திருவிருந்து ஆராதனை Holy Communion
திருவிருந்து ஆராதனை – ஆயத்தம்:
பிரசங்க பீடத்திற்குமுன் ஒரு மேஜையில் திருவிருந்துக்குத் தேவையான அப்பமும். திராட்சரசமும். அவைகளை பரிமாறுவதற்கான போதிய பாத்திரங்களும் சில வெள்ளை கைக்குட்டைகளும் சுத்தமான நிலையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். எப்போதும் தேவைக்கு அதிகமான அளவிலேயே அப்பமும் ரசமும் ஆயத்தப்படுத்தி இருக்க வேண் டும். சுத்தமான நல்ல வெள்ளைத் துணியினால் யாவும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
பொதுவாக ஞாயிறு காலை ஆராதனையின் முடிவில் திருவிருந்து நடத்தப்படும். அவசியத்தினிமித்தம் மற்ற நாட்களிலும் நடத்தப்படலாம்.
போதகர் கூறவேண்டியது:
இரட்சிக்கப்பட்டு முழுக்கு ஞானஸ்நானம் பெற்று தேவனுக்கு பிரியமான சாட்சியுள்ள வாழ்க்கை வாழும் யாவரும் இதில் கலந்து கொள்ளலாம். அப்படிப்பட்டவர்கள் மட்டும் ஜெப உணர்வோடு முழங்கால்படியிடுங்கள். மற்றவர்கள் ஆலயத்தின் பின்பகுதியில் அமைதியாசு உட்கார்ந்திருக்கலாம்.
பாடல்
இந்த நேரத்தில் இயேசுவின் பாடுகள். சிலுவை மரணத்தைக் குறித்த பாடல் ஒன்று பாடலாம்.
வேத பகுதிகள்:
- மத்.26:26-29 லூக்.22:19-20
- எபி.9:12-14
- மாற்கு 14:22-25
- அப்.20:7
- வெளி.1:6
- யோவான் 6:48-51; 53-57
- 1கொரி.11:23-33; 10:16,17
இதில் ஏதாவது ஒரு வேத பகுதியை வாசிக்கலாம்.
சுருக்க உரை:
கர்த்தருடைய பந்தியின் பொருளை விளக்கி சுருக்கமாக சில நிமிடங்கள் பேசலாம். கலந்துகொள்ள ஆயத்தமாக வந்திருக்கின்றவர்கள் தங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்து குறைகள், குற்றங்கள் பாவங்களிருந்தால் அவைகளை அறிக்கையிடவும், அதனை விட்டுவிடவும் ஆலோசனை கூறலாம்.
உதவி செய்வோரை முன் அழைத்தல்:
அப்பத்தையும் இரசத்தையும் பரிமாறுவதற்கு நியமிக்கப்பட்டவர்களை போதகர் முன்வரும்படி அழைப்பார். அவர்கள் போதகரைப் பார்த்து வரிசையாக மேஜைக்கு மறுபக்கம் நிற்க வேண்டும்.
ஜெபம்:
இயேசுவின் சரீரத்திற்கு அடையாளமான அப்பத்தையும், அவருடைய இரத்தத்திற்கு அடையாளமான இரசத்தையும் ஜெபித்து, பின் உதவிக்காரரிடம் கொடுக்க வேண்டும்.
பின்பு போதகர் கூறவேண்டியது:
பரிமாறுகிறவர்கள் உங்கள் பக்கத்தில் வரும் போது கண்களைத் திறந்து வாங்கி, பயபக்தியுடன் வைத்திருங்கள். எல்லாரும் சேர்ந்து புசிப்போம், பானம் பண்ணுவோம் என்று சொல்லும்வரை ஒருவருக்காக ஒருவர் காத்திருப்போம்.
(பொதுவான பாத்திரத்தில் பானம் பண்ணுவதானால் அவர்கள் வாங்கின உடனேயே அப்பத்தைப் புசித்து இரசத்தை பானம் பண்ணலாம்).
பரிமாறுகிறவர்கள் கூறவேண்டியது:
உங்களுக்காகப் பிட்கப்பட்ட இயேசுகிறிஸ்துவின் சரீரத்திற்கு அடையாளமான அப்பம். உங்களுக்காக சிந்தப்பட்ட இயேசுகிறிஸ்துவின் இரத்தத்திற்கு அடையாளமான இரசம்.
போதகர்:
யாருக்காகிலும் அப்பமோ, இரசமோ கொடுக்கப்படாமல் விடப்பட்டிருந்தால் தயவுசெய்து கை உயர்த்திக் காட்டவும்.
(விடுபட்டவர்களிருந்தால் உடனே கொடுக்க ஒழுங்கு செய்யவும்).
சபையாருக்கு கொடுத்து முடித்தபின் போதகர் உதவிக்காரருக்கு அப்பமும் இரசமும் கொடுக்க வேண்டும்.
போதகர் கூறவேண்டியது:
இயேசுகிறிஸ்துவின் சரீரத்திற்கு அடையாளமான அப்பத்தை சேர்ந்து புசிப்போம், (புசித்த பின்) இயேசுகிறிஸ்துவின் இரத்தத்திற்கு அடையாளமான இரசத்தை சேர்ந்து பானம் பண்ணுவோம்.
துதியும் இறுதி ஜெபமும்
யாவரும் புசித்து பானம் பண்ணியபின் சில நிமிடங்கள் கர்த்தருக்கு நன்றி செலுத்தவேண்டும். கர்த்தருடைய பந்தியில் கலந்து கொண்டதினால் உண்டான ஆசீர்வாதங்களையும் தொடர்ந்து ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய கடமைகளையும் வலியுறுத்தி உற்சாக வார்த்தைகளை பேசி, ஜெபித்து ஆசீர்வாதம் கூறி முடிக்க வேண்டும்.
ஆலயக் கட்டிட வேலை ஆரம்ப நிகழ்ச்சி