தானியேல் 2ஆம் அதிகாரம் வேத ஆராய்ச்சி

தானியேல் 2ஆம் அதிகாரம் வேத ஆராய்ச்சி

நேபுகாத்நேச்சார் ஒரு சொப்பனம் காண்கிறான். தானியேல் அந்த சொப்பனத்திற்கு வியாக்கியானம் சொல்லுகிறார். தானியேல் நான்கு ராஜ்யங்களைப்பற்றிச் சொல்லுகிறார். அந்த ராஜ்யங்களோடு இஸ்ரவேல் தேசத்திற்குள்ள தொடர்பையும் விவரிக்கிறார். அந்த ராஜ்யங்களின் அழிவின்மீது, இந்தப் பூமியிலே மேசியாவின் ராஜ்யம் ஸ்தாபிக்கப்படும்.

நேபுகாத்நேச்சார் ஒரு சொப்பனத்தைக் காண்கிறான். அவனுடைய ஆவி கலங்குகிறது. தன்னுடைய சொப்பனங்களை தனக்கு தெரிவிக்கும் பொருட்டு ஜோசியரையும், கல்தேயரையும் வரவழைக்கிறான் (எசே 2:1-11).

பாபிலோனிலிருக்கிற எல்லா ஞானிகளையும் கொலைசெய்யும்படி நேபுகாத்நேச்சார் கட்டளையிடுகிறான் (எசே 2:12-15). தானியேலும் அவனுடைய சிநேகிதரும் கர்த்தரிடத்தில் ஜெபம் பண்ணுகிறார்கள். கர்த்தர் நேபுகாத் நேச்சாருடைய சொப்பனத்தின் மறைபொருளை வெளிப்படுத்துகிறார். தானியேல் கர்த்தரைத் துதிக்கிறார் (எசே 2:16-23).

தானியேல் நேபுகாத்நேச்சாருக்கு அவனுடைய சொப்பனத்தையும், சொப்பனத்தின் அர்த்தத்தையும் சொல்லுகிறார் (எசே 2:24-45). இராஜா தானியேலைக் கனம்பண்ணுகிறான் . இராஜா தானியேலை பாபிலோன் மகாணம் முழுதுக்கும் அதிபதியாக நியமிக்கிறான். தானியேலின் சிநேகிதர்கள் பாபிலோன் மாகாணத்தில் காரியங்களை விசாரிக்க நியமிக்கப்படுகிறார்கள் (எசே 2:46-49).

நேபுகாத்நேச்சார் சொப்பனங்களைக் கண்டான் தானி 2:1-13

தானி 2:1. நேபுகாத்நேச்சார் ராஜ்யபாரம்பண்ணும் இரண்டாம் வருஷத்திலே, நேபுகாத்நேச்சார் சொப்பனங்களைக் கண்டான்; அதினால், அவனுடைய ஆவி கலங்கி, அவனுடைய நித்திரை கலைந்தது.

தானி 2:2. அப்பொழுது ராஜா தன் சொப்பனங்களைத் தனக்குத் தெரிவிக்கும்பொருட்டு சாஸ்திரிகளையும் ஜோசியரையும் சூனியக்காரரையும் கல்தேயரையும் அழைக்கச் சொன்னான்; அவர்கள் வந்து, ராஜசமுகத்தில் நின்றார்கள்.

தானி 2:3. ராஜா அவர்களை நோக்கி: ஒரு சொப்பனம் கண்டேன்; அந்தச் சொப்பனத்தை அறியவேண்டுமென்று என் ஆவி கலங்கியிருக்கிறது என்றான்.

தானி 2:4. அப்பொழுது கல்தேயர் ராஜாவை நோக்கி: ராஜாவே, நீர் என்றும் வாழ்க; சொப்பனத்தை உமது அடியாருக்குச் சொல்லும், அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம் என்று சீரிய பாஷையிலே சொன்னார்கள்.

தானி 2:5. ராஜா கல்தேயருக்குப் பிரதியுத்தரமாக: என்னிடத்தி-ருந்து பிறக்கிற தீர்மானம் என்னவென்றால், நீங்கள் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் எனக்கு அறிவியாமற்போனால் துண்டித்துப்போடப்படுவீர்கள்; உங்கள் வீடுகள் எருக்களங்களாக்கப்படும்.

தானி 2:6. சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் தெரிவித்தீர்களேயாகில், என்னிடத்தில் வெகுமதிகளையும் பரிசுகளையும் மிகுந்த கனத்தையும் பெறுவீர்கள்; ஆகையால் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் எனக்குத் தெரிவியுங்கள் என்றான்.

தானி 2:7. அவர்கள் மறுபடியும் பிரதியுத்தரமாக: ராஜா அடியாருக்குச் சொப்பனத்தைச் சொல்வாராக; அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம் என்றார்கள்.

தானி 2:8. அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: என்னிடத்தி-ருந்து தீர்மானம் பிறந்தபடியினாலே நீங்கள் காலதாமசம்பண்ணப்பார்க்கிறீர்களென்று நிச்சயமாக எனக்குத் தெரியவருகிறது.

தானி 2:9. காலம் மாறுமென்று நீங்கள் எனக்கு முன்பாக பொய்யும் புரட்டுமான விசேஷத்தைச் சொல்லும்படி எத்தனம்பண்ணி இருக்கிறீர்கள்; நீங்கள் சொப்பனத்தை எனக்குத் தெரிவிக்காமற்போனால், உங்களெல்லாருக்கும் இந்த ஒரே தீர்ப்பு பிறந்திருக்கிறது; ஆகையால் சொப்பனத்தை எனக்குச் சொல்லுங்கள்; அப்பொழுது அதின்அர்த்தத்தையும் உங்களால் காண்பிக்கக்கூடுமென்று அறிந்துகொள்ளுவேன் என்றான்.

தானி 2:10. கல்தேயர் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: ராஜா கேட்கும் காரியத்தை அறிவிக்கத்தக்க மனுஷன் பூமியில் ஒருவனும் இல்லை; ஆகையால் மகத்துவமும் வல்லமையுமான எந்த ராஜாவும் இப்படிப்பட்ட காரியத்தை ஒரு சாஸ்திரியினிடத்திலாவது ஜோசியனிடத்திலாவது கல்தேயனிடத்திலாவது கேட்டதில்லை.

தானி 2:11. ராஜா கேட்கிற காரியம் மிகவும் அருமையானது; மாம்சமாயிருக்கிறவர்களோடே வாசம்பண்ணாத தேவர்களேயொழிய ராஜசமுகத்தில் அதை அறிவிக்கத்தக்கவர் ஒருவரும் இல்லை என்றார்கள்.

தானி 2:12. இதினிமித்தம் ராஜா மகா கோபமும் உக்கிரமுங்கொண்டு, பாபிலோனில் இருக்கிற எல்லா ஞானிகளையும் கொலைசெய்யும்படி கட்டளையிட்டான்.

தானி 2:13. ஞானிகளைக் கொலைசெய்யவேண்டுமென்கிற கட்டளை வெளிப்பட்டபோது, தானியேலையும் அவன் தோழரையும் கொலைசெய்யத் தேடினார்கள்.

நேபுகாத்நேச்சார் ராஜ்யபாரம்பண்ணும் இரண்டாம் வருஷத்திலே, அவன் சொப்பனங்களைக் காண்கிறான். இந்த சரித்திரத்தின் சரியான காலத்தை கணிப்பது கடினமாக உள்ளது. முதலாம் வருஷத்தில் தானியேல் பாபிலோன் தேசத்திற்கு சிறைப்பிடித்து கொண்டுபோகப்பண்ணுகிறான். தானியேல் மூன்று வருஷங்களாக கல்தேயரின் எழுத்துக்களையும் பாஷைகளையும் கற்றுக்கொள்கிறான். மூன்று வருஷத்தின் முடிவில், தானியேல் ராஜாவுக்கு முன்பாக நிற்கும்படி கட்டளை பிறந்திருக்கிறது (தானி 1:5).

இந்த அதிகாரத்தில் நேபுகாத்நேச்சார் ராஜ்யபாரம்பண்ணும் இரண்டாம் வருஷத்திலே அவன் சொப்பனங்களைக் கண்டதாக எழுதப்பட்டிருக்கிறது (தானி 2:1). தானியேல் மூன்று வருஷத்திற்கு பின்புதான் இராஜாவின் சமுகத்திற்கு முன்பாக நிறுத்தப்படுகிறான். ஆனால் இங்கோ இரண்டாம் வருஷத்திலே இராஜா சொப்பனங்கண்டான் என்று எழுதப்பட்டிருக்கிறது. இதற்கு வேதபண்டிதர்கள் வெவ்வேறு விளக்கங்களை சொல்லுகிறார்கள்.

தானியேல் கல்தேயருடைய எழுத்தையும் பாஷையையும் முதலாவதாக ஒரு வருஷம் மாத்திரம் கற்றுக்கொண்டார் என்று வேதபண்டிதர்கள் ஒரு விளக்கம் சொல்லுகிறார்கள்.

நேபுகாத்நேச்சார் ஆரம்பத்தில் தன்னுடைய தகப்பனாரோடு பாபிலோன் தேசத்தை ஆளுகை செய்தான். அதன் பின்பு நேபுகாத்நேச்சார் தனியாக ராஜ்யபாரம் பண்ணினான். இவ்வாறு அவன் தனியாக ராஜ்யபாரம் பண்ணின இரண்டாம் வருஷத்தில், அவன் இந்த சொப்பனத்தைக் கண்டான் என்று வேதபண்டிதர்கள் இதற்கு விளக்கம் சொல்லுகிறார்கள்.

நேபுகாத்நேச்சாரின் இரண்டாம் வருஷ ராஜ்யபாரம் என்பது, அவன் தன் தகப்பனாரோடு சேர்ந்து ராஜ்யபாரம் பண்ணின ஐந்தாம் அல்லது ஆறாம் வருஷத்தைக் குறிக்கும்.

“”இரண்டாம் வருஷத்திலே” என்னும் வாக்கியம், தானியேல் ராஜாவுக்கு முன்பாக நிறுத்தப்பட்டு, இரண்டு வருஷம் சென்ற பின்பு என்றும் பொருள் சொல்லலாம்.

எசேக்கியேலின் புஸ்தகத்தில் தானியேலைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. தானியேல் ஞானத்திலும் ஜெபத்திலும் சிறந்து விளங்கினார். நேபுகாத்நேச்சாரின் ஆரம்பகால ஆட்சியிலேயே தானியேல் பிரசித்திப் பெற்றவராக விளங்கினார் என்றும் இந்த வசனத்திற்கு வேதபண்டிதர்கள் விளக்கம் சொல்லுகிறார்கள்.

நேபுகாத்நேச்சார் சொப்பனங்களைக் காண்கிறான். ஆனால் தான் கண்ட சொப்பனங்களை அவன் மறந்துவிடுகிறான். இதனால் அவனுடைய ஆவி கலங்குகிறது. அவனுடைய நித்திரை கலைகிறது. இந்த சொப்பனம் கர்த்தரால் உண்டாயிற்று. நேபுகாத்நேச்சார் தேவனுடையஇஸ்ரவேல் ஜனங்களுக்கு பிரச்சனையாகயிருந்தான். அவர்களை துன்பப்படுத்தினான். இதனால் இஸ்ரவேலின் தேவன் நேபுகாத்நேச்சாரை துன்பப்படுத்துகிறார். அவனுடைய ஆவியை கலக்குகிறார்.

நேபுகாத்நேச்சார் கண்ட சொப்பனம் கர்த்தர் மூலமாகவே உண்டாயிற்று. இந்த சொப்பனத்தில் தீர்க்கதரிசன வியாக்கியானங்கள் இடம்பெற்றுள்ளது. நேபுகாத்நேச்சார் பேரரசனாகயிருக்கிறான். அவனிடத்தில் திரளான ஐசுவரியங்கள் இருக்கிறது. படைபலமும் ஆள்பலமும் அவனுக்கு திரளாயிருக்கிறது. ஆனாலும் ஒரு சொப்பனம் அவனைக் கலக்கிவிடுகிறது. அவனுக்கு பெரிய அரண்மனையும், ஆடம்பரமான மஞ்சமும் இருந்தாலும், அவனுடைய நித்திரை கலைந்துவிடுகிறது.

அப்பொழுது ராஜா தன் சொப்பனங்களைத் தனக்குத் தெரிவிக்கும் பொருட்டு சாஸ்திரிகளையும் ஜோசியரையும் சூனியக்காரரையும் கல்தேயரையும் அழைக்கச் சொல்லுகிறான்; அவர்கள் வந்து, ராஜசமுகத்தில் நிற்கிறார்கள் (தானி 2:2). ராஜா கண்ட சொப்பனம் அவனுடைய நினைவில் இல்லை. தான் கண்ட சொப்பனத்தை அவன் மறந்துவிடுகிறான். அதைப்பற்றி நினைத்துப் பார்க்கிறான். ஆனால் அந்த சொப்பனம் அவனுடைய மனதிற்கு வரவில்லை.

ஜோசியர்கள் ராஜசமுகத்தில் வந்து நிள்கிறார்கள். ராஜாவின் சமுகத்தில் வந்து நிற்பது ஜோசியருக்கு பெருமையாயிருக்கிறது. ராஜா அவர்களை நோக்கி: “”ஒரு சொப்பனம் கண்டேன்; அந்தச் சொப்பனத்தை அறியவேண்டுமென்று என் ஆவி கலங்கியிருக்கிறது” (தானி 2:3) என்று சொல்லுகிறான்.

நேபுகாத்நேச்சாரும் தான் கண்ட சொப்பனத்தை மறந்துவிடுகிறான். ஜோசியருக்கும் ராஜா கண்ட சொப்பனம் தெரியவில்லை. அவர்கள் ராஜாவின் சொப்பனத்தை அறிய விரும்புகிறார்கள். சொப்பனம் என்ன என்று தெரிந்தால்தான் அவர்களால் அதற்கு வியாக்கியானம் சொல்ல முடியும்.

அப்பொழுது கல்தேயர் ராஜாவை நோக்கி: “”ராஜாவே, நீர் என்றும் வாழ்க; சொப்பனத்தை உமது அடியாருக்குச் சொல்லும், அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம்” (தானி 2:4) என்று சீரிய பாஷையிலே சொல்லுகிறார்கள்.

ஆனால் ராஜாவோ தன்னுடைய வார்த்தையில் பிடிவாதமாயிருக்கிறான். ஜோசியர்கள் தன்னுடைய சொப்பனத்தையும் சொல்லவேண்டும், அதற்கு அர்த்தத்தையும் சொல்லவேண்டும் என்று ராஜா கட்டளையிடுகிறான். சொப்பனத்தையும், அதன் அர்த்தத்தையும் சொன்னால் அவர்களுக்கு வெகுமதி கிடைக்கும் என்றும், அதைச் சொல்லாவிட்டால் அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்றும் ராஜா தன்னுடைய மனதின் விருப்பத்தைத் தெரிவிக்கிறான்.

ராஜா கல்தேயருக்குப் பிரதியுத்தரமாக: “”என்னிடத்தி-ருந்து பிறக்கிற தீர்மானம் என்னவென்றால், நீங்கள் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் எனக்கு அறிவியாமற்போனால் துண்டித்துப்போடப்படுவீர்கள்; உங்கள் வீடுகள் எருக்களங்களாக்கப்படும். சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் தெரிவித்தீர்களேயாகில், என்னிடத்தில் வெகுமதிகளையும் பரிசுகளையும் மிகுந்த கனத்தையும் பெறுவீர்கள்; ஆகையால் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் எனக்குத் தெரிவியுங்கள்” (தானி 2:5,6) என்று சொல்லுகிறான்.

ராஜா ஜோசியருக்கு ஆசை வார்த்தைகளையும் சொல்லுகிறான். எச்சரிப்பின் வார்த்தைகளையும் சொல்லுகிறான். ஜோசியர்களால் ராஜாவின் சொப்பனத்தை சொல்ல முடியவில்லை. அவர்கள் மறுபடியும் மறுபடியுமாக, ராஜாவினிடத்தில் தாங்கள் சொன்னதையே திரும்ப சொல்லுகிறார்கள். “”ராஜா அடியாருக்குச் சொப்பனத்தைச் சொல்வாராக; அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம்” (தானி 2:7) என்று ஜோசியர்கள் ராஜாவிடம் சொல்லுகிறார்கள்.

ராஜா தன்னுடைய அதிகாரத்தின் ஆணவத்திலிருக்கிறான். அதிகாரத்தின் ஆணவத்திலிருக்கிறவர்கள் நியாயத்தைப்பற்றி சிந்திக்கவும் மாட்டார்கள். அவர்களுக்கு நியாயத்தைப்பற்றிச் சொன்னாலும் அதை செவிகொடுத்து கேட்கவும் மாட்டார்கள். அவர்கள் உண்மைக்கு ஊமைகளாகவும், நீதிக்கு செவிடர்களாகவும் இருப்பார்கள்.

கல்தேயருடைய ஜோசியர்கள் ராஜாவிடம் யதார்த்தமாகப் பேசுகிறார்கள். ஆனால் நேபுகாத்நேச்சாரோ தன்னுடைய பொறுமையை இழந்துவிடுகிறான். அவர்கள் காலதாமசம் பண்ணப் பார்க்கிறார்கள் என்று அவர்கள்மீது சந்தேகப்படுகிறான். ராஜா தன்னுடைய ஜோசியர்களையே சந்தேகப்படுகிறான். அவர்கள் சொப்பனத்தையும் சொல்லவேண்டும். அப்போதுதான் அவர்களால் அதன் அர்த்தத்தை சொல்ல முடியுமென்று ராஜா சொல்லுகிறான்.

நேபுகாத்நேச்சார் தன்னுடைய ஜோசியரிடம் “”என்னிடத்தி-ருந்து தீர்மானம் பிறந்தபடியினாலே நீங்கள் காலதாமசம்பண்ணப்பார்க்கிறீர்களென்று நிச்சயமாக எனக்குத் தெரியவருகிறது. காலம் மாறுமென்று நீங்கள் எனக்கு முன்பாக பொய்யும் புரட்டுமான விசேஷத்தைச் சொல்லும்படி எத்தனம்பண்ணி இருக்கிறீர்கள்; நீங்கள் சொப்பனத்தை எனக்குத் தெரிவிக்காமற்போனால், உங்களெல்லாருக்கும் இந்த ஒரே தீர்ப்பு பிறந்திருக்கிறது; ஆகையால் சொப்பனத்தை எனக்குச் சொல்லுங்கள்; அப்பொழுது அதின் அர்த்தத்தையும் உங்களால் காண்பிக்கக்கூடுமென்று அறிந்துகொள்ளுவேன்” (தானி 2:8,9) என்று சொல்லுகிறான்.

ராஜா சொப்பனங்கண்டு, அந்த சொப்பனத்தை தங்களிடம் சொல்லாமல் மறைக்கிறானா அல்லது தான் கண்ட சொப்பனத்தை மறந்துவிட்டானா என்பது ஜோசியருக்கு தெரியவில்லை. ஆனால் ராஜாவின் வார்த்தைகளோ கடுமையாயிருக்கிறது. ராஜா தன்னுடைய ஜோசியரை பொய்யும் புரட்டுமான வார்த்தைகளைச் சொல்லுகிறவர்கள் என்று குற்றம் சொல்லுகிறான்.

ராஜாவின் ஆவி கலங்கியிருக்கிறது. அவனுடைய நித்திரை கலைந்திருக்கிறது. ராஜாவுக்கு அமைதி திரும்பவேண்டும். ஜோசியர்கள் ராஜாவின் சொப்பனத்தையும், அதன் அர்த்தத்தையும் சொன்னால் மாத்திரமே, கலங்கியிருக்கிற ராஜாவின் ஆவி தெளிவடையும். ராஜாவுக்கு மறுபடியும் நித்திரை வரும். ஆனால் ராஜா எதிர்பார்க்கிற பிரகாரம், அவனுடைய ஜோசியர்களால் அவனுக்கு உதவிபுரிய முடியவில்லை. தன்னுடைய சொப்பனத்தையும், அதன் அர்த்தத்தையும், தனக்கு அறிவியாமல் போனால், அவர்கள் துண்டித்துப்போடப்படுவார்கள் என்றும் ராஜா பயமுறுத்தியிருக்கிறான். இதனால் ஜோசியருக்கு கலக்கமும் பயமும் உண்டாயிற்று. அவர்களால் ராஜாவுக்கு முன்பாக பொய் சொல்ல முடியவில்லை.

ராஜசமுகத்தில் வந்திருக்கிற சாஸ்திரிகளும், ஜோசியரும், சூனியக்காரரும், கல்தேயரும் ராஜாவுக்கு பிரதியுத்தரமாக, “”ராஜா கேட்கும் காரியத்தை அறிவிக்கத்தக்க மனுஷன் பூமியில் ஒருவனும் இல்லை; ஆகையால் மகத்துவமும் வல்லமையுமான எந்த ராஜாவும் இப்படிப்பட்ட காரியத்தை ஒரு சாஸ்திரியினிடத்திலாவது ஜோசியனிடத்திலாவது கல்தேயனிடத்திலாவது கேட்டதில்லை. ராஜா கேட்கிற காரியம் மிகவும் அருமையானது; மாம்சமாயிருக்கிறவர்களோடே வாசம்பண்ணாத தேவர்களேயொழிய ராஜசமுகத்தில் அதை அறிவிக்கத்தக்கவர் ஒருவரும் இல்லை” (தானி 2:10,11) என்று ஒருமித்த குரலில் சொல்லுகிறார்கள்.

ராஜா தான் கண்ட சொப்பனத்தை தங்களுக்கு அறிவிப்பான் என்று ஜோசியர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ராஜாவோ தன்னுடைய வார்த்தையில் பிடிவாதமாயிருக்கிறான். இதனால் ஜோசியர்கள் ராஜாவிடம், “”ராஜா கேட்கும் காரியத்தை அறிவிக்கதக்க மனுஷன் பூமியில் ஒருவனுமில்லை” என்று சொல்லிவிடுகிறார்கள். மேலும், “”மாம்சமாயிருக்கிறவர்களோடே வாசம்பண்ணாத தேவர்களேயொழிய ராஜசமுகத்தில் அதை அறிவிக்கத்தக்கவர் ஒருவரும் இல்லை” என்றும் அவர்கள் ராஜாவிடம் சொல்லுகிறார்கள்.

“”அவர் பர்வதங்களை உருவாக்கினவரும், காற்றைச் சிருஷ்டித்தவரும், மனுஷனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்படுத்துகிறவரும், விடியற்காலத்தை அந்தகாரமாக்குகிறவரும், பூமியினுடைய உயர்ந்தஸ்தானங்களின்மேல் உலாவுகிறவருமாயிருக்கிறார்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் என்பது அவருடைய நாமம்” (ஆமோ 4:13).

ராஜாவின் சொப்பனத்தை மனுஷரால் சொல்ல முடியாது என்றும், அதை தேவர்களால் மாத்திரமே சொல்ல முடியும் என்றும் ஜோசியர்கள் சொல்லுகிறார்கள். கல்தேயருடைய ஜோசியருக்கு கர்த்தரைப்பற்றி சரியான ஞானமில்லை. இந்தப் பூமியில் ஏராளமான தெய்வங்கள் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். “”தேவன் ஒருவரே” என்னும் சத்தியம் அவர்களுக்கு தெரியவில்லை.

சாஸ்திரிகள் சொன்ன பிரதியுத்தரத்தைக் கேட்டு நேபுகாத்நேச்சார் மகாகோபமும், உக்கிரமும் கொள்கிறான். அவர்களெல்லோருக்கும் ராஜாவின் வாயிலிருந்து ஒரே தீர்ப்பு பிறக்கிறது (தானி 2:9). பாபிலோனிலிருக்கிற எல்லா ஞானிகளையும் கொலை செய்யும்படி ராஜா கட்டளையிடுகிறான்.

ஞானிகளைக் கொலைசெய்ய வேண்டுமென்கிற கட்டளை வெளிப்பட்டபோது, தானியேலையும் அவன் தோழரையும் கொலைசெய்யத் தேடுகிறார்கள் (தானி 2:13). தானியேலுக்கு ராஜசமுகத்தில் நடைபெற்ற சம்பவத்தைப்பற்றி ஒன்றும் தெரியாது. ஆனாலும் தானியேலும் ராஜாவின் தீர்ப்புக்கு தப்பிக்கவில்லை. நேபுகாத்நேச்சாரின் உண்மையான சுபாவம் இங்கு வெளிப்படுகிறது. அவன் தெளிந்த புத்தியில்லாமல், நிதானமிழந்து செயல்படுகிறான்.

தானியேல் பாபிலோனுக்கு அடிமையாக வந்து இரண்டு வருஷங்களாயிற்று. ராஜாவின் அரமனையில் சேவிப்பதற்கு மூன்று வருஷங்கள் பயிற்சி எடுக்க வேண்டும். அதற்கு முன்பாகவே தானியேல் இங்கு பயன்படுத்தப்படுகிறான். (தானி 1:5=தானி 2:1; எரே 25:1). யோயாக்கீம் தேவனை மறுதலித்து, எரேமியாவின் புஸ்தகச் சுருளை எரித்து, ஒரு வருஷத்திற்குப் பின்பு இந்தச் சம்பவம் நடைபெறுகிறது. (எரே 36).

தானி 2 ஆவது அதிகாரத்தில் நேபுகாத்நேச்சார் சொப்பனமாகக் கண்ட ஒரு பெரிய சிலையைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இந்தச் சொப்பனத்திற்கு அர்த்தம் கூறும்போது இந்த உலகத்தில் வருங்காலத்தில் நடைபெறப்போகும் சம்பவங்கள் தீர்க்கதரிசனமாக முன்னறிவிக்கப் பட்டிருக்கிறது. தானியேலின் காலத்திலிருந்து தேவன் இந்தப் பூமியை ஆளுகை செய்யும் நித்திய காலம் வரையிலும் இந்த சொப்பனத்தின் அர்த்தத்தில் கூறப்பட்டிருக்கிறது. (தானி 2:28, 44-45).

தானி 2 ஆவது அதிகாரத்திலுள்ள உட்பிரிவுகள்

1. சொப்பனம் வெளிப்படுத்தப்படுவதற்கு முன்பு வரையிலும் நடைபெற்ற சம்பவங்கள். (தானி 2:1-18)

2. சொப்பனம் வெளிப்படுத்தப்படுகிறது. (தானி 2:19-35)

3. சொப்பனத்திற்கு அர்த்தம் கூறப்படுகிறது. (தானி 2:36-45)

4. சொப்பனத்தின் விளைவுகள் (தானி 2:46-49)

ராஜா தன்னுடைய சாஸ்திரிகளிடமும், ஜோசியரிடமும், சூனியக்காரரிடமும் இதை மட்டுமே வெளிப்படுத்துகிறான். (தானி 2:1-3). ஆனால் தான் கண்ட சொப்பனத்தை ராஜா யாருக்கும் அறிக்கவில்லை. கர்த்தர் தானியேலுக்கு ராஜாவின் சொப்பனத்தையும், அதன் அர்த்தத்தையும் வெளிப்படுத்துகிறார். கர்த்தர் வல்லமையாய் கிரியை செய்யும்போது, கல்தேயருடைய தேசத்திலுள்ள ஜோசியராலும், சாஸ்திரிகளாலும், சூனியக்காரராலும் ஒன்றும் செய்யமுடியவில்லை.

கல்தேயர் என்பவர்கள் பாபிலோன் தேசத்தில் விசேஷித்த கல்விகளைக் கற்ற ஞானவான்கள். மற்றவர்களுடைய சார்பாகக் கல்தேயரே ராஜாவினிடத்தில் பேசுவார்கள் (தானி 2:4).

சீரிய பாஷை என்பது அரமாயிக் பாஷையைக் குறிக்கும். இது அராம் அல்லது சீரியருடைய பாஷையாகும். தானி 7 ஆம் அதிகாரம் வரையிலும் சீரிய பாஷையே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வேதாகமத்தில் மேலும் பல வேதவசனப் பகுதிகளில் சீரிய பாஷையாகிய அரமாயிக் பாஷை பயன்படுத்தப்பட்டுள்ளன. (எஸ்றா 4:8-6:18; எஸ்றா 7:12-26; எரே 10:11)

ராஜாவின் கட்டளை மிகவும் கடுமையாக உள்ளது. சொப்பனத்தையும் அதன் அர்த்தத்தையும் அறிவியாமல் போனால் கல்தேயர்கள் துண்டிக்கப்படுவார்கள் என்று ராஜா சொல்லுகிறான் (தானி 2:5). அக்காலத்து ராஜாக்கள் தங்களுக்கு சர்வ அதிகாரமும் இருப்பதாக நினைத்தார்கள். தேவன் தம்முடைய நாம மகிமையை வெளிப்படுத்துவதற்கு நேபுகாத்நேச்சாரையும் இங்கு பயன்படுத்துகிறார். (தானி 2:10-28).

ராஜா சொப்பனத்தை மறந்து விட்டார் என்றும், சற்று காலஅவகாசம் இருந்தால் அவர் நினைவுகூருவார் என்றும் கல்தேயரின் சாஸ்திரிகள் நினைக்கிறார்கள். சொப்பனம் தங்களுக்கு அறிவிக்கப்பட்டால் அதன் வியாக்கியானத்தைக் கூறிவிடலாம் என்று ஜோசியர்கள் நினைக்கிறார்கள். (தானி 2:8-9).

“”ராஜா கேட்கும் காரியத்தை அறிவிக்கத்தக்க மனுஷன் பூமியில் ஒருவனும் இல்லை” (தானி 2:10) என்று கல்தேயர் உண்மையைக் கூறுகிறார்கள். தானியேல் இந்தச் சொப்பனத்தையும், அதன் அர்த்தத்தையும் தேவனிடத்திலிருந்தே பெற்றுக்கொள்கிறான் என்பதற்குக் கல்தேயருடைய வார்த்தையும் ஆதாரமாக உள்ளது. (தானி 2:16-28).

“”எந்த ராஜாவும் இப்படிப்பட்ட காரியத்தை……… கேட்டதில்லை” (தானி 2:10) என்று கல்தேயர் ராஜாவிடம் சொல்லுகிறார்கள். ராஜாவின் சொப்பனத்தை யாராலும் கூறமுடியாது. கூறாவிட்டால் மரண தண்டனை கொடுக்கப்போவதாக ராஜா அறிவித்து விடுகிறான். இதற்கு முன்பு எந்த ராஜாவும் இப்படி சட்டம் போட்டதில்லையென்று கல்தேயர் கூறுகிறார்கள். தானியேல் சொப்பனத்தையும், அதன் அர்த்தத்தையும் கூறியபோது அவன் கர்த்தருடைய அனுக்கிரகத்தினால் அதைக் கூறியதாக அங்கிகரிக்கிறார்கள். (தானி 4:8-9,18; தானி 5:11).

கல்தேயர்கள் ராஜாவிடம், மாம்சமாயிருக்கிறவர்களோடே வாசம் பண்ணாத தேவர்களைப்பற்றிச் சொல்லுகிறார்கள் (தானி 2:11). கல்தேயரைப் பொறுத்தளவில் சில தெய்வங்கள் மனுஷரோடே வாசம்பண்ணும் என்றும், சில தெய்வங்கள் மனுஷரோடே வாசம் பண்ணாது என்று நினைக்கிறார்கள். இங்கு கல்தேயர் முதன் முறையாக “”எலோஹிம்” என்னும் வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரைக் குறிப்பதற்காக இந்த வார்த்தை பன்மையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (ஆதி 3:5). கர்த்தர் தம்முடைய தேவதத்துவத்தில் பிதாவாகவும், குமாரனாகவும், பரிசுத்த ஆவியானவராகவும் இருக்கிறார்.

ஞானிகள் தங்களுக்குப் பலவிதமான வல்லமைகள் இருப்பதாகக் கூறிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களால் ராஜாவின் சொப்பனத்தைக் கூறமுடியவில்லை. இதனால் ஞானிகள்மீது ராஜாவிற்குக் கோபம் உண்டாயிற்று. அவர்கள் எல்லோரையும் கொலை செய்துவிடும்படி ராஜா கட்டளையிடுகிறான். இந்த ஞானிகளின் வரிசையில் தானியேலும் அவனுடைய நண்பர்களும் வருகிறார்கள். (தானி 2:12-13). ராஜாவின் கட்டளை பிரகாரம், தானியேலும், அவனுடைய நண்பர்களும் கொலைசெய்யப்படுவார்கள். (தானி 2:13).

தானியேல் பரலோகத்தின் தேவனை ஸ்தோத்திரித்தார் தானி 2:14-23

தானி 2:14. பாபிலோனின் ஞானிகளைக் கொலைசெய்யப் புறப்பட்ட ராஜாவினுடைய தலையாரிகளுக்கு அதிபதியாகிய ஆரியோகோடே தானியேல் யோசனையும் புத்தியுமாய்ப் பேசி:

தானி 2:15. இந்தக் கட்டளை ராஜாவினால் இத்தனை அவசரமாய்ப் பிறந்ததற்குக் காரணம் என்ன என்று ராஜாவின் சேர்வைக்காரனாகிய ஆரியோகினிடத்தில் கேட்டான்; அப்பொழுது ஆரியோகு தானியேலுக்குக் காரியத்தை அறிவித்தான்.

தானி 2:16. தானியேல் ராஜாவினிடத்தில் போய், சொப்பனத்தின்அர்த்தத்தை ராஜாவுக்குக் காண்பிக்கும்படித் தனக்குத் தவணை கொடுக்க விண்ணப்பம்பண்ணினான்.

தானி 2:17. பின்பு தானியேல் தன் வீட்டுக்குப் போய், தானும் தன் தோழரும் பாபிலோனின் மற்ற ஞானிகளோடேகூட அழியாதபடிக்கு இந்த மறைபொருளைக் குறித்துப் பரலோகத்தின் தேவனை நோக்கி இரக்கம் கேட்கிறதற்காக,

தானி 2:18. அனனியா, மீஷாவேல், அசரியா என்னும் தன்னுடைய தோழருக்கு இந்தக்காரியத்தை அறிவித்தான்.

தானி 2:19. பின்பு இராக்காலத்தில் தரிசனத்திலே தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது; அப்பொழுது தானியேல் பரலோகத்தின் தேவனை ஸ்தோத்திரித்தான்.

தானி 2:20. பின்பு தானியேல் சொன்னது: தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது.

தானி 2:21. அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்.

தானி 2:22. அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளில் இருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும்.

தானி 2:23. என் பிதாக்களின் தேவனே, நீர் எனக்கு ஞானமும் வல்லமையும் கொடுத்து, நாங்கள் உம்மிடத்தில் வேண்டிக்கொண்டதை இப்பொழுது எனக்கு அறிவித்து, ராஜாவின் காரியத்தை எங்களுக்குத் தெரிவித்தபடியினால், உம்மைத் துதித்துப் புகழுகிறேன் என்றான்.

நேபுகாத்நேச்சார் சொப்பனங்கண்டான். அவனுடைய ஆவி கலங்கிற்று. அவனுடைய நித்திரை கலைந்தது. தன் சொப்பனங்களை தனக்கு தெரிவிக்கும் பொருட்டு, அவன் சாஸ்திரிகளையும், ஜோசியரையும், சூனியக்காரரையும், கல்தேயரையும் அழைக்கச் சொல்லுகிறான். ஆனாலும் ராஜா தானியேலை அழைக்கச் சொல்லவில்லை. ராஜா தனக்கு சர்வஅதிகாரம் இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறான். இந்தப் பூமியின் ராஜாக்கள் கர்த்தருடைய ஆளுகைக்கு கீழ்ப்படியவேண்டும். பூமியின் ராஜாக்கள் கர்த்தருடைய ஆலோசனைகளைக் கேட்டு அதன் பிரகாரம் ஆளுகை செய்யவேண்டும். நேபுகாத்நேச்சாரோ பாபிலோன் தேசத்து சிங்காசனத்தில் வீற்றிருந்தாலும், அவன் புத்தியில்லாதவனாயிருக்கிறான்.

தானியேல் ஞானத்திலும் அறிவிலும் சிறந்தவர். அவர் பரலோகத்தின் தேவனிடத்தில் ஜெபம்பண்ணுகிறவர். ராஜா தானியேலிடம் ஏற்கெனவே ஞானத்திற்கும் புத்திக்கும் அடுத்த விஷயங்களை கேட்டு விசாரித்திருக்கிறான் (தானி 1:20). தானியேலும், அவருடைய சிநேகிதரும், தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் பத்து மடங்கு சமர்த்தராக கண்டிருக்கிறான். ஆனாலும் அவன் தான் கண்ட சொப்பனத்தைப்பற்றி விசாரிக்க தானியேலை அழைக்கவில்லை.

தானியேல் ஒரு பிரபுவாகயிருக்கிறார். ஜெபத்தின் மூலமாக அவருக்கு தேவனிடத்திலும் வல்லமையுள்ளது. தன்னுடைய ஞானத்தின் மூலமாக அவருக்கு மனுஷரிடத்திலும் அதிகாரமுள்ளது. தானியேல் ஞானத்திலும் புத்தியிலும் சிறந்து விளங்கினார். அவர் கர்த்தரோடும் மனுஷரோடும் நெருங்கிய ஐக்கியத்திலிருந்தார். தானியேலின் ஞானம் இங்கு மறுபடியுமாய் வெளிப்படுகிறது.

தானியேலுக்கு மனுஷரோடு எப்படி பழகவேண்டும் என்பது தெரிந்திருக்கிறது. பாபிலோனின் ஞானிகளைக் கொலைசெய்யப் புறப்பட்ட ராஜாவினுடைய தலையாரிகளுக்கு அதிபதியாகிய ஆரியோகோடே தானியேல் யோசனையும் புத்தியுமாய்ப் பேசுகிறார் (தானி 2:14). தானியேல் பொறுமை இழந்துவிடவில்லை. நிதானமாகப் பேசுகிறார். “”இந்தக் கட்டளை ராஜாவினால் இத்தனை அவசரமாய்ப் பிறந்ததற்குக் காரணம் என்ன” என்று ராஜாவின் சேர்வைக்காரனாகிய ஆரியோகினிடத்தில் கேட்கிறார்; அப்பொழுது ஆரியோகு தானியேலுக்குக் காரியத்தை அறிவிக்கிறான் (தானி 2:15).

தானியேல் காலதாமதம் பண்ணக்கூடாது. பாபிலோனிலிருக்கிற எல்லா ஞானிகளையும் கொலைசெய்யும்படி நேபுகாத்நேச்சார் கட்டளையிட்டிருக்கிறான். தன்னை கொலைசெய்ய வந்த ஆரியோகினிடத்தில் தானியேல் பேசிக்கொண்டிருக்கிறார். தானியேல் சிறிதும் தாமதம்பண்ணாமல் ராஜாவை சந்திக்கிறார். தானியேல் ராஜாவினிடத்தில் போய், சொப்பனத்தின் அர்த்தத்தை ராஜாவுக்குக் காண்பிக்கும்படித் தனக்குத் தவணை கொடுக்க விண்ணப்பம்பண்ணுகிறார் (தானி 2:16).

தானியேலுக்கு ஜெபத்தின் மூலமாய் தேவனோடு எப்படி பேசுவது என்று தெரிந்திருக்கிறது. கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணினால், கர்த்தர் தனக்கு ராஜாவின் சொப்பனத்தையும், அதன் அர்த்தத்தையும் தெரியப்படுத்துவார் என்னும் இரகசியத்தை தானியேல் அறிந்திருக்கிறார். தானியேல் ராஜாவை சந்தித்த பின்பு தன்னுடைய வீட்டிற்குப்போகிறார். தேவனோடு தனிமையில் ஜெபம்பண்ணுகிறார். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரே ஜோதிகளின் பிதாவாயிருக்கிறார். கர்த்தரே மறைபொருளை வெளிப்படுத்துகிறவர். தானியேல் கர்த்தரோடு ஜெபம்பண்ணும்போது, தன்னுடைய சிநேகிதரையும் தன்னோடு ஜெபம்பண்ணுமாறு அழைக்கிறார்.

பின்பு தானியேல் தன் வீட்டுக்குப் போய், தானும் தன் தோழரும் பாபிலோனின் மற்ற ஞானிகளோடேகூட அழியாதபடிக்கு இந்த மறைபொருளைக்குறித்துப் பரலோகத்தின் தேவனை நோக்கி இரக்கம் கேட்கிறதற்காக, அனனியா, மீஷாவேல், அசரியா என்னும் தன்னுடைய தோழருக்கு இந்தக் காரியத்தை அறிவிக்கிறார் (தானி 2:17,18).

அப்போஸ்தலர் பவுல், பல சமயங்களில், தன்னுடைய சிநேகிதரை தனக்காக ஜெபம்பண்ணுமாறு கேட்டுக்கொண்டார். நம்முடைய சிநேகிதரை நமக்காக ஜெபம்பண்ணச் சொல்லும்போது, நாம் அவர்களை மதிக்கிறோம். அவர்களுடைய ஜெபத்தையும் கனம்பண்ணுகிறோம்.

தானியேல் தன்னுடைய சிநேகிதரிடம் ஜெபம்பண்ணுமாறு சொன்னபோது, எதற்காக ஜெபிக்கவேண்டும் என்பதில் தெளிவோடிருக்கிறார். “”இந்த மறைபொருளைக் குறித்து பரலோகத்தின் தேவனை நோக்கி இரக்கம் கேட்கவேண்டும்”. இதுவே ஜெபத்தின் நோக்கம். நாம் எந்த காரியத்திற்காக ஜெபித்தாலும், தேவனுடைய இரக்கம் நமக்கு கிடைக்கவேண்டும் என்பதே நம்முடைய பிரதான விருப்பமாயிருக்கவேண்டும்.

நமக்கு பிரச்சனையை உண்டுபண்ணுகிற காரியங்கள், நமக்கு பயத்தைக்கொடுக்கிற காரியங்கள் ஆகிய எல்லாவற்றிலும் தேவனுடைய இரக்கம் நமக்கு கிடைக்கவேண்டும். நாம் கர்த்தருடைய சமுகத்தில் நம்மைத் தாழ்த்தி, தேவனுடைய இரக்கத்திற்காக கெஞ்சும்போது, கர்த்தர் நமக்கு விடுதலையைக் கட்டளையிடுவார்.

நாம் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணும்போது, விசுவாசத்தோடு ஜெபிக்கவேண்டும். கர்த்தர் எல்லா மனுஷருடைய இருதயங்களையும் ஆராய்ந்து அறிந்து வைத்திருக்கிறார். அவர் அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்கிறவர். நம்மால் புரிந்துகொள்ள முடியாத இரகசியங்களைக்கூட கர்த்தர் நமக்கு வெளிப்படுத்திக் காண்பிக்கிறவர். அவர் பரலோகத்தின் தேவன். அவர் மறைபொருளை நமக்கு வெளிப்படுத்துகிறவர்.

கர்த்தர் தானியேலின் ஜெபத்திற்கு செவிகொடுக்கிறார். இராக்காலத்தில், தரிசனத்திலே, தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்படுகிறது. அப்போது தானியேல் பரலோகத்தின் தேவனை ஸ்தோத்திரிக்கிறார் (தானி 2:19). நேபுகாத்நேச்சார் கண்ட அதே சொப்பனத்தை, தானியேலும் நித்திரையாயிருக்கும்போது கண்டார் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள் (தானி 2:19).

தானியேல் கர்த்தருடைய கிருபைக்காகவும், அவருடைய இரக்கத்திற்காகவும், அவரை ஸ்தோத்திரிக்கிறார். கர்த்தர் தானியேலுக்கு நிச்சயமான கிருபைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். கர்த்தர் தம்முடைய ஜெபத்திற்கு பதில் கொடுப்பார் என்னும் நிச்சயத்தோடு, தானியேல் கர்த்தரிடம் ஜெபம்பண்ணினார். அவருடைய நம்பிக்கை வீணாகவில்லை.

கர்த்தர் தன்னுடைய ஜெபத்திற்கு பதில் கொடுத்ததற்காக, தானியேல் கர்த்தரை நன்றியோடு துதிக்கிறார்.

“”தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது. அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர். அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளில் இருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும். என் பிதாக்களின் தேவனே, நீர் எனக்கு ஞானமும் வல்லமையும் கொடுத்து, நாங்கள் உம்மிடத்தில் வேண்டிக்கொண்டதை இப்பொழுது எனக்கு அறிவித்து, ராஜாவின் காரியத்தை எங்களுக்குத் தெரிவித்தபடியினால், உம்மைத் துதித்துப் புகழுகிறேன்” (தானி 2:20-23) என்று தானியேல் கர்த்தரைத் துதிக்கிறார்.

கர்த்தரே நம்முடைய துதிகளுக்குப் பாத்திரர். கர்த்தரை நாம் எந்நாளும், எப்போதும் துதித்துக்கொண்டிருக்கலாம். கர்த்தர் நித்திய மகிமையுள்ளவர். அவருடைய கிருபை ஒருபோதும் மாறுவதில்லை. தானியேல் கர்த்தரைத் துதிக்கும்போது, அவருடைய சிநேகிதரும், அவரோடுகூட கர்த்தரைத் துதிக்கிறார்கள். கர்த்தர் தனக்கு மறைபொருளை வெளிப்படுத்தியவுடன், தானியேல் அதை தன்னுடைய சிநேகிதருக்கும் சொல்லுகிறார். அவர்கள் தானியேலுக்கு ஜெபத்தில் உதவிசெய்தவர்கள். அவர்களும் தானியேலோடு சேர்ந்து கர்த்தரைத் துதிக்கவேண்டும்.

அப்போஸ்தலர் பவுல் பல சமயங்களில் சில்வானு, தீமோத்தேயு ஆகியோரோடு சேர்ந்து மற்ற விசுவாசிகளை வாழ்த்துகிறார். பவுல் நிருபங்களை எழுதும்போது, பவுலோடுகூட ஊழியம் செய்கிற அவருடைய உடன்ஊழியர்களும், விசுவாசிகளை வாழ்த்துகிறார்கள். நாம் ஜெபிக்கும்போதும் ஒருமனப்பட்டு ஜெபிக்கவேண்டும். கர்த்தரைத் துதிக்கும்போதும் ஒருமனப்பட்டு துதிக்கவேண்டும்.

“”ஆரியோக்” என்பது பழங்காலத்து பாபிலோனியப் பெயர் (தானி 2:14). அசீரியாவின் ராஜாவிற்கு இந்தப் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. (ஆதி 14:1,9). இந்தப் பெயர் தானியேலின் புஸ்தகத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (தானி 2:4-15,24-25)

தானியேல் யோசனையும் புத்தியுமாய்ப் பேசுகிறார் (தானி 2:14). தானியேலின் ஞானம் கர்த்தருடைய கிருபையினால் இங்கு மறுபடியும் வெளிப்படுத்தப்படுகிறது. கர்த்தருடைய ஞானம் தனக்கு கிடைக்க வேண்டுமென்று தானியேல் ஜெபித்தார். அப்போது இராக்காலத்தில் தரிசனத்திலே தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது (தானி 2:19). எத்தனை முறை தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது என்று தெரியவில்லை. பாபிலோன் தேசத்தில் ஞானிகளைக் கொலைசெய்யும் காரியம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. (தானி 2:14). அந்தச் சூழ்நிலையில் அவர்கள் தன்னைக் கொன்றுபோடாதவாறு தானியேல் ராஜாவினுடைய தலையாரிகளுக்கு அதிபதியாகிய ஆரியோகோடே யோசனையும், புத்தியுமாகவும் பேசுகிறார் (தானி 2:16).

தானியேல் தவணை கொடுக்க விண்ணப்பம் பண்ணுகிறார் (தானி 2:16). தானியேல் ராஜாவை நேரடியாகச் சந்தித்துப் பேசுகிறார். கர்த்தர் தனக்கு ராஜாவின் சொப்பனத்தையும், அதன் அர்த்தத்தையும் வெளிப்படுத்துவார் என்று தானியேல் கர்த்தரை விசுவாசிக்கிறார். பரலோகத்தின் தேவனிடம் விண்ணப்பம் பண்ணினால், அவர் தனக்குப் பதில் கொடுப்பார் என்று தானியேல் விசுவாசிக்கிறார்.

ஞானிகளைக் கொலைபண்ணும் ராஜாவின் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. ராஜாவிடம் தான் பேசியதைத் தானியேல் தன்னுடைய மூன்று எபிரெய நண்பர்களோடு அறிவிக்கிறார். அவர்கள் நால்வரும் கர்த்தரிடத்தில் விண்ணப்பம் பண்ணுகிறார்கள். அவர்களுடைய உயிருக்கு ஆபத்து வந்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் கர்த்தர் தங்களைக் கைவிடமாட்டார் என்று அவர்கள் கர்த்தரிடத்தில் உறுதியான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். (தானி 2:18).

இராக்காலத்தில் தரிசனத்திலே தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது (தானி 2:19) தானியேலும், மூன்று எபிரெய வாலிபரும் ஜெபம் பண்ணிய பின்பு, கர்த்தர் அன்று இரவில் ராஜாவின் சொப்பனத்தையும், அதன் அர்த்தத்தையும் வெளிப்படுத்துகிறார். தானியேல் பரலோகத்தின் தேவனை அவருடைய கிருபைக்காகவும், இரக்கத்திற்காகவும் ஸ்தோத்திரிக்கிறார். (தானி 2:19-26).

கர்த்தரைத் துதிப்பதற்குக் காரணம்

1. ஞானம் அவருக்கே உரியது. (தானி 2:20).

2. வல்லமை அவருக்கே உரியது. (தானி 2:20).

3. அவர் காலங்களை மாற்றுகிறவர். (தானி 2:21).

4. அவர் சமயங்களை மாற்றுகிறவர். (தானி 2:21).

5. ராஜாக்களைத் தள்ளி விடுகிறவர். (தானி 2:21).

6. ராஜாக்களை ஏற்படுத்துகிறவர் (தானி 2:21).

7. ஞானிகளுக்கு ஞானத்தைக் கொடுக்கிறவர். (தானி 2:21).

8. அறிவாளிகளுக்கு அறிவைக் கொடுக்கிறவர். (தானி 2:21).

9. அவர் ஆழமானதை வெளிப்படுத்துகிறவர். (தானி 2:22).

10. அவர் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர் (தானி 2:22).

