39ஆம் சங்கீதம் விளக்கம்

 

 

39ஆம் சங்கீதம் விளக்கம்

 

(எதுதூன் இடத்தில் ஒப்புவித்த தாவீதின் சங்கீதம்.)

 

இரண்டாவது ஜெபமும் சாட்சியும் சங்கீதம்

 

பொருளடக்கம்

 

    1. ஏழு விதமான சாட்சி – (39:1-3)  

 

    2. மூன்று விண்ணப்பங்கள் – மனுஷனின் ஏழு விதமான சாட்சிகள் – (39:4-7)  

 

    3. மூன்று விண்ணப்பங்கள் – கண்டிக்கப்பட்டு திருத்தப்பட்டதற்கு ஏழு விதமான சாட்சிகள் – (39:8-11)  

 

    4. பெலனடைவதற்கு நான்கு விண்ணப்பங்கள் – (39:12-13) 

 

தாவீது முப்பத்து ஒன்பதாவது சங்கீதத்தை எழுதும்போது மிகுந்த நெருக்கத்திலிருக்கிறார். தாவீதின் ஆவி கலங்கியிருக்கிறது. தாவீதைப்போலவே கலக்கத்திலிருக்கிறவர்களுக்கு ஆறுதலான  ஆலோசனை சொல்லும் பிரகாரமாக இந்த சங்கீதத்தின் வாக்கியங்கள் அமைந்திருக்கிறது.  நாம் கர்த்தருடைய சமுகத்தில் அமைதியாகக் காத்திருக்கவேண்டும். ஆறுதலடைந்திருக்க வேண்டும். நாம் மற்றவர்கள்மீது எரிச்சல்படவோ, பொறாமைப்படவோ கூடாது.

 

தாவீதின் இருதயத்தில் கலக்கம் உண்டாயிருக்கிறது. தாவீது தேவனுடைய கிருபையினால் துன்மார்க்கருக்கு முன்பாக தன்னுடைய நாவைக் காத்துக்கொள்கிறார். அவருக்குள் மிகுந்த போராட்டம் உண்டாயிருக்கிறது. அவர் கர்த்தரை தியானித்து, கர்த்தரிடத்தில்  விண்ணப்பம்பண்ணுகிறார் (சங் 39:1-3). 

 

மனுஷன் இந்தப் பூமியிலே நிலையற்றவனாயிருக்கிறான். மனுஷனுடைய ஆயுசு காலம் கர்த்தருடைய பார்வைக்கு  இல்லாததுபோலிருக்கிறது. மனுஷன் மாயையாகவும் வேஷமாகவும் திரிகிறான். தன்னுடைய ஜீவியத்தைப்பற்றி கர்த்தர் தனக்குப் போதிக்கவேண்டுமென்று தாவீது கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணுகிறார் (சங் 39:4-6).

 

கர்த்தர் தாமே  தன்னுடைய பாவங்களை மன்னிக்குமாறு  தாவீது  கர்த்தரிடத்தில்  பயபக்தியாய் விண்ணப்பம்பண்ணுகிறார்.  தன்னுடைய நெருக்கங்களை தன்னைவிட்டு  நீக்கிப்போடுமாறும், கர்த்தர் தாமே தன்னிடத்தில் பொறுமையாயிருக்குமாறும் தாவீது கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார்   (சங் 39:7-13). 

 

தாவீதின் தீர்மானம் சங் 39 : 1-3 

நான் என் வழிகளைக் காத்துக்கொண்டேன் (சங் 39:1).

 

    என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பபேன் என்றேன்  (சங் 39:1).

 

தாவீதின் ஜீவியத்தில் மிகுந்த நெருக்கம் உண்டாயிருக்கிறது. அவருடைய இருதயம் கலங்குகிறது. தாவீது கர்த்தருடைய சமுகத்தில் தன்னுடைய இருதயத்தின் வேதனைகளையும், பிரச்சனைகளையும் ஒப்புவிக்கிறார். தாவீது  கர்த்தரோடு உடன்படிக்கை செய்திருக்கிறார். இப்போது  அவர் அந்த உடன்படிக்கைகளையெல்லாம் நினைவுகூருகிறார். 

 

நம்முடைய ஜீவியத்தில், நாம் பாவத்தில் விழுந்துவிடுவதற்கான சோதனைகள் வரலாம். அப்போதெல்லாம், நாம் கர்த்தரோடு செய்துகொண்ட உடன்படிக்கைகளையும், பொருத்தனைகளையும் நினைவுகூரவேண்டும்.  ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு விரோதமாக, நாம் கர்த்தருடைய சமுகத்தில் செய்து கொண்ட பொருத்தனைகளை நினைவுகூரும்போது, அந்தப் பாவத்தில் நாம் விழுந்துவிடாதவாறு  விலகி ஜீவிப்போம்.  கவனமாயும் எச்சரிப்பாயும் இருப்போம். 

 

தன்னுடைய நடைகள் எப்படியிருக்கவேண்டுமென்று தாவீது  ஏற்கெனவே தீர்மானம் செய்திருக்கிறார். தாவீது தன்னுடைய வழிகளை காத்துக்கொள்ளவேண்டுமென்று தீர்மானம் செய்திருக்கிறார்.  தாவீதைப்போலவே நாமும்  நம்முடைய வழிகளைக் காத்துக்கொள்ள வேண்டுமென்று தீர்மானம் எடுக்கவேண்டும்.  நம்முடைய  ஜீவியக்காலம் முழுவதும்  நாம்  இந்தத் தீர்மானத்தை  நினைவுகூரவேண்டும்.  அப்போது  நம்முடைய வழிகள் சுத்தமாயிருக்கும்.  நம்முடைய கால்கள்  தள்ளாடாதவாறு, நம்முடைய நடைகள்  ஸ்திரப்படும். 

 

தாவீது தன்னுடைய நாவின் வார்த்தைகளைக் குறித்தும் கர்த்தருடைய சமுகத்திலே  தீர்மானம் செய்திருக்கிறார்.  நாவை அடக்கி, வீண்வார்த்தைகளைப் பேசக்கூடாது என்றும், நாவினால் பாவம் செய்யக்கூடாது என்றும் தாவீது தீர்மானம் செய்திருக்கிறார். இது  நடைமுறையில்  மிகவும் கடினமான தீர்மானம்.  நம்முடைய சிந்தனையில் பாவம் இருக்கக்கூடாது என்றுகூட  நாம் தீர்மானம் செய்துவிடலாம். ஆனாலும் நாம்  நாவினால் பாவம் செய்யக்கூடாது என்று  தீர்மானம் செய்து, அந்தத் தீர்மானத்தில்  உண்மையாயிருப்பது மிகவும் கடினம். 

 

நம்முடைய இருதயத்தில் தீயசிந்தனை நிரம்பியிருக்கும்போது, நம்முடைய நாவின் வார்த்தைகளும் தீயதாகவே இருக்கும்.  இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். இருதயத்திலுள்ள தீயசிந்தனைகளை நம்முடைய நாவு பேசிவிடாதவாறு, நம்முடைய      கரத்தினால்  நம்முடைய வாயைப் பொத்திக்கொள்ளவேண்டும்.  நாவை அடக்கவேண்டும்.  நம்முடைய இருதயத்தின் நினைவை, நம்முடைய நாவு பேசிவிடாதவாறு,  அதைத் தடைபண்ணவேண்டும். 

 

தாவீது தன்னுடைய வாயை கடிவாளத்தால் அடக்கி வைக்கிறார். குதிரைக்கு கடிவாளம் போட்டு அதை அடக்குவதுபோல,  தாவீது  தன்னுடைய நாவுக்கு கடிவாளம் போடுகிறார். இல்லையென்றால்  தாவீதின் நாவு அவருக்கு அடங்காது. துன்மார்க்கர் தாவீதுக்கு விரோதமாகத் தூஷண வார்த்தைகளைப் பேசுகிறார்கள்.  அப்போது தாவீது  அவர்களுக்கு தீயவார்த்தைகளை பிரதியுத்தரமாக பேசாமல்,  தன்னுடைய வாயை  கடிவாளத்தால் அடக்கி வைக்கிறார்.  

 

நம்முடைய சுபாவங்களைக்குறித்து கவனமாகவும் எச்சரிப்பாகவும் இருப்பதுதான் “”கடிவாளமிடுதல்”. நம்முடைய சுபாவத்தைக் குறித்து நாம் கவனமாயிருக்கும்போது, நம்முடைய சிந்தைக்கு நாம் கடிவாளம் போட்டு அடக்கி வைக்கிறோம்.  கடிவாளம்  நம்முடைய கரத்திலிருக்கவேண்டும்.   நம்முடைய செய்கைகளைக் குறித்து கவனமாயும் எச்சரிப்பாயும் இருக்கும்போது, கடிவாளம் நம்முடைய கரத்திலிருக்கும்.

 

பல சமயங்களில் நம்முடைய நாவு நமக்குக் கீழ்ப்படியாமல் தனக்கு இஷ்டமானதைப் பேசிவிடும்.  நமக்கு விரோதமாக சிலர் தூஷண வார்த்தைகளைப் பேசும்போது நம்முடைய நாவு சும்மாயிருக்காது.  உடனே பதிலுக்குப் பதில் ஏதாவது பேசிவிடும்.  வார்த்தைகள்  கூடுதலாகவும் குறைவாகவும் இருக்கலாம்.  வார்த்தை அதிகரிக்கும்போது பாவமும் அதிகரிக்கும். ஆகையினால் நம்முடைய நாவினால் பாவம் செய்யாதபடிக்கு, நாம் நம்முடைய வழிகளைக் காத்துக்கொள்ளவேண்டும்.  துன்மார்க்கர் நமக்கு முன்பாக இருக்குமட்டும், நம்முடைய வாயை கடிவாளத்தால்  அடக்கி வைக்கவேண்டும். 

 

தாவீது துன்மார்க்கருடைய கூட்டத்திலிருக்கும்போது, அவர்களுடைய  துன்மார்க்கமான பேச்சைக் கேட்பதற்கும், அவர்களோடு துன்மார்க்கமான காரியங்களை பேசுவதற்கும் வாய்ப்பிருந்தது. இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் தாவீது மனுஷருக்கு விரோதமாகவும், தேவனுக்கு விரோதமாகவும் தூஷணமான வார்த்தைகளைப் பேசிவிடுவதற்கு வாய்ப்பு இருந்தது.  ஆனாலும், தாவீது இந்த சந்தர்ப்பங்களில் தன்னுடைய வாயை கடிவாளத்தால் அடக்கி வைக்கிறார். 

 

தாவீதின் பொருத்தனைகளும் சாட்சியும்

 

    1. என் நாவினால் பாவம் செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து கொள்ளுவேன் (சங் 39:1).

 

    2. துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன்.

 

    3. நான் மவுனமாகி, ஊமையனாயிருந்தேன் (சங் 39:2; சங் 38:13).

 

    4. நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்.

 

    5. என் துக்கம் அதிகரித்தது, ஆனாலும் என் நாவைத் தவறாகப் பயன்படுத்தாமல் இருந்தேன்.

 

    6. என் இருதயம் எனக்குள்ளே அனல் கொண்டது (சங் 39:3).

 

    7. நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது, அப்பொழுது என் நாவினால் விண்ணப்பம் செய்தேன்.

 

தாவீதைப் பற்றிய குறிப்புகள்

 

    1. என் வழிகள் (சங் 39:1)

 

    2. என் நாவு

 

    3. என் வாய் 

 

    4. என் அமைதி  (சங் 39:2)

 

    5. என் துக்கம்

 

    6. என் இருதயம் (சங் 39:3)

 

    7. என் முடிவு (சங் 39:4)

 

    8. என் நாட்கள் (சங் 39:4-5)

 

    9. என் பலவீனம் (சங் 39:4)

 

    10. என் நாட்களின் அளவு (சங் 39:5)

 

    11. என் நம்பிக்கை (சங் 39:7)

 

    12. என் மீறுதல்கள் (சங் 39:8) 

 

    13. என் ஜெபம் (சங் 39:12)

 

    14. என் கூப்பிடுதல் 

 

    15. என் கண்ணீர்

 

    16. என் பிதாக்கள் 

 

நான் மவுனமாகி ஊமையனாயிருந்தேன்  (சங் 39:2). 

 

நான் மவுனமாயி, ஊமையனாயிருந்தேன், நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்; ஆனாலும் என் துக்கம் அதிகரித்தது  (சங் 39:2). 

 

தன்னுடைய நாவினால் பாவம் செய்யாதபடிக்கு, தன்னுடைய வாயை கடிவாளத்தால் அடக்கை வைக்கவேண்டுமென்பது, தாவீது கர்த்தருடைய சமுகத்தில் ஏறெடுத்திருக்கிற தீர்மானம். தாவீது தன்னுடைய தீர்மானத்தில் உண்மையுள்ளவராயிருக்கிறார். இதனிமித்தமாய்  அவர் பல சந்தர்ப்பங்களில் மவுனமாகி, ஊமையானாயிருக்கிறார். நலமான காரியங்களைக் கூட பேசாமல்  அமைதியாக அமர்ந்திருக்கிறார். 

 

நாம் நல்ல காரியங்களை பேசாமல்  அமைதியாயிருக்கக்கூடாது.  நாம் நற்செய்தியை அறிவிக்க வேண்டியவர்கள். தாவீது பலவீனமாயிருக்கிறார்.  அவருடைய நாவையும், வாயையும், சிந்தையையும்  அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.  எதையாவது பேசி தனக்கு குழப்பம் வந்துவிடுமோ என்று பயப்படுகிறார். இதற்காக ஒன்றும் பேசாமல் அமைதியாயிருக்கிறார். நாம் தீமையைப் பேசக்கூடாது. அதே வேளையில் நன்மையைப் பேசவேண்டும். தாவீது  நலமானதையும் பேசாமல் அமைதியாயிருப்பதினால்  அவருடைய துக்கம் அதிகரிக்கிறது.  

 

நம்முடைய வார்த்தைகளில் நிதானம் இருக்கவேண்டும்.   அவசரப்பட்டு எதையும் பேசிவிடக்கூடாது. யோசித்துப் பேசவேண்டும்.       நம்முடைய வார்த்தைகள் பக்திவிருத்திக்கு ஏதுவானதாகவும்,               விசுவாசத்தை  வர்த்திக்கப்பண்ணக்கூடியதாகவும், ஆத்துமாவுக்கு பிரயோஜனமுள்ளதாகவும் இருக்கவேண்டும். 

 

என் நாவினால் விண்ணப்பம் செய்தேன் (சங் 39:3).

 

என் இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது; அப்பொழுது என் நாவினால் விண்ணப்பம் செய்தேன் (சங் 39:3).

 

தாவீது ஒன்றும் பேசாமல் மவுனமாகி, ஊமையனாயிருக்கும்போது அவருடைய இருதயம் தீவிரமாய்ச் சிந்திக்கிறது. நாமும் நம்முடைய பேச்சைக் குறைத்துக்கொண்டால்,  நாம் அதிகமாய்ச் சிந்திக்கலாம்.  நம்முடைய இருதயம் நமக்குள்ளே அனல்கொள்ளும். தாவீது  மவுனமாயிருக்கும்போது, அவருடைய இருதயம் அவருக்குள் அனல்கொள்கிறது.  அவர் தியானிக்கையில் அவருக்குள் அக்கினி மூள்கிறது.

 

தாவீதால் தன்னுடைய வாயை கடிவாளத்தால் அடக்க முடிகிறது.  ஆனாலும்  அவருடைய இருதயத்தின் சிந்தனையையும், தியானத்தையும் அவரால் அடக்க முடியவில்லை. நம்முடைய இருதயத்தில் தீயசிந்தனைகளும், துன்மார்க்கமான சிந்தனைகளும் இருக்கும்போது, அதை உடனே வார்த்தைகளால் வெளிப்படுத்திவிடக்கூடாது.  தீமையான வார்த்தைகளினால் நமக்கு  அதிகத் துன்பம் வரும்.  

 

தாவீது ஒன்றும் பேசாமல்  மவுனமாயிருக்கிறார். இதனால்  அவருடைய இருதயம் அவருக்குள்ளே அனல்கொள்கிறது. அவரால் பேசாமல் இருக்கமுடியவில்லை.  தன்னுடைய வாயை கடிவாளத்தால் அடக்கி வைத்தாலும், அவருடைய இருதயம் அவருக்குள்ளே  அனல்கொள்கிறது. அவர் தியானிக்கையில் அக்கினி மூள்கிறது. 

 

நம்முடைய இருதயம் கொழுந்துவிட்டு எரியும்போது, நாம் மனுஷரிடத்தில் பேசாமல் கர்த்தரிடத்தில் மாத்திரமே பேசவேண்டும். நம்முடைய இருதயத்தின் சிந்தனைகளை வெளிப்படுத்தாமல், நமக்குள்ளே அடக்கி வைத்திருந்தால் அது அனல்கொள்ளும். அது நமக்குள் பற்றியெரியும். ஆகையினால்  நம்முடைய இருதயத்தில் வேதனைகளும், கவலைகளும், பிரச்சனைகளும் இருக்கும்போது,  அவற்றை நமக்குள்ளே அடக்கி வைப்பதற்குப் பதிலாக, அவற்றை கர்த்தரிடத்தில்     சொல்லுவது  நமக்கு நலமாயிருக்கும்.  நம்முடைய பிரச்சனைகளை  மனுஷரிடத்தில்  சொல்லாமல் கர்த்தரிடத்தில் சொல்லலாம். 

 

தாவீது நாவினால் பாவம் செய்யாதபடிக்கு  தன்னுடைய வாயை கடிவாளத்தால் அடக்கி வைக்கிறார். மவுனமாகி ஊமையாகயிருக்கிறார். ஒன்றும் பேசாமல் அமர்ந்திருக்கிறார். அவருடைய இருதயம் அவருக்குள்ளே அனல்கொள்கிறது.  அவர் தியானிக்கும்போது அக்கினி மூழ்கிறது.  அப்பொழுது அவர் தன்னுடைய நாவினால்  கர்த்தரிடத்தில் விண்ணப்பம் செய்கிறார். நலமானதைப் பேசாமல், தாவீதால் அதிக காலம் அமைதியாய் அமர்ந்திருக்க முடியவில்லை. இதனால்  அவருடைய துக்கம் அதிகரிக்கிறது. தாவீது மனுஷரிடத்தில் பேசாவிட்டாலும், கர்த்தரிடத்தில் பேசி தன்னுடைய மவுனத்தை விலக்கிகொள்கிறார்.  

 

மனுஷருடைய ஆயுசுகாலம்

சங் 39 : 4-6

 

நான் நிலையற்றவன் (சங் 39:4). 

 

கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும்  (சங் 39:4). 

 

இந்தப் பிரபஞ்சத்தில் நம்முடைய   ஜீவியம் நிலையற்றது. நம்முடைய ஆயுசுகாலம் மிகவும் குறுகியது. நாம் எப்போதுமே நம்முடைய மரணத்திற்கு சமீபமாக  வந்துகொண்டேயிருக்கிறோம்.  தாவீது  இந்தச் சத்தியத்தை உணர்ந்திருக்கிறார்.  கர்த்தர் தாமே  இந்தச் சத்தியத்தை தனக்குள் இன்னும் அதிகமாய் உணர்த்துமாறு தாவீது கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார். “”கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும்”என்று விண்ணப்பம்பண்ணுகிறார். 

 

தாவீது கர்த்தரிடத்தில் ஜெபிக்கும்போது, “”கர்த்தாவே நான் இந்தப் பூமியில்  எவ்வளவு காலம் ஜீவிப்பேன், எப்பொழுது மரிப்பேன் என்பதை எனக்குத் தெரிவியும்” என்று சொல்லி ஜெபிக்கவில்லை. கர்த்தர் தாமே தன்னுடைய முடிவை தனக்குத் தெரிவிக்கும்படியாக தாவீது ஜெபம்பண்ணுகிறார். மோசே இஸ்ரவேல் ஜனங்களிடம் சொல்லும்போது “”அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, தங்கள் முடிவை சிந்தித்துக்கொண்டால் நலமாயிருக்கும்” (உபா 32:29) என்று சொன்னார். நம்முடைய முடிவை சிந்திப்பதற்கு கர்த்தர் தாமே   தம்முடைய கிருபையையும், ஞானத்தையும் நமக்குத் தரவேண்டும். 

 

தாவீது கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணும்போது தன்னுடைய ஜீவியகாலத்தின் முடிவைப்பற்றித் தியானிப்பதற்கு தனக்கு உதவிசெய்யுமாறு வேண்டிக்கொள்கிறார். நாம் இந்தப் பூமியிலே கொஞ்சக்காலம் ஜீவிக்கிறோம். நம்முடைய ஜீவியத்தின் கடைசிநாட்கள்தான், இந்த உலகத்தில் நாம் இருக்கப்போகிற கடைசிநாட்கள்.  இதுவே நமக்கு  இறுதிக்காலம். 

 

துன்மார்க்கன் இந்தப் பூமியில் ஜீவிக்கிற காலம் வரையிலும் தன்னுடைய மாம்சத்தின் இச்சைகளை நிறைவேற்றுகிறான். உலகப்பிரகாரமான சந்தோஷங்களை அனுபவிக்கிறான்.  அவனுடைய ஜீவியத்தின் கடைசிநாட்கள், அவனுடைய  சந்தோஷங்களின்  முடிவு காலமாயிருக்கிறது. கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமோ, இந்தப் பிரபஞ்சத்தில் அநேகத் துன்பங்களையும், பாடுகளையும் உபத்திரவங்களையும் அனுபவிக்கிறோம். நம்முடைய ஜீவியத்தின் கடைசிநாட்கள், நம்முடைய உபத்திரவங்களின் முடிவு காலமாயிருக்கிறது.  இந்தப் பிரபஞ்சத்தில் நம்முடைய ஜீவன் முடியும்போது நம்முடைய  பாடுகளும், கஷ்டங்களும், வேதனைகளும் முடிவடைகிறது. 

 

கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் ஒவ்வொரு நாளும் நம்முடைய மரணநாளை நினைவுகூரவேண்டும்.  நம்முடைய ஜீவியத்தின் முடிவு வெகுதூரத்தில் இல்லை என்னும் நினைவு நமக்குள் எப்போதும் இருக்கவேண்டும். நாம் மரித்துப்போவதற்கு இன்னும் அநேக காலமுள்ளது என்றும், நம்முடைய ஜீவியத்தின் முடிவு வெகுதூரத்திலுள்ளது என்றும் நாம் நினைக்கும்போது, நமக்குள் பல சோதனைகள் வரும். நம்முடைய மரணத்தைச் சந்திப்பதற்கு  நமக்கு இன்னும் நீண்டகால அவகாசம் இருக்கிறது என்று நினைத்து,  அசட்டையாக ஜீவிப்போம்.  நம்முடைய பரிசுத்தத்தில் அக்கறை காண்பிக்கமாட்டோம். 

 

நம்முடைய மரணம் நமக்கு சீக்கிரத்தில் வருவதற்கு வாய்ப்புள்ளது என்னும் எண்ணம்  நமக்குள் வரும்போதுதான், நம்முடைய கர்த்தரை சந்திப்பதற்கு  நாம் ஆயத்தமாயிருப்போம்.  பாவஅறிக்கை செய்வோம்.  பரிசுத்தமாய் ஜீவிப்போம். நாம் மரிப்பதற்கு முன்பாக  என்னென்ன காரியங்களையெல்லாம்  செய்து முடிக்க வேண்டுமோ அதையெல்லாம் நேர்த்தியாக  செய்து முடிக்க ஆரம்பித்துவிடுவோம். நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் வேகமும் விருவிருப்பும் இருக்கும்.  நமக்கு  மரணம் வர காலதாமதமாகும் என்னும்  நினைவு நமக்குள்ளிருந்தால், நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் வேகமும்   விருவிருப்பும் இருக்காது. நம்முடைய ஆவிக்குரிய ஜீவியம் மந்தநிலையில் இருக்கும். தாவீது இதை உணர்ந்தவராக கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார். 

 

தாவீதின் விண்ணப்பங்கள்

 

    1. என் முடிவை அறியும்படி செய்யும்(சங் 39:4).

 

    2. என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதை எனக்குத் தெரிவியும்.

 

    3. நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி செய்யும்.

 

    4. என் மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னை விடுதலையாக்கும் (சங் 39:8).

 

    5. மூடனுடைய நிந்தனைக்கு என்னை ஒப்புக் கொடாதேயும்.

 

    6. என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும் (சங் 39:10).

 

    7. கர்த்தாவே! என் ஜெபத்தைக் கேளும் (சங் 39:12). 

 

    8. என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்.

 

    9. என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும். என் பிதாக்களெல்லாரையும் போல நானும் உமக்கு முன்பாக அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறேன்.

 

    10. நான் இனி இராமற்போகுமுன்னே தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாயிரும் (சங் 39:13). 

 

எந்த மனுஷனும் மாயையே (சங் 39:5)

 

இதோ, என் நாட்களை நாலூ விரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாதது போ-ருக்கிறது; எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா.)  (சங் 39:5)

 

மனுஷனுடைய ஜீவியம் மாயையானது.  வேஷமாகவே மனுஷன் திரிகிறான்.  விருதாவாகவே சஞ்சலப்படுகிறான். தேவையில்லாத காரியங்களுக்கெல்லாம் மனுஷன் வருத்தப்படுகிறான். தன்னுடைய ஜீவியத்தில் எதற்கு கவனம் செலுத்தவேண்டுமோ அதற்கு கவனம் செலுத்தாமல், மாயையான காரியங்களைப் பின்பற்றிப் போகிறான். தாவீது  தன்னுடைய ஜீவியத்தைப்பற்றி கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார்.  எந்த மனுஷனும் மாயையே என்றும், மனுஷன் வேஷமாகவே திரிகிறான் என்றும், விருதாவாகவே  சஞ்சலப்படுகிறான் என்றும் அங்கீகரிக்கிறார்.   

 

கர்த்தர் தாவீதின் நாட்களை நாலுவிரற்கடையளவாக்கியிருக்கிறார். தாவீதின் ஆயுசுகாலம் மிகவும் சொற்பமானது. தாவீதின் நாட்கள் நான்கு  விரல்களின் அளவு மாத்திரமே உள்ளது.  இந்த அளவு  மிகவும் சிறியது. நாம் நம்முடைய நாட்களைப்பற்றி நினைத்துப் பார்க்கும்போது, இந்த குறைந்த அளவையும் நினைத்துப் பார்க்கவேண்டும்.  நம்முடைய ஆயுசுகாலம் மிகவும் குறுகியது என்னும்  எண்ணம் நம்முடைய மனதில் நீங்காமல், நிலைத்திருக்கவேண்டும். நம்முடைய நாட்கள்  நாலுவிரற்கடையளவு மாத்திரமே உள்ளது என்பதை நம்முடைய மனக்கண்களால் எப்போதும் நோக்கிப் பார்க்கவேண்டும்.

 

நம்முடைய நாட்களின் அளவை கணக்குப் பார்ப்பதற்கு  நாம் கணிதமேதைகளாயிருக்க வேண்டும் என்னும் அவசியம் எதுவுமில்லை.    நம்முடைய நாட்களின் அளவைக் கூட்டுவதற்கு நம்முடைய  விரல்களே போதும்.   இதைக் கூட்டுவதற்கு  இரண்டு கைகள்கூட தேவையில்லை.  ஒரு கைகூட தேவையில்லை.  விரல்களின்  நுனிமாத்திரம் போதுமானது.  நம்முடைய நாட்களை  மிகவும் எளிதாகக் கூட்டிவிடலாம்.  நம்முடைய நாட்களும் அவ்வளவு குறைவாகவே உள்ளது.  

 

நம்முடைய காலங்கள் கர்த்தருடைய கரத்திலிருக்கிறது.  கர்த்தர் மனுஷனுக்கு குறைந்த ஆயுசுகாலத்தையே கொடுத்திருக்கிறார். நம்முடைய ஆயுசுநாட்கள் கர்த்தருடைய பார்வைக்கு  இல்லாததுபோலவே இருக்கிறது. தேவனுடைய நித்திய காலத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்தப் பூமியில் மனுஷருடைய ஆயுசுகாலம் ஒன்றுமேயில்லை.  இது தேவனுடைய பார்வைக்கு  இல்லாததுபோலவே இருக்கிறது.

 

இந்தப் பூமியில் மனுஷனுடைய ஆயுசுகாலம் மாயையாக இருக்கிறது.  எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம்.  ஆகையினால் நாம் இந்தப் பிரபஞ்சத்தில்  ஜீவனோடு இருக்கிற காலத்தில், நம்முடைய  நாட்களை பிரயோஜனப்படுத்திக் கொள்ளவேண்டும்.  இதுவே ஞானமான செயல்.   

 

மனுஷனைப்பற்றிய ஒவ்வொரு காரியமும் நிலையற்றதாகவே இருக்கிறது. ஏனெனில் எந்த மனுஷனும் மாயையாகவே இருக்கிறான்.  மனுஷனுக்குஎதுவும் நிலைத்திருப்பதில்லை. இந்தப் பூமியில் மனுஷனுடைய ஜீவனும் நிலைத்திருப்பதில்லை.  மனுஷன் மரிக்க வேண்டியவன். மனுஷன் இந்தப் பிரபஞ்சத்தில் கொஞ்சகாலம் ஜீவியத்தாலும், அவன் அநேக காரியங்களைக் குறித்து சஞ்சலப்படுகிறான். அவனுடைய சஞ்சலத்தைப் போக்குவதற்கு அவனால் ஒன்றும் செய்ய முடியாது. அவன்  விருதாகவே சஞ்சலப்படுகிறான். 

 

இந்த வசனத்தின் முடிவில் “”சேலா” என்னும் வார்த்தை சேர்க்கப்பட்டிருக்கிறது.  இந்த வசனத்தைப் பாடி முடித்த பின்பு நாம் சிறிதுநேரம் அமைதியாயிருக்கவேண்டும். நம்முடைய ஜீவியகாலம் குறைவானது என்பதை  நாம் தியானிக்கவேண்டும். இந்தச் சத்தியத்தை நாம் தியானித்துப் பார்த்து, விருதாவாக சஞ்சலப்படுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும்.  தேவனுடைய பார்வைக்கு நம்முடைய ஆயுசு  இல்லாததுபோல  இருப்பதினால், நம்முடைய  நித்திய ஜீவனைக்குறித்து  நாம் அக்கரையுள்ளவர்களாயிருக்கவேண்டும். 

 

வேஷமாகவே மனுஷன் திரிகிறான் (சங் 39:6).

 

வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாகவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான், யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான்  (சங் 39:6).

 

எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம். மனுஷன் மாயையானவன் என்பதை  உறுதிபண்ணுவதற்கு தாவீது இங்கு மூன்று காரியங்களைக் குறிப்பிடுகிறார். அவையாவன: 1. மனுஷன் வேஷமாகவே திரிகிறான் 2. மனுஷன் விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்.                  3.  மனுஷன் விருதாவாகவே பிரயாசப்படுகிறான். 

 

இந்தப் பூமியில் நம்முடைய சந்தோஷங்களும், மேன்மைகளும், மகிமைகளும்  மாயையானது.  மனுஷன் வேஷமாகவே திரிகிறான்.  தான் சந்தோஷப்படுவதாக நினைக்கிறான். ஆனாலும் மனுஷனுடைய சந்தோஷம் மெய்யான சந்தோஷமல்ல. இது பொய்யான சந்தோஷம். உலகசந்தோஷம் என்பது  மனுஷனுடைய கற்பனை. கர்த்தர் கொடுக்கிற சந்தோஷமே மெய்யான சந்தோஷம். மனுஷனுக்கு கர்த்தரைப்பற்றித் தெரியவில்லையென்றால் அவனுக்கு மெய்யான சந்தோஷமில்லை.  ஆகையினால் அவன் இந்தப்பிரபஞ்சத்தில் வேஷமாகவே திரிகிறான்.  

 

மனுஷன் தன்னுடைய ஆயுசுகாலத்தில்  பல காரியங்களைக்  குறித்து கவலைப்படுகிறான். கவலைப்படுவதினால் மனுஷனுக்கு  ஒரு பிரயோஜனமும் உண்டாகப்போவதில்லை. தேவையில்லாமல் பயப்படுகிறான். அவனுடைய சஞ்சலமெல்லாம் விருதாவாகவே இருக்கிறது.  அவனுடைய சஞ்சலத்திற்கு அவனே காரணம்.  மனுஷன் தன்னுடைய கவலைகளையும், சஞ்சலகங்களையும் தனக்குத்தானே உற்பத்திப்பண்ணிக்கொள்கிறான்.  மனுஷனுடைய சஞ்சலத்தினால் ஒரு பிரயோஜனமும் உண்டாகப்போவதில்லை. இருந்தாலும் சஞ்சலப்படுகிறான்.  அவன் விருதாவாகவே சஞ்சலப்படுகிறான். 

 

மனுஷன் இந்தப் பிரபஞ்சத்தில் ஜீவிக்கிற காலத்தில் ஆஸ்தியை சேர்க்கிறான்.  அதிகமாய் பிரயாசப்படுகிறான். கடினமாய் உழைக்கிறான்.  பல காரியங்களில் கவனம் செலுத்துகிறான். ஐசுவரியம் சேர்க்கவேண்டுமென்பது மனுஷருடைய குறிக்கோளாயிருக்கிறது.  இதற்காக அவன் எதை வேண்டுமானாலும் செய்கிறான்.  எதை வேண்டுமானலும் விட்டுக்கொடுகிறான். 

 

ஒரு மனுஷனுக்கு  எவ்வளவு திரளான ஆஸ்தியிருந்தாலும் அது அவனுக்கு ஜீவனல்ல. மனுஷன் மரிக்கும்போது  அவன் சேர்த்து வைத்த ஆஸ்தி அவனோடு கூடவரப்போவதில்லை. தான் சேர்த்து வைத்த ஆஸ்தியை யார் வாரிக்கொள்வான் என்பதும்  அவனுக்குத் தெரியாது. 

 

மனுஷன் சேர்த்து வைத்திருக்கிற ஆஸ்தி  தோட்டத்திலுள்ள குப்பை மேட்டைப்போலிருக்கிறது. குப்பை ஒரு இடத்தில் மேடாகக் குவிக்கப்பட்டிருக்கும்போது, அதினால் அந்த நிலத்திற்குப் பிரயோஜனமில்லை. சேமித்து வைக்கப்பட்டிருக்கிற குப்பையை, நிலத்தில்        பல பாகங்களிலும் சிதறிப்போடவேண்டும். அப்போதுதான் அது நிலத்திற்கு உரமாக பிரயோஜனப்படும். குவிப்பட்ட குப்பை பிரயோஜனமற்றதுபோல, சேர்த்து வைக்கப்பட்டிருக்கிற ஆஸ்தியும் பிரயோஜனமற்றது.  

 

தாவீதின் விண்ணப்பம்

சங் 39 : 7-13

 

நீரே என் நம்பிக்கை   (சங் 39:7).

 

இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை  (சங் 39:7).

 

தாவீது இதுவரையிலும் தன்னையும், தன்னுடைய ஜீவியகாலத்தையும் நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தார். இப்போதோ தன்னுடைய கண்களையும் இருதயத்தையும் பரலோகத்திற்கு நேராகத் திருப்புகிறார். நமக்கு இந்தப் பூமியிலுள்ள காரியங்களில் திருப்தி ஏற்படவில்லையென்றால், கர்த்தரை நோக்கிப் பார்க்கவேண்டும்.  கர்த்தரிடத்தில் மாத்திரமே நமக்குப் பூரண திருப்தியுண்டாகும்.  சிருஷ்டிகளிடத்தில் நமக்கு திருப்தியுண்டாகாது. சிருஷ்டிகரிடத்தில் மாத்திரமே நமக்கு திருப்தியுண்டாகும்.  நாம் இந்த உலகத்தையும், உலகத்திலுள்ள காரியங்களையும் நோக்கிப் பார்க்கும்போது நமக்கு ஏமாற்றமே உண்டாகும்.  

 

கர்த்தரிடத்தில் நாம் ஐக்கியமாயிருக்கவேண்டும். இந்த ஐக்கியம் பரிசுத்தமானது. இந்த ஐக்கியத்தில் நம்முடைய ஆத்துமாவுக்கு பூரண சந்தோஷமும், பூரண சமாதானமும், பூரண திருப்தியும் உண்டாயிருக்கும்.  நமக்கு இந்த உலகத்தின் மூலமாய் ஏமாற்றம் உண்டாயிருந்தாலும்,  அந்த ஏமாற்றத்தைப் போக்குவதற்கு, நாம் கர்த்தரை நோக்கிப் பார்த்து திருப்தியடைய வேண்டும்.

 

தாவீது கர்த்தரை நோக்கிப் பார்க்கிறார். அவர் கர்த்தரிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறார்.  அவர் கர்த்தரை சார்ந்து ஜீவிக்கிறார். இந்த உலகக்காரியங்களில்  தாவீதுக்கு  சந்தோஷம் உண்டாகவில்லை.  இந்த உலகத்திலிருந்து தாவீது ஏராளமான காரியங்களை எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே உண்டாயிற்று. தன்னுடைய ஏமாற்றத்தினிமித்தமாய், தாவீது கர்த்தரிடத்தில், “”இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்” என்று ஏமாற்றத்தோடு கேட்கிறார். 

 

உலகக்காரியங்களினால் தாவீதுக்கு ஒரு நன்மையும் உண்டாகவில்லை. இந்த உலகக்காரியங்களை எதிர்பார்த்து அவர்  இதுவரையிலும் ஏமாற்றமே அடைந்திருக்கிறார். ஆகையினால் தாவீதுக்கு இந்த உலகத்தின்மீது  வெறுப்பு  உண்டாயிற்று.  இந்த உலகத்தை எதிர்பார்த்து தனக்கு ஒரு பிரயோஜனமும் உண்டாகாது என்று நினைக்கிறார். ஆகையினால் “”நான் எதற்கு எதிர்பார்க்கிறேன், எதிர்பார்த்தது எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை” என்று பொருள்படும்   விதமாக தாவீது கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார். 

 

நம்முடைய சரீர ஆரோக்கியமும், நம்முடைய ஐசுவரியமும் நித்தியமானதல்ல.  நாம்  இவற்றை நம்பி ஜீவிக்கக்கூடாது. நம்முடைய ஐசுவரியம் நமக்கு நிம்மதியையும் ஆறுதலையும் தரும் என்று எதிர்பார்க்கக்கூடாது.  இவையெல்லாம் நம்மிடத்தில் நிலைத்து  நிற்காது.  சரீர ஆரோக்கியத்தையும், உலகத்து ஐசுவரியங்களையும் நம்பி ஜீவிக்கிறவர்கள் ஏமாந்து போவார்கள். அவை நம்மைவிட்டு நீங்கிப்போகும்போது, நம்முடைய நம்பிக்கையும், நம்முடைய சந்தோஷமும் நம்மை விட்டு நீங்கிப்போகும். 

 

கர்த்தரிடத்தில்  நம்பிக்கை வைத்திருக்கிற மனுஷன் பாக்கியவான்.  கர்த்தருக்குள் சந்தோஷமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் கர்த்தரிடத்தில் திருப்தியாயிருப்பான். தாவீது இதுவரையிலும்  உலகத்தையும், உலகத்திலுள்ளவைகளையும் சார்ந்து ஜீவித்தார்.  அவருக்கு ஏமாற்றமுண்டாயிற்று. சோர்ந்துபோனார். இப்போதோ அவர்  கர்த்தரை நம்பி ஜீவிக்கிறார்.  கர்த்தரிடத்தில், “”நீரே என் நம்பிக்கை” என்று சொல்லுகிறார். 

 

மூடனுடைய நிந்தனை (சங் 39:8). 

 

என் மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னை விடுதலையாக்கும், மூடனுடைய நிந்தனைக்கு என்னை ஒப்புக்கொடாதேயும் (சங் 39:8). 

 

தாவீது கர்த்தரிடத்தில் தனக்காக விண்ணப்பம்பண்ணுகிறார்.  அவர் கர்த்தர்மீது பிரியமாயிருக்கிறார்.  தன்னுடைய வேண்டுதல்களையும் விண்ணப்பங்களையும்  கர்த்தருடைய சமுகத்தில் வாஞ்சையோடு சொல்லுகிறார். தன்னுடைய பாவங்களும் மீறுதல்களும் மன்னிக்கப்படவேண்டும் என்பதும், தனக்கு நிந்தையும் அவமானமும் வரக்கூடாது என்பதுமே தாவீதின் ஜெபமாகும். 

 

தாவீது கர்த்தரிடத்தில் “”என்னிலிருந்து  உம்முடைய வாதையை எடுத்துப்போடும்”  (சங் 39:10) என்று ஜெபிக்கிறார். இந்த ஜெபத்தை ஏறெடுப்பதற்கு முன்பாக, “”என் மீறுதல்களெல்லாவற்றிலுமிருந்து  என்னை விடுதலையாக்கும்”(சங் 39:8) என்று விண்ணப்பம்பண்ணுகிறார். நம்முடைய பாவங்கள் நமக்கு மன்னிக்கப்பட்டால்தான் நமக்கு வாதையிருக்காது. பாவத்தின் சம்பளம் மரணம்.  நம்முடைய பாவம் மன்னிக்கப்படும்போது, நமக்கு நித்திய ஜீவன் உண்டாயிருக்கும்.  நம்முடைய வாதை நம்மைவிட்டு நீங்கும்.

 

தன்னுடைய மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து கர்த்தர் தாமே தன்னை விடுதலையாக்குமாறு ஜெபித்துவிட்டு, “”மூடனுடைய நிந்தனைக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்” என்று தாவீது ஜெபம்பண்ணுகிறார்.  துன்மார்க்கர் மூடராயிருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய  பேச்சிலும் செய்கையிலும் தங்களுடைய  மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் தங்களைப் பெரியவர்களாக நினைத்து, கர்த்தருடைய பிள்ளைகளை பரியாசம்பண்ணுகிறார்கள். 

 

பரிசுத்தவான்களுக்கு முன்பாக அவர்கள் தங்களை பலமுள்ளவர்கள்போலவும், ஞானிகள்போலவும்,  விவேகிகள்போலவும் காண்பித்துக்கொள்கிறார்கள். தங்கள் மூடத்தனத்தை மறைக்கிறார்கள்.  அவர்கள்  மெய்யாகவே மாய்மாலம்பண்ணுகிறார்கள்.  கர்த்தருக்குப் பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம். மூடன் கர்த்தருக்குப் பயப்படமாட்டான்.  அவனிடத்தில் ஞானமில்லை.  அவன் கர்த்தருடைய பிள்ளைகளை நிந்திப்பதற்கு முயற்சி செய்கிறான். கர்த்தர் தாமே தன்னை  மூடனுடைய நிந்தனைக்கு  ஒப்புக்கொடுக்க வேண்டாமென்று  தாவீது கர்த்தரிடத்தில் பயபக்தியாய் ஜெபம்பண்ணுகிறார்.  

 

நீரே இதைச் செய்தீர் (சங் 39:9). 

 

நீரே இதைச் செய்தீர் என்று நான் என் வாயைத் திறவாமல் மவுனமாயிருந்தேன் (சங் 39:9). 

 

தாவீது கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறார். கர்த்தருடைய பரிசுத்த சித்தத்திற்குத் தன்னை சந்தோஷமாய் ஒப்புக்கொடுக்கிறார். இப்போது தாவீதுக்கு வாதைகள் வந்திருக்கிறது. தன்னுடைய இருதயத்தில் சஞ்சலப்படுகிறார். சரீரத்தில் வேதனைப்படுகிறார்.  இவையெல்லாம்   தன்னுடைய பாவத்தினிமித்தம்,  கர்த்தர்  தனக்கு நீதியாகக் கொடுக்கிற தண்டனை என்று தாவீது அங்கீகரிக்கிறார். “”நீரே இதைச் செய்தீர்” என்று கர்த்தரிடத்தில் சொல்லுகிறார். 

 

தாவீதுக்கு ஏற்பட்டிருக்கிற நெருக்கங்களும், வேதனைகளும் எதேச்சையாய் உண்டாவில்லை. இவை தேவனுடைய தெய்வீக சித்தத்தின் பிரகாரமாகவும், அவருடைய தெய்வீக திட்டத்தின் பிரகாரமாகவும் தாவீதுக்கு உண்டாயிற்று. தனக்கு வந்திருக்கிற தண்டனையை தாவீது பணிவோடு ஏற்றுக்கொள்கிறார். இந்தத் தண்டனை தன்னுடைய பாவத்தினிமித்தம் நீதியாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று அங்கீகரிக்கிறார்.  கர்த்தரே இதைச் செய்தார்  என்று விசுவாசித்து, தாவீது தன்னுடைய வாயைத் திறவாமல் மவுனமாயிருக்கிறார்.

 

நம்முடைய ஜீவியத்திலும் அநேக சம்பவங்கள் நடைபெறும். கர்த்தருடைய பிள்ளைகளுக்கு அவருக்குச் சித்தமான காரியங்கள் மாத்திரமே வாய்க்கும். கர்த்தரை நம்புகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாக நடைபெறும். நாம் கர்த்தருடைய வார்த்தையை மீறி, அவருக்கு கீழ்ப்படியாமல் ஜீவிக்கும்போது தேவனுடைய கோபம் நம்மீது வரும். நமக்கு  தெய்வீக தண்டனை கிடைக்கும்.  நமக்கு பாடுகளும், வேதனைகளும், நெருக்கங்களும் உண்டாகும். இவையெல்லாம் நம்முடைய ஜீவியத்தில் எதேச்சையாய் நடைபெறுவதில்லை.

 

நம்முடைய ஜீவியத்தில் நடைபெறுகிற  ஒவ்வொரு காரியத்தையும் பார்த்து, “”இது தேவனுடைய விரல், இது தேவனுடைய கிரியை” என்று அங்கீகரிக்கவேண்டும். கர்த்தர் நமக்குள்ளே அநேகக் கிரியைகளை நடப்பிக்கிறார். நமக்குள் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கு, கர்த்தர் அநேகரை தம்முடைய கருவிகளாகப் பயன்படுத்துகிறார்.  அவர்கள் கருவிகள்தான்.  கர்த்தரே  எல்லாவற்றிற்கும் காரணகர்த்தா.  நமக்கு  மற்ற மனுஷர் மூலமாய் காரியங்கள் நடைபெற்றாலும்,  அது கர்த்தருடைய கிரியை என்று  நாம் அங்கீகரிக்கவேண்டும். கர்த்தரிடத்தில், “”நீரே இதைச் செய்தீர்” என்று தாவீதைப்போல சொல்லவேண்டும். 

 

உமது கரத்தின் அடிகள் (சங் 39:10). 

 

என்னி-ருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்; உமது கரத்தின் அடிகளால் நான் சோர்ந்துபோனேன்  (சங் 39:10). 

 

தாவீதுக்கு இப்போது அநேக வாதைகள் உண்டாயிருக்கிறது.  இந்த வாதை கர்த்தருடைய வாதை என்று தாவீது சொல்லுகிறார். கர்த்தர் தாமே தம்முடைய வாதையை, தன்னிலிருந்து எடுத்துப்போடுமாறு  தாவீது ஜெபம்பண்ணுகிறார். கர்த்தர் தம்முடைய வாதையை எடுத்துப்போடும்போது, தாவீதின் பாரச்சுமை நீங்கும்.  அவருடைய நெருக்கங்களும், வேதனைகளும் அவரைவிட்டு நீங்கிப்போகும். கர்த்தர் தம்முடைய கரத்தினால்  தாவீதை அடிக்கிறார். கர்த்தர் அடிக்கும்போது  தாவீது சோர்ந்துபோகிறார். தாவீது கர்த்தருடைய சமுகத்தில் தன்னுடைய சோர்வைப்பற்றியும் சொல்லுகிறார். “”உமது கரத்தின் அடிகளால் நான் சோர்ந்துபோனேன்”  என்று  கர்த்தரிடத்தில் முறையிடுகிறார். 

 

தாவீதுக்கு அவருடைய சரீரத்தில் வியாதியும் வாதையும் உண்டாயிற்று. இதனால் அவருடைய ஆவி சோர்ந்துபோயிற்று. தாவீதின் பெலன் அவரைவிட்டு நீங்கிப்போயிற்று. தாவீதால்  வேதனையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இது கர்த்தர் அவருக்குக் கொடுத்திருக்கிற வாதை. இதிலிருந்து  தாவீதால் தப்பிக்க முடியவில்லை.  தாவீது கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக பாவங்களைச் செய்திருக்கிறார்.  பல சமயங்களில்  அவர்  கர்த்தருடைய சித்தத்திற்கு  மீறி நடந்திருக்கிறார். இதனால் கர்த்தர் தாவீதை தம்முடைய கரத்தினால் அடிக்கிறார்.  கர்த்தர் அடிக்கிற அடியைத் தாங்கமுடியாமல் தாவீது சோர்ந்துபோயிருக்கிறார். 

 

நம்முடைய பேச்சும், நம்முடைய செய்கைகளும், நம்முடைய வழிகளும் நமக்கு நன்மையையோ அல்லது தீமையையோ கொடுக்கும்.  நாம் நன்மை செய்தால் நமக்கு நன்மை உண்டு.  நாம் தீமை செய்தால் நமக்குத் தீமை உண்டு.  பல சமயங்களில்  நாம் உண்டுபண்ணியிருக்கிற பிரம்பினாலாயே  நாம் அடிவாங்குகிறோம். நம்மை அடிப்பதற்கு  நாமே சவுக்கை உண்டுபண்ணுவோம்.  இந்த அடிகளும், இந்த வேதனைகளும் நம்முடைய மீறுதல்களினிமித்தமாய் உண்டாயிற்று. 

 

நம்முடைய பாவத்தினிமித்தமாய் நமக்கு வருகிற வாதைகளையும், வேதனைகளையும் எரேமியா தீர்க்கதரிசி இவ்வாறு சொல்லுகிறார்.  “”என் பாதகங்களின் நுகம் அவருடைய கையால் பூட்டப்பட்டிருக்கிறது; அவைகள் பிணைக்கப்பட்டு என் கழுத்தைச் சுற்றிக்கொண்டது;              என் பெலனை விழப்பண்ணினார்; நான் எழுந்திருக்கக்கூடாதபடிக்கு ஆண்டவர் என்னை ஒடுக்குகிறவர்களின் கையில்  ஒப்புக்கொடுத்தார்” (புல 1:14). 

பொட்டரிப்பு (சங் 39:11). 

 

அக்கிரமத்தினிமித்தம் நீர் மனுஷனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது, அவன் வடிவைப் பொட்டரிப்பைப்போல் அழியப்பண்ணுகிறீர்; நிச்சயமாக எந்த மனுஷனும் மாயையே. (சேலா.)  (சங் 39:11). 

 

கர்த்தர் மனுஷனுடைய பாவத்தினிமித்தம் அவனைத் தண்டிக்கும்போது, அவனுடைய  அழகு அவனை விட்டு நீங்கிப்போகிறது.  அவனுடைய வடிவம் பொட்டரிப்பைப்போல் அழிந்துபோகிறது.  “”பொட்டு” என்னும் வார்த்தை கரையானைப்போன்ற சிறிய பொட்டுப்பூச்சியைக் குறிக்கிறது. “”பொட்டரிப்பு” என்பது “”பொட்டுப் பூச்சியினால் அரிக்கப்பட்டிருப்பது”. 

 

இந்த வாக்கியத்தில் பொட்டரிப்பு என்பது  பாவம் செய்கிற மனுஷனைக் குறிப்பதாக ஒரு வியாக்கியானம் உண்டு.  பொட்டுப்பூச்சியைப்போன்ற சிறிய பூச்சியை,  நாம்  ஒரு விரலினால் நசுக்கி கொன்றுபோடுகிறோம்.  அதுபோல அக்கிரமம் செய்கிற மனுஷன் எளிதில் அழிந்துபோவான்.  

 

கர்த்தர் மனுஷனுடைய அக்கிரமத்தினிமித்தம் அவனைக் கடிந்து கொண்டு தண்டிக்கிறபோது, அவனுடைய வடிவம்  பொட்டரிப்பைப்போல்  அழிந்துபோகும்.  மனுஷர் பொட்டுப்பூச்சியால்  அரிக்கப்படுவார்கள் என்று  தேமானியனாகிய  எலிப்பாஸ் யோபுவுக்கு  பிரதியுத்தரம் சொல்லுகிறார் (யோபு 4:19).

 

பொட்டரிப்பு என்பது  தேவனுடைய  தண்டனை என்றும் இந்த வாக்கியத்திற்கு சிலர் வியாக்கியானம் சொல்லுகிறார்கள். பொட்டுப்பூச்சி நம்மை அரிக்கும்போது, அமைதியாக, ஆரவாரமில்லாமல், கொஞ்சம் கொஞ்சமாக அரித்துவிடும். கரையான் வஸ்திரத்தை அரிக்கும்போது, அதைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து, வஸ்திரத்தின் அழகையே கெடுத்துவிடும்.  முடிவில்  அந்த வஸ்திரமே இல்லாத அளவுக்கு, அதை மொத்தமாக அரித்துப்போடும். இதுபோலவே  கர்த்தருடைய தண்டனை நம்மீது வரும்போது நாமும் பொட்டுப்பூச்சியால்  அரிக்கப்பட்டதைப்போல அழிந்துபோவோம். 

 

தாவீதுக்கு அநேக நெருக்கங்களும், வேதனைகளும் உண்டாயிருந்தாலும், அவர் கர்த்தரிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறார்.  இப்போது தனக்கு  பாடுகள் இருந்தாலும்,  கர்த்தருடைய கிருபையினால் இந்தப் பாடுகளிலிருந்து தனக்கு விடுதலை கிடைக்கும் என்று தாவீது நம்புகிறார். தனக்கு நல்ல முடிவு உண்டாகும் என்று தாவீது  கர்த்தரிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறார். கர்த்தர் தம்முடைய கோபத்தினால்  தன்னைத் தண்டித்தாலும், தம்முடைய இரக்கத்தினால் தன்னை மறுபடியும் மீட்டுக்கொள்வார் என்று தாவீது  விசுவாசிக்கிறார். கர்த்தருடைய தண்டனை அவருடைய கோபத்தினால் உண்டாகும்.  கர்த்தருடைய ஆசீர்வாதமோ அவருடைய கிருபையினாலும் இரக்கத்தினாலும் உண்டாகும்.  

 

எந்த மனுஷனாலும் கர்த்தருக்கு விரோதமாய் எதிர்த்து நிற்கமுடியாது. கர்த்தர் தம்முடைய கோபத்தினால் நம்மை அழிக்கும்போது, அவருடைய கோபத்திலிருந்து நம்மால் தப்பிக்க முடியாது.  மனுஷனுடைய  பெலமும், பாதுகாப்பும், அழகும், அறிவும் கர்த்தருக்கு முன்பாக  மாயையாயிருக்கிறது.  நிச்சயமாகவே  எந்த மனுஷனும்  மாயையே  என்று  தாவீது  தீர்மானமாய்ச் சொல்லுகிறார். 

 

கர்த்தர் மனுஷனைத் தண்டிப்பதற்கு நோக்கமுண்டு. மனுஷனைத் திருத்த வேண்டும். அவனுடைய பெருமையை அகற்ற வேண்டும்     (யோபு 33:14-29). அவருடைய பரிசுத்தத்தில் மனுஷனைப் பங்குள்ளவனாக ஆக்க வேண்டும். (எபி 12:5-11) கர்த்தர் மனுஷனைத் தண்டிப்பதற்கு இதுவே நோக்கம்.

 

என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்   (சங் 39:12). 

 

கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேட்டு, என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்; என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்; என் பிதாக்களெல்லாரையும்போல நானும் உமக்கு முன்பாக அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறேன்  (சங் 39:12). 

 

கர்த்தர் மனப்பூர்வமாய் யாரையும் துன்பப்படுத்துவதில்லை. யாரையும் வேதனைக்குட்படுத்துவதில்லை. மனுபுத்திரர்மீது கர்த்தர் தேவையில்லாமல்  தம்முடைய வாதையை அனுப்புவதில்லை.  கர்த்தர் காரணமில்லாமல்  கர்த்தர்  மனுஷரை தம்முடைய கரத்தினால் அடிக்கமாட்டார்.  கர்த்தர் பொதுவாக எந்த மனுஷரையும் தேவையில்லாமல் தண்டிக்கமாட்டார். உலகப்பிரகாரமான ஜனங்களை அவர் தண்டிக்காதபோது, கர்த்தர்  தம்முடைய ஜனங்களைத்  தண்டிக்காமல் அவர்கள்மீது அன்புகூருவது அதிக நிச்சயம். 

 

நாம் கர்த்தருடைய சமுகத்தில் கண்ணீர் விட்டு அழும்போது, கர்த்தர் நமக்கு உத்தரவு கொடுக்காமல் மவுனமாயிருக்கமாட்டார்.  நமக்கு விடுதலையைக் கட்டளையிடுவார். சமாதானத்தைக் கட்டளையிடுவார்.  நமக்கு  ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லுவார்.  தாவீது வாதைகளுக்கு மத்தியிலே கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணுகிறார்.  “”கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேட்டு, என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும். என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்” என்று உருக்கமாக ஜெபிக்கிறார். 

 

தாவீதுக்கு வாதைகளும் வேதனைகளும் உண்டானதினால்  அவர் இப்போது கர்த்தருடைய சமுகத்தில் ஜெபம்பண்ணுகிறார்.  ஜெபிக்கவேண்டும் என்னும் ஆர்வம் அவருடைய இருதயத்தில் உண்டாயிற்று. தாவீதுக்கு அநேக பாடுகளும், வேதனைகளும் உண்டானதினால்,  அவர் இந்தப் பிரபஞ்சத்தை சார்ந்திருக்காமல்,  இந்தப் பிரபஞ்சத்தைவிட்டு விலகி, கர்த்தருடைய சமுகத்திற்கு வருகிறார். தாவீது இந்தப் பிரபஞ்சத்தின்மீது  வைத்திருந்த பற்றும் பாசமும் அவரைவிட்டு      நீங்கிப்போயிற்று. 

 

தாவீது இஸ்ரவேல் தேசத்தின் ராஜாவாகயிருக்கிறார். சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். அவருக்கு மிகுந்த வாதைகளும், நெருக்கங்களும் உண்டானபோது,  தாவீது தன்னை ஒரு ராஜாவாகப்      பார்க்காமல்,  தன்னை ஒரு அந்நியனாகவும் பரதேசியாகவும் பார்க்கிறார்.  தாவீதின் முற்பிதாக்கள் இந்த உலகத்திலே வீடுகளும், தேசங்களும்  இல்லாமல் அந்நியராயும், பரதேசிகளாயும் சுற்றி அலைந்தார்கள்.      தாவீது கர்த்தரிடத்தில் தன்னைப்பற்றிச் சொல்லும்போது, “”நானும் உமக்கு முன்பாக அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறேன்” என்று சொல்லுகிறார். 

 

கர்த்தருடைய பிள்ளைகளெல்லோருமே இந்த உலகத்தில் பரதேசிகளாகவே இருக்கிறோம். இந்தப் பிரபஞ்சம் நமக்கு நிலையானதல்ல.  நம்முடைய நித்திய தேசத்தை நோக்கி நாம் பிரயாணம் மேற்கொள்கிறோம்.  அந்தப் பிரயாணத்தின்போது நாம் இந்தப் பிரபஞ்சத்தின் வழியாய்க் கடந்துசெல்கிறோம்.  பரலோகத்தில்  பிரவேசிக்கும் வரையிலும் நாம் தொடர்ந்து பிரயாணம் பண்ணவேண்டும்.  இந்தப் பிரபஞ்சத்தில்தான் நாம் பிரயாணம் செய்யவேண்டும்.  அது வரையிலும் நாம் இந்தப் பிரபஞ்சத்திற்கு அந்நியராயும் பரதேசிகளாயும் இருப்போம்.  

 

என்னிடத்தில் பொறுமையாயிரும்   (சங் 39:13). 

 

நான் இனி இராமற்போகுமுன்னே, தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாயிரும்  (சங் 39:13). 

 

கர்த்தர் தன்னிடத்தில் பொறுமையாயிருக்குமாறு தாவீது வேண்டிக்கொள்கிறார். கர்த்தர் தாவீதின்மேல் இதுவரையிலும் பொறுமையாகத்தான் இருந்திருக்கிறார். இந்தப் பொறுமையோடு, கர்த்தர்  இன்னும் கொஞ்சம் கூடுதலாக பொறுமையாயிருக்குமாறு தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார்.  தாவீதுக்கு  வேதனைகளும், வாதைகளும், வியாதிகளும் வந்திருக்கிறது.  அவருடைய சரீரத்திலும், ஆவியிலும், ஆத்துமாவிலும், சிந்தையிலும் பெலனில்லை. தான் தேறுதலடையும்படி, கர்த்தர் தன்னிடத்தில் பொறுமையாயிருக்குமாறு தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார்.

 

தாவீது சீக்கிரத்தில் மரிக்கப்போகிறார். இதன் பின்பு அவர் இந்த உலகத்தில் இருக்கமாட்டார்.  தான் மரிப்பதற்கு முன்பாக தன்னுடைய ஆவியில்  சமாதானமுண்டாகவேண்டுமென்றும், தன்னுடைய சரீரத்தில் வாதைகளும் வேதனைகளும் நீங்கவேண்டுமென்றும் தாவீது ஜெபிக்கிறார். தாவீது மரித்து இந்த உலகத்தைவிட்டு கடந்துபோகும்போது அவருடைய ஆத்துமா  ஜீவனோடிருக்கும்.  அவருடைய சரீரம் மாத்திரமே மரிக்கும். 

 

தாவீது மரித்த பின்பும், அவருடைய ஆத்துமா கர்த்தரைத் துதித்துப் பாடும்.  தான் இந்த உலகத்திலே  அந்நியனாகவும், பரதேசியாகவும் இருந்தாலும், தான் தேறுதலடையும்படி  கர்த்தர் தன்னிடத்தில்  பொறுமையாயிருக்குமாறு தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார்.  தான் மரிக்கும் முன்பாக கர்த்தருடைய கிருபை தனக்கு வெளிப்படவேண்டுமென்று தாவீது எதிர்பார்க்கிறார். 

 

“”நான் இனி இராமற்போகுமுன்னே” என்பது எபிரெய மொழியிலுள்ள வழக்குச்சொல்.   “”நான் மரிக்கப் போகிறேன்” என்பது இதன் பொருள். மரணம் நமது சரீரத்தின் முடிவு. நமது ஆவியும் ஆத்துமாவும் நித்திய ஜீவனைப் பெறும்.  

Leave a Reply