40ஆம் சங்கீதம் விளக்கம்
(இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)
மேசியாவைப்பற்றிய ஏழாவது சங்கீதம்
பொருளடக்கம்
1. கர்த்தருக்காகக் காத்திருப்பதில் ஏழு ஆசீர்வாதங்கள் – (40:1-3)
2. பாக்கியவானின் மூன்று முக்கிய குணாதிசயங்கள் – (40:4)
3. தேவனுடைய இரண்டு நித்தியமான காரியங்கள் – (40:5)
4. மேசியாவின் ஏழு விதமான ஊழியங்கள் – (40:6-10)
5. பன்னிரெண்டு விண்ணப்பங்களும், தேவன் ஜெபத்திற்குப் பதிலளிப்பார் என்பதற்கு பன்னிரெண்டு காரணங்களும் – (40:11-17)
தாவீது தன்னுடைய பாவத்தினிமித்தமாய் அநேக பிரச்சனைகளை சந்தித்து வந்தார். அவருக்கு பாடுகளும், நெருக்கங்களும், வாதைகளும், வேதனைகளும் உண்டாயிற்று. கர்த்தர் தாவீதின்மேல் கோபமாயிருந்தார். தாவீது கர்த்தருடைய சமுகத்தில் தன்னுடைய மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்தும் தன்னை விடுதலையாக்குமாறு பணிவோடு விண்ணப்பம்பண்ணினார். கர்த்தர் தம்முடைய கிருபையினாலே தாவீதின் ஜெபத்தைக் கேட்டு, அவருடைய இக்கட்டுக்களிலிருந்து அவரை விடுதலை பண்ணியிருக்கிறார்.
தாவீது தன்னுடைய பிரச்சனைகளிலிருந்து விடுதலை பெற்றபோது, நாற்பதாவது சங்கீதத்தை எழுதியிருக்கிறார். தேவனுடைய நன்மையினாலும், அவருடைய வல்லமையினாலும் தாவீதுக்கு அநேக ஆபத்துக்களிலிருந்து விடுதலை உண்டாயிற்று. கர்த்தர் தன்னுடைய கூப்பிடுதலைக் கேட்டு, தன்னை பயங்கரமான குழியிலும், உளையான சேற்றிலுமிருந்து தன்னை தூக்கியெடுத்ததற்காக தாவீது கர்த்தரை நன்றியோடு துதிக்கிறார். கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுகிறார் (சங் 40:1-5).
தாவீது தேவனுடைய சத்தியத்தையும் நீதியையும் பற்றிச் சொல்லுகிறார். கிறிஸ்துவின் மூலமாய் நமக்கு உண்டாயிருக்கிற மீட்பின் கிரியையை தாவீது தெளிவுபடுத்துகிறார் (சங் 40:6-10). தாவீது தனக்காகவும் தன்னுடைய சிநேகிதருக்காகவும் கர்த்தரிடத்தில் உற்சாகமாய் ஜெபம்பண்ணுகிறார். தேவனுடைய கிருபையும் இரக்கமும் தங்களுக்கு கிடைக்கவேண்டுமென்று தாவீது கர்த்தருடைய சமுகத்தில் பயபக்தியாய் விண்ணப்பம்பண்ணுகிறார் (சங் 40:11-17).
கர்த்தருடைய அதிசயங்களும் யோசனைகளும் சங் 40 : 1-5
கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன் (சங் 40:1).
கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார் (சங் 40:1).
தாவீது மிகுந்த நெருக்கத்திலிருந்தார். அநேக ஆபத்துக்களும், வாதைகளும் அவரை சூழ்ந்திருந்தது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் தாவீது தன்னைத் தாழ்த்தி, கர்த்தருடைய சமுகத்தில் விசுவாசத்தோடு காத்திருந்தார். கர்த்தர் தாமே தன்னுடைய எல்லா பிரச்சனைகளிலிருந்தும், தம்முடைய கிருபையினால் தன்னை மீட்டு இரட்சிப்பார் என்று தாவீது விசுவாசத்தோடு காத்திருந்தார். தன்னுடைய காத்திருப்பைப்பற்றிச் சொல்லும்போது, “”கர்த்தருக்காக பொறுமையோடு காத்திருந்தேன்” என்று தாவீது சொல்லுகிறார்.
கர்த்தரிடமிருந்து மாத்திரமே தனக்கு உதவி வரும் என்பது தாவீதுக்குத் தெரியும். தாவீது வேறு யாரிடமிருந்தும் உதவியை எதிர்பார்க்கவில்லை. கர்த்தருடைய கரமே தாவீதை அடித்தது. அந்தக் கரமே தன்னை அணைக்கும் என்று தாவீது நம்புகிறார். “”கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள். நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார். நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்” (ஓசி 6:1) என்று ஓசியா தீர்க்கதரிசி கர்த்தருடைய அன்பைப்பற்றிச் சொல்லுகிறார். கர்த்தர் நம்முடைய காயங்களைக் கட்டவில்லையென்றால், நம்முடைய காயங்கள் ஆறுவதற்கு வாய்ப்பில்லை.
தாவீதுக்கு உடனே விடுதலை வந்துவிடவில்லை. கர்த்தர் தம்முடைய கரத்தினால் தாவீதை அடித்தபோது, தாவீது சோர்ந்துபோய்விட்டார். கர்த்தருடைய சமுகத்தில் தன்னுடைய மீறுதல்களெல்லாவற்றிலுமிருந்து தன்னை விடுதலையாக்குமாறு தாவீது பணிவோடு விண்ணப்பம்பண்ணினார். கர்த்தர் தாவீதின் ஜெபத்தைக் கேட்டார். அவர் ஜெபம்பண்ணிய பிரகாரமாக, கர்த்தர் தாவீதுக்கு உடனடியாக அவருடைய பிரச்சனைகளிலிருந்து விடுதலை கொடுக்கவில்லை. ஆனாலும் கர்த்தர் தன்னை விடுவிப்பார் என்று தாவீது நம்பினார். தாவீதின் இருதயத்தில் கர்த்தரைக்குறித்து ஒரு சந்தேகமும் உண்டாகவில்லை.
தன்னுடைய நெருக்கங்களிலிருந்து கர்த்தர் தன்னை விடுவிப்பார் என்னும் விசுவாசம் தாவீதின் உள்ளத்தில் உறுதியாயிருந்தது. உடனே விடுதலை வராவிட்டாலும், அவர் விசுவாசத்தில் சோர்ந்துபோகவில்லை. தாவீது கர்த்தர்மீது தொடர்ந்து விசுவாசம் வைத்தார். தன்னுடைய விடுதலைக்காக கர்த்தரை நம்பினார். தன்னுடைய விடுதலைக்காக தொடர்ந்து ஜெபம்பண்ணினார். தனக்கு விடுதலை வரும் வரையிலும் தாவீது விசுவாசத்தோடு தொடர்ந்து ஜெபம்பண்ணிக்கொண்டே இருந்தார்.
தாவீதுக்கு ஏற்பட்ட அனுபவம் இயேசுகிறிஸ்துவுக்கும் ஏற்பட்டது. கெத்சமனே தோட்டத்திலும், கல்வாரி சிலுவையிலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு மிகுந்த வேதனையும், வியாகுலமும் உண்டாயிற்று. வேதனை தொடர்ந்தது. அந்த வேதனை பயங்கரமான குழியைப்போலவும், உளையான சேற்றைப்போலவும் இருந்தது. இயேசுகிறிஸ்துவின் ஆத்துமா கலங்கிற்று. அவருக்கு மிகுந்த வருத்தமுண்டாயிற்று. அப்போது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து “”பிதாவே உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தும்” என்று பிதாவினிடத்தில் ஜெபம்பண்ணினார்.
இயேசுகிறிஸ்துவுக்கு பாடுகளும், வேதனைகளும், வியாகுலங்களும் உண்டானபோதிலும், பிதாவுக்கும் கிறிஸ்துவுக்கும் இடையிலுள்ள ஐக்கியம் முறிந்துபோகவில்லை. இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் ஜெபித்தபோது, “”என் தேவனே, என் தேவனே” என்று சொல்லியே ஜெபித்தார். குமாரனாகிய கிறிஸ்து பிதாவுக்காக பொறுமையோடு காத்திருந்தார்.
தாவீது கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திருந்தார். தமக்காகக் காத்திருந்த தாவீதை கர்த்தர் வெட்கப்பட்டு போகவைத்துவிடவில்லை. கர்த்தர் தாவீதினிடமாக சாய்ந்து, அவருடைய கூப்பிடுதலைக் கேட்டார். தாவீது நெருக்கத்திலிருந்தபோதிலும், கர்த்தருடைய நன்மையை ருசித்துப் பார்க்கும் சிலாக்கியம் அவருக்கு உண்டாயிற்று. கர்த்தருடைய சமுகத்தில் தாவீதுக்கு ஆறுதலுண்டாயிற்று.
கர்த்தர் தன்னுடைய கூப்பிடுதலைக் கேட்டதற்காக தாவீது கர்த்தரை மகிமைப்படுத்துகிறார். தாவீதின் வார்த்தைகள் அவருடைய ஆத்துமாவுக்கும், இந்த சங்கீதத்தைப் பாடுகிற பரிசுத்தவான்கள் எல்லோருடைய ஆத்துமாவுக்கும் உற்சாகத்தைக் கொடுக்கிறது. நாம் கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திருக்கும்போது, அவர் நம்மிடமாக சாய்ந்து, நம்முடைய கூப்பிடுதலைக் கேட்பார்.
கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருப்பதினால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்
1. அவர் என்னிடமாய்ச் சாய்ந்து இருக்கிறார் (சங் 40:1).
2. என் கூப்பிடுதலைக் கேட்டார்.
3. அவர் பயங்கரமான குழியிலிருந்து தூக்கியெடுத்தார் (சங் 40:2).
4. உளையான சேற்றிலுமிருந்து எடுத்தார்.
5. என் கால்களைக் கன்மலையின் மேல் நிறுத்தினார்.
6. என் அடிகளை உறுதிப்படுத்தினார்.
7. தேவனத் துதிக்கும் புதுப்பாட்டை என் வாயிலே கொடுத்தார் (சங் 40:3).
என்னைத் தூக்கியெடுத்தார் (சங் 40:2)
பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுருமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி, (சங் 40:2)
பாவத்தினிமித்தமாய் தாவீதின் இருதயம் கலங்கிற்று. அவருடைய ஆத்துமா வேதனையடைந்தது. அவர் பயங்கரமான குழியிலும், உளையான சேற்றிலும் சிக்கி தவிப்பதுபோல தவித்துக்கொண்டிருந்தார். ஆவிக்குரிய காரியங்களில் நாம் கர்த்தரோடு சமாதானமாயிருக்கவேண்டும். கர்த்தருக்குக் கீழ்ப்படியாமல் அவருக்கு விரோதமாக முரட்டாட்டம் செய்தால், நமக்கு அமைதியும் இருக்காது. சமாதானமும் இருக்காது. நாம் மிகுந்த குழப்பத்திலிருப்போம். நாம் கர்த்தருக்காக காத்திருக்கும்போது, இப்படிப்பட்ட பரிதாபமான நிலமையிலிருந்து, கர்த்தர் தாமே தம்முடைய கிருபையினால் நம்மை மீட்டுக்கொள்வார்.
தாவீதைப்போலவே, பாவம் செய்து, பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலும் சிக்கிக்கொண்டிருந்த அநேகரை கர்த்தர் தூக்கியெடுத்திருக்கிறார். பாவத்தின் குழி பயங்கரமான குழி. பாவத்தின் சம்பளம் மரணம். நாம் பாவம் செய்யும்போது மரணத்தின் வாசலுக்கே போய்விடுகிறோம். கர்த்தர் நம்மை தம்முடைய கிருபையினால் இரட்சிக்கவில்லையென்றால், நமக்கு நிச்சயம் மரணமுண்டாகும்.
நாம் கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது, கர்த்தர் நம்முடைய கூப்பிடுதல்களைக் கேட்கிறார். தம்முடைய கிருபையையும் இரக்கத்தையும் காண்பிக்கிறார். நம்முடைய கால்களை கன்மலையின்மேல் நிறுத்தி, நம்முடைய அடிகளை உறுதிப்படுத்துகிறார். நம்முடைய கால்கள் வழுவாமல் உறுதியாய் நிலைத்து நிற்கும்போது, கர்த்தருடைய பூரண இரக்கமும் கிருபையும் வெளிப்படுகிறது. கர்த்தர் தாமே தம்முடைய கிருபையினால், பாதாளத்தின் வாசலில் சிக்கி தவித்துக்கொண்டிருந்த நம்மை, தூக்கியெடுத்து, பரலோகத்தின் வாசலில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். இனிமேல் நம்மிடத்தில் நரகத்தின் பயங்கள் இருக்காது. பரலோகத்தின் சந்தோஷம் மாத்திரமே இருக்கும்.
தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டு (சங் 40:3).
நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக்கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள் (சங் 40:3).
கர்த்தர் தாவீதை குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவருடைய கால்களை கன்மலையின்மேல் நிறுத்தி, அவருடைய அடிகளை உறுதிப்படுத்தியிருக்கிறார். மேலும் தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை கர்த்தர் தாமே தாவீதின் வாயிலே கொடுக்கிறார். தாவீதின் இருதயம் கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருகிறது. கர்த்தர் தன்னை குழியிலிருந்து தூக்கியெடுத்து, கன்மலையின்மேல் நிறுத்தியிருப்பதற்காக, தாவீது கர்த்தரை நன்றியுள்ள இருதயத்தோடு துதிக்கிறார். கர்த்தரைத் துதிக்கும் புதுப்பாட்டுக்களைப் பாடுகிறார்.
பயங்கரமான குழியிலும், உளையான சேற்றிலும் சிக்கிக்கொண்டிருந்த தாவீதை, கர்த்தர் தூக்கியெடுத்து, புதிய உலகத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார். அங்கே அவருடைய வாயில் புதுப்பாட்டைக் கொடுக்கிறார். தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை தாவீது பாடுகிறார்.
தாவீதைப்போலவே ஏராளமான ஜனங்கள் கர்த்தரிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். தாவீதின் அனுபவம் கர்த்தரை நம்புகிற பிள்ளைகளுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். கர்த்தர் நம்மை கைவிடமாட்டார் என்றும், அவர் நம்மையும் குழியிலிருந்து தூக்கியெடுத்து, நம்முடைய கால்களை கன்மலையின்மேல் நிறுத்துவார் என்றும் நமக்குள் நிச்சயமான விசுவாசம் உண்டாகும். தாவீதின் அனுபவத்தைப் பார்த்து, அவர் தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை பாடுவதைக் கேட்டு, அநேகர் பயப்படுவார்கள். அவர்களும் கர்த்தரை நம்புவார்கள். அவர்கள் பயத்துடனே கர்த்தரை துதிப்பார்கள்.
நாம் கர்த்தருடைய சமுகத்தில் வரும்போது பயபக்தியோடு வரவேண்டும். பயபக்தியும், விசுவாசமுமே நம்முடைய நம்பிக்கைக்கு அஸ்திபாரம். நாம் கர்த்தரிடத்தில் பயபக்தியோடு வந்தாலும், அவருடைய சமுகத்தில் நாம் தைரியமாகவும், நிச்சயத்தோடும் வரலாம். கர்த்தர் நமக்கும் உதவிசெய்வார் என்னும் நிச்சயம் நம்முடைய இருதயத்தை உற்சாகப்படுத்தும். கர்த்தரை நம்பும் நம்பிக்கை நமக்குள் வலுவாகயிருக்கும். அவிசுவாசம் நம்மைவிட்டு நீங்கிப்போகும். கர்த்தர் தாவீதுக்கு உதவிசெய்ததுபோல நமக்கும் உதவிசெய்வார் என்னும் நம்பிக்கை நமக்குள் உண்டாகும்.
கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான் (சங் 40:4).
அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல், கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான் (சங் 40:4).
தாவீது கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைத்திருக்கிறார். தன்னைப்போலவே மற்றவர்களும் கர்த்தரை நம்பவேண்டுமென்று ஆலோசனை சொல்லுகிறார். கர்த்தரை தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவானாயிருப்பான். இப்படிப்பட்டவன் அகங்காரிகளையும், பொய்யை சார்ந்திருக்கிறவர்களையும் நோக்கிப் பார்க்கமாட்டான். கர்த்தரை மாத்திரமே நோக்கிப் பார்ப்பான். இவன் மனுஷரை நம்பமாட்டான். கர்த்தரை மாத்திரமே நம்புவான்.
இந்த உலகத்தில் அநேகர் தங்களைப் பற்றி பெருமையாகப்பேசி, தங்களை நம்புமாறு பிறரிடம் சொல்லுகிறார்கள். இவர்கள் மாய்மாலக்காரர்கள். இவர்களிடத்தில் உண்மையில்லை. பொய்பேசுகிறார்கள். இவர்களுடைய வார்த்தைகளை நம்பி இவர்களிடத்தில் போனால், இவர்கள் நம்மை பாதியிலேயே கைவிட்டுவிடுவார்கள். நம்மை தேவனிடமிருந்து பிரிப்பதற்கு இப்படிப்பட்ட அகங்காரிகள் சூழ்ச்சி செய்கிறார்கள். சாதுரிய வார்த்தைகளைப்பேசி நம்மை மயக்கப்பார்க்கிறார்கள். நாம் இப்படிப்பட்டவர்களைக் குறித்து மிகுந்த எச்சரிப்போடிருக்கவேண்டும்.
நம்முடைய நம்பிக்கை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவில் உறுதியாயிருக்கவேண்டும். நாம் இயேசுகிறிஸ்துவிலும், அவருடைய நீதியிலும் மாத்திரமே நம்பிக்கை வைத்திருக்கவேண்டும். கர்த்தரை நம்புகிறவர்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போகமாட்டார்கள். தம்மிடத்தில் நம்பி வருகிற எல்லோரையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, தம்முடைய கிருபையினால் ஏற்றுக்கொண்டு, போஷித்துப் பராமரிப்பார். பாதுகாப்பார். நம்முடைய கர்த்தர் நம்மை முற்றும் முடிய கரம்பிடித்து வழிநடத்துவார்.
பாக்கியவான்களின் சுபாவங்கள்
1. கர்த்தர் மேல் நம்பிக்கைவைத்திருப்பார்கள்
2. அகங்காரிகளைச் சார்ந்திருக்க மாட்டார்கள்.
3. பொய்யர்களைச் சார்ந்திருக்க மாட்டார்கள்.
எண்ணிக்கைக்கு மேலானவைகள் (சங் 40:5).
என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச்சொல்-முடியாது; நான் அவைகளைச்சொல்- அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள் (சங் 40:5).
தாவீது கர்த்தருடைய சமுகத்தில் நன்றியுள்ள இருதயத்தோடு நின்றுகொண்டிருக்கிறார். அவருடைய இருதயம் கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருகிறது. தேவன் தனக்குக் காண்பித்த கிருபைகளையும், இரக்கங்களையும் தாவீது ஒவ்வொன்றாகத் தியானித்துப் பார்க்கிறார். கர்த்தர் தாவீதுக்கு அநேக நன்மைகளைச் செய்திருக்கிறார். அவையெல்லாவற்றிற்காகவும் தாவீது கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறார். ஸ்தோத்திர பலிகளை ஏறெடுக்கிறார்.
“”என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தம் செய்த உம்முடைய அதிசயங்களும், உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது” என்று சொல்லி தாவீது கர்த்தரைத் துதிக்கிறார். கர்த்தர் தாவீதுக்கும், இன்னும் அநேகருக்கும் அநேக நன்மைகளைச் செய்திருக்கிறார். அவற்றை ஒருவராலும் கர்த்தரிடத்தில் விவரித்துச் சொல்ல முடியாது. அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்.
கர்த்தருடைய அதிசயங்களையும், யோசனைகளையும் மனுஷரால் விவரித்துச் சொல்லமுடியாது. கர்த்தருடைய காரியங்களெல்லாம் அவருடைய அனந்த ஞானத்திலிருந்து வருகிறது. கர்த்தருடைய திட்டங்களெல்லாம் அவருடைய அநாதி காலத்தில், அவருடைய அநாதி ஞானத்தின் பிரகாரமாய் திட்டமிடப்பட்டிருக்கிறது. தேவனுடைய திட்டத்திலும் செய்கையிலும் அவருடைய நித்திய அன்பு வெளிப்படுகிறது.
அப்போஸ்தலர் பவுல் உலகத்தோற்றத்திற்கு முன்னே, தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தைப் பேசினார் (1கொரி 2:7).
கர்த்தர் தம்முடைய அன்பை எரேமியா தீர்க்கதரிசியின் மூலமாய் இவ்வாறு வெளிப்படுத்திச் சொல்லுகிறார். “”பூர்வகாலமுதல் கர்த்தர் எனக்குத் தரிசனையானார் என்பாய்; ஆம் அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்” (எரே 31:3). “”நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே” (எரே 29:11).
கர்த்தருடைய அன்பின் ஆழத்தையும், அகலத்தையும் நீளத்தையும் நம்மால் அளவிட முடியாது. கர்த்தருடைய அன்பு நாம் புரிந்துகொள்ள முடியாத இரகசியமாகவே இருக்கிறது. கர்த்தர் தாமே நமக்கு இந்த இரகசியத்தை வெளிப்படுத்திக் காண்பிக்கவேண்டும். அப்போதுதான் கர்த்தருடைய யோசனைகளையும் அதிசயங்களையும் நம்மால் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். அதன் பின்புதான் நம்மால் அதை சரியாக விவரித்துச் சொல்லமுடியும். கர்த்தருடைய அன்புக்கு அளவில்லை. நாம் இதுவரையிலும் அவருடைய அன்பின் ஒரு பகுதியை மாத்திரமே அனுபவித்திருக்கிறோம். அவருடைய அன்பில் நாம் இன்னும் அனுவிக்கவேண்டியது ஏராளமாயிருக்கிறது. கர்த்தர் தம்முடைய கிருபையினாலும், அநாதி சிநேகத்தினாலும் தம்முடைய அன்பை நமக்கு வெளிப்படுத்திக்கொண்டேயிருக்கிறார்.
தேவனுடைய அற்புதமான காரியங்கள்
1. தேவனுடைய அநேக அதிசயங்கள்
2. தேவனுடைய அநேக யோசனைகள்.
தேவனுடைய நீதியும் சத்தியமும் சங் 40 : 6-10
என் செவிகளைத் திறந்தீர் (சங் 40:6).
ப-யையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல், என் செவிகளைத் திறந்தீர்; சர்வாங்க தகனப-யையும் பாவநிவாரணப-யையும் நீர் கேட்கவில்லை (சங் 40:6).
தேவனுடைய அதிசயங்களையும் யோசனைகளையும் பார்த்து தாவீது ஆச்சரியப்படுகிறார். கர்த்தர் தாவீதுக்கும், அவருடைய ஜனங்களுக்கும் அநேக நன்மைகளைச் செய்திருக்கிறார். அவையெல்லாவற்றையும் தாவீதால் விவரித்துச் சொல்ல முடியவில்லை. அவை எண்ணிகைக்கு மேலானவையாயிருக்கிறது.
நாம் கர்த்தருடைய நன்மைகளை எவ்வளவுதான் விவரித்துச் சொன்னாலும், இன்னும் சொல்ல வேண்டிய நன்மைகள் ஏராளமாயிருக்கும். கர்த்தருடைய நன்மையின் அஸ்திபாரத்தை நம்மால் ஆராய்ந்து பார்க்க முடியாது. நம்முடைய கர்த்தரே அதிசயங்களின் ஊற்றாகயிருக்கிறார். கிருபையும் இரக்கமும் அவருடைய அன்பின் அஸ்திபாரத்திலிருந்து புறப்பட்டு வருகிறது.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் தம்முடைய அன்பினால் நம்மை இரட்சித்து மீட்டுக்கொள்கிறார். இந்த சங்கீதப்பகுதியை எபிரெயருக்கு நிருபம் எழுதின ஆசிரியர் மேற்கோளாக எழுதியிருக்கிறார் (எபி 10:5-7). இந்த வாக்கியம் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும், அவர் நமக்காகச் செய்த நன்மைகளையும் விவரித்துச் சொல்லுகிறது.
பழைய ஏற்பாட்டுக்காலத்தில் மோசேயின் பிரமாணத்தின்படி பாவநிவாரண பலி செலுத்தப்பட்டது. நம்முடைய பாவங்களை முற்றிலுமாக நீக்குவதற்கு அந்தபலி போதுமானதாயில்லை. நாம் தேவனோடு சமாதானமாகயிருப்பதற்கும், தேவனிடத்தில் சந்தோஷமாயிருப்பதற்கும் பழைய ஏற்பாட்டுக்காலத்தில் செலுத்தப்பட்ட சடங்காச்சார பலி போதுமானதல்ல. கர்த்தருக்கோ சர்வாங்க தகனபலிகளும் பாவநிவாரண பலிகளும் அவருக்குப் பிரியமானதல்ல.
இரத்தம் சிந்துதலில்லாமல் பாவமன்னிப்பு இல்லை. ஆகையினால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு செலுத்தும்படிக்கு ஏதோ ஒன்று அவசியம் வேண்டியதாயிருக்கிறது (எபி 8:3). அது பழைய ஏற்பாட்டுக்காலத்தில் செலுத்தப்பட்ட, சடங்காச்சாரமான பாவநிவாரண பலியல்ல. தாவீது இந்த சங்கீதத்தை எழுதியபோது, மோசேயின் பிரமாணம் நடைமுறையில் இருந்தது. அந்தக்காலத்திலேயே கர்த்தர் பலியையும் காணிக்கையையும் விரும்பவில்லையென்றும், சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் அவர் கேட்கவில்லையென்றும் தாவீது சொல்லுகிறார்.
பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பாவநிவாரண பலியாக காளை, வெள்ளாட்டுக்கடா ஆகியவற்றின் இரத்தம் சிந்தப்பட்டது. மனுஷருடைய பாவத்தை நீக்கவும், மனுஷனுக்கு குற்றநிவாரணம் உண்டாக்கவும் பழைய ஏற்பாட்டுக்காலத்து பலிகள் தேவனுடைய நீதிக்கு முன்பாக குறைவுள்ளதாயிருந்தது. மனுஷனுடைய ஜீவன் உன்னதமானது. மனுஷனுடைய ஆத்துமா உயர்ந்தது. மனுஷனோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது வெள்ளாட்டுக்கடாவின் ஜீவன் மிகவும் தாழ்ந்தது. ஆட்டைப்பார்க்கிலும் மனுஷனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான் (மத் 12:12). மனுஷனையும் ஆட்டையும் சரிசமமாக கணிக்க முடியாது. இரண்டிற்கும் வித்தியாசமுண்டு.
தேவனுடைய ஆளுகையில் நீதியுள்ளது. அவர் சகலத்தையும் தம்முடைய நீதியின் பிரகாரமாக ஆளுகை செய்கிறார். மனுஷன் விசேஷித்தவன். ஆனால் அவனோ பாவம் செய்து தன்னுடைய மகிமையை இழந்துபோயிருக்கிறான். அவன் இழந்துபோன மகிமையை திரும்பப் பெறுவதற்கு, ஆட்டின் இரத்தம் தேவனுடைய நீதியின் பிரகாரம் போதுமானதாயில்லை. வெள்ளாட்டுக்கடாவின் இரத்தம் நம்முடைய பாவங்களை சுத்தமாகக் கழுவாது. அது நம்மை விட்டு பாவத்தின் பயங்கரத்தை நீக்காது. பாவத்தின் வல்லமையிலிருந்து வெள்ளாட்டுக்கடாவின் இரத்தம் நம்மை மீட்காது.
“”அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது; அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் ப-களும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தக்கூடாதவைகளாம். இவைகள் சீர்திருத்தல் உண்டாகும் காலம்வரைக்கும் நடந்தேறும்படி கட்டளையிடப்பட்ட போஜனபானங்களும், பலவித ஸ்நானங்களும், சரீரத்திற்கேற்ற சடங்குகளுமேயல்லாமல் வேறல்ல” (எபி 9:9,10).
“”இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான ப-களினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது. பூரணப்படுத்துமானால், ஆராதனை செய்கிறவர்கள் ஒருதரம் சுத்தமாக்கப்பட்டபின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால், அந்தப் ப-களைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா? அப்படி நிறுத்தப்படாதபடியால், பாவங்கள் உண்டென்று அவைகளினாலே வருஷந்தோறும் நினைவுகூருதல் உண்டாயிருக்கிறது. அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே” (எபி 10:1-4).
பழைய ஏற்பாட்டு பலிகளெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்கு அடையாளமாய் நியமிக்கப்பட்டிருக்கிறது. புதிய ஏற்பாட்டில் பிரத்தியட்சமாய் வரப்போகிற காரியங்களுக்கு, பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிற காரியங்கள் நிழலாயும், அடையாளமாயும் இருக்கிறது. இனிமேல் நல்ல காரியங்கள் வரப்போகிறது என்பதற்கு பழைய ஏற்பாட்டுக்காரியங்கள் நமக்குச் சொல்லப்பட்ட அடையாளமாகும்.
பழைய ஏற்பாட்டில் கர்த்தருடைய ஜனங்கள் தேவனுடைய பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள். புதிய ஏற்பாட்டிலோ நாம் சுவிசேஷத்தில் விசுவாசம் வைத்திருக்கிறோம். நம்முடைய இரட்சகராக கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, அவரிடத்தில் நம்முடைய விசுவாசத்தை வைக்கிறோம். பழைய ஏற்பாட்டுக்காலத்தில் இரட்சிப்பின் சத்தியம் இருந்தாலும், புதிய ஏற்பாட்டுக்காலத்தில்தான் நம்முடைய ஆத்துமாவுக்கு பூரண இரட்சிப்பு உண்டாயிருக்கிறது.
புதிய ஏற்பாட்டில்தான் இயேசுகிறிஸ்து வருகிறார். கிறிஸ்துவானவர் பிதாவை மகிமைப்படுத்துகிறார். இயேசுகிறிஸ்து தம்முடைய கிருபையை மனுக்குலத்திற்கு வெளிப்படுத்துகிறார். தேவனுடைய கிருபையை பழைய ஏற்பாட்டுக்காலத்து பலிகளினால் சம்பாதிக்க முடியாது. கிருபை இலவசமாகக் கொடுக்கப்படுகிறது. தேவன் தம்முடைய அன்பினால் நமக்கு தமது கிருபையை வெளிப்படுத்துகிறார்.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நமக்கும், பிதாவாகிய தேவனுக்கும் இடையே மத்தியஸ்தராக ஊழியம் செய்கிறார். தாவீதும் இதைப்பற்றி முன்னறிவிக்கும்போது, “”என் செவிகளைத் திறந்தீர்” என்று சொல்லுகிறார்.
“”இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத்தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார். கர்த்தராகிய ஆண்டவர் என் செவியை திறந்தார்; நான் எதிர்க்கவுமில்லை, நான் பின்வாங்கவுமில்லை. அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை” (ஏசா 50:4-6).
பிதாவாகிய தேவன், குமாரனாகிய இயேசுகிறிஸ்துவுக்கு மத்தியஸ்தரின் ஊழியத்தை ஒப்புக்கொடுத்திருக்கிறார். “”என் செவிகளைத் திறந்தீர்” என்று தாவீது சொல்லுகிற வாக்கியம் பழைய ஏற்பாட்டுக் காலத்திலிருந்த ஒரு சம்பிரதாயத்தை விவரிக்கிறது. பழைய ஏற்பாட்டுக்காலத்தில் வேலைக்காரனுடைய காதை கம்பியினால் குத்தும் வழக்கம் இருந்தது.
“”அவன் எஜமான் அவனை நியாயாதிபதிகளிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், அவனைக் கதவின் அருகேயாவது கதவுநிலையின் அருகேயாவது சேரப்பண்ணி, அங்கே அவன் எஜமான் அவன் காதைக் கம்பியினாலே குத்தக்கடவன்; பின்பு அவன் என்றைக்கும் அவனிடத்திலே சேவித்துக் கொண்டிருக்கக்கடவன்” (யாத் 21:6).
காது திறக்கப்பட்ட வேலைக்காரன் தன்னுடைய எஜமானிடத்தில் என்றென்றைக்கும் சேவித்துக்கொண்டிருப்பான். அதுபோலவே தாவீது, கர்த்தரிடத்தில், “”என் செவிகளைத் திறந்தீர்” என்று சொல்லி, தன்னுடைய எஜமானராகிய கர்த்தரிடத்தில், என்றென்றைக்கும், சேவித்துக் கொண்டிருப்பதாக வாக்குப்பண்ணுகிறார்.
இதோ வருகிறேன் (சங் 40:7)
அப்பொழுது நான்: இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது: (சங் 40:7)
“”இதோ வருகிறேன்” என்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சொல்லுகிறார். மனுஷருடைய பாவத்தை நிவிர்த்தி பண்ணுவதற்கு பழைய ஏற்பாட்டு பலிகள் போதுமானதாயில்லை. ஆனாலும் மனுஷருடைய பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படவேண்டும். இதற்காக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, “”இதோ வருகிறேன்” என்று சொல்லி, தாமாகவே முன்வருகிறார். உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்ப்பதற்கு கிறிஸ்துவானவர் தம்மையே ஒப்புக்கொடுக்கிறார்.
இந்த உலகத்தில் தேவனுடைய ராஜ்யத்தை ஸ்தாபிக்கவும், தேவனை மகிமைப்படுத்தவும் கிறிஸ்துவானவர் வருகிறார். அந்தகாரத்தின் வல்லமைகளிலிருந்து மனுக்குலத்தை விடுதலை செய்வதற்காக இயேசுகிறிஸ்து “”இதோ வருகிறேன்” என்று சொல்லுகிறார். இந்த ஊழியத்திற்கு கிறிஸ்துவானவர் தம்மை மனப்பூர்வமாய் ஒப்புக்கொடுக்கிறார். மீட்பின் ஊழியத்தைச் செய்வதில் கிறிஸ்துவானவர் உறுதியாயிருக்கிறார்.
“”காலம் நிறைவேறும்போது, இதோ நான் வருகிறேன்” என்று கிறிஸ்துவானவர் வாக்குப்பண்ணுகிறார். இயேசுகிறிஸ்து, “”இதோ வருகிறேன்” என்று பழைய ஏற்பாட்டுக்காலத்திலுள்ள எல்லா பரிசுத்தவான்களுக்கும் சொல்லுகிறார்.
புஸ்தகசுருளில் இயேசுகிறிஸ்துவைக் குறித்து எழுதியிருக்கிறது. புஸ்தகசுருள் என்பது தேவனுடைய தெய்வீக ஆலோசனையையும், தெய்வீக திட்டத்தையும் குறிக்கும் வார்த்தையாகும். மனுஷருடைய பாவங்களை சுமந்து தீர்ப்பதற்காக இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு வரவேண்டும் என்பது, தேவனுடைய அநாதி காலங்களில் திட்டமிடப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவானவர் தம்முடைய தெய்வீக திட்டத்தின் பிரகாரமாக, “”இதோ வருகிறேன்” என்று சொல்லுகிறார்.
கர்த்தர் தாவீதின் செவிகளைத் திறந்தார். கிறிஸ்துவானவர் “”இதோ வருகிறேன்” என்று சொன்னதை, தாவீது தன்னுடைய செவிகளினால் கேட்கிறார். புஸ்தகச்சுருளிலே மீட்பின் உடன்படிக்கை எழுதப்பட்டிருக்கிறது.
உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன் (சங் 40:8).
என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன் (சங் 40:8).
இயேசுகிறிஸ்து இந்தப் பூமிக்கு உலக இரட்சகராய் வந்தார். தம்முடைய ஊழியத்தை மனப்பூர்வமாயும் சந்தோஷமாயும் ஏற்றுக்கொண்டார். நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்காக கிறிஸ்துவானவர் தம்மையே ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தார். இயேசுகிறிஸ்து தம்முடைய திட்டத்தில் தோற்றுப்போகவில்லை. அவர் சோர்ந்துபோகவில்லை. பிதாவின் சித்தத்தைச் செய்வதற்காகவே கிறிஸ்துவானவர் பூமிக்கு வந்தார்.
தாவீது இயேசுகிறிஸ்துவின் வார்த்தையை இங்கு தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறார். “”என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன். உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது” என்பது இயேசுகிறிஸ்துவின், வாக்கியம்.
மகா சபையிலே நீதியை பிரசங்கித்தேன் (சங் 40:9,10).
மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தேன்; என் உதடுகளை மூடேன், கர்த்தாவே நீர் அதை அறிவீர். உம்முடைய நீதியை நான் என் இருதயத்திற்குள் மறைத்துவைக்கவில்லை; உமது சத்தியத்தையும் உமது இரட்சிப்பையும் சொல்-யிருக்கிறேன்; உமது கிருபையையும் உமது உண்மையையும் மகா சபைக்கு அறிவியாதபடிக்கு நான்ஒளித்துவைக்கவில்லை (சங் 40:9,10).
சுவிசேஷம் மனுபுத்திரருக்கு பிரசங்கிக்கப்படுகிறது. மகா சபையிலே தேவனுடைய நீதி பிரசங்கிக்கப்படுகிறது. தாவீது தேவனுடைய நீதியை மகாசபையிலே பிரசங்கித்தார். இயேசுகிறிஸ்து ஆசாரியராக நமக்கு மீட்பைக் கொண்டு வந்தார். அவர் தீர்க்கதரிசியாக மீட்பின் செய்தியை நமக்கு அறிவித்தார். அதன்பின்பு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் இரட்சிப்பின் செய்தியை பிரசங்கித்தார்கள். இப்போதும் பரிசுத்த ஆவியானவர் தம்முடைய ஊழியக்காரர் மூலமாய் இரட்சிப்பின் நற்செய்தியை பிரசங்கித்துக்கொண்டு வருகிறார்.
சுவிசேஷம் முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டது. அதன்பின்பு இயேசுகிறிஸ்துவினிடத்தில் கேட்டவர்களாலே அது நமக்கு உறுதியாக்கப்பட்டது (எபி 2:3). மகாசபையிலே நீதி பிரசங்கிக்கப்பட்டது. தேவன் தம்முடைய வாக்குத்தத்திற்கு உண்மையுள்ளவராயிருக்கிறார் என்னும் சத்தியம் மகாசபையிலே பிரசங்கிக்கப்பட்டது.
தேவனுடைய கிருபையும் அவருடைய உண்மையும் மகாசபைக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேவன் தம்முடைய வார்த்தையின் பிரகாரமாய் உண்மையுள்ளவராயும் கிருபையுள்ளவராயும் இருக்கிறார். இந்த சத்தியம் மறைத்து வைக்கப்படவில்லை. மகாசபைக்கு அறிவியாதபடிக்கு இது ஒளித்து வைக்கப்படவும் இல்லை.
இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷம் யூதருக்கும் புறஜாதியாருக்கும் பிரசங்கிக்கப்பட்டது. மகாசபை என்னும் வாக்கியம் யூதரும் புறஜாதியாரும் சேர்ந்த மகாசபையைக் குறிக்கிறது. கிறிஸ்துவின் சுவிசேஷம் இலவசமாக, ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக, பூரணமாக எல்லோருக்கும் பிரசங்கிக்கப்படுகிறது.
தாவீது இதைப்பற்றிச் சொல்லும்போது, மகாசபையிலே நீதியைப் பிரசங்கித்தேன் என்றும், என் உதடுகளை மூடேன் என்றும், கர்த்தர் அதை அறிந்திருக்கிறார் என்றும் சொல்லுகிறார். தாவீது கர்த்தருடைய நீதியை தன்னுடைய இருதயத்திற்குள் மறைத்து வைக்கவில்லை. அவர் கர்த்தருடைய கிருபையையும் அவருடைய உண்மையையும் மகாசபைக்கு அறிவியாதபடிக்கு ஒளித்து வைக்கவும் இல்லை.
மேசியா தமது செவிகளைக் கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்பதற்கு திறந்து வைத்திருப்பார். ஏசா 50:5-இல் பயன்படுத்தப்பட்டுள்ள சொல், ஒரு கதவைத் திறப்பது போல் திறப்பதைக் குறிக்கும். ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள். இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே. உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள். (மத் 13:14-16). அடிமையானவனின் செவிகள் துளையிடப்பட வேண்டும். (யாத் 21:2-6). ஒரு அடிமை தன் எஜமான் சொல்வதைக் கேட்பது போன்று நாம் கர்த்தரின் வார்த்தையைக் கவனித்துக் கேட்க வேண்டும்.
தாவீதின் ஜெபம் சங் 40 : 11-17
கர்த்தருடைய கிருபையும் உண்மையும் (சங் 40:11).
கர்த்தாவே நீர் உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடையாமற்போகப்பண்ணாதேயும்; உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கக்கடவது (சங் 40:11).
தாவீது இதுவரையிலும் தேவனுடைய இரட்சிப்பின் கிரியையைப்பற்றித் தியானித்தார். அதன்பின்பு இயேசுகிறிஸ்துவில் நமக்கு நியமிக்கப்பட்டிருக்கிற ஆத்தும இரட்சிப்பைக் குறித்து இந்த சங்கீதத்தில் எழுதியிருக்கிறார். அதன்பின்பு இப்போது தாவீது தன்னுடைய சொந்த ஆள்தத்துவத்தைப்பற்றி எழுதுகிறார்.
நம் எல்லோருக்குமே தேவனுடைய இரக்கம் வேண்டும். தேவனுடைய இரக்கத்திற்காக நாம் ஜெபிக்கவேண்டும். தேவனுடைய கிருபையும் அவருடைய உண்மையுமே நம்மை எப்போதும் பாதுகாக்கும். ஆகையினால் கர்த்தருடைய பிள்ளைகள் தங்களை தேவனுடைய கிருபைக்கும் இரக்கத்திற்கும் ஒப்புக்கொடுப்பது மிகவும் அவசியமாயிருக்கிறது.
பிதாவாகிய தேவன், தமது ஒரே பேறான குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை நமக்குக் கொடுக்காமல், அவரை மறைத்து வைக்கவில்லை. நாம் பாவிகளாகயிருக்கையிலேயே இயேசுகிறிஸ்துவை நமக்காகக் கொடுத்து, பிதாவானவர் தமது அன்பை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். கர்த்தருடைய இரக்கங்கள் தனக்குக் கிடைக்கவேண்டுமென்று தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார். “”கர்த்தாவே, நீர் உம்முடைய இரக்கங்களை எனக்கு கிடையாமற்போகப்பண்ணாதேயும்” என்று கர்த்தருடைய சமுகத்தில் ஜெபிக்கிறார்.
