அக்கினி ஜுவாலை- FLAME OF FIRE

 

அக்கினி ஜுவாலை- FLAME OF FIRE

பழைய ஏற்பாட்டில் “அக்கினிஜுவாலை” என்பதற்கான எபிரெய வார்த்தை  lappiyd, lappid – 3940 என்பதாகும்.

எரியும் அக்கினி பிளம்பு. கர்த்தர் ஆபிரகாமோடே உடன்படிக்கை பண்ணியபோது, “சூரியன் அஸ்தமித்து காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோகிற அக்கினிஜுவாலையும் தோன்றின” (ஆதி 15:17).

மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின்புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஒரேப் மட்டும் வந்தான். அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது (யாத் 3:1,2)

மனோவா போய், வெள்ளாட்டுக்குட்டியையும், போஜனபலியையும் கொண்டுவந்து, அதைக் கன்மலையின்மேல் கர்த்தருக்குச் செலுத்தினான்; அப்பொழுது மனோவாவும் அவன் மனைவியும் பார்த்துக் கொண்டிருக்கையில், அதிசயம் விளங்கினது. அக்கினிஜுவாலை பலி பீடத்திலிருந்து வானத்திற்கு நேராக எழும்புகையில், கர்த்தருடைய தூதனானவர் பலி பீடத்தின் ஜுவாலையிலே ஏறிப்போனார்; அதை மனோவாவும் அவன் மனைவியும் கண்டு, தரையிலே முகங்குப்புற விழுந்தார்கள் (நியா 13:19,20).

கர்த்தர் தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜுவாலைகளாகவும் செய்கிறார் (சங் 104:4). அக்கினிஜுவாலை துன்மார்க்கரை எரித்துப் போடும் (சங் 106.18). ஜுவாலையினால் விசாரிப்பார் (ஏசா 29.6) கர்த்தர் துன்மார்க்கரைப் பட்சிக்கிற அக்கினி

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய மூன்றுபேரையும் நேபுகாத்நேச்சார் எரியும் அக்கினிச்சூளையில் போடுமாறு கட்டளையிட்டான். ராஜாவின் கட்டளை கடுமையாயிருந்தபடியினாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்தபடியினாலும், அக்கினி ஜுவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக் கொண்டுபோன புருஷரைக் கொன்று போட்டது. ஆனால் இந்த மூன்று எபிரெய வாலிபருக்கும் அக்கினிஜுவாலையினால் ஒருசேதமும் உண்டாகவில்லை (தானி 3:22).

யாக்கோபு வம்சத்தார் அக்கினியும், யோசேப்பு வம்சத்தார் அக்கினி ஜுவாலையுமாயிருப்பார்கள்; ஏசா வம்சத்தாரோ வைக்கோல் துரும்பாயிருப்பார்கள்; அவர்கள் இவர்களைக் கொளுத்தி, ஏசாவின் வம்சத்தில் மீதியிராதபடி இவர்களைப் பட்சிப்பார்கள் என்று ஒபதியா கூறுகிறார் (ஒப 1.18). 

புதிய ஏற்பாட்டில் “அக்கினிஜுவாலை” என்பதற்கான கிரேக்க வார்த்தை pur -4442, flox – 5395 என்பதாகும்.

ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் மரித்து அடக்கம்பண்ணப்பட்ட சம்பவத்தை இயேசு கிறிஸ்து உவமையாகக் கூறினார். ஐசுவரியவான் பாதாளத்தில் வேதனைப்படும்போது அக்கினி ஜுவாலையில் வேதனைப்பட்டான் (லூக் 16:19-24). யோவான் கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானார். அப்போது கர்த்தருடைய தரிசனம் அவருக்குக் கிடைத்தது. கர்த்தருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப் போலிருந்தது (வெளி 1:14).

அக்கினிஜுவாலை தேவனுடைய பிரசன்னத்திற்கு அடையாளம். கிழக்கு தேசத்தில் உடன்படிக்கை ஏற்படுத்தும் போதும், திருமணச் சடங்குகளின் போதும் ஒரு விளக்கை ஏற்றி எரிய வைப்பது வழக்கம். உடன்படிக்கை மீறப்பட்டால் அல்லது உடைக்கப்பட்டால் அக்கினியானது குற்றம் செய்தவர்களை அழித்து விடும் என்பதற்கு அடையாளமாக இந்தப் பழக்கத்தை மேற்கொண்டு வருகிறார்கள். (மத் 25:1-13).

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page