ராஜாவின் கட்டளை தானியேல் 3:8-18
ராஜாவின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய மூன்று வாலிபர்கள், ராஜா நிறுத்தின சிலைக்கு எதிராக நிற்கிறார்கள்.
பாபிலோன் தேசத்து ஜனங்களைப்போல, இவர்களும் தூரா என்னும் சமபூமிக்கு வந்திருக்கிறார்கள். தேசத்து ஜனங்களெல்லோரும் ராஜா நிறுத்தின சிலைக்கு எதிராக நிற்கிறார்கள்.
இந்த மூன்று எபிரெய வாலிபர்களும், அவர்களைப்போலவே, அந்த சிலைக்கு எதிராக நிற்கிறார்கள்.
எபிரெய வாலிபர்கள் இந்த திரளான கூட்டத்தோடு ராஜா நிறுத்தின சிலைக்கு முன்பாக நிற்பது ஆச்சரியமாயும், விநோதமாயும் இருக்கிறது.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நோகோ
இவர்கள் எபிரெய வாலிபர்கள். இவர்கள் இஸ்ரவேலின் தேவனை மாத்திரமே ஆராதிக்கிறவர்கள். ஆனாலும் இவர்கள் இப்போது ராஜா நிறுத்தின சிலைக்கு எதிராக நிற்கிறார்கள்.
நேபுகாத்நேச்சார், தான் நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேரும்படி, தன்னுடைய உத்தியோகஸ்தர் யாவரையும் அழைத்திருக்கிறான்.
ராஜாவின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து எல்லோரும் அங்கு வந்ததுபோல, இம்மூன்று எபிரெய வாலிபர்களும் அங்கு வந்திருக்கிறார்கள். இந்த எபிரெய வாலிபர்கள் விக்கிரகாராதனைக்காரர்களல்ல.
விக்கிரகாராதனைக்கு விரோதமாக தாங்கள் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக சாட்சியாயிருக்கவேண்டும் என்று தீர்மானித்து, அவர்கள் அங்கே வந்திருக்கிறார்கள்.
இரண்டு கட்டளை
நேபுகாத்நேச்சார் இரண்டு கட்டளைகளைக் கொடுக்கிறான். அவையாவன:
- 1. தான் நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு எல்லோரும் வந்து சேரவேண்டும்.
- 2. தான் நிறுத்தின பொற்சிலையை எல்லோரும் பணிந்து கொள்ளவேண்டும்.
இந்த மூன்று வாலிபர்கள் ராஜாவின் முதலாவது கட்டளைக்கு மாத்திரமே கீழ்ப்படிகிறார்கள். ராஜாவின் இரண்டாவது கட்டளைக்கு கீழ்ப்படிய மறுத்துவிடுகிறார்கள்.
சகல ஜனத்தாரும், ஜாதியாரும், பாஷைக்காரரும் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்கிறார்கள்.
ஆனால் இம்மூன்று எபிரெய வாலிபருமோ, ராஜா நிறுத்தின பொற்சிலையை பணிந்துகொள்ளாமலிருக்கிறார்கள்.
இவர்கள் நேபுகாத்நேச்சாருடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும், அவன் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருப்பதை கல்தேயரில் சிலர் பார்க்கிறார்கள். கல்தேயர்கள் ராஜாவினிடத்தில் இம்மூன்று எபிரெய வாலிபர் பெயரிலும் குற்றம் சுமத்துகிறார்கள்.
குற்றச்சாட்டு
“”அச்சமயத்தில் கல்தேயரில் சிலர் ராஜசமுகத்தில் வந்து, யூதர்பேரில் குற்றஞ்சாற்றுகிறார்கள்” (தானி 3:8). கல்தேயர்கள் என்னும் வார்த்தை பாபிலோன் தேசத்து ஜோசியக்காரரையோ அல்லது குறிசொல்லுகிறவர்களையோ குறிக்கலாம்.
“”அப்பொழுது ராஜா தன் சொப்பனங்களைத் தனக்குத் தெரிவிக்கும்பொருட்டு சாஸ்திரிகளையும் ஜோசியரையும் சூனியக்காரரையும் கல்தேயரையும் அழைக்கச் சொன்னான்; அவர்கள் வந்து, ராஜசமுகத்தில் நின்றார்கள்.
அப்பொழுது கல்தேயர் ராஜாவை நோக்கி: ராஜாவே, நீர் என்றும் வாழ்க; சொப்பனத்தை உமது அடியாருக்குச் சொல்லும், அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம் என்று சீரிய பாஷையிலே சொன்னார்கள்” (தானி 2:2,4).
கர்த்தர் தானியேலையும், இந்த மூன்று வாலிபர்கள் பாபிலோன் தேசத்திலே உயர்த்தியிருக்கிறார். இவர்கள் பாபிலோன் மாகாணத்து காரியங்களை விசாரிக்கும்படி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு அரசாங்கத்தில் உயர்ந்த உத்தியோகம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு கொடுக்கப்பட்ட மேன்மையை, கல்தேயரின் ஜோசியக்காரரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் இம்மூன்று எபிரெய வாலிபர்கள்மீதும் பொறாமைப்படுகிறார்கள்.
சதிஆலோசனை
கல்தேயர்கள் எபிரெய வாலிபருக்கு விரோதமாய் சதிஆலோசனை பண்ணுகிறார்கள். அவர்களை அழிப்பதற்கு சமயம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் எதிர்பார்த்த வேளை இப்போது அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. இம்மூன்று எபிரெய வாலிபர்களும் ராஜா நிறுத்தின பொற்சிலையை பணிந்துகொள்ளவில்லை.
எவனாகிலும் அதைப் பணிந்துகொள்ளாமல்போனால், அவன் அந்நேரமே எரிகிற அக்கினி சூளையின் நடுவிலே போடப்படுவான் என்பது ராஜாவின் கட்டளை.
கல்தேயரில் சிலர் இம்மூன்று எபிரெய வாலிபருக்கு விரோதமாக ராஜசமுகத்தில் வந்து குற்றம் சொல்லுகிறார்கள். அச்சமயத்தில் கல்தேயரில் சிலர் ராஜசமுகத்தில் வந்து, யூதர்பேரில் குற்றஞ்சாற்றி, ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரை நோக்கி:
“” ராஜாவே, நீர் என்றும் வாழ்க.எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் கேட்கிற எந்த மனுஷனும் தாழவிழுந்து, பொற்சிலையைப் பணிந்து கொள்ளவேண்டுமென்றும்,
எவனாகிலும் தாழ விழுந்து பணிந்து கொள்ளாமற்போனால், அவன் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்பட வேண்டுமென்றும், ராஜாவாகிய நீர் கட்டளையிட்டீரே” (தானி 3:8-11) என்று ராஜாவின் கட்டளையை ராஜாவுக்கு நினைவுபடுத்துகிறார்கள்.
ஞாபகமறதி
நேபுகாத்நேச்சாருக்கு ஞாபகமறதி அதிகம். அவன் ஏற்கெனவே தான் கண்ட சொப்பனத்தை மறந்தவன். அதுபோலவே இப்போது, தான் பிறப்பித்த கட்டளையையும் மறந்துவிடுவானோ என்று கல்தேயர்கள் நினைக்கிறார்கள்.
ஆகையினால் அவர்கள் ராஜசமுகத்தில் வந்து, முதலாவதாக, ராஜாவின் கட்டளையை அவனுக்கு நினைவுபடுத்துகிறார்கள். அதன் பின்பு அவர்கள் இம்மூன்று எபிரெய வாலிபருக்கு விரோதமாக குற்றம் சொல்லுகிறார்கள்.
“”பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை;
அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளாமலும் இருக்கிறார்கள்” (தானி 3:12) என்று கல்தேயரில் சிலர் ராஜசமுகத்தில் வந்து, இம்மூன்று எபிரெய வாலிபர் பேரிலும் குற்றம் சாற்றுகிறார்கள்.
ராஜாவின் கட்டளை தெளிவாகயிருக்கிறது. அது சகல ஜனங்களுக்கும், சகல ஜாதிகளுக்கும், சகல பாஷைக்காரருக்கும் பொதுவானது. எல்லோருமே ராஜாவின் கட்டளைக்கு கீழ்ப்படியவேண்டும். இதில் எந்த மனுஷனுக்கும் விதிவிலக்கு கொடுக்கப்படவில்லை.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய மூன்று வாலிபர்கள் சிலையைப் பணிந்துகொள்ளவில்லை. கல்தேயர்களோ இவர்கள்மீது குற்றம் சொல்லும்போது, “”அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை” (தானி 3:12) என்று சொல்லுகிறார்கள்.
ராஜாவுக்கல்ல தேவனுக்கே முதலிடம்
எபிரெய வாலிபர்கள் ராஜாவை மதிக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் ராஜாவின் கட்டளைக்கு கீழ்ப்படிய மறுக்கிறார்கள்.
ராஜாவின் கட்டளைக்கு கீழ்ப்படிவதைவிட, பரலோகத்தின் தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிவது இந்த மூன்று வாலிபர்கள் மிகவும் முக்கியமானதாகத் தெரிகிறது.
இவர்களுக்கு ராஜாவின்மீது மதிப்பு இருக்கிறது. நேபுகாத்நேச்சார் இம்மூன்று எபிரெய வாலிபர்களுக்கும் சத்துருவல்ல. ராஜா இவர்களுக்கு அநேக நன்மைகளை செய்திருக்கிறான்.
இவர்களும் ராஜாவுக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறார்கள். ஆனாலும் இந்த மூன்று எபிரெய வாலிபர்களும், ராஜாவின் கட்டளையைவிட, கர்த்தருடைய கட்டளையே பெரிது என்று தீர்மானம்பண்ணியிருக்கிறார்கள்.
கல்தேயரில் சிலர் இம்மூன்று எபிரெய வாலிபருக்கு விரோதமாக, ராஜசமுகத்திலே வந்து குற்றம் சொல்லும்போது, நேபுகாத்நேச்சார் உக்கிரகோபங்கொள்கிறான்.
சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் அழைத்துக் கொண்டுவரும்படி கட்டளையிடுகிறான்; அவர்கள் அந்தப் புருஷரை ராஜாவின் சமுகத்தில் கொண்டுவந்து விடுகிறார்கள் (தானி 3:13).
ராஜா இம்மூன்று வாலிபர்களுக்கு விரோதமாக கல்தேயர் சொன்ன குற்றச்சாட்டை உடனே நம்பவில்லை. அதை அவர்களிடத்திலே கேட்டு உறுதிபண்ண விரும்புகிறான்.
நேபுகாத்நேச்சார் அவர்களை நோக்கி: “”சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் என் தேவர்களுக்கு ஆராதனைசெய்யாமலும் நான் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளாமலும் இருந்தது மெய்தானா?” (தானி 3:14) என்று கேட்கிறான்.
ராஜாவின் பிரியம்
ராஜா மூன்று வாலிபர்கள் மீது பிரியமாயிருக்கிறான். அவர்கள் ஒருவேளை தன்னுடைய கட்டளைக்கு இதற்கு முன்பு கீழ்ப்படியவில்லையென்றாலும், அவர்கள் இனிமேல் கீழ்ப்படிவதற்கு ஒரு வாய்ப்பைக்கொடுக்கிறான்.
இம்மூன்று வாலிபர்களும் தங்களுடைய மனதை மாற்றி, தான் நிறுவின பொற்சிலையை வணங்குவார்கள் என்பது ராஜாவின் விருப்பம்.
இம்மூன்று எபிரெய வாலிபர்களையும் தண்டிக்கவேண்டும் என்பது ராஜாவின் விருப்பமல்ல. அவர்கள் தன்னுடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து, தண்டனைக்கு தப்பவேண்டும் என்பதே ராஜாவின் விருப்பம்.
ராஜா இம்மூன்று எபிரெய வாலிபரிடமும்,
“”இப்போதும் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும்போது, தாழ விழுந்து, நான் பண்ணிவைத்த சிலையைப் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது;
பணிந்துகொள்ளாதிருந்தீர்களேயாகில், அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார்” (தானி 3:15) என்று கேட்கிறான்.
இம்மூன்று வாலிபர்களும் தன்னுடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து, சிலையை வணங்கினால், அவர்கள் ஏற்கெனவே சிலையை வணங்காமலிருந்த குற்றத்தை மன்னித்துவிடலாம் என்று ராஜா தீர்மானிக்கிறான்.
அவர்கள் சிலையை பணிந்துகொள்ளாமல், பிடிவாதமாயிருந்தால், அவர்களை அக்கினி சூளையின் நடுவிலே போட்டுவிடலாம் என்றும் தீர்மானிக்கிறான்.
இம்மூன்று எபிரெய வாலிபர்களும் தங்கள் தேவனிடத்தில் உறுதியான பக்தியும், நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள் என்பது நேபுகாத்நேச்சாருக்குத் தெரியும்.
ஆனால் ராஜாவுக்கு தேவனுடைய வல்லமையைப்பற்றி ஒன்றும் தெரியாது. தானே சர்வவல்லமையுள்ளவன் என்று ராஜா நினைக்கிறான்.
தனக்கு விரோதமாக யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று ராஜா தன் இருதயத்தில் பெருமையோடும், ஆணவத்தோடும் இருக்கிறான்.
“”என் கைக்கு தப்புவிக்கப்போகிற தேவன் யார்” என்று ராஜா இம்மூன்று எபிரெய வாலிபரிடமும் கேட்கிறான்.
தேவனால் அவர்களை விடுவிக்க முடியுமென்றால், அந்த தேவன் அவர்களை விடுவித்துக்கொள்ளட்டும் என்று பொருள்படுமாறு ராஜா பேசுகிறான்.
மூன்று வாலிபரின் உறுதி
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய மூன்று எபிரெய வாலிபரும் கர்த்தரிடத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.
ராஜா நிறுவின பொற்சிலையை பணிந்துகொள்ளக்கூடாது என்றும் உறுதியாயிருக்கிறார்கள். இம்மூவரும் வாலிபர்கள். ஆனாலும் கர்த்தருக்கு யுத்தவீரர்களாயிருக்கிறார்கள்.
மனுஷர் மத்தியிலே தேவனுடைய ராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்கு, இம்மூன்று எபிரெய வாலிபரும் கர்த்தர் பயன்படுத்தும் பாத்திரங்களாயிருக்கிறார்கள். கர்த்தருடைய பார்வையில் பலவான்களாகவும், பராக்கிரமசாலிகளாகவும் இருக்கிறார்கள்.
இவர்கள் இரத்தசாட்சியாக மரிப்பதற்கு தேடிப்போகவில்லை. கர்த்தருக்காக எப்படி சாட்சியாக மரிப்பது என்று சிந்தித்துப் பார்த்து, அதற்கான உபாயங்களைத் தேடவில்லை.
ஆனாலும் எரிகிற அக்கினி சூளை அவர்களுக்கு முன்பாக இருக்கும்போது, இம்மூன்று எபிரெயர்களும் அக்கினி சூளையைப் பார்த்து பயப்படவில்லை. இவர்கள் மரணத்தின் வாசலிலும் கர்த்தருக்கு சாட்சியாயிருக்கிறார்கள்.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: ”
“நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை. நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்;
அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது” (தானி 3:16-18) என்று சொல்லுகிறார்கள்.
எபிரெய வாலிபர்களின் வார்த்தையில் உறுதியும் நிச்சயமும் இருக்கிறது. இவர்கள் கர்த்தரை உறுதியாய் நம்புகிறார்கள். கர்த்தர் தங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்காமல், கர்த்தருடைய சித்தத்திற்கு தங்களை ஒப்புக்கொடுக்கிறார்கள். இவர்களுடைய மனதில் குழப்பமோ, பயமோ இல்லை.
“”நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை” (தானி 2:16) என்று தைரியமாய்ச் சொல்லுகிறார்கள்.
இம்மூவரும் ராஜாவினிடத்தில் இப்படி பேசினாலும், ராஜாவுக்கு பதில் சொல்ல மறுக்கவில்லை. அவர்கள் கர்த்தருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ராஜாவின் பொற்சிலைக்கோ, அக்கினி சூளைக்கோ அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
கர்த்தர் தங்களை எரிகிற அக்கினி சூளைக்கு நீங்கலாக்கி விடுவிப்பாரா அல்லது விடுவிக்கமாட்டாரா என்பது இம்மூன்று வாலிபருக்கும் நிச்சயமாய்த் தெரியாது. ஆனாலும் இவர்களுக்கு கர்த்தருடைய வல்லமையைப்பற்றி நன்றாய்த் தெரிந்திருக்கிறது.
“”நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களை தப்புவிக்க வல்லராயிருக்கிறார்” என்று இம்மூன்று வாலிபரும் விசுவாசத்தோடு சொல்லுகிறார்கள்.
எபிரெய வாலிபர்கள் ஜீவனுள்ள தேவனை நம்புகிறார்கள். ராஜா நிறுவின பொற்சிலையை பணிந்து பாவம் செய்வதைவிட, அதைப் பணியாமல் கர்த்தருக்கு சாட்சியாகயிருந்து, பாடுகளை அனுபவிப்பதையே இம்மூவரும் விசுவாசத்தோடு தெரிந்துகொள்கிறார்கள்.
இம்மூன்று எபிரெய வாலிபரும் ராஜா நிறுவின சிலையை பணிந்துகொள்ள மறுக்கிறார்கள். இவர்கள் தெய்வ நம்பிக்கையில்லாத நாஸ்திகர்களல்ல. ஜீவனுள்ள தேவனை நம்புகிறவர்கள்.
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை இவர்கள் தங்கள் தேவன் என்று விசுவாசத்தோடு சொல்லுகிறார்கள். இஸ்ரவேலின் பரிசுத்தரையே இவர்கள் ஆராதிக்கிறார்கள்.
தேவனை அறிந்த வாலிபர்கள்
கர்த்தருடைய வல்லமையைப்பற்றி இவர்களுக்கு நன்றாய்த் தெரிந்திருக்கிறது. நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன்,
“”எங்களை எரிகிற அக்கினி சூளைக்கு நீங்கலாக்கி விடுவிப்பார்” என்று விசுவாசத்தோடு சொல்லுகிறார்கள்.
ஒருவேளை தாங்கள் ஆராதிக்கிற தேவன், தங்களை எரிகிற அக்கினி சூளைக்கு நீங்கலாக்கி விடுவிக்கவில்லையென்றால், அவர் நிச்சயமாய்,
“”ராஜாவாகிய உம்முடைய கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பார்” என்று முழுநிச்சயத்தோடு சொல்லுகிறார்கள்.
நேபுகாத்நேச்சாரால் இம்மூன்று வாலிபர்களையும் கொடுமைப்படுத்த முடியும். அவர்களை சித்திரவதை பண்ணமுடியும். அவர்களுடைய சரீரங்களைக் கொல்லவும் முடியும்.
அதன்பின்பு ராஜாவால் அவர்களை ஒன்றும் செய்யமுடியாது. மனுஷர் மரித்த பின்பு, அவர்களுடைய சரீரத்தின்மீது, ராஜாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
நம்முடைய காலங்கள் கர்த்தருடைய கரத்திலிருக்கிறது. மனுஷரால் நம்முடைய சரீரத்தை மாத்திரமே கொல்ல முடியும். நம்முடைய ஆவியைக் கொல்லுவதற்கு மனுஷருக்கு அதிகாரமில்லை.
நாம் இந்த சரீரத்தில் மரித்தவுடன், கர்த்தருடைய சமுகத்திலிருப்போம். கர்த்தரே நம்மை மரணத்திலும், மரணத்திலிருந்தும் விடுவிக்கிறவர்.
தங்களுக்கு என்ன நடந்தாலும், ராஜா நிறுவின பொற்சிலையை பணியப்போவதில்லை என்று மூன்று எபிரெய வாலிபர்களும் தீர்மானம்பண்ணுகிறார்கள்.
“”நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்.
விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது” (தானி 3:17,18) என்று மூன்று எபிரெய வாலிபரும் கர்த்தரை நம்பி, ராஜாவுக்கு முன்பாக தைரியமாய்ச் சொல்லுகிறார்கள்.
மூன்று எபிரெய வாலிபர்களும் இப்போது முக்கியமான தீர்மானத்தை எடுக்கவேண்டும். கர்த்தரை மறுதலித்து, சிலையை வணங்கி, எரிகிற அக்கினி சூளைக்கு தப்பித்துக்கொள்ளலாம்.
தேவனுக்காக வைராக்கியம்
ஏராளமான ஜனங்கள் பொற்சிலையை பணிந்துகொள்ளும்போது, இந்த மூன்று வாலிபரும் கூட்டத்தோடு கூட்டமாக, பொற்சிலையை வணங்கி, தங்கள் ஜீவனைக் காத்துக்கொள்ளலாம்.
அதன் பின்பு தாங்கள் செய்த பாவத்திற்கு, கர்த்தரிடத்தில் பாவமன்னிப்பைக் கேட்டுக்கொள்ளலாம். இப்படிப்பட்ட நினைவுகள் மனுஷருடைய மனதிலே பொதுவாக தோன்றும்.
தற்பரிசோதனை
எல்லோரும் தப்பு செய்யும்போது, தாங்களும் தப்பு செய்தால் கர்த்தர் தங்களை மன்னித்துவிடுவார் என்று சிலர் நினைக்கிறார்கள்.
தப்பு செய்கிறவர்களின் கூட்டம் அதிகமாயிருக்கும்போது, ஊரோடு ஒத்துப்போவதுதான் விவேகம் என்று சொல்லுகிறவர்களும் இருக்கிறார்கள்.
நாம் கர்த்தருக்கு விசேஷமானவர்கள். எல்லா சூழ்நிலைகளிலும் நாம் கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாயிருக்கவேண்டும். கர்த்தரை நம்பி நன்மை செய்யவேண்டும்.
கர்த்தருடைய சித்தத்தின் பிரகாரமே நம்முடைய ஜீவியத்தில் ஒவ்வொரு காரியமும் நடைபெறும். கர்த்தருடைய அனுமதியில்லாமல் சத்துரு நம்மைத் தொடமுடியாது. கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் மனுஷருக்கு பயப்படமாட்டார்கள்.
வரலாறு
நாம் கர்த்தருடைய அடிச்சுவடுகளை மாத்திரமே பின்பற்றவேண்டும். ஊரோடு ஒத்துப்போகவேண்டும் என்னும் விவாதம் நமக்கு ஒத்துவராது.
இஸ்ரவேல் தேசத்தின் சரித்திரத்திலே, சமஸ்த இஸ்ரவேலாயிருந்த தேசம், வடக்கு இஸ்ரவேல் தேசம் என்றும், தெற்கு யூதாதேசம் என்றும் இரண்டாய்ப் பிரிந்தது.
வடக்கு இஸ்ரவேல் தேசத்திலே, இஸ்ரவேலின் பத்துக்கோத்திரத்தார் இருந்தார்கள். அவர்கள் தாணிலும், பெத்தேலிலும் பொன்னாலான விக்கிரகங்களுக்கு கோவில்களைக் கட்டினார்கள். கர்த்தரை ஆராதியாமல் விக்கிரகங்களை ஆராதித்தார்கள்.
வடக்கு இஸ்ரவேல் தேசத்தில் விக்கிரகாராதனை பிரபல்யமாயிருந்தது. எல்லோரோடும் ஒத்துப்போகவேண்டும் என்று இஸ்ரவேல் வம்சத்தார் தீர்மானித்தார்கள்.
கர்த்தரை விட்டு விலகி விக்கிரகங்களைப் பின்பற்றினார்கள். அந்நிய தெய்வங்களுக்கு தூபங்களைக் காட்டினார்கள்.
இது கர்த்தருடைய பார்வையில் அருவருப்பாயிருந்தது. ஆனால் இஸ்ரவேல் வம்சத்தாருடைய பார்வையிலோ, இதுவே பிரீதியாயிருந்தது.
மூன்று வாலிபர்களும் ராஜாவின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து, பொற்சிலையைப் பணிந்துகொண்டால், அவர்களுக்கு மரணதண்டனை கிடைக்காது. அவர்களை எரிகிற அக்கினி சூளையிலே போடமாட்டார்கள்.
அவர்களும் மரித்துப்போகாமல் உயிரோடிருப்பார்கள். இம்மூன்று வாலிபரும் பாபிலோன் தேசத்திலே முக்கியமான உத்தியோகம் பார்க்கிறார்கள்.
இவர்கள் செத்துப்போகாமல், உயிரோடு பிழைத்திருந்தால், பாபிலோன் தேசத்து சிறையிருப்பிலிருக்கிற மற்ற யூதர்களுக்கு, இவர்களால் அநேக உதவிகளை செய்யமுடியும்.
ஆனால் இம்மூன்று வாலிபர்களும் கர்த்தரை மறுதலிக்க விரும்பவில்லை. கர்த்தரை மறுதலிப்பதற்கு உலகப்பிரகாரமான காரணங்களை ஆதாரமாகச் சொல்லக்கூடாது.
நாம் எல்லா சூழ்நிலையிலும் கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாயிருக்கவேண்டும்.
“”நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்” என்று யோசுவா சொன்ன பிரகாரமாக, நாமும் இந்த வாக்கியத்தை விசுவாசத்தோடு சொல்லவேண்டும்.
மூன்று வாலிபர்களும் ராஜாவுக்கு முன்பாக நிற்கிறார்கள். ஆனாலும் தாங்கள் கர்த்தருக்கு முன்பாக நிற்பதையும் இவர்கள் உணருகிறார்கள்.
இவர்கள் ராஜாவிடம் பேசினாலும், இவர்களுடைய வார்த்தைகளை கர்த்தரும் கேட்கிறார். கர்த்தர் அவர்களோடு கூடயிருக்கிறார்.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய மூன்று எபிரெய வாலிபரும், நேபுகாத்நேச்சார் ராஜாவுக்கு முன்பாக,
“”நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை” (தானி 3:18) என்று விசுவாசத்தோடும், தைரியத்தோடும் சொல்லுகிறார்கள்.
இந்த வார்த்தைகளை சொல்லுவதினால், தங்களுக்கு எப்படிப்பட்ட தண்டனை கொடுக்கப்படும் என்பது இம்மூன்று வாலிபர்களுக்கும் நன்றாய்த் தெரியும்.
இந்த மூன்று வாலிபர்கள் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்வதைவிட, கர்த்தருக்காக பாடுகளை அனுபவிப்பதையே தெரிந்துகொள்கிறார்கள்.
நன்மை வரும் என்பதற்காக தீமை செய்யக்கூடாது. ஒரு சிலர் உலகப்பிரகாரமான ஆதாயங்களை எதிர்பார்த்து பாவம் செய்கிறார்கள். இந்த ஆதாயங்கள் நமக்கு மெய்யான ஆசீர்வாதங்களாக இராது. கர்த்தர் கொடுக்கும் ஆசீர்வாதமே நமக்கு மெய்யான ஐசுவரியம்.
கர்த்தர் எரிகிற அக்கினி சூளையிலிருந்து இம்மூன்று எபிரெய வாலிபர்களையும் காப்பாற்றுகிறார். இது மிகப்பெரிய அற்புதம். இதுபோலவே, அவர்கள் பொற்சிலையை பணிந்து கொள்ள மறுத்தது அதைவிட பெரிய அற்புதம்.
கர்த்தரே அவர்களுடைய உள்ளத்தில் விசுவாசத்தையும் தைரியத்தையும் கொடுத்திருக்கிறார். கர்த்தர் நம்மை தீங்குக்கும் விலக்கி பாதுகாக்கிறார். பாவத்திற்கும் விலக்கி பாதுகாக்கிறார்.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரின் பேரில் குற்றஞ்சாட்டப்படுகிறது. (தானி 3:12). தானியேலையும், மற்ற யூதர்களையும் பற்றி இங்கு ஒன்றும் குறிப்பிடவில்லை.
இதற்கான காரணம் தெரியவில்லை. ஒருவேளை இந்தச் சிலையின் பிரதிஷ்டையின்போது அவர்கள் தூராவில் இல்லாமல் வேறு ஏதாவது இடத்தில் இருந்திருக்க வேண்டும்.
யூதருக்கு எதிராகக்கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள்
- 1. அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை.
- 2. அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யவில்லை.
- 3. அவர்கள் நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளவில்லை.
“நேபுகாத்நேச்சார் உக்கிர கோபங்கொள்கிறான் (தானி 3:13). நேபுகாத்நேச்சாரும், யோனாவும் (யோனா 4:1-9) அவசரக்காரர்களாகவும், கோபக்காரர்களாகவும் இருந்தார்கள். வேதாகமத்தில் இவ்விரண்டு பழக்கங்களும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
நேபுகாத்நேச்சார் இம்மூன்று வாலிபரையும் உடனடியாக அக்கினிச்சூளையின் நடுவில் போடுவதற்குப் பதிலாகத் தன்னுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிய அவர்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறான்.
அவர்களிடம் உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் என்று ஆணவமாகப் பேசுகிறான். ராஜா கேட்ட கேள்வி தேவனுக்கும், யூதர் அனைவருக்கும் ஓர் அறைகூவலாகக் கேட்கப்பட்டிருக்கிறது.
இஸ்ரவேலின் தேவன் அவர்களை எரியும் அக்கினிச்சூளையிலிருந்து தப்புவிக்க வல்லவராக இருக்கிறார் என்பதை தேவன்தாமே நிரூபிக்க வேண்டும்.
மூன்று எபிரெய வாலிபரும் மிகவும் கவனமாக ராஜாவிற்கு உத்தரவு கூறுகிறார்கள். அதே வேளையில் தங்களுடைய தேவன் ராஜாவின் கையிலிருந்து தங்களை நீங்கலாக்கி, விடுவிப்பார் என்பதிலும் விசுவாசத்தோடு இருக்கிறார்கள்.
கர்த்தர் தங்களைத் தப்புவித்தாலும், தப்புவிக்காதே போனாலும் ராஜா நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். (தானி 3:16-18).