சங்கீதம் 42 விளக்கம்
சங்கீதம் 42 (கோராகின் புத்திரரிலுள்ள இராகத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் தாவீதின் சங்கீதம்.)
நான்காவது போதக சங்கீதம் – நெருக்கப்படும்போது தேவன் செய்யும் உதவிபற்றிய போதகம்
பொருளடக்கம்
1. ஆத்துமாவின் இரண்டுவிதமான தாகம் – (42:1-2)
2. ஆத்துமாவின் ஏழுவிதமான நெருக்கம் – (42:3-4)
3. ஆத்துமாவிற்கு நான்குவிதமான விண்ணப்பம் – (42:5)
4. நெருக்கத்தில் ஏறெடுக்கப்பட்ட பதினான்கு விதமான ஜெபமும் தேவனிடம் முறையிடுவதும் – (42:6-10)
5. ஆத்துமாவிற்கு நான்குவிதமான விண்ணப்பம் – (42:11)
கோராகின் புத்திரருக்கு (எண் 16; எண் 26:9; எண் 27:3; யூதா 1:11) பத்து சங்கீதங்கள் எழுதப்பட்டிருக்கிறது. அவற்றுள் இது முதலாவது சங்கீதம் (சங் 42; சங் 44-49; சங் 85; சங் 87; சங் 88).
தாவீது நாட்டை விட்டு வெளியேறி சுற்றியலைந்த போது இந்த சங்கீதத்தை இயற்றினார். எருசலேமிற்குத் திரும்பி வர வாஞ்சையாயிருந்தார்.
சங்கீதப்புஸ்தகத்திலுள்ள எல்லா சங்கீதங்களும் தேவனுடைய சமுகத்திற்கு முன்பாக வந்து, கர்த்தரை பயபக்தியாய்த் துதிப்பதற்கும், கர்த்தரை ஆராதிப்பதற்கும் நமக்கு பேருதவியாயிருக்கும்.
வாஞ்சையுள்ள இருதயங்களை கர்த்தர் நிரப்புகிறார். நாம் கர்த்தருடைய சமுகத்தில் பரிசுத்தத்தோடும், வாஞ்சையோடும் வரும்போது நம்முடைய விசுவாசம் பலப்படும். நம்முடைய பக்தி அதிகரிக்கும்.
நாம் கர்த்தரை ஆராதிக்கும்போது அவரை விசுவாசத்தோடும், பயபக்தியோடும் ஆராதிக்கிறோம். நம்முடைய இருதயத்தில் சந்தோஷமும் துக்கமும் இருக்கலாம். சமாதானமும் போராட்டமும் இருக்கலாம்.
நம்முடைய சூழ்நிலை எப்படியிருந்தாலும் கர்த்தருடைய சமுகத்தில் அவரை ஆராதிக்க வரும்போது, தெய்வீக சமாதானம் நம்முடைய இருதயத்தை நிரப்பும். நம்முடைய பிரச்சனைகளிலிருந்து நாம் வெற்றி பெற்றவர்களாக, தேவனை நன்றியோடு ஆராதனை செய்யலாம்.
நம்முடைய ஜீவியத்தில் விசுவாச சிந்தைக்கும் மாம்ச சிந்தைக்கும் எப்போதுமே போராட்டம் உண்டு. மாம்ச சிந்தை எதையுமே நம்ப மறுக்கும். எல்லாவற்றோடும் போராடும்.
அது ஒரு போதும் சமாதானமாகயிராது. விசுவாச சிந்தையோ நம்முடைய போராட்டங்களுக்கெல்லாம் நல்ல பதிலைத் தரும்.
துக்கத்திற்கு மத்தியிலும் நாம் சந்தோஷமாயிருப்பதற்கு உதவிபுரியும். குழப்பங்களும், பிரச்சனைகளும் இல்லாமல் ஆறுதலாயும், சமாதானமாயும் ஜீவிப்பதற்கு நம்முடைய விசுவாசமே பேருதவி செய்யும்.
தேவனுடைய சமுகத்தில் நாம் பயபக்தியாய் வரும்போது, கர்த்தரை நன்றியோடு துதிக்கும்போது, கர்த்தரோடு ஐக்கியமாயிருக்கும்போது நம்முடைய விசுவாசம் ஆரம்பமாகிறது. நம்முடைய இருதயத்தில் விசுவாச சிந்தை பலப்படுகிறது (சங் 42:1,2).
மாம்ச சிந்தையோ நம்முடைய சூழ்நிலைகளில் காணப்படும் பிரச்சனைகளையும், நம்மைச் சுற்றிலும் இருக்கக்கூடிய இருட்டையும் பெரிதுபடுத்திக் காண்பிக்கும்.
கர்த்தர் இதற்கு முன்பு நமக்கு உதவிகளும் ஒத்தாசைகளும் செய்திருந்தாலும், நம்முடைய மாம்ச சிந்தை அதை மறந்துவிடும். நம்மை துக்கத்தில் மூழ்கச் செய்து விடும் (சங் 42:3,4).
நம்முடைய ஆத்துமாவில் எவ்வளவு பெரிய போராட்டங்களும், நெருக்கங்களும், வேதனைகளும் இருந்தாலும் நம்முடைய விசுவாச சிந்தை அவையெல்லாவற்றையும் அமைதிப்படுத்தும். நம்முடைய ஆத்துமாவுக்கு சந்தோஷமும் சமாதானமும் உண்டாகும் (சங் 42:5).
விசுவாசத்தினால் நமக்கு சந்தோஷமும் சமாதானமும் ஏற்பட்டாலும், நம்முடைய மாம்சசிந்தை அந்த சந்தோஷத்தையும் சமாதானத்தையும் நம்மை விட்டு நீக்கிப்போடும்.
நமக்குள் வெளிச்சம் நீங்கி மறுபடியும் இருள் உண்டாகும். சந்தோஷம் நீங்கி துக்கம் உண்டாகும் (சங் 42:6,7).
விசுவாச சிந்தை நம்முடைய இருதயத்தைத் தாங்குகிறது. கர்த்தருடைய கிருபையினால் இருள் நீங்கி நமக்கு வெளிச்சம் உண்டாகும் என்னும் நம்பிக்கையை நமக்குள் உறுதிப்படுத்துகிறது (சங் 42:9).
மாம்சசிந்தையோ மறுபடியும் நம்மை குழப்பத்தில் சிக்க வைத்து, நம்மைப் புலம்ப வைத்துவிடும் (சங் 42:10).
நம்முடைய ஆத்துமாவுக்குள் விசுவாச சிந்தைக்கும், மாம்ச சிந்தைக்கும் போராட்டம் உண்டானாலும், முடிவில் விசுவாச சிந்தையே வெற்றி பெறும். நாம் கர்த்தரை விசுவாசிக்கும்போது நம்முடைய உள்ளத்திலுள்ள குறைகளெல்லாம் நீங்கும்.
நாற்பத்து இரண்டாவது சங்கீதத்தின் தலைப்பில், இந்த சங்கீதத்தின் ஆசிரியரைப்பற்றிச் சொல்லப்படவில்லை. ஒருவேளை தாவீது இந்த சங்கீதத்தை எழுதியிருக்கலாம். சவுல் தாவீதைத் துன்பப்படுத்தியபோது, அல்லது அப்சலோம் தாவீதுக்கு விரோதமாய் கலகம்பண்ணியபோது, தாவீது இந்த சங்கீதத்தை எழுதியிருக்கலாம்.
இந்த சூழ்நிலையில் தாவீதுக்குப் பிரச்சனை உண்டாயிற்று. அவருடைய சத்துருக்கள் அவரை நெருக்கினார்கள்.
தாவீதால் பரிசுத்த ஸ்தலத்திற்குப் போகமுடியவில்லை. தாவீதால் மற்ற பரிசுத்தவான்களோடு சேர்ந்து, கர்த்தருடைய ஆலயத்தில் கர்த்தரை ஆராதிக்க முடியவில்லை. தாவீது பிரச்சனையினிமித்தமாய் எருசலேம் நகரத்தைவிட்டே ஓடி ஒளிந்துகொள்ளவேண்டியதாயிற்று.
தாவீதின் வாஞ்சையும் தாகமும் சங்கீதம் 42 : 1-5
என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக்கதறுகிறது (சங் 42:1).
நாம் தேவனிடத்தில் பரிசுத்தமாய் அன்புகூரவேண்டும். பரிசுத்த அன்பே நம்முடைய விசுவாச ஜீவியத்திற்கு ஜீவனும், ஆத்துமாவாகவும் இருக்கிறது.
நம்முடைய பரிசுத்தமான அன்பை தேவனிடத்தில் பல வழிகளில் வெளிப்படுத்தலாம். அப்படிப்பட்ட வழிகளில் சில இந்த வசனப்பகுதியில் எழுதப்பட்டிருக்கிறது.
பரிசுத்த அன்பு தாகமாயிருக்கும். ஒரு பறவை உயரத்தில் பறந்துபோகும்போது அதன் செட்டைகளுக்கு வேதனை உண்டாகும்.
ஆனாலும் அந்தப் பறவைக்கு உயரப்பறக்க வேண்டும் என்னும் வாஞ்சை இருக்கும்போது, தன்னுடைய செட்டைகளின் வேதனைகளைத் தாங்கிக்கொண்டு, உயர உயர பறந்துகொண்டேயிருக்கும்.
தேவனிடத்தில் நாம் வைத்திருக்கிற பரிசுத்த அன்புக்கும் தாகமுண்டாகும். கர்த்தர்மீது நம்முடைய அன்பு அதிகரிக்கும்போது, உயரும் போது, நம்முடைய தாகமும் அதிகரிக்கும். நம்முடைய ஏக்கமும், தாகமும் கர்த்தரைப்பற்றியதாகவே இருக்கும்.
தாவீது கர்த்தர்மீது பரிசுத்த அன்பு வைத்திருக்கிறார். ஆகையினால் அவருடைய ஆத்துமா கர்த்தரை வாஞ்சித்துக் கதறுகிறது.
அவருடைய ஜீவியத்தில் கர்த்தரைத் தவிர வேறு யாரும் உயரத்தில் இல்லை. அவர் கர்த்தருக்கே முதல் இடத்தையும், முக்கியமான இடத்தையும், உயர்ந்த இடத்தையும் கொடுத்திருக்கிறார்.
அவர் தன்னுடைய ஜீவியத்தில் கர்த்தருக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமென்று தாகத்தோடும், வாஞ்சையோடும் இருக்கிறார்.
தாவீதுக்கு தேவன்மீது பரிசுத்தமான அன்பு இருக்கிறது. தேவனுடைய சமுகத்தில் இன்னும் அதிகமாய் கிட்டிச் சேரவேண்டுமென்று தாவீது விரும்புகிறார். தன்னுடைய ஏக்கத்தையும், வாஞ்சையையும், தாவீது கர்த்தரிடத்தில் சொல்லுகிறார்.
“”தேவனே என் ஆத்துமா, உம்மை வாஞ்சித்து கதறுகிறது” என்று தாவீது தன்னுடைய அன்பை கர்த்தரிடத்தில் வெளிப்படுத்துகிறார்.
தாவீது இப்போது எருசலேம் நகரத்தில் இல்லை. அவருடைய சத்துருக்கள் அவரை நெருக்குகிறார்கள். அவருடைய ஜீவனுக்கு ஆபத்து உண்டாயிற்று.
இதனிமித்தமாய் தாவீது எருசலேம் நகரத்தைவிட்டு, யோர்தான் தேசத்திற்கு வந்திருக்கிறார். இங்கு சத்துருக்களுக்குப் பயந்து ஒளிந்துகொண்டிருக்கிறார். யோர்தான் தேசம் எருசலேம் நகரத்திலிருந்து அதிக தூரத்திலுள்ளது.
தாவீது இப்போது தேவனுடைய வீட்டிற்கு அருகாமையில் இருக்காமல், தூரத்திலுள்ள யோர்தான் தேசத்திலிருக்கிறார். தாவீதால் தேவனுடைய ஆலயத்திற்குப் போய், அங்கு அவரை ஆராதனை செய்ய முடியவில்லை.
கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை தமது சித்தத்தின் பிரகாரமாய் வழிநடத்துகிறார். நமக்கு தேவனுடைய கிருபையும் இரக்கமும் தேவை. நாம் ஒவ்வொரு நாளும் தேவனுடைய கிருபையையும் இரக்கத்தையும் உணரவேண்டும்.
சில சமயங்களில் தேவன் தம்முடைய கிருபையையும் இரக்கத்தையும் நமக்கு குறைவாக வெளிப்படுத்துவார்.
அப்போதுதான் அவருடைய கிருபையின் முக்கியத்துவம் நமக்குத் தெரியும். தேவனுடைய கிருபை நமக்கு அவசியம் வேண்டும் என்பதை நாம் அறிந்துகொள்வோம்.
அதிகபசியோடிருக்கிறவர்கள்தான் சரியாக போஜனம்பண்ணுவார்கள். தேவனுடைய கிருபையின்மீதும், இரக்கத்தின்மீதும் நமக்கு தாகம் உண்டாகும்போதுதான், அவற்றின் மதிப்பும், முக்கியத்துவமும் நமக்குப் புரியும்.
இந்தச் சத்தியத்தை நமக்கு உணர்த்துவதற்காக, தேவன் சில சமயங்களில் தம்முடைய கிருபையையும் இரக்கத்தையும் நமக்கு அதிகமாய் வெளிப்படுத்தாமல் குறைத்துக்கொள்கிறார்.
தாவீதுக்கு இப்படிப்பட்ட அனுபவம் உண்டாயிருக்கிறது. தாவீதுக்கு தேவனுடைய கிருபையும் இரக்கமும் குறைந்துபோயிற்று.
இதனால் தாவீது தேவன்மீது தாகத்தோடும், வாஞ்சையோடும் இருக்கிறார். தாவீதின் ஆத்துமா தேவனை வாஞ்சித்துக் கதறுகிறது.
தாவீதின் தாகமும் வாஞ்சையும் மிகவும் அதிகமாயிருக்கிறது. ஒரு சமயம் தாவீதுக்கு பெத்லகேமிலுள்ள தண்ணீரின்மேல் தாகமுண்டாயிற்று.
இப்போது தாவீதின் ஆத்துமாவில் ஏற்பட்டிருக்கிற தாகம், பெத்லகேமிலுள்ள தண்ணீரின்மேல் உண்டான தாகத்தைவிட அதிகமானது. மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தாவீதின் ஆத்துமா தேவனை வாஞ்சித்து கதறுகிறது.
வனாந்தரமான வெளியில், வெயிலின் உஷ்ணம் அதிகமாயிருக்கும்போது, நிலமும் தண்ணீரில்லாமல் வறட்சியாயிருக்கும்போது, மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறும். தன்னுடைய தாகத்தைத் தீர்ப்பதற்காக பரிதாபமாக கதறும்.
நீரோடைக்காக ஏங்கி தவிக்கும். தாவீதின் ஆத்துமா அப்படிப்பட்ட பெரிய வறட்சியில் இருக்கிறது. தாவீது தேவனோடு ஐக்கியமாயிருக்கவேண்டுமென்று வாஞ்சிக்கிறார். இதினிமித்தமாய் தாவீதின் ஆத்துமா தேவனை நோக்கி வாஞ்சித்து கதறுகிறது.
தீவிரமான வாஞ்சையின் அம்சங்கள்
- 1. என் ஆத்துமா வாஞ்சித்துக் கதறும் (சங் 42:1)
- 2. நாவு தாகத்தால் வறளும் (ஏசா41:17-18)
- 3. பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா தொய்ந்ததாகவும் அலைந்து திரியும் (சங் 107:5)
- 4. வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது (சங் 63:1; சங் 143:6).
- 5. ஜெபத்தில் ஆத்துமாவை ஊற்றும் (சங் 42:4)
- 6. என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக் கொண்டிருக்கிறது (சங் 63:8)
- 7. என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனைப் பற்றிக் கொள்ளும்
- 8. என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீரசத்தமிடுகிறது (சங் 130:5-6).
- 9. அழுதுகொண்டு போகும் (சங் 42:3; சங் 126:5-6)
- 10. புதையல்களைத் தேடுகிறது போல் தேடும் (நீதி 2:3-5)
சங்கீதம் 42-இல் கூறப்பட்டுள்ள காரியங்கள்
1. வாஞ்சித்தல் (சங் 42:1)
2. உருகுதல் (சங் 42:4)
3. தயங்குதல் (சங் 42:5)
4. துதித்தல் (சங் 42:11)
என் ஆத்துமா தேவன்மேல் தாகமாயிருக்கிறது
என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? (சங் 42:2)
தேவனுடைய ஆலயம் எருசலேமிலிருக்கிறது. தாவீதோ இப்போது யோர்தான் தேசத்திலிருக்கிறார். தாவீதுக்கு தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதற்கு முன்பு அவர் தேவனுடைய ஆலயத்திற்குப்போய், அவருடைய சந்நிதியில் நின்று, அவரை பயபயக்தியாய் ஆராதனை செய்தார். இப்போது தாவீதின் இருதயத்தில் தேவாலயத்தைப்பற்றிய நினைவும், தேவனுடைய சந்நிதியைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.
அவருடைய ஆத்துமா தேவன்மேல் தாகமாயிருக்கிறது. தேவனுடைய சந்நிதியில் தாவீது மறுபடியும் வந்து நிற்கவேண்டுமென்று ஏங்குகிறார். அதை வாஞ்சிக்கிறார்.
தாவீது தேவனுடைய பிரமாணங்களில் பிரியமாயிருக்கிறார். தேவன் இல்லாத பிரமாணம் உலகப்பிரகாரமான சட்டதிட்டங்களாகவே இருக்கும்.
தாவீதுக்கு அப்படிப்பட்ட சட்டதிட்டங்களின்மேல் பிரியமில்லை. அவர் தேவனுடைய பிரமாணத்திலேயே பிரியமாயிருக்கிறார்.
தாவீதின் ஆத்துமா தேவனை வாஞ்சித்து கதறுகிறது. அவருடைய ஆத்துமா தேவன்மேல் தாகயிருக்கிறது.
ஜீவனுள்ள ஆத்துமா ஜீவனுள்ள தேவனிடத்தில் வாசம்பண்ணுவதையே விரும்பும். தேவனுடைய சமுகத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும், ஜீவனுள்ள ஆத்துமாவுக்கு சமாதானமோ, ஆறுதலோ, சந்தோஷமோ கிடைக்காது.
தாவீது இப்போது யோர்தான் தேசத்திலிருந்தாலும், அவருடைய ஆத்துமா ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது. தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்கவேண்டுமென்று தாவீது வாஞ்சையோடிருக்கிறார்.
தாவீது தேவனுடைய சமுகத்தில் தன்னைத் தெரியப்படுத்த விரும்புகிறார். தன்னுடைய ஆராதனையையும், பக்தியையும் கர்த்தருடைய சமுகத்தில் ஏறெடுக்க விரும்புகிறார். கர்த்தருக்குப் பணிவிடை செய்ய விரும்புகிறார்.
தேவனுக்கு முன்பாக தன்னுடைய உத்தமத்தை வெளிப்படுத்த விரும்புகிறார். தேவனுக்கு ஊழியம் செய்ய விரும்புகிறார்.
ஒருவேலையாள் தன் எஜமானுக்கு முன்பாக நின்று பணிவிடை செய்ய விரும்புவதுபோல, தாவீது தேவனுடைய சந்நிதியில் வந்து நின்று, அவருக்கு ஊழியம் செய்து, அவரை ஆராதிக்க வேண்டுமென்று விரும்புகிறார்.
துன்மார்க்கர் தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பதற்கு விரும்பமாட்டார்கள். மாய்மாலக்காரருக்கு தேவனுடைய சமுகத்தில் சந்தோஷமும் இருக்காது, சமாதானமும் இருக்காது.
தேவனிடத்தில் பரிசுத்தமாய் அன்புகூருகிறவர்கள் மாத்திரமே, தேவனுடைய சந்நிதியில் சந்தோஷமாய் நிற்பார்கள்.
தாவீதின் ஜீவியத்தில் மாய்மாலம் இல்லை. கர்த்தருக்கு முன்பாக அவர் உத்தமராயிருக்கிறார். ஆகையினால் தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பதை வாஞ்சையாயும், தாகத்தோடும் விரும்புகிறார்.
நாம் எதன்மேல் தாகமாயிருக்க வேண்டும்
1. ஜீவனுள்ள தேவன் மேல் (சங் 42:2; சங் 63:1; சங் 143:6)
2. நீதியின் மேல் (மத் 5:6)
3. இரட்சிப்பிற்கான ஜீவத்தண்ணீர் (யோவான் 4:14; யோவான் 6:35; வெளி 22:17; ஏசா 55:1-3)
4. ஞானம், புத்தி (நீதி 2:1-11)
5. பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் (யோவான் 7:37-39)
என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று
உன் தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால், இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று (சங் 42:3).
தாசனாகிய தாவீது இப்போது யோர்தான் தேசத்திலிருப்பதினால், அவர் தேவனுடைய சந்நிதியிலிருந்து பிரிந்திருக்கிறார். தாவீது தேவனிடத்தில் பரிசுத்தமாய் அன்புகூருவதினால், அந்த அன்பு அவருக்குள் துக்கமாயிற்று.
தேவனுடைய சமுகத்தைவிட்டு தான் பிரிந்திருப்பதற்காக, தாவீது மிகுந்த வேதனைப்படுகிறார். இரவும் பகலும் அவருடைய கண்ணீரே அவருக்கு உணவாயிற்று.
தாவீது தன்னுடைய மனவிருப்பத்தின்படி தேவனுடைய சந்நிதியிலிருந்து விலகிப்போகவில்லை. தாவீது எருசலேம் நகரத்திலிருந்து துரத்தப்பட்டிருக்கிறார். வேறு வழியில்லாமல், அவர் தேவனுடைய சந்நிதியிலிருந்து பிரிந்திருக்கிறார்.
இந்த தாவீது இஸ்ரவேல் தேசத்திற்கு ராஜாவாக அபிஷேகம்பண்ணப்பட்டவர். அவர் ஒரு ராஜரீகதீர்க்கதரிசி. ஆனாலும் இப்போது அவர் அழுகிற தீர்க்கதரிசியாகயிருக்கிறார். தேவனுடைய ஆலயத்தில் அவருக்கு ஆறுதல் கிடைக்கவில்லை.
தாவீதால் தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்கமுடியவில்லை. இந்த பிரிவின் நிமித்தமாய் தாவீது மனங்கசந்து அழுகிறார். இரவும் பகலும் கண்ணீர் விடுகிறார்.
கண்ணீரே தாவீதுக்கு உணவாயிற்று. தாவீதின் போஜனத்தோடு கண்ணீரும் சேர்ந்திருக்கிறது என்று சொல்லாமல், கண்ணீரே அவருக்கு உணவாயிற்று என்று எழுதப்பட்டிருக்கிறது. தாவீது தன்னுடைய கண்ணீரையே புசிக்கிறார்.
அதையே பானம்பண்ணுகிறார். தன்னுடைய கண்ணீரையே விருந்தாக போஜனம்பண்ணுகிறார்.
தாவீதின் சத்துருக்கள் அவருக்கு விரோதமாய்த் தூஷண வார்த்தைகளைச் சொல்லுகிறார்கள். “”உன் தேவன் எங்கே” என்று அவர்கள் நாள்தோறும் தாவீதினிடத்தில் கேட்கிறார்கள்.
தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியே அவருடைய பிரசன்னத்திற்கு அடையாளம். தாவீது இப்போது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு அருகிலிராமல், தூரத்திலிருக்கிறார். இதனால் தாவீது தேவனை விட்டுப் பிரிந்துபோய்விட்டார் என்று அவருடைய சத்துருக்கள் அவரிடம் சொல்லுகிறார்கள்.
நம்மிடத்திலுள்ள வேதாகமத்தை ஒருவர் நம்மிடமிருந்து எடுத்துச் சென்றுவிட்டால், தேவனுடைய பிரசன்னம் நம்மைவிட்டு நீங்கிப்போய்விடும் என்று சொல்லமுடியாது.
நம்முடைய ஊழியக்காரர்களைவிட்டு நாம் பிரிந்துபோகவேண்டியது வரலாம். நாம் கூடிவந்து ஆராதிக்கிற சபையை விட்டுப் பிரிந்துபோகக்கூடிய சூழ்நிலை உண்டாகலாம்.
இவை நம்மைவிட்டுப் போவதினால், தேவனுடைய பிரசன்னமும் நம்மைவிட்டுப்போய்விடும் என்று சொல்லக்கூடாது. எந்தக் காரியமும், எந்த சூழ்நிலையும் தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரித்து விடாதவாறு, நாம் தேவனிடத்தில் ஐக்கியமாயிருக்கவேண்டும்.
தேவன் தாமே தம்முடைய கிருபையினால் நமக்கு வேதாகமத்தையும், நல்ல ஊழியக்காரர்களையும், நல்ல சபைகளையும் கொடுத்திருக்கிறார்.
நாம் தேவனோடு கட்டப்படுவதற்கு இவையெல்லாம் நமக்கு உதவியாயிருக்கும். நாம் தேவனுடைய ஐக்கியத்தில் நிலைத்திருக்கவேண்டும். இதுவே நமக்கு முக்கியம்.
நம்முடைய தேவன் எங்கே இருக்கிறார் என்பது நமக்குத் தெரிந்திருக்கவேண்டும். அவரை எங்கே காணலாம் என்பதும் நமக்குத் தெரிந்திருக்கவேண்டும்.
தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டி எங்கே இருக்கிறது என்பது நமக்கு தெரியாவிட்டாலும், நம்முடைய தேவன் எங்கே இருக்கிறார் என்பதை நாம் அறிந்திருக்கவேண்டும்.
இரண்டுபேர் மூன்றுபேர் தேவனுடைய நாமத்தில் எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவே நம்முடைய தேவன் இருக்கிறார். பரலோகமே நாம் செல்ல வேண்டிய இடம். தேவன் இருக்கும் இடமே நமக்குப் பரலோகம்.
தாவீது இப்போது யோர்தான் தேசத்திலே இருக்கிறார். கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டி இப்போது அவரோடு கூடயில்லை. கர்த்தரும் தாவீதை உடனே விடுவித்து, எருசலேமுக்கு அழைத்துச் செல்லவில்லை. இதனால்,
“”உன் தேவன் எங்கே” என்று அவருடைய சத்துருக்கள் அவரிடத்தில் சொல்லுகிறார்கள். கர்த்தர் அவரை கைவிட்டுவிட்டார் என்று சொல்லி அவருடைய மனதை வேதனைப்படுத்துகிறார்கள்.
இப்படி சொல்லுகிறவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள். தாவீதின் தேவன் அவரோடு கூடவே இருக்கிறார். தாவீது வனாந்தரத்தில் இருந்தாலும், அவர் அரண்மனையிலிருந்தாலும், கர்த்தருடைய சமுகம் அவரோடு கூடவே இருக்கிறது.
தாவீதின் சத்துருக்கள் அவருக்கு வேதனை உண்டாகுமாறு பேசுகிறார்கள். நம்முடைய ஆவிக்குரிய சிநேகிதர்கள் நம்மைவிட்டுப் பிரிந்துபோய்விட்டால், நம்முடைய கர்த்தரும் நம்மை விட்டு விலகிப்போய்விடுவார் என்று நாம் நினைக்கக்கூடாது.
நம்முடைய சிநேகிதர்களைவிட நமக்கு கர்த்தரே முக்கியம். சிநேகிதரின் ஐக்கியத்தைவிட, கர்த்தருடைய ஐக்கியமும், அவருடைய பிரசன்னமும், அவருடைய சந்நிதியுமே நமக்கு முக்கியம்.
தேவனிடத்தில் நாம் வைத்திருக்கிற நம்பிக்கை உறுதியாயிருக்கவேண்டும். நம்முடைய விசுவாசத்தை சூழ்நிலைகளோ, சத்துருக்களோ, வேறு எந்த வல்லமைகளோ அசைத்துவிடக்கூடாது. நம்முடைய விசுவாசம் நம்மைவிட்டு விலகிப்போய்விட்டால் நமக்குள் துக்கமும், வேதனையும்தான் இருக்கும்.
என் உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது
முன்னே நான் பண்டிகையை ஆசரிக்கிற ஜனங்களோடே கூட நடந்து, கூட்டத்தின் களிப்பும் துதியுமான சத்தத்தோடே தேவாலயத்திற்குப் போய்வருவேனே; இவைகளை நான் நினைக்கும்போது என் உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது (சங் 42:4).
தாவீது தன்னுடைய பூர்வநாட்களை நினைத்துப் பார்க்கிறார். அப்போது அவருடைய உள்ளம் அவருக்குள்ளே உருகுகிறது. அவருடைய இருதயம் கரைந்துபோகிறது. தன்னுடைய பூர்வகாலத்து நினைவுகளினால் தாவீதின் இருதயம் ஏக்கத்தினால் உடைந்துபோகிறது.
தாவீது வருத்தத்தோடு தன்னுடைய ஆத்துமாவைத் தனக்குள்ளே ஊற்றுகிறார். அதன்பின்பு தாவீது தன்னுடைய வருத்தத்தை தேவனுடைய சமுகத்தில் ஜெபசிந்தையோடு ஊற்றுகிறார்.
தாவீதின் பூர்வகாலத்து நினைவுகள் அவருக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது. தாவீது பூர்வநாட்களில் பண்டிகையை ஆசரிக்கிற ஜனங்களோடே கூட நடப்பது வழக்கம்.
அவர் கூட்டத்தின் களிப்பும் துதியுமான சத்தத்தோடே தேவாலயத்திற்குப் போய்வருவார். தாவீது இவைகளையெல்லாம் நினைத்துப் பார்க்கிறார். அப்போது அவருடைய உள்ளம் அவருக்குள்ளே உருகுகிறது.
தாவீது இப்போது யோர்தான் தேசத்திலே இருக்கிறார். இதற்கு முன்பு அவர் எருசலேமிலே அவருடைய அரண்மனையிலிருந்தார். அந்த சந்தோஷமான நாட்களை தாவீது இப்போது நினைத்துப் பார்க்கிறார்.
தாசனாகிய தாவீது தன்னுடைய அரண்மனையிலிருந்து தேவாலயத்திற்கு அடிக்கடி போவார். ஆனால் இப்போதோ தாவீதால் எங்கும் போகமுடியவில்லை.
தாவீது எருசலேமிலே தன்னுடைய வீட்டிலிருந்தபோது தேவனுடைய வீடு ஒரு கூடாரத்தில்தான் இருந்தது. சவுல் தாவீதைத் துன்பப்படுத்தியபோது தேவனுடைய உடன்படிக்கை பெட்டி அபினதாபின் வீட்டிலிருந்தது (2சாமு 6:3).
அப்போது கர்த்தருக்கு தேவாலயம் கட்டப்படவில்லை. உடன்படிக்கை பெட்டியும் ஒரு தனிநபருடைய வீட்டில்தான் இருந்தது. தேவனுடைய பெட்டி சாதாரண இடத்திலிருந்தாலும், அங்கும் தேவனுடைய பிரசன்னம் வெளிப்பட்டது.
தாவீது தேவனுடைய பிரசன்னம் வெளிப்பட்ட பரிசுத்த ஸ்தலத்தை இப்போது நினைத்துப் பார்க்கிறார். அது சாதாரணமான இடமாகயிருந்தாலும், தாவீது அதை நினைத்து தனக்குள்ளே உருகுகிறார்.
தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டி அவருடைய தெய்வீக பிரசன்னத்திற்கு பரிசுத்தமான அடையாளம். அந்தப் பெட்டியிருந்த ஸ்தலத்திற்கு தாவீது பண்டிகை ஆசரிக்கிற ஜனங்களோடு கூட நடந்துபோவது வழக்கம்.
தாவீது ராஜாவாகயிருந்தாலும், சாதாரண ஜனங்களோடு கூட நடந்துபோய், கர்த்தருக்கு பண்டிகையை ஆசரித்தார்.
சாதாரண ஜனங்களோடு இருந்தது தாவீதுக்கு அவமானமாய்த் தெரியவில்லை. அது தன்னுடைய கண்ணியத்திற்கு குறைவானது என்றும் அவர் நினைக்கவில்லை.
பண்டிகையை ஆசரிப்பது தாவீதுக்கு சந்தோஷமான அனுபவம். தான் தனியாக பண்டிகையை ஆசரியாமல், அதை ஆசரிக்கிற ஜனங்களோடே கூட நடப்பது தாவீக்கு பேரானந்தமாக இருக்கிறது.
அந்த சம்பவங்களையெல்லாம் தாவீது இப்போது நினைத்துப் பார்க்கிறார். அதை நினைக்கும்போது அவருடைய உள்ளம் அவருக்குள்ளே உருகுகிறது.
தாசனாகிய தாவீது தேவாலயத்திற்கு போகும்போது சந்தோஷமாய்ப்போவார். ஜனங்களுடைய கூட்டத்தின் களிப்பும் துதியுமான சத்தத்தோடே தேவாலயத்திற்குப் போய்வருவார். தாவீதின் இருதயத்தில் சந்தோஷமும் துதியும் இருந்தது. அது மாத்திரமல்ல, தாவீது துதியின் சத்தத்தை தனக்குள்ளே அடக்கி வைக்கவில்லை.
தாவீது தன்னுடைய வாயை விரிவாய்த் திறந்து கர்த்தரைத் துதியின் சத்தத்தோடே ஸ்தோத்திரம்பண்ணுகிறார்.
தேவ தாசனாகிய தாவீது எதைச் செய்தாலும் வீணான காரியத்தைச் செய்யமாட்டார். அவர் தேவாலயத்திற்கு பரிசுத்த நாட்களை ஆசரிப்பதற்காகப் போகிறார். கர்த்தருடைய பண்டிகையை ஆசரிப்பதற்காக அவர் தேவாலயத்திற்குப் போகிறார்.
ஜனங்களை வேடிக்கை பார்ப்பதற்காகவோ, பொழுதுபோக்குவதற்காகவோ தாவீது தேவாலயத்திற்குப் போவதில்லை. அவர் பண்டிகையை ஆசரிப்பதற்கும், கர்த்தரைத் துதிப்பதற்குமே தேவாலயத்திற்குப் போய்வருகிறார்.
அந்த நாட்களையெல்லாம் தாவீது இப்போது நினைவுகூருகிறார். அந்த நாட்களை நினைக்கும்போது தாவீதின் உள்ளம் அவருக்குள்ளே உருகுகிறது.
சங்கீதம் 42-இல் தாவீதைப் பற்றி கூறப்பட்டிருக்கிற தனிப்பட்ட குறிப்புகள்
1. என் ஆத்துமா (சங் 42:1)
2. என் கண்ணீர் (சங் 42:4)
3. என் ஆகாரம்
4. என் தேவன் (சங் 42:6)
5. என் ஜெபம் (சங் 42:8)
6. என் ஜீவன்
7. என் கன்மலை (சங் 42:9)
8. என் எலும்புகள் (சங் 42:10)
9. என் சத்துருக்கள்
10. என் முகம் (சங் 42:11; சங் 43:5; சங் 44:3; சங் 89:15; சங் 90:8)
நான் இன்னும் அவரைத் துதிப்பேன்
என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன் (சங் 42:5).
தாவீது தன்னுடைய ஆத்துமாவோடு பேசுகிறார். “”என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்” என்று தாவீது தன்னுடைய ஆத்துமாவிடம் கேட்கிறார்.
தாவீதின் கலக்கம் மிகவும் அதிகமாயிருக்கிறது. அவர் கலங்குவதற்கு காரணமுண்டு. பூர்வநாட்களில் அவர் தேவாலயத்திற்கு சந்தோஷமாய்ப் போய்வந்தார்.
இப்போது கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய் அவரைத் துதிக்க முடியவில்லையென்றும், கர்த்தருடைய பிள்ளைகளோடு பண்டிகையை ஆசரிக்க முடியவில்லையென்றும் தாவீது வருத்தப்படுகிறார்.
தாவீதின் கலக்கத்திற்கு காரணம் சரியாகயிருந்தாலும், ஒரு குறிப்பிட்ட அளவு வரையில்தான் அவரால் கலக்கத்தைத் தாங்கிக்கொள்ள முடியும். நம்முடைய வருத்தத்திற்கான காரணம் எதுவாகயிருந்தாலும், ஒருகுறிப்பிட்ட அளவுக்குமேல் வருத்தப்படக்கூடாது.
அதிகமான வருத்தம் நம்முடைய ஆத்துமாவை சோர்வடையச் செய்துவிடும். வருத்தம் நம்முடைய ஆவியை மேற்கொள்ளும். நாம் உலகத்தை கலக்குகிறவர்களாக இருக்கவேண்டும். உலகத்தினால் கலங்குகிறவர்களாக இருக்கக்கூடாது.
தன்னுடைய கவலையிலிருந்தும், வருத்தத்திலிருந்தும், கலக்கத்திலிருந்தும் எப்படி விடுதலை பெறுவது என்று தாவீதுக்குத் தெரியவில்லை. ஆகையினால் தாவீது தன்னுடைய ஆத்துமாவிடம் நேரடியாகப் பேசுகிறார். தன்னுடைய இருதயத்தோடு பேசுகிறார்.
“”என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்” என்று தாவீது தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறார். தாவீதின் இருதயத்தில் சமாதானமில்லை. அது குழப்பமடைந்திருக்கிறது. கலங்கிப்போயிருக்கிறது.
“”உனக்கு ஏன் இவ்வளவு கலக்கமுண்டாயிற்று” என்று தாவீது தன்னுடைய இருதயத்திடம் கேட்கிறார்.
நம்முடைய ஜீவியத்திலும் நமக்கு கலக்கம் வருகிறது. அதற்கான காரணம் என்னவென்று நம்மால் கண்டுபிடிக்க முடிவதில்லை. பல சமயங்களில் நம்முடைய கலக்கத்திற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே, நம்முடைய கலக்கம் நம்மைவிட்டு நீங்கிப்போய்விடுகிறது.
தாவீது தனக்குள்ளே தியங்குகிறார். தன்னுடைய ஆத்துமாவில் தாவீது சோர்ந்துபோயிருக்கிறார். இந்த சோர்வுக்கான காரணமும் அவருக்குத் தெரியவில்லை. இதற்கு காரணம் உண்டா என்பதுகூட அவருக்குத் தெரியாது.
நம்முடைய இருதயம் சோர்ந்துபோயிருக்கும்போது, நம்முடைய ஆத்துமா கலங்கியிருக்கும்போது, நம்முடைய பாரத்தையெல்லாம் கர்த்தர்மேல் வைத்துவிடவேண்டும். அவர் நம்மை ஆதரிப்பார் என்று கர்த்தருக்குள் விசுவாசிக்கவேண்டும்.
நம்முடைய பிரச்சனைகளுக்கு என்ன காரணம் என்று நமக்குள்ளே யோசித்து கலங்கக்கூடாது. நம்முடைய பிரச்சனைகளை எல்லோரிடமும் சொல்லி புலம்பி ஆறுதல் பெற முயற்சிபண்ணக்கூடாது.
நாம் எல்லா சூழ்நிலையிலும் கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கவேண்டும். நம்முடைய விசுவாசம் கர்த்தருக்குள் உறுதியாயிருக்கவேண்டும். நம்முடைய உடைந்த இருதயத்திற்கும், கலங்கிய ஆத்துமாவுக்கும், நாம் கர்த்தர்மேல் வைத்திருக்கிற உறுதியான விசுவாசமே சரியான ஒளஷதம். நமக்குள் விசுவாசம் இருக்கும்போது கவலைகளும் கலக்கங்களும் நம்மைவிட்டு நீங்கிப்போகும்.
நம்முடைய கவலைகளையும், கலக்கங்களையும், வருத்தங்களையும் நினைத்து நாம் கலங்கும்போது, கர்த்தரிடத்தில் உறுதியான விசுவாசம் வைத்து நம்மைப் பெலப்படுத்திக்கொள்ளவேண்டும்.
நம்முடைய ஆத்துமா கவலையில் மூழ்கும்போது, நம்முடைய விசுவாசம் அந்த கவலையிலிருந்து நம்மைத் தூக்கி வெளியே எடுக்கும். நாம் தேவனுடைய வல்லமையையும் அவருடைய வாக்குத்தத்தையும் விசுவாசிக்கவேண்டும்.
நமக்கு எவ்வளவு துன்பங்கள் இருந்தாலும், எவ்வளவு கவலைகள் இருந்தாலும், நம்முடைய உதவிக்கு நாம் கர்த்தரையே இறுகப்பற்றிக்கொள்ளவேண்டும்.
நாம் கவலையில் மூழ்கும்போது, நம்முடைய தலை விசுவாசத்தோடு கர்த்தரை நோக்கிப் பார்க்கவேண்டும். நம்முடைய தலை தண்ணீருக்கு மேலே இருக்கும்வரையிலும், நாம் தண்ணீருக்குள் மூழ்கிப்போவதில்லை. நம்முடைய விசுவாசமே நம்முடைய தலையை கர்த்தருக்கு நேராக தூக்கி நிறுத்துகிறது.
தாவீது மிகுந்த கலக்கத்திலிருந்தாலும், அவர் கர்த்தரிடத்தில் விசுவாசத்தோடும் இருக்கிறார். அவர் தன்னுடைய ஆத்துமாவிடம்,
“”நீ ஏன் கலங்குகிறாய்?, ஏன் எனக்குள் தியங்குகிறாய்” என்று கேள்வி கேட்டவர், இப்போது தன்னுடைய ஆத்துமாவுக்கு “”தேவனை நோக்கிக் காத்திரு” என்று கட்டளை கொடுக்கிறார்.
கர்த்தருடைய சமுகத்து இரட்சிப்பினிமித்தம் தாவீது கர்த்தரைத் துதிக்கிறார். “”நான் இன்னும் அவரைத் துதிப்பேன்” என்று தாவீது விசுவாசத்தோடு சொல்லுகிறார்.
கர்த்தரைத் துதிக்கும்போது தேவகிருபை பெருகும். தாவீது கர்த்தரை இன்னும் அதிகமாய்த் துதிக்கும்போது அவருடைய ஆத்துமாவில் ஒரு மாற்றமுண்டாயிற்று.
அவருடைய கலக்கம் அவரை விட்டு நீங்கிப்போயிற்று. அவருக்குள்ளே சமாதானம் உண்டாயிற்று. அவருடைய இருதயத்தில் கர்த்தரைத் துதிக்கும் துதி நிரம்பியிருக்கிறது.
தாவீதைப்போல நாமும் கர்த்தருடைய சமுகத்து இரட்சிப்பினிமித்தம் அவரைத் துதிக்கவேண்டும். கர்த்தருடைய கிருபைக்காக, அவருடைய இரக்கத்திற்காக, அவருடைய ஆதரவுக்காக நாம் கர்த்தரைத் துதிக்கவேண்டும்.
கர்த்தருடைய சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நம்முடைய இருதயத்தில் ஆறுதலும், தேறுதலும், சமாதானமும் உண்டாகும்.
இது கர்த்தர் கொடுக்கிற தெய்வீக சமாதானம். நம்முடைய ஜீவியத்தில் நாம் கலக்கத்தோடிருக்கும்போது, நம்முடைய ஆவியில் நாம் சோர்ந்துபோய்விடக்கூடாது.
அதற்குப் பதிலாக நாம் கர்த்தரைத் துதித்துக்கொண்டேயிருக்க வேண்டும். கர்த்தர் நல்லவர். அவருடைய கிருபை நமக்கு என்றென்றுமுள்ளது.
தாவீதின் விண்ணப்பம் சங் 42 : 6-8
என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது
என் தேவனே, என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன் (சங் 42:6).
இயற்கையில் ஒவ்வொரு நாளிலும் பகல்பொழுதும் இரவு பொழுதும் மாறி மாறி வருகிறது. அதுபோலவே நம்முடைய ஜீவியத்தில் கலக்கமும், ஆறுதலும் மாறி மாறி வருகிறது.
தாவீது கவலைப்படும்போது கர்த்தருடைய சமுகத்தில் முறையிடுகிறார். அதன்பின்பு அவர் கர்த்தரைத் துதிக்கிறார். தாவீதின் ஜெபத்தில் முறையிடுவதும், துதிப்பதும் மாறி மாறி வருகிறது.
தாவீது தன்னுடைய கலங்குகிற ஆத்துமாவைக் குறித்து கர்த்தரிடத்தில் முறையிடுகிறார். அதேவேளையில் தேவனைப்பற்றிய நினைவுகளினால் தாவீது தன்னைத்தானே தேற்றிக்கொள்கிறார்.
தாவீதின் ஆத்துமா இப்போது அவருக்குள் கலங்குகிறது. அவர் தன்னுடைய கலக்கத்தை தனக்குள்ளே வைத்துக்கொள்ளாமல், அவர் கர்த்தருடைய சமுகத்திற்குப்போய், தன்னுடைய ஆத்துமாவின் நிலமையை கர்த்தரிடத்தில் முறையிடுகிறார்.
“”என் தேவனே, என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது” என்று கர்த்தரிடத்தில் சொல்லுகிறார்.
தனக்கு பிரச்சனைகளும், கவலைகளும், கலக்கங்களும் வரும்போதெல்லாம் தாவீது கர்த்தருடைய சமுகத்தில் அவற்றை முறையிடுவது வழக்கம்.
கர்த்தர் தனக்கு ஆறுதலையும் சமாதானத்தையும் கொடுத்த சம்பவங்களையெல்லாம் தாவீது இப்போது நினைத்துப் பார்க்கிறார். தனக்கு இதுவரையிலும் உதவி செய்த கர்த்தர், இனிமேலும் உதவி செய்வார் என்று கர்த்தரை விசுவாசத்தோடு எதிர்பார்க்கிறார்.
தாவீது இப்போது கானான் தேசத்தின் எல்லையில் சுற்றி அலைந்துகொண்டிருக்கிறார். தாவீதின் சத்துருக்கள் அவரை யோர்தான் தேசத்திற்குத் துரத்திவிட்டார்கள்.
தன்னுடைய சத்துருக்களிடமிருந்து தப்பித்து தாவீது தூரதேசத்தில் வந்து ஒளிந்துகொண்டிருக்கிறார்.
சில சமயம் அவர் யோர்தான் தேசத்திலிருந்தார். அதன்பின்பு அவர் எர்மோன் மலைகளில் தங்கியிருந்தார்.
இதற்கு பின்பு தாவீது சிறுமலையிலும் இருந்தார். தாவீது எங்கிருந்தாலும் அவர் கர்த்தரை மறந்துவிடவில்லை. அவர் கர்த்தரை எப்போதும் நினைக்கிறார்.
தாவீது எங்கு போனாலும் கர்த்தரைப்பற்றிய நினைவும் அவரோடு கூடவே போகிறது. தாவீது சுற்றி அலைந்த எல்லா தேசங்களிலும், எல்லா மலைகளிலும் அவர் கர்த்தரை நினைத்துப் பார்க்கிறார். கர்த்தரோடு ஐக்கியமாயிருக்கிறார்.
கர்த்தருடைய சமுகத்தில் தன்னுடைய இருதயத்தின் வேதனைகளையெல்லாம் ஊற்றுகிறார். கர்த்தரிடத்தில் விசுவாசமாயிருக்கிறார். கர்த்தரை நன்றியுள்ள இருதயத்தோடு துதிக்கிறார்.
தாவீது தூரதேசத்திலிருந்தாலும், அவருடைய சத்துருக்கள் அவரை நெருக்கினாலும், தாவீதின் இருதயம் கர்த்தருக்கு சமீபமாயிருக்கிறது. தாவீது கர்த்தரைவிட்டு விலகிப்போய்விடவில்லை. கர்த்தரை மறந்துவிடவுமில்லை. கர்த்தரோடு ஐக்கியமாயிருக்கிறார்.
நம்பிக்கையிழந்து கலங்கியவர்களுக்கு எடுத்துக்காட்டுகள்
1. காயீன் (ஆதி 4:13-14)
2. ஆகார் (ஆதி 21:15-16)
3. இஸ்ரவேல் (எண் 17:12-13; உபா 28:65-67)
4. யோபு (யோபு 3:1-24; யோபு 17:13-15)
5. தாவீது (சங் 42:5-6,11; சங் 43:2)
6. ஆசாப் (சங் 77:7-9)
7. எலியா (1இராஜா 19:4)
8. யோனா (யோனா 4:3-8)
எர்மோன் மலைகள் லெபனானின் தென்பகுதியிலுள்ள மலைத்தொடர். சிகரத்தின் உயரம் 9,166 அடி. பனிமலை மூடியிருக்கும். பனிமழை போன்று பொழியும் (சங் 42:6-7; சங் 133:3).
கப்பல் கட்டுவோர் தங்களுக்குத் தேவையான மரங்களை இந்த மலைக் காடுகளில் வெட்டினார்கள் (எசே 27:5). மிருகங்களை வேட்டையாட சிறந்த மலைப்பகுதி (உன் 4:8).
சிறுமலை எர்மோனுக்கும் யோர்தானுக்கும் இடையிலுள்ள சிறுமலை. இதன் மறுபெயர் சீகோன் (உபா 4:48), சீரியோன் சேனீர் (உபா 3:9). சிறுமலை வேறு. எர்மோன் மலை வேறு (1நாளா 5:23; உன் 4:8).
ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது
உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; உமது அலைகளும் திரைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது (சங் 42:7).
கர்த்தர் தன்மீது பிரியமில்லாதிருக்கிறாரோ என்னும் எண்ணம் தாவீதுக்கு உண்டாயிற்று. கர்த்தர் தன்மீது கோபப்படுவதாக தாவீது நினைக்கிறார். ஆனாலும் ஏற்றவேளையில் தேவனுடைய கிருபை தனக்கு மறுபடியும் கிடைக்கும் என்று விசுவாசித்து, தாவீது தன்னைத்தானே தேற்றிக்கொள்கிறார்.
தேவனுடைய கோபாக்கினை தனக்கு விரோதமாக வருவதை தாவீது காண்கிறார். தேவனுடைய கோபம் ஒவ்வொன்றாக தாவீதின்மேல் வருகிறது. அது ஆழத்தை ஆழம் கூப்பிடுவதுபோலிருக்கிறது.
ஒவ்வொரு பிரச்சனையாக தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கிறது.
கர்த்தருடைய மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது. தாவீது தேவனுடைய கோபாக்கினையின் பிரவாகத்தில், மூழ்கும் நிலமையிலிருக்கிறார். தாவீதின் கழுத்தளவுக்கு தேவனுடைய கோபாக்கினை பிரவாகித்து ஓடுகிறது.
கர்த்தர் தாமே தமது கிருபையினால், தமது கோபத்தை நிறுத்தி, தாவீதுக்கு கிருபை காண்பிக்கவேண்டும். இல்லையென்றால் தாவீது தேவனுடைய கோபாக்கினையில் அமிழ்ந்துபோவார்.
கர்த்தருடைய மதகுகளின் இரைச்சல் பெருவெள்ளத்து இரைச்சல் போலிருக்கிறது. யுத்தத்தின் தொனியைப்போல அந்த இரைச்சல் தொனிக்கிறது. நம்முடைய ஜீவியத்தில் பலவிதமான மேடுபள்ளங்கள் வரலாம். பேரலைகளும் நம்மைத் தாக்கலாம்.
தம்முடைய பாதையில் நாம் சீராக நடப்பதற்காக கர்த்தர் இதுபோன்ற தடைகளை நமக்கு அனுமதிக்கிறார். இவை இயற்கையான தடைகளல்ல. இவை தேவனுடைய திட்டத்தின் பிரகாரம் நியமிக்கப்பட்டிருக்கிற தெய்வீக தடைகள்.
கர்த்தருடைய பரிசுத்தவான்களுக்குக்கூட பல துன்பங்கள் வரலாம். நமக்கும் சோதனைகளும் வேதனைகளும் உண்டாகலாம். இவை ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கலாம்.
இவற்றைக் குறித்து நாம் அசட்டையாக இருக்கக்கூடாது. சோதனைகள் புதுமையாகயிருக்கிறதே என்று ஆச்சரியத்தோடு பார்க்கக்கூடாது. அதைக்கண்டு திகைக்கக்கூடாது.
நமக்கு இந்த உலகத்திலே உபத்திரவங்கள் உண்டு. பரிசுத்தவான்களுக்கு இப்பிரபஞ்சத்தில் சோதனைகள் புதுமையானதல்ல. ஒருவேளை நமக்கு வரும் தொடர் பிரச்சனைகளைப்பற்றி நமக்கு ஒன்றும் தெரியாமலிருக்கலாம். நம்மால் அதைப் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம்.
கர்த்தருக்குத் தெரியாத காரியம் ஒன்றுமேயில்லை. தாம் என்ன செய்கிறோம் என்பதை கர்த்தர் அறிந்திருக்கிறார். கர்த்தர் ஏற்ற காலத்திலே தம்முடைய சித்தத்தை நமக்கு வெளிப்படுத்துவார். அப்போது கர்த்தருடைய சிந்தையை நாமும் புரிந்துகொள்வோம்.
தேவனுடைய கோபாக்கினை தாவீதின்மேல் அலைகளைப்போலவும், திரைகளைப்போலவும் புரண்டு போகிறது. தாவீது அவற்றைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார். மனம் வேதனைப்படுகிறார். அலைகள் ஒவ்வொன்றாக, தொடர்ச்சியாக வருவதுபோல, தாவீதுக்கு தேவனுடைய கோபாக்கினை ஒன்றன்பின் ஒன்றாக வருகிறது. கர்த்தர் தாமே தம்முடைய கோபாக்கினையின் கிரியைகள் மூலமாய், தாவீதை தமக்குச் சித்தமான சரியான பாதையிலே வழிநடத்துகிறார்.
கர்த்தர் தமது கிருபையை கட்டளையிடுகிறார்
ஆகிலும் கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; இராக்காலத்திலே அவரைப் பாடும்பாட்டு என் வாயி-ருக்கிறது; என் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்பஞ்செய்கிறேன் (சங் 42:8).
தாவீதுக்கு ஒன்றன்பின் ஒன்றாக பிரச்சனை வந்துகொண்டேயிருக்கிறது. இவையெல்லாம் தேவனிடத்திலிருந்து வருவதை தாவீது புரிந்துகொள்கிறார். இந்தப் பிரச்சனைகளின் மத்தியிலும் கர்த்தருடைய கிருபை தனக்குக் கிடைக்கும் என்றும், கர்த்தர் தாமே ஏற்ற காலத்தில் இந்தப் பிரச்சனைகளிலிருந்து தன்னை விடுவிப்பார் என்றும் தாவீது விசுவாசத்தோடிருக்கிறார்.
“”கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்” என்று தாவீது விசுவாசத்தோடு சொல்லுகிறார். புயலுக்குப் பின்பு அமைதி உண்டாகும். தேவனுடைய அலைகளும் திரைகளும் தாவீதின்மேல் புரண்டு போகிறது.
இதன்பின்பு தேவனுடைய கிருபை தனக்குக் கிடைக்கும் என்று தாவீது நம்புகிறார். தாவீதின் ஜீவியத்தில் கர்த்தருடைய கோபாக்கினை, ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறதுபோல ஒவ்வொன்றாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. தாவீது தேவனுடைய கோபாக்கினையின் பிரவாகத்தில் மூழ்கும் நிலமையிலிருக்கிறார்.
தாவீது மிகுந்த நெருக்கத்திலும், இக்கட்டிலும் இருந்தாலும், அவருடைய கண்கள் தேவனுடைய கிருபையையே நோக்கிப் பார்க்கிறது.
எல்லா நன்மைகளும் தேவனிடத்திலிருந்தே நமக்கு வருகிறது. கர்த்தரே எல்லா ஆசீர்வாதங்களுக்கும் ஊற்றின் கண்ணாகயிருக்கிறார். கர்த்தர் தம்முடைய கிருபையைக் கட்டளையிடுகிறார்.
கர்த்தருடைய கிருபை கர்த்தருக்கே சொந்தம். தமக்குச் சொந்தமானதை கட்டளையிட கர்த்தருக்கு உரிமை உண்டு.
நம்முடைய சுயபக்தியினாலோ, சுயகிரியைகளினாலோ தேவனுடைய கிருபையை சம்பாதிக்க முடியாது. நம்முடைய பயபக்தியினால் தேவனுடைய கிருபையை நாம் சம்பாதித்துக்கொள்ளலாம் என்று யாரும் பெருமை பேசவும் முடியாது.
தேவனுடைய கிருபை அவருக்கு மாத்திரமே சொந்தம். கர்த்தர் தம்முடைய கிருபையை, தமக்குச் சித்தமான பிரகாரம், தமக்குச் சித்தமானவர்களுக்கு வெளிப்படுத்துகிறார்.
கர்த்தர் தம்முடைய கிருபையை நமக்குக் கொடுக்கும்போது, ஒரு ராஜா கட்டளையிடுவதுபோல, கர்த்தர் தம்முடைய கிருபையை நமக்குக் கட்டளையிடுகிறார். தம்முடைய கிருபையின்மீது கர்த்தர் தமது தெய்வீக ஆளுகையை செலுத்துகிறார்.
தேவன் தமது கிருபையைக் கட்டளையிடுவதுபோலவே, தமது அலைகளையும் திரைகளையும் கட்டளையிடுகிறார். அவையெல்லாமே கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறது.
கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார். தேவனுடைய கிருபை நமக்குக் கிடைக்கும்போது நம்முடைய ஆத்துமாவில் பகற்காலம் உண்டாகும். இதுவரையிலும் இருளிலிருந்த ஆத்துமா, தேவனுடைய கிருபையினால் வெளிச்சத்திற்கு வரும். தேவன் தம்முடைய கிருபையை கட்டளையிடும்போது, அவருடைய கிருபை அவருக்குக் கீழ்ப்படியும்.
தேவன் தம்முடைய கிருபையை நமக்குக் கட்டளையிடும்போது, அதை நாம் பயபக்தியோடு ஏற்றுக்கொள்ளவேண்டும். தேவகிருபையை நாம் வரவேற்கவேண்டும்.
கர்த்தருடைய கிருபைக்காக நாம் அவருக்கு ஸ்தோத்திர பலிகளை ஏறெடுக்கவேண்டும். கர்த்தருடைய கிருபையில் நாம் சந்தோஷமாயிருக்கவேண்டும்.
இராக்காலத்திலே கர்த்தரைப் பாடும் பாட்டு தாவீதின் வாயிலிருக்கிறது. தாவீது தன் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்பம்பண்ணுகிறார். தேவன் நம்முடைய ஜீவனுக்குத் தேவனாயிருக்கிறார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் நாம் ஜீவிக்கிறோம், நாம் அசைகிறோம்.
கர்த்தரே நமக்கு எல்லா ஆறுதல்களையும், தேறுதல்களையும் தருகிறவர். அவரே எல்லாவற்றிற்கும் ஆதாரமாயும், ஆரம்பமாயும் இருக்கிறவர்.
ஆகையினால் நம்முடைய ஜெபங்களையும், வேண்டுதல்களையும், விண்ணப்பங்களையும் நம்முடைய ஜீவனுடைய தேவனை நோக்கியே ஏறெடுக்கவேண்டும்.
என் ஆத்துமாவே, தேவனை நோக்கிக் காத்திரு சங்கீதம் 42 : 9-11
சங் 42:9. நான் என் கன்மலையாகிய தேவனை நோக்கி: ஏன் என்னை மறந்தீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன்.
சங் 42:10. உன் தேவன் எங்கே என்று என் சத்துருக்கள் நாள்தோறும் என்னோடே சொல்-, என்னை நிந்திப்பது என் எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது.
சங் 42:11. என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு: என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.
தாவீது கர்த்தருடைய சமுகத்திலே தன் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்பம்பண்ணுகிறார். கர்த்தரிடத்தில் தன்னுடைய சத்துருக்களைப்பற்றி முறையிடுகிறார். அவர்கள் நாள்தோறும் தாவீதை நிந்திக்கிறார்கள்.
தன்னுடைய சத்துருக்கள் மூலமாய் தாவீதுக்கு நிந்தையும், கலக்கமும் உண்டாயிற்று. கர்த்தர் தாமே தாவீதுக்கு மெய்யான சிநேகிதராயிருக்கிறார். தாவீதுக்கு கர்த்தருக்குள் ஆறுதல் உண்டாயிற்று.
தாவீதின் ஜீவியத்தில் பல பாடுகளும் வேதனைகளும் உண்டாயிற்று. இவையெல்லாவற்றையும்பார்த்து தாவீது கர்த்தரைக் குற்றப்படுத்தவில்லை. தன்னுடைய துக்கங்களை தேவனுடைய சமுகத்தில் அமைதியாக அழுது ஒப்புக்கொடுக்கிறார்.
கண்ணீரோடு விண்ணப்பம்பண்ணுகிறார். நமக்கு வேதனைகள் உண்டாகும்போது நாம் உடனே கர்த்தர்மீது கோபப்படக்கூடாது. நம்முடைய கண்ணீரை கர்த்தருடைய சமுகத்தில் பயபக்தியோடு ஊற்றவேண்டும்.
தாவீது தன்னுடைய தேசத்தின்மீது பிரியமாயிருக்கிறார். ஆனால் அவருடைய தேசத்து ஜனங்களோ அவருக்குச் சத்துருக்களாயிருக்கிறார்கள். அவரை துன்பப்படுத்தி வேதனைப்படுத்துகிறார்கள்.
தாவீதின் உள்ளத்திலே குழப்பமுண்டாயிற்று. தன்னுடைய வேதனைக்கான காரணத்தை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. தாவீது தன்னுடைய பிரச்சனையோடு கர்த்தருடைய சமுகத்தில், “”ஏன் என்னை மறந்தீர்” என்று கேட்கிறார்.
தாவீது தேவனைப்பற்றிச் சொல்லும்போது அவரை தன்னுடைய கன்மலையாகிய தேவன் என்று சொல்லுகிறார். தாவீது சத்துருவினால் ஒடுக்கப்பட்டிருக்கிறார். அவர் துக்கத்துடனே திரிகிறார்.
தாவீதால் தன்னுடைய துக்கத்தை அடக்கி வைக்க முடியவில்லை. “”நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும்” என்று கர்த்தரிடத்தில் கேட்கிறார்.
நம்முடைய பிரச்சனைகளை நாம் கர்த்தரிடத்தில் முறையிடலாம். இதில் தவறு எதுவுமில்லை. ஆனாலும் கர்த்தரைப்பற்றி முறையிடுவதற்கு நமக்கு அனுமதியில்லை. தாவீதின் சத்துருக்கள், தாவீதோடே
“”உன் தேவன் எங்கே” என்று நாள்தோறும் சொல்லுகிறார்கள். தங்களுடைய வார்த்தையினால் தாவீதை நிந்திக்கிறார்கள். அவர்கள் நிந்திப்பது தாவீதின் எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல இருக்கிறது.
அவர்களுடைய பேச்சுக்கள் தாவீதின் விசுவாசத்தை பலவீனப்படுத்துகிறது. தாவீது தன்னுடைய ஆவியிலே சோர்ந்துபோகிறார்.
தாவீதுக்கு மெய்யான ஆறுதல் கர்த்தரிடத்தில்தான் இருக்கிறது. அவரே நம்முடைய கன்மலை. கற்பாறையின்மேல் நம்முடைய வீட்டைக் கட்டவேண்டும். கன்மலையில் நாம் அடைக்கலம் புகவேண்டும்.
தாவீது தான் பேசவேண்டிய கன்மலையினிடத்தில்தான் பேசுகிறார். தன் கன்மலையாகிய கர்த்தர், தன்னுடைய விண்ணப்பத்திற்கு கிருபையாய்ச் செவிகொடுப்பார் என்று விசுவாசிக்கிறார்.
தாவீது ஏற்கெனவே, “”என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்” (சங் 42:5) என்று கேட்டார். அதே வாக்கியத்தை இங்கு மறுபடியும் சொல்லுகிறார். இப்போது தாவீதின் விசுவாசம் உறுதியாயிருக்கிறது.
கர்த்தர் தனக்கு ஜெயங்கொடுப்பார் என்று தாவீது நம்புகிறார். தன்னுடைய சத்துருக்கள் யுத்தக்களத்திலிருந்து தோற்று ஓடிப்போவார்கள் என்று கர்த்தருக்குள் விசுவாசிக்கிறார். தாவீது விசுவாசத்தினால் வெற்றியை சுதந்தரித்துக்கொள்கிறார்.
தாவீது பிரச்சனையின் மத்தியில் இருந்தாலும், அவர் நெருக்கப்பட்டாலும், அவருடைய விசுவாசம் இன்னும் அவரை விட்டு நீங்கிப்போய்விடவில்லை. தாவீதின் விசுவாசம் உறுதியாயிருக்கிறது. இதற்கு முன்பு சோர்ந்துபோய் சொன்ன வார்த்தைகளை, இப்போது தனக்குத்தானே உற்சாகமாய்ச் சொல்லுகிறார்.
“”என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்” என்று சொல்லிவிட்டு, தன்னுடைய ஆத்துமாவிடம், “”தேவனை நோக்கிக் காத்திரு” என்று கட்டளை கொடுக்கிறார்.
நாம் நல்ல சிந்தனைகளை திரும்பத் திரும்ப நினைத்துக்கொள்ளவேண்டும். எப்போதுமே அவிசுவாசமான சிந்தையுடையவர்களாய் இருக்கக்கூடாது. ஆரம்பத்தில் நாம் சோர்ந்துபோனாலும், சீக்கிரத்தில் சோர்வை நம்மை விட்டு நீக்கிப்போடவேண்டும். கர்த்தரை நோக்கிக் காத்திருக்கவேண்டும்.
கர்த்தருடைய சமுகத்திலிருந்தே நமக்கு விடுதலையும், ஆசீர்வாதமும், கிருபையும் வரும். நாம் பாடுகளை அனுபவிக்கும்போது, நமக்குள் சோர்வு உண்டானால், தாவீதைப்போல நாமும், “”தேவனை நோக்கிக் காத்திரு” என்று நமக்குள்ளே சொல்லவேண்டும்.
கர்த்தரே தாவீதின் முகத்திற்கு இரட்சிப்பாயிருக்கிறார். கர்த்தரே தாவீதின் தேவனாயிருக்கிறார். தான் இன்னும் கர்த்தரைத் துதிப்பதாக தாவீது அறிக்கை செய்கிறார். தேவனுடைய கோபாக்கினை தன்மேல் வந்தாலும்,
தனக்குக் கலக்கங்களும் நெருக்கங்களும் வந்தாலும், இவற்றிற்கு மத்தியிலும் தாவீது கர்த்தரைத் துதிக்கிறார். துதி பெருகும்போது கிருபையும் பெருகும் என்னும் இரகசியத்தை தாவீது அறிந்திருக்கிறார்.