நமக்கு இயேசுகிறிஸ்துவில் தேவனுடைய இரக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய இரக்கங்களை நாம் இயேசுகிறிஸ்துவிலும், அவர் மூலமாகவும் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும். “”தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” (ரோம 8:32) என்று பவுல் சொல்லுகிறார். தாவீதும் கர்த்தருடைய சமுகத்தில், “”உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கக்கடவது” என்று பயபக்தியாய் விண்ணப்பம்பண்ணுகிறார்.
தாவீது கர்த்தரிடம் ஏறெடுக்கும் விண்ணப்பங்கள்
1. உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடையாமற்போகப் பண்ணாதேயும் (சங் 40:11).
2. உமது கிருபை எப்பொழுதும் என்னைக் காக்கக்கடவது.
3. உமது உண்மை எப்பொழுதும் என்னைக் காக்கக்கடவது
4. கர்த்தாவே என்னை விடுவித்தருளும் (சங் 40:13).
5. எனக்குச் சகாயம் பண்ணத் தீவிரியும்.
6. என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்கள் ஏகமாய் வெட்கி நாணிப் போகும்படி செய்யும் (சங் 40:14).
7. எனக்குத் தீங்கு செய்ய, என்னைத் தேடுகிறார்கள்.
8. தீங்கு செய்ய விரும்புகிறவர்கள் பின்னிட்டுப் போகும்படி செய்யும்
9. தீங்கு செய்ய விரும்புகிறவர்கள் இலச்சையடையும்படி செய்யும்.
10. என்பேரில் அவதூறு சொல்லுகிறவர்கள், தங்கள் வெட்கத்தின் பலனையடைந்து கைவிடப்படுவார்கள். (சங் 40:15)
11. உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்கள் (சங் 40:16).
12. உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று சொல்லுவார்கள்.
எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் (சங் 40:12,13).
எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது, என் அக்கிரமங்கள் என்னைத் தொடர்ந்துபிடித்தது, நான் நிமிர்ந்து பார்க்கக்கூடாதிருக்கிறது, அவைகள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறது, என் இருதயம் சோர்ந்துபோகிறது. கர்த்தாவே, என்னை விடுவித்தருளும்; கர்த்தாவே, எனக்குச் சகாயம் பண்ணத்தீவிரியும் (சங் 40:12,13).
மனுஷர்களெல்லோரும் பாவம் செய்து ஏகமாய்க் கெட்டுப்போயிருக்கிறார்கள். பாவத்தைக் குறித்த குற்றவுணர்வு நம்மை வருத்துகிறது. பாரத்தின் பாவசுமையிலிருந்து இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நமக்கு விடுதலை நியமிக்கப்பட்டிருக்கிறது. பலிகளினாலும் காணிக்கைகளினாலும் நமக்கு இரட்சிப்பு நியமிக்கப்படவில்லை. இயேசுகிறிஸ்துவின் மூலமாக மாத்திரமே மனுக்குலத்திற்கு இரட்சிப்பு நியமிக்கப்பட்டிருக்கிறது.
தாவீது தன்னுடைய பாவங்களையெல்லாம் நினைத்துப் பார்க்கிறார். அவருடைய பாவங்கள் அவருக்குத் தீமைகளாகத் தெரிகிறது. அவைகள் எண்ணிக்கைக்கு அடங்காதவைகள். அவருடைய பாவமான தீமைகள் அவரைச் சூழ்ந்துகொண்டது. அவருடைய அக்கிரமங்கள் அவரைத் தொடர்ந்து பிடித்தது. தாவீது தன்னுடைய பாவங்களின் மொத்த எண்ணிக்கையை கூட்டிப்பார்க்கிறார். அவைகள் அவருடைய தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறது. அவையெல்லாம் தாவீதைச் சூழ்ந்துகொள்கிறது.
தாவீதுக்கு முன்பாக அவருடைய பாவமே அவருடைய கண்களுக்குத் தெரிகிறது. பாவத்தின் பாரம் அதிகமாயிருப்பதினால் அவருடைய தலையை அவரால் நிமிர்த்திப் பார்க்கமுடியவில்லை. அவருடைய அக்கிரமங்கள் அவரைத் தொடர்ந்து பிடித்ததினால், அவர் நிமிர்ந்து பார்க்க முடியாமல் இருக்கிறார்.
தாவீதின் பாவங்கள் எண்ணிக்கைக்கு அடங்காதவைகள். அவருடைய பாவத்தைப்பற்றிய நினைவுகள் அவருடைய இருதயத்தில் நிரம்பியிருக்கிறது. இதனால் அவருடைய இருதயம் சோர்ந்துபோகிறது. தாவீதுக்கு நிம்மதியில்லை. ஆறுதலும் சமாதானமும் இல்லை. பாவத்தின் பிடியில் சிக்கிக்கொண்டிருக்கிறார். தீமைகள் அவரைச் சூழ்ந்துகொண்டிருக்கிறது. அவருடைய அக்கிரமங்கள் அவரைத் தொடர்ந்து பிடிக்கிறது.
தாவீது தன்னுடைய பாவத்தினிமித்தமாய், பரிபதாபமான மனுஷனாகயிருக்கிறார். பாவத்தின் கட்டுக்களிலிருந்து அவருடைய சுயமுயற்சியினால் அவரால் விடுதலை பெறமுடியவில்லை. தேவனுடைய உதவியையும் ஒத்தாசையையும் நாடுகிறார். “”கர்த்தாவே என்னை விடுவித்தருளும். கர்த்தாவே எனக்கு சகாயம்பண்ண தீவிரியும்” என்று பயபக்தியோடு ஜெபம்பண்ணுகிறார்.
நம்முடைய பாவங்கள் நம்மைச் சூழ்ந்துகொள்ளும்போது, நம்முடைய அக்கிரமங்கள் நம்மைத் தொடர்ந்து பிடிக்கும்போது, நாம் மிகப்பெரிய ஆபத்திலிருக்கிறோம். இது சரீரப்பிரகாரமான ஆபத்து அல்ல. இது நம்முடைய ஆவிக்குரிய ஆபத்து. நம்முடைய ஆத்துமாவுக்கு மிகப்பெரிய ஆபத்து வந்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் நம்முடைய ஆத்துமாவைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமென்றால், நம்முடைய ஆத்துமா அழிந்துபோகும்.
நம்முடைய ஆத்துமாவை பாவத்தின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கு கர்த்தருடைய உதவி தேவைப்படுகிறது. கர்த்தருடைய உதவியும் காலதாமதமில்லாமல் உடனே தேவைப்படுகிறது. தாவீது தன்னுடைய ஆபத்தை உணர்ந்தவராக, கர்த்தருடைய சமுகத்தில், “”கர்த்தாவே எனக்கு சகாயம்பண்ண தீவிரியும்” என்று ஜெபம்பண்ணுகிறார்.
என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்கள் (சங் 40:14,15).
என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்கள் ஏகமாய் வெட்கி நாணி, எனக்குத் தீங்குசெய்ய விரும்புகிறவர்கள் பின்னிட்டு இலச்சையடைவார்களாக. என்பேரில் ஆ ஆ! ஆ ஆ! என்று சொல்லுகிறவர்கள், தங்கள் வெட்கத்தின் பலனையடைந்து கைவிடப்படுவார்களாக (சங் 40:14,15).
நம்முடைய ஆவிக்குரிய சத்துருக்கள் நம்முடைய ஆத்துமாவை அழிப்பதற்கு வகைதேடிக்கொண்டிருக்கிறார்கள். நாம் சத்துருக்களை நினைத்து சோர்ந்துபோவதற்குப் பதிலாக, நம்முடைய கர்த்தரை நினைத்து உற்சாகம் பெறவேண்டும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சாத்தானையும், அவனுடைய சகல அந்தகார சக்திகளையும் ஜெயித்தார். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாய் ஜெயங்கிடைத்திருக்கிறது. இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற நாம் சத்துருவின்மீது ஜெயம்பெற்றவர்களாயிருக்கிறோம்.
கர்த்தருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரிடத்திலும், நம்முடைய ஆத்துமாவைப்பற்றிய கரிசனை இருக்கவேண்டும். சத்துரு நம்முடைய ஆத்துமாவுக்கு விரோதமாக வந்தாலும், கர்த்தர் அவனை ஜெயித்தார் என்னும் விசுவாசம் நமக்குள் உறுதியாயிருக்கவேண்டும். கர்த்தருடைய சமுகத்தில் நாம் ஜெபம்பண்ணும்போது, இந்தச் சத்தியத்தை விசுவாசித்து, பயபக்தியான தைரியத்தோடு,”” என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்கள் ஏகமாய் வெட்கி, நாணி, எனக்குத் தீங்கு செய்ய விரும்புகிறவர்கள் பின்னிட்டு இலச்சையடைவார்களாக” என்று ஜெபிக்கவேண்டும்.
நம்முடைய பிராணனை அழிக்கத் தேடுகிறவர்கள், தங்கள் வெட்கத்தின் பலனை அடைந்து கைவிடப்படுவார்கள். கர்த்தருடைய பிள்ளைகள் பாவத்தின் பள்ளத்திலும், உளையான சேற்றிலும் விழுந்து கிடக்கும்போது, சாத்தான் அவர்களைப் பார்த்து நகைக்கிறான். பாவத்தின் பள்ளத்திலிருந்து அவர்களால் எழும்பி வரமுடியாது என்று அவர்களைப் பார்த்து ஏளனம் பண்ணுகிறான். தனக்கு வெற்றி கிடைத்துவிட்டது என்று இறுமாப்பாய் நினைக்கிறான். பாவத்தில் விழுந்து கிடக்கிறவர்களைப் பார்த்து, “”ஆ, ஆ, ஆ, ஆ” என்று சொல்லி நகைக்கிறான்.
சாத்தானும் அவனுடைய அந்தகார வல்லமைகளும் நம்முடைய ஆத்துமாவை அழிக்கத் தேடுகிறார்கள். நாம் பாவத்தில் விழுந்துவிட்டாலும், நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து தமது கிருபையினால் நம்மை கரம்பிடித்து தூக்கிவிடுவார். நாம் விழுந்தாலும் முறிந்துபோவதில்லை. நாம் மறுபடியும் எழுந்து நிற்போம். எரிகிற தீயிலிருந்து உருவப்பட்ட கொள்ளிக்கட்டையைப்போல இன்னும் எரிந்துகொண்டுதான்இருப்போம். நாம் அணைந்து போவதில்லை. நமக்கு தீங்கு செய்ய விரும்புகிறவர்கள், தங்கள் வெட்கத்தின் பலனை அடைந்து கைவிடப்படுவார்கள்.
கர்த்தரைத் தேடுகிற அனைவரும் (சங் 40:16).
உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக (சங் 40:16).
கர்த்தரைத் தேடுகிற அனைவரும் கர்த்தருக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்கள். கர்த்தர் சாத்தானின்மீது வெற்றி சிறந்தார். இயேசுகிறிஸ்துவின் மூலமாய் சாத்தானின்மீது நமக்கும் வெற்றி கிடைத்திருக்கிறது. கர்த்தர் தமது கிருபையினால் நம்மை இரட்சிக்கிறார். கர்த்தரைத் தேடுகிற அனைவரும், இந்தச் சத்தியத்தைத் தியானித்து, கர்த்தருக்குள் சந்தோஷப்படுவார்கள். கர்த்தர் நமக்குக் கொடுக்கிற ஆத்தும இரட்சிப்பை வாஞ்சையோடு ஏற்றுக்கொள்வார்கள். கர்த்தருடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள், “”கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக” என்று எப்பொழுதும் சொல்லி, கர்த்தரைத் துதிப்பார்கள். இரட்சிப்பு கர்த்தருடையது.
நான் சிறுமையும் எளிமையுமானவன் (சங் 40:17).
நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்; தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்; என் தேவனே, தாமதியாதேயும் (சங் 40:17).
தாவீது நெருக்கப்படும்போதும் மிகுந்த ஆபத்திலிருக்கும்போதும் அவர் கர்த்தரையே நம்பியிருந்தார். கர்த்தருடைய இரட்சிப்பை நம்பியிருந்தார். கர்த்தர் தன்னை எல்லாத் தீங்குகளுக்கும், எல்லா ஆபத்துக்களுக்கும் விலக்கிக் காப்பார் என்று கர்த்தர் மேலேயே நம்பிக்கை வைத்திருந்தார். இந்த சங்கீதத்தைப் படிக்கிற நாமும், கர்த்தரையே நம்பவேண்டும். நம்முடைய ஆபத்துக்கள், துன்பங்கள், நெருக்கங்கள், வேதனைகள் எல்லாவற்றிற்கும் மத்தியிலும் நாம் கர்த்தரை மாத்திரமே நம்பியிருக்கவேண்டும். கர்த்தரிடத்தில் ஆறுதல் பெற்றுக்கொள்ளவேண்டும்.
தாவீது நம்மைப்போலவே ஒரு பாடுள்ள மனுஷனாயிருந்தார். அவர் தன்னைப்பற்றிச் சொல்லும்போது, “”நான் சிறுமையும் எளிமையுமானவன்” என்று சொல்லுகிறார். ஆனாலும் கர்த்தர் தாவீதின்மேல் நினைவாயிருக்கிறார். கர்த்தரே தாவீதுக்கு துணையும், அவரை விடுவிக்கிறவருமாயிருக்கிறார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நமக்கும் பிதாவாகிய தேவனுக்கும் நடுவே மத்தியஸ்தராயிருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் மூலமாய் பிதாவானவர் நம்மை அங்கீகரிக்கிறார்.
தாவீது மிகுந்த நெருக்கத்திலும் ஆபத்திலும் இருக்கிறார். இவற்றிலிருந்து கர்த்தரே தாவீதை விடுவிக்கிறவர். கர்த்தர் தாமதம் செய்யாமல், தன்னை விடுவிக்குமாறு, தாவீது பயபக்தியாய் விண்ணப்பம்பண்ணுகிறார்.