தானியேல் 1ஆம் அதிகாரம் வேத ஆராய்ச்சி

தானியேல் 1 அதிகாரம்

தானியேலுடைய ஜீவியசரித்திரம் இந்த அதிகாரத்தில் எழுதப்பட்டிருக்கிறது. தானியேல் பாபிலோன் தேசத்திலே, உலகப்பிரகாரமான கல்வி கற்கிறார். அதன் பின்பு அவர் பரமதரிசனங்களைப் பெற்றுக்கொள்கிறார். யோயாக்கீமின் முதலாவது சிறையிருப்பு (தானி 1:1,2). இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களும், துறைமக்களும் பாபிலோன் தேசத்து சிறையிருப்புக்குப் போகிறார்கள்.

தானியேலோடு, மேலும் சில எபிரெய வாலிபர்களும் பாபிலோன் தேசத்து சிறையிருப்புக்குப் போகிறார்கள். அவர்கள் கல்தேயருடைய அரசாங்கத்தில் உத்தியோகம் பார்ப்பதற்கு வசதியாக, அவர்கள் கல்தேயருடைய பாஷையையும், அவர்களுடைய இலக்கியங்களையும் கற்றுக்கொடுக்கிறார்கள் (தானி 1:3-7).

எபிரெய வாலிபர்கள் ராஜாவின் போஜனத்தினால் தங்களை தீட்டுப்படுத்தவில்லை. அவர்கள் பருப்பு, தண்ணீர் முதலானவற்றையே புசித்து, ஆரோக்கியமாயிருக்கிறார்கள் (தானி 1:8-16). தானியேலும், அவரோடு கூடயிருக்கிற மூன்று எபிரெய வாலிபரும், ஞானத்திலும் அறிவிலும் மற்றவர்களைவிட சமர்த்தராயிருக்கிறார்கள்.

ராஜகுலத்தார்கள் தானி 1:1-7

தானி 1:1. யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து, அதை முற்றிக்கை போட்டான்.

தானி 1:2. அப்பொழுது ஆண்டவர் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமையும் தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றையும் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் அந்தப் பாத்திரங்களைச் சினேயார் தேசத்திலுள்ள தன் தேவனுடைய கோவிலுக்குக் கொண்டுபோய், அவைகளைத் தன் தேவனுடைய பண்டசாலைக்குள் வைத்தான்.

தானி 1:3. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வா-பரைக் கொண்டுவரவும்,

தானி 1:4. அவர்களுக்குக் கல்தேயரின் எழுத்தையும் பாஷையையும் கற்றுக்கொடுக்கவும் ராஜா தன் பிரதானிகளின் தலைவனாகிய அஸ்பேனாசுக்குக் கற்பித்தான்.

தானி 1:5. ராஜா, தான் உண்ணும் போஜனத்திலேயும் தான் குடிக்கும் திராட்சரசத்திலேயும் தினம் ஒரு பங்கை அவர்களுக்கு நியமித்து, அவர்களை மூன்றுவருஷம் வளர்க்கவும், அதின் முடிவிலே அவர்கள் ராஜாவுக்கு முன்பாக நிற்கும்படி செய்யவும் கட்டளையிட்டான்.

தானி 1:6. அவர்களுக்குள், யூதா புத்திரராகிய தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் இருந்தார்கள்.

தானி 1:7. பிரதானிகளின் தலைவன், தானியேலுக்கு பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் மறுபெயரிட்டான்.

யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து, அதை முற்றிக்கை போடுகிறான். நேபுகாத்நேச்சார் தன்னுடைய ராஜ்யபாரத்தின் முதலாம் வருஷத்தில், யூதாவின்மீதும், எருசலேமின்மீதும் யுத்தம் பண்ண வருகிறான்.

நேபுகாத்நேச்சார் எருசலேம் நகரத்தை முற்றிக்கையிடுகிறான். நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமை சிறைப்பிடித்து, தன்னை எருசலேமுக்கு அதிபதியாக அறிவிக்கிறான். யோயாக்கீம் இனிமேல் தன்னுடைய இஷ்டம்போல ஆளுகை செய்ய முடியாது. அவன் பாபிலோன் ராஜாவுக்கு கீழ்ப்படிந்து ஆளுகை செய்யவேண்டும். தன்னுடைய கீழ்ப்படிதலை உறுதிபண்ணும்விதமாக, பாபிலோன் ராஜாவுக்கு கப்பம் செலுத்தவேண்டும்.

கர்த்தர் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமையும், தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றையும் நேபுகாத்நேச்சாருடைய கையில் ஒப்புக்கொடுக்கிறார். நேபுகாத்நேச்சார், யோயாக்கீமை எருசலேமிலேயே, தனக்கு கப்பம் கட்டி ஆளுகை செய்யுமாறு விட்டுவிட்டு, தேவாலயத்தின் பாத்திரங்களை எடுத்துக்கொள்கிறான்.

நேபுகாத்நேச்சார் அந்தப் பாத்திரங்களைச் சினேயார் தேசத்திலுள்ள தன் தேவனுடைய கோவிலுக்குக் கொண்டுபோய், அவைகளைத் தன் தேவனுடைய பண்டசாலைக்குள் வைக்கிறான் (தானி 1:2).

நேபுகாத்நேச்சார் எருசலேம் நகரத்தையோ, யூதாதேசத்தையோ முற்றிலுமாய் அழித்துப்போடவில்லை. யூதாவின் ராஜாவை பயமுறுத்தவேண்டும் என்பதும், அவனைத் தனக்கு கீழ்ப்படியப்பண்ணவேண்டும் என்பதும் பாபிலோன் ராஜாவின் திட்டம்.

எசேக்கியா பாபிலோன் ராஜாவின் சேனாபதிக்கு தன்னுடைய பொக்கிஷசாலைகளையெல்லாம் காண்பித்தான்.

“”இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உன் வீட்டில் உள்ளதிலும், உன் பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாய் வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும். நீ பெறப்போகிற உன் சந்ததியாகிய உன் குமாரரிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (ஏசா 39:6,7).

தேவாலயத்திலுள்ள பாத்திரங்களெல்லாம் கர்த்தருக்கு பரிசுத்தமானது. நேபுகாத்நேச்சார் அந்தப் பாத்திரங்களை தன்னுடைய தேசத்திற்கு எடுத்துக்கொண்டு போகிறான். பாபிலோன் ராஜா சிலைகளை வணங்குகிறவன். அவன் ஒரு விக்கிரகாராதனைக்காரன். பாபிலோன் தேசத்தில் விக்கிரகங்களுக்கு பெரிய கோவில் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. இது சினேயார் தேசத்திலுள்ளது.

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், சினேயாரிலுள்ள தன் தெய்வத்தின்மீது பக்தியாயிருக்கிறான். யுத்தக்களத்திலே தனக்கு கிடைக்கும் எல்லா வெற்றிகளுக்கும், தன்னுடைய தெய்வங்களே காரணம் என்று நேபுகாத்நேச்சார் நம்புகிறான். அந்த விக்கிரகங்களுக்கு தூபங்காட்டி, பலிசெலுத்தி வணங்குகிறான். தான் வணங்கும் விக்கிரகத்திற்கு, நன்றி சொல்லும் வண்ணமாக, எருசலேம் தேவாலயத்தில் தான் எடுத்துக்கொண்ட பாத்திரங்களை, தேவனுடைய கோவிலுக்கு கொண்டு போய் வைக்கிறான். நேபுகாத்நேச்சார் தன்னுடைய விக்கிரக தெய்வத்தை துதிக்கிறான்.

இஸ்ரவேல் வம்சத்தார் புறஜாதி ஜனங்களுடைய விக்கிரகங்களை, தேவனுடைய ஆலயத்திற்குள் கொண்டு வந்து வைத்தார்கள். கர்த்தரோ தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றை, அந்நிய தேசத்து ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்து விடுகிறார். அந்தப் பாத்திரங்கள் இப்போது சினேயார் தேசத்திலுள்ள விக்கிரங்களின் ஆலயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தரைவிட்டு விலகிப்போனார்கள். கர்த்தருடைய ஆலயத்தைத் தீட்டுப்படுத்தினார்கள். இஸ்ரவேல் புத்திரர் அந்நிய தெய்வங்களைப் பின்பற்றிப்போனார்கள். கர்த்தர் தம்முடைய ஜனத்தை அந்நிய தேசத்தாரின் கையில் ஒப்புக்கொடுத்துவிடுகிறார்.

நேபுகாத்நேச்சார் இஸ்ரவேல் புத்திரர் எல்லோரையும் சிறைப்பிடித்து தன்னுடைய தேசத்திற்கு கொண்டுபோகவில்லை. இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வா-பரை மாத்திரம், நேபுகாத்நேச்சார் தன்னுடைய தேசத்திற்கு சிறைப்பிடித்து கொண்டுபோகிறான் (தானி 1:3). மற்றவர்களை யூதாதேசத்திலேயே விட்டுவிடுகிறான்.

“”அல்லது அவர்கள் தீர்க்கதரிசிகளாயிருந்து, அவர்களிடத்திலே கர்த்தருடைய வார்த்தை இருந்தால், கர்த்தருடைய ஆலயத்திலும், யூதா ராஜாவின் அரமனையிலும், எருசலேமிலும் மீதியான பணிமுட்டுகள் பாபிலோனுக்குப் போகாதபடிக்கு அவர்கள் சேனைகளின் கர்த்தரை நோக்கி மன்றாடட்டுமே. பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்னும் யூதாவின் ராஜாவையும், யூதாவிலும் எருசலேமி-ருந்த பெரியோர் அனைவரையும் எருசலேமி-ருந்து பாபிலோனுக்குச் சிறை பிடித்துக்கொண்டுபோகிறான்” (எரே 27:18,19).

நேபுகாத்நேச்சார் யூதாதேசத்திலிருந்து இஸ்ரவேல் புத்திரரை சிறைப்பிடிக்கும்போது அவர்களில் வாலிபரையும், சிறுபிள்ளைகளையும் விசேஷமாய்ப் பிடிக்கிறான். இவர்களிடத்தில் மாசு எதுவுமில்லை. இவர்கள் ராஜகுலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் துரைமக்கள். இவர்களுக்கு நீண்ட எதிர்காலம் இருக்கிறது. சிறுபிள்ளைகளைப் பிடித்துக்கொண்டால், அவர்களுடைய பெற்றோர்கள் பாபிலோனுக்கு கீழ்ப்படிவார்கள் என்றும், பாபிலோன் ராஜாவுக்கு விரோதமாக கலகம்பண்ணமாட்டார்கள் என்றும் நேபுகாத்நேச்சார் திட்டமிடுகிறான்.

இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களும், துரைமக்களும் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்படுகிறார்கள். இவர்களுடைய பெற்றோர்கள் யூதாதேசத்திலேயே தங்கிவிடுகிறார்கள். பிள்ளைகள் பாபிலோன் தேசத்திற்கு சிறைப்பட்டுப்போகிறார்கள்.

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், தன் தேசத்திற்கு சிறைப்பிடித்து கொண்டு வந்திருக்கிற இஸ்ரவேல் புத்திரருக்கு கல்தேயரின் எழுத்தையும் பாஷையையும் கற்றுக்கொடுக்க கட்டளை கொடுக்கிறான். இந்தக் கட்டளையை பொறுப்பாய் நிறைவேற்றும் பொறுப்பு, ராஜாவினுடைய பிரதிநிதிகளின் தலைவனாகிய அஸ்பேனாசுக்கு கொடுக்கப்படுகிறது (தானி 1:4). எபிரெய வாலிபர்கள் கல்தேயருடைய அரசாங்கத்தில் பணிபுரியவேண்டும். அதற்கு தேவையான கல்வியும், பயிற்சியும் இவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

ராஜா எபிரெய வாலிபரின் ஞானத்தையும் அறிவையும் வளர்ப்பதற்கு முயற்சி பண்ணுவதுபோல, அவர்களுடைய சரீர ஆரோக்கியத்தையும், அழகையும் கூட்டுவதற்கும் திட்டமிடுகிறான். நேபுகாத்நேச்சார் இஸ்ரவேல் புத்திரை சிறைப்பிடிக்கும்போதே, அவர்களில் யாதொரு மாசும் இல்லாதவர்களையும், அழகானவர்களையும் மாத்திரமே சிறைப்பிடித்தான்.

சிறைப்பிடிக்கப்பட்டு பாபிலோன் தேசத்திலிருக்கிற எபிரெய வாலிபர்கள் சகல ஞானத்திலும் தேறினவர்கள். அவர்கள் அறிவில் சிறந்தவர்கள். கல்வியில் நிபுணர். இவர்களெல்லோரும் ராஜாவின் அரண்மனையில் சேவிக்க திறமையுள்ளவர்கள். இவர்களுக்கு ஞானமும் அறிவும் இருந்தால் மாத்திரம் போதாது. சரீர ஆரோக்கியமும் இருக்கவேண்டும். அப்போதுதான் இவர்களால் ராஜாங்க காரியத்தை சோர்வில்லாமல், சுறுசுறுப்பாய்ச் செய்ய முடியும்.

பாபிலோன் ராஜா, தான் உண்ணும் போஜனத்திலேயும் தான் குடிக்கும் திராட்சரசத்திலேயும் தினம் ஒரு பங்கை அவர்களுக்கு நியமித்து, அவர்களை மூன்றுவருஷம் வளர்க்கவும், அதின் முடிவிலே அவர்கள் ராஜாவுக்கு முன்பாக நிற்கும்படி செய்யவும் கட்டளையிடுகிறான் (தானி 1:5).

நேபுகாத்நேச்சார் தான் சிறைப்பிடித்து கொண்டு வந்திருக்கிற இஸ்ரவேல் புத்திரர் மத்தியிலே மனிதாபிதமானத்தோடும், தாராளமான நற்குணத்தோடும் நடந்துகொள்கிறான். அவர்களுக்கு கல்வியும் தாராளமாய்க் கற்றுக்கொடுக்கப்படுகிறது. போஜனங்களும் தாராளமாய்க் கொடுக்கப்படுகிறது.

நேபுகாத்நேச்சார் சிறைப்பிடித்து கொண்டு வந்த இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே, யூதா புத்திரராகிய தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் இருக்கிறார்கள் (தானி 1:6). இவர்கள் யூதாவின் புத்திரர். தாவீதின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களை வளர்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் பிரதானிகளின் தலைவன் நியமிக்கப்பட்டிருக்கிறான்.

சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிற யூதாபுத்திரர் கல்தேயருடைய பாஷையைக் கற்றுக்கொள்ளவேண்டும். அவர்கள் கல்தேயரைப்போலவே மாறவேண்டும். இதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும் கல்வியின் இலக்கு. யூதவாலிபர்களை, கல்தேயராக மாற்றும் வண்ணமாக, அவர்களைக் கவனிக்கும் பிரதானிகளின் தலைவன், அவர்களுக்கு கல்தேயரின் பெயரைக் கொடுக்கிறான்.

பிரதானிகளின் தலைவன், தானியேலுக்கு பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் மறுபெயரிடுகிறான் (தானி 1:7).

யூதர்களில் ஆண்மக்களுக்கு, விருத்தசேதனம் பண்ணப்படும்போது, அவர்களுக்கு பெயரிடுவது வழக்கம். யூதர்களுடைய பெயர்கள் கர்த்தரோடு தொடர்புடையதாயிருக்கும். “”தானியேல்” என்னும் பெயருக்கு “”தேவன் என்னுடைய நியாயாதிபதி” என்று பொருள்.

அனனியா என்னும் பெயருக்கு “”கர்த்தருடைய கிருபை” என்றும், மீஷாவேல் என்னும் பெயருக்கு “”வல்லமையுள்ள தேவன்” என்றும், அசரியா என்னும் பெயருக்கு, “”கர்த்தரே என் உதவியாயிருக்கிறார்” என்றும் பொருள்.

யூதவாலிபர்கள் தங்களுடைய முன்னோர்களின் தேவனை மறக்கவேண்டும். அவர்கள் இஸ்ரவேல் புத்திரராயிருந்தாலும், இஸ்ரவேலின் தேவனுக்கும் இவர்களுக்கும் இனிமேல் எந்தவித தொடர்பும், சம்பந்தமும் இருக்கக்கூடாது என்று கல்தேயர்கள் நினைக்கிறார்கள். இதற்காக அவர்களுடைய வாலிப பிரயாத்திலேயே, அவர்களுடைய எபிரெய பெயர்களை மாற்றி, அவர்களுக்கு கல்தேயருடைய பெயர்களைக் கொடுக்கிறார்கள்.

கல்தேயருடைய பெயர்களெல்லாம், அவர்களுடைய விக்கிரகங்களோடு தொடர்புடையதாயிருக்கும். பெல்தெஷாத்சார் என்னும் பெயருக்கு “”பேலின் மறைவான பொக்கிஷங்களை பாதுகாக்கிறவர்” என்று பொருள். சாத்ராக் என்னும் பெயருக்கு “”சூரியனின் ஏவுதல்” என்று பொருள். கல்தேயர்கள் சூரியனை தங்கள் தெய்வமாக வணங்குகிறார்கள். மேஷாக் என்னும் பெயருக்கு “”ஷாக் என்னும் தேவதை” என்று பொருள். ஷாக் என்பது “”வீனஸ்” என்னும் தேவதையைக் குறிக்கும். ஆபேத்நேகோ என்னும் பெயருக்கு “”எரிகிற அக்கினியின் சேவகன்” என்று பொருள். கல்தேயர்கள் சூரியனை தங்கள் தெய்வமாக வழிபடுவதுபோல, அக்கினியையும் தங்கள் தெய்வமாக வழிபடுகிறார்கள்.

பாபிலோன் ராஜா இஸ்ரவேல் புத்திரரை சிறைப்பிடித்து, அவர்களெல்லோருக்கும் கல்தேயருடைய பெயர்களை மறுபெயர்களாகக் கொடுக்கிறான். இஸ்ரவேல் புத்திரருக்கும், இஸ்ரவேலின் தேவனுக்கும் இடையேயுள்ள தொடர்பையும் ஐக்கியத்தையும் துண்டித்துவிட்டு, அவர்களை கல்தேயரின் தெய்வங்களோடு தொடர்புபடுத்துகிறான்.

எகிப்தின் ராஜாவாகிய பார்வோன்நேகோ யோயாக்கீமின் சகோதரனாகிய யோவாகாசின் ஸ்தானத்தில் அவனை ராஜாவாக்கினான். (2இராஜா 23:34-36; 2நாளா 36:1-4) யோயாக்கீம் எகிப்து தேசத்திற்கு மூன்று வருஷங்களாகப் பகுதிப்பணம் கட்டினான். யோயாக்கீமின் நான்காம் வருஷம் என்பது நேபுகாத்நேச்சாருடைய ஆட்சிக் காலத்தின் முதலாம் வருஷமாகும். (எரே 25:1-3) இந்த வருஷத்தில் நேபுகாத்நேச்சார் எகிப்து தேசத்தை ஐப்பிராத்து நதியிலுள்ள கர்கேமிஸ் என்னும் இடத்தில் தோற்கடித்தான். இதனால் யூதாவும், சீரியாவும், மேலும் பல தேசங்களும் பாபிலோனின் வசமாயிற்று. (எரே 46:1-2) பாபிலோனுக்குச் சென்ற எழுபது வருஷ சிறையிருப்பு இந்த வருஷத்திலிருந்து ஆரம்பமாயிற்று. (எரே 25:1-11) இக்காலத்தில் தானியேலும் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்.

யோயாக்கீம் பாபிலோனுக்குக்கீழ் மூன்று வருஷம் யூதாவை ஆட்சி புரிந்தான். அதன் பின்பு, பாபிலோனுக்கு எதிராகக் கலகம் பண்ணினான். (2இராஜா 24:1-7). இக்காலத்தில் நேபுகாத்நேச்சார் மற்ற தேசங்களோடு யுத்தம் பண்ணிக் கொண்டிருந்த படியினால் அவன் மூன்று அல்லது நான்கு வருஷங்களாக யூதாவிற்கு விரோதமாக யுத்தம் பண்ணவரவில்லை. அதன் பின்பு, யோயாக்கீமின் 11 ஆவது வருஷ ராஜ்யபாரத்தின்போது பாபிலோன் யூதாவைக் கைப்பற்றிற்று. (2இராஜா 23:36-24:7)

யோயாக்கீமினுடைய ஸ்தானத்தில் யோயாக்கீன் ஆட்சியில் அமர்த்தப்பட்டான். ஆனால் அவன் யூதாவை மூன்று மாதங்கள் மட்டுமே ஆட்சி புரிந்தான். நேபுகாத்நேச்சார் யோயாக்கீனைப் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் சென்றான். யோயாக்கீனுக்குப் பதிலாக நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவை யூதாவின்மீது ராஜாவாக நியமித்தான்.

சிதேக்கியா யூதா தேசத்தைப் பாபிலோனுக்குக் கீழ் 11 வருஷங்கள் ஆட்சி புரிந்தான். அதன் பின்பு, சிதேக்கியா பாபிலோனுக்கு விரோதமாகக் கலகம் பண்ணினான். பாபிலோன் யூதாவிற்கு விரோதமாக இதனால் யுத்தம் பண்ணிற்று. எருசலேமையும், யூதா தேசத்தையும் பாபிலோனியர் முழுவதுமாக அழித்துப் போட்டார்கள். யூதர்களைப் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் சென்றார்கள். (2நாளா. 36:11-21)

நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்தான். நேபுகாத்நேச்சார் ராஜாவாக ஆவதற்கு முன்பாகவே அவனுடைய தந்தையின் சேனையோடு எருசலேமிற்கு விரோதமாக வந்தான். இது யோயாக்கீமின் மூன்றாம் வருஷத்து ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது. யோயாக்கீமின் நாலாம் வருஷத்து ஆட்சிக் காலம் வரையிலும் யூதாவின்மீது யுத்தம் நடைபெறவில்லை. பாபிலோனியர் இக்காலத்தில் எகிப்து தேசத்தின்மீது யுத்தம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். இந்தக் காலத்தில் நேபுகாத்நேச்சார் பாபிலோனின் ராஜாவானான். (எரே 46:1-3; 2இராஜா 24:1; 2நாளா. 36:6-7).

யூதாவின்மீது நேபுகாத்நேச்சார் யுத்தம் பண்ண வந்ததைப் பற்றி தானியேல் தீர்க்கதரிசி எழுதும்போது அவன் பாபிலோனின் ராஜாவாக இருந்தான். நேபுகாத்நேச்சாருடைய தந்தையின் பெயர் நெபோபொலோசர். நேபுகாத்நேச்சார் எருசலேமை முற்றிக்கையிட்ட சமயத்தில் அவனுடைய தந்தையாகிய நெபோபொலோசர் மரித்துப்போனார். இதனால் நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்கு உடனடியாக திரும்பி விட்டார்.

பாபிலோன்மீது யுத்தம் பண்ணும் பொறுப்புகளையும், யூதர்களைப் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்து வரும் பொறுப்புகளையும் நேபுகாத்நேச்சார் தன் தளபதிகளிடம் ஒப்படைத்துவிட்டு, அவர் பாபிலோனுக்குத் திரும்பி வந்துவிட்டார். இந்த சமயத்தில், தானியேலும், அவரோடு ஏராளமான யூதரும் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்து வரப்பட்டார்கள். (தானி 1:1-2; 2இராஜா 24:1-16).

நேபுகாத்நேச்சார் தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றை தன் தேசத்திற்கு கொண்டு போனான். தேவாலயத்தின் மீதமுள்ள பாத்திரங்கள் பிற்காலத்தில் பாபிலோனுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. (2இராஜா 24:13; 2நாளா 36:10).

“”சினேயார் தேசத்திலுள்ள தன் தேவனுடைய கோவில்” என்பது பேல் தெய்வத்தின் கோவிலாகும். பேல் பாபிலோனியரின் பிரதான தெய்வம். (ஆதி 10:10; ஆதி 11:2; ஆதி 14:1,9)

தன் அரண்மனையில் சேவிப்தற்கு ராஜா நியமித்த விதிகள்

1. இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜ குலத்தார்களாகவும் துரைமக்களாகவும் இருக்க வேண்டும். (தானி 1:3)

2. வாலிபர்களாக இருக்க வேண்டும்.

3. யாதொரு மாசும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.

4. அழகானவர்களாக இருக்க வேண்டும்.

5. சகல ஞானத்திலும் தேறினவர்களாக இருக்க வேண்டும்.

6. அறிவில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

7. கல்வியில் நிபுணராக இருக்க வேண்டும்.

8. ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குத் திரும்பி வந்துவிட்டான். நெபோபொலோசரின் மரணத்திற்குப்பின்பு நேபுகாத்நேச்சார் ராஜாவாக்கப்பட்டிருக்கிறான். இந்தச் சமயத்தில் இந்தச் சம்பவம் நடைபெறுகிறது.

கல்தேயர்கள் பாபிலோனின் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள். பாபிலோனியரைவிட சற்று வித்தியாசமானவர்கள். கல்தேயர் என்னும் பெயர் பாபிலோன் தேசத்தாருக்குப் பொதுவாக வழங்கப்படுகிறது.

ராஜாவின் அரமனையில் வேலைபார்ப்பதற்கு மூன்று வருஷம் பயிற்சி பெற்றுக் கொள்ள வேண்டும்.

ராஜாவின் அரமனையில் சேவிக்க திறமையுள்ளவர்களான சில வாலிபர்கள் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் யூதா புத்திரராகிய தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்னும் நான்கு யூதர்களும் இருந்தார்கள். இவர்கள் யூதாவிலிருந்து பாபிலோனுக்குச் சிறைப்பிடித்து வரப்பட்டவர்கள். (தானி 1:6; 2இராஜா 24:1-16)

1. தானியேல் – இந்தப் பெயருக்கு “”தேவன் நியாயாதிபதியாக இருக்கிறார்” என்று பொருள். தானியேல் என்னும் பெயர் பெல்தேஷாத்சார் என்று மாற்றப்படுகிறது. இந்தப் பெயருக்கு “”பேல் அவன் ஜீவனைப் பாதுகாப்பாராக அல்லது பேலின் பிரபு” என்று பொருள். பேல் பாபிலோனின் பிரதான தெய்வமாகும். (தானி 6-7; ஏசா 46:1; எரே 50:2; எரே 51:44). தானியேலின் பெயர் மாற்றப்பட்டிருப்பதாக 6 வசனங்களில் கூறப்பட்டிருக்கிறது. (தானி 1:7; தானி 2:26; தானி 4:8-9,18-19; தானி 5:12; தானி 10:1). ஒருவேளை தானியேலுக்கு இந்தப் பாபிலோனிய பெயர் பிடிக்காமல் போயிருந்திருக்கலாம். தானியேலின் புஸ்தகத்தில் தன் பெயரைத் தானியேல் என்று 75 தடவை குறிப்பிட்டிருக்கிறார். வேதாகமத்தின் பல புஸ்தகங்களில் தானியேலின் பெயர் 5 முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (எசே 14:14,20; எசே 28:3; மத் 24:15; மாற்கு 13:14).

2. அனனியா. இந்தப் பெயருக்கு “”ஆண்டவருடைய ஈவு” என்று பொருள். இவனுடைய பெயர் சாத்ராக் என்று மாற்றப்பட்டிருக்கிறது. இந்தப் பெயருக்கு “”அகுவின் கட்டளை” என்று பொருள். அகு பாபிலோனியரின் சந்திர தெய்வமாகும்.

3. மீஷாவேல். இந்தப் பெயருக்குத் “”தேவனைப் போன்றிருக்கிறவன்” என்று பொருள். இவனுடைய பெயர் மேஷாக் என்று மாற்றப்பட்டிருக்கிறது. இந்தப் பெயருக்கு “”அகுவைப்போன்றிருக்கிறவன்” என்று பொருள். (தானி 1:6-7)

4. அசரியா. இந்தப்பெயருக்கு “”கர்த்தர் இவனுக்கு உதவிபுரிகிறார்” என்று பொருள். இவனுடைய பெயர் ஆபேத் நேகோ என்று மாற்றப் பட்டிருக்கிறது. இந்தப் பெயருக்கு “”நேகோவின் ஊழியக்காரர்” என்று பொருள். நேபோ பாபிலோனியரின் அறிவு, ஞானம், இலக்கியம் ஆகியவற்றின் தெய்வமாகும். (தானி 1:6-7; ஏசா 46:1)

சிறைப்பிடித்து வரப்பட்ட அடிமைகளுக்குப் பாபிலோனியர் தங்களுடைய தேசத்துப் பெயரைச் சூட்டுவது வழக்கம். அவர்கள் தங்களுடைய அடிமைகளாக இருக்கிறார்கள் என்பதைத் தங்கள் தேசத்துப் பெயர்களின் மூலமாகப் பாபிலோனியர் தெரியப்படுத்துகிறார்கள். (ஆதி 41:45; 2இராஜா23:34; 2இராஜா 24:17).

பருப்பு முதலான மரக்கறிகள் தானி 1:8-16

தானி 1:8. தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்.

தானி 1:9. தேவன் தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார்.

தானி 1:10. பிரதானிகளின் தலைவன் தானியேலை நோக்கி: உங்களுக்குப் போஜனத்தையும் பானத்தையும் குறித்திருக்கிற ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு நான் பயப்படுகிறேன்; அவர் உங்களோடொத்த வா-பரின் முகங்களைப்பார்க்கிலும் உங்கள் முகங்கள் வாடிப்போனவைகளாகக் காணவேண்டியதென்ன? அதினால் ராஜா என்னைச் சிரச்சேதம்பண்ணுவாரே என்றான்.

தானி 1:11. அப்பொழுது பிரதானிகளின் தலைவனாலே, தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள்மேல் விசாரிப்புக்காரனாக வைக்கப்பட்ட மேல்ஷார் என்பவனை தானியேல் நோக்கி:

தானி 1:12. பத்துநாள்வரைக்கும் உமது அடியாரைச் சோதித்துப்பாரும்; எங்களுக்குப் புசிக்க பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து,

தானி 1:13. எங்கள் முகங்களையும் ராஜபோஜனத்தில் புசிக்கிற வா-பருடைய முகங்களையும் ஒத்துப்பாரும்; பின்பு நீர் காண்கிறபடி உமது அடியாருக்குச் செய்யும் என்றான்.

தானி 1:14. அவன் இந்தக் காரியத்திலே அவர்களுக்குச் செவிகொடுத்து, பத்துநாளளவும் அவர்களைச் சோதித்துப்பார்த்தான்.

தானி 1:15. பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வா-பரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது.

தானி 1:16. ஆகையால் மேல்ஷார் அவர்கள் புசிக்கக் கட்டளையான போஜனத்தையும், அவர்கள் குடிக்கக் கட்டளையான திராட்சரசத்தையும் நீக்கிவைத்து, அவர்களுக்குப் பருப்பு முதலானவைகளைக் கொடுத்தான்.

தேவன் தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்கிறார் (தானி 1:9). யோசேப்புக்கு சிறைச்சாலை காவல்காரன் தயவு காண்பித்ததுபோல, தானியேலுக்கு பிரதானிகளின் தலைவன் தயவும் இரக்கமும் காண்பிக்கிறான்.

தானியேல் பாபிலோன் தேசத்து சிறையிருப்பிலிருந்தாலும், அவர் கர்த்தரிடத்தில் பயபக்தியாயிருக்கிறார். யூதமார்க்கத்தின் பிரமாணங்களுக்கு கீழ்ப்படிந்து ஜீவிக்கிறார். கல்தேயர்கள் தானியேலின் பெயரை மாற்றினார்கள். ஆனாலும் அவர்களால் தானியேலின் சுபாவத்தை மாற்ற முடியவில்லை.

கல்தேயர்கள் தங்களுக்கு பிடித்தமான பெயரை தானியேலுக்கு கொடுத்தார்கள். தானியேலை எப்படி அழைக்கவேண்டுமென்று விரும்பினார்களோ அப்படி அழைத்தார்கள். தானியேலோ கர்த்தரால் இஸ்ரவேலன் என்று அழைக்கப்படுகிறார். கர்த்தருடைய ஆவியானவர் தானியேலினிடத்தில் மாறாதவராயிருக்கிறார். பெயர்கள் மாறலாம். கர்த்தருடைய அன்பும் இரக்கமும் ஒருபோதும் மாறாது.

ராஜாவின் போஜனத்தினாலும், ராஜா பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது என்று தானியேல் தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணினார் (தானி 1:8). தானியேலோடு, அவருடைய சிநேகிதரான அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோரும் தங்களை தீட்டுப்படுத்தலாகாது என்று தீர்மானம்பண்ணினார்கள் (தானி 1:11).

இந்த தீர்மானம் அவர்களுடைய மனச்சாட்சியில் உண்டாயிற்று. ராஜாவின் போஜனத்தைப் புசிப்பதும், அவர் பானம் பண்ணும் திராட்சரசத்தை பானம்பண்ணுவதும் தீட்டானதல்ல. மோசேயின் பிரமாணத்தில் இவை தீட்டானது என்று சொல்லப்படவில்லை. ஆனாலும் ராஜாவின் போஜனத்தைப் புசிப்பதும், அவர் பானம் பண்ணும் திராட்சரசத்தை பானம்பண்ணுவதும் பாவமானது என்று தானியேலும், அவருடைய மூன்று சிநேகிதரும் தீர்மானம்பண்ணுகிறார்கள்.

ராஜாவின் போஜனத்தில் ஒருவேளை பன்றியின் இறைச்சி கலந்திருக்கலாம். பன்றியின் மாம்சம் யூதருக்கு தீட்டானது. விக்கிரகங்களுக்கு பலியிடப்பட்ட மிருகங்களின் மாம்சத்தை ராஜா புசிக்கலாம். ராஜா புசிக்கும் போஜனத்தை விக்கிரகங்களுக்கு படைத்து, விக்கிரகங்களின் பெயரினால் அவற்றை ஆசீர்வாதம்பண்ணியிருக்கலாம். இவையெல்லாமே யூதருக்கு தீட்டானது.

போஜனவிஷயங்களில் இஸ்ரவேல் தேசத்தாருக்கும், புறஜாதி தேசத்தாருக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உண்டு. இஸ்ரவேல் தேசத்தார் மோசேயின் பிரமாணத்தில் அனுமதிக்கப்பட்ட போஜனங்களை மாத்திரமே புசிப்பார்கள். மோசேயின் பிரமாணத்தில் எதெல்லாம் தீட்டானது என்று சொல்லப்பட்டிருக்கிறதோ, அவையெல்லாவற்றையும் யூதர்கள் ஒதுக்கிவிடுவார்கள். தீட்டானதை புசிக்கமாட்டார்கள்.

“”நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்தி-ருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக. சுத்தமானதற்கும் அசுத்தமானதற்கும், புசிக்கத்தக்க ஜந்துக்களுக்கும் புசிக்கத்தகாத ஜந்துக்களுக்கும் வித்தியாசம்பண்ணும்பொருட்டு, மிருகத்துக்கும் பறவைகளுக்கும், தண்ணீர்களில் நீந்துகிற சகல ஜீவஜந்துக்களுக்கும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளுக்கும் அடுத்த பிரமாணம் இதுவே என்று சொல்லுங்கள் என்றார்” (லேவி 11:45-47).

தானியேலும், அவருடைய சிநேகிதர்களும் கர்த்தரிடத்தில் பக்திவைராக்கியமாயிருக்கிறார்கள். கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்யக்கூடாது என்று தீர்மானமாயிருக்கிறார்கள். இராஜாவின் போஜனத்தைப் புசிப்பதும் அவர் பானம் பண்ணும் திராட்சரசத்தை பானம்பண்ணுவதும் பாவமானதல்ல. ஆனாலும் மற்ற பாவங்களை செய்வதற்கு இவை தங்களுக்கு தூண்டுதலாக இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள்.

எருசலேம் மிகுந்த நெருக்கத்திலிருக்கிறது. எருசலேமிலிருக்கிறவர்கள் வேதனைகளையும், பாடுகளையும், உபத்திரவங்களையும் அனுபவிக்கிறார்கள். தானியேலும் அவருடைய சிநேகிதர்களுமோ பாபிலோன் தேசத்து சிறையிருப்பிலிருக்கிறார்கள். எல்லோரும் வேதனையிலிருக்கும்போது, இவர்களுக்கு இராஜாவின் போஜனத்தைப் புசிக்கவோ, அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தை பானம்பண்ணவோ மனதில்லை. இவர்களும் துக்கத்திலிருக்கிறார்கள். துக்கம் மிகுதியாகும்போது விருந்துகளில் பங்குபெற முடியாது.

தானியேல் பிரதானிகளின் தலைவனிடத்தில் தன்னுடைய விருப்பத்தைச் சொல்லுகிறான். தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி அவனிடத்தில் வேண்டிக்கொள்கிறான். பிரதானிகளின் தலைவனோ தானியேலின் விண்ணப்பத்தை அங்கீகரிக்கவில்லை.

பிரதானிகளின் தலைவன் தானியேலிடம், “”உங்களுக்குப் போஜனத்தையும் பானத்தையும் குறித்திருக்கிற ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு நான் பயப்படுகிறேன்; அவர் உங்களோடொத்த வா-பரின் முகங்களைப்பார்க்கிலும் உங்கள் முகங்கள் வாடிப்போனவைகளாகக் காணவேண்டியதென்ன? அதினால் ராஜா என்னைச் சிரச்சேதம்பண்ணுவாரே” (தானி 1:10) என்று சொல்லுகிறான்.

பிரதானிகளின் தலைவன் தானியேலுக்கும், அவருடைய சிநேகிதருக்கும் உதவிசெய்தால், இராஜா பிரதானிகளின் தலைவன்மேல் கோபப்படுவார். இவர்களுக்கு நியமிக்கப்பட்ட நேர்த்தியான போஜனங்களைப் புசிக்கவில்லையென்றால், இவர்களுடைய சரீர ஆரோக்கியம் கெட்டுப்போகும். இந்த வாலிபர்கள் புஷ்டியாயிராமல், முகம் வாடினவர்களாயிருப்பார்கள். இதினால் இராஜா தன்னை சிரச்சேதம்பண்ணிவிடுவான் என்று பிரதானிகளின் தலைவன் பயப்படுகிறான் (தானி 1:10).

தன்னுடைய விண்ணப்பத்திற்கு செவிகொடுத்து, தன்னையும் தன்னுடைய சிநேகிதர்களையும் சோதித்துப் பார்ப்பதற்கு தானியேல் இடங்கொடுக்கிறான். தானியேலையும், அவனுடைய சிநேகிதரையும் விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டிருக்கிற விசாரிப்புக்காரனுடைய பெயர். “”மேல்ஷார்” என்பதாகும். இவன் பிரதானிகளின் தலைவனாலே, தானியேலுக்கும், அவனுடைய சிநேதருக்கும் விசாரிப்புக்காரனாக வைக்கப்பட்டவன். தானியேல் மேல்ஷாரிடம் பேசுகிறான்.

தானியேல், மேல்ஷாரை நோக்கி, “”பத்துநாள்வரைக்கும் உமது அடியாரைச் சோதித்துப்பாரும்; எங்களுக்குப் புசிக்க பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து, எங்கள் முகங்களையும் ராஜபோஜனத்தில் புசிக்கிற வா-பருடைய முகங்களையும் ஒத்துப்பாரும்; பின்பு நீர் காண்கிறபடி உமது அடியாருக்குச் செய்யும்” (தானி 1:12,13) என்று சொல்லுகிறான்.

தானியேலும் அவருடைய சிநேகிதரும் மரக்கறிகளையும், பழங்களையும், கீரை வகைகளையும், பருப்பு வகைகளையும் மாத்திரம் புசிப்பார்கள். தண்ணீரை மாத்திரம் பானம்பண்ணுவார்கள். மேல்ஷார் தானியேலின் விண்ணப்பத்திற்கு செவிகொடுக்கிறான். பத்துநாளளவும் அவர்களை சோதித்துப் பார்க்கிறான் (தானி 1:14).

பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வா-பரைப்பார்க்கிலும், தானியேலும், அவருடைய சிநேகிதர்களின் முகங்களும் களையுள்ளதாயும், அவர்களுடைய சரீரங்கள் புஷ்டியுள்ளதாயும் காணப்படுகிறது (தானி 1:15)

இந்த முகக்களையும், சரீர புஷ்டியும் மறக்கறியினாலோ, தண்ணீராலோ உண்டானதல்ல. இது கர்த்தருடைய விசேஷித்த கிருபை. எபிரெய வாலிபர்கள் கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாயிருக்க வேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள். தங்களைத் தீட்டுப்படுத்தாமல், போஜனவிஷயங்களிலும் கர்த்தருக்கு பரிசுத்தமாயிருக்கவேண்டுமென்று விரும்பினார்கள். கர்த்தர் அவர்களுடைய மனவிருப்பங்களை நிறைவேற்றிக் கொடுக்கிறார்.

அவர்களை விசாரிப்பதற்காக வைக்கப்பட்ட மேல்ஷாரும் தானியேலையோ, அவருடைய மூன்று சிநேகிதரையோ, இராஜாவின் போஜனத்தைப் புசிக்க வேண்டுமென்று கட்டாயம் பண்ணவில்லை. தானியேலுக்கு எல்லா காரியங்களும் கை கூடி வருகிறது. அவர்களுடைய மனச்சாட்சி சுத்தமாயிருக்கிறது.

கர்த்தருடைய உன்னதமான ஊழியத்தை செய்வதற்கு தானியேலும் அவருடைய சிநேகிதரும் தங்களை ஒப்புக்கொடுக்கிறார்கள். தங்களுடைய சரீரங்களை பிரதிஷ்டைபண்ணுகிறார்கள். தங்களுடைய மனதை சுத்தமாகக் காத்துக்கொள்கிறார்கள். தங்களுடைய ஜீவியத்தில் எந்த குழப்பத்திற்கும் இடங்கொடுக்காமல், தெளிந்த சிந்தனையோடிருக்கிறார்கள்.

கர்த்தருடைய ஊழியக்காரர்கள் தங்களைத் தாங்களே வெறுக்கவேண்டும். தங்கள் சுயத்தை வெறுத்து, எளிமையாய் ஜீவிக்க கற்றுக்கொள்ளவேண்டும். கடினமான வேலைகளைச் செய்வதற்கு தங்களை ஆயத்தம்பண்ணவேண்டும். சத்தியத்தின் பாதை வழியாக நடக்கப் பழகிக்கொள்ளவேண்டும். கர்த்தருக்கு உண்மையுள்ள ஊழியர்களாக ஊழியம் செய்ய நம்மை அர்ப்பணிக்கவேண்டும். கர்த்தருக்காக தியாகம் பண்ண ஆயத்தமாயிருக்கவேண்டும். இப்படிப்பட்டவர்கள் எரிகிற அக்கினி சூளையையும், சிங்கத்தின் கெபியையும் எளிதாக கடந்து வருவார்கள். ஊழியப்பாதையில் எவ்வளவு பெரிய கஷ்டங்களும், தடைகளும் வந்தாலும் அவற்றையெல்லாம் எளிதாக மேற்கொள்வார்கள்.

ராஜாவின் போஜனத்தில் பரிமாறப்படும் பதார்த்தங்களில் சில மோசேயின் பிரமாணத்தின்படி ஒதுக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. தானியேல் மோசேயின் பிரமாணத்தை மீறி தன்னைத் தீட்டுப்படுத்த விரும்பவில்லை. ஒருவேளை மிருகத்தின் மாம்சங்கள் முறைப்படி கொல்லப் படாமல் இருந்திருக்கலாம். (லேவி 3:17; லேவி 7:26; லேவி 17:10-14; லேவி 19:26) ஒருவேளை போஜனங்கள் விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதாகவும் இருந்திருக்கலாம். (யாத் 34:15; 1கொரி 10:20).

தானியேலிடமும் யோசேப்பிடமும் காணப்படும் ஒற்றுமைகள்

1. இருவரும் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தார்கள். (ஆதி 37)

2. தங்களைச் சிறைப்பிடித்தவர்களின் கண்களில் இவர்களுக்குத் தயவு கிடைக்கிறது. (ஆதி 39:21=தானி 1:9)

3. இருவரும் சொப்பனங்களை வியாக்கியானம் பண்ணினார்கள். (தானி 1:17= ஆதி 37:5-11; ஆதி 41:1-45)

4. இருவரையும் அவர்களுடைய ராஜாக்கள் உயர்த்தினார்கள். (தானி 2:46-49; தானி 5:29; தானி 6:26=ஆதி 41)

5. இருவரும் தங்களைத் தீட்டுப்படுத்தாதபடி பரிசுத்தமாக ஜீவித்தார்கள். (தானி 1:8=ஆதி 39:12)

தானியேல் கர்த்தரிடத்தில் விசுவாசமாக இருக்கிறான். பத்து நாட்களில் தங்களைச் சோதித்துப் பார்க்கலாம் என்று அறிவிக்கிறான். கர்த்தருடைய அனுக்கிரகம் இருந்தால் மட்டுமே பத்துநாள் உணவு பழக்கத்தில் அவர்களுடைய சரீரத்தில் வித்தியாசம் உண்டாகும். (தானி 1:15). இதனால் யூதர்கள் சைவ உணவை மட்டுமே புசிப்பார்கள் என்பது பொருளல்ல. மோசேயின் பிரமாணத்தின்படி அங்கிகரிக்கப்படாத மாம்சங்களை யூதர்கள் புசிக்கமாட்டார்கள். (தானி 1:8).

பத்து மடங்கு சமர்த்தர் தானி 1:17-21

தானி 1:17. இந்த நாலு வா-பருக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்; தானியேலைச் சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார்.

தானி 1:18. அவர்களை ராஜாவினிடத்தில் கொண்டுவருகிறதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறினபோது, பிரதானிகளின் தலைவன் அவர்களை நேபுகாத்நேச்சாருக்கு முன்பாகக் கொண்டுவந்து விட்டான்.

தானி 1:19. ராஜா அவர்களோடே பேசினான்; அவர்கள் எல்லாருக்குள்ளும் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்களைப்போல வேறொருவரும் காணப்படவில்லை; ஆகையால் இவர்கள் ராஜசமுகத்தில் நின்றார்கள்.

தானி 1:20. ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் பத்து மடங்கு சமர்த்தராகக் கண்டான்.

தானி 1:21. கோரேஸ் ராஜ்யபாரம்பண்ணும் முதலாம் வருஷமட்டும் தானியேல் அங்கே இருந்தான்.

கர்த்தர் தானியேலையும், அவருடைய சிநேகிதரையும் ஆசீர்வதிக்கிறார். கர்த்தர் இந்த நாலு வா-பருக்கும் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுக்கிறார்; இந்த நாலு வாலிபரில், கர்த்தர் தானியேலை விசேஷமாய் ஆசீர்வதிக்கிறார். அவர் தானியேலைச் சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்குகிறார் (தானி 1:7).

நாலு எபிரெய வாலிபர்களும் பாபிலோன் தேசத்து சிறையிருப்பிலிருக்கிறார்கள். அந்நிய தேசத்திலே பாடுகளையும் வேதனைகளையும் அனுபவிப்பதற்கு இவர்கள் ஒரு பாவமும் செய்யவில்லை. இந்த நான்கு எபிரெய வாலிபர்களும் தங்களுடைய பிதாக்களின் அக்கிரமத்தை சுமக்கிறார்கள்.

இவர்கள் ராஜகுலத்தைச் சேர்ந்தவர்கள். துரைமக்கள். எருசலேமிலுள்ள அரண்மனையில் சவுகரியகமாய் வாழவேண்டியவர்கள். தங்கள் பெற்றோர்களும், முன்னோர்களும் செய்த பாவத்திற்கு, இந்த வாலிபர்கள் தண்டனைகளை அனுபவிக்கிறார்கள். தங்கள் தேசத்தில், தாங்கள் அனுபவிக்கவேண்டிய மகிமைகளையும், மரியாதைகளையும், கனத்தையும், சந்தோஷத்தையும் இழந்து, பாபிலோன் தேசத்தில் அடிமைகளாயிருக்கிறார்கள்.

கர்த்தர் இந்த நாலு வாலிபருக்கும் தம்முடைய விசேஷித்த கிருபைகளைக் கொடுக்கிறார். அவர்கள் இழந்துபோன நன்மைகளுக்கு ஈடாக, கர்த்தர் அவர்களுக்கு புதிய நன்மைகளைக் கொடுக்கிறார். அவர்கள் அந்நிய தேசத்திலிருந்தாலும், அந்த தேசத்தில் அவர்களுக்கு புதிய மரியாதைகளையும், புதிய ஆசீர்வாதங்களையும், புதிய சந்தோஷங்களையும் கொடுக்கிறார்.

தானியேலும் அவருடைய சிநேகிதரும் கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாயிருக்க வேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள். கர்த்தரிடத்தில் பக்திவைராக்கியமாயிருந்தார்கள். பெரிய காரியங்கள் மாத்திரமல்ல, சிறிய காரியத்திலும் தங்களைத் தீட்டுப்படுத்தக்கூடாது என்று தீர்மானம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடைய தீர்மானத்தை கனம்பண்ணுகிறார். தானியேலுக்கு கர்த்தரிடத்திலிருந்து இரட்டிப்பான ஆசீர்வாதம் கிடைக்கிறது. கர்த்தர் தானியேலை சகல தரிசனங்களையும், சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்குகிறார்.

தானியேலும், அவருடைய மூன்று சிநேகிதரும் விசாரிப்புக்காரனாகிய மேல்ஷாரின் பராமரிப்பில் வளர்க்கப்படுகிறார்கள். அவர்கள் மூன்று வருஷங்களாக கல்தேயரின் எழுத்தையும் பாஷையையும் கற்றுக்கொள்கிறார்கள். போஜனவிஷயங்களில் தங்களைத் தீட்டுப்படுத்தாதபடி, தங்களுடைய மனச்சாட்சிக்கு உண்மையுள்ளவர்களாயிருக்கிறார்கள்.

மூன்று வருஷங்களுக்கு பின்பு தானியேலையும் அவருடைய மூன்று சிநேகிதரையும் நேபுகாத்நேச்சார் ராஜாவினிடத்தில் கொண்டு வருகிறதற்கு நாட்கள் குறிக்கப்பட்டிருக்கிறது. அந்த குறிப்பிட்ட நாளில், பிரதானிகளின் தலைவன் அவர்களை நேபுகாத்நேச்சாருக்கு முன்பாக கொண்டு வந்து விடுகிறான். இந்த நான்கு வாலிபர்களோடு சேர்ந்து இன்னும் ஏராளமான வாலிபர்கள் இராஜாவுக்கு முன்பாக கொண்டு வந்து விடப்படுகிறார்கள். இவர்கள் எல்லோருமே பாபிலோன் தேசத்தில் அடிமைகளாகயிருக்கிறவர்கள். இவர்கள் எல்லோருக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது.

நேபுகாத்நேச்சார் அவர்களோடே பேசுகிறான். அவர்களுடைய திறமைகளை சோதித்துப் பார்க்கிறான். அவர்களுடைய முகக்களையை ஒப்பிட்டுப்பார்க்கிறான். அவர்களுடைய சரீர புஷ்டியையும் கவனிக்கிறான். தானியேலும், அவருடைய மூன்று சிநேகிதரும் மிகவும் விசேஷித்த முகக்களையிலிருக்கிறார்கள். அவர்களுடைய சரீரம் புஷ்டியாயும் ஆரோக்கியமாயும் இருக்கிறது. கர்த்தர் இவர்களுக்கு எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்திருக்கிறார்.

ராஜாவுக்கு முன்பாக கொண்டு வந்து விடப்பட்ட எல்லோருக்குள்ளும் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்களைப்போல வேறொருவரும் காணப்படவில்லை; ஆகையால் இவர்கள் ராஜசமுகத்தில் நிற்கிறார்கள்(தானி 1:19).

நேபுகாத்நேச்சார், ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எல்லா விஷயத்திலும் அவர்களைக் கேட்டு விசாரிக்கிறான். அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும், தானியேலையும், அவருடைய மூன்று சிநேகிதர்களையும் பத்து மடங்கு சமர்த்தராகக் கண்கிறான் (தானி 1:20).

தானியேலும் அவருடைய மூன்று சிநேகிதரும் எபிரெயர்கள். அவர்கள் பாபிலோன் தேசத்திலே அடிமைகளாகயிருக்கிறார்கள். நேபுகாத்நேச்சார் அவர்களை எல்லா விஷயங்களிலும் சோதித்துப் பார்க்கிறான். அவர்களுடைய ஞானத்தை ஆராய்ந்து பார்க்கிறான். அவர்கள் மற்றவர்களைவிட சமர்த்தராகயிருக்கிறார்கள். இராஜா தானியேலையும், அவருடைய மூன்று சிநேகிதரையும் தம்முடைய இராஜசமுகத்தில் நிற்குமாறு தீர்ப்பு சொல்லுகிறான். அடிமைகளாகயிருந்த அவர்கள், கர்த்தருடைய கிருபையினால் இப்போது, இராஜாவுக்கு முன்பாக நின்று சேவை செய்கிற சிலாக்கியத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

தானியேல் பல வருஷங்களாக அரண்மனையிலே சேவை செய்கிறார். கோரேஸ் ராஜ்யபாரம்பண்ணும் முதலாம் வருஷமட்டும் தானியேல் அங்கே இருக்கிறார் (தானி 1:21).

தேவன் நான்கு எபிரெய வாலிபர்களுக்கும் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுக்கிறார் (தானி 1:17). நான்கு எபிரெய வாலிபர்களோடும் கர்த்தர் அவர்கள் கூடவேயிருந்து அவர்களை ஆசீர்வதிக்கிறார். போஜன விஷயத்தில் அவர்கள் கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாக இருந்ததினால் கர்த்தர் அவர்களைச் சரீரப் பிரகாரமாகவும் ஆசீர்வதித்து அவர்களுக்கு சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார். (தானி 1:8-16).

கர்த்தர் தானியேலைச் சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார் (தானி 1:17). சொப்பனங்களை வியாக்கியானம் பண்ணுவது அந்நிய பாஷைகளுக்கு அர்த்தம் கூறுவதைப் போன்றது. (1கொரி 12:10,30; 1கொரி 14:26-28). பரிசுத்த ஆவியின் வரத்தினால் மாத்திரமே சொப்பனத்திற்கு அர்த்தம் கூறமுடியும். கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை அபிஷேகித்து, இதுபோன்ற வரங்களைக் கொடுக்கிறார். (1கொரி 12:4-11). தானியேல் தேவனுடைய நாமமகிமைக்காக இந்த வரத்தைப் பலமுறை பயன்படுத்தியிருக்கிறார். (தானி 2; தானி4; தானி 5; தானி 7; தானி 8; தானி 9; தானி 10-12)

“”பத்து மடங்கு சமர்த்தராகக் கண்டான்” (தானி 1:20) என்பது எபிரெயருடைய வழக்குச் சொல். இதற்குப் பலமடங்கு விசேஷித்த திறமையுள்ளவன் என்று பொருள்.

பாபிலோன் தேசத்தில் யூதா தேசத்தார் எழுபது வருஷங்களாகச் சிறையிருப்பில் இருக்கிறார்கள். தானியேல் இந்த எழுபது வருஷங்களிலும், அரமனையில் விசாரிப்புக்காரனாக இருக்கிறான். கோரோஸ் ராஜ்யபாரம்பண்ணும் முதலாம் வருஷமட்டும் தானியேல் பாபிலோனில் தங்கியிருக்கிறான். (தானி 9:2) இக்காலத்தில் தானியேல் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தை எழுதியிருக்க வேண்டும். தானியேல் இதற்குப் பின்பு உயிரோடு இருந்தாரா என்று தெரியவில்லை.

Leave a Reply