து, இரட்சிப்பார். நீதிமான்கள் கர்த்தரை நம்பியிருக்கிறபடியினால், அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.  அவர்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். துன்மார்க்கருடைய கைக்கு தப்புவிக்கப்படுகிறார்கள்.  அவர்கள்  இரட்சிக்கப்படுகிறார்கள். 

    கர்த்தரை நம்புவதினால் வரும் ஆசீர்வாதங்கள்

        1. தேவையான வேளையில் தேவனிடமிருந்து உதவி

        2. சத்துருக்களிடமிருந்து விடுதலை

        3. ஆத்துமாவிற்கும் சரீரத்திற்கும் விடுதலை

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *