ஏதேன் தோட்டம்

ஏதேன் தோட்டம்

ஏதேன் தோட்டம்

 

Audio Player

ஏதேன் தோட்டம் பெயர் விளக்கம்

ஏதேன் தோட்டம்: “ஏதேன்” என்னும் எபிரெய பெயருக்கு “சந்தோஷம்” “pleasure” என்று பொருள்.

ஆதாமும், ஏவாளும் ஆதியிலே வாசம்பண்ணிய தோட்டம். இந்தத் தோட்டத்தில் தேவனுடைய ஆசீர்வாதமும், வளமும் நிறைந்திருந்தது.

ஏதேன் தோட்டம் எங்கிருந்து?

ஏதேன் தோட்டம் எங்கிருந்தது என்பதை விளக்குவதற்கு வேதபண்டிதர்கள் பலவிதமான கருத்துக்களைக் கூறுகிறார்கள். இது பாபிலோனியாவில் இருந்தது எனவும், அர்மேனியாவில் இருந்தது எனவும் பலவகையான கருத்துக்கள் உள்ளன. ஏதேன் தோட்டத்தில் மெசொப்பொத்தாமியாவின் பகுதியின் அதன் சுற்றுப் பிரதேசமான பாபிலோனும் சேர்ந்திருக்க வேண்டும்.

ஆதி 2:10 ஆவது வசனத்தில் ஏதேன் தோட்டத்தில் பாய்ந்த நான்கு ஆறுகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது.

தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று. ஆதியாகமம் 2:10

இந்த ஆறுகளின் பெயர்களை ஆதாரமாக வைத்துப் பார்க்கும் போது, ஏதேன் தோட்டம் மெசொப்பொத்தாமியா பகுதியில் அமைந்திருக்கலாம் என்பது தெரிய வருகிறது.

இந்த நான்கு ஆறுகளில் இதெக்கேல் எனப்படும் டைகிரீஸ் ஆறு அசூரின் கிழக்குப் பகுதியில் பாய்கிறது. அசூர் என்பது அசீரியாவைக் குறிக்கும் வார்த்தையாகும். ஐபிராத்து நதியும், இந்தப் பகுதியில் பாய்கிறது.

மற்ற இரண்டு ஆறுகளான பைசோனும், கீகோனும் எங்குள்ளது என்று சரியாகத் தெரியவில்லை. கீகோன் ஒருவேளை மெசொப்பொத்தாமியாவில் பாயலாம். ஏனெனில் ஆதி 2:13 ஆவது வசனத்தில் அந்த ஆறு எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும் என்று எழுதப்பட்டிருக்கிறது.

இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும். ஆதியாகமம் 2:13

எத்தியோப்பியாவிற்கு கூஷ் “Cush” என்னும் மறுபெயரும் உள்ளது. இது மெசொப்பொத்தாமியாவின் தென்கிழக்கில் அமைந்துள்ள பகுதியாகும்.

பைசோன், கீகோன் ஆகிய ஆறுகள் இ(சி)ந்து நதியையும், நைல்நதியையும் குறிக்கும் என்று வேதபண்டிதர்களில் சிலர் கூறுகிறார்கள். இவர்களுடைய வியாக்கியானத்தின் பிரகாரம் ஏதேன் தோட்டம் என்பது இந்திய தேசம் முதல் எகிப்து தேசம் வரையிலும் பரவியுள்ள விளைச்சல் நிலத்தைக் குறிக்கிறது.

ஏதேன் தோட்டத்தின் அழகு

ஏதேன் தோட்டத்தில் பார்வைக்கு அழகான விருட்சங்களும், கனிதரும் பல விருட்சங்களும் இருந்தன. இந்தத் தோட்டத்தின் நடுவில் ஜீவவிருட்சமும், நன்மைதீமை அறியத்தக்க விருட்சமும் இருந்தது (ஆதி 2:9).

தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார். ஆதியாகமம் 2:9

மனுஷன் ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்திக் காக்க வேண்டும் (ஆதி 2:15).

தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். ஆதியாகமம் 2:15

ஏதேன் தோட்டத்தில் இந்த விருட்சங்களோடு (ஆதி பலவிதமான தாவர வகைகளும் இருந்தன (ஆதி 1:11-12).

அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. ஆதியாகமம் 1:11

பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார். ஆதியாகமம் 1:12

தாவர வகைகளோடு அங்கு எல்லாவிதமான பறவைகளும், விலங்குகளும் இருந்தன 2.:19-20).

தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று. ஆதியாகமம் 2:19

அப்படியே ஆதாம் சகலவித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை. ஆதியாகமம் 2:20

இந்த விலங்குகளெல்லாம் தேவன் ஆறாம் நாளில் சிருஷ்டித்தவையாகும் (ஆதி 1:24-25).

பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. ஆதியாகமம் 1:24

தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார். ஆதியாகமம் 1:25

ஏதேன் தோட்டதின் நீர் ஆதாரம்

ஏதேன் தோட்டத்தில் ஆறுகள் மூலமாகத் தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது (ஆதி 2:10).

தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று. ஆதியாகமம் 2:10

ஆதாமும், ஏவாளும் தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்தார்கள் (ஆதி 3:1-19). தேவன் அவர்களை ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தி விட்டார். ஆதாம், ஏவாள் ஆகியோரின் குமாரனான காயீன் ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான் (ஆதி 4:16).

அப்படியே காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான். ஆதியாகமம் 4:16

ஏதேன் தோட்டத்தை குறித்த மற்ற புத்தகங்களின் செய்தி

பழைய ஏற்பாட்டு வசனங்கள் பலவற்றில் ஏதேன் தோட்டத்தைப் பற்றிக் குறிப்பிடப் பட்டிருக்கிறது. அது அழகுள்ளது. கனிதரக்கூடியது. தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டது (ஏசா 51:3).

கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல் செய்வார்; அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச்செய்து, அதின் வனாந்தரத்தை ஏதேனைப்போலவும், அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும். ஏசாயா 51:3

வெளிப்படுத்தின விசேஷத்தில் ஏதேன் தோட்டமானது பரலோகத்தின் எருசலேமிற்கு ஒப்பிட்டுக் கூறப்பட்டிருக்கிறது. இங்கு ஜீவத்தண்ணீருள்ள நதி பாயும். ஜீவவிருட்சம் இங்குள்ளது (வெளி 22:1-2).”

பின்பு, பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான். வெளிப்படுத்தினத விசேஷம் 22:1

நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டு விதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள். வெளிப்படுத்தினத விசேஷம் 22:2

ஏதேன்” என்னும் வார்த்தைக்கு இனிமை, சொர்க்கம், சமமான பூமி என்று பொருள்.  செப்துவஜிந்த் பதிப்பில் ஏதேன் என்பது பரதீசு (paradise) என்று மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. பரதீசு (paradise) –  வேத அறிஞர்கள் ஏதேன் தோட்டத்தை பரதீசு என்றே கூறுகிறார்கள். ஏனெனில் எபிரெய மொழியில் பேரடஸ் என்னும் வார்த்தை வனம், சிங்காரவனம், தோட்டம் என்று பொருள்படும்.

ஏதேனுக்குக் கிழக்கே இந்தத் தோட்டம் இருந்தது. ஐபிராத்து (Euphrates), டைக்கிரீஸ் (Tigris) ஆகிய இரண்டு பிரசித்தி பெற்ற நதிகள் இந்தத் தோட்டத்தில் பாய்ந்தன. டைக்கிரீஸ் நதியின் மறுபெயர் இதெக்கேல் (Hiddekel) ஆதி 2:14) என்பதாகும்.

மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர். ஆதியாகமம் 2:14

இவ்விரண்டு நதிகள் தவிர, மேலும் இரண்டு நதிகளும் பாய்ந்தன. ஒன்று கீகோன் (Gihon), அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடிற்று. இது நைல் நதியைக் குறிக்கலாம். மற்றொரு நதி பைசோன் (Pison), அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடிற்று. ஆவிலா தேசம் அரபியா தேசத்தைக் (Arabia) குறிக்கும். ஏதேன் தோட்டம் பூமியில் குறிப்பாக எங்கே இருந்தது என்பதை யாரும் இன்னும் கண்டறியவில்லை. அந்தத் தோட்டம் அழிக்கப்பட்டு, பூமியின் மேல்மட்டம் மாற்றப்பட்டிருக்கலாம்.

பூமி பகுக்கபடுதல்

பேலேகுவின் (Peleg) காலம் வரையிலும் பூமி பகுக்கப்படாமல் ஒன்றாயிருந்தது. (ஆதி 10:25, 1நாளா 1:19)

ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவனுக்குப் பேலேகு என்று பேர்; ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பேர் யொக்தான். ஆதியாகமம் 10:25

இவனுடைய காலத்தில்தான், பூமி கண்டங்களாகவும், தீவுகளாகவும் பகுக்கப்பட்டது. ஆகையினால் ஏதேன் தோட்டத்தின் இருப்பிடத்தையோ, அல்லது அங்கு பாய்ந்த நதிகளையோ குறிப்பாக எங்கே உள்ளது என்று கண்டறிய முடியவில்லை. பூமியின் மேற்பரப்பு மாறிவிட்டது. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது பூமியில் மேலும் பல மாற்றங்கள் உண்டாகும். (ஏசா 11:15-16; ஏசா 34;1-35:10; சக 14:4-10; வெளி 16:10-21). புதிய பூமியில் இன்னும் அநேக மாற்றங்கள் ஏற்படும். (வெளி 21:1-2, 9-10).

ஏதேன் தோட்டத்தின் இருப்பிடத்தை வேதபண்டிதர்களில் பலரும் வரையறுத்துக் கூறுகிறார்கள். ஆனால் அவர்களுக்குள் ஒருமித்த கருத்து ஒன்றும் ஏற்படவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தை ஏதேன் தோட்டமென்று கூறுகிறார்கள். உபா 29:29 ஆவது வசனத்தில் “மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்” என்று கூறப்பட்டிருக்கிறது. ஏதேன் தோட்டம் எங்கிருந்தது என்பது கர்த்தருக்கே தெரிந்த உண்மையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *