41ஆம் சங்கீதம் விளக்கம்

 

 

41ஆம் சங்கீதம் விளக்கம்

 

(இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.) 

மேசியாவைப் பற்றிய எட்டாவது சங்கீதம் 

 

பொருளடக்கம்  

 

    1. இரக்ககுணத்தோடு உதவிபுரிபவனுக்கு ஏழு ஆசீர்வாதங்கள் – (41:1-3) 

 

    2. இரண்டு விண்ணப்பங்கள் – சத்துருக்கள் சொல்லும் செய்யும் ஏழு காரியங்கள் – (41:4-8) 

 

    3. மேசியாவைக் காட்டிக் கொடுத்தல் – (41:9) 

 

    4. இரண்டு விண்ணப்பங்கள் – நான்கு ஆசீர்வாதங்கள் – (41:10-13)

 

கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு  பல சமயங்களில்  மனுஷர் மூலமாய் பிரச்சனைகளும், ஆபத்துக்களும், வேதனைகளும் வருகிறது. மனுஷர் நம்மீது  அன்பாயிருப்பதற்குப் பதிலாக கோபமாயிருக்கிறார்கள். அவர்கள் நமக்கு உதவிசெய்து ஆதரவாயிருப்பதற்குப் பதிலாக,  நமக்கு விரோதமாகத் தீங்கு நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில்  கர்த்தருடைய கிருபையும் சத்தியமும் மாத்திரமே நமக்கு  ஆதரவாயிருக்கும். 

 

தாவீதின் சத்துருக்கள் கொடூரமான குணமுடையவர்களாயிருக்கிறார்கள். ஆனாலும்  கர்த்தரோ தாவீதின்மேல் மிகுந்த கிருபையுள்ளவராயிருக்கிறார். தாவீது இப்போது வியாதிப்படுக்கையிலிருக்கிறார். கர்த்தர் தம்முடைய கிருபையினால்  தன்னைக் குணமாக்குவார் என்று தாவீது விசுவாசிக்கிறார்.  தேவனுடைய வாக்குத்தத்தங்களை விசுவாசத்தோடு பற்றிக்கொள்கிறார்.  கர்த்தருடைய சமுகத்தில் தாவீது  ஆறுதலாயிருக்கிறார் (சங் 41:1-3). தாவீது தன்னுடைய இருதயத்தை, ஜெபத்தில், கர்த்தருக்கு நேராக ஏறெடுக்கிறார் (சங் 41:4). 

தனக்கு விரோதமாக, தன்னுடைய சத்துருக்களும் பகைஞரும் பேசுகிற பேச்சுகளையெல்லாம் தாவீது கர்த்தருடைய சமுகத்தில் ஒப்புக்கொடுக்கிறார் (சங் 41:5-9).  தாவீது  தன்னுடைய சத்துருக்களை கர்த்தரிடத்தில் ஒப்புவித்து ஜெபிக்கிறார் (சங் 41:10-12). தாவீது  கர்த்தரை  துதித்துப் பாடுகிறார் (சங் 41:13). 

 

கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் வியாதியாயிருக்கும்போது இந்த சங்கீதத்தின் முதல் பகுதியை கர்த்தருடைய சமுகத்தில் பாடலாம்.  சத்துருக்கள் நம்மைத் துன்பப்படுத்தும்போது, நாம் இந்த சங்கீதத்தின் இரண்டாவது பகுதியை பயபக்தியோடு பாடலாம்.   

 

சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் சங் 41 : 1-4 

தீங்கு நாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்(சங் 41:1). 

 

சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார் (சங் 41:1). 

 

சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவனுக்கு கர்த்தர் விசேஷித்த ஆசீர்வாதத்தையும், சந்தோஷத்தையும், சமாதானத்தையும் வாக்குப்பண்ணுகிறார். தாவீது சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவனைப்பற்றி இந்த வசனத்தில் சொல்லுகிறார்.  இந்த வாக்கியம் தாவீதைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது என்றும்,  தாவீதின்மேல் சிந்தையுள்ள அவருடைய சிநேகிதரைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது என்றும்   வேதபண்டிதர்கள்  வியாக்கியானம் சொல்லுகிறார்கள். 

 

தாவீது இப்போது சிறுமைப்பட்டவராகயிருக்கிறார். அவருடைய சிநேகிதர்கள்  அவர்மேல் சிந்தையுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தாவீதுக்கு உதவிசெய்கிறார்கள்.  

 

தாவீதின் சத்துருக்கள் அவருக்கு விரோதமாக அநேகத் தீங்குகளைச் செய்கிறார்கள். அந்தத் தீங்குகள் எல்லாவற்றையும்விட, அவருடைய சிநேகிதரின் உதவிகள் தாவீதுக்கு அதிகமாய்க் கிடைத்திருக்கிறது. தாவீது தன்னுடைய சத்துருக்களைப்பற்றி நினைக்கும்போது, தன்மேல் சிந்தையுள்ள தன்னுடைய சிநேகிதரைப்பற்றியும் நினைக்கிறார். அவர்கள் பாக்கியவான்கள் என்று சொல்லுகிறார். கர்த்தர் அவர்களை தீங்கு நாளில் விடுவிப்பார் என்று சொல்லி அவர்களை ஆசீர்வதிக்கிறார். 

 

தாவீது  சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவராயிருக்கிறார். நெருக்கப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் தாவீது உதவிசெய்திருக்கிறார்.  தரித்திரருக்கும், ஆதரவற்றவர்களுக்கும் தாவீது ஆதரவாயிருந்து அவர்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்.  கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தின் பிரகாரமாக, தன்னை விடுவிப்பார் என்று  தாவீது அதிக நிச்சயத்தோடிருக்கிறார். தாவீது இப்போது  வியாதிப்படுக்கையில் இருக்கிறார்.  கர்த்தர் இந்த சூழ்நிலையில் தன்னைத் தாங்குவார் என்றும்,  தனக்கு உதவிசெய்வார் என்றும் தாவீது விசுவாசத்தோடு சொல்லுகிறார். 

 

சிறுமைப்பட்டவன்மேல் சிந்தை உள்ளவனுக்கு வரும் ஆசீர்வாதங்கள்

 

    1. தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார் (சங் 41:1) 

 

    2. பாதுகாப்பார் (சங் 41:2)

 

    3. உயிரோடே வைப்பார்

 

    4. பூமியில் அவனை ஆசீர்வதிப்பார்

 

    5. சத்துருக்களிடமிருந்து விடுதலையாக்குவார்

 

    6. படுக்கையின்மேல் வியாதியாக் கிடக்கிற போது அவனைத் தாங்குவார்

 

கர்த்தர் அவனைப் பாதுகாப்பார்  (சங் 41:2). 

 

கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான்; அவன் சத்துருக்களின் இஷ்டத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடீர்  (சங் 41:2). 

 

சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லுகிறார். இந்த வாக்கியத்தை நமக்குச் சொல்லப்பட்டிருக்கிற பொதுவான ஆலோசனையாக ஏற்றுக்கொள்ளவேண்டும். இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் இரக்கம் பெறுவார்கள் என்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும்  உபதேசம் செய்திருக்கிறார். 

 

நமக்கு இரக்கம் தேவை. தேவனுடைய உதவியும்  ஒத்தாசையும் தேவை. நாம்சிறுமைப்பட்டவர்கள்மேல் சிந்தையுள்ளவர்களாயிருக்கும்போது, கர்த்தர் நம்மேல் சிந்தையுள்ளவராயிருப்பார். நாம்தரித்திரருக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும்  இரக்கம் காண்பிக்கும்போது, தேவன் நமக்கும் இரக்கம் காண்பிப்பார். தரித்திரர்கள் சரீரப்பிரகாரமாகவும், தங்கள் சிந்தையிலும், தங்களுடைய பொருளாதார நிலமையிலும்  தரித்திரராயிருக்கலாம்.  தங்கள் ஜீவியத்தில் சோர்ந்துபோயிருக்கலாம்.  நாம் அவர்களுக்கு  ஆதரவான வார்த்தைகளைச் சொல்லவேண்டும். 

 

கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் சிறுமைப்பட்டவர்களைப் பார்த்து, கண்டும் காணாதவர்கள்போல் ஒதுங்கிப்போய்விடக்கூடாது.  அவர்கள்மேல் சிந்தையுள்ளவர்களாயிருக்கவேண்டும். அவர்களுடைய நிலமையை அன்போடு விசாரிக்கவேண்டும்.  அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லவேண்டும். அவர்களுடைய இக்கட்டான நிலமையைப் பார்த்து  நாம் பரிதாபப்படவேண்டும்.  அவர்களை நாம் ஒடுக்கக்கூடாது.  அவர்களுக்கு  நீதியான தீர்ப்பு கிடைக்க  நாம் பிரயாசப்படவேண்டும். அவர்களுக்கு உதாரத்துவமாய் உதவிசெய்யவேண்டும். 

 

சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவனை கர்த்தர் பாதுகாப்பார்.  அவனை உயிரோடே வைப்பார்.அவன் பூமியிலே பாக்கியவானாயிருப்பான். சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவனாயிருப்பது  தேவனுடைய நல்ல சுபாவங்களில் ஒன்று. தேவசாயலாக சிருஷ்டிக்கப்பட்டிருக்கிற நம்மிடத்திலும், இந்த நல்ல சுபாவம் காணப்படவேண்டும். இப்படிப்பட்ட  நற்குணமுள்ளவர்களுக்கு  தேவனுடைய ஆசீர்வாதம் இம்மையிலும் மறுமையிலும் வாக்குப்பண்ணப்பட்டிருக்கிறது. சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பூமியிலே, அவனுடைய ஜீவியகாலத்திலே  பாக்கியவானாயிருப்பான். ஆசீர்வதிக்கப்பட்டிருப்பான். 

 

ஒரு சிலர் கடின இருதயமுள்ளவர்களாயிருப்பார்கள். இவர்கள்  யாருக்கும் இரக்கம் காண்பிக்கமாட்டார்கள். தரித்திரரை ஒடுக்குவார்கள்.  கர்த்தர் இப்படிப்பட்டவர்களை ஒடுக்குவார். பிறருக்கு உதவிசெய்யும் இருதயமுள்ளவர்களை மாத்திரமே கர்த்தர் இந்தப் பூமியிலே ஆசீர்வதிப்பார். இவர்களுக்கு விரோதமாக மரணஆபத்துக்கள் வந்தாலும், கர்த்தர் இவர்களைப் பாதுகாப்பார்.  இவர்களைப் பூமியிலே உயிரோடே வைப்பார். 

நமக்கு விரோதமாக சத்துருக்கள் அநேகத் தீங்குகளைச் செய்யலாம். நமக்கு மனுஷர் மூலமாயும், சாத்தான் மூலமாயும் பிரச்சனைகள் வரலாம்.  இவையெல்லாவற்றிற்கும் மத்தியில் கர்த்தருடைய கரம் நம்மைப் பாதுகாக்கும். கர்த்தருடைய ஆசீர்வாதம் நமக்குப் போதுமானதாயிருக்கும். மனுஷர் நமக்கு எவ்வளவுதான் தீங்குசெய்தாலும் அது நம்மைப் பாதிக்காது.  கர்த்தர் நமக்குச் செய்கிற நன்மை  நிலைத்து நிற்கும். 

 

இந்தப் பூமியில், நம்முடைய ஆயுசுகாலம் ஆசீர்வாதமாயிருக்க வேண்டுமென்றால், நாம் சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவர்களாயிருக்கவேண்டும்.  தரித்திரரை விசாரிக்கவேண்டும். அவர்களுக்குத் தாராளமாய் உதவிபுரியவேண்டும். அப்போது கர்த்தருடைய வாக்குத்தத்தம் நம்முடைய ஜீவியத்தில் நமக்குச் சித்திக்கும். நாம் பாக்கியவான்களாயிருப்போம். கர்த்தர் நம்மைப் பாதுகாப்பார்.  தீங்குநாளில் கர்த்தர் நம்மை விடுவிப்பார். அவர் நம்மை உயிரோடே வைப்பார்.  

 

வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர் (சங் 41:3). 

 

படுக்கையின்மேல் வியாதியாய்க்கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர்  (சங் 41:3). 

 

 சிறுமையுள்ளவன்மேல் சிந்தையுள்ளவர்களை கர்த்தர் பலப்படுத்துவார். அவர்களை சரீரப்பிரகாரமாகவும் ஆவிக்குரிய  பிரகாரமாகவும்  பலப்படுத்துவார்.  கர்த்தர் அவர்களைத் தாங்குவார்.  ஒருவேளை சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் வியாதிப்படுக்கையிலிருக்கலாம். நீண்டகாலமாக அவன் வியாதியாயிருக்கலாம். வியாதிப்படுக்கையிலிருக்கிறவர்களுக்கு விசேஷித்த உதவி தேவைப்படுகிறது.  அவர்களுடைய சரீரத்தைச் சுத்தப்படுத்தவேண்டும். அவர்கள் படுத்திருக்கிற படுக்கையை  சுத்தப்படுத்தவேண்டும். பழைய படுக்கையை எடுத்துவிட்டு புதிய படுக்கையை  போடவேண்டும்.  

 

சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவனுடைய வியாதியிலே  கர்த்தர் அவனுடைய படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுகிறார். அவன் வியாதியாயிருக்கும்போது கர்த்தர் அவனை சுத்தமாக்குகிறார். அவன்மேல் ஆதரவாகயிருந்து அவனை கவனித்துக்கொள்கிறார்.  அவனைக் கரிசனையோடு பராமரிக்கிறார். சிறுபிள்ளைகள் வியாதியாயிருக்கும்போது, பிள்ளையின் தாயார் அதை நன்றாகக் கவனிப்பதுபோல,  கர்த்தர் நம்மையும் கவனிப்பார். 

 

நாம் வியாதியிலே இருக்கும்போது, நாம் இதுவரையிலும் படுத்திருந்த  படுக்கை முழுவதையும் கர்த்தர் மாற்றிப்போடுவார். நமக்கு புதிய படுக்கையைக் கொடுத்து நம்மை ஆசீர்வதிப்பார். நாம் வியாதியாயிருக்கையில் புதிய படுக்கை நமக்கு சுகமாகயிருக்கும்.  பழைய படுக்கையில்  அழுக்கு அதிகமாயிருக்கும்.  புதிய படுக்கை சுத்தமாகவும், துப்புரவாகவும் இருக்கும்.  புதிய படுக்கை நம்முடைய சரீரத்திற்கு இதமாயிருக்கும். 

 

கர்த்தர் நம்முடைய முழுப்படுக்கையையும் மாற்றிப்போடுவதாக வாக்குப்பண்ணுகிறார்.  நம்முடைய தலைமுதல், கால் வரையிலும், நாம் பயன்படுத்துகிற படுக்கையை, கர்த்தர் முழுவதுமாக மாற்றிப்போடுகிறார்.  நம்முடைய சரீரத்தின் எல்லா அவயவத்தையும் கர்த்தர் பராமரிக்கிறார்.  நம்முடைய முழுசரீரமும் கர்த்தருடைய பாதுகாப்புக்கு உட்படுத்தப்படுகிறது. கர்த்தர் நம்முடைய வியாதிப்படுக்கையை  நீக்கிப்போட்டு, நமக்கு  சுகமாதலின்  படுக்கையைக் கொடுக்கிறார். 

 

சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவனுக்கு வியாதியே வராது என்று  கர்த்தர் வாக்குப்பண்ணவில்லை. நமக்கு வியாதி வரும்போது நாம் மரிக்கவே மாட்டோம் என்றும்  கர்த்தர் வாக்குப்பண்ணவில்லை. நாம் வியாதியாயிருக்கும்போது கர்த்தர் நம்மைத் தாங்குவார் என்றும், நம்முடைய வியாதியிலே, நம்முடைய படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவார் என்றுமே நமக்கு வாக்குப்பண்ணுகிறார்.

 

நாம் வியாதியாயிருக்கும்போது கர்த்தருடைய உதவியும், ஒத்தாசையும், ஆதரவும் நமக்குத் தேவைப்படுகிறது. நாம் வியாதியிலிருந்தாலும் கர்த்தருடைய வாக்குத்தத்தத்தை நினைத்து, நம்முடைய வியாதியை பொறுமையோடு சகித்துக்கொள்ளலாம்.  கர்த்தர் நம்மைக் குணப்படுத்துவார் என்று விசுவாசித்து, நாம்  வியாதிப்படுக்கையிலிருந்தாலும் கர்த்தருக்குள் சந்தோஷமாயிருக்கலாம். நம்முடைய சரீரம் வியாதியிலே வேதனையடைந்தாலும், நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குள்  சந்தோஷமாயிருக்கும்.  

 

என் ஆத்துமாவைக் குணமாக்கும்  (சங் 41:4).

 

கர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன், என் ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன்  (சங் 41:4).

 

தாவீது இப்போது வியாதிப்படுக்கையிலிருக்கிறார். அவருக்கு கர்த்தருடைய கிருபையும், உதவியும், இரக்கமும் தேவைப்படுகிறது.  தாவீது கர்த்தரிடத்தில் மனஉருக்கமாய் விண்ணப்பம்பண்ணுகிறார். “”கர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும், என் ஆத்துமாவைக் குணமாக்கும்” என்று  தாவீது கர்த்தருடைய சமுகத்தில் பயபக்தியாய் ஜெபிக்கிறார்.

 

பாவமே ஆத்துமாவின் வியாதியாயிருக்கிறது.  கர்த்தர் தம்முடைய கிருபையினாலும் இரக்கத்தினாலும் நம்முடைய பாவத்தை மன்னிக்கும்போது, நம்முடைய ஆத்தும வியாதி குணமடைகிறது.  தேவனுடைய புதுப்பிக்கும் கிருபையினால் நம்முடைய ஆத்துமா  சுகம்பெறுகிறது. “”உமக்கு விரோதமாய்  பாவம் செய்தேன்” என்று தாவீது தன்னுடைய பாவத்தை அங்கீகரிக்கிறார்.  இதனிமித்தமாய்  அவருடைய ஆத்துமா வியாதிப்பட்டிருக்கிறது. தன்னுடைய வியாதி குணமடையவேண்டுமென்று தாவீது விரும்புகிறார். 

 

தாவீதுக்கு சரீரவியாதியும் உண்டாயிருக்கிறது. ஆத்தும வியாதியும் உண்டாயிருக்கிறது.  பாவத்தினால் சாபமும்,  சாபத்தினால் வியாதியும், வியாதியினால் மரணமும் வரும். தன்னுடைய வியாதியைக் குணப்படுத்துவதற்கு, பரமவைத்தியராகிய  கர்த்தரின் உதவி தனக்குத் தேவைப்படுவதை  தாவீது உணர்ந்திருக்கிறார். தன்னுடைய சரீரவியாதியைவிட, தன்னுடைய  ஆத்தும வியாதி குணமடையவேண்டும் என்று தாவீது விரும்புகிறார்.  இதினிமித்தமாய், “”என் ஆத்துமாவைக் குணமாக்கும்” என்று  கர்த்தரிடத்தில் ஜெபிக்கிறார். 

 

தாவீதின் விண்ணப்பங்கள்

 

    1. என்மேல் இரக்கமாயிரும் (சங் 41:4)

 

    2. பாவத்திலிருந்து என் ஆத்துமாவைக் குணமாக்கும்

 

    3. எனக்கு இரங்கும் (சங் 41:10)

 

    4. என்னை எழுந்திருக்கப் பண்ணும்

 

 ஆத்துமாவைக் குணப்படுத்தும் என்ற விண்ணப்பத்தை இங்கு மட்டுமே வாசிக்கிறோம். மற்ற இடங்களிலெல்லாம் சரீரத்தைக் குணமாக்கும் என்னும் விண்ணப்பமே அதிகமாயுள்ளது.

 

வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள குணமாதல்கள்

 

    1. நோய்களைக் குணமாக்குதல் (யாத் 15:26; சங் 103:3; மத் 10:1-8;                 5:14-16)

    2. ஆத்துமாவைக் குணமாக்குதல் (சங் 41:4)

 

    3. தேசத்துக்கு ஷேமத்தைக் கொடுத்தல்  (2நாளா 7:14)

 

    4. சீர்கேடுகளைக் குணமாக்குதல்  (எரே 3:22; ஓசி 14:4)

 

    5. இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குதல் (சங் 147:3; லூக்கா 4:18)

 

    6. தண்ணீர் (யாத் 15:25; 2இராஜா 2:21-22; எசே 47:8-11)

 

    7. காயம் (எரே 6:14; எரே 8:11; நாகூம் 3:19)

 

    8.  இராஜ்யங்கள் (எரே 51:8-9;  வெளி 13:3, 12)

 

    9.  தேசம் குணமாதல் (ஏசா 30:26)

 

    10. தேசங்கள் குணமாதல் – ஜீவன் காக்கப்படுதல் (வெளி 22:2)

 

சத்துருக்களும் பகைஞரும் சங் 41 : 5-9 

அவன் எப்பொழுது சாவான்  (சங் 41:5).

 

அவன் எப்பொழுது சாவான், அவன் பேர் எப்பொழுது அழியும்? என்று என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறார்கள்  (சங் 41:5).

 

தாவீது இப்போது வியாதிப்படுக்கையிலிருக்கிறார். அவருடைய சத்துருக்கள் இந்த சூழ்நிலையிலும் அவருக்கு விரோதமாய்த் தூஷணமான வார்த்தைகளைப் பேசுகிறார்கள். அவருக்குத் தீங்கு செய்கிறார்கள்.  அவர்களுடைய துன்மார்க்கமான கிரியைகளை தாவீது  கர்த்தருடைய சமுகத்தில் முறையிடுகிறார்.

 

தாவீதின் சத்துருக்கள் அவருக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள்.  வஞ்சகமாய்ப் பேசுகிறார்கள். தெருவிலே போய்த் தூற்றுகிறார்கள். இதனால்  தாவீதின் ஆவி துக்கப்படுகிறது.  தாவீதின் சத்துருக்கள் அவருடைய நற்பெயருக்கு களங்கம் உண்டுபண்ணுகிறார்கள். 

 

தாவீது எப்பொழுது மரித்துப்போவார் என்று அவருடைய சத்துருக்கள் ஆவலாய் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். “”அவன் எப்பொழுது சாவான், அவன் பேர் எப்பொழுது அழியும்” என்று  தாவீதின் சத்துருக்கள் அவருக்கு விரோதமாயும் சொல்லுகிறார்கள். தாவீதின் நற்பெயரைக் கண்டு அவர்கள் பொறாமைப்படுகிறார்கள்.

 

தாவீது தன்னுடைய நற்குணத்தினால் ஜனங்கள் மத்தியில்  மேன்மையடைந்திருக்கிறார். அவருக்கு மனுஷர் மத்தியில் மகிமை உண்டாயிருக்கிறது. அவருடைய சத்துருக்கள் அவருடைய நற்பெயரை அழித்துப்போடவேண்டுமென்று விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள்  தாவீதுக்கு விரோதமாய்த் தூஷணமான வார்த்தைகளைப் பேசுகிறார்கள்.  தாவீது செத்துப்போனால் அவருடைய பெயரும் அதோடு அழிந்துபோகும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவருடைய சரீரம் மண்ணுக்குள் மண்ணாகப் போகும்போது, அவருடைய நற்பெயரும்  அழிந்துபோகும் என்பது  அவர்களுடைய வஞ்சகமான எண்ணம்.

 

ஆனால் தாவீதின் பெயரோ ஒரு காலத்திலும் அழிந்துபோவதில்லை.  அவருக்கு  என்றென்றைக்கும் அழியாத பெயர் உண்டாயிருக்கிறது. பரிசுத்த வேதாகமத்திலே தாவீதைப்பற்றி எழுதப்பட்டிருக்கிறது.  தாவீதின் நற்குணங்களைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.  இந்த வானமும் பூமியும் அழிந்துபோனாலும், வேதத்திலுள்ள வார்த்தைகள் அழிந்துபோகாது.  தாவீதைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிற நல்ல வார்த்தைகள் ஒருபோதும் அழிந்துபோகாது. அவருடைய பெயரும் புகழும் அழிந்துபோகாமல், எக்காலமும் நிலைத்து நிற்கும். நீதிமானின் நினைவுகள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். 

 

பகைஞனின் வார்த்தைகள்

 

    1. அவன் எப்பொழுது சாவான்? (சங் 41:5)

 

    2. அவன் பேர் எப்பொழுது அழியும்

 

    3. ஒருவன் என்னைப் பார்க்க வந்தால் வஞ்சனையாய் பேசுகிறான் (சங் 41:6)

 

    4. அவன் இருதயத்தில் அக்கிரமத்தைச் சேகரித்துக் கொள்ளுகிறான்

 

    5. ஒருவன் என்னைப் பொது இடங்களில் வஞ்சனையாய்ப் பேசுகிறான் (சங் 41:6)

 

    6. என் பகைஞரெல்லாரும் என்மேல் ஏகமாய் முணுமுணுத்து, எனக்கு விரோதமாயிருக்கிறார்கள் (சங் 41:7)

 

    7. எனக்குப் பொல்லாங்கு நினைக்கிறார்கள்

 

    8.  நான் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள் (சங் 41:8)

 

ஒருவன் என்னைப் பார்க்க வந்தால்  (சங் 41:6).  

 

ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாய்ப் பேசுகிறான்; அவன் தன் இருதயத்தில் அக்கிரமத்தைச் சேகரித்துக்கொண்டு, தெருவிலேபோய், அதைத் தூற்றுகிறான்  (சங் 41:6).  

 

தாவீதின் சத்துருக்கள் அவருக்கு விரோதமாக என்னென்ன தூஷண வார்த்தைகளைப் பேசவேண்டுமென்று விரும்புகிறார்களோ அதையெல்லாம் பேசுகிறார்கள். அவருக்கு விரோதமாக  என்னென்ன தீங்குகளையெல்லாம் செய்யவேண்டுமென்று சதிஆலோசனை பண்ணுகிறார்களோ, அவையெல்லாம் செய்கிறார்கள். 

 

தாவீது வியாதிப்படுக்கையிலிருக்கும்போது அவருடைய சிநேகிதர்கள் அவரைப் பார்க்க வருகிறார்கள். தாவீதின் சத்துருக்களில் சிலர், தங்களை  தாவீதின் சிநேகிதர்போல காண்பித்துக்கொண்டு,  அவரைப் பார்க்க வருகிறார்கள். வியாதிப்படுக்கையிலிருக்கிறவர்களைப் பார்த்து,  அவர்களை நலம் விசாரிப்பது  நல்ல சுபாவம். ஆனால் தாவீதின் சத்துருக்களோ,  அவரைப் பார்க்க வந்து, வஞ்சனையாய்ப் பேசுகிறார்கள்.  தங்களை தாவீதுக்கு சிநேகிதர்போல காண்பித்துக்கொள்கிறார்கள்.  ஆனால்  அவர்கள் இருதயத்திலோ வஞ்சகம் நிரம்பியிருக்கிறது. 

 

நம்முடைய காலத்தில்கூட, நமக்கு மெய்யான சிநேகிதர்கள் இல்லையென்று நாம் வருத்தப்படுகிறோம். மனுஷர் மத்தியிலே  உண்மையுள்ளவர்கள் குறைந்துபோய்விட்டார்கள் என்று மனவேதனைப்படுகிறோம்.  நம்முடைய நாட்களில் மாத்திரமல்ல, தாவீதின் நாட்களிலும்  இப்படிப்பட்ட நிலமையே காணப்பட்டது. நம்முடைய காலத்தைவிட முந்தியகாலம் எந்தவிதத்திலும் மேன்மைப்பட்டதாகயில்லை.  இன்றுபோல்தான்  அன்றும் இருந்தது.  அன்றுபோல்தான் இன்றும் இருக்கிறது. 

 

தாவீதை பார்க்க வருகிறவர்கள் தாவீதைக் குறித்து   வஞ்சனையாய்ப் பேசுகிறார்கள்.  அவர்கள் தங்கள் இருதயத்தில் அக்கிரமத்தை சேகரித்துக்கொள்கிறார்கள். தாவீதைப்பார்த்து, அவரைக்குறித்து எப்படியெல்லாம் வஞ்சனையாய்ப் பேசலாம் என்று யோசனைபண்ணுகிறார்கள்.  ஒவ்வொரு சூழ்நிலையையும்  தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறார்கள்.  கட்டுக்கதைகளை உண்டுபண்ணுகிறார்கள்.

 

தாவீது வியாதியாகயிருந்தாலும் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணுகிறார்.  தன்னைப் பார்க்க வருபவர்களுக்கு நல்ல ஆலோசனைகளைச் சொல்லுகிறார். ஆனால்  அவரைப் பார்க்க வருகிற சத்துருக்களோ,  தாவீதின் நல்ல வார்த்தைகளை தங்கள் இருதயத்தில்  சேகரித்துக்கொள்வதற்குப் பதிலாக, அக்கிரமத்தைச் சேகரித்துக்கொள்கிறார்கள்.  அக்கிரம சிந்தைக்காரருக்கு  அக்கிரமமே பெரிதாகத் தெரியும்.  

 

தாவீது எதை சொன்னாலும், எதை செய்தாலும் அதைக் குற்றப்படுத்துகிறார்கள். தாவீது ஜெபம்பண்ணாமலும், நல்ல ஆலோசனைகளை  சொல்லாமலும் இருந்தால்,  அவர் கர்த்தரைவிட்டு தூரவிலகிப்போய்விட்டார் என்று  அவரைப் பற்றித் தூஷணமாய்ப் பேசுகிறார்கள்.  தாவீது  கர்த்தரை விட்டுப் பின்வாங்கிப்போய்விட்டார் என்று  அவரைப்பற்றி அவதூறு சொல்லுகிறார்கள். தாவீது கர்த்தரை மறந்துவிட்டார் என்றுகூட அவரைப்பற்றி வஞ்சனையாய்ச் சொல்லுகிறார்கள். தங்கள் மனதில் உள்ளதை தங்களுக்குள் பேசிக்கொள்ளாமல் தெருவிலே போய், எல்லாருக்கும் முன்பாக, தங்களுடைய தூஷண வார்த்தைகளைத் தூற்றுகிறார்கள்.  தாவீதின் நற்பெயருக்கு களங்கம் உண்டுபண்ணுகிறார்கள். தாவீதின் மேன்மையையும், மரியாதையையும்  கெடுத்துப்போடுவதற்கு முயற்சி செய்கிறார்கள். 

 

என்மேல் ஏகமாய் முணுமுணுக்கிறார்கள் (சங் 41:7,8).

 

என் பகைஞரெல்லாரும் என்மேல் ஏகமாய் முணுமுணுத்து, எனக்கு விரோதமாயிருந்து, எனக்குப் பொல்லாங்கு நினைத்து, தீராவியாதி அவனைப் பிடித்துக்கொண்டது; படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள்  (சங் 41:7,8).

 

      தாவீதின் சத்துருக்களெல்லோரும் அவர்மேல் ஏகமாய் முணுமுணுக்கிறார்கள். தாங்கள் பேசுவதை தாவீதுக்குத் தெரியாமல்,  மற்றவர்கள் காதுகளில்  இரகசியமாகப் பேசுகிறார்கள். தாங்கள் பேச நினைப்பதை  வெளிப்படையாகப் பேசுவதற்கு  அவர்களுக்கே வெட்கமாகயிருக்கிறது. ஆகையினால் அவர்கள்  தாவீதின்மேல் ஏகமாய் முணுமுணுக்கிறார்கள்.  

 

அப்போஸ்தலர் பவுல் பலவிதமான  பாவங்களைப்பற்றி  ரோமருக்கு எழுதின நிருபத்தில் குறிப்பிடுகிறார்.  அவற்றில்  புறங்கூறுதல், அவதூறு பண்ணுதல் (ரோம 1:29-31) ஆகிய பாவங்களும் இடம்பெற்றிருக்கிறது.  தாவீதுக்கு வந்திருக்கிற வியாதி தீராதவியாதி என்றும், அது அவருடைய  மரணத்திற்கேதுவான வியாதி என்றும் அவர்மேல் முணுமுணுக்கிறார்கள்.  

 

தீராதவியாதி தாவீதைப் பிடித்துக்கொண்டது. படுக்கையில் கிடக்கிற தாவீது  இனி எழுந்திருப்பதில்லை என்று  அவர்கள் தாவீதுக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள். தாவீது இந்த வியாதியிலிருந்து எழுந்திக்கக்கூடாது என்றும், இந்த வியாதியிலேயே அவர்  மரித்துப்போகவேண்டும் என்றும் அவர்கள் பொல்லாங்கு நினைக்கிறார்கள். 

 

தாவீதுக்கு அவருடைய பாவத்தினாலேயே இப்படிப்பட்ட தீராதவியாதி வந்திருக்கிறது என்று அவருக்கு விரோதமாய்த் தூஷண வார்த்தைகளைப் பேசுகிறார்கள். நம்முடைய பாவம் எவ்வளவு பெரிதாயிருந்தாலும், அதற்காக நாம் மனம்வருந்தி, கர்த்தருடைய சமுகத்தில்  அதை அறிக்கை செய்து விட்டுவிடும்போது,  கர்த்தர் நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்கு, நம்மை இரட்சிப்பதற்கு  இரக்கம் மிகுந்தவராகயிருக்கிறார்.  ஆனால் தாவீதின் சத்துருக்களோ, தாவீதை பேலியாளின் மகனாகப் பாவித்து, அவருக்கு விரோதமாகப்  பொல்லாங்கு நினைக்கிறார்கள்.

 

என் பிராண சிநேகிதன்  (சங் 41:9).

 

என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்  (சங் 41:9).

 

தாவீதுக்கு அநேக சிநேகிதர்கள் உண்டு. தாவீது அவர்களெல்லோரையும் நம்பினார். அவர்கள் தாவீதின் அப்பத்தை அவரோடு புசித்தார்கள். அப்படிப்பட்ட சிநேகிதரில் ஒருவரைப்பற்றி தாவீது இங்கு சொல்லுகிறார்.  இவர் ஒருவேளை  அகித்தோப்பேலாகயிருக்கலாம் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். இவர் தாவீதுக்கு நெருங்கிய சிநேகிதர்.  தாவீது அகித்தோப்பேலை  அதிகமாய் நம்பினார். அவர் தாவீதின் அப்பத்தைப் புசித்தவர். 

 

அகித்தோப்பேலோ தாவீது தனக்குச் செய்த நன்மைகளையெல்லாம் மறந்துவிட்டார்.  அவருடைய அப்பத்தைப் புசித்ததையும் யோசித்துப் பார்க்காமல், அகித்தோப்பேல் தாவீதின்மேல் தன் குதிகாலைத்  தூக்கினார்.  தாவீதிக்கு விரோதமாக தன் தலையை உயர்த்தினார்.  

 

மனுஷர் மத்தியிலே இப்படிப்பட்ட பாவம் அதிகமாய்க் காணப்படுகிறது. நமக்கு விரோதமாக நம்முடைய நெருங்கிய சிநேகிதர்கள் தீங்குசெய்யும்போது நாம் ஆச்சரியப்படக்கூடாது.  தாவீதின் ஜீவியத்திலும், தாவீதின் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் ஜீவியத்திலும்  இப்படிப்பட்ட சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

 

யூதாஸ்காரியோத்து இயேசுகிறிஸ்துவோடு அப்பம் புசித்தான்.  இயேசுகிறிஸ்துவும்  துணிக்கையில் தோய்த்து சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்திற்குக் கொடுத்தார் (யோவா 13:18,26).  இயேசுகிறிஸ்துவின் ஜீவியத்தில், தாவீது இங்கு சொல்லுகிற வேதவாக்கியம் நிறைவேறிற்று. 

 

கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம்  கர்த்தருடைய அப்பத்தைப் புசிக்கிறோம். நம்முடைய போஜனத்திற்கும், பாதுகாப்புக்கும், பராமரிப்புக்கும் நாம் கர்த்தருக்கு  நன்றியுள்ளவர்களாய் ஜீவிக்கவேண்டும். அன்றாடம் இயேசுகிறிஸ்துவின் அப்பத்தைப் புசித்துவிட்டு, நம்முடைய குதிகாலை இயேசுவின்மேல் தூக்கிவிடக்கூடாது. இயேசுகிறிஸ்துவுக்கு விரோதமாகப் பாவம் செய்யக்கூடாது. 

 

தாவீதின் விண்ணப்பம் சங் 41 : 10-13

கர்த்தாவே, நீர் எனக்கு இரங்கும்  (சங் 41:10).

 

கர்த்தாவே, நீர் எனக்கு இரங்கி, நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கப்பண்ணும்  (சங் 41:10).   

 

தாவீதின் பிராண சிநேகிதரும் அவருக்கு விரோதமாகத் திரும்பியிருக்கிறார்கள். தாவீது அவர்களுடைய துரோகத்தையும்            துரோகப் பேச்சுக்களையும் கவனித்துக்கொண்டிருந்தால்,  அவருடைய ஆத்துமாவில் சோர்ந்துபோய்விடுவார்.  சத்துருக்களின் தீயசுபாவங்களை  தாவீதால்  சகித்துக்கொள்ளவும் முடியாது. தாங்கிக்கொள்ளவும் முடியாது.  ஆகையினால் தாவீது  இந்த சூழ்நிலையில்,  சத்துருக்களை நோக்கிப் பார்ப்பதற்குப் பதிலாக, கர்த்தரை நோக்கிப் பார்க்கிறார்.  கர்த்தரிடத்தில், “”நீர் எனக்கு இரங்கும்” என்று விண்ணப்பம்பண்ணுகிறார். 

 

தாவீதின் சத்துருக்கள்  அவர்மீது இரக்கமாயில்லை.  ஆனால் கர்த்தரோ இரக்கமும், நீடிய சாந்தமும், மனதுருக்கமுமுள்ளவர்.  தாவீது  அவர்களுக்கு சரிக்கட்ட விரும்புகிறார்.  ஆனால்  இப்போது  தாவீதால் ஒன்றும் செய்ய முடியாது. அவர் வியாதிப்படுக்கையிலிருக்கிறார்.  தன்னுடைய வியாதிப்படுக்கையிலிருந்து கர்த்தர் தன்னை  எழுந்திருக்கப்பண்ணவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணுகிறார். அப்போது தாவீது  தன்னுடைய சத்துருக்களுக்கு சரிக்கட்டுவார்.  

 

தன்னுடைய சத்துருக்களை பழிவாங்கவேண்டுமென்பது தாவீதின் விருப்பமல்ல. அவர்கள் செய்த தீமைக்குத்தக்கதாக தாவீது அவர்களுக்கு  தீங்கு செய்ய விரும்பவில்லை. அவர்கள் தனக்கு தீங்கு செய்திருந்தாலும், தாவீது அவர்களுக்கு  நன்மை செய்ய விரும்புகிறார். நன்மை செய்து  அவர்களுக்கு சரிக்கட்டவேண்டுமென்பதே தாவீதின் விருப்பம். 

 

தாவீது தன்னுடைய சுபாவத்தைப்பற்றி கர்த்தருடைய சமுகத்தில் ஏற்கெனவே அறிக்கை செய்திருக்கிறார். “”என் தேவனாகிய கர்த்தாவே, நான் இதைச் செய்ததும், என் கைகளில் நியாயக்கேடிருக்கிறதும், என்னோடே சமாதானமாயிருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும், காரணமில்லாமல் எனக்குச் சத்துருவானவன் நான் கொள்ளையிட்டதும் உண்டானால்,  பகைஞன் என் ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து, என் பிராணனைத் தரையிலே தள்ளி மிதித்து, என் மகிமையைத் தூளிலே தாழ்த்தக்கடவன். (சேலா)”  (சங் 7:3-5).

 

தாவீது கர்த்தருடைய சமுகத்தில் தன்னுடைய சுபாவத்தைப்பற்றியும், தன்னுடைய சத்துருக்களின் சுபாவத்தைப்பற்றியும் இவ்வாறு சொல்லுகிறார். “”அவர்கள் வியாதியாயிருந்தபோது இரட்டு என் உடுப்பாயிருந்தது; நான் உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரப்படுத்தினேன்; என் ஜெபமும் என் மடியிலே திரும்பவந்தது. நான் அவனை என் சிநேகிதனாகவும் சகோதரனாகவும் பாவித்து நடந்துகொண்டேன்; தாய்க்காகத் துக்கிக்கிறவனைப்போல் துக்கவஸ்திரம் தரித்துத் தலைகவிழ்ந்து நடந்தேன். ஆனாலும் எனக்கு ஆபத்துண்டானபோது அவர்கள் சந்தோஷப்பட்டுக் கூட்டங்கூடினார்கள்; நீசரும் நான் அறியாதவர்களும் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, ஓயாமல் என்னை நிந்தித்தார்கள். அப்பத்திற்காக இச்சகம்பேசுகிற பரியாசக்காரரோடே சேர்ந்துகொண்டு என்பேரில் பற்கடிக்கிறார்கள்”  (சங் 35:13-16). 

 

நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீர்   (சங் 41:11). 

 

என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிக்கிறீரென்று அறிவேன்             (சங் 41:11). 

 

 தாவீது மரித்துப்போகவேண்டுமென்று அவருடைய சத்துருக்கள் எதிர்பார்க்கிறார்கள். வியாதிப்படுக்கையில் கிடக்கிற தாவீது இனி  எழுந்திருப்பதில்லை என்று அவருக்கு விரோதமாகப் பேசுகிறார்கள். ஆனால்  தாவீதோ  கர்த்தருடைய கண்களில் கிருபை பெற்றிருக்கிறார்.  கர்த்தருடைய பெரிதான இரக்கத்தினாலும், கிருபையினாலும் தாவீது  தன்னுடைய வியாதியிலிருந்து சுகம் பெற்றிருக்கிறார். கர்த்தர் தாவீதின் வியாதியிலே அவருடைய படுக்கை முழுவதையும் மாற்றிப்போட்டிருக்கிறார். 

 

தாவீது இப்போது வியாதியில்லாமல் சுகமாயிருப்பதினால் அவருடைய சத்துருக்கள் அவர்மேல்  ஜெயம்கொள்ளமுடியாமல் போயிற்று. கர்த்தர் தன்மேல் பிரியமாயிருக்கிறார் என்பதை தாவீது அறிந்துகொள்கிறார்.  கர்த்தர் தாவீதைக் குணப்படுத்தி, தம்முடைய அன்பை  அவருக்கு வெளிப்படுத்திக் காண்பிக்கிறார்.  கர்த்தர்தாமே தாவீதை  அவருடைய உத்தமத்திலே தாங்குகிறார். தம்முடைய சமுகத்தில்  கர்த்தர் தாவீதை  என்றென்றைக்கும் நிலை நிறுத்துகிறார்.

 

நீர் என் உத்தமத்திலே என்னைத் தாங்குவீர் (சங் 41:12). 

 

நீர் என் உத்தமத்திலே என்னைத்தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுத்தில் என்னை நிலைநிறுத்துவீர்  (சங் 41:12). 

 

தாவீது இப்போது வியாதி நீங்கி சரீர ஆரோக்கியத்தோடிருக்கிறார். தாவீது ஜனங்களுக்கு முன்பாக உத்தமராக விளங்குகிறார். இந்த உலகத்தில்  எவ்வளவு பெரிய நல்ல மனுஷனாகயிருந்தாலும், கர்த்தர்  அவருடைய உத்தமத்திலே  அவரைத் தாங்கினால் மாத்திரமே, அவரால்  தொடர்ந்து நல்லவராகயிருக்க முடியும். கர்த்தர் நம்மைத் தாங்கவில்லையென்றால் நம்முடைய சுயபிரயாசம்விருதாவாகவேயிருக்கும்.  

 

நாம் இப்போது  கர்த்தருக்குள்  நிலைத்திருக்கிறோம் என்றால் இது  தேவனுடைய சுத்த கிருபை. அவருடைய கிருபையினாலேயே நாம் இப்போது  இருக்கிற வண்ணமாக இருக்கிறோம். கர்த்தரிடத்தில் ஜெபிக்கிறோம். கர்த்தரைத் துதித்துப் பாடுகிறோம். கர்த்தருடைய   கிருபை நம்மோடு கூடயில்லையென்றால், கர்த்தர் நம்மைத் தாங்கவில்லையென்றால், நாம் கீழே விழுந்துவிடுவோம். கர்த்தர் இல்லாமல் நாம் ஒன்றுமில்லை. நம்முடைய சுயபிரயாசத்தினால் நாம் நிற்கலாம் என்று  நினைப்பது  விருதாவான காரியம்.

 

கர்த்தர் தாவீதை  அவருடைய உத்தமத்திலே தாங்குகிறார்.  கர்த்தர் தாமே  தாவீதை  தம்முடைய சமுகத்தில்  என்றென்றைக்கும் நிலை நிறுத்துகிறார்.  இதனால் தாவீது கர்த்தருடைய சமுகத்தில்  உத்தமனாக விளங்குகிறார். 

 

கர்த்தர் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர்    (சங் 41:13).

 

இஸ்ரவே-ன் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஆமென், ஆமென்              (சங் 41:13).

 

கர்த்தரைத் துதிக்கும் துதியோடு இந்த சங்கீதம் நிறைவுபெறுகிறது. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தி தாவீது  இந்த சங்கீதத்தை நிறைவுசெய்கிறார்.  இந்த ஸ்தோத்திர வாக்கியம்  இந்த சங்கீதத்தின் முடிவுரையாக  எழுதப்பட்டதா என்பது  சரியாகத் தெரியவில்லை. சங்கீதப்புஸ்தகத்தின் முதலாவது பகுதி இந்த சங்கீதத்தோடு நிறைவு பெறுகிறது.  கர்த்தரைத் துதிக்கிற துதியின் வாக்கியம், சங்கீதப்புஸ்தகத்தின் முதலாவது பகுதியில்  பின்பு சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் வேதபண்டிதர்களில் சிலர் சொல்லுகிறார்கள்.  இதே போன்ற துதியின் வாக்கியம்  72, 89, 106 ஆகிய சங்கீதங்களின் முடிவிலும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

 

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரே நமக்கு அல்பாவாகயிருக்கிறார்.  அவரே நமக்கு  ஓமெகாவாகவும் இருக்கிறார். கர்த்தரே ஒவ்வொரு நற்கிரியையையும்  துவக்குகிறவர். அவரே அதை முடித்து வைக்கிறவர்.  நாம் ஒவ்வொரு காரியத்தின் ஆரம்பத்திலும், முடிவிலும் கர்த்தரைத் துதிக்கவேண்டும்.  தாவீதைப்போல நாமும், “”இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய்  என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும்  ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஆமென்,   ஆமென்” என்று  கர்த்தரைப் பயபக்தியோடு துதிக்கவேண்டும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *