குழந்தை பிரதிஷ்டை Dedication of Children
ஆயத்தம்
பொதுவாக ஞாயிறு காலை ஆராதனையில் பிரசங்கத்திற்குமுன் குழந்தை பிரதிஷ்டையை நடத்தலாம். பிரதிஷ்டை செய்ய இருக்கும் குழந்தையை பெற்றோர் பிரசங்க பீடத்திற்கு முன்னால் கொண்டு வரும்படி போதகர் அழைக்க வேண்டும்.
வேத பகுதிகள்:
- ஆதி.48:9;
- யாத்.2:9,10; 1சாமு.1:9-11,20, 24-28;
- 2 நாளா.20:13
- நீதி.22:6
- மத்.19:13-15.
- சங்.127:4-6
- லூக்.18:16,17
இதில் ஏதாவது ஒரு வேத பகுதியை வாசிக்கலாம்.
போதகர் கீழ்க்காணும் வார்த்தைகளைக் கூறலாம்:
கர்த்தர் கிருபையாய் கொடுத்த குழந்தையை பிரதிஷ்டை செய்யும்படி இந்த பெற்றோர் முன்வந்திருக்கிறார்கள். குழந்தை பிரதிஷ்டை என்பது குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சியல்ல, அல்லது ஞானஸ்நானத்திற்கு இணை யானதுமல்ல.
தேவன் ஈவாகக் கொடுத்த குழந்தைக்காக கர்த்தருக்கு நன்றி செலுத்தி கர்த்தருக்காக இந்தக் குழந்தையை வளர்ப்போம் என்று சபைக்கு முன்பாக பெற்றோர் தங்களையும் குழந்தையையும் கர்த்தருக்கு அர்ப்பணிப்பதே குழந்தை பிரதிஷ்டை.
போதகர் பெற்றோரைப் பார்த்து கூறவேண்டியது:
நீங்கள் இந்தக் குழந்தையை கர்த்தருக்காக பிரதிஷ்டை செய்ய கொண்டு வந்திருப்பதின்மூலம் கிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் விகவாசத்தைக் காண்பிக்கின்றீர்கள்.
அத்துடன் இந்தக் குழந்தை கிறிஸ்துவை அறிந்து, கிறிஸ்தவ வாழ்க்கை வாழ வேண்டுமென்ற விருப்பத்தையும் தெரிவிக்கின்றீர்கள்.
கர்த்தர் உங்களுக்கு தந்துள்ள எல்லா ஆசீர்வாதங்களிலும் மேலானது இந்தக் குழந்தை பாக்கியம். எனவே நீங்கள் இந்தக்குழந்தையை தந்த கர்த்தருக்கு நன்றி செலுத்துங்கள். குழந்தைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம். கர்த்தாவே நீர் தந்த இந்தக் குழந்தையை உம்மிடத்திலேயே கொடுக்கின்றோம்.
உம்முடைய விருப்பம் இந்த குழந்தையில் நிறைவேறுவதாக. உம்முடைய சித்தம் செய்யும் குழந்தையாக இதுவளர உதவி செய்யும் என்று நீங்கள் ஜெபிக்க வேண்டியது உங்கள் கடமை.
பார்வோனின் குமாரத்தி மோசேயை எடுத்து அவனுடைய தாயிடமே கொடுத்து நீ இந்த பிள்ளையை எனக்காக வளர்த்திடு, உனக்கு சம்பளம் கொடுக்கிறேன் என்று கூறினது போல கர்த்தருக்காக இந்தக் குழந்தையை வளர்ப்பதற்கு தேவையான சகல உதவிகளையும் கர்த்தரே உங்களுக்குத் தருவார்.
நீங்கள் இந்தக் குழந்தையை கர்த்தருக்காக வளர்க்கும்போது, அந்தக் குழந்தை வளர்ந்து
கர்த்தருக்கும், உங்களுக்கும், சபைக்கும், தேசத்திற்கும் ஆசீர்வாதமாக இருக்கும் என்பது நிச்சயம்.
போதகர் பெற்றோரைப் பார்த்து கேட்க வேண்டியது:
போதகர்:
கிருபையின் ஈவாக கர்த்தர் உங்களுக்குக் கொடுத்துள்ள இந்தக் குழந்தையை கர்த்தருக்கு பயப்படும் பயத்திலும், பக்தியிலும் வளர்ப்போம் என்று வாக்குக் கொடுக்கிறீர்களா?
பெற்றோர் பதில்:
ஆம்.
போதகா:
இந்தக் குழந்தை ஏற்ற காலத்தில் இயேசுகிறிஸ்துவைசொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, நல்ல கிறிஸ்தவ வாழ்க்கை வாழ வழி நடத்துவீர்களா?
பெற்றோர் பதில்:
ஆம்.
போதகர்;
இந்தக் குழந்தை உங்களை பின்பற்றக்கூடிய விதத்தில் உங்கள் வார்த்தை, நடத்தை, செயல் எல்லாவற்றிலும் நீங்கள் முன்மாதிரியான வாழ்க்கை வாழ்வோம் என்று வாக்குக் கொடுக்கிறீர்களா?
பெற்றோர் பதில்:
ஆம்.
பின்பு போதகர் குழந்தையை தாயிடமிருந்து வாங்கி தன் கையில் ஏந்திக்கொண்டு அந்தக் குழந்தைக்கு பெற்றோர் என்ன பெயர் வைத்திருக்கிறார்களென்று கேட்டு அதன் பெயரை உச்சரித்து
ஜெபிக்க வேண்டியுள்ளது விதமாவது…
அன்புள்ள ஆண்டவரே இந்தப் ___________ (பெயர்) …க்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இந்த __________ (பெயர்) பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே உமக்கென்று பிரதிஷ்டை செய்கின்றோம். இந்தக் குழந்தை ஏற்ற வயதிலே இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு உமக்குப் பிரியமான பரிசுத்த வாழ்க்கை வாழ அர்ப்பணிக்கின்றோம்.
இந்தக் குழந்தைக்கு நல்ல சுகத்தையும், பெலனையும், நீடித்த ஆயுளையும் தாரும். வியாதிகளுக்கும், பாவத்திற்கும், பாவ சோதனைகளுக்கும் விலக்கி பாதுகாத்தருளும். இந்தக் குழந்தை உமக்கும், பெற்றோருக்கும், சபைக்கும் பயனுள்ள வாழ்க்கை வாழ பிரதிஷ்டை செய்கின்றோம், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பிதாவே, ஆமென்.
ஜெபித்தபின்பு போதகர் பெற்றோரைப் பார்த்து:
இந்தப் ___________ (பெயர்) -ஐ கர்த்தருக்கேற்ற பயபக்தியிலும், ஞானத்திலும் வளர்க்க உங்களிடம் கொடுக்கின்றோம் என்று கூறி தகப்பனிடம் கொடுக்க வேண்டும்.
போதகர் சபையாரைப் பார்த்து கூறவேண்டியது:
இந்தக் குழந்தையை இந்த சபைக்கு முன்பாக பிரதிஷ்டை செய்ததின்மூலமாக இந்தக் குழந்தையைக் குறித்த உத்திரவாதத்தை சபை ஏற்றுக்கொள்ளுகிறது. இந்தக் குழந்தை நமது சபையிலே வளர்ந்து வருகின்ற நாட் களில் வேத வசனங்களை கேட்டு, சத்தியங்களை கற்றுக்கொண்டு, கர்த்தரை ஆராதித்து பக்தியுள்ள வாழ்க்கை வாழ நம்மால் இயன்ற எல்லா உதவிகளை செய்யவும், இந்தக் குழைந்தைக்காக ஜெபிக்கவும் கடமைப்பட்டுள்ளோம்.
இந்தக் குழந்தை இடறிப் போவதற்கான எந்த செயலையும் நம்மில் யாரும் செய்யாமல், முன்மாதிரியான வாழ்க்கை வாழ நாம் யாவரும் தீர்மானித்துக் கொள்வோமாக.
ஜெபம்
பின்பு போதகர் பெற்றோருக்காகவும், சபையாருக்காகவும் ஜெபித்து முடிக்கலாம்.
One comment on “குழந்தை பிரதிஷ்டை ”
Gideon Krishnan
April 14, 2023 at 6:47 pmThanks for holy spirit