மனுஷிகத்தின் இரகசியம் III.சரீரம்
மனுஷருடைய பௌதீக சரீரம்.
ஜீவனுள்ளோருடைய உடலும் மரித்தோருடைய உடலும் சரீரம் என்று அழைக்கப்படுகிறது. சில மார்க்கங்களில் சரீரமானது தீமையை விளைவிக்கக் கூடியதாகவும், இது ஆத்துமாவைவிட தாழ்ந்ததாகவும் விவரிக்கப்படுகிறது.
வேதாகமமோ சரீரத்தைப் பற்றி கூறும் போது இது தேவன் மனுஷனுக்கு கொடுத்திருக்கும் ஈவு என்று கூறுகிறது (ஆதி 2:7).
தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். ஆதியாகமம் 2:7
பழைய ஏற்பாட்டில் சில இடங்களில் சரீரம் என்பது பிரேதத்தைக் குறிக்கிறது (எண் 6:6)
அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் நாளெல்லாம் யாதொரு பிரேதத்தண்டையில் போகக்கூடாது. எண்ணாகமம் 6:6
வேறு சில இடங்களில் கர்ப்பத்தின் கனியை குறிப்பதற்கு மனுஷனுடைய ஒரு பகுதியாக சரீரம் விவரிக்கப்படுகிறது (உபா 28:4).
உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். உபாகமம் 28:4
பழைய ஏற்பாட்டில் சரீரத்திற்கு கூறப்பட்டுள்ள அதே பொருளே புதிய ஏற்பாட்டிலும் கூறப்பட்டிருக்கிறது. புதிய ஏற்பாட்டில் சரீரத்தைக் குறித்து சில புதிய உபதேசங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
அப்போஸ்தலர் பவுல் சரீரத்தைக் குறித்து எழுதும் போது அது பாவத்தை பிறப்பிப்பதற்கு காரணமாக இருப்பதாக எழுதியிருக்கிறார் (1கொரி 6:18).
வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும். வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான். 1 கொரிந்தியர் 6:18
பாவத்தின் சம்பளமாக சரீரம் மரிக்க வேண்டும் (ரோம 7:24).
நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? ரோமர் 7:24
மனுஷனுடைய சரீரத்தை பாவம் வஞ்சிக்கிறது (ரோம 1:24).
இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். ரோமர் 1:24
கிறிஸ்தவ விசுவாசிகள் சரீரத்தின் கிரியைகளை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் (ரோம 8.13).
மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள், ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள். ரோமர் 8:13
தங்கள் சரீரங்களை தேவனைப் பிரியப்படுத்தும் பரிசுத்த பலிகளாக செலுத்தவேண்டும் ரோம் 12:1.
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.ரோமர் 12:1
மனுஷன் ஜீவனோடு இருப்பதற்கு சரீரம் தேவைப்படுகிறது. சில இடங்களில் சரீரம் என்பது முழுமையான நபருக்கு அடையாளமாக கூறப்பட்டிருக்கிறது.
இயேசுகிறிஸ்துவும் பவுலும் சரீரம் என்னும் வார்த்தையை இந்த வழியிலேயே பயன்படுத்தியிருக்கிறார்கள் (மத் 6:22-23; பிலி 1:20).
மத்தேயு 6:22-23
கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது, உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.
உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும், இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்!
நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும். பிலிப்பியர் 1:20
மரணத்திற்குப் பின்பு சரீரத்தின் நிலைமை பற்றி வேதாகமத்தில் சிறிதளவே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. முழுமையான இரட்சிப்பும், முழுமையான மனுஷத்துவமும் மரணத்தில் ஆரம்பமாகாமல், இயேசுகிறிஸ்து மறுபடியும் திரும்பி வரும்போது ஆரம்பமாகிறது.
இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு திரும்பி வரும்போது விசுவாசிகள் தங்களுடைய நித்தியமான அழிவில்லாத மறுரூபமான சரீரங்களைப் பெற்றுக் கொள்வார்கள் (1கொரி 15:35-49).
1 கொரிந்தியர் 15:45-49
அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது. பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.
ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்மசரீரமே முந்தினது. ஆவிக்குரிய சரீரம் பிந்தினது.
முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன். இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.
மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே. வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே.
மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம்.
உடல் ஆரோக்கிய வழிகளைப் பின்பற்றுதல்
நல்ல ஆரோக்கியமான சரீரம் தேவனுக்கு மகிமையையும், புகழ்ச்சியையும் கொடுக்கும். அவருடைய ஊழியத்தில் பயன்படுவதற்கு நல்ல நிலையில் இருக்கும். நம்முடைய வியாதிகளை குணப்படுத்துவதாக தேவன் வாக்குப் பண்ணியுள்ளார் (சங்கீதம் 103:3).
அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, சங்கீதம் 103:3
அதே வேளையில் நம்முடைய உடல் நலத்தை காத்துக் கொள்ளும் பொறுப்பையும் தேவன் நமக்குக் கொடுத்துள்ளார். நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து மகிழ்ச்சியடைவதற்கு உதவிபுரிய ஒருசில எளிமையான வழிமுறைகள் இங்கு கூறப்பட்டுள்ளன.
நன்றாகச் சாப்பிடுதல்.
இதற்கு அதிகமாகச் சாப்பிடுதல் என்பது பொருள் அல்ல. நல்ல ஆரோக்கியமான சரிவிகித உணவைச் சாப்பிடுவதை இது குறிப்பிடும். வைட்டமின்கள் என்னும் தாதுப்பொருட்கள் உள்ளன.
ஒருவர் நல்ல ஆரோக்கியமுடன் உணவில் இருப்பதற்கு வைட்டமின்கள் அவசியம் தேவை. ஒரு குறிப்பிட்ட உணவை அதிகமாகச் சாப்பிட்டு இதர உணவுகளைச் சாப்பிடாமல் இருந்தால், ஒரு சில வைட்டமின்கள் நம்முடைய சரீரத்தில் குறைவுபடும். இதன் விளைவாக உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
உடற்பயிற்சி:
சரியாக உடற்பயிற்சி செய்ய வில்லையென்றால் உடல் எடை அதிகரித்து சரீரம் பருமனாகி விடும். உடல் ஆரோக்கியத்திற்கு இது கேடு விளைவிக்கும். இதற்காக உடற்பயிற்சி மிகவும் அவசியம். சரீர உழைப்பே சரீரத்திற்குக் கொடுக்கப்படும் நல்ல உடற்பயிற்சி ஆகும். உங்களுடைய வேலை அறிவு பூர்வமாகவும், ஓரிடத்தில் அமர்ந்து செய்ய வேண்டியதாகவும் இருந்தால், உங்களுக்கு சரீர உழைப்பும், உடற்பயிற்சியும் தேவை.
ஆகையினால் சில விளையாட்டுகளை விளையாடுவது நல்லது. அல்லது குறைந்த பட்சம் அனுதினமும் சிறிது தூரம் நடந்தாவது உடற்பயிற்சி செய்யவேண்டும்.
போதுமான அளவு ஓய்வு எடுத்தல்:
அளவுக்கு மீறி வேலை செய்வது நமது உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல். அதிகப்படியான சரீர உழைப்பினாலும், மூளை வேலையினாலும் நாம் களைப்படைந்து விடுவோம்.
ஆகையினால் நமது சரீரத்திற்கு ஓய்வு தேவை. ஓய்வு நாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது (மாற்கு 2:27)
பின்பு அவர்களை நோக்கி,மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை,ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது. மாற்கு 2:27
இதை இயேசு கூறியபொழுது அதைச் சம்பிரதாயத்திற்காகக் கூறவில்லை. விஞ்ஞானத்தின்படி ஒரு நபர் ஒருநாளில் சில குறிப்பிட்ட மணிநேரம் தான் வேலை செய்யவேண்டும். தினமும் 8 மணி நேரமாவது தூங்கவேண்டும்.
சுத்தமாக இருத்தல்:
இஸ்ரவேலர்கள் சுத்தமாக இருப்பதைப்பற்றி லேவியராகமம் புத்தகத்தில் தேவன் விளக்கிக் கூறியுள்ளார். குளிக்கவேண்டும், உடுப்புகளைத் துவைக்க வேண்டும். வீடுகளைச் சுத்தப்படுத்த வேண்டும், தூய்மையான உணவை உண்ண வேண்டும். தாங்கள் பாளயமிருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.
வனாந்திர வாழ்க்கையில் ஆரோக்கியமான, சுத்தமான சூழ்நிலை இருந்திருக்காது. இருந்தபோதிலும் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை (சங்கீதம் 105:37).
அப்பொழுது, அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படப்பண்ணினார், அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை. சங்கீதம் 105:37
இந்தக் காலத்தில் கர்த்தர், நியமித்துள்ள ஒழுங்குகளை விசுவாசிகள் அனைவரும் கடைபிடித்தால், கடைபிடிக்கும் அனைவருக்கும் நல்ல உடல் ஆரோக்கியம் இருக்கும்.
பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுதல்
விபத்துக்களினால் நமது சரீரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுவிடும். இதனால் கர்த்தருடைய ஊழியத்தைச் செய்வதற்கு பயனற்றவர்களாக ஆகிவிடுவோம். ஆகையினால் விபத்தைத் தவிர்ப்பதற்கு நம்மால் முடிந்த அனைத்தையும் கைக்கொள்வது மிகவும் அவசியம்.
நம்முடைய இல்லங்களிலும் தெருக்களிலும் பணிபுரியும் இடங்களிலும் நம்முடைய பாதுகாப்பை உறுதி பண்ணும் காரியங்களைக் கைக்கொள்ளவேண்டும். ஒருசிலருக்கு விபத்துக்கள் அடிக்கடி வரும். விபத்துக்களைப்பற்றிய பயமும் ஒரு சிலரிடம் அதிகமாக இருக்கும்.
இப்படிப்பட்ட சூழ்நிலை நம்மிடத்தில் காணப்படுமாயின், விபத்துக்களை விலக்குமாறும், தெளிந்த பாதுகாப்புள்ள சிந்தனையைக் கொடுக்குமாறும் கர்த்தரிடம் ஜெபம் பண்ணவேண்டும்.
தீய பழக்கவழக்கங்களிலிருந்து வில்குதல்
நமது சரீரம் பரிசுத்த ஆவியானவரின் ஆலயம். ஆகையினால் இது பாதுகாப்பாகவும், பரிசுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் பாதுகாக்கப்படவேண்டும். நம்முடைய சரீரத்தை அழிக்கும், சேதப்படுத்தும், காரியங்களுக்கு ஒப்புக்கொடுக்கக்கூடாது.
ஒப்புக் கொடுத்தால் சரீரங்கள் தீமையினால் அழியும். தம்முடைய ஆலயத்தை அசிங்கப்படுத்துபவர்கள் மீது தேவன் கடுமையான நடவடிக்கை எடுப்பார் (1கொரிந்தியர் 3:17).
ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார். தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது. நீங்களே அந்த ஆலயம். 1கொரிந்தியர் 3:17
ஆகையினால் விசுவாசிகள் , ஊழியர்கள் புகைத்தல், மதுபானம் அருந்துதல், போதைப் பொருட்களுக்கு அடிமையாதல் ஆகிய பழக்க வழக்கங்களிலிருந்து தங்களை விலக்கிக்காத்துக் கொள்ள வேண்டும்.
நல்ல விளம்பரங்களினாலும், பிரச்சாரங்களினாலும் தீய பழக்கவழக்கங்கள் ஓரளவு தடை பண்ணப்பட்டுள்ளன. இருப்பினும் தீய பழக்க வழக்கங்களின் அழிவுக்குரிய சக்திகள் மானிடர்களை எளிதில் தாக்கிவிடும்.
இயேசுகிறிஸ்து நம்முடைய கர்த்தரும், எஜமானும் ஆவார். தீய பழக்கவழக்கங்களை நாம் ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. தீய பழக்கவழக்கங்கள் நம்மில் வளர்ந்தால் ஒரு காலத்தில் அவையே நம்முடைய எஜமானாக மாறிவிடும். இயேசுகிறிஸ்து இதைப்பற்றி தெளிவாகக் கூறியுள்ளார்.
“இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது” (மத்தேயு 6:24). தீமையான பழக்கவழக்கங்களினால் ஆளுகை செய்யப்படும் நபர்களின் ஜீவியம் மிகவும் பரிதாபகரமாக இருக்கும். தீயபழக்கங்களை நிறுத்திவிட வேண்டு மென்று விரும்புவார்கள். ஆனாலும் அவர்களால் இவற்றை நிறுத்த முடியாது. நம்மிடத்தில் இப்படிப்பட்ட தீயபழக்கங்கள் ஏதாவது காணப்படுமாயின், அதிலிருந்து பிரிந்து விலகி வருவதற்கு இதுவே தக்கசமயம்.
ஜீவியத்தை ஆளுகை செய்ய பரிசுத்த ஆவியானவரை அனுமதிக்க வேண்டும். நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்வதற்கு (சுய கட்டுப்பாடு) பரிசுத்த ஆவியானவர் உதவிபுரிவார். தீய பழக்கவழக்கங்களிலிருந்து மீண்ட பிறகு பவுலைப்போன்று “நான் ஒன்றிற்கும் அடிமைப்பட மாட்டேன்” (1கொரிந்தியர் 6:12) என்று நம்மாலும் கூறமுடியும்.
விசுவாசிகள் ஊழியர்கள் தங்களுடைய சரீரங்களின் உக்கிராணக்காரர்கள். தங்களுடைய சரீர உணர்வுகளை விசுவாசிகள் கட்டுப்படுத்த வேண்டும். இவற்றைக் கட்டுப் படுத்தவில்லை யென்றால், இவை தீமையான பழக்க வழக்கங்களாக மாறி, நம்முடைய எஜமானாகவும் மாறிவிடும். விசுவாசிகள் ஊழியர்கள் அதிகமாக உண்பதற்கு அடிமையாகி விடக்கூடாது. (ஏசாயா 56:11).
திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள், பகுத்தறிவில்லாத மேய்ப்பர், அவர்களில் ஒவ்வொருவனும் தன் தன் வழியையும், அவனவன் தன் தன் மூலையிலிருந்து தன் தன் பொழிவையும் நோக்கிக்கொண்டிருக்கிறான். ஏசாயா 56:11
அதுபோலவே (1கொரிந்தியர் 7.1-5), விசுவாசிகள் ஊழியர்கள் வேசித்தனத்திற்கும் அடிமையாகிவிடக்கூடாது
நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறதென்னவென்றால், ஸ்திரியைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது. 1கொரிந்தியர் 7:1
ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும். 1கொரிந்தியர் 7:2
புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன். அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள். 1கொரிந்தியர் 7:3
மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி. அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி. 1 கொரிந்தியர் 7:4
உபவாசத்திற்கும், ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள். உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடிவாழுங்கள். 1 கொரிந்தியர் 7:5
தீய உணர்வுகளிலிருந்து விலகுதல்
நம்முடைய சரீரத்தில் ஏற்படும் ஒருசில உணர்வுகள் நமது ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும். சான்றாக கோபப்படுவதினால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது.
பேராசைப்படுவதினால் வயிற்றில் புண்கள் ஏற்படும்; பொறாமைப்படுவதும், எரிச்சல் படுவதும் கல்லீரலைப் பாதிக்கும். ஆகையினால் இப்படிப்பட்ட தீய உணர்வுகளை அகற்றவேண்டும். பரிசுத்த ஆவியானவர் நம்முடைய ஜீவியங்களில் ஆவியின் கனியை உண்டுபண்ணுமாறு அவரை அனுமதிக்க வேண்டும்.
ஆவியின் கனி நம்மிடத்தில் வளர்ந்து பரிபூரணமாக இருக்கும்பொழுது, நமது சரீரம் நல்ல ஆரோக்கியத்திலிருக்கும். நம்முடைய சரீரத்தின் உரிமையாளருக்கு நாம் கனத்தையும், மகிமையையும் கொடுப்போம்.
சரீர ஜீவியம்
ஓர் அலங்காரமான நல்ல அரியாசனத்தை இடிந்து பாழடைந்து போன வீட்டில் வைத்திருந்தால் எப்படி இருக்கும். பார்க்கவே சகிக்காது. ஆனால் ஒருசிலருடைய நடத்தைகள் இவ்வாறு தான் உள்ளன.
தங்களுடைய தனிப் பண்புகளில் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆனால் தங்களுடைய சரீரத்தை கவனியாமல் புறக்கணித்து விடுகின்றனர்.
நமது ஆள்தத்துவத்தில் நமது தனித்தன்மை ஒரு பகுதி மட்டுமே ஆகும். இதில் மற்றொரு பகுதியும் உள்ளது. இது நமது சரீரம் ஆகும். நமது தனித்தன்மையை நன்றாகக் கவனித்து வளப்படுத்துவது மிகவும் முக்கியமானது.
அதேவேளையில் நம்முடைய சரீரத்திற்கும், நாம் நல்ல உக்கிராணக்காரர்களாக இருக்க வேண்டும்.
நமது சரீரத்திற்கு நல்ல உக்கிராணக் காரர்களாக நாம் இருக்கவேண்டும். தேவனுடைய மகிமைக்காக நமது சரீரத்தைப் படுத்துவதற்கும், நல்ல நிலைமையில் இதை வைத்திருப்பதற்கும், மற்றவர்களுக்கு முன்பாக இதை முறைப்படி தகுதியாக காண்பிப்பதற்கும் நாம் தீர்மானிக்கவேண்டும்.
சரீரத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல்
நமது சரீரத்திற்கு தேவனே உரிமையாளர், கர்த்தர் இதை அங்கீகரியாமல் ஜீவிப்பவர்கள் குழம்பிய நிலையிலேயே இருப்பார்கள். பாவம் இவர்களுக்கு முதலாளியாக இருக்கும். ஆனால் தங்களுக்குத் தாங்களே முதலாளிகள் என்று தவறாக எண்ணிக் கொள்வார்கள்.
இவ்வாறு நினைத்துக்கொண்டு, அவமானப்படும் வரையிலும் (ரோமர் 1:24,26-27), தங்கள் சரீரங்களைப் பாவத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள் (எபேசியர் 4:19). மனிதன் தன்னுடைய புத்திக் கூர்மையினால் தன்னுடைய அடிமைத்தனத்தைப் புரிந்து கொள்வான். இருந்தாலும் தன்னிடமுள்ள பாவ ஆசைகளை அவனால் மேற்கொள்ளவோ, ஆளுகை செய்யவோ முடியாது (ரோமர் 7:23-24).
விசுவாசியின் நிலைமை இதிலிருந்து சற்று மாறுபட்டது. தேவனே விசுவாசியின் உரிமையாளர், கர்த்தர். பரிசுத்த ஆவியானவர் விசுவாசியினிடத்தில் ஜீவிக்கிறார் (1கொரிந்தியர் 3:6).
இதன் பொருள் என்னவெனில் பாவம் விசுவாசியின் முதலாளி அல்ல. ஏனெனில் பாவத்தின் ஆளுகையிலிருந்து பரிசுத்த ஆவியானவர் அவனை விடுவித்துள்ளார் (ரோமர் 8:2).
தன்னுடைய சரீரத்திற்கு முதலாளியாக இருக்கும் உரிமை மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையினால் மனிதன் இனிமேல் தன்னுடைய சரீரத்திற்கு அடிமையல்ல. ஆகையினால் தன்னுடைய சரீரத்தை ஆளுகை செய்வதற்கு பாவத்தை அனுமதிக்கக்கூடாது (ரோமர் 6:12-14: 1பேதுரு 2:11).
மனிதன் தன்னுடைய சரீரத்தை ஒடுக்கி முழுவதுமாகக் கீழ்ப்படுத்தவேண்டும் (1கொரிந்தியர் 9:27). மனிதன் தேவனுடைய உக்கிராணக்காரனாக இருப்பதினால் இதுவும் அவனுடைய பொறுப்புகளில் ஒன்றாகும்.
தேவனுடைய மகிமைக்காக சரீரத்தைப் பயன்படுத்துதல்
நமது சரீரத்திற்கு தேவனே உரிமையாளர் தங்களுடைய ஜீவியத்தில் இவ்வாறு அங்கீகாரம் பண்ணாதவர்கள் தங்களுடைய சரீரங்களின் அவயவங்களைத் தவறாகப் பயன்படுத்துவார்கள்.
சரீரத்தின் அவயவங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை வேதாகமம் தெளிவாக விளக்கியுள்ளது. (ரோமர் 3:13-15); யாக்கோபு 3.6-8; 2 பேதுரு 214).
நம்முடைய சரீரத்திற்கு தேவனை உரிமையாளர் ஆவியானவரின் ஆலயம். ஆகையினால் பாவமான நமது சரீரம் பரிசுத்த காரியங்களைச் செய்வதற்கு, நம்முடைய சரீரங்களைப் பயன்படுத்தக்கூடாது (எபேசியர் 4:28).
தவறான இடங்களுக்கு நமது கால்கள் செல்லக் கூடாது. நமது வாய் பொய்யையோ, அசிங்கமான வார்த்தைகளையோ மற்றவர்களைப் புண்படுத்தும் வார்த்தைகளையோ பேசக்கூடாது (எபேசியர் 4:25,29; 5:4).
நம்முடைய கண்ணை தவறான நோக்கங்களுடன், பிறரை இச்சையுடன் பார்ப்பதற்கு பயன்படுத்தக்கூடாது (மத்தேயு 5:27). மேலும் நமது சரீரத்தை விபச்சாரத்திலும், வேசித்தனத்திலும் பயன்படுத்தக்கூடாது (1கொரிந்தியர் 6:13-18).
நம் சரீரங்களுக்கு தேவனே உரிமையாளர் என்பதை அங்கீகாரம் பண்ணுவதற்கு மிகச்சிறந்த வழி, நமது சரீரத்தை அவருக்கு அர்ப்பணிப்பதுதான் (ரோமர் 6:13:121).
நம்முடைய சரீரங்களின் அவயவங்களைத் தேவனை ஆராதிப்பதற்காகவும், அவருக்கு சேவை செய்வதற்காகவும் பயன்படுத்தவேண்டும். இதுவே அர்ப்பணிப்பது ஆகும் (ரோமர் 6:19; 1கொரிந்தியர் 6:20). நம்முடைய சரீரங்களின் எல்லா அவயவங்களையும் தேவனுடைய மகிமைக்காக பயன்படுத்தமுடியும்.
நமது சரீரங்களின் அவயவங்களைத் தேவனுடைய மகிமைக்காக பயன்படுத்துவது போன்று, நீதியான நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தலாம்.
இதன் வாயிலாக தேவன் மகிமை அடைவார். கர்த்தருக்கு சேவை செய்வதற்காக, நமது சரீரத்தை நாம் பயன் படுத்தும்போது, அவர் நமது சரீரத்தைப் பராமரிப்பார் (1 கொரிந்தியர் 6:13).
இதன் பொருள் என்னவெனில் கர் த்தருடைய சேவையை செய்ய வேண்டுமென்று தங்களுடைய சரீரங்களை அர்ப்பணித்துள்ளவர்களின் பௌதீகத் தேவைகளை தேவன் சந்திப்பார் என்பதே ஆகும். நமக்கு புதுப்பெலன் கொடுப்பார் (ஏசாயா 40:29,31).
நமக்கு உணவையும், உடையையும் கொடுப்பார் (மத்தேயு 6:31-33). மேலும் நமக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும் கொடுப்பார் (யாத்திராகமம் 15:26).
சரீரத் தோற்றம்
தேவன் இருதயத்தைத்தானே பார்க்கிறார்! அப்படியிருக்கும் பொழுது நாம் ஏன் நன்றாகத் தோற்றமளிக்க வேண்டும்? (1சாமுவேல் 16:7) என்று சிலர் எண்ணலாம்.
கர்த்தர் இருதயத்தைப் பார்க்கிறார். இது உண்மைதான். ஆனால் மனிதர்கள் இருதயத்தைப் பார்ப்பதில்லை. தோற்றத்தையே பார்ப்பார்கள். நமது சரீரம் பரிசுத்த ஆவியானவரின் ஆலயம். நாம் இதன் உக்கிராணக்காரர்கள்.
ஆகையினால் இதை நம்மால் முடிந்தவரை கவனித்துப்பேண முடியும். நமது சரீரத்தைக் கவனியாமல் புறக்கணித்து விட்டால், மனிதர்கள் இதைப்பற்றி மிகவும் கேவலமாக எண்ணிக் கொள்வார்கள்.
இதனால் தேவனுக்கு மகிமையைக் கொடுக்க வேண்டும். இதைப் புரிந்துகொண்டு, தேவனை மகிமைப்படுத்தும் முறையில், நமது வெளித் தோற்றத்தைக் கவனிப்பது மிகவும் நல்லது.
சரீரத்தைச் சுத்தமாக வைத்திருத்தல்
நமது சரீரங்களுக்கு நாம் உக்கிராணக் காரர்கள். இது பரிசுத்த ஆவியானவரின் ஆலயம். இதை சுத்தமாக வைத்திருப்பது நமது பொறுப்பு. இதன் பொருள் என்னவெனில், நமது சரீரமும், உடுப்புகளும் சுத்தமாக வைக்கப்படவேண்டும்.
நாம் செய்யும் வேலையில் நம்முடைய ஆடைகள் விரைவில் அழுக்கடைந்து போகலாம். இவ்வாறு அழுக்கடைந்தால், வேலையை முடித்தவுடன் குளித்துவிட்டு, தூய்மையான ஆடைகளை அணியவேண்டும்.
ஒருசிலர் அசிங்கமாக இருப்பதையும் (துப்புறவாக இல்லாமல் அழுக்கடைந்து போய் இருப்பது) தாழ்மையையும் இணைத்துப்பார்த்துக் குழப்புகின்றனர். இப்படிப்பட்ட எண்ணம் ஒருசிலரிடம் காணப்படுகிறது. இவர்கள் துப்புறவான ஆடைகளை அணிவதில்லை. இதனாலும் தேவனுக்கு அவமரியாதையே ஏற்படும்.
சரியான உடுப்புகளை உடுத்துதல்
தேவனுடைய உக்கிராணக்காரர்கள் எப்படிப்பட்ட ஆடைகளை உடுத்தவேண்டும்? ஆதி சபையில் இதற்கு ஒரு சில ஒழுங்குகள் கொடுக்கப் பட்டுள்ளன (1கொரிந்தியர் 11:2-15; 1தீமோத்தேயு 2:9; 1பேதுரு 3:1-3).
மானிட இனத்தின் துவக்கத்திற்குச் சென்று, ஆடை அணியும் பண்பைச் சற்று ஆராய்ந்து பார்த்தால், ஒரு சில நியதிகளை நம்மால் காணமுடியும். ஆதியாகமம் 3:7ம் ஆதாமும், ஏவாளும் தங்களுக்கு அரைக் கச்சைகளை உண்டு பண்ணினார்கள்.
இந்த ஆடை அவர்களுக்குப் பொருத்தமாகப்பட்டது. ஆனால் தேவனோ இந்த ஆடையில் பிரியப்படவில்லை. ஆகையினால் தேவன் தமக்கு சரி என்று பட்ட தோல் ஆடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார் (ஆதியாகமம் 3:21). நாம் நமக்காகத்தான் ஆடைகளை அணிகிறோம். இருப்பினும் இதுவும் ஒருவழியில் தேவனைப் பிரியப்படுத்துகிறது.
நம்முடைய ஆடைகள் நம்மையோ, அல்லது இந்த உலகத்தையோ பிரியப்படுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை. ஏனெனில் தேவனுடைய ஆலயத்தை எவ்வாறு முறைப்படி ஆடை அணிவித்து மூடுவது என்பதில் மட்டுமே நாம் கவனம் செலுத்துகிறோம்.
விசுவாசிகள் உடை உடுத்திக்கொள்ள வேண்டிய விதத்தைப்பற்றி ஆராய்ந்து பார்க்கும்பொழுது, நான்கு தத்துவங்களைக் கவனிக்கவேண்டும். அவை வேறுபாடு, எளிமை, தன்னடக்கம், நடைமுறை ஒழுங்கு எனப்படும்.
இந்த நான்கு தத்துவங்களும் ஆதிசபையில் கடை பிடிக்கப்பட்டன. பேதுரு. பவுல் ஆகியோரின் உபதேசங்களில் இதற்கு சான்றுகளைக் காணலாம்.
வேறுபாடு
“புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர்தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள் (உபாகமம் 22:5).
இஸ்ரவேலர்கள் உடைகளை உடுத்திக்கொள்ளும் விதத்தில், ஆண்களுக்கும், பெண்களுக்கும் வேறுபாடு காணப்படவேண்டு மென்று தேவன் விரும்பினார். இது வேறுபாடு கொள்கை எனப்படும். கொரிந்து சபையிலும் உடைகளை உடுத்தும் விஷயத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டன.
அப்பொழுது, பவுல் இந்தத் தத்துவத்தைப் பயன்படுத்தியுள்ளார் (1கொரிந்தியர் 11:2-15). இன்றையதினம் விசுவாசிகளாக இருக்கும் நாமும், வேறுபாடு தத்துவத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். நம்முடைய பண்பாட்டில் பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்துகின்றபடி, உடைகளை உடுத்தும் விதத்தில் கவனம் செலுத்தவேண்டும்.
தேவனுடைய ஆலயத்திற்கு நாம் உக்கிராணக்காரர்களாக இருக்கிறோம். ஆகையினால் தேவன் அங்கீகரியாதவாறு நடந்து கொள்ளாமல் இருக்க, மிகுந்த எச்சரிக்கையுடன் காணப்படவேண்டும்.
எளிமை
விசுவாசிகள் அதிக ஆடம்பரம் இல்லாமல், நவநாகரீகமாக இல்லாமல், சாதாரணமாக தூய்மையான ஆடைகளை அணிவது எளிமை எனப்படும். ஆதி சபையில் பேதுருவும், பவுலும் இந்தத் தத்துவத்தைக் குறிப்பிட்டுள்ளனர். (1தீமோத்தேயு 21; 1பேதுரு 3:3)
இயேசுவும், யாக்கோபும் விலையுயர்ந்த ஆடைகளை அணிந்த ஐசுவரியவான்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர் (லூக்கா 16:19; யாக்கோபு 2:2). ஐசுவரியவான்கள் விலையுயர்ந்த ஆடைகளை உடுத்தியதற்காக, அவர்களை இவர்கள் இருவரும் குற்றப்படுத்தவில்லை.
இருந்தபோதிலும் இவர்களுடைய விலையுயர்ந்த ஆடைகள் பாமர ஏழைகளுக்கு மத்தியில் மிகவும் வித்தியாசமாகத் தெரியும். இவர்களிடம் ஏழைகளைப்பற்றிய எந்தவிதக் கரிசனையும் இல்லை என்பது, அவர்கள் உடுத்தியிருந்த ஆடம்பரமான உடைகளில் இருந்து புலப்படும் தேவனுடைய உக்கிராணக்காரர்கள் இவ்வாறு விலையுயர்ந்த ஆடம்பரமான ஆடைகளை அணிவது தவறு.
தன்னடக்கம்
இதை நாணம் என்றும் கூறலாம். விசுவாசிகள் ஒவ்வொருவரிடமும் தன்னடக்கம் இருக்கவேண்டுமென்று பவுல் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் பொருள் என்னவெனில், தங்களுடைய உடல் அழகை காட்டும்வகையில் விசுவாசிகள் ஆடைகளை அணியக்கூடாது என்பதாகும்.
ஆடைக்குறைப்பு தன்னடக்கம் அன்று. அதுமட்டுமல்ல இவ்வாறு பகட்டாக ஆடை அணிபவர்களையும் நாம் பின்பற்றி, அவர்களைப்போன்றும் அணியக் கூடாது. நம்முடைய சரீரம் தேவனுடைய சேவைக்கு பயன்படும் என்பதை கிறிஸ்தவர்கள் எப்பொழுதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் (1கொரிந்தியர்6;13).
ஆகையினால் நம்முடைய சரீரம் தேவனுடைய மகிமைக்காக பயன்பட வேண்டுமேயன்றி, மற்றவர்கள் இடறல் அடைவதற்காகப் பயன்படக்கூடாது (1கொரிந்தியர் 10:31-32). இந்த உலகத்தில் நாகரீகம் வேகமாக வளர்ந்து வருகிறது.
மானிடரின் நீதிநெறிப்பண்பு சீரழிந்து வருகிறது. ஆகையினால் தன்னடக்கம் ஒவ்வொரு விசுவாசியும் கடைபிடிக்கவேண்டிய மிகவும் முக்கியமான கொள்கையாகும்.
நடைமுறை ஒழுங்கு
காலம், கலாச்சாரம், சமுதாயச் சூழ்நிலைகள் ஆகியவற்றுக்கு ஏற்றபடி அனுசரித்து நடந்துகொள்வது நடைமுறை ஒழுங்கு ஆகும். அதாவது, ஓர் இடத்தில், ஒரு காலத்தில், ஒரு கலாச்சாரத்தில் சரி என்று காணப்படும் பண்பாடானது.
வேறோர் இடத்தில், வேறொரு காலத்தில், வேறொரு கலாச்சாரத்தில் தவறானதாக இருக்கமுடியும். 1கொரிந்தியர் 11:13-ல் அப்போஸ்தலர் பவுல் நடைமுறை ஒழுங்கைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
கொரிந்துவில் உள்ள ஸ்திரீகள் தேவனை நோக்கி ஜெபம் பண்ணுகையில், தங்கள் தலைகளை மூடிக்கொள்ளாமல் இருப்பது அவலட்ணமாக இருக்குமென்று பவுல் இவ்விடத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சில பழக்கவழக்கங்கள் பாவமாக இராவிட்டாலும், சற்று விகாரமாக இருக்கும். சான்றாக ஆலயத்தில் செருப்பு அணிவது தவறு அல்ல.
ஆனால் தேவனுடைய பிரசன்னத்தில் பாதரட்சைகளை அணிந்திருப்பது மோசேக்கு தவறாகக் காணப்பட்டது (யாத்திராகமம் 3:6).
இன்றையதினமும் நமது தேச தேவாலயத்திற்குள் செல்லும் போது செருப்புகளை அணிந்து செல்வது தவறு என்று கருதப்படுகிறது. இப்படிப்பட்ட இடங்களில் தேவாலயத்திற்குள் செல்லும் முன்பு, செருப்புகளை வெளியே கழற்றி வைக்கவேண்டும்.
வேறு சில தேசங்களில் தேவாலயத்திற்குள் செல்லும்பொழுது தொப்பிகள் அணிந்திருக்கக் கூடாது. யூதர்கள் தங்களுடைய ஆராதனை வேளைகளில், எப்பொழுதும் தலையில் பாகை கட்டியிருப்பது வழக்கம். குளிக்கும்பொழுது குளிக்கும் ஆடையில் இருப்போம்.
அதே ஆடையை அணிந்து கொண்டு தேவாலயத்திற்குச் செல்ல முடியுமா? முடியாது. பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் தக்கபடி எவ்வாறு ஆடைகளை அணிய வேண்டுமென்று தீர்மானம் பண்ண நமக்கு உதவிபுரிவார்.
ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்ப நாம் முறைப்படி ஆடைகளை அணியவேண்டும். இது தேவனைப் பிரியப்படுத்தும். தேவனைப் பிரியப்படுத்தி ஜீவிப்பதே நமக்கு நல்லது.
இந்தத் திட்டத்தில் தேவன் தம்மைக் குறித்தும் ஒரு நோக்கம் கொண்டிருக்கிறார். தேவன் இந்த உலகத்தையும், மனிதனையும் தம்முடைய மகிமைக்காகவே சிருஷ்டித்தார் (வெளிப்படுத்தின விசேஷம் 4.11; ஏசாயா 43:7).
அவருடைய மகிமைக்கு நாம் புகழ்ச்சியாய் இருக்கும்படிக்கு நம்மை புதுப்பிக்க வேண்டுமென்று தேவன் திட்டமிட்டார் (எபேசியர் 1.6,12-14; வெளிப்படுத்தின விசேஷம் 5:11-13).
நாம் ஜீவிப்பதன் நோக்கம் என்ன? இந்த உலகத்திற்கு நாம் தேவையா? இல்லையா? அல்லது இந்த உலகத்தில் நீங்கள் தேவையற்ற ஒருவர் என்று எண்ணுகின்றீர்களா? இந்த உலகத்தில் பிறக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கிறோமா?
இயேசு கிறிஸ்து நம்முடைய இரட்சகர் என்று தெரிந்து கொள்வதற்கு முன்பாக இப்படிப்பட்ட எண்ணங்கள் நம்முடைய மனதில் காணப் பட்டிருக்கலாம்.
நாம் இரட்சிக்கப் படுவதற்கு முன்பே தேவன் நம்மை விரும்பியதாலும், நம்முடைய ஜீவியத்தைப்பற்றி அவருக்கு ஒரு திட்டம் உள்ளதாலும், நாம் சிருஷ்டிக்கப் பட்டிருக்கிறோம்.
ஒருசிலர் பிறப்பதற்கு முன்பாகவே, அவர்களுடைய வாழ்க்கையைப்பற்றி தேவன் ஒருதிட்டம் வைத்திருந்தார் இதற்கு வேதாகமத்தில் பல சான்றுகள் உள்ளன. சான்றாக மோசேயின் வாழ்க்கையைப்பற்றி தேவன் திட்டம் வைத்திருந்தார்.
விசுவாசத்தினால் மோசேயின் தாய் தேவனுடையத் திட்டத்தை கண்டறிந்து எகிப்திய காவலாளிகளால் அந்தக் குழந்தை கொல்லப்படாமல் பாதுகாத்தாள் (எபிரெயர் 11:23).
சிம்சோனின் வாழ்க்கையைப்பற்றியும் தேவனிடம் திட்டம் இருந்தது (நியாயாதிபதிகள் 13:1-5). அதுபோலவே எரேமியா (எரேமியா 1:4-5). யோவான் ஸ்நானன் (லூக்கா 1:5-17) ஆகியோருடைய வாழ்க்கையைக் குறித்தும் இன்னும் அனைவருடைய வாழ்க்கையைக் குறித்தும் தேவனிடம் திட்டம் இருந்தது.
“நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்” (ஆதியாகமம் 12:2) என்று தேவன் ஆபிரகாமிடம் கூறினார். ஆபிரகாம் இந்த உலகத்திற்கு ஆசீர்வாதமாக இருப்பார் என்பதே இதன் பொருளாகும்.
வரலாற்றில் நாம் சிலருடைய வாழ்க்கையைக் கவனித்துப் பார்க்கும்போது, அவர்கள் மனுக்குலத்திற்கு சாபமாகவும், பிரச்சனைக்கு உரியவர்களாகவும் இருந்தனர் என்பதை காணலாம்.
ஒவ்வொரு மானிடரும் இந்த உலக வாழ்வில் ஒருவொருக்கொருவர் ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் என்பதே தேவனுடைய திட்டமாகும். இருந்த போதிலும் பலசமயம் இந்த உலகமானது சந்தோஷமில்லாத ஸ்தலமாகவே உள்ளது. இந்த உலகத்தை சந்தோஷமான ஸ்தலமாக ஆக்குவதற்கு நம் ஒவ்வொருவராலும் உதவிபுரியமுடியும்.
யாராவது விபரீதமாக யாரும் எதிர்பாராத விதத்தில் இறந்து விட்டால் இறந்துபோன நபரைப்பற்றி “ஐயோ பாவம்! இது அவனுடைய தலையெழுத்து” என்று கூறுவது இயல்பு.
ஆனால் இப்படிப்பட்ட விபரீத முடிவைத் தேவன் யாருக்கும் திட்டமிட்டு வைத்திருக்கவில்லை. யாரும் விபரீதமாக இறந்து போவது தேவனுடைய விருப்பம் அன்று எல்லோரும் இரட்சிக்கப்பட வேண்டுமென்று தேவன் விரும்புகிறார் (எசேக்கியேல் 18:23; 1தீமோத்தேயு 2:4; 2பேதுரு 3:9).
ஒருசில மனிதர்கள் தங்களுடைய ஜீவியங்களில் தாங்கள் செய்துள்ள காரியங்களையும் தேவனுடைய திட்டத்தையும் சேர்த்துப்பார்த்து குழம்புகின்றனர். மற்றவர்களையும் குழப்புகின்றனர்.
இயேசுகிறிஸ்துவை நம்முடைய இரட்சகராக ஏற்றுக்கொண்டு, அவருடைய அழைப்புக்கு செவி கொடுக்கும் பொழுது, நம்முடைய ஜீவியங்களைக் குறித்த தேவனுடைய திட்டம் ஒரு நல்ல வடிவத்தைப்பெறுகிறது.
தேவன் தம்முடைய சாயலை நமக்குள் மறுபடியும் புதுப்பிக்கும் பொழுது தேவனுடையத் திட்டம் செயல்படத் துவங்குகிறது (2கொரிந்தியர் 3:18; கொலோசெயர் 3:10). இந்த உலகத்தில் நம்மைக் கொண்டு வந்ததன் நோக்கத்தை தேவன் நமக்குள் வெளிப்படுத்தும் பொழுதும் தேவனுடையத் திட்டம் துவங்குகிறது.
தெரிந்தெடுக்கப்பட்டுள்ள ஜனங்களின் ஸ்தாபகராக இருக்குமாறு தேவன் ஆபிரகாமை அழைத்தார் (ஆதியாகமம் 12:1-2).
தம்முடைய ஜனத்தை விடுவிப்பவராக மோசேயையும் (யாத்திராகமம் 3:1-10), தீர்க்கதரிசியாக இருக்குமாறு ஏசாயாவையும் (ஏசாயா 6:8-10), அப்போஸ்தலராக இருக்குமாறு சவுலையும் அப்போஸ்தலர் 26:15-18) தேவன் அழைத்தார்.
தேவன் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக என்னையும் உன்னையும் அழைத்துள்ளார்.
இந்த உலகத்தில் நம்முடைய ஜீவியங்களைக் குறித்த தேவனுடைய திட்டத்தில், பாடுகளை அனுபவிப்பது ஒரு முக்கியமான பகுதியாகும். ஒரு சிற்ப ஆசாரி ஒரு கல்லை உளியினால் உடைத்து, தன்னுடைய மனதில் தான் விரும்பும் வடிவத்தை உருவாக்குவான்.
அதுபோலவே நம்முடைய வாழ்க்கை தேவனுடைய திட்டத்திற்கு ஒத்துப்போகும் வரையில், தேவன் நம்முடைய ஜீவியத்தில் நாம் பாடுகள் அனுபவிப்பதை அனுமதிப்பார். யோசேப்பு (ஆதியாகமம் 374-36; 391-23), பவுல் (2கொரிந்தியர் 11:23-28)ஆகிய இருவரும் தேவனுடைய பிரசித்திப்பெற்ற மனிதர்கள்.
இருப்பினும் அவர்கள் இருவரும் தங்களுடைய வாழ்க்கையில் பல பாடுகளை அனுபவித்தனர். இயேசுகிறிஸ்துவும், துக்கம் நிறைந்தவரும், பாடு அனுபவித்தவருமாய் இருந்தார் (ஏசாயா 53:3). மேலும் அவர் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார் (எபிரெயர் 5:8). இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப் படுவதற்காக கல்வாரி மேட்டிற்குச் செல்லும் போது பல பாடுகளை அனுபவித்தார்.
இதுவரையிலும் நம்முடைய வாழ்க்கையிலும் இவ்வாறு பாடுகளை அனுபவித்த அனுபவம் ஏற்பட்டிருக்குமாயின் இதற்காக ஆச்சரியம் அடைய வேண்டாம்.
தேவன் தாம் விரும்புகின்ற வழியில் நம்மை பயன்படுத்துவதற்காக ஆயத்தப்படுத்துகிறார் என்பதில் ஐயம் ஏதுமில்லை. தேவனுடைய திட்டத்திற்கு ஆயத்தப்படும் பொழுது, இக்காலத்தில் நமக்கு ஏற்பட்ட பாடுகளைவிட, இனிமேல் நம்மிடத்தில் வெளிப்படும் மகிமையினால் ஏற்படும் சந்தோஷம் மிகவும் அதிகமாக இருக்கும் (ரோமர் 8.18).
மேலே விசுவாசிகள் என குறிப்பிட்டிருப்பது சபை மக்களுக்கு மட்டும் என்பது பொருளல்ல. ஊழியர்களுக்கும் பொருந்தும். ஏனென்றால், தேவனுடைய பிள்ளைகள் யாவரும் இயேசுவுக்கு விசுவாசிகளே. நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு எல்லா ஊழியர்களும் விசுவாசிகளே.