சங்கீதம் 43 விளக்கம் (Psalms 43 Defenition)

சங்கீதம் 43 சங்கீதம் 43 – பதினொன்றாவது நெருக்கத்தின் ஜெபம்

பொருளடக்கம்

1. நெருக்கத்தி-ருந்து தப்புவிக்க வேண்டுமென்று எட்டுவிதமான விண்ணப்பம் – (43:1-3)

2. அப்பொழுது – தேவனிடம் கூறும் மூன்றுபொருத்தனைகள் – (43:4)

3. ஆத்துமாவிற்கு நான்குவிதமான விண்ணப்பம் – (43:5)

நாற்பத்து இரண்டாவது சங்கீதம் எழுதப்பட்ட சந்தர்ப்பத்திலேயே, நாற்பத்து மூன்றாவது சங்கீதமும் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள்.

இவ்விரண்டு சங்கீதங்களிலும், இவற்றை எழுதியவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. நாற்பத்து மூன்றாவது சங்கீதம், நாற்பத்து இரண்டாவது சங்கீதத்தின் இணைப்பாக சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது.

நாற்பத்து இரண்டாவது சங்கீதத்தில் சொல்லப்பட்டிருக்கிற அதே ஆலோசனைகள் இந்த சங்கீதத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த ஆலோசனைகள் சோதித்துப் பார்க்கப்பட்டு, பயனுள்ளதாயிருப்பதினால், இந்த சங்கீதத்திலும் மறுபடியும் சொல்லப்பட்டிருக்கலாம்.

இயேசுகிறிஸ்து சில சமயங்களில், முதல்தரமும், இரண்டாந்தரமும், மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார் (மத் 26:44).

தாவீது தான் இந்த சங்கீதத்தின் ஆசிரியர் என்று எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள். தன்னுடைய சத்துருக்கள் மூலமாய் தனக்கு ஏற்பட்டிருக்கிற காயங்களை தாவீது கர்த்தரிடத்தில் முறையிடுகிறார் (சங் 43:1,2).

தாவீது தேவனுடைய ஆலயத்தில் மறுபடியும் பிரவேசிக்கவேண்டுமென்று விரும்புகிறார். அதற்காக கர்த்தரிடத்தில் ஜெபிக்கிறார் (சங் 43:3,4). தாவீது விசுவாசத்தோடு தேவனை நோக்கிக் காத்திருக்கிறார் (சங் 43:5).

தாவீதின் சத்துருக்கள் சங் 43 : 1,2

  • சங் 43:1. தேவனே, நீர் என் நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத ஜாதியாரோடு எனக்காக வழக்காடி, சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்.
  • சங் 43:2. என் அரணாகிய தேவன் நீர்; ஏன் என்னைத் தள்ளிவிடுகிறீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும்?

தேவனே, நீர் என் நியாயத்தை விசாரியும்

  • தேவனே, நீர் என் நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத ஜாதியாரோடு எனக்காக வழக்காடி, சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத் தப்புவியும் (சங் 43:1).

கர்த்தர் தாவீதுக்கு நியாயாதிபதியாகவும், அவருடைய பெலனாகவும், அவருக்கு வழிகாட்டியாகவும், அவருடைய சந்தோஷமாகவும், அவருக்கு நம்பிக்கையாகவும் இருக்கிறார்.

தாவீது தன்னுடைய வேண்டுதல்களையும் விண்ணப்பங்களையும் தேவனிடத்தில் விசுவாசத்தோடு, ஜெபத்தில் ஏறெடுக்கிறார்.

தேவனே தாவீதுக்கு நியாயாதிபதியாயிருக்கிறார். தாவீது கர்த்தரிடத்தில்,

“”தேவனே நீர் என் நியாயத்தை விசாரியும்” என்று விண்ணப்பம்பண்ணுகிறார்.

தாவீதுக்கு விரோதமாக அவருடைய சத்துருக்கள் தீங்கு செய்திருக்கிறார்கள். தாவீது அவர்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

தாவீது தன்னுடைய சத்துருக்களைப்பற்றிச் சொல்லும்போது அவர்கள் “”பக்தியில்லாத ஜாதியார்” என்று சொல்லுகிறார். இந்த வார்த்தைக்கு “”இரக்கமில்லாத ஜனங்கள்” என்று பொருள்.

தாவீதின் சத்துருக்களுக்கு ஒருவர் தலைவராயிருக்கிறார். அவர் சூதும் அநியாயமுமான மனுஷர். அவர் சவுலாக இருக்கவேண்டுமென்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள்.

சவுல் தாவீதினிடத்தில் அன்பாகயிருக்கவில்லை. தாவீதைக் கொன்றுபோடவேண்டுமென்று சவுல் பல சமயங்களில் முயற்சி பண்ணினார். தாவீது சவுலுக்கு நன்மையே செய்தார்.

ஆனால் சவுலோ தாவீதுக்கு நன்மைக்குப் பதிலாக தீமைகளைச் செய்கிறார். சவுலிடத்தில் உண்மையில்லை, அன்பில்லை, சிநேகமுமில்லை.

தாவீது இந்த வசனத்தில் அப்சலோமைப்பற்றிச் சொல்லியிருக்கலாம் என்றும் ஒரு சிலர் சொல்லுகிறார்கள். அப்சலோமும் சவுலைப்போலவே மோசமானவர்.

அவரும் சூதும் அநியாயமுமான மனுஷர். தாவீது தன்னுடைய சத்துருக்களைக் குறித்தும் அவர்களுடைய தலைவரைக் குறித்தும் கர்த்தரிடத்தில் முறையிடுகிறார்.

தாவீது தன்னுடைய பாவத்தைக் குறித்து கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணும்போது, “”தேவனே நீர் என் நியாயத்தை விசாரிக்க வேண்டாம், விசாரித்தால் நான் குற்றமுள்ளவனாகயிருப்பேன்” என்று வேண்டுதல் செய்திருப்பார்.

ஆனால் இப்போதோ தாவீது இங்கு தன்னுடைய பாவத்தைக் குறித்து ஜெபம்பண்ணவில்லை. தன்னுடைய சத்துருக்களைக் குறித்தே ஜெபம்பண்ணுகிறார்.

ஆகையினால், “”தேவனே நீர் என் வழக்கை விசாரியும்” என்றும், “”பக்தியில்லாத ஜாதியாரோடு எனக்காக வழக்காடும்” என்றும், “”சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்” என்றும் தேவனுடைய சமுகத்திலே விண்ணப்பம்பண்ணுகிறார்.

தாவீது தன்னுடைய சத்துருக்களுக்கு ஒரு தீங்கும் செய்ததில்லை. ஆகையினால் கர்த்தர் தாவீதை விசாரிக்கும்போது அவரைக் குற்றப்படுத்தமாட்டார்.

கர்த்தர் தாவீதுக்காக வழக்காடுவார். தாவீதின் சத்துருக்களுடைய சதிஆலோசனைகளையெல்லாம் வெளிப்படுத்துவார். அவர்களுடைய சூதையும் அநியாயத்தையும் நிரூபிப்பார்.

கர்த்தர் நம் பட்சத்திலிருக்கும்போது நமக்கு விரோதமாக யாரும் எதிர்த்து நிற்கமுடியாது. கர்த்தர் நமக்காக வழக்காடும்போது நமக்கு நீதி கிடைக்கும். கர்த்தரே நமக்கு நீதியுள்ள நியாயாதிபதி.

தாவீதின் விண்ணப்பம்

1. என்னை நியாயம் விசாரியும் (சங் 43:1).

2. எனக்காக வழக்காடும் (சங் 43:1).

3. சூதுள்ள மனுஷர்களிடமிருந்து என்னைத் தப்புவியும்.

4. அநியாயமான மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்.

5. உமது வெளிச்சத்தை அனுப்பியருளும் (சங் 43:3).

6. உமது சத்தியத்தை அனுப்பியருளும்.

7. அவைகள் (வெளிச்சமும், சத்தியமும்) என்னை வழி நடத்தும்.

8. அவைகள், என்னை உமது பரிசுத்த பர்வதத்திற்கும், உமது வாசஸ்தலங்களுக்கும் கொண்டு போகட்டும்

தாவீதின் தனிப்பட்ட குறிப்புக்கள்

1. என் வழக்கு (சங் 43:1)

2. என் அரண் (சங் 43:2)

3. என் ஆனந்த மகிழ்ச்சி (சங் 43:4)

4. என் தேவன் (சங் 43:4, 5)

5. என் ஆத்துமா (சங் 43:5)

6. என்முகம்

என் அரணாகிய தேவன் நீர்

  • என் அரணாகிய தேவன் நீர்; ஏன் என்னைத் தள்ளிவிடுகிறீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும்? (சங் 43:2)

கர்த்தர் தாவீதுக்கு பெலனாயிருக்கிறார். கர்த்தர் தாவீதுக்குப் போதுமானவர். கர்த்தருடைய பெலன் தாவீதின் பெலவீனத்திலே இடைக்கட்டித் தாங்கும்.

ஆகையினால் தாவீது கர்த்தரை நோக்கிப் பார்த்து, “”என் அரணாகிய தேவன் நீர்” என்று சொல்லுகிறார். இந்த வாக்கியத்திற்கு, “”தேவனே நீரே என் பெலன்” என்று பொருள்.

தாவீது தன்னுடைய எல்லா பெலனையும் கர்த்தரிடமிருந்தே பெற்றுக்கொள்கிறார். கர்த்தருக்குள் தாவீது தன்னைப் பெலப்படுத்திக்கொள்கிறார். கர்த்தர் பல சமயங்களில் தாவீதைப் பெலப்படுத்துகிறார்.

கர்த்தர் இல்லையென்றால் தாவீது தண்ணீரைப்போல பெலனற்றவராகவும், உறுதியில்லாதவராகவும் இருப்பார். கர்த்தருடைய உதவியில்லாமல் தாவீதால் ஒன்றும் செய்யமுடியாது.

தாவீது கர்த்தரை, “”என் அரணாகிய தேவன் நீர்” என்று சொல்லிவிட்டு, கர்த்தருடைய சமுகத்தில் அழுது புலம்புகிறார்.

தாவீதின் இருதயத்தில் சந்தோஷமில்லை. ஆவிக்குரிய சமாதானமில்லை. ஆனாலும் கர்த்தரே தாவீதுக்குப் பெலனாயிருக்கிறார்.

நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் நமக்கு தேவனுடைய ஆறுதல் கிடைக்கவில்லையென்றாலும், நாம் தேவனை விட்டு விலகிப்போய்விடக்கூடாது. தேவனையே சேர்ந்திருக்கவேண்டும்.

அப்போதுதான் கர்த்தர் தமக்குச் சித்தமான வேளையில், தம்முடைய உதவியை நமக்குக் கொடுப்பார்.

கர்த்தர் நம்மைப் பெலப்படுத்துவார். நமக்கு ஆவிக்குரிய பெலனும், ஆதரவுகளும் கிடைக்கும்.

நம்முடைய இருதயத்தில் ஆவிக்குரிய சந்தோஷம் நிரம்பியிருக்கும்.

தாவீது கர்த்தருடைய சமுகத்தில், “”நீரே என் பெலன்” என்று சொல்லிவிட்டு, “”ஏன் என்னைத் தள்ளிவிடுகிறீர்” என்று கேட்கிறார்.

கர்த்தர் ஒருபோதும் யாரையும் தள்ளுகிறவரல்ல. தம்மை நம்புகிறவர்களை கர்த்தர் கைவிடமாட்டார். தாவீது ஒருவேளை தன்னுடைய துக்கத்தின் மிகுதியினால் இந்த வார்த்தையைச் சொல்லியிருக்கவேண்டும்.

நம்முடைய ஜீவியத்தில் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும், எவ்வளவு வேதனைகளை நாம் அனுபவித்தாலும், நாம் கர்த்தரை ஒருபோதும் குறை சொல்லக்கூடாது. கர்த்தர் நம்மைத் தள்ளிவிடுகிற தேவனல்ல.

நாம் தான் பல சமயங்களில் கர்த்தரைத் தள்ளிவிட்டு, அவரை விட்டு விலகிப்போய்விடுகிறோம்.

தாவீது தன்னுடைய வேதனையின் மிகுதியினால், “”சத்துருவினால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும்” என்று கேட்கிறார்.

கர்த்தர் தன்னுடைய பெலனாயிருக்கும்போது, சத்துரு தன்னை எப்படி ஒடுக்கமுடியும் என்று தாவீது கர்த்தரிடத்தில் முறையிடுகிறார்.

கர்த்தர் தன்னைத் தள்ளிவிட்டதினாலேயே, சத்துருவுக்கு தன்மீது ஜெயமுண்டாயிற்று என்று தாவீது நினைக்கிறார்.

கர்த்தரே தாவீதுக்குப் பெலனானவர். கர்த்தர் தாவீதைத் தள்ளிவிடும்போது, தாவீதின் பெலமும் அவரை விட்டு நீங்கிப்போயிற்று.

இதனால் சத்துரு தன்னை எளிதாக ஒடுக்கிவிடுகிறான் என்று தாவீது வேதனைப்படுகிறார். ஒடுக்கப்பட்ட தாவீது துக்கத்துடனே திரிகிறார். ஒடுக்கிய சத்துருவோ சந்தோஷத்துடனே திரிகிறான்.

கர்த்தருடைய பரிசுத்த பர்வதம் சங் 43 : 3,4

  • சங் 43:3. உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக.
  • சங் 43:4. அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தண்டைக்கும், எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்திற்கும் பிரவேசிப்பேன். தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன்.

தேவனுடைய வெளிச்சமும், சத்தியமும்

  • உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக (சங் 43:3).

கர்த்தரே தாவீதுக்கு வழிகாட்டியாகயிருக்கிறார். கர்த்தர் உண்மையுள்ளவர். அவர் உண்மையுள்ள வழிகாட்டி.

கர்த்தர் நம்முடைய கரத்தைப் பற்றிக்கொண்டு நம்மை வழிநடத்துவார். கர்த்தர் தாமே தன்னை வழிநடத்தவேண்டுமென்று தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார்.

கர்த்தர் தாமே தமது பரிசுத்த பர்வதத்திற்கும் தமது வாசஸ்தலங்களுக்கும் தன்னைக் கொண்டுபோவாராக என்று தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார்.

தாவீதுக்கு தன்னுடைய குடும்பம் பெரிதாய்த் தெரியவில்லை. குடும்ப ஆசீர்வாதங்களைவிட கர்த்தருடைய பரிசுத்த பர்வதத்திலும், அவருடைய வாசஸ்தலங்களிலும் கிடைக்கிற ஆவிக்குரிய ஆசீர்வாதங்களே தாவீதுக்குப் பெரிதாய் தெரிகிறது.

தாவீது தன்னுடைய அரண்மனைக்குப் போகவேண்டுமென்று விரும்பவில்லை. சிங்காசத்தில் வீற்றிருந்து, இராஜதோரணையோடு அதிகாரம் செலுத்தவேண்டுமென்று தாவீது தாகமாயிருக்கவில்லை.

அவருடைய தாகமெல்லாம் கர்த்தர்மீதும், கர்த்தருடைய பரிசுத்த பர்வதத்தின்மீதும், கர்த்தருடைய வாசஸ்தலங்களின்மீதுமே இருக்கிறது.

தன்னை வழிநடத்துவதற்கு கர்த்தர் தாமே தமது வெளிச்சத்தையும், தமது சத்தியத்தையும் அனுப்பியருளுமாறு தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார்.

கர்த்தருடைய கிருபையின் பெலனால் நமக்கு அவருடைய வெளிச்சம் கிடைக்கும். அவருடைய வாக்குத்தத்தத்தின் பெலனால் நமக்கு அவருடைய சத்தியம் கிடைக்கும்.

நமக்கு கர்த்தருடைய கிருபையும் வேண்டும், அவருடைய வாக்குத்தத்தமும் வேண்டும். நமக்கு கர்த்தருடைய வெளிச்சமும் வேண்டும். அவருடைய சத்தியமும் வேண்டும்.

கர்த்தர் தாமே அவற்றை தம்முடைய கிருபையினால் நமக்கு அனுப்பியருளவேண்டும்.

கர்த்தருடைய வெளிச்சமும் சத்தியமும் நம்மை வழிநடத்தும். கர்த்தருடைய சித்தத்தின் பிரகாரமாய் அவை நம்மை வழிநடத்தும்.

கர்த்தருடைய வெளிச்சம் இருக்கும்போது நம்முடைய கால்கள் இருளிலே தள்ளாடுவதில்லை. கர்த்தருடைய சத்தியத்தில் நாம் நடக்கும்போது, நம்முடைய கால்கள் பாதை மாறிப்போவதுமில்லை.

கர்த்தர் நமக்கு வெளிச்சத்தின் ஆவியையும், சத்தியத்தின் ஆவியையும் அருளுமாறு ஜெபம்பண்ணவேண்டும்.

தேவனுடைய வெளிச்சத்திற்காகவும், அவருடைய சத்தியத்திற்காகவும் நாம் தொடர்ந்து ஜெபிக்கவேண்டும். இன்னும் அதிகமாய் ஜெபிக்கவேண்டும்.

கர்த்தருடைய வெளிச்சத்தினாலும் சத்தியத்தினாலும் நமக்கு கிறிஸ்துவினுடைய பிரசன்னம் கிடைத்திருக்கிறது.

கிறிஸ்துவானவர் நம்மை தேவனுடைய தெய்வத்துவத்தின் இரகசியத்திற்கு நேராக வழிநடத்துகிறார்.

கிறிஸ்து தாமே நம்மை பரலோகத்தின் பாதையில் கரம்பிடித்து வழிநடத்துகிறார்.

கிறிஸ்துவே தேவனுடைய வெளிச்சமாகவும், அவருடைய சத்தியமாகவும் இருக்கிறார்.

பிதாவானவர் தமது குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை நமக்காக இந்த உலகத்திற்கு அனுப்பி, நம்மீது தாம் வைத்திருக்கிற அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கிறிஸ்துவானவர் தமது வெளிச்சத்தினாலும் சத்தியத்தினாலும், நம்மை தமது பரிசுத்த பர்வதத்திற்கும், தம்முடைய வாசஸ்தலங்களுக்கும் கொண்டுபோகிறார். தாவீதை வழிநடத்துகிற தேவன் நம்மையும் வழிநடத்துகிறார்.

தாவீதின் பொருத்தனைகள்

1. கர்த்தர் என்னைப் பரிசுத்த பர்வதத்திற்கும் வாசஸ்தலங்களுக்கும் கொண்டு போவார். அப்பொழுது தேவனுடைய பீடத் தண்டைக்குப் போவேன் (சங் 43:3, 4)

2. எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்திற்குப் பிரவேசிப்பேன் (சங் 43:4).

3. தேவனை சுரமண்டலத்தால் துதிப்பேன் (2 சாமு 23:1).

தேவனுடைய பீடம்

  • அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தண்டைக்கும், எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்திற்கும் பிரவேசிப்பேன். தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன் (சங் 43:4).

கர்த்தரே தாவீதுக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிறார்.

கர்த்தர் தாவீதை தம்முடைய வாசஸ்தலங்களுக்கு கொண்டுபோகும்போது, தாவீது இழந்துபோன சந்தோஷத்தைத் திரும்பவும்பெற்றுக்கொள்வார்.

தாவீது ஏங்கி தவித்த பூர்வகாலத்து அனுபவங்கள் அவருக்கு மறுபடியும் உண்டாகும்.

இதனால் தாவீதுக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகும். கர்த்தர் அவருக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருப்பார்.

கர்த்தர் தாவீதை தமது பரிசுத்த வாசஸ்தலங்களுக்கு கொண்டு போகும்போது, அங்கு தான் என்ன செய்யவேண்டுமென்பது தாவீதுக்கு நன்றாகத் தெரியும்.

“”நான் தேவனுடைய பீடத்தண்டைக்கு பிரவேசிப்பேன்” என்று தாவீது சந்தோஷத்தோடு சொல்லுகிறார்.

தேவனுடைய ஆலயத்திலே, தேவனிடத்தில் எவ்வளவு நெருக்கமாய்க் கிட்டிச் சேரமுடியுமோ, அவ்வளவு நெருக்கமாய் கிட்டிச் சேரவேண்டுமென்று தாவீது விரும்புகிறார். இதுவே அவருக்கு மிகுந்த சந்தோஷம்.

கர்த்தருடைய ஆலயத்திற்கு வருகிறவர்கள், அவருடைய சமுகத்திலே நெருங்கிச் சேரவேண்டும்.

கர்த்தருடைய பிரசன்னமும், அவருடைய சமூகமுமே நமக்கு மெய்யான சந்தோஷத்தைத் தரும். கர்த்தரே நமக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிறார்.

தாவீது தேவனுடைய பீடத்தண்டைக்கு பிரவேசிக்கும்போது, தேவனிடத்திற்கும் பிரவேசிக்க வேண்டுமென்று விரும்புகிறார்.

தேவனே அவருக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிறார். தேவனிடத்தில் பிரவேசிக்கும்போது நமக்கு வருங்கால ஆசீர்வாதங்களும், தற்காலத்து ஆசீர்வாதங்களும் கிடைக்கும்.

நமக்கு மறுமைக்குரிய சந்தோஷங்களும், இம்மைக்குரிய சந்தோஷங்களும் உண்டாகும். கர்த்தருடைய சமுகத்தில் வரும்போது நமக்குக் கிடைக்கிற மகிழ்ச்சி சாதாரண மகிழ்ச்சியல்ல. இது ஆனந்த மகிழ்ச்சி.

இந்த மகிழ்ச்சியை நம்முடைய மாம்சத்தால் கொடுக்க முடியாது. இது தேவன் கொடுக்கிற மகிழ்ச்சி.

“”எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்திற்கு” என்னும் வாக்கியம், மூலஎபிரெய பாஷையிலே அதிகமாய் வலியுறுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது.

இது மிகவும் முக்கியமான வார்த்தை. கர்த்தரே நமக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிறார் என்பதை அறிந்துகொண்டு, நம்முடைய மகிழ்ச்சிக்கு கர்த்தருடைய சமுகத்தில் வரவேண்டும்.

மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் உலகத்திலே தேடக்கூடாது. மாம்சத்தின் இச்சைகளை நிறைவேற்றுவதினால் மகிழ்ச்சி கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்துபோய்விடக்கூடாது.

கர்த்தரே நம்முடைய ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிறார். அவரே நமக்கு ஜெயங்கொடுக்கிற கர்த்தராயிருக்கிறார்.

என் ஆத்துமாவே, தேவனை நோக்கிக் காத்திரு சங் 43:5

  • சங் 43:5. என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.

கர்த்தரே தாவீதுக்கு நம்பிக்கையாயிருக்கிறார். தாவீதின் நம்பிக்கை ஒருபோதும் தோல்வியடைவதில்லை.

இந்த வாக்கியத்திலும், இதற்கு முந்திய சங்கீதத்தில் இரண்டு வாக்கியங்களிலும், தாவீது கர்த்தரிடத்தில் தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்துகிறார்.

“”என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்” என்று தாவீது மூன்று முறை கர்த்தரிடத்தில் முறையிட்டுவிட்டார்.

தாவீது ஒவ்வொரு முறை கர்த்தரிடத்தில் முறையிடும்போதும், “”தேவனை நோக்கிக் காத்திரு” என்று தனக்குள்ளே ஆறுதலாகவும் சொல்லுகிறார்.

தாவீது கர்த்தரிடத்தில் முறையிடும்போது, கர்த்தர் தனக்கு உதவிபுரிவார் என்று விசுவாசிக்கிறார்.

கர்த்தருடைய சமுகத்தில் காத்திருக்கும்போது, கர்த்தருக்கு ஏற்ற வேளையில், அவருடைய உதவியும், ஒத்தாசையும் நமக்குக் கிடைக்கும் என்று நம்பவேண்டும்.

நாம் கர்த்தரை நோக்கிக் காத்திருக்கும்போது, சும்மா அமைதியாயிருக்கக்கூடாது. நாம் காத்திருக்கிற வேளை தேவனைத் துதிக்கிற வேளையாயிருக்கவேண்டும்.

தாவீது தேவனை நோக்கிக் காத்திருக்கும்போது, “”என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்” என்று சொல்லுகிறார்.

தாவீது கர்த்தரை நோக்கிக் காத்திருக்கும்போது, விசுவாசத்தோடு அவரைத் துதிக்கிறார். தாவீது கர்த்தரிடத்தில் விசுவாசத்தோடு எதிர்பார்க்கிறார்.

தான் எதிர்பார்ப்பதை கர்த்தர் தனக்குக் கொடுப்பார் என்று விசுவாசித்து, தாவீது கர்த்தரைத் துதிக்கிறார். கர்த்தரை மகிமைப்படுத்துகிறார்.

கர்த்தருடைய மகிமையில் தாவீதும் சந்தோஷமாயிருக்கிறார். கர்த்தரே தாவீதுக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிறார்.

கர்த்தருடைய சந்தோஷத்தை தாவீது பரிபூரணமாய் அனுபவிக்கிறார். இதற்காக தாவீது கர்த்தரை இன்னும் துதிப்பேன் என்று சொல்லுகிறார்.

 

Leave a Reply