11. இருளில் இருக்கிறதை அவர் அறிவார்.

12. வெளிச்சம் அவரிடத்தில் தங்கும். (தானி 2:22; 1தீமோ 6:16).

13. அவர் தானியேலுக்கு ஞானத்தைக் கொடுத்திருக்கிறார். (தானி 2:23).

14. அவர் தானியேலுக்கு வல்லமையைக் கொடுத்திருக்கிறார். (தானி 2:23).

15. ராஜாவின் காரியத்தை அவர்களுக்குத் தெரிவித்திருக்கிறார். (தானி 2:23).

மறைபொருள்களை வெளிப்படுத்துகிற பரலோகத்தி-ருக்கிற தேவன் தானி 2:24-30

தானி 2:24. பின்பு தானியேல் பாபிலோனின் ஞானிகளை அழிக்க ராஜா கட்டளையிட்ட ஆரியோகினிடத்தில் போய்: பாபிலோனின் ஞானிகளை அழிக்காதேயும், என்னை ராஜாவின் முன்பாக அழைத்துக்கொண்டுபோம்; ராஜாவுக்கு அர்த்தத்தைத் தெரிவிப்பேன் என்று சொன்னான்.

தானி 2:25. அப்பொழுது ஆரியோகு தானியேலை ராஜாவின் முன்பாகத் தீவிரமாய் அழைத்துக்கொண்டுபோய்: சிறைப்பட்டுவந்த யூதேயா தேசத்தாரில் ஒரு புருஷனைக் கண்டுபிடித்தேன்; அவன் ராஜாவுக்கு அர்த்தத்தைத் தெரிவிப்பான் என்றான்.

தானி 2:26. ராஜா பெல்தெஷாத்சாரென்னும் நாமமுள்ள தானியேலை நோக்கி: நான் கண்ட சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் நீ எனக்கு அறிவிக்கக்கூடுமா என்று கேட்டான்.

தானி 2:27. தானியேல் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: ராஜா கேட்கிற மறைபொருளை ராஜாவுக்குத் தெரிவிக்க ஞானிகளாலும், ஜோசியராலும், சாஸ்திரிகளாலும், குறிசொல்லுகிறவர்களாலும் கூடாது.

தானி 2:28. மறைபொருள்களை வெளிப்படுத்துகிற பரலோகத்தி-ருக்கிற தேவன் கடைசிநாட்களில் சம்பவிப்பதை ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்குத் தெரிவித்திருக்கிறார்; உம்முடைய சொப்பனமும் உமது படுக்கையின்மேல் உம்முடைய தலையில் உண்டான தரிசனங்களும் என்னவென்றால்:

தானி 2:29. ராஜாவே, உம்முடைய படுக்கையின் மேல் நீர் படுத்திருக்கையில், இனிமேல் சம்பவிக்கப்போகிறதென்ன என்கிற நினைவுகள் உமக்குள் எழும்பிற்று; அப்பொழுது மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவர் சம்பவிக்கப்போகிறதை உமக்குத் தெரிவித்தார்.

தானி 2:30. உயிரோடிருக்கிற எல்லாரைப்பார்க்கிலும் எனக்கு அதிக ஞானம் உண்டென்பதினாலே அல்ல; அர்த்தம் ராஜாவுக்குத் தெரியவரவும், உம்முடைய இருதயத்தின் நினைவுகளை நீர் அறியவும், இந்த மறைபொருள் எனக்கு வெளியாக்கப்பட்டது.

நேபுகாத்நேச்சார் கண்ட சொப்பனத்தையும், அதன் அர்த்தத்தையும் தானியேல் சொல்லுகிறார். ராஜாவின் சொப்பனத்தையும் அதன் அர்த்தத்தையும் அவருக்குச் சொல்ல பாபிலோனிலே இருக்கிற ஞானிகளால் முடியவில்லை. இதன் நிமித்தம் ராஜா மகாகோபமும் உக்கிரமும் கொள்கிறான். பாபிலோனிலிருக்கிற எல்லா ஞானிகளையும் கொலைசெய்யும்படி கட்டளையிடுகிறான். ராஜாவினுடைய தலையாரிகளுக்கு அதிபதியாகிய ஆரியோகு என்பவன், ராஜாவின் கட்டளையை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறான்.

கர்த்தர் தானியேலுக்கு ராஜாவின் காரியத்தை தெரிவிக்கிறார். ராஜா கண்ட சொப்பனத்தையும் அதன் அர்த்தத்தையும் கர்த்தர் தானியேலுக்கு வெளிப்படுத்துகிறார். தானியேல் காலதாமதம்பண்ணாமல், ஆரியோகை சந்திக்கிறார்.

“”பாபிலோனின் ஞானிகளை அழிக்காதேயும், என்னை ராஜாவின் முன்பாக அழைத்துக்கொண்டுபோம்; ராஜாவுக்கு அர்த்தத்தைத் தெரிவிப்பேன்” (தானி 2:24) என்று தானியேல் ஆரியோகினிடத்தில் சொல்லுகிறார்.

அப்பொழுது ஆரியோகு தானியேலை ராஜாவின் முன்பாகத் தீவிரமாய் அழைத்துக்கொண்டுபோகிறான். “”சிறைப்பட்டுவந்த யூதேயா தேசத்தாரில் ஒரு புருஷனைக் கண்டுபிடித்தேன்; அவன் ராஜாவுக்கு அர்த்தத்தைத் தெரிவிப்பான்” (தானி 2:25) என்று ஆரியோகு ராஜாவினிடத்தில் சொல்லுகிறான்.

தானியேல் ஆரியோகினிடத்தில் முழுநிச்சயத்தோடு பேசுகிறார். ராஜாவின் சொப்பனத்தையும் அதன் அர்த்தத்தையும் தன்னால் தெரிவிக்க முடியும் என்று தானியேல் உறுதியாய்ச் சொல்லுகிறார். தன்னை ராஜாவின் முன்பாக அழைத்துக்கொண்டு போகுமாறு தானியேல் ஆரியோகைக் கேட்டுக்கொள்கிறார்.

தானியேல் நேபுகாத்நேச்சாருக்கு முன்பாக நிற்கிறார். ஆரியோகும் அவரோடுகூட நிற்கிறான். அப்பொழுது ராஜா பெல்தெஷாத்சாரென்னும் நாமமுள்ள தானியேலை நோக்கி: “”நான் கண்ட சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் நீ எனக்கு அறிவிக்கக்கூடுமா” (தானி 2:26) என்று கேட்கிறான்.

இந்த சம்பவத்தின் மூலமாய் தானியேல் கர்த்தரை கனம்பண்ண விரும்புகிறார். தானியேலால் தன்னுடைய சொப்பனத்தையும், அதன் அர்த்தத்தையும் தனக்கு அறிவிக்க முடியுமா என்னும் சந்தேகம் ராஜாவின் மனதில் உண்டாயிற்று. ராஜா தன்னுடைய சந்தேகத்தை தெளிவுபடுத்த விரும்புகிறான். தானியேல் ராஜாவுக்கு முன்பாக தன்னை பெருமைப்படுத்தவில்லை. தன்னை ஒரு ஞானியாக காண்பிக்கவும் விரும்பவில்லை. தானியேல் அந்த சூழ்நிலையிலும் ராஜாவுக்கு முன்பாக கர்த்தரைக் கனம்பண்ணுகிறார்.

தன்னுடைய சொப்பனத்தையும், அதன் அர்த்தத்தையும் தனக்கு சொல்லுமாறு, நேபுகாத்நேச்சார் இதுவரையிலும் ஞானிகளையும், ஜோசியரையும், சாஸ்திரிகளையும், குறிசொல்லுகிறவர்களையும் நம்பிக்கொண்டிருந்தான். ராஜா கேட்கிற மறைபொருளை அவர்களால் ராஜாவுக்கு தெரிவிக்கக்கூடாது என்று தானியேல் தெளிவாகச் சொல்லுகிறார் (தானி 2:7).

ஆகையினால் ராஜா பாபிலோனிலிருக்கிற ஞானிகள்மீது மகாகோபமும் உக்கிரமும் கொள்ளவேண்டிய அவசியமில்லை. அவர்களால் செய்ய முடியாத காரியத்தை ராஜா அவர்களிடத்திலிருந்து எதிர்பார்க்கிறான். ராஜா அவர்களை கொலை செய்யுமாறு கொடுத்த கட்டளையை திரும்பப் பெற்றுக்கொள்ளவேண்டும்.

பாபிலோன் தேசத்திலுள்ள ஞானிகளால் ராஜாவின் சொப்பனத்தையும், அதன் அர்த்தத்தையும் சொல்லமுடியாமல் போய்விட்டாலும், ராஜா அதற்காக கலங்கவேண்டியதில்லை. கோபப்பட வேண்டியதில்லை. பரலோகத்திலிருக்கிற தேவனால் மறைபொருள்களை வெளிப்படுத்த முடியும் என்று தானியேல் நேபுகாத்நேச்சாரிடம் உறுதியாகச் சொல்லுகிறார்.

“”மறைபொருள்களை வெளிப்படுத்துகிற பரலோகத்தி-ருக்கிற தேவன் கடைசிநாட்களில் சம்பவிப்பதை ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்குத் தெரிவித்திருக்கிறார்” (தானி 2:28) என்று தானியேல் ராஜாவிடம் சொல்லுகிறார். தானியேல் பேசுவது அவருடைய சொந்த வார்த்தையல்ல. அது கர்த்தருடைய வார்த்தை. ராஜாவுக்கு சொப்பனமும், அவருடைய படுக்கையின்மேல் அவருடைய தலையில் உண்டான தரிசனங்களும் தானியேலுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

ராஜா கண்ட சொப்பனம் அவருக்கே தெரியவில்லை. ஆனால் அது தானியேலுக்கு தெரிந்திருக்கிறது. கர்த்தர் அது பற்றிய மறைபொருளை தானியேலுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். கர்த்தருடைய பார்வையில் சகலமும் பிரத்தியட்சமாயிருக்கும். கர்த்தருக்கு மறைவான இரகசியம் எதுவுமே இல்லை.

“”ராஜாவே, உம்முடைய படுக்கையின் மேல் நீர் படுத்திருக்கையில், இனிமேல் சம்பவிக்கப்போகிறதென்ன என்கிற நினைவுகள் உமக்குள் எழும்பிற்று; அப்பொழுது மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவர் சம்பவிக்கப்போகிறதை உமக்குத் தெரிவித்தார்” (தானி 2:29) என்று தானியேல் ராஜாவிடம் சொல்லுகிறார்.

தானியேல் நோபுகாத்நேச்சார் ராஜாவிடம் பேசும்போது தன்னைப் பெருமைப்படுத்தவில்லை. தன்னுடைய ஞானத்தை உயர்த்தி சொல்லவில்லை. “”உயிரோடிருக்கிற எல்லாரைப்பார்க்கிலும் எனக்கு அதிக ஞானம் உண்டென்பதினாலே அல்ல; அர்த்தம் ராஜாவுக்குத் தெரியவரவும், உம்முடைய இருதயத்தின் நினைவுகளை நீர் அறியவும், இந்த மறைபொருள் எனக்கு வெளியாக்கப்பட்டது” (தானி 2:30) என்று சொல்லி தானியேல் தன்னைத் தாழ்த்துகிறார். கர்த்தரை உயர்த்துகிறார்.

ராஜா தன்னுடைய படுக்கைக்குப்போகும்போது, இனிமேல் தன்னுடைய ராஜ்யத்திற்கு என்ன சம்பவிக்கப்போகிறது என்னும் சிந்தனையோடு படுக்கப்போகிறார். பாபிலோன் தேசம் பெரிதாயிருக்கிறது. இந்த மகாபெரிய தேசத்திற்கு நேபுகாத்நேச்சார் இப்போது ராஜாவாயிருக்கிறான். தனக்குப் பின்பு இந்த தேசத்தை யார் ஆளுகை செய்யப்போகிறார் என்னும் சிந்தனை ராஜாவின் மனதில் உண்டாயிற்று. ராஜா இந்த சிந்தனையோடு படுக்கையின்மேல் படுத்திருக்கும்போது, அவனுக்கு இது தொடர்பான சொப்பனமும், தரிசனங்களும் உண்டாயிற்று. கர்த்தரே இனிமேல் சம்பவிக்கப்போகிற காரியங்களை ராஜாவுக்கு சொப்பனத்தில் தெரிவித்திருக்கிறார்.

தனக்கு அதிக ஞானம் இருப்பதாகவும், கர்த்தருக்கு முன்பாக தான் விசேஷித்தவன் என்றும், தனக்கு கர்த்தருடைய கிருபை அதிகமாய்க் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் தானியேல் தன்னைப் புகழ்ந்து பேசவில்லை. தானியேலிடத்தில் மாய்மாலமான வார்த்தைகள் எதுவும் காணப்படவில்லை. அவர் உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லாததென்றும் தெளிவாகச் சொல்லுகிறார். தன்னிடத்தில் ஞானமில்லை என்பதையும், தேவன் சர்வஞானமுள்ளவர் என்பதையும் தானியேல் அங்கீரிக்கிறார்.

ராஜா கண்ட சொப்பனத்தின் மறைபொருள் தானியேலுக்கு வெளியாக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரவேல் வம்சத்தார் பாபிலோன் தேசத்து சிறையிருப்பில் வேதனைகளை அனுபவிக்கிறார்கள். அவர்களுக்கு ராஜா கண்ட சொப்பனத்தின் மறைபொருள் தெரியவேண்டும். கர்த்தருடைய சித்தம் அவர்களுக்கு அறிவிக்கப்படவேண்டும். கர்த்தர் இந்த மறைபொருளை தானியேலுக்கு வெளிப்படுத்துகிறார். தானியேல் அந்த இரகசியங்களை ராஜாவுக்கும் தெரிவிக்கவேண்டும். பாபிலோன் தேசத்து சிறையிருப்பிலிருக்கிற யூதர்களுக்கும் அறிவிக்கவேண்டும்.

கர்த்தர் தம்முடைய தீர்க்கதரிசிகளுக்கு தரிசனங்களைக் கொடுக்கிறார். தம்முடைய வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார். தாங்கள் கர்த்தரிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட செய்திகளை, தீர்க்கதரிசிகள் மற்றவர்களுக்கு கொடுக்கவேண்டும். தீர்க்கதரிசிகள் பிறருக்கு கொடுப்பதற்காகவே, கர்த்தரிடத்திலிருந்து செய்திகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். கர்த்தர் தம்முடைய செய்தியை யாரிடத்தில் சொல்லச்சொல்லுகிறாரோ, அவர்களிடத்தில் போய், தீர்க்கதரிசிகள் கர்த்தருடைய வார்த்தையை பயபக்தியோடும், தைரியத்தோடும் சொல்லவேண்டும்.

ஆரியோகு ராஜாவின் சேர்வைக்காரன். ஞானிகளைக் கொல்லும் உத்தரவு இவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தானியேல் ஆரியோகினிடத்தில் பேசி, பாபிலோன் தேசத்திலுள்ள எல்லா ஞானிகளுடைய ஜீவனையும் காப்பாற்றுகிறார். ராஜாவிற்கு அவருடைய சொப்பனத்தின் அர்த்தத்தைத் தெரிவிப்பதாகத் தானியேல் கூறுகிறார். ஆரியோகு தானியேலை நம்புகிறான். ஆகையினால் ஆரியோகு தானியேலை ராஜாவின் முன்பாகத் தீவிரமாய் அழைத்துக் கொண்டுபோகிறான்.

மனுஷருக்கு ஏற்படும் பிரச்சனைகளைக் காலாகாலமாக யூதர்களே தீர்த்து வைத்திருக்கிறார்கள். ஆபிரகாம் (ஆதி 14) யோசேப்பு (ஆதி 37-50), மொர்தெகாய் (எஸ் 1-10), யோனா (யோனா 1-4), தானியேல் (தானி 2-12), இயேசுகிறிஸ்து (யோவான் 3:16) ஆகியோரோடு மேலும் பல யூதர்கள் மனுக்குலத்தின் இரட்சிப்பிற்காகப் பாடுபட்டிருக்கிறார்கள்.

தானியேல் ராஜசமுகத்தில் பிரதியுத்தரம் சொல்லுகிறார். தானியேல் ராஜாவிடம் பேசும்போது, முதலாவதாகக் கர்த்தருடைய மகிமையைக் குறித்துக் கூறி, அவரைத் துதிக்கிறார். (தானி 2:27-28).

நேபுகாத்நேச்சாரின் மரணத்திற்குப் பின்பு சம்பவிக்கப்போகும் காரியங்களையும், அதன் பின்பு நித்திய காலம் வரையிலும் சம்பவிக்கப் போகும் காரியங்களையும் அறிவிப்பதே ராஜாவினுடைய சொப்பனத்தின் பிரதான நோக்கமாகும். (தானி 2:28-45). நேபுகாத்நேச்சாரின் நினைவுகளைத் தானியேல் வெளிப்படுத்துகிறார்.

சொப்பனத்திற்கு அர்த்தம் கூறுவதினால் தனக்கு எந்தப் பெருமையும் தானியேல் ஏற்படுத்திக் கொள்ள வில்லை. மற்ற ஞானிகளைவிட தான் பெரிய ஞானியென்றும் தானியேல் பெருமைப்படவில்லை. நேபுகாத்நேச்சார் தானியேலையும், அவருடைய மூன்று எபிரெய நண்பர்களையும் பார்த்தபோது, மற்றவர்களைவிட இவர்களைப் பத்து மடங்கு சமர்த்தராகக் கண்டான். (தானி 1:20) ஆனால் தானியேல் தன்னுடைய சாமர்த்தியத்திற்காகப் பெருமைப்படவில்லை.

தானியேலுக்கு மறைபொருள் வெளியாக்கப்பட்டதற்குக் காரணம்

1. தானியேலுடைய ஜீவனையும், அவருடைய நண்பர்களின் ஜீவனையும் பாதுகாப்பதற்காக. (தானி 2:18,30).

2. பாபிலோனிலுள்ள ஞானிகளைவிட கர்த்தர் பெரியவர் என்பதை மேன்மைப் படுத்துவதற்காக (தானி 2:27-28).

3. கர்த்தரை நம்புகிறவர்களின் விண்ணப்பங்களுக்கு அவர் பதில் கொடுப்பார் என்பதை அறிவிப்பதற்காக. (தானி 2:18-23).

4. எல்லா தேசங்களின்மீதும் கர்த்தருடைய சர்வ ஆளுகை உள்ளது என்பதை வெளிப்படுத்துவதற்காக. (தானி 2:19-23, 39-45).

5. மனுஷருடைய காரியங்களைக் கர்த்தரே வழிநடத்துகிறார் என்னும் சத்தியத்தை அறிவிப்பதற்காக. (தானி 2:19-23).

6. கர்த்தர் சர்வ ஞானமும், சர்வ அறிவும் உள்ளவர் என்பதை நிரூபிப்பதற்காக. (தானி 2:21-23; ரோமர் 11:33).

7. கர்த்தரே தீர்க்கதரிசனங்களின் காரணகர்த்தா என்பதைத் தெளிவு படுத்துவதற்காக. (தானி 2:23-45).

8. கர்த்தர் மாத்திரமே மெய்யான தேவன் என்பதை நிரூபிப்பதற்காக. (தானி 2:20-30).

9. இஸ்ரவேலின் தேவனே மெய்யான தேவன் என்று சாட்சி பகருவதற்காக. (தானி 2:23).

10. தேவனுடைய வெளிப்பாட்டைப்பெறுகிறவர் தேவனுடைய பிள்ளையாகவோ, அல்லது தேவனுடைய பிள்ளை அல்லாமலோ இருக்கலாம் என்னும் சத்தியத்தை வெளிப்படுத்துவதற்காக. (தானி 2:29-30,45).

11. மனுஷருடைய நினைவுகளை வெளிப்படுத்துவதற்காக. (தானி 2:30).

12. தானியேலின் நாளிலிருந்து நித்திய காலம் வரையிலும் உள்ள காலத்தில் தேவனுடைய திட்டத்தை அறிவிப்பதற்காக. (தானி 2:29-45).

சொப்பனம் தானி 2:31-35

தானி 2:31. ராஜாவே, நீர் ஒரு பெரிய சிலையைக் கண்டீர்; அந்தப் பெரிய சிலை மிகுந்த பிரகாசமுள்ளதாயிருந்தது; அது உமக்கு எதிரே நின்றது; அதின் ரூபம் பயங்கரமாயிருந்தது.

தானி 2:32. அந்தச் சிலையின் தலை பசும்பொன்னும், அதின் மார்பும் அதின் புயங்களும் வெள்ளியும், அதின் வயிறும் அதின் தொடையும் வெண்கலமும்,

தானி 2:33. அதின் கால்கள் இரும்பும், அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது.

தானி 2:34. நீர் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது; அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப்போட்டது.

தானி 2:35. அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்தி-ருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.

ராஜா கண்ட சொப்பனத்தையும், அதன் அர்த்ததையும் தானியேல் அவனுக்குச் சொல்லுகிறார். தானியேல் சொன்னது ராஜாவுக்கு பூரண திருப்தியாயிருக்கிறது. தீர்க்கதரிசி, தீர்க்கதரிசிக்குரிய வெகுமதியைப் பெற்றுக்கொள்வார். நேபுகாத்நேச்சார் தானியேலை கனம்பண்ணுகிறான். ராஜா தன்னுடைய படுக்கையில் கண்ட சொப்பனத்தையும், தரிசனங்களையும், அதன் அர்த்தத்தையும் தானியேல் அவனுக்கு தெளிவாகச் சொல்லுகிறார். ராஜா தானியேலுக்கு வெகுமதிகளைக் கொடுத்து கனம்பண்ணுகிறான்.

நேபுகாத்நேச்சார், தன்னுடைய சொப்பனத்தில் ஒரு பெரிய சிலையைக் கண்டான்; அந்தப் பெரிய சிலை மிகுந்த பிரகாசமுள்ளதாயிருந்தது; அது அவருக்கு எதிரே நின்றது; அதின் ரூபம் பயங்கரமாயிருந்தது (தானி 2:31). இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகா தேவன் ராஜாவுக்குத் தெரிவித்திருக்கிறார் (தானி 2:45).

நேபுகாத்நேச்சார் விக்கிரகங்களை ஆராதிக்கிறவன். அவன் தன்னுடைய சொப்பனத்திலே ஒரு பெரிய சிலையைக் கண்டான். இந்த சிலை ராஜாவுக்கு முன்பாக நிற்கிறது. இது ஒரு ஜீவனுள்ள மனுஷன் போல் நிற்கிறது. இந்த பெரிய சிலை மனுஷனால் ஸ்தாபிக்கப்பட்டது. இது ஒரு மனுஷசாயலான சிலை. பூர்வகாலத்தில் ராஜாக்கள் தங்களுக்கு இதுபோன்ற பெரிய சிலைகளை செய்து, தங்கள் தேசத்தின் மையப்பகுதியில் நிறுத்துவது வழக்கம். இந்த சிலையைப் பார்ப்பவர்கள் எல்லோரும் ஆச்சரியப்படவேண்டும் என்றும், ராஜாவின் மகிமையை புகழவேண்டும் என்றும் ராஜாக்கள் நினைத்தார்கள். ராஜா கண்ட பெரிய சிலை மிகுந்த பிரகாசமுள்ளதாயிருக்கிறது. மனுஷருடைய அவயவங்கள் எல்லாம் இந்த சிலையில் இருக்கிறது.

அந்தச் சிலையின் தலை பசும்பொன்னும், அதின் மார்பும் அதின் புயங்களும் வெள்ளியும், அதின் வயிறும் அதின் தொடையும் வெண்கலமும், அதின் கால்கள் இரும்பும், அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருக்கிறது (தானி 2:32,33).

பசும்பொன் விலையுயர்ந்தது. வெள்ளி பசும்பொன்னைவிட விலை குறைவானது. வெண்கலம், இரும்பு ஆகியவை சாதாரண உலோகங்கள். அந்த சிலையின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருக்கிறது. இந்த உலகப்பிரகாரமான காரியங்கள் இதுபோலத்தான் இருக்கும். உலகக்காரியங்களை நாம் அதிகமாய் நாடிப்போகும்போது, முடிவில் களிமண்தான் இருக்கும்.ஆரம்பத்தில் பொன்னாயிருப்பது முடிவிலே களிமண்ணாய்ப்போகும்.

நேபுகாத்நேச்சார் உலகப்பிரகாரமான மனுஷன். ஆகையினால் அவனுடைய சொப்பனத்தில் உலகப்பிரகாரமான காரியங்களையே அவனால் பார்க்க முடிகிறது. தானியேலோ ஆவிக்குரிய மனுஷன். அவருடைய சொப்பனத்தில் ஆவிக்குரிய காரியங்களைக் காண்கிறார் (தானியேல் 7-ஆவது அதிகாரம்).

இந்த உலகத்தின் ராஜ்யங்களைப்பற்றி தானியேலுக்கு தரிசனமுண்டாயிற்று. கர்த்தர் தானியேலுக்கு நான்கு மிருகங்களைக் காண்பிக்கிறார். தானியேலிடத்தில் பரலோகத்தின் ஞானம் நிரம்பியிருக்கிறது. இந்த ராஜ்யங்களெல்லாம் பூமிக்குரியது. பூமியின் ராஜாக்கள் ஜனங்களை கடுமையாக ஆளுகை செய்கிறார்கள். அவர்கள் மனுஷரைப் போலிராமல் மிருகங்களைப்போலிருக்கிறார்கள். இதை விளக்கும் வண்ணமாகவே, தானியேல் நான்கு மிருகங்களை தரிசிக்கிறார்.

நேபுகாத்நேச்சாரோ புறஜாதி தேசத்து ராஜா. அவர் அழகுக்கும், ஆடம்பரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறவர். தான் மினுக்காயும், மிகுந்த பிரகாசமாயும் இருக்கவேண்டுமென்று ராஜா விரும்புகிறார். உலகத்து ராஜ்யங்கள் மகிமையாயும் மேன்மையாயும் இருக்கவேண்டுமென்று ராஜா ஆசைப்படுகிறார். இதன் நிமித்தமாகவே ராஜா ஒரு பெரிய சிலையைக் காண்கிறார். அதன் உலோகங்களெல்லாம் வித்தியாசமாயிருக்கிறது.

நேபுகாத்நேச்சார் பெரிய சிலையை தரிசித்தபோது, அவர் மற்றும் ஒரு தரிசனத்தையும் பார்க்கிறார். ராஜா பார்த்துக்கொண்டிருக்கும் போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவருகிறது; அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப்போடுகிறது (தானி 2:34).

ராஜா காணமுடியாத வல்லமையைப் பார்க்கிறார். ஒரு கல் பெயர்ந்து உருண்டு வருகிறது. அது கைகளால் பெயர்க்கப்படவில்லை. ராஜா தரிசித்த பெரிய சிலையின் பாதங்களில் அந்தக் கல் மோதுகிறது. பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருக்கிறது. ராஜா பார்த்த பெரிய கல் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப்போடுகிறது. பாதம் நொறுங்கிவிட்டால் சிலை கீழே விழுந்துவிடும்.

அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்தி-ருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று (தானி 2:35).

நேபுகாத்நேச்சாரின் சொப்பனம்

1. பெரிய சிலை

2. அந்தப் பெரிய சிலை மிகுந்த பிரகாசமுள்ளதாயிருந்தது.

3. அது ராஜாவுக்கு எதிரே நின்றது;

4. அதின் ரூபம் பயங்கரமாயிருந்தது.

5. அந்தச் சிலையின் தலை பசும்பொன்னாக இருந்தது. (தானி 2:32)

6. அதின் மார்பும் அதின் புயங்களும் வெள்ளியாக இருந்தது.

7. அதின் வயிறும் அதின் தொடையும் வெண்கலமாக இருந்தது.

8. அதின் கால்கள் இரும்பாக இருந்தது. (தானி 2:32).

9. அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாக இருந்தது.

10. கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்து, அந்தச் சிலையின் பாதங்களின் மேல் மோதி, அவைகளை நொறுக்கிப்போட்டது. (தானி 2:34).

11. அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடை காலத்தில் போரடிக்கிற களத்தி-ருந்து பறந்துபோகிற பதரைப் போலாயிற்று (தானி 2:35). இந்த வாக்கியத்தில் “”அவைகள்” என்பது கடைசி நாட்களில் வெளி 13,17 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட்டிருக்கும் மிருகத்தோடு சேர்ந்து கொண்ட எல்லோரையும் குறிக்கும்.

12. சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று. (தானி 2:35)

சொப்பனத்தின் அர்த்தம் தானி 2:36-45

தானி 2:36. சொப்பனம் இதுதான்; அதின் அர்த்தத்தையும் ராஜசமுகத்தில் தெரிவிப்போம்.

தானி 2:37. ராஜாவே, நீர் ராஜாதி ராஜாவாயிருக்கிறீர்; பரலோகத்தின் தேவன் உமக்கு ராஜரீகத்தையும் பராக்கிரமத்தையும் வல்லமையையும் மகிமையையும் அருளினார்.

தானி 2:38. சகல இடங்களிலுமுள்ள மனுபுத்திரரையும் வெளியின் மிருகங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும் அவர் உமது கையில் ஒப்புக்கொடுத்து, உம்மை அவைகளையெல்லாம் ஆளும்படி செய்தார். பொன்னான அந்தத் தலை நீரே.

தானி 2:39. உமக்குப்பிறகு உமக்குக் கீழ்த்தரமான வேறொரு ராஜ்யம் தோன்றும்; பின்பு பூமியையெல்லாம் ஆண்டுகொள்ளும் வெண்கலமான மூன்றாம் ராஜ்யம் ஒன்று எழும்பும்.

தானி 2:40. நாலாவது ராஜ்யம் இரும்பைப் போல உரமாயிருக்கும்; இரும்பு எல்லாவற்றையும் எப்படி நொறுக்கிச் சின்னபின்னமாக்குகிறதோ, அப்படியே இது நொறுக்கிப்போடுகிற இரும்பைபோல அவைகளையெல்லாம் நொறுக்கித் தகர்த்துப்போடும்.

தானி 2:41. பாதங்களும் கால்விரல்களும் பாதிகுயவனின் களிமண்ணும் பாதி இரும்புமாயிருக்க நீர் கண்டீரே, அந்த ராஜ்யம் பிரிக்கப்படும்; ஆகிலும் களிமண்ணோடே இரும்பு கலந்திருக்க நீர் கண்டபடியே இரும்பினுடைய உறுதியில் கொஞ்சம் அதிலே இருக்கும்.

தானி 2:42. கால்விரல்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது என்னவென்றால், அந்த ராஜ்யம் ஒருபங்கு உரமும் ஒருபங்கு நெரிசலுமாயிருக்கும்.

தானி 2:43. நீர் இரும்பைக் களிமண்ணோடே கலந்ததாகக் கண்டீரே, அவர்கள் மற்ற மனுஷரோடே சம்பந்தங்கலப்பார்கள்; ஆகிலும் இதோ, களிமண்ணோடே இரும்பு கலவாததுபோல அவர்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொள்ளாதிருப்பார்கள்.

தானி 2:44. அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையி-ருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.

தானி 2:45. இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகா தேவன் ராஜாவுக்குத் தெரிவித்திருக்கிறார்; சொப்பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் சத்தியம் என்றான்.

ராஜா பார்த்த பெரிய சிலை இந்தப் பூமியின் ராஜ்யங்களைக் குறிக்கிறது. இந்த ராஜ்யங்கள், இந்தப் பூமியில் ஒவ்வொன்றாய் ஸ்தாபிக்கப்படும். இவை எல்லாவற்றிற்குமே இஸ்ரவேல் வம்சத்தார்மீது அதிகாரமும் ஆளுகையும் இருக்கும். இஸ்ரவேல் வம்சத்தார் ஏதாவது ஒரு வழியில், இந்த ராஜ்யங்களோடு தொடர்பு வைத்திருப்பார்கள்.

இந்த நான்கு ராஜ்யங்களையும் குறிப்பதற்கு, நான்கு வெவ்வேறு சிலைகள் நியமிக்கப்படவில்லை. அவையெல்லாம் ஒரே சிலையில் அடங்கியிருக்கிறது. ஒரே சிலையே நான்கு ராஜ்யங்களுக்கும் அடையாளமாயிருக்கிறது. அந்த ராஜ்யங்களெல்லாமே இஸ்ரவேல் வம்சத்தாருக்கு விரோதமாயிருக்கிறார்கள். அவர்களுடைய ஆவியும் ஒன்றுபோலிருக்கிறது. ஒரே வல்லமைதான். இந்த வல்லமை வெவ்வேறு தேசங்களில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது.

ராஜா கண்ட சொப்பனத்தை தானியேல் சொல்லுகிறார். அதின் அர்த்தத்தையும் ராஜசமுகத்தில் தெரிவிக்கிறார். நேபுகாத்நேச்சார் ராஜாதி ராஜாவாயிருக்கிறார். பரலோகத்தின் தேவன் அவருக்கு ராஜரீகத்தையும், பராக்கிரமத்தையும், வல்லமையையும், மகிமையையும் அருளியிருக்கிறார்.

தேவன் சகல இடங்களிலுமுள்ள மனுபுத்திரரையும் வெளியின் மிருகங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும் நேபுகாத்நேச்சாரின் கையில் ஒப்புக்கொடுத்து, அவரை அவைகளையெல்லாம் ஆளும்படி செய்திருக்கிறார். நேபுகாத்நேச்சாரே பொன்னான அந்தத் தலை (தானி 2:38).

நேபுகாத்நேச்சாரின் காலத்தில், அவரே ராஜாக்களுக்கெல்லாம் பெரிய ராஜாவாகவும், ராஜாதி ராஜாவாகவும் இருக்கிறார். கர்த்தரே நேபுகாத்நேச்சாருக்கு ராஜரீகத்தை அருளியிருக்கிறார். பராக்கிரமும் வல்லமையுமுள்ள ராஜ்யம் உறுதியாய் நிலைத்திருக்கும். பாபிலோன் ராஜாவின் எல்லையும் விஸ்தாரமாயிருக்கிறது. இவர் சகல இடங்களிலுமுள்ள மனுபுத்திரரை ஆளுகை செய்கிறார். நேபுகாத்நேச்சாரும் அவருடைய குமாரனும், அவருடைய குமாரனின் குமாரனும் பாபிலோன் தேசத்தை எழுபது வருஷங்களுக்கு ஆளுகை செய்கிறார்கள். பொன்னான அந்த தலையில் நேபுகாத்நேச்சாரின் வம்சத்திற்கு பங்குள்ளது.

“”இதோ, நான் வடக்கேயிருக்கிற சகல வம்சங்களையும், என் ஊழியக்காரனாகிய நோபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவையும் அழைத்தனுப்பி, அவர்களை இந்த தேசத்துக்கு விரோதமாகவும், இதின் குடிகளுக்கு விரோதமாகவும், சுற்றிலுமிருக்கிற இந்த எல்லா ஜாதிகளுக்கும் விரோதமாகவும் வரப்பண்ணி, அவைகளைச் சங்காரத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவைகளைப் பாழாகவும் இகழ்ச்சிக்குறியாகிய ஈசல் போடுதலாகவும், நித்திய வனாந்தரங்களாகவும் செய்வேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். இந்தத் தேசமெல்லாம் வனாந்தரமும் பாழுமாகும்; இந்த ஜாதிகளோ, எழுபது வருஷமாகப் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பார்கள்” (எரே 25:9,11).

“”நான் பூமியையும் மனுஷனையும் பூமியின்மேலுள்ள மிருகஜீவன்களையும் என் மகா பலத்தினாலும் ஓங்கிய என் புயத்தினாலும் உண்டாக்கினேன்; எனக்கு இஷ்டமானவனுக்கு அதைக் கொடுக்கிறேன். இப்பொழுதும் நான் இந்த தேசங்களையெல்லாம் என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவின் கையிலேகொடுத்தேன்; அவனுக்கு ஊழியஞ்செய்யும்படி வெளியின் மிருகஜீவன்களையும் கொடுத்தேன். அவனுடைய தேசத்துக்குக் காலம் வருகிறவரையில் சகல ஜாதிகளும் அவனையும் அவனுடைய புத்திரபௌத்திரரையும் சேவிப்பார்கள்; அதின் பின்பு அநேகம் ஜாதிகளும் பெரிய ராஜாக்களும் அவனை அடிமைகொள்வார்கள்” (எரே 27:5-7).

நேபுகாத்நேச்சாரின் காலத்தில், மேலும் சில ராஜ்யங்கள் பலமுள்ள பேரரசாய் விளங்கிற்று. சீத்தியர்கள் பாபிலோன் தேசத்தாரைப்போல பராக்கிரமமும், வல்லமையும் மிகுந்தவர்கள். ஆனாலும் பாபிலோன் ராஜ்யமே இஸ்ரவேல் வம்சத்தாரை ஆளுகை செய்கிறது.

தானியேல் ராஜாவின் சொப்பனத்திற்கு அர்த்தம் சொல்லும்போது, அவர் பாபிலோன் ராஜ்யத்தை தலை என்று சொல்லுகிறார். நேபுகாத்நேச்சாரின் காலத்தில் பல ராஜ்யங்கள் இருந்தாலும், பாபிலோன் தேசமே ஞானத்திலும், வல்லமையிலும், ஐசுவரியத்திலும் சிறந்து விளங்கிற்று.

“”நீ பாபிலோன் ராஜாவின்மேல் சொல்லும் வாக்கியமாவது: ஒடுக்கினவன் ஒழிந்துபோனானே! பொன்னகரி ஒழிந்துபோயிற்றே!” (ஏசா 14:4).

நிம்ரோத் ராஜாவின் ஆட்சிக்காலத்திலேயே பாபிலோன் சாம்ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது என்று சரித்திர ஆசிரியர்கள் சொல்லுகிறார்கள். ஆனாலும் நேபுகாத்நேச்சாரின் காலத்தில்தான், பாபிலோன் ராஜ்யத்திற்கு, இந்த உலகத்தில் தனி அங்கீகாரம் கிடைத்தது. நேபுகாத்நேச்சாருக்கு பின்பு, பாபிலோன் தேசத்தை ஏவில்மொரொதாக், பெல்ஷாத்சார் ஆகிய ராஜாக்கள் ஆளுகை செய்தார்கள். இவர்களெல்லோரும் பொன்னான அந்த தலையைச் சேர்ந்தவர்கள்.

நேபுகாத்நேச்சாருக்குப் பிறகு, அவருக்குக் கீழ்த்தரமான வேறொரு ராஜ்யம் தோன்றும்; பின்பு பூமியையெல்லாம் ஆண்டுகொள்ளும் வெண்கலமான மூன்றாம் ராஜ்யம் ஒன்று எழும்பும் (தானி 2:39).

இந்த ராஜ்யத்தின் மார்பும் அதின் புயங்களும் வெள்ளியாயிருக்கிறது. இது பாபிலோன் தேசத்தைப்போல ஐசுவரியம் மிகுந்த தேசமல்ல. பாபிலோன் பொன்னான தலை. இந்த ராஜ்யமோ வெள்ளி. வெள்ளி பொன்னைவிட மதிப்பு குறைந்தது. சிலையினுடைய மார்பும் புயமும் என்பது மேதிய, பெர்சிய ராஜ்யங்களைக் குறிக்கும் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். இந்த சாம்ராஜ்யத்தை மேதியனாகிய தரியுவும், பெர்சியனாகிய கோரேசும் சேர்ந்து கூட்டாக ஸ்தாபித்தார்கள். இவ்விரண்டு தேசங்களுக்கு இடையே வலுவான கூட்டு இருக்கிறது. ஆகையினால் இந்த ராஜ்யம், அந்த சிலையின் புயங்கள் என்று அழைக்கப்படுகிறது. சிலைக்கு இரண்டு புயங்கள் இருக்கும். மேதிய ராஜ்யமும், பெர்சிய ராஜ்யங்களும் அவ்விரண்டு புயங்களாம்.

கோரேசு ராஜாவின் தகப்பனார் ஒரு பெர்சியர். அவருடைய தாயார் ஒரு மேதியர். ராஜா கண்ட சிலையும் வயிறும் அதின் தொடையும் வெண்கலமாயிருக்கிறது. இது கிரேக்க ராஜ்யத்தைக் குறிக்கும். மகாஅலெக்சாண்டர் கிரேக்க ராஜ்யத்தை ஸ்தாபித்தார். பெர்சிய தேசத்து கடைசி ராஜாவாகிய தரியுவை, அலெக்சாண்டர் யுத்தத்திலே ஜெயித்தார். கிரேக்க பேரரசு மூன்றாவது ராஜ்யம். இந்த ராஜ்யம் வெண்கலத்தோடு ஒப்பிடப்பட்டிருக்கிறது. பொன்னையும் வெள்ளியையும் விட வெண்கலம் விலை மதிப்பு குறைவானது. பெர்சிய தேசத்தைவிட, கிரேக்க தேசத்தார் பொருளாதாரத்தில் தாழ்வடைந்திருந்தார்கள்.

மகாஅலெக்சாண்டர் கடைசி வரையிலும் தன்னுடைய ஆளுகையை உறுதிபண்ணுவதற்கு, அவர் தன்னுடைய பட்டயத்தையே நம்பியிருந்தார். அலெக்சாண்டரிடத்தில் பட்டயமில்லையென்றால், அவர் ஒன்றுமில்லை. அவர் உலகத்தையே ஜெயித்ததாக பெருமைப் பட்டுக்கொண்டார்.

ராஜா கண்ட சிலையின் கால்கள் இரும்பாயிருக்கிறது. இது ரோமப்பேரரசைக் குறிக்கும். ரோமப்பேரரசு உயர்ந்த நிலையிலிருந்த காலத்தில், இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் அவதரித்தார். சுவிசேஷ பிரபல்யத்தின் மூலமாய் இயேசுகிறிஸ்துவின் ராஜ்யம் இந்தப் பூமியில் ஸ்தாபிக்கப்பட்டது. இரும்புக்கு விலைமதிப்பு இல்லை. ஆனால் அது வலுவானது.

நாலாவது ராஜ்யம் இரும்பைப் போல உரமாயிருக்கும்; இரும்பு எல்லாவற்றையும் எப்படி நொறுக்கிச் சின்னபின்னமாக்குகிறதோ, அப்படியே இது நொறுக்கிப்போடுகிற இரும்பைபோல அவைகளையெல்லாம் நொறுக்கித் தகர்த்துப்போடும் (தானி 2:40).

ரோமப்பேரரசார் கிரேக்க பேரரசை நொறுக்கி சின்னபின்னமாக்கிப்போட்டார்கள். அதன் பின்பு அவர்கள் யூதாதேசத்தையும் நொறுக்கி தகர்த்தார்கள்.

ரோமப்பேரரசின் பின்பகுதியில், இந்த ராஜ்யம் பலவீனமடைந்தது. ரோமப்பேரரசு முதலில் ஒன்றாயிருந்தது. அதன் பின்பு அது பத்து மாகாணங்களாகப் பிரிந்தது. கால்களில் பத்து விரல்கள் இருப்பதுபோல, ரோமப்பேரரசும் பத்து சிறிய சாம்ராஜ்யங்களாகப் பிரிந்தது. இந்த மாகாணங்களில் சில களிமண்ணைப்போல பலவீனமானவை. வேறு சில மாகாணங்கள் இரும்பைப்போல உரமானவை.

பாதங்களும் கால்விரல்களும் பாதிகுயவனின் களிமண்ணும் பாதி இரும்புமாயிருக்க நேபுகாத்நேச்சார் கண்டான். அந்த ராஜ்யம் பிரிக்கப்படும்; ஆகிலும் களிமண்ணோடே இரும்பு கலந்திருக்க ராஜா கண்டபடியே இரும்பினுடைய உறுதியில் கொஞ்சம் அதிலே இருக்கும். கால்விரல்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருக்கிறது என்னவென்றால், அந்த ராஜ்யம் ஒருபங்கு உரமும் ஒருபங்கு நெரிசலுமாயிருக்கும் (தானி 2:41,42).

இரும்பு களிமண்ணோடே கலக்காது. ஆனால் நேபுகாத்நேச்சார் ஆரம்பத்தில் இரும்பை களிமண்ணோடே கலந்ததாக கண்டான். அவர்கள் மற்ற மனுஷரோடே சம்மந்தங்கலப்பார்கள். ஆகிலும் இதோ, களிமண்ணோடே இரும்பு கலவாததுபோல அவர்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொள்ளாதிருப்பார்கள் (தானி 2:43).

ரோமப்பேரரசு ஒரே பேரரசாகயிராமல், மாகாணங்களாகப் பிரிந்து கிடக்கும். மக்கள் சபை என்றும், பிரதிநிதிகள் சபை என்றும், பிரபுக்கள் சபை என்றும் ரோமப்பேரரசுக்குள் பல பிரிவுகள் இருக்கும். இரும்பும் களிமண்ணும் ஒன்றாய்ச் சேராது. ரோமப்பேரரசின் ஆளுநர்களும் ஒன்றாய்ச் சேரமாட்டார்கள். ஆளுநர்களுக்குள்ளே போட்டிகளும், பொறாமைகளும் உண்டாகும். மாரியசுக்கும் சுல்லாவுக்கும் இடையே நீண்டகாலம் உள்நாட்டு சண்டை உண்டாயிற்று. சீசரும் பாம்பியும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டார்கள். இவர்களில் யார் இரும்பு என்றும், யார் களிமண் என்றும் வேறுபிரிப்பது கடினம். ஆனால் இவர்கள் ஒற்றுமையாயிராமல், இவர்களுக்குள் பிரிந்து சண்டை போட்டுக்கொண்டார்கள்.

நேபுகாத்நேச்சார் தன்னுடைய தரிசனத்தில் கண்ட பெரிய சிலையைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டு வந்தது. இந்தக் கல் இயேசுகிறிஸ்துவின் ராஜ்யத்தைக்குறிக்கும். இயேசுகிறிஸ்துவின் ராஜ்யம் மனுஷருடைய புத்தியினாலோ, மனுஷருடைய வல்லமையினாலோ, மனுஷருடைய திட்டத்தினாலோ ஸ்தாபிக்கப்படவில்லை. கிறிஸ்துவின் ராஜ்யம் மனுஷரால் ஸ்தாபிக்கப்படவில்லை. அது மனுஷருடைய உதவியினாலும், ஒத்தாசையினாலும் ஸ்தாபிக்கப்படவில்லை.

சுவிசேஷ சபையே இயேசுகிறிஸ்துவின் ராஜ்யம். கிறிஸ்துவின் ராஜ்யம் இந்த உலகத்திற்குரியதல்ல. ஆனாலும் இது இந்த உலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவின் ராஜ்யம் தேவனுடைய ராஜ்யம். இந்த ராஜ்யம் மனுஷர் மத்தியிலே ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது.

பரலோகத்தின் தேவனே தம்முடைய ராஜ்யத்தை இந்தப் பூமியில் ஸ்தாபித்திருக்கிறார். தேவனுடைய ராஜ்யத்தை ஆளுகை செய்யும் அதிகாரத்தை தேவனாகிய கர்த்தர் இயேசுகிறிஸ்துவுக்கு கொடுத்திருக்கிறார். சீயோனிலுள்ள பரிசுத்தமான மலையில் கிறிஸ்துவானவர் ராஜாவாக அபிஷேகம்பண்ணப்பட்டிருக்கிறார். புதிய ஏற்பாட்டில் தேவனுடைய ராஜ்யம் என்பது, பரலோகத்தின் ராஜ்யம் என்று அழைக்கப்படுகிறது. தேவனுடைய ராஜ்யம் பரலோகத்திலிருந்து ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவின் ராஜ்யம் இந்தப்பூமியிலிருந்தாலும், அதில் பரலோகத்தின் காரியங்களுக்கே முக்கியத்துவம் இருக்கும்.

நேபுகாத்நேச்சார் நான்கு ராஜ்யங்களை தரிசனமாய்க் காண்கிறார். இந்த ராஜாக்களின் காலத்திலேயே, இயேசுகிறிஸ்துவின் ராஜ்யமும் ஸ்தாபிக்கப்படும். இந்த ராஜ்யங்களில், நான்காவது ராஜ்யமாகிய ரோமப்பேரரசைப்பற்றி, சுவிசேஷத்தில் அதிகமாய் எழுதப்பட்டிருக்கிறது.

“”அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகஸ்துராயனால் கட்டளை பிறந்தது” (லூக் 2:1). பூமியின் ராஜாக்கள் ஒருவருக்கு விரோதமாக ஒருவர் சண்டைபோட்டுக்கொண்டிருக்கிறார்கள். கர்த்தரோ தம்முடைய வேலையைச் செய்கிறார். தம்முடைய ஆலோசனைகளை நிறைவேற்றுகிறார்.

இயேசுகிறிஸ்துவின் ராஜ்யம் அழிந்துபோகாத நித்திய ராஜ்யம். கிறிஸ்துவின் ராஜ்யத்தில் வாரிசு சண்டைகளோ, புரட்சிகளோ இருக்காது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே ராஜாதி ராஜாவாகவும், கர்த்தாதி கர்த்தாவாகவும் இருக்கிறார். இயேசுகிறிஸ்துவுக்கு பின்பு, அவருடைய வாரிசு என்று யாரும் நியமிக்கப்படவில்லை. ஏனென்றால் இயேசுகிறிஸ்து நித்தியமானவர். கிறிஸ்துவின் ராஜ்யமும், அவருடைய ஆளுகையும் நித்திய காலமாயிருக்கும். கிறிஸ்துவின் ராஜ்யத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. புரட்சி செய்தோ அல்லது யுத்தம் செய்தோ அதை கவிழ்த்துப்போட முடியாது.

தேவனுடைய ராஜ்யம் யூதரிடமிருந்து எடுத்து, புறஜாதியாருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

“”ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தி-ருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத்தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்” (மத் 21:43).

ஆனாலும் தேவனுடைய ராஜ்யம் எப்போதுமே மேசியாவின் ராஜ்யமாகவே இருக்கிறது. கிறிஸ்துவின் ராஜ்யத்தை அவருடைய வார்த்தைகளும், அவருடைய உபதேசங்களும் ஆளுகை செய்கிறது.

கிறிஸ்துவின் ராஜ்யம் ஜெயமுள்ள ராஜ்யம். அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையி-ருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கினதை ராஜா கண்டார். அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும் (தானி 2:44).

இயேசுகிறிஸ்துவின் ராஜ்யத்திற்கு பிசாசின் ராஜ்யங்களெல்லாம் அடிமையாயிருக்கும். கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு விரோதமாய் எழும்பினவர்களெல்லோரும் உடைந்துபோவார்கள். விக்கிரகாராதனை, மாய்மாலங்கள், பில்லி சூனியங்கள் ஆகியவற்றிற்கு கிறிஸ்துவின் ராஜ்யத்தில் இடமில்லை.

“”இந்தக் கல்-ன்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று இயேசு சொன்னார் (மத் 21:44).

இயேசுகிறிஸ்துவின் ராஜ்யம் நித்திய ராஜ்யம். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே தம்முடைய ராஜ்யத்தை நித்திய காலமாய் ஆட்சி செய்வார். இந்தப் பூமியின் கடைசி காலம் மாத்திரமல்ல, இந்தப் பூமி அழிந்த பின்பும், காலங்களும் நாட்களும் முடிந்து போன பின்பும், கிறிஸ்துவானவர் தம்முடைய ராஜ்யத்தை ஆளுகை செய்வார். தேவனாகிய கர்த்தர் எல்லாவற்றிற்கும் எல்லாமாகயிருப்பார்.

தானியேல் நேபுகாத்நேச்சாரின் சொப்பனங்களையும், அதற்கான அர்த்தங்களையும் சொல்லுகிறார். இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகா தேவன் ராஜாவுக்குத் தெரிவித்திருக்கிறார் என்றும், சொப்பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் சத்தியம் என்றும் தானியேல் நேபுகாத்நேச்சாருக்கு சொல்லுகிறார் (தானி 2:45).

சொப்பனம் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறது. இந்த சொப்பனத்தை மகாதேவனே ராஜாவுக்கு தெரிவித்திருக்கிறார். இவையெல்லாம் இனிமேல் சம்பவிக்கப்போகிற காரியங்கள். கல்தேயரால் இந்தக் காரியங்களை ராஜாவுக்கு அறிவிக்க முடியவில்லை.

தானியேல் ராஜாவுக்கு சொப்பனத்தைச் சொல்லும்போது, சொப்பனமானது நிச்சயம் என்றும், அதன் அர்த்தம் சத்தியம் என்றும் சொல்லுகிறார். கர்த்தரே தானியேலுக்கு ராஜா கண்ட சொப்பனத்தையும், அதன் அர்த்தத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆகையினால் தானியேல் ராஜாவோடு பேசும்போது, எவ்வித கலக்கமும், சந்தேகமுமில்லாமல், தெளிவாகவும், உறுதியாகவும் பேசுகிறார். சொப்பனத்தின் அர்த்தம் சத்தியம் என்று சொல்லுகிறார்.

“”பரலோகத்தின் தேவன் உமக்கு ராஜரீகத்தையும் பராக்கிரமத்தையும் வல்லமையையும் மகிமையையும் அருளினார்” (தானி 2:37) என்று தானியேல் ராஜாவிடம் சொல்லுகிறார். இந்த வாக்கியம் தானி 2:21 ஆவது வசனத்தை உறுதிபண்ணுகிறது. கர்த்தர் ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர். கர்த்தர் இன்னும் சர்வ ஆளுகையுடையவர். மனுஷர் மத்தியிலே தமக்குச் சித்தமானதைச் செய்யக் கூடியவர். தேவனுடைய வல்லமையல்லாமல் இந்த உலகில் வேறு வல்லமை எதுவுமில்லை. (ரோமர் 13:1-8).

சிருஷ்டிக்கப்பட்ட யாவருக்கும் கர்த்தர் வல்லமையைத் தருகிறார். ஆனால் அந்த வல்லமையைச் சிருஷ்டிகள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதற்குக் கர்த்தர் பொறுப்பானவர் அல்ல. கர்த்தர் சாத்தானுக்கும் வல்லமையைக் கொடுத்திருக்கிறார். அந்த அதிகாரத்தைச் சாத்தான் தவறாகப் பயன்படுத்தியதினால் கர்த்தர் அவனை நியாயம் விசாரிப்பார். (மத் 25:41).

கர்த்தர் ராஜ்யங்களை எழுப்புகிறார். அதை விழச்செய்கிறார். கர்த்தருக்கு விரோதமாக யாரும் கிரியை செய்து ஜெயம் பெறமுடியாது. சில சமயங்களில் கர்த்தர் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காகப் புறஜாதி ராஜாக்களுக்கும் ராஜ்யபாரத்தைத் தருகிறார். கர்த்தர் பார்வோனை எழுப்பினார். கர்த்தருடைய சித்தத்தின் பிரகாரம் பார்வோன் அவருக்கு எதிர்த்துநின்றான். இதனால் கர்த்தருடைய வல்லமை ஜனங்களுக்குத் தெரிய வந்தது. (யாத் 4-15; ரோமர் 9:17-24).

கர்த்தர் அசீரியரை எழுப்பினார். எப்பிராயீமின் பத்துக் கோத்திரத்தாரைத் தண்டிப்பதற்குக் கர்த்தர் அசீரியரைப் பயன்படுத்தினார். (2இராஜா 17). கர்த்தர் நேபுகாத்நேச்சாரை எழுப்பி, யூதாவை அதன் பாவங்களுக்காகத் தண்டித்தார். (2இராஜா 24; எரே 25).

கர்த்தர் இவ்வாறு காலாகாலமாகத் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றி வருகிறார். கர்த்தருடைய சித்தம் தடையில்லாமல் நிறைவேறும். கர்த்தருடைய சித்தம் மனுஷருடைய பாவத்தினால் நிறைவேறுவதில் கால தாமதமாயிற்று. புதிய பூமியில் கர்த்தருடைய சித்தம் பரிபூரணமாக நிறைவேறும்.

சாத்தானும், அவனுடைய பிரதிநிதிகளும் கர்த்தருடைய நோக்கங்கள் பூமியில் நிறைவேறுவதைத் தடைபண்ணுகிறார்கள். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது, சாத்தான் முழுவதுமாகத் தோற்கடிக்கப்படுவான். பூமியில் தேவனுடைய ராஜ்யம் நித்திய காலமாக ஸ்தாபிக்கப்படும்.

சிலையின் வியாக்கியானம்

நேபுகாத்நேச்சார் ஒரு பெரிய சிலையைத் தன் சொப்பனத்தில் கண்டான். அந்தச் சிலையில் ஐந்து விதமான உலோகங்கள் உள்ளன. இவை ஐந்து ராஜ்யங்களுக்கு அடையாளமாகும். அவையாவன:

1. பாபிலோன்

2. மேதிய-பெர்சிய தேசம்

3. கிரேக்குதேசம்

4. ரோமப்பேரரசு

5. பிந்திய ரோமப்பேரரசு

இவை கடைசி நாட்களிலுள்ள பத்து ராஜ்யங்களைக் குறிக்கும். (தானி 2:44-45; தானி 7:23-24; வெளி 17:12-17).

ஐந்து உலோகங்களின் வியாக்கியானம்

1. சிலையின் தலை பசும்பொன் (தானி 2:32,35,38). இது நேபுகாத்நேச்சாரின் பாபிலோன் தேசத்தைக் குறிக்கிறது. (தானி 2:37-38; எரே 15:4; எரே 24:9; எரே 25:1-12; எரே 29:18). இங்கு கூறப்பட்டிருக்கும் ஐந்து ராஜ்யங்களும் ஒன்றன்பின் ஒன்றாக வருகிறது. தேவனுடைய திட்டம் நிறைவேறும் பிரகாரமாக இவை ஒவ்வொன்றும் தேசங்களை ஆளுகை செய்கிறது. இஸ்ரவேல் தேசத்தைத் தண்டிப்பதற்காகக் கர்த்தர் இந்தப் புறஜாதி தேசங்களைப் பயன்படுத்துகிறார். நேபுகாத்நேச்சாரின் முதலாம் வருஷத்தில் பாபிலோன் தேசம் இஸ்ரவேலைக் கைப்பற்றியது. இது கி.மு. 606 ஆம் வருஷத்தில் நடைபெற்றது. இதற்குப் பின்பு 70 வருஷங்களாக பாபிலோன் தேசம் தன் அதிகாரத்தில் தொடர்ந்து நிலைத்திருக்கிறது. (தானி 9:2; எரே 25).

நேபுகாத்நேச்சார் 43 வருஷங்களாகப் பாபிலோன் தேசத்தை ஆட்சி புரிந்தான். இவனுக்குப் பின்பு ஏவிலமொராதாக் என்பவன் பாபிலோனின் ஆட்சி பொறுப்புக்கு வந்தான். (2இராஜா 25:27; எரே 52:31) இவனுக்குப் பின்பு, நேபோநிதசும், பெல்ஷாத்சாரும் இணைந்து பாபிலோனை ஆட்சி புரிந்தார்கள். இவர்களுக்குப்பின்பு பாபிலோன் பேரரசு அழிந்துபோயிற்று. (தானி 5). பாபிலோன் பேரரசு இஸ்ரவேல் தேசத்தை 60 வருஷங்களாக ஒடுக்கி, ஆளுகை செய்தது. கி.மு. 606 ஆம் வருஷத்திலிருந்து கி.மு. 546 ஆம் வருஷம் வரையிலும் பாபிலோனியர் இஸ்ரவேலை ஆளுகை செய்தார்கள். (எரே 25).

2. அந்தச் சிலையின்மார்பும் அதின் புயங்களும் வெள்ளி. (தானி 2:32,35,39). சிலையின் இந்தப் பகுதி மேதிய-பெர்சிய தேசத்தைக் குறிக்கிறது. யூதர்களின் 70 வருஷ சிறையிருப்புக்குப் பின்பு மேதிய-பெர்சிய தேசத்தார் பாபிலோனை ஆளுகை செய்கிறார்கள். புறஜாதியாரின் காலத்தில் மேதிய-பெர்சிய தேசத்தார் இஸ்ரவேலை ஒடுக்கும் இரண்டாவது தேசமாகக் கூறப்பட்டிருக்கிறார்கள். (தானி 2:39; தானி 5:1-31; தானி 8:20; தானி 9:1; தானி 10:1; தானி 11:1-3; 2நாளா 36:22; எஸ்றா 1:1-3).

இந்தச் சிலைக்கு இரண்டு புயங்கள் உள்ளன. இது மேதிய தேசம், பெர்சிய தேசம் ஆகிய இரண்டு தேசங்களைக் குறிக்கும். இவர்களுடைய தேசம் பாபிலோன் பேரரசைவிட தாழ்மையானது. பாபிலோனியர் பொன்னைப் போல் மேன்மையானவர்கள். இவர்கள் வெள்ளியாக இருக்கிறார்கள். வல்லமையிலும், அதிகாரத்திலும் மேதிய-பெர்சிய தேசத்தார் பாபிலோன் தேசத்தாரைவிட எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. ஆனால் ஐசுவரியத்திலும், ஆடம்பரத்திலும், மகிமையிலும், அரசாங்க அமைப்பு முறையிலும் இவர்கள் பாபிலோனைவிட குறைந்தவர்களாகக் காணப்படுகிறார்கள். (ஏசா 13:19). பாபிலோனின் ராஜா சர்வாதிகாரியாக இருந்தான். (தானி 5:19) ஆனால் மேதிய-பெர்சிய தேசத்தில் ராஜாவைவிட அந்தத் தேசத்தின் சட்டம் முக்கியமானதாயிற்று. ராஜாவால்கூட நிறைவேற்றப்பட்ட சட்டத்தை மாற்ற முடியாது. (தானி 6:1,14).

இதுபோலவே மூன்றாவது, நான்காவது ராஜ்யங்கள் இந்தத் தேசத்தைவிட ஐசுவரியத்திலும், மகிமையிலும் குறைந்து காணப்படுகின்றன. பாபிலோன் இஸ்ரவேல் தேசத்தாரை அடிமைப் படுத்திற்று. (எரே 25) மேதிய-பெர்சிய தேசத்தார் இஸ்ரவேல் தேசத்தாரை விடுவித்தார்கள். (ஏசா 44:28; ஏசா 45:1-5; எஸ்றா 1:1-4; எஸ்றா 6:1-14) மகா அலெக்ஸôண்டர் கிரேக்கு பேரரசை கி.மு. 334 ஆம் வருஷம் ஸ்தாபித்தார். அதுவரையிலும் மேதிய-பெர்சிய தேசத்தார் ஆட்சி பொறுப்பில் இருந்தார்கள். அதன் பின்பு கிரேக்கர்கள் அவர்களிடமிருந்து ஆட்சி பொறுப்பைப் பறித்துக் கொண்டார்கள்.

3. சிலையின் வயிறும் அதின் தொடையும் வெண்கலம். (தானி 2:32,35,39). பெரிய சிலையின் இந்தப் பகுதி மூன்றாவது ராஜ்யமாகிய கிரேக்கு ராஜ்யத்தைக் குறிப்பிடுகிறது. மகா அலெக்ஸôண்டர் கிரேக்கு ராஜ்யத்தை ஸ்தாபித்தார். புறஜாதியாரின் காலங்களில் கிரேக்கர்கள் இஸ்ரவேல் தேசத்தாரை ஆளுகை செய்தார்கள். (தானி 2:39; தானி 8:20-21; தானி 11:1-34).

கிரேக்கு தேசம் மற்ற தேசங்களைவிட நிலப்பரப்பில் விஸ்தீரணமாக இருந்தது. அலெக்ஸôண்டர் கிரேக்கு தேசம், மக்கதோனியா தேசம் ஆகிய தேசங்களை ஸ்தாபித்து, மேதிய-பெர்சிய தேசத்தையும் பிடித்துக் கொண்டான். அலெக்ஸôண்டரின் ஆளுகை இந்திய தேசம் வரையிலும் பரவியிருந்தது. அலெக்ஸôண்டரின் மரணத்திற்குப் பின்பு கிரேக்குப் பேரரசு அழியத் தொடங்கிற்று. கிரேக்கு சாம்ராஜ்யம் நான்கு பிரிவுகளாகப் பிரிந்தது. (தானி 8)

4. சிலையின் கால்கள் இரும்பு. (தானி 2:33-35,40). மகா சிலையின் இந்தப் பகுதி முந்திய ரோமப்பேரரசைக் குறிக்கிறது. இவர்கள் கிரேக்கு சாம்ராஜ்யத்திற்குப் பின்பு வருகிறார்கள். இஸ்ரவேலை ஒடுக்கும் நான்காவது ராஜ்யமாக இவர்கள் விவரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மற்ற மூன்று ராஜ்யங்களும் பொன், வெள்ளி, வெண்கலம் போன்றவை. இரும்பு இந்த உலோகங்களைவிட வலிமையானது. இது நான்காவதாகக் கூறப்பட்டிருக்கிற போதிலும், மற்ற தேசங்களைவிட முந்திய ரோமப்பேரரசு வலிமையில் எந்த வகையிலும் குறைந்ததல்ல. புறஜாதியாரின் காலத்தில் இவர்கள் இஸ்ரவேலை ஒடுக்கினார்கள். மேசியாவின் வருகைக்கு முன்பாக மேலும் இரண்டு ராஜ்யங்கள் இஸ்ரவேல் தேசத்தை ஆளுகை செய்ய வேண்டும். இந்தச் சிலைக்கு இரண்டு கால்கள் உள்ளன. முந்திய ரோமப்பேரரசில் காணப்பட்ட கிழக்கு தேசமும், மேற்கு தேசமும் அவ்விரண்டு கால்களாகும்.

5. சிலையின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணும். (தானி 2:33-35,44). சிலையின் இந்தப் பகுதி வருங்காலத்தில் ஸ்தாபிக்கப்படப் போகும் பிந்தைய ரோமப்பேரரசைக் குறிப்பிடுகிறது. புறஜாதியாரின் காலத்தில் இஸ்ரவேலை ஒடுக்கும் ஐந்தாவது ராஜ்யமாக இவர்கள் கூறப்பட்டிருக்கிறார்கள். (தானி 2:31-43; தானி 7:23-25; வெளி 17:12-17).

இந்தப் பகுதி சிலையின் கடைசிப் பகுதியாகும். பரலோகத்திலிருந்து வரும் கல் இந்தச்சிலையை அழிக்கும். பிந்திய ரோமப்பேரரசு பிளவுண்ட ராஜ்யங்களாக இருக்கும். ஓரளவு பெலமுள்ளதாகவும், ஓரளவு பெலவீனமுள்ளதாகவும் இருக்கும். இதன் பாதங்கள் பாதி இரும்பும், பாதிக் களிமண்ணுமாக இருக்கிறது. களிமண் என்பது மக்களாட்சியையும், இரும்பு என்பது மன்னர் ஆட்சியையும் குறிப்பிடுகிறது. இரும்பும், களிமண்ணும் ஒன்றுசேராது. அதுபோலவே மக்களாட்சியும், மன்னராட்சியும் ஒன்றுசேராது.

இரும்பும், களிமண்ணும் இருக்குமிடத்தில் இரும்பின் பலனே மேலோங்கி நிற்கும். அதுபோலவே பிந்திய ரோமப்பேரரசில் மக்களாட்சி அகற்றப்பட்டு, மன்னராட்சி மறுபடியும் மேலோங்கி நிற்கும். பிந்திய ரோமப்பேரரசில் பத்து ராஜ்யங்கள் ஸ்தாபிக்கப்படும். பத்துராஜாக்கள் அதை ஆளுகை செய்வார்கள். (தானி 2:44-45; தானி 7:7-8, 23-24).

இந்தப் பத்து ராஜ்யங்களும் பாதங்களிலுள்ள பத்து விரல்களாகும். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக கடைசி நாட்களில் இந்தப் பத்து ராஜ்யங்களும் பூமியில் ஆளுகை செய்வார்கள். இயேசு கிறிஸ்து அப்போது அவர்களை அழிப்பார். (வெளி 17:8-17; வெளி 19:11-21).

எழுபதாவது வாரத்தின் முதல் மூன்றரை வருஷங்களில் பத்து ராஜாக்கள் இந்த ராஜ்யங்களை ஆளுகை செய்வார்கள். அதன் பின்பு கடைசி மூன்றரை வருஷங்களில் அந்திக்கிறிஸ்து தேசங்களை ஆளுகை செய்வான். இந்தப் பத்து ராஜ்யங்கள் பிந்திய ரோமப் பேரரசாகக் கூறப்பட்டிருக்கிறது. (தானி 7, வெளி 17:12-17)

சிலையை உடைத்த கல்

இந்தக் கல் பரலோக ராஜ்யத்தைக் குறிப்பிடுகிறது. இயேசு கிறிஸ்து பரலோக ராஜ்யத்தின் அதிபதியாக இருக்கிறார். தம்முடைய இரண்டாம் வருகையின்போது இயேசு கிறிஸ்து இந்த உலகத்திலுள்ள ராஜ்யங்களை அழிப்பார். கிறிஸ்து தாமே “”கல்” எனவும் அழைக்கப்படுகிறார். “”கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல்” என்னும் வாக்கியம் மனுஷருடைய துணையில்லாமல் முழுவதுமாகவே தேவனுடைய கிரியையாக இது நடைபெறும் என்பதைக் குறிக்கிறது.

பாபிலோன் தேசம் இஸ்ரவேலை ஒடுக்குவதற்கு முன்பாகவே, எகிப்தியரும், அசீரியரும் அவர்களை ஒடுக்கினார்கள். ஆகையினால் பாபிலோனியரை இஸ்ரவேலை ஒடுக்கும் மூன்றாவது தேசமாகக் குறிப்பிடலாம். அந்திக்கிறிஸ்துவின் ராஜ்யம் இந்த வரிசையில் எட்டாவது ராஜ்யமாக இருக்கும். (வெளி 17:8-11)

நேபுகாத் நேச்சார், தான் கண்ட சிலையில் “”பாதங்களும் கால்விரல்களும் பாதி குயவனின் களிமண்ணும் பாதி இரும்புமாயிருக்க கண்டார். (தானி 2:41). இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது பிந்திய ரோமப் பேரரசு இருக்கும் விதத்தைப் பாதங்களும், கால்விரல்களும் காண்பிக்கின்றன. பாதங்கள் இரண்டு கால்களுக்கு ஒப்பானவை. அவை ரோமப்பேரரசின் கிழக்குப் பிரிவையும், மேற்குப் பிரிவையும் குறிக்கும். இது தானியேலின் நான்காவது ராஜ்யமும், வெளி 17:9-11 ஆகிய வசனங்களின் ஆறாவது ராஜ்யமுமாகும். கால்விரல்கள் என்பது ரோமப்பேரரசு பத்து ராஜ்யங்களாகப் பிரிவதைக் குறிக்கிறது. பத்து வெவ்வேறு ராஜாக்கள் வெவ்வேறு தலைநகரங்களிலிருந்து இந்தப் பத்து ராஜ்யங்களையும் ஆளுகை செய்வார்கள். இந்தத் தேசம் ஒரு பங்கு உரமும், ஒரு பங்கு நெரிசலுமாக இருக்கும். (தானி 2:41-42). இதன் ஒரு பங்கு களிமண்ணாக இருப்பதினால் ராஜ்யம் பலவீனமாக இருக்கும். ஆகையினால் அது எளிதில் உடைந்துபோகும். ஒரு பங்கு இரும்பாக இருப்பதினால் அது உரமாக இருக்கிறது. அது மற்ற பங்கை நொறுக்கி, தகர்த்துப் போடுகிறது. (தானி 2:40).

களிமண் பெலமானதல்ல. இது மக்களாட்சியைக் குறிப்பிடுகிறது. மன்னராட்சியைவிட மக்களாட்சி அதிகாரத்தில் பலவீனமானது. மன்னராட்சி இரும்பைக் குறிப்பிடுகிறது. (வெளி 2:27; வெளி 12:5; வெளி 19:15).

சிலையில் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருக்கிறது (தானி 2:41). பிந்திய ரோமப்பேரரசின் பத்து ராஜ்யங்களில் சில இரும்பைப்போல உறுதியாக இருக்கும். சில களிமண்ணைப்போல பலவீனமாக இருக்கும். களிமண்ணும், இரும்பும் ஒன்றுசேராது. அதுபோலவே இவர்களுடைய உறுதியும், பலவீனமும் நிலைத்திருக்காது. (தானி 2:42-43).

“”அவர்கள் மற்ற மனுஷரோடே சம்பந்தங் கலப்பார்கள்” (தானி 2:41) என்று தானியேல் ராஜாவுக்கு விளக்கம் சொல்லுகிறார். பத்து கால்விரல்கள் பத்து ராஜாக்களைக் குறிக்கும். இவர்கள் தங்களுடைய தேசத்து மனுஷரோடே கலந்திருப்பார்கள். தங்களுக்கு விருப்பமானபடி ஆளுகை செய்வார்கள். இதில் களிமண்ணைப் போல் இருக்கிறவர்கள் உடைந்துபோவார்கள். இரும்பைப் போலிருக்கிறவர்கள் நீடித்திருப்பார்கள். இவர்களிலிருந்து பேரரசர்கள் தோன்றுவார்கள். இவர்கள் தனிமனிதர்களைப் போல சர்வாதிகளாக இருப்பார்கள். இவர்களில் மூன்றுபேர் தோல்வியுற்றபின்பு, தங்களுடைய அதிகாரத்தை மிருகத்திற்குக் கொடுப்பார்கள். (தானி 7:23-24; வெளி 17:12-17).

சிலையின் பத்து கால்விரல்கள் பத்து ராஜாக்களைக் குறிப்பிடுகிறது. (தானி 2:41-45) இவர்கள் மிருகத்தின் பத்து கொம்புகளாகவும் குறிப்பிடப்படுகிறார்கள். (தானி 7:7-8,23-24; வெளி 13; வெளி 17:12-17) பரலோகத்தின் தேவன் பூமியில் தம்முடைய ராஜ்யத்தை ஸ்தாபிப்பார். அது ஒருபோதும் அழிக்கப் படுவதில்லை. கர்த்தருடைய ராஜ்யம் பத்து ராஜ்யங்களைப் பற்றி நித்திய காலமாக நிலைத்து நிற்கும். (தானி 2:44; சக 14; வெளி 19:11-21; வெளி 20:1-10).

தானி 2:41, தானி 2:44 ஆகிய வசனங்களில் ஒரு ராஜ்யம் ஏழாவதாகவும், ஒரு ராஜ்யம் ஒன்பதாவதாகவும் கூறப்பட்டிருக்கிறது. தானி 2 ஆம் அதிகாரத்தில் எட்டாம் ராஜ்யத்தைப் பற்றிக் கூறப்படவில்லை. தானி 7:23-24; வெளி 17:9-11 ஆகிய வசனங்களில் எட்டாவது ராஜ்யத்தைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. பத்துக் கால்விரல்களுக்கு இடையிலே வேறொரு சின்னக் கால்விரல் எழும்பியதை தானியேல் தரிசிக்கவில்லை. இந்த சின்னக் கால்விரலுக்கு முன்பாக மூன்று கால்விரல்கள் பிடுங்கப்பட்டதைத் தானியேல் தரிசிக்கவில்லை.

ஆயினும் தானி 7:7-8,19-24 ஆகிய வசனங்களில் தானியேல் சின்னக் கொம்பைப் பற்றிக்குறிப்பிடுகிறார். தானியேல் மிருகத்தின் பத்துக் கொம்புகளைக் கவனித்தபோது, அவைகளுக்கு இடையில் வேறொரு சின்னக்கொம்பு எழும்பிற்று. அதற்கு முன்பாக முந்தின கொம்புகளில் மூன்று பிடுங்கப்பட்டது. சின்னக்கொம்பு மூன்று கொம்புகளை ஜெயித்த பின்பு, மற்றக் கொம்புகள் எந்த யுத்தமும் பண்ணாமல் சின்னக்கொம்புக்குப் பணிந்தன. வெளி 17:9-17 ஆகிய வசனங்களில் இதே கருத்துக் கூறப்பட்டிருக்கிறது.

பத்து ராஜாக்கள் தங்களுடைய அதிகாரத்தை மிருகத்திற்குக் கொடுப்பார்கள். மிருகத்தின் ராஜ்யம் எட்டாவது ராஜ்யமாக இருக்கும். பத்து ராஜ்யங்களில் ஏழாவது ராஜ்யம் தனியாக இருக்கும். எட்டாவது ராஜ்யம் பத்து ராஜ்யங்களிலிருந்து முளைக்கும். ஆனால் இவை தனித்தனியாக இராது. மூன்றரை வருஷங்களுக்கு அதாவது 42 மாதங்களுக்கு அவை மிருகத்தின்கீழிருக்கும். (வெளி 13:1-8; வெளி 17:9-17).

ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையி-ருந்து பெயர்ந்து உருண்டு வந்தது (தானி 2:44) இந்தக் கல் பரலோகத்தின் தேவனுடைய ராஜ்யத்திற்கு அடையாளம். தம்முடைய இரண்டாம் வருகையின்போது இயேசு கிறிஸ்து இந்த ராஜ்யத்திற்கு ராஜாவாக இருப்பார்.

நேபுகாத்நேச்சார் தானியேலைப் பெரியவனாக்கினான் தானி 2:46-49

தானி 2:46. அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முகங்குப்புற விழுந்து, தானியேலை வணங்கி, அவனுக்குக் காணிக்கை செலுத்தவும் தூபங்காட்டவும் கட்டளையிட்டான்.

தானி 2:47. ராஜா தானியேலை நோக்கி: நீ இந்த மறைபொருளை வெளிப்படுத்தினபடியினால், மெய்யாய் உங்கள் தேவனே தேவர்களுக்கு தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறார் என்றான்.

தானி 2:48. பின்பு ராஜா தானியேலைப் பெரியவனாக்கி, அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவனை பாபிலோன் மாகாணம் முழுதுக்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின் மேலும் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான்.

தானி 2:49. தானியேல் ராஜாவை வேண்டிக்கொண்டதின்பேரில் அவன் சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் பாபிலோன் மாகாணத்துக் காரியங்களை விசாரிக்கும்படி வைத்தான்; தானியேலோவென்றால் ராஜாவின் கொலுமண்டபத்தில் இருந்தான்.

ராஜாவின் சொப்பனத்தையும் அதன் அர்த்தத்தையும் தானியேல் சொல்லுகிறார். ராஜா அதைக் கேட்டு கோபப்படவில்லை. தானியேலோடு தர்க்கம்பண்ணவில்லை. தானியேல் சொன்ன வார்த்தைகளை ராஜா தேவனுடைய வார்த்தைகளாக அங்கீகரிக்கிறான்.

இப்போது ராஜாவின் கண்களுக்கு தானியேல் ஒரு தேவனைப்போல தெரிகிறார். உடனே அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முகங்குப்புற விழுந்து, தானியேலை வணங்கி, அவருக்குக் காணிக்கை செலுத்தவும் தூபங்காட்டவும் கட்டளையிடுகிறான் (தானி 2:46).

தானியேலினிடத்தில் தெய்வீக குணமிருப்பதாக ராஜா நினைக்கிறான். ராஜா தானியேலுக்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, அவருக்கு தூபங்காட்டுகிறான். கர்த்தர் தம்முடைய தெய்வீக வெளிப்பாடுகளை மகிமைப்படுத்துகிறார். தாம் கொடுக்கும் தரிசனங்களை கனம்பண்ணுகிறார்.

ராஜாவுக்கு தானியேல் தேவனுடைய வார்த்தைகளைச் சொன்னார். இப்பொழுது ராஜாவே தேவனைக் கனம்பண்ணுகிறார். ராஜா தானியேலை நோக்கி: “”நீ இந்த மறைபொருளை வெளிப்படுத்தினபடியினால், மெய்யாய் உங்கள் தேவனே தேவர்களுக்கு தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறார்” (தானி 2:47) என்று சொல்லுகிறான்.

ராஜா தனக்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, தனக்கு தூபங்காட்டுவதை தானியேல் அங்கீகரிக்கவில்லை. தானியேல் தேவனுடைய மகிமையை அபகரித்துக்கொள்ளவில்லை. ராஜா கர்த்தரை மாத்திரமே ஆராதனை செய்யவேண்டும். ராஜாவுக்கு தானியேல் கர்த்தரைப்பற்றிச் சொல்லியிருக்கவேண்டும். இப்போது நேபுகாத்நேச்சாரும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை, தன்னுடைய வார்த்தைகளினால் மகிமைப்படுத்துகிறார்.

தானியேலை ராஜா பெரியவனாக்குகிறான். ராஜா தானியேலுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவரை பாபிலோன் மாகாணம் முழுதுக்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின் மேலும் பிரதான அதிகாரியாகவும் நியமிக்கிறான் (தானி 2:48).

தானியேலுக்கு உயர்ந்த பதவி கொடுக்கப்படுகிறது. தான் மாத்திரம் உயரவேண்டுமென்று தானியேல் நினைக்கவில்லை. தானியேல் கர்த்தரிடத்தில் ஜெபித்தபோதும், கர்த்தரைத் துதித்தபோதும், அவருடைய மூன்று சிநேகிதரும் அவரோடு கூடவே இருந்தார்கள்.

ராஜா தன்னை உயர்த்தவேண்டுமென்று தீர்மானம்பண்ணியபோது, தானியேல் தன்னுடைய மூன்று சிநேகிதரைப்பற்றியும், ராஜாவினிடத்தில் நல்ல வார்த்தைகளைச் சொல்லுகிறார். தன்னுடைய சிநேகிதர்களையும் ஆசீர்வதிக்குமாறு தானியேல் ராஜாவை வேண்டிக்கொள்கிறார்.

தானியேல் ராஜாவை வேண்டிக்கொண்டதின்பேரில் அவன் சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் பாபிலோன் மாகாணத்துக் காரியங்களை விசாரிக்கும்படி வைக்கிறான்; தானியேலோவென்றால் ராஜாவின் கொலுமண்டபத்தில் இருக்கிறார் (தானி 2:49).

கர்த்தருக்கு பயந்து, பயபக்தியாய் ஜீவிக்கிற யூதர்கள் இப்போது பாபிலோன் தேசத்து அரமனையில் பணிபுரிகிறார்கள். அவர்கள் உயர்ந்த பதவிகளிலும், உயர்ந்த அந்தஸ்துக்களிலும் இருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு, சிறையிருப்பிலிருக்கிற மற்ற யூதர்களுக்கு உதவி செய்ய முடிகிறது. கர்த்தரே தம்முடைய ஜனத்தை ஆளுகை செய்கிறார். அவர்களை பாதுகாத்து பராமரிக்கிறார். அவர்களுடைய நன்மைகளை விசாரிக்கிறார்.

சொப்பனத்தினால் உண்டான விளைவு

1. ராஜாவின்மீது முக்கியமான விளைவுகளை உண்டாக்கிற்று. (தானி 2:46).

2. தேவனுடைய நாமத்திற்கு மகிமை உண்டாயிற்று. (தானி 2:47).

3. தானியேல் முக்கியமான மனிதனானார். (தானி 2:48).

4. தானியேலுக்கு பல வெகுமதிகள் கிடைத்தது. (தானி 2:48).

5. பாபிலோன் மாகாணம் முழுதுக்கும் தானியேல் அதிபதியாக நியமிக்கப்பட்டார். (தானி 2:48).

6. சகல ஞானிகளின் மேலும் பிரதான அதிகாரியாக நியமிக்கப்பட்டார். (தானி 2:48).

7. தானியேலின் மூன்று நண்பர்களும் உயர்த்தப்பட்டார்கள். (தானி 2:49).

ராஜா தானியேலை வணங்கினான் (தானி 2:46) தானியேல் இந்த வணக்கத்தை ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. (வெளி 19:10; வெளி 22:8-9).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *