30ஆம் சங்கீதம் விளக்கம்

 

 

30ஆம் சங்கீதம் விளக்கம்

 

(கிரகப்பிரதிஷ்டையின் பாட்டாகிய தாவீதின் சங்கீதம்.)

 

துதித்து ஜெபிக்கும் மூன்றாவது சங்கீதம்

 

பொருளடக்கம் 

 

    1. கர்த்தரைத் துதிப்பதற்கு ஐந்துவிதமான  தனிப்பட்ட  காரணங்கள் – (30:1-3)  

 

    2. கர்த்தரைத் துதிக்க வேண்டுமென்று இரண்டு கட்டளைகளும், அவரைத் துதிப்பதற்கான இரண்டு காரணங்களும் – (30:4-5)

 

    3. ஜெபம் – ஆசீர்வாதத்தில் நம்பிக்கையும் துன்பத்தில் கலக்கமும் – (30:6-9) 

 

    4. ஜெபம் – இரண்டு விண்ணப்பங்களும் மூன்றுவிதமான பதில்களும் – (30:10-11) 

 

    5. எல்லா ஜெபங்களுக்கும் பிரதான முடிவு – (30:12) 

 

தாவீதுக்கு பல நெருக்கங்களும், அவருடைய ஜீவனுக்கு பல ஆபத்துக்களும் உண்டாயிற்று.  தாவீது கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்.  கர்த்தர் தாவீதை எல்லா இக்கட்டுக்களுக்கும் விலக்கி மீட்டுக்கொண்டார். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில்  தாவீது  முப்பதாவது சங்கீதத்தை கர்த்தரைத் துதிக்கும்  ஸ்தோத்திர சங்கீதமாக பாடுகிறார்.  தாவீது கேதுரு மரத்தினால் தனக்கு ஒரு மாளிகையைக் கட்டியிருக்கிறார்.  இந்த மாளிகையை தாவீது கர்த்தருடைய சமுகத்தில் கிரகப்பிரதிஷ்டைபண்ணியபோது, இந்த சங்கீதத்தை இயற்றிப் பாடுகிறார். 

 

கர்த்தர் தன்னை தம்முடைய கிருபையினால் மீட்டுக்கொண்ட  எல்லா சம்பவங்களுக்காகவும் தாவீது கர்த்தரைத் துதிக்கிறார்          (சங் 30:1-3). கர்த்தருடைய பரிசுத்தவான்களெல்லோரும் கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுமாறு தாவீது ஆலோசனை சொல்லுகிறார் (சங் 30:4,5).  தாவீது சுகமாய் வாழ்ந்திருந்தபோது தான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லையென்று சொன்னார்.  கர்த்தருடைய தயவே அவரைத் திடமாய் நிற்கப்பண்ணிற்று (சங் 30:6,7). தாவீதுக்கு  துன்பங்கள் வந்தபோது, அவர் கர்த்தரிடத்தில் ஏறெடுத்த ஜெபங்களை நினைவுகூருகிறார் (சங் 30:8-10). கர்த்தர் தாவீதின்           புலம்பலை ஆனந்த களிப்பாக மாற்றியிருக்கிறார். தாவீது கர்த்தரை என்றென்றைக்கும் துதிப்பதாக  வாக்குப்பண்ணுகிறார்  (சங் 30:11,12).

 

யூதர்கள் தங்களுக்காக புதிய வீட்டைக் கட்டும்போது அதை  கர்த்தருடைய சமுகத்தில் பிரதிஷ்டைபண்ணுவது வழக்கம்.  மோசேயின் பிரமாணத்தில்  புது வீட்டைக் கட்டி, அதை பிரதிஷ்டைபண்ணுவதுபற்றி இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது. “”அன்றியும் அதிபதிகள் ஜனங்களை நோக்கி: புதுவீட்டைக் கட்டி, அதைப் பிரதிஷ்டை பண்ணாதிருக்கிறவன் எவனோ, அவன் தன்  வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அதைப் பிரதிஷ்டை பண்ணவேண்டியதாகும்” (உபா 20:5). 

 

தாவீது தனக்கு ஒரு வீட்டைக் கட்டினார்.  தீருவின் ராஜாவாகிய ஈராம், தாவீதுக்கு வீடுகட்ட உதவிசெய்தார். அவர் தன்னுடைய  ஸ்தானாபதிகளையும், கேதுரு மரங்களையும்,  தச்சரையும், கல்தச்சரையும் தாவீதினிடத்தில் அனுப்பினார். அவர்கள் தாவீதுக்கு ஒரு வீட்டைக் கட்டினார்கள் (2சாமு 5:11). தாவீது  இந்த வீட்டிற்குள் பிரவேசித்தபோது,         அதை கர்த்தருடைய சமுகத்தில் பிரதிஷ்டைபண்ணினார்.  கிரகப்பிரவேசம் நடைபெற்றபோது தாவீது இந்த சங்கீதத்தைப் பாடினார். 

 

கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம்,  கர்த்தருடைய கிருபையினால்  நமக்காக  ஒரு வீட்டைக் கட்டலாம். அந்த வீட்டிற்குள் முதன்முதலாக பிரவேசிக்கும்போது  நாம்  அதை  கர்த்தருடைய சமுகத்தில்  அவருக்கு பிரதிஷ்டைபண்ணவேண்டும்.  கர்த்தருடைய பிள்ளைகளின் வீடு  ஒரு ஆசரிப்புக்கூடாரம்போல் இருக்கவேண்டும். கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கிற வீட்டில் கர்த்தருடைய பரிசுத்தமான பிரசன்னம் தங்கியிருக்கவேண்டும். அவருடைய ஆசீர்வாதம் நிரம்பியிருக்கவேண்டும்.  கர்த்தர்தாமே நம்மையும், நம்முடைய குடும்பத்தாரையும், நம்முடைய குடும்பத்தின் எல்லா காரியங்களையும் வழிநடத்தவேண்டும் என்று நாம் ஜெபிக்கவேண்டும். கர்த்தரே நம்முடைய குடும்பத்திற்குத் தலைவராயிருக்கவேண்டும். நாம் அவருடைய ஆலோசனைகளைக் கேட்டு, அவற்றிற்கு கீழ்ப்படிந்து, பயபக்தியாய் ஜீவிக்கவேண்டும். 

 

 

 

 

தாவீதின் ஜெபமும் துதியும் சங் 30 : 1-5

 

நான் உம்மைப் போற்றுவேன்        (சங் 30:1-3).

 

கர்த்தாவே, என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவொட்டாமல், நீர் என்னை கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன். என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர். கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்தி-ருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர்        (சங் 30:1-3).

 

தாவீதை அவருடைய சத்துருக்கள் சூழ்ந்துகொண்டார்கள். தாவீதுக்கு ஆபத்துக்களும் நெருக்கங்களும் உண்டாயிற்று.  தன்னுடைய கஷ்டமான சூழ்நிலையில்  தாவீது கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்.  சத்துருக்களால் தாவீதை மேற்கொள்ள முடியவில்லை. கர்த்தர் தாவீதைப் பாதுகாத்தார்.  சத்துருக்களின் ஆபத்திலிருந்து, கர்த்தர் தாமே  தாவீதை  கைதூக்கியெடுத்தார். கர்த்தர் செய்த உதவிகளை நினைவுகூர்ந்து தாவீது  கர்த்தரைப் போற்றுகிறார். 

 

தாவீது கர்த்தருடைய நாமத்தை உயர்த்துகிறார். கர்த்தருடைய நாமமே துதிகளுக்குப் பாத்திரமானது. அவருடைய நாமமே சர்வவல்லமையுள்ளது. கர்த்தருடைய நாமம் மாத்திரமே எல்லா நாமங்களுக்கும் மேலான உயர்ந்த நாமம். தாவீது கர்த்தருடைய நாமத்தைப் போற்றுகிறார். 

 

தாவீதுக்கு ஆபத்து உண்டானபோது அவர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார். கர்த்தர் தாவீதின் விண்ணப்பத்தைக் கேட்டு, அவரை  ஆபத்துக்களிலிருந்து மீட்டு இரட்சித்தார். கர்த்தர் தாவீதின் கூப்பிடுதலைக் கேட்டதோடு நின்றுவிடவில்லை. கர்த்தர் தாவீதைக்  குணமாக்கவும் செய்தார். தாவீதின் சரீரம் சத்துருக்களின் நிமித்தமாய் பலவீனமடைந்தது. சரீரத்தில் நடுக்கமுண்டாயிற்று. அவருடைய  மனதில் குழப்பமுண்டாயிற்று. அவருடைய காரியங்களெல்லாம் நோய்வாய்ப்பட்டுத் திடனற்றுப்போயிற்று.  

 

தாவீது தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் தாமே தாவீதைக் குணமாக்கினார். அவருடைய சிந்தையின் குழப்பம் நீங்கிற்று.  தெளிவு உண்டாயிற்று. அவருடைய சரீரத்தின் பலவீனம் நீங்கிற்று. கர்த்தர் தாமே தம்முடைய பலத்தினால் தாவீதை இடைக்கட்டிக் காத்துக்கொண்டார். தாவீதைக் குணப்படுத்தினார். 

 

தாவீதுக்கு மிகுந்த ஆபத்து  உண்டாயிற்று.  தாவீது தன்னுடைய மரணத்தின் எல்லைக்கே போய்விட்டார். அவருடைய ஆத்துமா  பாதாளத்தில்  இறங்கும் சூழ்நிலை உண்டாயிற்று. அவருடைய சரீரம்  குழியில் இறங்கும் நிலை வந்துவிட்டது.  இப்படிப்பட்ட  ஆபத்தான சூழ்நிலையில் கர்த்தர் தாவீதைப் பாதுகாத்தார்.  தாவீதின் ஆத்துமாவை  கர்த்தர் தாமே பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணினார்.  தாவீது குழியில் இறங்காதபடி  கர்த்தர் அவரை  உயிரோடே காத்தார். கர்த்தருடைய கிருபையினால் தாவீதுக்கு மரணம் உண்டாகவில்லை.  மரித்துப்போகவேண்டிய சூழ்நிலையில் கர்த்தர் அவரை மரணத்திலிருந்து மீட்டுக்கொண்டார்.

 

கர்த்தர் நம்முடைய மரண ஆபத்துக்களிலிருந்து  மீட்டுக்கொள்ளும்போது,  நாமும் தாவீதைப்போல  கர்த்தரைப் போற்றவேண்டும்.  நம்முடைய ஜீவன் கர்த்தர் நமக்கு கிருபையாகக் கொடுத்தது என்பதை  நினைவுகூரவேண்டும். இதன்பின்பு நம்முடைய  ஜீவியத்தை நமக்காக ஜீவிக்காமல், கர்த்தருக்காக ஜீவிக்கவேண்டும்.  கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்தவேண்டும்.  கர்த்தர் நமக்குக் கொடுக்கிற ஊழியங்களை உண்மையாயும், உத்தமமாயும் நிறைவேற்றவேண்டும்.  கர்த்தருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி, கர்த்தர் நமக்கு நியமித்திருக்கிற இலக்கை நோக்கி, விசுவாசத்தோடு முன்னேறிச் செல்லவேண்டும்.

 

கர்த்தர் தாவீதிற்கு அருளிய ஆசீர்வாதங்கள்

 

    1. கர்த்தர் என்னை கைதூக்கி எடுத்தார் (சங் 30:1).

 

    2. என்சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவொட்டாமல் காப்பார்

 

    3. தேவன், என்னை குணமாக்கினார் (சங் 30:2; சங் 103:3)

 

    4. பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணினார்  (சங் 30:3)

 

    5. என்னை உயிரோடே காத்தார்

 

    6. கர்த்தரின் தயவு எனக்கு நீடிய வாழ்வு (சங் 30:5).

 

    7. சாயங்காலத்தில் அழுகை தங்கும். விடியற்காலத்திலே களிப்புண்டாகும்

 

    8. தேவன் என்னைப் பராமரிக்கிறார். நான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லை     (சங் 30:6; சங் 1:3-4).

 

    9. சீயோன்  பர்வதத்தைப்போல்  பாதுகாப்பாக  நிலைத்திருப்பேன்        (சங் 125:1

 

    10. கர்த்தர், எனக்கு சகாயரும், பெலனுமாயிருப்பார் (சங் 30:7)

 

    11. கர்த்தர், என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினார் (சங் 30:11).

 

    12. என் இரட்டைக் களைந்து போட்டு மகிழ்ச்சியென்னும் கட்டினால் இடை கட்டினார் 

 

கர்த்தருடைய பரிசுத்தவான்கள் (சங் 30:4). 

 

கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவு கூருதலைக் கொண்டாடுங்கள்  (சங் 30:4). 

 

தாவீது கர்த்தரைப் போற்றுகிறார். அவரைத் துதிக்கிறார்.   கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுகிறார். தன்னோடு சேர்ந்து கர்த்தருடைய பரிசுத்தவான்களெல்லோரும் கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுமாறு  அவர்களையும் அழைக்கிறார். கர்த்தருடைய பரிசுத்தவான்களெல்லோரும் அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடவேண்டும்.  கர்த்தருடைய  பரிசுத்த நாமத்தைத் துதிக்கவேண்டும்.  கர்த்தருடைய பரிசுத்தம் நமக்கும், நம்முடைய சந்ததியாருக்கும் ஒரு நினைவுகூருதலாகயிருக்கவேண்டும். கர்த்தரைத் துதிக்கும்போது, அவருடைய பரிசுத்தத்தை நினைவுகூர்ந்து, அவரை இருதயத்தின் ஆழத்திலிருந்து துதிக்கவேண்டும்.  

 

கர்த்தருடைய பரிசுத்தத்தை நினைவுகூர்ந்து நாம் மகிழ்ந்து களிகூரவேண்டும். கர்த்தருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலை கொண்டாடுகிறவர்கள், அதை மனமகிழ்ச்சியோடு கொண்டாடவேண்டும். கர்த்தருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலை  கொண்டாடுகிறவர்கள், கர்த்தருடைய பரிசுத்தத்திற்கும் பங்காளிகளாகயிருக்க வேண்டும்.  நம்மிடத்தில்  கர்த்தருடைய பரிசுத்தம் காணப்படவேண்டும்.  நம்மிடத்தில் பரிசுத்தமில்லாமல், கர்த்தருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலை,  நம்மால் உண்மையான இருதயத்தோடு கொண்டாட முடியாது. இருதயத்தில் பரிசுத்தமில்லாமல் கர்த்தருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலை கொண்டாடுகிறவர்கள் மாய்மாலம் பண்ணுகிறவர்களாகவே இருப்பார்கள். 

 

 

கர்த்தருடைய கோபம் (சங் 30:5). 

 

அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும் (சங் 30:5). 

 

மனுஷர் எல்லோருமே தேவனுக்கு விரோதமாக பாவம் செய்திருக்கிறார்கள். எல்லோரும் பாவம் செய்து ஏகமாய்க் கெட்டுப்போயிருக்கிறார்கள். பாவிகளாகிய நாம் தேவனுடைய கோபாக்கினைக்கு  பாத்திரவான்களாயிருக்கிறோம்.  கர்த்தர் தம்முடைய நீதியின் பிரகாரம் நம்மை  தாராளமாய்த் தண்டிக்கலாம்.  கர்த்தருடைய கோபம் நம்மை பட்சித்துப்போடுவதற்கும் வாய்ப்புள்ளது. கர்த்தர் நம்மிடத்தில் கோபமாயிருக்கும்போது, அது அவருடைய  நீதியாகவே இருக்கும். நீதியுள்ள கர்த்தர் நம்மீது இரக்கமுள்ளவராகவும் இருக்கிறார்.  ஆகையினால்  அவருடைய கோபம் நிலைத்திராமல் ஒரு நிமிஷம் மாத்திரமே இருக்கிறது. கர்த்தருடைய தயவே நமக்கு  நீடிய வாழ்வு. 

 

நம்முடைய துக்கமும் கண்ணீரும் சாயங்காலத்தில் தங்கும் அழுகையைப்போன்றது. சாயங்காலத்திற்குப் பின்பு நிச்சயமாகவே விடியற்காலம் வரும். விடியற்காலத்திலே களிப்புண்டாகும். இரவில் இருள் நம்மை சூழ்ந்துகொள்ளலாம். இரவுக்குப் பின்பு பகற்பொழுது வரப்போகிறது.  பகற்பொழுதில் நமக்கு வெளிச்சமுண்டாயிருக்கும்.   எப்போதுமே சாயங்காலமாகவே இருந்துவிடாது. சாயங்காலத்திற்குப் பின்பு விடியற்காலம் நிச்சயமாய் வரும். 

 

இதுபோலவே கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு அழுகை நிரந்தரமாக நியமிக்கப்படவில்லை. நாம் இப்போது அழுகையின் காலத்திலிருக்கலாம்.  இது நமக்கு  நிரந்தரமான காலமல்ல.  கர்த்தர் நமக்கு களிப்பான காலத்தையும் வைத்திருக்கிறார். அழுகிற நாம் இனிமேல் கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாயிருப்போம். கர்த்தருடைய கோபம் ஒரு நிமிஷம் நம்மீது தங்கலாம். கர்த்தர் ஒருபோதும் நம்மீது  நித்தியமாய் கோபப்படுகிறவரல்ல.  அவர் தம்முடைய தயவை நமக்குக் காண்பிப்பார். கர்த்தருடைய தயவினால் நமக்கு  நீடிய வாழ்வு உண்டாகும். 

 

கர்த்தர் நம்மோடு தம்முடைய கிருபையினால் உடன்படிக்கை செய்திருக்கிறார். விடியற்காலத்தின் உடன்படிக்கையைப்போல,  கர்த்தருடைய உடன்படிக்கையும் மாறாத உடன்படிக்கையாயிருக்கும்.  கர்த்தர் தம்முடைய தயவை நமக்குக் காண்பிக்கும்போது நமக்கு  நீடிய வாழ்வு உண்டாயிருக்கும். நம்முடைய வாழ்வு முழுவதும் சகலவிதமான  நன்மையினால் நிரம்பியிருக்கும். கர்த்தர் தம்முடைய தயவினால் நம்முடைய ஆத்துமாவுக்கு ஜீவனைக் கொடுக்கிறார். இதுவே நம்முடைய  ஆவிக்குரிய ஜீவன்.  இதுவே நமக்கு நீடிய வாழ்வு.  இதையே நாம் நித்திய ஜீவன் என்று அழைக்கிறோம். கர்த்தர் தம்முடைய  தயவினால் நமக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறார். 

கர்த்தருடைய கோபம்

 

    1. கர்த்தருடைய கோபத்தை மூட்டலாம்.   (யாத் 4:14; எண்  11:10; எண் 12:9 கர்த்தருக்கு கோபம் உண்டாக்கலாம். (உபா 4:25;         உபா 9:18)

 

    2. கோபம் பற்றி எரியும் (யாத் 32:22; உபா 29:24).

 

    3. உக்கிரமான கோபமாயிருக்கும்  (எண் 25:4)

 

    4. கர்த்தர் என்றைக்கும் கோபம் கொண்டிரார் (சங் 103:8; சங் 145:8)

 

    5. அவருடைய கோபம் ஒரு நிமிஷம் (சங் 30:5; சங் 103:9)

 

தேவனுடைய கோபம் இவர்களுக்கு எதிராக இருந்தது, இருக்கிறது

 

    1. மோசே (யாத் 4:14; உபா 1:37; உபா 4:21)

 

    2. இஸ்ரவேல் (உபா 9:8; 2இராஜா 17:18)

 

    3. ஆரோன் (உபா 9:20)

 

    4. சாலொமோன் (1இராஜா 11:9)

 

    5. உசியா (2சாமு 6:7)

 

    6. பாவி (சங் 7:11)

 

தாவீதின் அனுபவங்கள் சங் 30 : 6-10

 

தாவீதின் வாழ்வு (சங் 30:6,7).

 

நான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லையென்று, என் வாழ்விலே சொன்னேன். கர்த்தாவே,உம்முடைய தயவினால் நீர் என் பர்வதத்தைத் திடமாய் நிற்கப்பண்ணியிருந்தீர்; உமது முகத்தை  நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்  (சங் 30:6,7). 

 

தாவீதின் ஜீவியத்தில் அவருக்கு பல்வேறுவிதமான அனுபவங்கள் உண்டாயிற்று.  அவையாவன : 1. தாவீதின் சுகவாழ்வு 2.  தாவீதுக்கு ஆபத்துக்களும் தாழ்வுகளும்  3.  கர்த்தர் தாவீதின் வாழ்வில் கொடுத்த ஆசீர்வாதம். தன்னுடைய அனுபவங்களெல்லாவற்றிலும், தன்னுடைய இருதயம் கர்த்தருக்கு முன்பாக எப்படியிருந்தது என்பதை தாவீது இங்கு விவரமாகச் சொல்லுகிறார். 

 

தாவீது  சுகமாய் வாழ்ந்திருந்தார். அவருடைய சரீரத்தில்  பூரண ஆரோக்கியம் உண்டாயிருந்தது.  தாவீதின் சத்துருக்கள் யாரும் அவரை நெருங்காதபடி, கர்த்தர் தாமே தாவீதுக்கு சமாதானத்தையும், ஓய்வையும் கொடுத்திருந்தார். தாவீது சுகமாய் வாழ்ந்திருந்தார். இப்படிப்பட்ட சுகவாழ்வின் காலத்தில், தான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லை என்று தாவீது  நம்பிக்கையோடு சொன்னார்.  தனக்கு  ஒரு ஆபத்தும் வராது என்று தாவீது நினைத்தார்.  தாவீது தன்னுடைய சுகவாழ்வு  ஒரு பர்வதத்தைப்போல திடமாய் நிற்கும்  என்று நினைத்தார். 

 

தாவீது சுகமாய் வாழ்ந்திருந்தபோது, “”நான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லை” என்று சொன்னார். கர்த்தர் தாமே தம்முடைய  தயவினால், தன்னுடைய பர்வதத்தைத் திடமாய் நிற்கப்பண்ணியிருந்ததாக தாவீது விசுவாசத்தோடு  சொன்னார்.  தாவீது  இந்தப் பிரபஞ்சத்தின் வாழ்க்கையை மாத்திரமே நோக்கிப் பார்த்தார்.  இந்தப் பிரபஞ்சம் நமக்கு நித்தியமானதல்ல.  நாம் பரலோகத்தின் பிள்ளைகள்.  நாம் இந்தப் பூமியில்  கொஞ்சகாலம் மாத்திரமே ஜீவிப்போம்.  அதன்பின்பு  பரலோகத்திலே கர்த்தருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்போம்.  கர்த்தருடைய பிள்ளைகளிடத்தில் இந்த நம்பிக்கை  உறுதியாயிருக்கவேண்டும். 

 

தாவீது இந்தப் பூமியில் சுகமாய் வாழ்ந்திருந்தபோது அவர் பரலோகத்தை நோக்கிப் பார்க்கவில்லை. இந்தப் பிரபஞ்சத்தின்  வாழ்க்கையே அவருக்கு பர்வதத்தைப்போல இருந்தது. இந்தப் பிரபஞ்சத்தில் அவர்  உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்கள் அனைத்தையும் பெற்றிருந்ததினால், கர்த்தர்  தம்முடைய தயவினால், தன்னுடைய பர்வதத்தை  திடமாய் நிற்கப்பண்ணியிருந்ததாகச் சொல்லுகிறார். பர்வதம் உயரமானதுதான்.  சமவெளியைவிட பர்வதம் உயர்வாகவேயிருக்கும்.  இந்தப் பூமியில் சாதாரண ஜனங்களைவிட, தாவீது ஒரு பர்வதத்தைப்போல உயரமாயிருக்கிறார். பர்வதம் ஒருபோதும் பரலோகமாகாது. பர்வதத்தின் உயரத்தையும் பரலோகத்தின் உயரத்தையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.  பர்வதமே நமக்குப் போதுமென்று                 நாம் நினைக்கக்கூடாது. பரலோகம்தான்  நம்முடைய ராஜ்யம்.  கர்த்தர் தம்முடைய தயவினால் நம்மை பரலோகத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும் என்றே நாம் ஜெபம்பண்ணவேண்டும்.

 

தாவீது  சிறிதுகாலம் தன்னுடைய சுகவாழ்வையும், தன்னுடைய பர்வதத்தையும் நம்பினார்.  கர்த்தர் தம்முடைய தயவினால்  தம்மை ஆசீர்வதித்திருப்பதாகச் சொன்னார்.  கர்த்தரோ  தம்முடைய முகத்தை சிறிதுகாலம்  தாவீதுக்கு மறைத்துக்கொண்டார். அப்போது  தாவீதின் இருதயம் கலங்கிற்று.  அவர் நம்பிய  பர்வதம் அசைந்தது.  தனக்கு தாழ்வு வந்தபோது, தாவீது தன்னுடைய கண்களை ஏறிட்டு,  பர்வதத்தைப் பார்ப்பதற்குப் பதிலாக, பரலோகத்தை நோக்கிப் பார்த்தார்.  

 

நாம் இந்தப் பூமியில் ஐசுவரியவான்களாகயிருந்தாலும்,  தரித்திரராயிருந்தாலும், கர்த்தருடைய வாசஸ்தலமாகிய பரலோகத்தையே நோக்கிப் பார்க்கவேண்டும்.  கர்த்தர் தம்முடைய முகத்தை  நமக்கு மறைக்கக்கூடாது. கர்த்தருடைய பரிசுத்த பிரசன்னம் நம்மோடு எப்போதும் கூடயிருக்கவேண்டும். 

 

தாவீதின் தாழ்வு   (சங் 30:8-10).

 

நான் குழியில் இறங்குகையில் என் இரத்தத்தால் என்ன லாபமுண்டு? புழுதி உம்மைத் துதித்து, உமது சத்தியத்தை அறிவிக்குமோ?  கர்த்தாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாயிரும்; கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராயிரும் என்று சொல்-; கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; கர்த்தரை நோக்கிக்கெஞ்சினேன்  (சங் 30:8-10).

 

 தாவீது சுகமாய் வாழ்ந்திருந்தபோது, அவருக்குத் திடீரென்று ஆபத்து உண்டாயிற்று. சுகமாய் வாழ்ந்தவர் தாழ்ந்துபோனார்.  அசைக்கப்படாத பர்வதத்தில் திடனாய் நின்றவர் இப்போது  அசைகிறார், தள்ளாடுகிறார். தனக்கு ஆபத்து வந்தவேளையிலே  தாவீது கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்.  தன்னுடைய  ஆபத்திலிருந்து  கர்த்தர் தாமே தன்னை மீட்டுக்கொள்ளவேண்டுமென்று தாவீது ஜெபிக்கிறார்.  தாவீதுக்கு இப்போது கர்த்தருடைய இரக்கம் தேவைப்படுகிறது.  இதுவரையிலும் தன்னுடைய பர்வதமே தனக்குப் போதுமென்று நினைத்தவர், இப்போது, கர்த்தர் தனக்கு சகாயராயிருக்கவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணுகிறார்.

 

தாவீது சுகமாய் வாழ்ந்திருந்தபோது, தான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லையென்று சொன்னார். கர்த்தர் தம்முடைய முகத்தை  தாவீதுக்கு மறைத்துக்கொண்டபோதோ, அவருடைய உள்ளம் கலங்கிற்று. அவருடைய சரீரமும், அவருடைய ஆவியும், அவருடைய ஆத்துமாவும் கலங்கிற்று.  

 

கர்த்தருடைய பிள்ளைகளுக்கு அவருடைய பரிசுத்த பிரசன்னமே மிகுந்த ஆறுதல். இதுவே கர்த்தருடைய பிள்ளைகளுக்கு மெய்யான ஆசீர்வாதம். கர்த்தர் தம்முடைய முகத்தை நமக்கு மறைத்துக்கொள்ளும்போது, தாவீதைப்போல நாமும் கலங்குவோம். நம்முடைய வாழ்க்கையில் நமக்கு பல பிரச்சனைகள் வரலாம்.  அவையெல்லாம் நமக்கு கலக்கத்தைக் கொடுக்கும்.  பிரச்சனைகளினால் வரும் கலக்கங்களைவிட, கர்த்தர் தம்முடைய முகத்தை  நமக்கு மறைத்துக்கொள்ளும்போது, நமக்கு வரும் கலக்கம் மிகவும் பெரிதாயிருக்கும்.  

 

சூரியன் அஸ்தமிக்கும்போது, இந்தப் பூமியில் இரவு தானாக வந்துவிடும்.  இரவில்  சந்திரனும் நட்சத்திரங்களும் இருக்கும்.  அவை இருந்தாலும், அவற்றினால் ஒரு பகல் பொழுதை உண்டுபண்ணமுடியாது.  பகல் பொழுதை உண்டுபண்ணுவதற்கு சூரியவெளிச்சம் தேவை.  கர்த்தருடைய பிள்ளைகளாகிய நம்முடைய  ஆத்துமாவில் சந்தோஷமும், சமாதானமும் வேண்டுமானால், நீதியின் சூரியனாகிய, கர்த்தருடைய பிரசன்னம் தேவை. கர்த்தர் தம்முடைய முகத்தை நமக்கு மறைக்கக்கூடாது என்று நாம் கர்த்தரிடத்தில் பணிவாய் விண்ணப்பம்பண்ணவேண்டும். 

 

கர்த்தர் தம்முடைய முகத்தை தாவீதுக்கு மறைத்துக்கொண்டபோது,  தாவீதின் பர்வதம்  அசைந்தது. இதுவரையிலும் தன்னுடைய பர்வதம் திடனாய் நிற்பதாக தாவீது நினைத்தார்.  தாவீது நம்பிய பர்வதம் இப்போது அசைகிறது.  அது நடுங்குகிறது.  குலுங்குகிறது.  தன்னுடைய பர்வதம் அசைந்த படியினால், இதுவரையிலும் பர்வதத்தையே பார்த்துக்கொண்டிருந்த தாவீது, இப்போது தன்னுடைய கண்களை பர்வதத்திற்கு  மேலாக ஏறிட்டுப் பார்க்கிறார். இதுவரையிலும் பர்வதத்தையே பார்த்தவர் இப்போது பரலோகத்தை நோக்கிப் பார்க்கிறார்.

 

நமக்கு கஷ்டங்களும், துன்பங்களும், வேதனைகளும்      வரும்போது நாம் கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணவேண்டும்.  ஜெபம்பண்ணவேண்டும்.  கர்த்தர் தம்முடைய முகத்தை தாவீதுக்கு மறைத்தபோது, அவர் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ண ஆரம்பித்துவிடுகிறார். இதுவரையிலும் தன்னுடைய  சுகவாழ்வில்,  தான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லை என்று தாவீது சொன்னார்.  இப்போது தாவீது அசைக்கப்பட்டிருக்கிறார். அவருடைய பர்வதம் அசைகிறது.  அந்தப் பர்வதத்தோடு சேர்ந்து  தாவீதும் அசைகிறார். 

 

தாவீதின் சுகவாழ்வு முடிந்துபோயிற்று. அவருடைய வாழ்வில் தாழ்வு உண்டாயிற்று. தான் அசைக்கப்படுவதில்லை என்று சொன்னவர், இப்போது  குழியில் இறங்குகிறவரைப் போல இருக்கிறார்.  தான்  குழியில் இறங்குகையில் தன்னுடைய இரத்தத்தினால் என்ன லாபம் உண்டு என்று யோசித்துப் பார்க்கிறார். நாம் உயிரோடிருக்கும்போதே கர்த்தருக்குப் பிரியமானவர்களாயும், பிரயோஜனமுள்ளவர்களாயும் இருக்கவேண்டும்.  நாம் மரித்தபின்பு நம்மால் கர்த்தருக்கு ஊழியம் செய்ய முடியாது. 

 

தான் மரிப்பதன் மூலமாய், கர்த்தருக்கு ஊழியம் செய்ய முடியுமென்றால், பவுல் தன்னுடைய மரணத்தை சந்தோஷமாய்  ஏற்றுக்கொள்கிறார். பவுல் பிலிப்பியருக்கு எழுதின நிருபத்தில் இதைப்பற்றி எழுதும்போது,   “”உங்கள் விசுவாசமாகிய  பலியின்மேலும்,  ஊழியத்தின் மேலும்,  நான் வார்க்கப்பட்டுப்போனாலும், நான் மகிழ்ந்து,  உங்கள் அனைவரோடுங்கூட  சந்தோஷப்படுவேன்” (பிலி 2:17) என்று  எழுதுகிறார். தான் ஜீவனோடிருந்தாலும், மரித்துப்போனாலும், கர்த்தருக்குப் பிரயோஜனமுள்ளவராக ஜீவிக்கவேண்டும், மரித்துப்போகவேண்டும் என்பதே பவுலின் விருப்பம். 

 

தாவீது தன்னுடைய ஜீவனை நினைத்துப் பார்க்கிறார். தான் மரித்துப்போனால் அதனால் ஒரு பிரயோஜனமுமில்லை என்பதை  தாவீது அறிந்திருக்கிறார். தாவீது வியாதிப்பட்டு மரித்துப்போனால் அதனால் யாருக்கும் ஒரு பிரயோஜனமுமில்லை.  கர்த்தருக்காக  ஊழியம் செய்து மரித்துப்போனால், அதுவே  தாவீதுக்குப் பிரயோஜனமாயிருக்கும். தாவீது தன்னுடைய மரணத்தை நினைவுகூர்ந்து, “”நான் குழியில் இறங்குகையில்  என் இரத்தத்தால்  என்ன லாபம் உண்டு” என்று கேட்கிறார்.

 

தாவீது மரிக்கும்போது அவருடைய  சரீரம்  மண்ணுக்குள் போகும்.  அது மண்ணாய்ப்போகும். தன்னுடைய மரணத்தை தாவீது நினைவுகூர்ந்து, புழுதி உம்மைத் துதித்து, உமது சத்தியத்தை அறிவிக்குமோ என்று கேட்கிறார்.  நாம் மரிக்கும்போது நம்முடைய ஆவி பரலோகத்திற்குப் போகும். நம்முடைய ஆவி பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறது.  அது பரலோகத்தில் போய் கர்த்தரைத் துதித்துக்கொண்டிருக்கும்.  நாம் மரிக்கும்போது நம்முடைய சரீரமோ மண்ணுக்குள் போகும். அது அங்கு புழுதியாகிவிடும். அந்தப் புழுதியினால் கர்த்தரைத் துதிக்க முடியாது.  கர்த்தருடைய சத்தியத்தை அறிவிக்கவும் முடியாது. 

 

தாவீது தன்னுடைய உண்மையான நிலமையை இப்போது நோக்கிப் பார்க்கிறார். தனக்கு வாழ்வு வந்தபோது, தான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லை என்று சொன்னார். தனக்கு தாழ்வு வந்தபோதோ, அவர் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார். “”கர்த்தாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாயிரும்; கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராயிரும் என்று சொல்-; கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; கர்த்தரை நோக்கிக்கெஞ்சினேன்” என்று தாவீது ஜெபிக்கிறார். கர்த்தர் நம்முடைய தாழ்விலும் நம்மை நினைக்கிறவர். 

 

தாவீதின் விண்ணப்பங்கள்

 

    1. கர்த்தாவே எனக்குச் செவிகொடும்

 

    2. என்மேல் இரக்கமாயிரும்

 

    3. எனக்குச் சகாயராயிரும்

 

புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர் சங் 30 : 11,12

 

சங் 30:11. என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம் பண்ணும்படியாக நீர் என் இரட்டைக்களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர்.

 

சங் 30:12. என் தேவனாகிய கர்த்தாவே,  உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.

 

தாவீது தான் நெருக்கப்பட்டபோது கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார். அவரை நோக்கிக் கெஞ்சுகிறார். கர்த்தரிடத்தில் புலம்புகிறார். கர்த்தர் தாவீதின் விண்ணப்பத்தைக்கேட்டு, அவரை அவருடைய சத்துருக்களிடமிருந்து மீட்டுக்கொள்கிறார். தாவீதின் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணுகிறார். தாவீதுக்குத் துன்பமும் நெருக்கமும் உண்டானபோது, அவர் இரட்டுடுத்தி கர்த்தருடைய சமுகத்திலே துக்கமாயிருக்கிறார்.  கர்த்தரோ அவருடைய இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சி என்னும் கட்டினால் அவரை இடைக்கட்டுகிறார். தாழ்விலிருந்த தாவீதை கர்த்தர் மறுபடியுமாய்  சுகவாழ்வுக்குக் கொண்டுவருகிறார். தாவீது இழந்துபோனதைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறார்.

 

தாவீது கர்த்தரை நோக்கிப் புலம்பினார். கர்த்தர் அவருடைய விண்ணப்பத்திற்குச் செவிகொடுத்து அவரை ஆசீர்வதிக்கிறார். அவருடைய புலம்பல் ஆனந்தக் களிப்பாய் மாறிற்று. தாவீது கர்த்தருடைய சமுகத்தில் நடனமாடி துதிக்கிறார். தாவீது கர்த்தரையே நம்பியிருக்கிறார். கர்த்தர் மறுபடியுமாய் தம்முடைய முகத்தை தாவீதுக்குக் காண்பிக்கிறார். இதுவே தாவீதுக்கு மாபெரும் சந்தோஷமாயிற்று. தாவீது  கர்த்தரிடத்தில், “”என் தேவனாகிய கர்த்தாவே உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்” என்று சொல்லுகிறார். 

 

தாவீது உலகப்பிரகாரமான ஆசீர்வாதத்தை ஒரு காலத்தில் நம்பினார். தன்னை யாரும் எப்போதும் அசைக்கமுடியாது என்றும் சொன்னார். ஆனால் அவருடைய வாழ்வு அசைந்தது.  அதோடு சேர்ந்து அவரும் அசைந்தார்.  அப்போது தாவீது கர்த்தரை நோக்கிப் பார்த்தார்.  கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைக் கண்டுபிடிப்பார்கள். அவரை நோக்கிப் பார்க்கிறவர்கள் அவரைத் தரிசிப்பார்கள். கர்த்தரைத் தரிசிக்கிறவர்கள் அவரை என்றென்றும் துதிப்பார்கள்.  இந்த உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களைவிட,  கர்த்தருடைய பிரசன்னமே மெய்யான ஆசீர்வாதம் என்பதைப் புரிந்துகொண்டு கர்த்தரைப் பயபக்தியோடு துதித்துப் பாடுவார்கள். 

 

தேவன் மனுஷனிடம் வெளிப்படுத்தி இருக்கிற தமது சுபாவங்கள்

 

    1.  கைதூக்கி எடுக்கிறவர் (சங் 30:1)

 

    2. குணமாக்குபவர் (சங் 30:2)

 

    3. காப்பாளர் (சங் 30:3)

 

    4. பரிசுத்தர் (சங் 30:4)

 

    5. தேற்றரவாளர் (சங் 30:5)

 

    6. கொடுப்பவர் (சங் 30:6)

 

    7. பாதுகாப்பவர் (சங் 30:7)

 

    8. சகாயர் (சங் 30:11)

 

மனுஷனுடைய பல்வேறு சுபாவங்கள்

 

    1. சத்துருக்கள் மேற்கொள்ளும்போது துன்பம் (சங் 30:1)

 

    2. சத்துருக்களிடமிருந்து விடுவித்ததினால் கர்த்தருக்கு ஆராதனை  (சங் 30:1,4,12)

 

    3. சொஸ்தமாக்கப்படுவதற்கு முன்பாக வியாதியும் வேதனையும்      (சங் 30:2-3)

 

    4. சுகமாதலும் ஆரோக்கியமும் (சங் 30:2-3)

 

    5. தேவனுடைய பரிசுத்தத்தையும் கிருபையையும் நினைவுகூருதல்         (சங் 30:4-7)

 

    6. வருத்தமும் அழுகையும் (சங் 30:5)

 

    7. இரட்சிப்பில் களிப்பு

 

    8. பராமரிப்பும் பாதுகாப்பும் (சங் 30:6)

 

    9. பலமும் விசுவாசமும் (சங் 30:7)

 

    10. கலக்கமும் வேதனையும்

 

    11.  விரக்தியும் ஜெபமும் (சங் 30:8-11)

 

    12.  பயமும் பிரதிபலிப்பும் (சங் 30:9)

 

    13. புலம்பல் ஆனந்தக்களிப்பாக மாறுதல் (சங் 30:11)

 

  14.  தேவனுடைய  கிருபைக்காகவும்  இரக்கத்திற்காகவும்  அவரை என்றென்றைக்கும் துதிப்பது (சங் 30:12)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *