ஆலயக் கட்டிட வேலை ஆரம்ப நிகழ்ச்சி
ஆலய கட்டிட வேலை ஆரம்ப ஆராதனைக்கு ஆயத்தம்:
இந்த ஆராதனை பொதுவாக ஞாயிறு காலை ஆராதனை முடிவிலே நடத்தினால் சபையார் யாவரும் கலந்துகொள்ள வசதியாக இருக்கும். ஆனாலும், அவசியத்தினிமித்தம் எந்த நாளிலும் வைத்துக்கொள்ளலாம். சபையாரெல்லாரையும் ஆலயம் கட்டவிருக்கின்ற ஆலய வடிவிலேயே நிற்கச் செய்யலாம்.
- ஓர் பாடல் பாடி கர்த்தரை ஆராதிக்கலாம்.
ஆலய கட்டிட வேலை ஆரம்ப ஆராதனையில் சபைப் போதகர் கூறவேண்டியது:
இந்த ஆலய கட்டிட வேலையை ஆரம்பிக்கும்படிக்கு நாம் இங்கே கூடி வந்திருக்கின்றோம். இந்த ஊரில் (இடத்தில்) ஆரம்பிக்கப்பட்ட நமது சபை கர்த்தருடைய கிருபையினால் வளர்ந்து வருகிறது. இன்னும் ஏராளமானோர் கர்த்தரை ஆராதிக்க வசதியை உண்டுபண்ணும்படி இந்த நிலத்தை வாங்க கர்த்தர் உதவி செய்தார். இந்த இடத்தில் ஓர் ஆலயத்தைக் கட்டுவதற்கான திட்டத்தை கர்த்தர் நமக்குத் தந்துள்ளார். இந்தத் திட்டத்தை தந்த ஆண்டவர் இந்த வேலையை முற்றும் முடிய நடத்துவார் என்று விசுவாசிக்கின்றோம்.
நம்முடைய அழைப்பிற்கு இணங்கி நம்முடைய மத்தியில் வந்துள்ள நமது மண்டல தலைமைப் போதகர் ___________ (பெயர்). ஸ்தாபன தலைமைப் போதகர் __________ (பெயர்) சிறப்பு விருந்தினர்கள் ________________ (பெயர்கள்)
யாவரையும் மகிழ்வுடன் வாழ்த்தி வரவேற்கின்றோம்.
ஜெபம்:
மண்டல தலைமைப் போதகர் ஜெபிப்பார்.
வேத பகுதிகள்:
- யாத்.25:1-9
- எஸ்தர் 3:8-13
- ஆகாய் 1:1-8, 2:1-4
- சகரியா 4:6-10.
இதில் ஏதாவது ஒரு வேத பகுதியை வாசிக்கலாம்.
ஸ்தாபன தலைமைப் போதகர் (அல்லது சிறப்பு விருந்தினர்) சில வார்த்தைகளை கூறி ஜனங்களை உற்சாகப்படுத்தி சுருக்கமாக பேசலாம்.
பின்பு ஆலய வேலையை பிரதிஷ்டை செய்து ஏறெடுக்க வேண்டிய ஜெபம்:
இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை என்று வாக்குப்பண்ணியுள்ள இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே இந்த ஆலய கட்டிட வேலையை ஆரம்பித்து ஜெபிக்கின்றோம். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே இந்த நிலத்தை கட்டிடத்திற்காக பிரதிஷ்டை செய்கின்றோம்.
இன்று ஆரம்பித்து வைக்கின்ற இந்த வேலை தடைபடாமல் நடக்க ஜெபிக்கிறோம். இந்த ஆலய வேலைக்குத் தேவையான பொருளாதார சகாயங்களை, மனித ஒத்தாசைகளை, தேவ தயவை கட்டளையிட்டருளும். இந்த வேலையை முன்னின்று நடத்துகின்ற இன்ஜினியர்களுக்கும், கட்டிடக் கலை வல்லுநர்களுக்கும், தொழிலாளர்கள் யாவருக்கும் சுகத்தையும், பெலனையும் தாரும். எந்தவித ஆபத்துகளோ, உயிர்த்ச்சேதமோ, பொருள் நஷ்டமோ ஏற்படாதபடி காத்துக்கொள்ளும்.
இந்தக் கட்டிட வேலைக்கு, இந்த ஊழிய வளர்ச்சிக்கு தடையாயிருக்கின்ற எல்லா சத்துருவின் போராட்டங்களையும், எதிர் வல்லமைகளையும் முறியடித்தருளும்.
இந்த ஆலய வேலை முற்றுப்பெற்று, உமது நாம மகிமைக்காக ஆலய பிரதிஷ்டை விழா நடத்தவும், உமது ஊழியம் தொடர்ந்து இந்த இடத்தில் நடைபெறவும் ஜெபிக்கிறோம். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் பிதாவே, ஆமென்.
பின்பு கட்டிட வேலையை முன்னின்று நடத்துகிறவர் மண்வெட்டியை ஸ்தாபன தலைமைப் போதகர் (அல்லது மண்டல தலைமைப் போதகர் அல்லது சிறப்பு விருந்தினர்) கையிலே கொடுப்பார். அவர் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே இந்த ஆலய கட்டிட வேலையை ஆரம்பித்து வைக்கின்றேன் என்று கூறி ஆரம்பம் செய்வார். அதைத் தொடர்ந்து போதகர்களும், சபை விசுவாசிகளும் ஆரம்பம் செய்து வைப்பார்கள்.
முடிவு ஜெபமும் ஆசீர்வாதமும்: