38ஆம் சங்கீதம் விளக்கம்
(நினைவுகூருதலுக்காக தாவீது பாடின -யாஸ்கர் என்னும் சங்கீதம்.)
பத்தாவது நெருக்கத்தின் ஜெபம்
பொருளடக்கம்
1. இரண்டு விண்ணப்பங்கள் – பதினெட்டுவிதமான பாவங்களும் சரீரவியாதிகளும் – (38:1-10)
2. பதினெட்டு விதமான பாவங்களும், ஆத்துமாவிலும் ஆவியிலும் பாடுகளும் – (38:11-20)
3. குணப்படுத்தி மன்னிக்க வேண்டுமாறு ஏறெடுத்த மூன்று விண்ணப்பங்கள் – (38:21-22)
தாவீது தான் செய்த பாவங்களுக்காக மனம்வருந்தி இந்த சங்கீதத்தைப் பாடுகிறார். தாவீது அநேக பாவங்களைச் செய்திருக்கிறார். இதனால் அவருடைய இருதயம் துக்கத்தினால் நிறைந்திருக்கிறது. தன்னுடைய பரிதாபமான நிலமையை தாவீது கர்த்தரிடத்தில் அறிக்கை செய்கிறார். தாவீதின் துக்கத்திற்கு அவருடைய பாவங்களே காரணம். தாவீதுக்கு பாவத்தினால் சாபமும், சாபத்தினால் வியாதியும் வந்திருக்கிறது. இதனால் தாவீது தன்னுடைய ஆத்துமாவிலும் சரீரத்திலும் மிகுந்த வேதனைப்படுகிறார். தாவீது தன்னுடைய துக்கத்தை கர்த்தரிடத்தில் முறையிடுகிறார்.
கர்த்தர் தம்முடைய கோபத்தினால் தன்னை கடிந்துகொள்வதாக தாவீது கர்த்தரிடத்தில் முறையிடுகிறார். தாவீது தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்திருக்கிறார். தாவீதின் பாவத்தினால் தேவன் அவர்மீது உக்கிர கோபத்தோடிருக்கிறார் (சங் 38:1-5).
தாவீதுக்கு சரீரத்திலே வியாதி உண்டாயிற்று (சங் 38:6-10). தாவீதின் சிநேகிதர்கள் அவரை விட்டு விலகுகிறார்கள் (சங் 38:11). தாவீதின் சத்துருக்கள் அவரைத் துன்பப்படுத்துகிறார்கள். காயப்படுத்துகிறார்கள். தாவீது அவர்களுக்கு நன்மைதான் செய்திருக்கிறார். ஆனாலும் அவர்கள் தாவீதுக்கு சத்துருக்களாயிருக்கிறார்கள். தாவீது தன்னுடைய பாவத்தை கர்த்தரிடத்தில் மறைக்காமல் அறிக்கையிடுகிறார் (சங் 38:12-20). தேவனுடைய பிரசன்னமும், உதவியும் தனக்குத் தேவைப்படுவதாக தாவீது கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணுகிறார் (சங் 38:21,22).
கர்த்தருடைய கோபமும் தாவீதின் பாவமும் சங் 38 : 1-11
கர்த்தருடைய கோபம் (சங் 38:1).
கர்த்தாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ளாதேயும்; உம்முடைய உக்கிரத்தில் என்னைத் தண்டியாதேயும் (சங் 38:1).
முப்பத்தெட்டாவது சங்கீதத்திற்கு “”நினைவுகூருதலின் சங்கீதம்” என்னும் தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சங்கீதமும், எழுபதாவது சங்கீதமும் நினைவுகூருதலின் சங்கீதங்களாகும். தாவீது தன்னுடைய ஆத்துமாவிலும், சரீரத்திலும் மிகுந்த வேதனைகளை அனுபவித்தபோது இந்த சங்கீதத்தைப் பாடுகிறார்.
தன்மீது தேவனுடைய கோபம் வந்திருப்பதாக தாவீது நினைக்கிறார். கர்த்தர் தன்மீது பிரியமாகயில்லையென்றும், அவர் தன்மீது உக்கிர கோபத்தோடிருக்கிறார் என்றும் தாவீது கர்த்தரிடத்தில் அறிக்கை செய்கிறார். “”கர்த்தாவே உம்முடைய கோபத்தில் என்னை கடிந்துகொள்ளாதேயும்” என்று தாவீது கர்த்தரிடத்தில் கெஞ்சி மன்றாடுகிறார்.
கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை கடிந்துகொள்கிறார். நம்மைத் திருத்துகிறார். தம்முடைய சித்தத்தின் பிரகாரமாய் நம்மை உருவாக்குகிறார். இவையெல்லாவற்றையும் கர்த்தர் தம்முடைய கோபத்தினால் செய்வதில்லை. அவர் நம்மீது பிரியமாயிருக்கிறபடியினால் நம்மைச் சிட்சிக்கிறார். கர்த்தர் நம்மைச் சிட்சிக்கும்போது நமக்கு வேதனையும் வருத்தமும் உண்டாகும். இதற்கு தேவனுடைய கோபமே காரணம் என்று சொல்லக்கூடாது. தகப்பன் சிட்சியாத புத்திரன் இல்லை.
நாம் தேவனுக்கு விரோதமாகப் பாவம்செய்யும்போது கர்த்தர் நம்மீது பிரியமாயிருக்கமாட்டார். அப்போது அவர் தம்முடைய கோபத்திலே நம்மைக் கடிந்துகொள்வார். கர்த்தருடைய கோபத்திற்கு நாம் தப்பிக்கவேண்டுமென்றால், கர்த்தருடைய சமுகத்தில் நம்முடைய பாவங்களுக்காக மனம் வருந்தி, மனம் திருந்தி, நம்முடைய பாவங்களை அறிக்கை செய்து விட்டுவிடவேண்டும்.
கர்த்தர் தம்முடைய கோபத்தினால் நம்மைக் கடிந்துகொள்ளும்போது, நமக்கு வேதனை உண்டாகும். நம்முடைய வேதனை நீங்கவேண்டும் என்று ஜெபிப்பதற்குப் பதிலாக, கர்த்தருடைய அன்பு நமக்குக் கிடைக்கவேண்டுமென்று ஜெபிக்கவேண்டும். தேவஅன்பு வெளிப்படும்போது அவருடைய கோபம் மறைந்துபோகும். தேவகோபம் மறைந்துபோகும்போது நம்முடைய வேதனைகளும் மறைந்துபோகும்.
தாவீது கர்த்தருடைய கோபத்தைப் பார்த்து,””உம்முடைய உக்கிரத்தில் என்னைத் தண்டியாதேயும்” என்று விண்ணப்பம்பண்ணுகிறார். கர்த்தருடைய தண்டனையை தாவீதால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தாவீது ஏற்கெனவே அநேக பாடுகளையும், அநேக துன்பங்களையும் அனுபவிக்கிறார். இவற்றோடு கர்த்தருடைய தண்டனையும் சேர்ந்து வந்தால், தாவீதின் நிலமை மிகவும் பரிதாபமாயிருக்கும். ஆகையினால் தாவீது கர்த்தருடைய இரக்கத்திற்காக கெஞ்சி மன்றாடுகிறார்.
தாவீது கர்த்தரிடம் ஏறெடுத்த விண்ணப்பங்கள்
1. கர்த்தாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்து கொள்ளாதேயும் (சங் 38:1).
2. உக்கிரத்தில் என்னைத் தண்டியாதேயும்.
3. என்னைக் கைவிடாதேயும் (சங் 38:21).
4. எனக்குச் செவிகொடும் (சங் 38:15).
5. எனக்குத் தூரமாயிராதேயும் (சங் 38:21).
6. எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும் (சங் 38:22).
கர்த்தர் நம்மைத் தண்டிப்பதற்கான காரணங்கள்
1. பாவம் (சங் 38:3, 18)
2. அக்கிரமங்கள் (சங் 38:4,18)
3. மதிகேடு (சங் 38:5)
4. கால் தவறுதல் (சங் 38:16)
கர்த்தர் நம்மைத் தண்டிக்கும் போது கர்த்தரிடம் நாம் ஏறெடுக்கும் முறையீடுகள்
1. கர்த்தருடைய கோபத்தினால் நான் கடிந்து கொள்ளப்பட்டேன் (சங் 38:1).
2. அவருடைய உக்கிரத்தினால் என்னைத் தண்டிக்கிறார்.
3. உம்முடைய அம்புகள் எனக்குள்ளே தைக்கிறது (சங் 38:2).
4. உமது கை என்னை இருத்துகிறது
5. என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை (சங் 38:3).
6. என் எலும்புகளில் சவுக்கியமில்லை.
7. என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகிற்று (சங் 38:4).
8. அக்கிரமங்கள் பாரச்சுமையைப் போல என்னால் தாங்கக் கூடாத பாரமாயிற்று.
9. என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது (சங் 38:5).
10. நான் வேதனைப்படுகிறேன் (சங் 38:6).
11. நான் மிகவும் ஒடுங்கினேன்.
12. நான், நாள்முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.
13. என் குடல்கள் எரிபந்தமாய் எரிகிறது (சங் 38:7).
14. என் மாம்சத்தில் ஆரோக்கியம் இல்லை.
15. நான் பெலனற்றுப் போய், மிகவும் நொறுக்கப்பட்டேன் (சங் 38:8).
16. என் இருதயம் கொந்தளிப்பினால் கதறுகிறது.
17. என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்க வில்லை (சங் 38:9)
18. என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது.
19. என் உள்ளம் குழம்பி அலைகிறது (சங் 38:10).
20. என் பெலன் என்னை விட்டு விலகிற்று.
21. என் கண்களின் ஒளி இல்லாமற் போயிற்று.
22. என் சிநேகிதரும் என் தோழரும் என்னைக் கண்டு விலகுகிறார்கள் (சங் 38:11).
23. என் வாதையைக் கண்டு என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.
24. என் பிராணனை வாங்க வகைத் தேடுகிறார்கள் (சங் 38:12).
25. எனக்குப் பொல்லாங்கு தேடுகிறவர்கள் கேடானவைகளைப் பேசுகிறார்கள்.
26. அவர்கள் நாள்முழுவதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள்.
27. நான், அவர்கள் சொல்லும் அவதூறுகளைத் தவிர்க்கிறேன்.
28. நான், செவிடனைப் போலக் கேளாதவனாக இருக்கிறேன் (சங் 38:14).
29. நான் பழிக்குப்பழி வாங்காமல் இருக்கிறேன்.
30. என்மேல் பெருமை பாராட்டுவார்கள் (சங் 38:16).
31. என் கால் தவறும்போது என் மேல் பெருமை பாராட்டுவார்கள்.
32. நான் தடுமாறி விழ ஏதுவாயிருக்கிறேன் (சங் 38:17).
33. என் துக்கம் எப்பொழுதும் என் முன்பாக இருக்கிறது.
34. என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டேன் (சங் 38:18).
35. என் பாவத்தினிமித்தம் விசாரப்படுகிறேன்.
36. என் சத்துருக்கள் வாழ்கிறார்கள் (சங் 38:19).
37. அவர்கள் பலத்திருக்கிறார்கள்.
38. அவர்கள் முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறார்கள்.
39. எனக்கு எதிராகப் பெருகியிருக்கிறார்கள்.
40. நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள் (சங் 38:20).
கர்த்தர் நம்மைத் தண்டிப்பதினால் ஏற்படும் நல்ல விளைவுகள்
1. ஒருவனை ஜெபிக்க வைக்கிறது (சங் 38:1, 16, 21, 22).
2. பாவத்தின் புத்தியீனத்தை உணர்ந்து கொள்கிறான் (சங் 38:3, 5)
3. தேவனை வாஞ்சிக்கிறான் (சங் 38:9)
4. உண்மையான நண்பர்களைக் கண்டுபிடிக்கிறான் (சங் 38:11)
5. மற்றவர்களிடம் இரக்கம், மனஉருக்கம் உடையவனாகிறான் (சங் 38:12-14).
6. ஒடுக்குகிறது (சங் 38:6, 8, 17, 18)
7. நம்பிக்கையும் விசுவாசமும் வருகிறது (சங் 38:15)
8. நன்மையைப் பின்பற்றி ஜீவிக்கிறான் (சங் 38:20)
கர்த்தருடைய அம்புகள் (சங் 38:2).
உம்முடைய அம்புகள் எனக்குள்ளே தைத்திருக்கிறது; உமது கை என்னை இருத்துகிறது (சங் 38:2).
தாவீதின் ஆத்துமா மிகுந்த வியாகுலத்திலிருக்கிறது. தேவன் தன்மீது கோபமாயிருப்பதினால் தாவீது அழுது புலம்புகிறார். கர்த்தருடைய அம்புகள் தனக்குள்ளே தைத்திருக்கிறது என்று புலம்புகிறார். தேவனுடைய கோபாக்கினை தன்மீது வந்திருப்பதாக நினைத்து தாவீது மிகுந்த வேதனைப்படுகிறார். கர்த்தருடைய கோபத்தினால் தாவீதின் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை. தாவீதின் பாவத்தினால் அவருடைய எலும்புகளில் சவுக்கியமில்லை.
கர்த்தருடைய கோபம் தாவீதின் மனதை வேதனைப்படுத்துகிறது. மனது வேதனைப்படும்போது, அது அவருடைய சரீர ஆரோக்கியத்தையும் பாதித்துவிடுகிறது. தாவீதின் இருதயம் கலங்குகிறது. தாவீது தைரியமுள்ள யுத்தவீரர். அவர் இஸ்ரவேல் தேசத்தின் ராஜா. ஆனாலும் கர்த்தர் கோபப்படும்போது தாவீதின் இருதயம் கலங்குகிறது. அவருடைய மாம்சத்தில் ஆரோக்கியம் குறைந்துபோகிறது. கர்த்தர் கோபப்படும்போது தாவீது பெலனற்றுப்போகிறார். மிகவும் நொறுக்கப்படுகிறார். தன்னுடைய இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறார். இஸ்ரவேலின் இனிமையான சங்கீதக்காரர், கர்த்தரை சந்தோஷமாய்த் துதித்துப் பாடுவதற்குப் பதிலாக, தன்னுடைய இருதயத்தின் கொந்தளிப்பினால் கலங்குகிறார்.
அம்பின் உருவகப் பயன்பாடுகள்
1. காயம் (வேதனை) (சங் 38:2); (யோபு 34:6)
2. பயங்கரங்கள், வாதைகள் (யோபு 6:4; சங் 91:5)
3. கர்த்தர், ஜனங்களின் மீதும், தேசங்களின் மீதும் நியாயம் தீர்ப்பது (எண் 24:8; உபா 32:23, 42; சங் 7:13; சங் 45:5; சங் 64:7)
4. மின்னல்கள் (2சாமு 22:15; சங் 18:14)
5. பட்டயம் (சங் 57:4; சங் 64:3; எரே 9:8)
6. அழிவு (நீதி 25:18; நீதி 26:18)
7. பஞ்சம் (எசே 5:16)
தாவீதின் அக்கிரமங்கள் (சங் 38:3-5).
உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை. என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப்பெருகிற்று, அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று. என் மதிகேட்டினிமித்தம் என்புண்கள் அழுகி நாற்றமெடுத்தது (சங் 38:3-5).
தாவீது தன்னுடைய பாவத்தை மறைக்கவில்லை. தன்னுடைய எல்லா பிரச்சனைகளுக்கும் தன்னுடைய பாவமே காரணம் என்பதை தாவீது அங்கீகரிக்கிறார். தாவீதின் அக்கிரமங்கள் அவருடைய தலைக்கு மேலாக பெருகிற்று. அவைகள் பாரச்சுமையைப்போல அவருடைய தலையின்மேல் வைக்கப்பட்டிருக்கிறது. அது தாவீதால் தாங்கக்கூடாத பாரமாயிற்று.
தாவீதின் அக்கிரமத்தினால் கர்த்தர் அவர்மீது கோபமாயிருக்கிறார். கர்த்தருடைய கோபத்தினால் தாவீதின் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை. தான் ஆரோக்கியமில்லாமல் நோய்வாய்ப்பட்டிருப்பதற்கு கர்த்தருடைய கோபமே காரணமென்று தாவீது சொல்லுகிறார். கர்த்தருடைய கோபம் தாவீதின் சரீரத்தில் நெருப்பைப்போல பற்றியெரிகிறது. கர்த்தர் உக்கிர கோபத்திலிருப்பதினால், தாவீதின் இருதயத்திற்குள் நெருப்பு உக்கிரமமாகப் பற்றியெரிகிறது. இதனால் அவருடைய எலும்புகளிலும் சவுக்கியமில்லை.
கர்த்தருடைய கோபத்தைப்பற்றி தாவீது கர்த்தரிடத்தில் முறையிட்டாலும், தன்னுடைய பாவத்தையும் அவர் மறைக்காமல் அங்கீகரிக்கிறார். தன்னுடைய பாவத்தினால் தன் எலும்புகளில் சவுக்கியமில்லை என்று சொல்லுகிறார். தன்னுடைய வியாதிக்கு தன்னுடைய பாவமே காரணம் என்று தாவீது அங்கீகரிக்கிறார்.
கர்த்தர் தனக்கு நியாயமாகத் தண்டனை கொடுத்திருக்கிறார் என்றும், தன்னுடைய பாவத்தினிமித்தம் தான் அந்தத் தண்டனைக்கு பாத்திரவானாயிருப்பதையும் தாவீது அங்கீகரிக்கிறார். தாவீதின் அக்கிரமங்கள் அவருடைய தலைக்கு மேலாகப் பெருகிற்று. அது பாரச்சுமையைப்போல இருப்பதினால், அது அவரால் தாங்கக்கூடாத பாரமாயிற்று.
தாவீது வெள்ளப்பிரவாகத்தில் மூழ்கி தத்தளிக்கிற மனுஷனைப்போல இருக்கிறார். தாவீதால் இதற்கு மேல் வெள்ளத்தை எதிர்த்து நிற்கமுடியவில்லை. அவர் வெள்ளத்தில் மூழ்கிப்போய்விடும் சூழ்நிலையில் இருக்கிறார். அவருடைய அக்கிரமங்களின் சுமை அதிகரித்திருப்பதினால், அந்த சுமையை அவரால் தாங்கமுடியவில்லை. தாவீதின் அக்கிரம சுமை அவரை அழுத்துகிறது.
தாவீதின் மதிகேட்டினிமித்தம் அவருடைய புண்கள் அழுகி நாற்றமெடுக்கிறது. சரீரத்தில் காயமுண்டாகும்போது உடனே அந்தக் காயத்திற்கு மருந்து போடவேண்டும். காயத்தைக் கவனித்து காயம் கட்டவேண்டும். காயத்தை கவனிக்காமல் அப்படியே விட்டுவிடுவது மதிகேடு. தாவீது அநேக அக்கிரமங்களைச் செய்திருக்கிறார். அவர் அநேக பாவங்களுக்குச் சொந்தக்காரர். தாவீது தன்னுடைய பாவங்களையெல்லாம் கர்த்தருடைய சமுகத்தில் அறிக்கை செய்து விட்டுவிடவேண்டும். ஆனால் அவரோ தன்னுடைய மதிகேட்டினிமித்தம், தன்னுடைய பாவங்களை கவனியாமல் விட்டுவிட்டார். இதனிமித்தமாய் காயங்கள் புண்ணாயிற்று. இப்போது அது அழுகி நாற்றமெடுத்திருக்கிறது. இதற்கு தாவீதின் மதிகேடே காரணம்.
நம்முடைய பாவம் நமக்கு காயமுண்டாக்கும். “”லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து: ஆதாளே, சில்லாளே, நான் சொல்வதைக் கேளுங்கள்; லாமேக்கின் மனைவிகளே, என் சத்தத்துக்கு செவி கொடுங்கள்; எனக்குக் காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன்; எனக்குத் தழும்புண்டாக ஒரு வா-பனைக் கொலை செய்தேன்” (ஆதி 4:23) என்றார்.
நம்முடைய பாவங்கள் ஆரம்பத்தில் நம்முடைய சரீரத்தில் காயமுண்டாக்காது. அது நம்முடைய ஆத்துமாவில் காயமுண்டாக்கும். ஆத்தும காயம் சரீர காயமாக மாறும். நம்முடைய ஆத்துமாவிலும் சரீரத்திலும் தாங்கமுடியாத வேதனைகளைக் கொடுக்கும். முடிவில் பாவத்தினால் உண்டான காயமும், வேதனையும் நம்மைக் கொன்றுபோடும். நம்முடைய சரீரத்தில் சிறிய புண்ணாகயிருந்தாலும் அதை உடனே கவனிக்கவேண்டும். அதை கவனிக்கத் தவறிவிட்டால், அந்தச் சிறிய புண் பெரிதாக மாறி, நம்முடைய ஜீவனுக்கு ஆபத்து உண்டாக்கிவிடும்.
நம்முடைய பாவமும் ஒரு வேளை சிறிய பாவமாகயிருக்கலாம். பாவம் சிறிதாயிருந்தாலும் அதை உடனே கவனிக்கவேண்டும். கர்த்தரிடத்தில் அதை உடனே அறிக்கை செய்து விட்டுவிடவேண்டும். பாவத்தைக் கவனிக்காமல் விட்டுவிட்டால், அது வளர்ந்து பெரிதாகும். அது நம்முடைய ஆத்துமாவை அழித்துப்போடும். சிறிய புண் பெரிதாகி அழுகி நாற்றமெடுக்கும். மனந்திரும்பாத பாவங்கள் நம்முடைய ஆத்துமாவுக்கு ஆபத்தானவை.
தாவீதின் வியாதி மேக நோயாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். அதற்கான காரணங்கள்
1. “”என் குடல்கள் எரிபந்தமாய் எரிகிறது”. குடல்கள் (ப்ர்ண்ய்ள்) என்பது கீழ்விலா எலும்பிற்கும் இடுப்பெலும்பிற்கும் இடையிலுள்ள பகுதி. சரீரத்தின் இன உற்பத்தி உறுப்புக்கள் “”லோயன்ஸ்” (ப்ர்ண்ய்ள்) என்று அழைக்கப்படுகிறது (ஆதி 35:11; ஆதி 46:26; யாத் 1:5; 1இராஜா 8:19; 1இராஜா 12:10; 2நாளா 6:9; 2நாளா 10:10).
2. “”எரிபந்தமாய் எரிகிறது” என்பது இன உற்பத்தி உறுப்புக்களில் ஏற்படும் எரிச்சல் ஆகும்.
3. அம்புகள் (கொடிய வேதனை) தாவீதின் உறுப்புக்களில் உண்டாயிற்று (சங் 38:2).
4. தாவீதின் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை (சங் 38:3, 11). புண்கள் உண்டாகி எலும்புகள் பாதிக்கப்பட்டன.
5. புண்கள் அழுகி நாற்றமெடுத்தது. (சங் 38:5, 11). மாமிசம் அழுகிப்போயிற்று
6. தாவீதுக்கு பாவத்தினால் வியாதி வந்தது (சங் 38:3, 5, 18). பத்சேபாளோடு விபச்சாரம் செய்த பாவம் 2சாமு 11:1-12:25).
7. என் ஆத்துமாவும், மாம்சமும் ஆரோக்கிமாயில்லை, அதனால் நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன் (சங் 38:6).
8. நான் பெலனற்றுப்போய், மிகவும் நொறுக்கப்பட்டேன், என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன் (சங் 38:8).
9. என் உள்ளம் குழம்பி அலைகிறது; என் பெலன் என்னை விட்டு விலகி, என் கண்களின் ஒளி முதலாய் இல்லாமற் போயிற்று (சங் 38:10).
10. என் சிநேகிதரும், என் தோழரும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள். என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள் (சங் 38:10; சங் 66:4).
நாள்முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறேன் (சங் 38:6-8).
நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள்முழுவதும் துக்கப்பட்டுத்திரிகிறேன். என் குடல்கள் எரிபந்தமாய் எரிகிறது; என் மாம்சத்தில் ஆரோக்கியம் இல்லை. நான் பெலனற்றுப்போய், மிகவும் நொறுக்கப்பட்டேன்; என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன் (சங் 38:6-8).
தாவீது தன்னுடைய பாவத்தினிமித்தம் வேதனைப்படுகிறார். துக்கப்படுகிறார். தன்னுடைய வருத்தத்தையும் வேதனையையும் கர்த்தரிடத்தில் முறையிடுகிறார். அவருடைய இருதயம் கதறுகிறது. தாவீது தன்னுடைய பரிதாபமான நிலமையை கர்த்தருக்கு முன்பாக முறையிடுகிறார்.
தாவீதின் பாவத்தினிமித்தமாய் அவருடைய மனது வேதனைப்படுகிறது. அவருடைய மனச்சாட்சி துக்கப்படுகிறது. அவருடைய ஆவியில் அமைதியில்லை. சமாதானமில்லை. அவருடைய ஆவி காயப்பட்டிருக்கிறது. அந்தக் காயத்தையும், காயத்தின் வேதனையையும் அவரால் தாங்கமுடியவில்லை. தாவீது தன்னுடைய பாவத்தினிமித்தம் வேதனைப்பட்டு ஒடுங்கியிருக்கிறார். நாள்முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறார்.
தாவீதின் பாவத்தினிமித்தம் அவருடைய குடல்கள் எரிபந்தமாய் எரிகிறது. அவருடைய மாம்சத்தில் ஆரோக்கியமில்லை. பாவத்தினிமித்தமாய் தாவீது வியாதிப்படுக்கையிலிருக்கிறார். அவருடைய சரீரத்தில் பெலனில்லை. மிகுந்த பெலவீனத்திலிருக்கிறார். அவருக்கு குடல் வியாதி வந்திருக்கலாம். குடல்களில் கொப்புளங்கள் உண்டாயிருக்கலாம். எசேக்கியா ராஜாவுக்கு வந்த வியாதிபோல தாவீதுக்கும் வியாதி வந்திருக்கிறது. இதனால் தாவீதின் மாம்சத்தில் ஆரோக்கியம் இல்லாமற்போயிற்று.
யோபு தாவீதைப்போல வியாதியாயிருந்தார். அவருடைய மாம்சத்திலும் ஆரோக்கியமில்லை. அவருடைய சரீரம் முழுவதும் புண்களும், பருக்களும் உண்டாயிற்று. யோபுவுக்கு தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு சரீர வேதனையிருந்தது. அப்படிப்பட்ட வேதனையை இப்போது தாவீதும் அனுபவிக்கிறார்.
தாவீது பெலனற்றுப்போய் மிகவும் நொறுக்கப்படுகிறார். அவருடைய இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறார். தாவீது சிறந்த போர்வீரர். எதற்கும் கலங்கமாட்டார். ஆனால் கர்த்தர் அவர்மீது கோபப்படும்போது, கர்த்தருடைய கோபத்தை தாவீதால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பெலனற்றுப்போய்விடுகிறார். அவருடைய இருதயம் கொந்தளிக்கிறது. வேதனை தாங்க முடியாமல் தாவீது கதறுகிறார்.
தாவீதின் ஏங்கலும் தவிப்பும் (சங் 38:9).
ஆண்டவரே, என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை (சங் 38:9).
தாவீது மிகுந்த வேதனையிலும் துக்கத்திலும் இருக்கிறார். இவற்றிற்கு மத்தியில், தாவீது கர்த்தருடைய சமுகத்தில் தன்னைத்தானே தேற்றிக்கொள்கிறார். ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லிக்கொள்கிறார். கர்த்தர் தாமே தம்முடைய கிருபையினால் தன்னுடைய வேதனைகளையும், துக்கங்களையும் நீக்கிப்போடுவார் என்று விசுவாசிக்கிறார்.
“”ஆண்டவரே என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது” என்று தாவீது கர்த்தரிடத்தில் முறையிடுகிறார். தாவீதின் தவிப்பு கர்த்தருக்கு மறைவாயிருக்கவில்லை. அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். தாவீதின் தேவை கர்த்தருக்குத் தெரியும். தாவீதுக்கு என்ன கொடுக்கவேண்டும் என்பதும் கர்த்தருக்குத் தெரியும். தாவீதின் வேதனையும், துக்கமும் கர்த்தருக்குத் தெரியும். வேதனையும் துக்கமும் அதிகரிப்பதினால் தாவீது கர்த்தருடைய சமுகத்தில் ஏங்குகிறார். கர்த்தருடைய ஆசீர்வாதத்திற்காக ஏங்கித்தவிக்கிறார். அவருடைய ஆறுதலுக்காக ஏக்கத்தோடு காத்திருக்கிறார்.
என் பெலன் என்னை விட்டு விலகிற்று (சங் 38:10).
என் உள்ளம் குழம்பி அலைகிறது; என் பெலன் என்னைவிட்டு விலகி, என் கண்களின் ஒளி முதலாய் இல்லாமற்போயிற்று (சங் 38:10).
வியாதி வரும்போது எவ்வளவு பெலனுள்ள சரீரமாகயிருந்தாலும் அது பெலவீனப்பட்டு விடும். நம்முடைய ஆவி எவ்வளவு தெளிவாகவும், உற்சாகமாகவும், உறுதியாகவும் இருந்தாலும், வியாதி வரும்போது நம்முடைய ஆவி கலங்கிவிடும். தன்னுடைய சரீர வியாதிக்கு தேவனுடைய கோபமே காரணம் என்று தாவீது நம்புகிறார். தேவனுடைய கோபத்திற்கு தன்னுடைய பாவமே காரணம் என்றும் தாவீது அறிந்திருக்கிறார்.
கர்த்தருடைய கோபத்தை தாவீதால் தாங்க முடியவில்லை. இதனால் அவருடைய உள்ளம் குழம்பி அலைகிறது. அவருடைய பெலன் அவரை விட்டு விலகிற்று. அவருடைய கண்களின் ஒளிமுதலாய் இல்லாமற்போயிற்று. பார்வையில் தெளிவில்லை. அவருடைய இருதயம் சரியாகச் செயல்படவில்லை. தாவீதின் திடமான இருதயம் இப்போது தண்ணீரைப்போல கரைந்துபோயிற்று. தாவீது தன்னுடைய இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறார்.
தாவீதின் சிநேகிதரும் தோழரும் (சங் 38:11).
என் சிநேகிதரும் என் தோழரும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள் (சங் 38:11).
தாவீது சுகமாய் வாழ்ந்தபோது அவருக்கு அநேக சிநேகிதர்கள் இருந்தார்கள். அவருடைய சந்தோஷத்தில் பங்குபெற்றார்கள். இப்போதோ தாவீது நோய்வாய்ப்பட்டிருக்கிறார். தன்னுடைய சரீரத்தில் வேதனைப்பட்டு துக்கப்படுகிறார். அவருடைய சிநேகிதர் இப்போது தாவீதோடு கூடயில்லை. அவர்கள் தாவீதுக்கு ஆறுதலான வார்த்தைகளைச் சொல்ல வரவில்லை. அவருடைய சிநேகிதரும் தோழரும் அவருடைய வாதையைக் கண்டு விலகிப்போய்விடுகிறார்கள்.
தாவீதுக்கு இனத்தார் அநேகர் இருக்கிறார்கள். தாவீது ராஜாவாக அபிஷேகம்பண்ணப்பட்டபோது, அவர்களெல்லோரும் மிகுந்த சந்தோஷமடைந்து தாவீதோடு சேர்ந்துகொண்டார்கள். இப்போது தாவீது வேதனைப்பட்டு துக்கப்படும்போது, அவருடைய இனத்தாரும் அவருக்கு அருகில் நிற்காமல் தூரத்தில் நிற்கிறார்கள். தாவீதுக்கு உதவிசெய்ய ஒருவருமில்லை. தாவீதுக்கு சிநேகிதரும், தோழரும், இனத்தாரும் இருந்தாலும், அவர் ஒருவருமில்லாத ஆதரவற்றவரைப்போல கதறுகிறார்.
தாவீதின் சத்துருக்கள்
சங் 38 : 12-22
தாவீதின் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் (சங் 38:12).
என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; எனக்குப் பொல்லாங்கு தேடுகிறவர்கள் கேடானவைகளைப்பேசி, நாள்முழுவதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள் (சங் 38:12).
தாவீது தன்னுடைய சத்துருக்களின் துன்மார்க்கமான யோசனைகளைப்பற்றியும், அவர்களுடைய பெலனைப்பற்றியும் கர்த்தரிடத்தில் முறையிடுகிறார். தாவீது சரீரப்பிரகாரமாய் மிகவும் பலவீனத்தோடிருக்கிறார். அவருடைய இருதயமும் கொந்தளிக்கிறது. அவருடைய உள்ளம் குழம்பி அலைகிறது. அவருடைய பெலன் அவரைவிட்டு விலகிப்போயிற்று. இந்த சந்தர்ப்பத்தை தாவீதின் சத்துருக்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள்.
தாவீதின் சத்துருக்கள் அவருடைய பிராணணை வாங்கத் தேடுகிறார்கள். அவரைப் பிடிப்பதற்கு கண்ணிகளை வைக்கிறார்கள். தாவீதுக்கு பொல்லாங்கு உண்டாகவேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் தாவீதைப்பற்றி கேடானவைகளைப் பேசுகிறார்கள். தாவீதுக்கு விரோதமாக நாள்முழுதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள். தாவீது தன்னுடைய சத்துருக்களைப்பற்றி கர்த்தரிடத்தில் இன்னும் அநேக காரியங்களை முறையிடலாம்.
ஆனால் தாவீதோ கர்த்தருடைய சமுகத்தில் மிகவும் பயபக்தியாய் நின்றுகொண்டிருக்கிறார். “”என் சத்துருக்களைப்பாரும்” (சங் 25:19) என்று பணிவாய் விண்ணப்பம்பண்ணுகிறார். தாவீதின் சத்துருக்கள் பெருகியிருக்கிறார்கள். அவர்கள் உக்கிர பகையாய் தாவீதைப் பகைக்கிறார்கள். அவர்கள் கொஞ்சநேரம்கூட சும்மாயிருக்கமாட்டார்கள். அவர்கள் நாள்முழுவதும் தாவீதுக்கு விரோதமாக வஞ்சனைகளை யோசிக்கிறார்கள்.
தாவீதின் கால் தவறும்போது அவருடைய சத்துருக்கள் அவர்மேல் பெருமை பாராட்டுகிறார்கள். தாவீதின் கால் எப்போது தவறும் என்று கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். தாவீது ஏதாவது தப்பிதம் செய்தால் அல்லது அவர் தவறான பாதையில் நடந்தால், உடனே அவர்கள் தாவீதைக் குற்றப்படுத்துகிறார்கள். தாவீது சிறிய தவறு செய்தால்கூட அதை அவருக்கு விரோதமாக பெரிதுபடுத்தி விடுவார்கள். தாவீதின் கால் தவறும்போது அவருடைய சத்துருக்கள் சந்தோஷப்படுகிறார்கள்.
தாவீதின் சத்துருக்கள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள். அவர்கள் தாவீதை முகாந்தரமில்லாமல் பகைக்கிறார்கள். அவர்கள் எண்ணிக்கையிலும் பெருகியிருக்கிறார்கள். அவர்களிடத்தில் நீதியில்லை. அவர்கள் நன்மைக்குப் பதிலாக தீமை செய்கிறார்கள். அவர்களிடத்தில் அநியாயம் மாத்திரமே இருக்கிறது. தாவீது அவர்களுக்கு ஒருபோதும் தீமை செய்ததில்லை. அவர்களுக்கு நன்மையே செய்திருக்கிறார். ஆனால் அவர்களோ நன்மைக்குத் தீமை செய்கிறார்கள்.
தாவீது எல்லோரையும் நேசிக்கிறார். எல்லோரோடும் சிநேகமாயிருக்கிறார். ஆனால் அவர்களோ சிநேகத்திற்குப் பதிலாக தாவீதை விரோதிக்கிறார்கள். அவர்கள் முகாந்தரமில்லாமல் தாவீதோடே போர்செய்கிறார்கள் (சங் 104:3,4). தாவீது நன்மையைப் பின்பற்றுகிறார். இது அவருடைய சத்துருக்களுக்குப் பிடிக்கவில்லை. இதனால் அவர்கள் தாவீதை விரோதிக்கிறார்கள்.
தாவீது கர்த்தருக்குப் பயந்து ஜீவிக்கிறார். கர்த்தரிடத்தில் பயபக்தியாயிருக்கிறார். தாவீது தன்னுடைய சத்துருக்களுக்கும் நன்மை செய்கிறார். அவர் நன்மையைப் பின்பற்றுகிறார். இதினிமித்தமாகவும் தாவீதின் சத்துருக்கள் அவரைப் பகைக்கிறார்கள். அவர்களுடைய பகைக்கு முகாந்தரம் எதுவுமில்லை. அவர்கள் கர்த்தரைப் பகைக்கிறார்கள். ஆகையினால் கர்த்தருடைய தாசனாகிய தாவீதையும் பகைக்கிறார்கள். தாவீது தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறார். இது அவருடைய சத்துருக்களுக்குப் பிடிக்கவில்லை. இதனிமித்தமாகவே அவர்கள் தாவீதைப் பகைக்கிறார்கள்.
செவிடனைப்போலவும் ஊமையனைப்போலவும் (சங் 38:13-15).
நானோ செவிடனைப்போலக் கேளாதவனாகவும், ஊமையனைப்போல வாய்திறவாதவனாகவும் இருக்கிறேன். காதுகேளாதவனும், தன் வாயில் மறு உத்தரவுகள் இல்லாதவனுமாயிருக்கிற மனுஷனைப் போலானேன். கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே நீர் மறுஉத்தரவு கொடுப்பீர் (சங் 38:13-15).
தாவீதுக்கு அவருடைய சத்துருக்கள் மூலமாய் அநேக பாடுகளும், பிரச்சனைகளும், வேதனைகளும், நெருக்கங்களும் உண்டாயிற்று. இவையெல்லாவற்றிற்கும் மத்தியிலும் தாவீது கர்த்தருடைய சமுகத்தில் சமாதானமாயிருக்கிறார். கர்த்தருக்காகக் காத்திருக்கிறார். தேவனாகிய ஆண்டவர் தன்னுடைய விண்ணப்பத்திற்கு மறுஉத்தரவு கொடுப்பார் என்று தாவீது விசுவாசத்தோடு காத்திருக்கிறார்.
தாவீதின் சத்துருக்கள் அவரைக் காயப்படுத்துகிறார்கள். அவருடைய மனதைப் புண்படுத்துகிறார்கள். அவருக்கு அநியாயம் செய்கிறார்கள். இவையெல்லாவற்றிற்கு மத்தியிலும் தாவீது தன்னுடைய சமாதானத்தைக் காத்துக்கொள்கிறார். கர்த்தரிடத்தில் பயபக்தியாயிருக்கிறார். தாவீதின் சத்துருக்களால் அவரை கர்த்தரிடமிருந்து பிரிக்க முடியவில்லை. தாவீது கர்த்தருக்காகக் காத்திருக்கிறபடியினால், அவரை மெய்யாகவே யாரும் காயப்படுத்த முடியாது.
தாவீதுக்கு விரோதமாக அவருடையசத்துருக்கள் கேடானவைகளைப் பேசுகிறார்கள். அவருக்கு விரோதமாக நாள்முழுவதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள். ஆனால் தாவீதோ செவிடனைப்போல கேளாதவராகவும், ஊமையனைப்போல வாய் திறவாதவராகவும் இருக்கிறார். தாவீது தன்னுடைய சத்துருக்களைப்போல, அவர்களிடத்தில் பதிலுக்குப் பதில் கேடானவைகளைப் பேசவில்லை. அவர்களுக்கு முன்பாக ஒரு ஊமையனைப்போல இருக்கிறார். அவர்கள் தனக்கு விரோதமாகப் பேசினாலும், அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்காத செவிடனைப்போல இருக்கிறார்.
தாவீது தன்னுடைய கோபத்தையும், வேகத்தையும், வருத்தத்தையும், வேதனையையும் கர்த்தருடைய சமுகத்தில் அடக்கிக்கொள்கிறார். பதிலுக்குப் பதில் செய்வது தாவீதின் சுபாவமல்ல. தாவீதிடத்தில் பழிவாங்கும் குணமுமில்லை. பழிவாங்குதல் கர்த்தருக்குரியது என்று விசுவாசித்து, தாவீது தன்னுடைய சத்துருக்களின் காரியங்களையெல்லாம் கர்த்தரிடத்தில் ஒப்புவித்து விடுகிறார்.
தாவீது இயேசுகிறிஸ்துவுக்கு அடையாளமாக இருக்கிறார். இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது, அவர் அநேக பாடுகளை அனுபவித்தார். “”அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்” (ஏசா 53:7).
தாவீதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் நமக்கு முன்மாதிரிகளாகயிருக்கிறார்கள். சத்துருக்கள் நமக்கு விரோதமாக தீங்கு செய்யும்போது, நாம் அவர்களுக்கு தீங்கு செய்யக்கூடாது. பழிவாங்குதல் கர்த்தருக்குரியது என்று விசுவாசித்து நம்முடைய பிரச்சனைகளையெல்லாம் கர்த்தரிடத்தில் ஒப்புவித்துவிடவேண்டும். தாவீது தன்னுடைய பிரச்சனைகளை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுத்து, ஆண்டவருடைய சமுகத்தில் விசுவாசத்தோடு ஜெபிக்கிறார்.
தாவீதின் சத்துருக்கள் அவருக்கு விரோதமாகக் கேடானவைகளைப் பேசும்போது, அவர் காதுகேளாதவர்போலிருந்தார். தன் வாயில் மறுஉத்தரவுகள் இல்லாதவனுமாயிருக்கிற மனுஷனைப்போலானார். தாவீதின் சிநேகிதர்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவரோடு கூடயிருக்கவேண்டும். தாவீதுக்கு விரோதமாக அவருடைய சத்துருக்கள் கேடானவைகளைப் பேசும்போது, தாவீதின் சிநேகிதர்கள் அவர்களுடைய கேடான பேச்சுக்களுக்கு சாட்சியாயிருக்கவேண்டும். ஆனால் அவர்களோ தாவீதின் வாதையைக் கண்டு விலகுகிறார்கள். அவருடைய இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.
தாவீதின் சிநேகிதரும் தோழரும் அவரை விட்டு விலகிப்போனாலும், கர்த்தர் அவரை விட்டு விலகிப்போகவில்லை. கர்த்தரே நமக்கு மெய்யான சிநேகிதராகவும், மெய்யான தோழராகவும் இருக்கிறார். நாம் கர்த்தரை நம்பும்போது கர்த்தர் நம்மைக் கைவிடமாட்டார். நம்மைவிட்டு விலகிப்போகமாட்டார். கர்த்தரை நம்புகிறவர்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போகமாட்டார்கள். தாவீது கர்த்தருக்காகக் காத்திருக்கிறார். கர்த்தர் மெய்யாகவே தாவீதுக்கு மறுஉத்தரவு கொடுப்பார்.
முகாந்தரமில்லாமல் தாவீதைப் பகைக்கிறவர்கள் (சங் 38:16-20).
அவர்கள் என்னிமித்தம் சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச்சொன்னேன்; என் கால் தவறும்போது என்மேல் பெருமைபாராட்டுவார்களே. நான் தடுமாறி விழ ஏதுவாயிருக்கிறேன்; என் துக்கம் எப்பொழுதும் என் முன்பாக இருக்கிறது. என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, என் பாவத்தினிமித்தம் விசாரப்படுகிறேன். என் சத்துருக்கள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்; முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள். நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால், நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள் (சங் 38:16-20).
தாவீது கர்த்தருடைய சமுகத்தில் தன்னுடைய சத்துருக்களைப்பற்றி முறையிட்டாலும், அவர் தன்னுடைய அக்கிரமங்களையும் பாவங்களையும் கர்த்தருடைய சமுகத்தில் மறைக்காமல் அறிக்கை செய்கிறார். தன்னுடைய பாவங்களை அங்கீகரிக்கிறார். தன்னுடைய பாவங்களுக்காக தாவீது மனம் வருத்தப்படுகிறார். “”நான் தடுமாறி விழ ஏதுவாயிருக்கிறேன்” என்று சொல்லுகிறார்.
ஆசாபு என்னும் சங்கீதக்காரர் தன்னைப்பற்றிச் சொல்லும்போது, “”என் கால்கள் தள்ளாடுதலுக்கும், என் அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பிற்று” (சங் 73:2) என்று சொல்லுகிறார். தாவீதின் நிலமையும் ஆசாபின் நிலமையும் ஒன்றுபோல் இருக்கிறது. தாவீதின் கால் தவறும்போது, அவருடைய சத்துருக்கள் அவர்மேல் பெருமைப் பாராட்டுகிறார்கள். அவர்கள் தாவீதினிமித்தம் சந்தோஷப்படுகிறார்கள். தாவீதின் கால் தவறும்போது அவருடைய சத்துருக்களுக்கு சந்தோஷம் உண்டாகிறது.
தாவீது தடுமாறி விழ ஏதுவாயிருக்கிறார். அவருடைய துக்கம் எப்பொழுதும் அவர் முன்பாக இருக்கிறது. தாவீது தன்னுடைய அக்கிரமத்தை கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக அறிக்கையிடுகிறார். தன்னுடைய பாவத்தினிமித்தம் தாவீது விசாரப்படுகிறார். துன்மார்க்கர் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள். அதைப் பார்க்கும்போது அவர் தடுமாறி விழ ஏதுவாயிருக்கிறார்.
இந்தப் பிரபஞ்சத்தில் நல்லவர்களுக்கு அநேக பாடுகளும், அநேக வேதனைகளும் வருகிறது. அவர்களுக்கு முன்பாக எப்போதுமே துன்பம் இருக்கிறது. அவர்கள் எந்த சூழ்நிலையிலும் தடுமாறி விழ ஏதுவாயிருக்கிறார்கள். கர்த்தருடைய பரிசுத்தவான்கள் தங்களுக்கு முன்பாக இருக்கும் துக்கத்தைப் பார்க்காமல், கர்த்தரைப் பார்க்கிறார்கள். கர்த்தர் தம்முடைய பரிசுத்தவான்களை தடுமாறி விழாமல் பாதுகாத்துக்கொள்கிறார்.
தாவீது தன்னுடைய சத்துருக்களின் பாவத்தைக் குறித்து கர்த்தரிடத்தில் முறையிடலாம். ஆனால் தாவீதும் பாவம் செய்தவராயிருக்கிறார். மற்றவர்களுடைய பாவத்தைப்பற்றி கர்த்தரிடத்தில் முறையிடுவதற்குப் பதிலாக, தாவீது தன்னுடைய அக்கிரமத்தை கர்த்தருடைய சமுகத்தில் அறிக்கையிடுகிறார். தன்னுடைய பாவத்தினிமித்தம் தாவீது விசாரப்படுகிறார். பாவத்தை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான் என்பது தாவீதுக்குத் தெரியும். ஆகையினால் அவர் தன்னுடைய பாவங்களை மறைக்காமல், அவற்றை கர்த்தரிடத்தில் அறிக்கை செய்கிறார். கர்த்தருடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்கிறார்.
தாவீதின் சத்துருக்கள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள். முகாந்தரமில்லாமல் அவரைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள். தாவீது நன்மையைப் பின்பற்றுகிறார். இதனால் நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் தாவீதை விரோதிக்கிறார்கள். சத்துருக்கள் வாழ்ந்து பலத்திருப்பதைப் பார்க்கும்போது தாவீது தேவனுடைய சமுகத்திற்கு முன்பாக அமைதியாயிருக்கிறார். தாவீது அவர்களுடைய சுகவாழ்வைக் குறித்து கர்த்தரிடத்தில் முறையிடவில்லை. தன்னுடைய பாவத்தினிமித்தமாய் தனக்கு கர்த்தர் நீதியான தண்டனையைக் கொடுக்கிறார் என்று தாவீது விசுவாசிக்கிறார்.
கர்த்தாவே என்னைக் கைவிடாதேயும் (சங் 38:21,22).
கர்த்தாவே, என்னைக் கைவிடாதேயும்; என் தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும். என் இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும் (சங் 38:21,22).
தாவீது கர்த்தருடைய சமுகத்தில் பணிவோடு ஜெபம்பண்ணி இந்த சங்கீதத்தை நிறைவு செய்கிறார். தாவீதுக்கு கர்த்தருடைய பிரசன்னம் தேவைப்படுகிறது. கர்த்தர் தன்னைக் கைவிட்டுவிடக்கூடாது என்பதும், அவர் தனக்குத் தூரமாயிருக்கக்கூடாது என்பதும் தாவீதின் உருக்கமான ஜெபமாகும். தன்னுடைய சிநேகிதரும் தோழரும் தன்னை விட்டு விலகிப்போனாலும், கர்த்தர் தன்னைவிட்டு விலகிப்போகக்கூடாது என்று தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார். தன்னுடைய பாவத்தினிமித்தம் கர்த்தர் தன்னைக் கைவிடவும், தனக்குத் தூரமாயிருக்கவும் வாய்ப்பு இருந்தாலும், கர்த்தர் தம்முடைய கிருபையினால் தனக்கு இரங்கவேண்டுமென்று தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார்.
கர்த்தரே தாவீதின் இரட்சிப்பாயிருக்கிறார். தனக்கு சகாயம் செய்ய விரைந்து வருமாறு தாவீது கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணுகிறார்.