இந்திய நாட்டின் ஆதிக் கிறித்தவ வரலாறு

இந்திய நாட்டின் ஆதிக் கிறித்தவ வரலாறு

பேராசிரியர் முனைவர் யா.தா. பாசுகரதாசு

இந்தியாவில் ஆதிக் கிறித்தவம்

இயேசு பெருமானின் நற்செய்தி இந்திய மண்ணில் கி.பி. 52-ஆம் ஆண்டிலேயே விதைக்கப்பட்டு விட்டது. கிறித்தவராயினும் சரி, கிறித்தவரல்லாதவராயினும் சரி, இந்தியக் கிறித்தவத்தின் வரலாற்றைச் சரியாகப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. ஏனெனில் ஆதிக் கிறிஸ்தவத்தின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கான சான்றாதாரங்கள் கிடைப்பதில் பல சிக்கல்களும் சர்ச்சைகளும் தொடக்காலங்களில் இருந்து வந்தன. தொடர்ந்த ஆய்வுகளின் பயனாக இந்த நிலை தற்போது மாறியுள்ளது.

அகஸ்டஸ் சீசரும் தமிழகமும்

கிறித்து பெருமான் பிறந்த காலத்தில் உரோமப் பேரரசை ஆண்டு வந்த அகஸ்டஸ் சீசருக்கு இன்றையக் கேரளப்பகுதியில் கோயில் கட்டப்பட்டிருந்தது. அகஸ்டஸ் சீசருடன் நட்புக் கொள்ளும் முறையில் அவருக்குப் பரிசுப் பொருட்களையும், தூதுக் குழுக்களையும் பாண்டிய மன்னர்கள் அனுப்பியதை வரலாற்றில் அறிகிறோம். தமிழகத்தில் அகழ்வாய்வின் மூலமாகக் கண்டெடுக்கப்பட்ட உரோம நாட்டு நாணயங்கள் பெரும்பாலும் அகஸ்டஸ் சீசரின் காலத்தைச் சார்ந்தவை என ஆய்வாளர் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அகஸ்டஸ் சீசரின் காலத்தில் பிறந்த இயேசு பெருமானின் தொண்டர்களுள் ஒருவரான தூய தோமா கி.பி.49இல் வடஇந்தியாவில் தட்ச சீலத்திற்கு வந்து கொண்டபோரசு என்ற மன்னனைச் சந்தித்து பாலஸ்தீனத்திற்கு மீண்டார். மறுபடியும். கி.பி. 52-ஆம் ஆண்டில் மலபார் பகுதியில் கிராங்கனூர் (கொடுங்களூர்) என்ற இடத்தில் காலூன்றிக் கிறித்துவின் நற்செய்திகளைப் பரப்பத் தொடங்கினார் என்பதை ஆராச்சியாளர் பலர் இன்று கண்டறிந்து வெளிப்படுத்தினர். ஆசியக் கண்டத்தில் ஒரு பகுதியாகிய பாலத்தீனத்தில் பிறப்பெடுத்த கிறித்தவம் உரோமப் பேரரசின் எல்லைகட்குள் நுழைவதற்கு முன்னரே இந்திய மண்ணிற்குள் அது காலடி எடுத்து வைத்துவிட்டது என்பதை வரலாறு தெளிவாகக் காட்டுகிறது.

இந்த வரலாற்றுண்மையை ஜவகர்லால் நேரு. இராசேந்திரபிரசாத், இராதா கிருட்டிணன் முதலான அறிஞர்கள் தங்கள் நூல்களில் குறித்திருக்கின்றனர். இவர்களின் கருத்துக்கு ஆதரவாகத் தற்போது ஆயிரக்கணக்கான சான்றாதாரங்கள் கிடைத்துள்ளன.

யவனரும் தமிழகமும்

இந்தியத் திருநாட்டின் தென்பகுதியாகிய தமிழகத்திற்கும் பாலத்தீனத்திற்கு மிடையே ஏராளமான வணிக உறவுகள் இருந்தததை இலக்கியங்கள் பேரளவில் பேசுகின்றன. தமிழர்களுக்கும் யவனர்களுக்கும் இடையே வணிகப் பரிமாற்றங்கள் நடைபெற்று வந்தன. யவனர் என்ற சொல், கிரேக்க நாட்டின் அருகிலுள்ள அயோனியா என்ற தீவையும் அங்கிருந்த மக்களையும் முதன் முதலில் குறித்தது. காலக்போக்கில் அது கிரேக்க, யூத,உரோம,அரபிய, சிரிய வணிகர்களையும் குறிப்பிடும் பொதுப் பெயராகப் பொருள் விரிவு பெற்று வழங்கலாயிற்று. எனினும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் யவனர் என்பது பெரும்பாலும் உரோமர்களையும் யூதர்களையும் குறிப்பிடுவதாக அமைந்துள்ளது. இந்த வழியில் இந்தியாவிற்கு வருகைபுரிந்தவராக இயேசு பெருமானின் திருத்தொண்டராகத் தூய தோமா திகழ்கிறார்.

இந்தியாவிற்கு வந்த தோமா பற்றிய செய்திகள் கொஞ்சக் காலத்திற்கு முன்பு வரை மரபு வழிக் கட்டுக் கதையான ஒன்று என்றுதான் கருதப்பட்டு வந்தது. ஆனால் அவர் வந்தது ஒரு வரலாற்று நிகழ்ச்சி என்பதை ஆவணங்கள் பல இன்று மெய்ப்பித்துக் காட்டி நிற்கின்றன.

இந்தியா வந்த தோமாவும் பர்த்லோமேயும்

திருவிவிலியத்தில் தொகுக்கப்படாமல் விடப்பட்ட புறநடை நூல்களில் இயேசு பெருமானின் திருத்தொண்டர்களின் வாழ்வு பற்றிய வரலாற்றுச் செய்திகள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. இந்த நூல்களின்படி, உரோம அரசின் கொடுமைக்கும் அச்சுறுத்தலுக்கும் அஞ்சி நாலாபுறமும் சிதறிய இயேசுவின் தொண்டர்கள் கிறித்துவின் உயிர்தெழுதலுக்குப் பின்னர் புதிய ஆற்றலும் புத்துணர்ச்சியும் பெற்று நற்செய்தியைப் பரப்புவதில் பேரார்வம் கொண்டு, எவரெவர் எந்தெந்த நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்தனர். அதன்படி தூய தோமா, பர்தலோமேயு என்ற இரு திருத்தொண்டர்களும் இந்தியாவிற்குச் செல்ல வேண்டும் எனத் திருவுளச் சீட்டு மூலம் தீர்மானிக்கப்பட்டது. தோமா முதலில் தயங்கிய போதிலும் இந்தியத் திருநாட்டிற்குச் செல்ல அவர் ஒத்துக் கொண்டார். தூய தோமாவின் வரலாறு பற்றிப் பல்வேறு மொழிகளில் பல நூல்கள் அவர் வாழ்ந்த காலத்தையொட்டி எழுதப்பட்டுள்ளன. அவற்றுள் “தோமாவின் நற்செய்தி” தூய தோமாவின் பணிகள் என்ப குறிப்பிடத்தக்கன.

கிறித்து பெருமானின் தொண்டர்களுள் ஒருவரான தூய பர்தலோமேயுவும் இந்தியாவிற்கு வருகை தந்தது பற்றி வெளிநாட்டுக் குறிப்புகள் பல கிடைத்துள்ளன. இவர் கிறத்துவின் நேரடி மாணாக்கரான பர்தலோமேயு அல்லாத, வேறொரு தொண்டராக இருக்கலாம் என்றும் கருதுகின்றனர். இது பற்றிய உள்நாட்டுக் குறிப்புகள் குறைவாகவே உள்ளன. கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தூய ஜெரோம் இசிபியஸ் முதலியோர் இது குறித்து விளக்கமாக எழுதியுள்ளனர். பாண்டேனியசு என்பார் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்து கிறித்துவின் நற்செய்தியைப் பரப்பியது பற்றி எழுதும்போது இந்திய நாட்டில் தூய பர்தலேமேயு ஆற்றிய இறைபணி பற்றியும் எழுதியுள்ளார்.

இருவேறு கருத்துகள்

இந்தியாவில் கிறித்தவம் எப்போது காலூன்றி வளரத் தொடங்கியது என்பது பற்றி இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. இயேசு பெருமானின் நேரடித் தொண்டரான தூய தோமாவும் தூய பர்தலோமேயுவும் கிறத்தவத்தை இந்தியாவிற்குக் கொணர்ந்தனர் என்பது ஒரு பகுதியினரின் கருத்து ஆகும். கிழக்குச் சிரிய நாட்டிலிருந்தும் பாரசீக நாட்டிலிருந்தும் வந்த அருட் தொண்டர்களும் வணிகர்களும் கிறித்தவத்தை இந்தியாவிற்குக் கொணர்ந்தனர் என்பது மற்றொரு பகுதியினரின் கருத்து ஆகும்.

தூயதோமா மலபார் பகுதிக்கு வந்து கிறித்தவத்தைப் பரப்பினார் என்றும் மயிலாப்பூரில் வாழ்ந்து பெரிய மலை எனப்படும் தூய தோமையர் குன்றில் இரத்தச் சாட்சியாகக் கொலையுண்டார் என்றும் கூறப்பட்டு வந்த கருத்திற்கு ஏராளமான சான்றாதாரங்கள் கிடைத்துள்ளன.

சீரிய மொழியில் எடிசா என்ற பகுதியில் கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “தோமாவின் பணிகள் (செயற்பாடுகள்” என்ற நூல் தோமா இந்தியாவிற்கு வந்தது பற்றி விரிவாகப் பேசும் முதல் நூலாகும். இது தவிர ஓரிகென் இசிபாஸ் அம்புரோஸ் ஜெரோம் முதலிய பல்வேறு அருட்தொண்டர்களின் எழுத்துகளில் தோமாவின் இந்திய வருகை பற்றிய ஏராளமான கருத்துகள் கிடைத்துள்ளன. மேலும் “அப்போஸ்தலரின் போதனைகள்” என்ற சீரிய மொழியில் எழுதப்பட்ட நூலும் தோமாவின் இந்தியப் பணிக்குப் போதுமான சான்றாதாரங்களைத் தருகிறது. தூய தோமாவை இந்திய நாடு வரவேற்றதாகவும் அவர் இந்நாட்டில் திருச்சபைகள் பலவற்றைக்

கட்டியெழுப்பியதாகவும் நற்செய்தியைப் போதிக்கும் அங்கீகாரத்தைப் பலருக்குக் கொடுத்ததாகவும் இந்நூல் குறிப்பிடுகிறது.

வட இந்தியப் பகுதியில் தூய பர்தலோமேயு ஆற்றிய நற்செய்தி பற்றிய குறிப்புகள் பல கிடைத்துள்ளன. கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இசிபியஸ் என்பவர் இந்திய நாட்டுக் கிறித்தவர் மத்தியில் தூய மத்தேயு எழுதிய நற்செய்தி நூல் வழக்கத்திலிருந்ததாகவும் இந்தியர் மத்தியில் நற்செய்திப் பணியாற்றிய தூய பர்தலோமேயு எபிரேய மொழியில் எழுதப்பட்ட மத்தேயுவின் நற்செய்தி பற்றிய நூலை இந்தியாவில் விட்டுச் சென்றதாகவும் குறிப்பிடுகின்றார். செல்வாக்கு மிக்க யூதக் குடியிருப்பு சிறப்புற்றிருந்த மகாராட்டிரப் பகுதியில் பர்தலோமேயு நற்பணி ஆற்றியதாக ஆய்வாளர் பலர் நிறுவியுள்ளனர்.

தூய தோமா, தூய பர்தலோமேயு ஆகியோர் பற்றிய செய்திகள் இரண்டறக் கலந்து ஐக்கியமானதின் விளைவாகத் தூய பர்தலோமேயு பற்றிய குறிப்புகள் காலப்போக்கில் மறைந்து விட்டன. எனினும் போர்த்துக்கீசியர் வந்ததுவரை பர்தலோமேயுக் கிறித்தவர் தொடர்ந்து வாழ்ந்ததாகவும், காலப்போக்கில் பம்பாய்ப் பகுதியின் ஏனையக் கிறித்தவரோடு அவர்கள் இணைந்து விட்டதாகவும் ஆய்வாளர் கருதுகின்றனர்,

தூய தோமாவும் வட இந்தியாவும்

வடநாட்டு அரசன் கொண்டபோரசு என்பவன், தமக்கு அரண்மணை கட்டுதவற்கு வருவித்த வெளிநாட்டுத் தச்சர்களுள் தோமாவும் ஒருவர் என்ற குறிப்புகள் கிடைத்துள்ளன. இயேசு பெருமானின் தந்தை யோசேப்பு ஒரு தச்சர், அவருக்கு இயேசு பெருமான் தச்சுத் தொழிலில் உதவிய பகுதிகள் புதிய ஏற்பாட்டில் உள்ளன. கொண்டபோரசு என்ற அரசனைக் கற்பனைப் பாத்திரமாக கருதி வந்த நிலை இன்று மாறியுள்ளது. கொண்டபோரசின் நாணயங்கள் மிகப்பெரிய அளவில் இன்று கிடைத்துள்ளன. இதனால் அவர் ஒரு வரலாற்று மனிதர் என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இவர் வாழ்ந்த காலம் கி.பி. முதல் நூற்றாண்டு ஆகும். எனவே தூய தோமா இம் மன்னனிடத்தில் தச்சனாக வந்தார் என்ற மரபு வழிச் செய்தியும் உண்மையாகிறது எனலாம். தோமையர் தட்சசீலத்திற்குக் கி.பி.49இல் வந்தார் என்று வரலாறு காட்டுகிறது.

கிறித்து பெருமானின் திருத்தொண்டர் பர்தலோமேயு கி.பி. 55-இல் இந்தியாவிற்கு வருகை புரிந்து நற்செய்தியை அறிவித்து கி.பி. 62-இல் இரத்தசாட்சியாகக் கொலையுண்டார் எனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இவரது நற்செய்திப் பணியுடன் தொடர்புடையது மும்பையை அடுத்த கல்யாண் என்னும் பகுதியாகும். இது குறித்து இசிபியசு ஜெரோம் ஆகியோர் எழுதிவைத்துள்ளனர். மெய்ந்நூலறிஞர் பாண்டேனியசு கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த போது, ஏற்கனவே கிறித்தவர்கள் பலர் அங்கு வாழ்ந்து வந்ததாகவும் பர்தலோமேயு கொணர்ந்த எபிரேய மொழியில் தூய மத்தேயுவின் நற்செய்தி நூலை அவருக்குக் காட்டியதாகவும் குறிப்புகள் இன்று கிடைத்துள்ளன. துளு நாட்டில் தென் கனராப் பகுதியிலுள்ள கல்லியன்பூர் என்னுமிடத்தில் பர்தலோமேயு நற்செய்திப் பணியாற்றியுள்ளார். பொதுமக்களால் அவர் பெத்தால் என அழைக்கப்பட்டார். கொங்கணப் பகுதியிலிருந்து மும்பை வரையிலான கடலோரப் பகுதிகளில் பர்தலோமேயுவின் பெயரைத் தாங்கிய ஊர்கள் பல உள்ளன. கல்லியன் பூருக்கு அருகிலுள்ள பார்கூர் என்பதும் ஒன்று என வரலாற்று ஆய்வாளர் மாஸ்கரேனசு குறிப்பிடுகிறார்.

இவரது திருப்பணி மெசபொதாமியா, பாரசீகம், எகிப்து, அர்மேனியா, லிகோனியா, பிரிகியா, கருங்கடற்கரை ஓரங்கள் முதலிய பகுதிகள் வரை பரவியிருந்தது. அர்மேனியாவில் அவர் இரத்தச் சாட்சியாகக் கொலையுண்டார். எனவே கொங்கணப் பகுதியில் அவரது திருப்பணி சிறிது காலமே நடந்திருக்க வேண்டும்.

மலபாரும் ஆதிக் கிறித்தவமும்

தூய தோமா கேரளப் பகுதியிலுள்ள கொடுங்களூர் எனப்படும் முசிறியில் வந்திறங்கி நற்செய்திப் பணி ஆற்றியது பற்றி ஏராளமான தரவுகள் வாய்மொழி இலக்கியங்களிலும் பிற ஆவணங்களிலும் வலுவுடன் திகழ்கின்றன. இது கிறித்தவ ஊழியின் முதல் மூன்று நூற்றாண்டுகளில் உலகின் வணிக மையமாகத் திகழ்ந்துள்ளது. எருசலேம் பேராலயத்தின் அழிவையடுத்து யூதர் பலர் இங்குக் குடி பெயர்ந்து யூதக் குடியிருப்பையும் அமைத்துக் கொண்டுள்ளனர். சிரியாவிலிருந்து தாமஸ் கானா காலப்போக்கில் இங்கு வந்தார். அவரோடு சிரியக் கிறித்தவர் பலரும் வந்து குடியேறினர்.

மலபார் பகுதியில் நிலவி வருகின்ற தூய தோமா பற்றிய செய்திகள் பல ஊர்களையும் குடும்பங்களையும் தோமாவோடு தொடர்புபடுத்திக் கூறுகின்றன. கேரளப் பகுதியிலுள்ள கொடுங்களூர், பழையூர், பரூர், கொக்க மங்கலம், நிராணம். சாயல் முதலிய இடங்களில் தூய தோமா ஆலயங்களைக் கட்டியதாக அறிகிறோம். தூய தோமாக் கிறித்தவர்கள் இச்செய்திகளைத் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வருகிறார்கள். தூய தோமா பற்றிய மரபு வழிச் செய்திகள் பிற குறிப்புகள் அனைத்தும் இன்று வரை மறுக்கப்படாமல் இருக்கின்றன. மலபாரிலுள்ள கிறித்தவத் திருச்சபைகள் அனைத்தும் தூய தோமாவின் நற்செய்திப் பணிகளாகக் குறிப்பிடும் இடங்களைத் தொடக்கமாகக் கொண்டுள்ளன என ஆய்வாளர் குறிப்பிடுகின்றனர். மலபாரில் ஆற்றிய பணியைத் தொடர்ந்து, தூய தோமா தமிழகத்தில் மயிலாப்பூரில் ஆற்றிய திருப்பணியும் வரலாற்றில் சிறப்புடையதாகத் திகழ்கிறது.

சோழமண்டலமும் ஆதிக் கிறித்தவமும்

சென்னையிலுள்ள மயிலாப்பூர், சின்னமலை, தூய தோமையர் குன்று ஆகிய இடங்கள் தூய தோமாவின் திருப்பணிகளோடு தொடர்புடையனவாகக் குறிப்பிடப்படுகின்றன. மயிலாப்பூரில் தூய தோமாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அக்கல்லறையின் மீதே தோமையரின் பேராலயம் எழுப்பப்பட்டுள்ளது. கி.பி. 1295இல் இந்தியாவுக்கு வருகை புரிந்த வெனீசிய நாட்டுப் பயணி மார்க்கோ போலோ என்பவர், இப்பகுதிகளில் கிறித்தவம் பரவியிருந்தமை பற்றிப் பல செய்திகளைக் குறிப்பிட்டுள்ளனர். இவரது குறிப்பின்படி கிறித்தவர்களும் சாரசேனர்களும் தூய தோமாவின் கல்லறைக்குத் திருப்பயணம் செய்வது பெருவழக்காயிருந்தது. தோமாவைக் கொன்ற இடத்திலுள்ள மண்ணை எடுத்துவந்து நோயாளிகளுக்குப் பூசியதால் அவர்களின் நோய்கள் குணமாயின என்றும் அம்மண் சிவந்த நிறமாயிருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தினை 14ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மரிஞொல்லி என்பவரும் குறிப்பிட்டுள்ளார்.

சைதாப்பேட்டைக்கு அருகிலுள்ள சின்னமையில் வழக்கமாகத் தூய தோமா போதனை செய்யும் போது எராளமான மக்கள் அவரது மொழிகளைக் கேட்பதற்கு திரண்டு வந்தனர் என்றும் அம்மக்களின் தாகத்தைத் தீர்ப்பதற்காகத் தூய தோமா கடவுளிடம் வேண்டுதல் செய்ததால் அக்குகையில் நீரூற்றுத் தோன்றியதெனவும். பகைவரிடமிருந்து அவரைக் காப்பதற்கு அக்குகை துணைபுரிந்தது எனவும் கூறுவர். தற்போதுள்ள கிண்டியின் மேல்பகுதியிலுள்ள தூய தோமையர் குன்றில் அவர் தொழுது கொண்டிருந்த போது பகைவனது ஈட்டியால் கொலையுண்டார் என்றும் செய்திகள் கூறுகின்றன. அவர் கொலையுண்ட மலையுச்சியில் கி.பி. 1523இல் போர்த்துக்கீசியரால் கட்டப்பட்ட சிற்றாலயம் ஒன்றும் அங்கு உள்ளது.

தூய தோமாவின கல்லறை மயிலாப்பூரில் உள்ளது. அதன் மீது கட்டப்பட்ட தோமையரின் பேராலயம் இன்றும் கம்பீரமாகத் திகழ்கிறது.

தோமாவிற்கு பின் நிகழ்ந்தவை

தூய தோமாவுக்கு பின் இந்தியாவில் நன்கு பரவியிருந்த ஆதிக் கிறித்தவம் காலப்போக்கில் வீழ்ச்சியடையத் தொடங்கியது. இந்திய நாட்டில் ஆற்றலுடன் பரவியிருந்த ஆதிக் கிறித்தவத்தில் பாரசீக நாட்டிலிருந்து வந்த கிறித்தவர்களின் தாக்குரவு அதிகமாக இருந்ததால் பாரசீகக் திருச்சபையோடு தொடர்புடையதாகவே ஆதி இந்தியக் கிறித்தவம் காணப்பட்டது. தூய தோமா, இந்திய நாட்டில் இயேசு பெருமானின் நற்செய்தியை அறிவித்தவர் என்ற கருத்தோடு, சிரிய நாட்டு வணிகர்களும் பிற அருட் தொண்டர்களும் கிறித்தவக் கருத்துகளை இந்நாட்டிற்குக் கொணர்ந்ததாகவும் குறிப்பிடுவர்.

கி.பி.7-ஆம் நூற்றாண்டில் கிழக்குச் சிரியப் பகுதியில் எழுதப்பட்ட “துறவிகளின் வரலாறு” என்ற நூல் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் டேவிட் என்ற பேராயர் இந்தியர் பலரைக் கிறித்தவத்திற்கு மாற்றியதாகக் குறிப்பிடுகிறது. நிசியன் குழுவில் பங்கேற்ற 325 பேராயர்களுள் பாரசீக நாட்டுப் பேராயரான ஜான் என்பவர் பாரசீக நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பொதுவான பேராயராகக் கருதப்பட்டார்.

கிழக்குச் சிரிய நாட்டிலிருந்து ஏராளமான கிறித்தவர்கள் பல காலக் கட்டங்களில் பல்வேறு குழுக்களாக மலபார்ப் பகுதிக்கு வந்து குடியேறிய செய்திகள் கிடைத்துள்ளன. இவர்களுள் கி.பி. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த தாமஸ் கானா என்பவரோடு தொடர்புடைய ஒரு குழு பற்றிய செய்தியை அறிகிறோம். போர்த்துக்கீசியர்கள் மலபார்ப் பகுதிக்கு வந்தபோது, அவர்கள் கிழக்கு நாட்டுச் சபைகளை மிகத் தாழ்வாக மதிப்பிட்டுப் பழித்துரைத்தனர். அவர்களை நெஸ்டோரியன் பிரிவினராகக் கருதி வெறுக்கவும் செய்தனர்.

தமிழகத்தில் ஆதிக் கிறித்தவம்

தூய தோமா கி.பி. 52இல் இந்தியாவில் காலடி வைத்ததையடுத்து, ஏறத்தாழ அதே காலக் கட்டத்தில் தமிழகத்திலும் கிறித்தவம் பரவத் தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கோடு என்னுமிடத்தில் தூய தோமா கட்டிய கோயில் ஒன்று இன்றும் உள்ளது. அரைக்கோயில் என்று அது மரபாக அழைக்கப்படுகிறது. தற்போது தூய மேரி ஆலயம் என்னும் பெயரில் கேரளப் பகுதியிலுள்ள சிரியன் கிறித்தவ அமைப்பால் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலக அளவில் கிடைத்துள்ள மிகப் பழைய கிறித்தவக் கோயிலின் கட்டமைதி இதுவே என்று வரலாற்றாசிரியர் குறிப்பிடுகின்றனர். தூய தோமாவின் நற்செய்திப் பணியைப் பறைசாற்றும் வகையில் திருவிதாங்கோட்டுக் கோயிலும், சென்னையிலுள்ள தோமையர் பேராலயமும். சின்னமலையும் தூய தோமையர் குன்றும் திகழ்கின்றன.

கிறித்தவத்தின் இறையியற் கோட்பாடுகளையும் அறவியற் கோட்பாடுகளையும் திருக்குறள், நாலடியார் போன்ற அறநெறி இலக்கியங்களில் ஒளிர்வதைக் காணமுடிகிறது. தமிழ்ப் பக்தி இயக்கத்திற்கும் தமிழர் சமயங்களான சைவ, வைணவங்களுக்கும் ஆதிக்கிறித்தவம் பெரும் பங்களிப்பை அளித்து உள்ளதையும் அறிஞர் பலர் எடுத்துக்காட்டியுள்ளனர். இந்திய மெய்ந்நூலியலுக்கும் ஆதிக்கிறித்தவம் அளித்துள்ள தாக்குரவுகள் பேரளவில் உள்ளன எனவும் அறிஞர் காட்டியுள்ளனர். ஆதிக் கிறித்தவ அருட் தொண்டர்கள் ஆசிய நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இந்தியாவிற்குப் பெருமளவில் புலம் பெயர்ந்து வந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் ஏராளமாக உள்ளன. தூய தோமா சுமந்து வந்து விதைத்த இயேசு பெருமானின் அன்புத் தத்துவமும் இறையியற் கோட்பாடுகளும் அறக் கருத்துகளும் இந்திய மண்ணின் சமயங்களிலும் அறவியல் கருத்து முறைகளிலும் மெய்ந்நூலியலிலும் கலந்து எதிரொலித்துக் கொண்டு நிற்கின்றன.

பிற இந்தியச் சமயங்களில் ஆதிக் கிறித்தவத்தின் தாக்கம்

தூய தோமா, பர்தலோமேயு போன்ற இயேசு பெருமானின் மாணாக்கர் அவர்களைத் தொடர்ந்து வந்த பிற இறைத் தொண்டர் போன்றோரின் இடையறாப் பணிகளின் பயனால் சைவம், வைணவம் போன்ற கடவுட் சமயங்கள் அல்லாமல் பௌத்தம் முதலிய கடவுள் மறுப்புச் சமயங்களிலும் ஆதிக் கிறித்தவத்தின் தாக்குரவு ஆழமாகக் காணப்படுகிறது. இந்திய நாட்டின் பல்வேறு சமயங்களின் தோற்றத்திற்கும் ஆதிக் கிறித்தவம் அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளது. மகாயான பௌத்தத்தின் எழுச்சியிலும் போதி சத்துவர்களின் உருவாக்கத்திலும் ஆதிக் கிறித்தவத்தின் தாக்குரவினைக் காணமுடிகிறது. மைத்திரேய புத்தரின் இரண்டாவது வருகை பற்றிய பௌத்தக் கோட்பாடும் சமண சமயத்தின் தீர்த்தங்கரின் மறுமுறை வருகையும் கிறித்து பெருமானின் இரண்டாவது வருகை பற்றிய கோட்பாடுகளின் தொடர்ச்சியாகவே உள்ளன. இந்தியக் கருத்து முறை மரபிலும், சமயங்கள், பண்பாட்டு முறைகள் முதலியவற்றிலும் ஆதிக் கிறித்தவம் ஏற்படுத்திய தாக்குரவுகள் பற்றிய ஆவணங்கள் அழிந்து போயின. அதோடு அழிக்கப்பட்டும் விட்டன. எனவே இவற்றைக் கண்டு பிடிக்கத் துணைபுரியும் ஆய்வுகள் மிகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் மாநாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டன.

முதலாம் பன்னாட்டு மாநாடு

இந்திய நாட்டின் ஆதிக் கிறித்தவ வரலாறு பற்றிய முதலாம் பன்னாட்டு மாநாடு அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரில் 2005 ஆகஸ்டுத் திங்கள் 13 முதல் 16 முடியவுள்ள நாட்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்தியக் கிறித்தவ வரலாற்றில் முதன் முதலாகப் பல்வேறு நாட்டு அறிஞர்கள் ஒரே இடத்தில் கூடி இந்தியத் திருச்சபைகளின் வரலாற்றை இம்மாநாட்டில் விரிவாகக் கலந்துரையாடி ஆய்வு செய்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்கள் நியூயார்க் நகரிலுள்ள கன்கார்டியா இறையியல் கல்லூரி வளாகத்தில் கூடித் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கினர். அக்கட்டுரைகள் விரைவில் நூல்களாக வெளியிடப் படவுள்ளன.

இரண்டாம் பன்னாட்டு மாநாடு

இரண்டாவது பன்னாட்டு மாநாட்டினை இந்தியாவில் நடத்தலாம் என நியூயார்க் மாநாட்டின் நிறைவு விழாவில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டங்களில் இந்திய நாட்டின் ஆதிக் கிறித்தவ வரலாற்றைப் பிற ஆசிய நாடுகளில் ஆதித் கிறித்தவம் வளர்ந்த வரலாற்றோடு ஒப்பிட்டு நோக்குவதன் தேவையை அறிஞர் பலரும் விரிவாக எடுத்தியம்பினர். இதன் விளைவாக இந்திய நாட்டு ஆதிக் கிறித்தவம் வரலாற்றோடு மற்ற ஆசிய நாடுகளில் ஆதிக் கிறித்தவம் வளர்ந்த பாங்கினையும் இணைத்து, இரண்டாவது அகில உலக மாநாட்டில் ஆய்வுகளை மேற்கொள்ளலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. இத்தகைய ஆய்வுகளின் வழி பல புதிய வெளிச்சங்கள் கிடைப்பதோடு இந்திய நாட்டில் ஆதிக் கிறித்தவம் பரவிய வரலாற்றினைப் பிறநாடுகளோடு இணைத்து ஒப்பியல் நோக்கில் காணும் தெளிவான பார்வையும் கிடைக்கும் எனலாம்.

உலகெங்கும் வாழும் இந்தியவியல் அறிஞர்கள். ஆதிக் கிறித்தவ அறிஞர்கள், பிற சமயங்களைச் சார்ந்த அறிஞர்கள் முதலியோரின் ஒருங்கிணைந்த முயற்சியாக இரண்டாம் அகில உலக மாநாடு சென்னையில் 2007 சனவரியில் நடைபெற்றது.

கருத்தரங்கு:

சனவரி செவ்வாய் 25-ம் நாள் 2011ல் தேசியத் தலைமையாளர் பயிற்சி நிறுவனத்தின் தலைமையில் ஏழு நிறுவனங்கள் “கிறித்துவுக்காய் இணைப்பு” (Coalition for Christ) என்ற அமைப்பின் கீழ் “நற்செய்திப் பணி – மாற்றுமுறை மாதிரி கட்டமைவு” (Evangelism A Paradigm Shift) என்ற தலைப்பின் கீழ் அகில உலக கருத்தரங்கம், சென்னையில் உள்ள பாலர் கல்வி நிலைய வளாகத்தில் நடத்துவதை, பிதா கனப்படுத்திய செயல்படாக கருதுகிறோம்.

இந்திய நாட்டின் ஆதிக் கிறித்தவ வரலாற்றை ஆய்வின் அடிப்படையில் வெளிக்கொணர உதவிடும் இக்கருத்தரங்கு சீரும் சிறப்புமாக நடைபெறக் கிறித்தவத் திருச்சபையினரும், நன்கொடையாளர்களும், ஆய்ஞர்களும், ஆர்வலர்களும் இணைந்து செயலாற்றிடக் கிறித்து பெருமானின் அன்பை முன்னிட்டு வேண்டுகிறோம். ஜெபியுங்கள் ! பங்கு பெறுங்கள் !! நிதியினால் தாங்குங்கள் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *