அமலேக்கியர்கள்

அமலேக்கியர்கள்

வேதாகம ஜாதிகள் : அமலேக்கியர்கள்

அறிமுகம்:-

வேதாகமக் காலத்தின் துவக்க நாட்களிலேயே மிகவும் பிரபலமாக விளங்கியது இந்த அமலேக்கிய ஜாதி.

இது முற்படுத்தப்பட்ட ஜாதியா, அல்லது பிற்படுத்தப்பட்ட ஜாதியா, அமலேக்கியர்களுக்கு ஸ்காலர்ஷிப் உண்டா இல்லையா என்றெல்லாம் நம்மால் சொல்ல முடியவில்லை.

காரணம், அரசாங்கம் பட்டியல் போட்டு ஜாதிகளை வகைப்படுத்தும் முன்பே ஆதியோடந்தமாக அழிந்து போய்விட்டது இந்த அமலேக்கிய ஜாதி.

செழிப்பாக வாழ்ந்த மிகப்பெரிய ஜாதி

இவர்கள் வாழ்ந்திருந்த காலத்தில் மிகவும் செழிப்பாக வாழ்ந்த மிகப்பெரிய ஜாதி என்பது மாத்திரம் நிச்சயம்.

செழிப்பும் நிறையக் கூட்டமும் இருந்தால் எந்தவொரு ஜாதிக்குமே முரட்டுத்தனமும், ஆணவமும், புத்தியீனமும் ஒட்டிக்கொள்வது இயல்பு. இந்த இயல்புக்கு அமலேக்கியர்களும் விலக்கல்ல.

வாழ்ந்திருந்த காலத்தில் அமலேக்கியர்களில் ஒரு நோயாளி கூட நெஞ்சை நாலங்குலம் நிமிர்த்தியே நடந்தான். தங்களுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்பதாக அமலேக்கியர்களில் ஒவ்வொருவனும் நினைத்துக் கொண்டிருந்தான். ஜாதிபடுத்தும் பாடு.

இவர்களின் பூர்வ கோத்திரம்

இஸ்ரவேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து கானான் நாட்டிற்கு வரும் சமயத்தில் இந்த அமலேக்கியர்கள் கானானுக்கு தெற்கே உள்ள பகுதிகளிலும், சீனாய் தீபகற்பப் பகுதியிலும் திரளாகப் பரவியிருந்தனர். யார் இந்த அமலேக்கியர்கள்? இவர்களின் பூர்வோத்திரம் என்ன என்பது பற்றி கொஞ்சம் நாம் அறிந்து கொள்ள வேண்டாமா? கொஞ்சம் என் பின்னாலேயே வாருங்கள். அமலேக்கிய ஜாதிக்குள் கொஞ்சம் போய் எட்டிப்பார்த்துவிட்டு பத்திரமாக திரும்பி விடலாம்.

வேதத்தைக் சற்றுக் கவனமாக வாசிக்கிறவர்களாயிருந்தால் ஏசாவின் வம்சாவளியை வாசிக்கையில் அமலேக் என்ற பெயரை வாசித்திருப்பீர்கள். இந்த அமலேக் ஏசாவின் மூத்த குமாரனாகிய எலிப்பாஸ் என்பவருடைய மறுமனை யாட்டியாகிய திம்னாத்துக்குப் பிறந்தவர். ( ஆதி 36:12)

ஏதோமின் பதினான்கு பிரபுக்களின் பெயர்களை வாசிக்கும்போது அதில் அமலேக்கின் பெயரும் வருகிறது. அக்காலத்திலேயே பெயர் பெற்ற செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர் இந்த அமலேக்.

அக்கால பிரபுக்களின் வாழ்க்கை முறை

அக்காலத்தில் பிரபுக்கள் என்றால் வழவழப்பான கற்களில் அரண்மனை கட்டி கைநிறைய மோதிரம் போட்டு. ஜிகினாச் சட்டையுடன், வலது கையில் சவுக்கும், இடது கையில் மீசையை திருகியபடியும், மொட்டை போட்ட அடியாட்கள் புடைசூழ உலாவரும் சினிமாத்தனமான பண்ணையார்கள் மாதிரி கற்பனை செய்து கொள்ளக்கூடாது.

வேதம் குறிப்பிடும் அக்காலத்திலெல்லாம் பிரபுக்கள் என்பவர்கள் கொஞ்சம் அதிகப்படியான ஆடுமாடுகள். ஒட்டகங்கள், நிறைய வேலையாட் கள் நாலைந்து கூடாரங்கள் என்ற வைத்துக் கொண்டு வாழ்ந்த பெருந்தனக்கார கீதாரிகள் மாத்திரமே.

ஒருவன் செல்வச்சீமானா அல்லது ஏழையா என்பதெல்லாம் அக்காலத்தில் அவனிடமிருந்த கால்நடைகளின் தொகையை வைத்தே கணக்கிடப் பட்டு வந்தது. நியாயமாகப் பார்க்கப் போனால் இவர்களுக்கு நிரந்தரமான வீடுகள் கூட இருந்ததில்லை. எல்லாம் கூடாரவாசம் தான்.

மழைத்தாழ்ச்சி உண்டாகி கிணறுகள் வற்றினாலோ, அல்லது மழைத் தாழ்ச்சி உண்டாகி தங்கள் ஆடுமாடுகளுக்கு புல் கிடைக்காமல் போனாலோ இவர்கள் தங்கள் கூடாரங்களை சுருட்டிக் கட்கத்தில் வைத்துக்கொண்டு கூட்டமாய் தங்கள் பிள்ளைகளையும், தங்கள் பத்துப்பதினைந்து மனைவிகளையும், வேலைக்காரர் மற்றும் கால்நடைகளையும் ஊர்வலமாய் அழைத்துக் கொண்டுபோய் புல்லும் தண்ணீரும் காணப்படும் பகுதிகளில் டென்ட் அடித்துவிடுவார்கள். இதுதான் அக்காலத்திய பிரபுக்களின் வாழ்க்கை முறை.

வேதபண்டிதர்களின் கருத்து

நம் அமலேக்கும் இந்த மாதிரியான வகைப் பிரபுதான். இந்த அமலேக்கின் வம்சாவளியில் தோன்றியவர்கள் தான் அமலேக்கியர்கள் என்பது பெரும்பான்மையான வேதபண்டிதர்களின் தீர்மானமான முடிவு.

கொஞ்சப்பேர் மாத்திரம் இதை ஒத்துக்கொள்வதில்லை. இவர்களும் வேதப்பண்டிதர்கள் தான். “அமலேக்கியர்களுக்கும், அமலேக்கிற்கும் சம்மந்தமேயில்லை சார்” என்று நம் தலையில் ஓங்கியடித்து சொல்கிறார்கள். எப்படி. அமலேக்கியர்களின் பெயரிலேயே அமலேக் இருக்கிறதே? என்று கேட்பீர்களேயானால் தொலைந்தது கதை.

“உட்காருங்கள் சார் பேசலாம்.” என்று உங்களை அமர வைத்துவிட்டு *பழனியப்பன் என்று ஒருவர் இருந்தால் அவர் பழனிக்காரராய்த்தான் இருக்க வேண்டுமா என்ன? அமலேக்கெல்லாம் பிறப்பதற்கு முன்பே அதாவது ஆபிரகாம் காலத்திலேயே அமலேக்கியர்கள் இருந்தார்கள் என்பதற்கு வசன ஆதாரம் இருக்கிறது பார்க்கிறீர்களா?” என்றபடியே தங்கள் பெரிய எழுத்து பைபிளைத் தூக்கிக் கொண்டு வந்து ஆதாரம் காட்டுவார்கள். (ஆதி 14: 7) நீங்கள் அழும்நிலைக்கு வந்து கண்களில் இரண்டு சொட்டு கண்ணீராவது காட்டுகிற வரைக்கும் ஆதாரங்களை ஊட்டிக்கொண்டேயிருப்பார்கள்.

உண்மைதான். அமலேக்கியர்களுக்கும் அமலேக்கிற்கும் எழுத்தளவில் கூட சம்மந்தம் கிடையாது என்று நீங்கள் ஒத்துக்கொள்ளும் வரைக்கும் உங்களை விடமாட்டார்கள். ஆனால் உண்மை நிலவரம் என்ன தெரியுமா?

அமலேக்கியர்கள் யார் வேதத்தின் ஆதாரம்

அமலேக்கியர்கள் உண்மையிலேயே அமலேக்கின் சந்ததியினர் தான். பின் ஏன் ஆபிரகாம் காலத்திலேயே அமலேக்கியர்கள் வாழ்ந்ததாக வேதம் குறிப்பிடுகிறது?

ஆதியாகமத்தை மோசேதான் எழுதினார் என்பது உங்களுக்கு தெரிந்த செய்தி தான். அப்படி மோசே ஆதியாகமத்தை எழுதுகிற காலத்தில் காதேஸின் தென்புறம் மற்றும் நாகேப் பாலைவனம் ஆகியபகுதிகளில் அமலேக்கியர்களின் கைதான் ஓங்கியிருந்தது. எனவேதான் ஆதியாகமத்தில் இப்பகுதியைக் குறிப்பிட வேண்டிவந்தபோது, அமலேக்கிய நாடு என்று குறிப்பிட்டாரே யொழிய, ஆபிரகாம் காலத்தில் அமலேக்கியர்கள் இருந்தார்கள் என்று குறிப்பிடவில்லை. காரணம், அப்போதுதான் வேதத்தை வாசிக்கும் இஸ்ரவேலர்கள் அது எந்தப் பகுதி என்று சட்டென விளங்கிக் கொள்ள முடியும். மற்றபடி அமலேக்கியர் என்ற இனம் ஆபிரகாமின் காலத்தில் வாழ்ந்ததாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. அதற்கான எந்தவொரு சரித்திர ஆதார மும் இதுவரை கிடைக்கவும் இல்லை.

ஆக மொத்தத்தில் அமலேக்கியர் என்ற இனம் ஏசாவின் மறுமனையாட்டியின் மகனான அமலேக் என்பவரின் வம்சாவளியில் தோன்றியது என்பதே சரி.

அமலேக் என்பதன் பொருள்

அமலேக் என்றால் பள்ளத்தாக்கில் குடியிருப்பவன் என்று பொருள். துவக்க காலத்தில் அமலேக்கியர்களின் எல்லை என்பது பாலஸ்தீனா வின் தென்பகுதியிலிருந்த காதேஸ் வனாந்திரத்தின் வரையும், மேற்கே சீனாய் மற்றும் பெனின்சுலா மலைப்பிரதேசம் வரைக்கும், வடக்கே அரேபியா வரை யும் வியாபித்திருந்தது. நியாயாதிபதிகளின் காலத்தில் இவர்களது எல்லை விரிவடைந்து எப்பிராயீம் மலைப்பகுதி வரையிலும் வியாபித்திருந்தது.

இஸ்ரவேலரின் பயணத்தை தடுத்த முதல் எதிரி

யாத்திராகம காலத்தில் இஸ்ரவேலர்கள் பயணம் செய்தபோது அவர்களுக்கு விரோதமாய் எழும்பி. அவர்களுடன் போர் செய்து அவர்கள் பயணத்திற்கு முட்டுக்கட்டை போட முயன்றவர்கள் பலர். அவர்களுள் முதன்மையானவர்கள் இந்த அமலேக்கியர்கள்தான்.

தடைசெய்ததில் மட்டுமல்ல, இஸ்ரவேலர்களுடன் போர் தொடுத்ததிலும் முதல் ஆட்கள் இந்த அமலேக்கியர்கள்தான். சீனாய் மலையிலுள்ள ரெவிதீமிலே இவர்கள் இஸ்ரவேலர்களை எதிர்த்தார்கள். அமலேக்கியர்கள் மிகவும் முரட்டு இனத்தினர். எது என்றாலும் அரிவாளைத் தூக்குகிற ரகம்.

அமலேக்கியர்களின் தெய்வம்

அமலேக்கியர்கள் ஏசாவின் சந்ததியினர் என்றாலும், விக்கிரக வழி பாட்டையே செய்து வந்தார்கள். இவர்களது பிரதான தெய்வங்கள் சின் மற்றும் அஸ்தரோத் என்பவையாகும். இரண்டுமே டிராகுலா வகையை சேர்ந்தவையா தலால் இவர்களது வழிபாடுகளிலும், திருவிழாக்களிலும் இரத்த வாசனை சற்றுத் தூக்கலாகவே இருக்கும். நரபலிகள் என்பது திருவிழாக்களில் சர்வ சாதாரணம். இவை தவிர சின்னச் சின்னதாய் ஏராளமான விக்கிரகங்களையும் வணங்கி வந்தனர்.

தாங்கள் ஜெயித்து அடிமைகளாகப் பிடித்துக் கொண்டு வரும் மனிதர் களின் உடல் உறுப்புகளை குறிப்பாக கண், நாக்கு, விரல்கள் போன்றவற்றை கொய்து இந்த விக்கிரகங்களுக்கு காணிக்கையாக படைப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். மீதி மனிதனை கருணையுடன் தகனித்துவிடுவார்கள்.

அமலேக்கியர்களின் தொழில்

இவர்களுக்கு பிரதான தொழில் விவசாயம் என்றுதான் சொல்லிக் கொள்வார்கள். ஆனால் இவர்கள் கவனம் செலுத்தியதென்னவோ கொள்ளை யடிப்பதில்தான். அதுவும் எப்படி? போர் என்ற போர்வையில் தங்களைச் சுற்றியுள்ள வேறு பல இனத்தவரின் மீது படையெடுத்து அவர்களது உடமைகள் மற்றும் கால்நடைகளை கையகப்படுத்திக் கொள்வது இவர்கள் ஸ்டைல்.

இப்படிப் பலவித பொல்லாத சுபாவங்களுடன் இஸ்ரவேலரை எதிர்ப்பதும் சேர்ந்துகொள்ள தேவனுடைய கோபம் இவர்கள் மேல் பற்றியெரிந்தது. தான் அவர்களுக்கு செய்யப்போவதை மோசே மூலமாக முன்னறிவித்தார். எப்படி? வாசிக்கலாமா.

அமலேக்கியர்கள் குறித்து தேவன் உரைத்த தீர்க்கதரிசனம்

பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, இதை நினைவுகூரும் பொருட்டு ஒரு புத்தகத்தில் எழுதி, யோசுவாவின் செவிகேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழெங்கும் இராதபடி நான் நாசம் பண்ணுவேன் என்றார். (யாத் 17:14)

மேலும் பிலேயாம் மூலம் வெளிப்படுத்தும் போதும் கர்த்தர் இந்த அமலேக்கியர்களுக்கு உண்டாகப்போகும் முடிவைப்பற்றி இப்படிச் சொல்லுகிறார்.

அமலேக்கு முந்தியெழும்புவான். ஆனாலும் அவன் முடிவிலே முற்றிலுமாய் நாசமாவான் (எண் 24:20)

தேவனுடைய வார்த்தை அமலேக்கியர்களுக்கு விரோதமாக இருந்தாலும் கர்த்தர் அவர்களை உடனே அழித்துவிடவில்லை. கொஞ்சக் காலம் விட்டு வைத்திருந்தார்.

அமலேக்கியர் படையெடுப்பு

ரெவிதீம் யுத்தத்தில் இஸ்ரவேலர்களிடம் தோற்று ஓடின அமலேக்கியர்கள் பிரச்சனையை அத்துடன் விட்டுவிடவில்லை. மீண்டும் தங்களை பலப்படுத்திக்கொண்டு ஒரு வருடத்திற்குப் பிறகு இஸ்ரவேலர்களுடன் மீண்டும் யுத்தம் செய்து அவர்களை முறியடித்து ஓர்மா மட்டும் துரத்தினர். (எண் 14: 45) முறிந்தோடிய இஸ்ரவேலர்கள் பலகாலம் காதேஸிலேயே சுற்றித் திரிந்தனர். (உபா 1:46)

பின்பு நியாயாதிபதிகளின் காலத்தில் மோவாபிய ராஜா எக்லோனின் தலைமையில் மீண்டும் அமலேக்கியர்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு இஸ்ரவேலருடன் போரிட்டு ஜெயித்தனர். இஸ்ரவேலர்கள் 18 ஆண்டுக்காலம் இவர்களின் கீழ் அடிமை வாழ்க்கை வாழ்ந்தனர். (நியா 3:12,14)

அதன் பிறகு கொஞ்சக்காலம் கழித்து மீண்டும் கிதியோன் காலத்தில் பலமுறை இஸ்ரவேலர்கள் மேல் படையெடுப்புச் செய்தனர். (நியா 6:1-3)

இதில் ஒரு விசேஷம் கவனித்தீர்களா? இஸ்ரவேலர்கள் எப்போதெல்லாம் கர்த்தரின் வார்த்தையை மீறி பொல்லாப்பு செய்தார்களோ, அப்போது மாத்திரமே அமலேக்கியர்கள் இஸ்ரவேலர்களுக்கு விரோதமாக எழும்பி யுத்தம் செய்தனர்.

இஸ்ரவேலர்களுடன் பலமுறை யுத்தம் செய்துவந்த அமலேக்கியர்கள் பெரும்பாலும் யுத்தங்களில் ஜெயமே பெற்று வந்தாலும் அவை எதுவுமே நிரந்தரமான வெற்றிகள் அல்ல.

கர்த்தர் அவர்களைக் குறித்து சொன்ன சாபவார்த்தைகள் தலையின் மீது கத்தியாக தொங்கிக் கொண்டேயிருந்தது. காலங்கள் எவ்வளவுதான் கடந்தாலும் தேவன் சொன்ன வார்த்தைகள் நிறைவேறாமல் போய்விடுமா என்ன? காலங்கள் எவ்வளவுதான் போனாலும் கர்த்தர் தம் வார்த்தையை மறக்காமல் எப்படி நிறைவேற்றுகிறார் என்பதற்கு சான்று இந்த அமலேக்கியர்களின் வாழ்க்கையிலும் எத்தனை துல்லியமாய்க் காணப்படுகிறது பாருங்கள்.

அமலேக்கியரின் அழிவு

கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்த போது அவர்களை அமலேக்கியர் வழிமறித்த செய்கையை மனதிலே வைத்தி ருக்கிறேன் என்றார். (1சாமு 15:2)

சவுல் ராஜாவின் மூலம் அமலேக்கியர்களை மடங்கடித்து அவர்களு டைய ராஜாவாகிய ஆகாக் என்பவனையும் அழித்துப்போட்டார்.

அத்துடன் அமலேக்கியர்களின் தண்டனை முடிந்து போய்விட வில்லை. தாவீதின் நாட்களில் பலமுறை தாவீது அமலேக்கியர்களின் மீது படை யெடுத்து அவர்களது கிராமங்களையெல்லாம் அழித்தார். தாவீதின் இந்தச் செய்கையால் தாவீதை பழிவாங்க சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த அம லேக்கியர்கள் சிக்லாகை தாக்கி தாவீதின் மனைவிகளையும் அவரது பொருட் களையும் கொள்ளையடித்து கொண்டு போய்விட்டனர். தாவீது தன்னுடைய ஆட்கள் 400 பேருடன் சென்று அமலேக்கியரை மடங்கடித்து தன்னுடைய உடமைகளைத் திருப்பிக் கொண்டார். யுத்த நேரத்தில் ஒட்டகங்களில் ஏறி 400 அமலேக்கிய வாலிபர்கள் தப்பி ஓடிப்போனார்கள். அவர்கள் தவிர வேறொரு வரையும் தாவீது உயிருடன் விட்டுவைக்கவில்லை.

தப்பி ஓடிய இந்த அமலேக்கியர்கள் சேயீர் மலைத்தேசத்தில் குடியேறினார்கள். அதன் பின்பு அமலேக்கியர்கள் இஸ்ரவேலரின் வழியில் குறுக்கிட வில்லை.குறுக்கிடும் அளவிற்கு அவர்களுக்கு பலமும் இல்லை. ஆனாலும் கர்த்தர் அவர்களை விட்டுவிடவில்லை. தான் சொன்ன வார்த்தையை நிறை வேற்றினார். எப்படித் தெரியுமா?

எசேக்கியா ராஜாவின் காலத்தில் இஸ்ரவேலர்களின் எண்ணிக்கை பெருகினபோது கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் தங்களை சுற்றியிருந்த பகுதி களின் மேல் படையெடுத்து அங்கிருந்தவர்களை ஜெயித்து, தாங்கள் ஜெயித்த அந்தந்தப் பகுதிகளில் குடியேறினார்கள்.

அதன்படியே சிமியோனின் மனிதர்களில் சுமார் 500 பேரும், இஷியின் குமாரர்களான பெலத்தியாவும், நெகரியாவும், ரெப்பாயாவும், ஊசியேலும் சேயீர் மலைத்தேசத்திற்குப் போய் அந்தப் பகுதியைப் பிடிக்கும்படி யுத்தம் செய்தனர். அங்கு குடியிருந்தவர்களோ அமலேக்கியர்கள். இஸ்ரவேலர்களின் தாக்குதலைச் சந்திக்கப் பெலனின்றி அமலேக்கியர்கள் யாவரும் வேருடன் இஸ்ரவேலர்களின் வாளுக்கு இரையாயினர்.

அதன்பின்பு அமலேக்கியர்கள் என்று ஒரு இனமே இல்லாமல் போய்விட்டது. இன்றைக்கு நீங்கள் லென்ஸ் வைத்து தேடினாலும் ஒரு அமலேக்கியனைக் கூட கண்டுபிடிக்க முடியாது.

முடிவுரை

வாழ்ந்திருந்த காலத்தில் ஒப்பாரும் மிக்காரும் இலர் என்று வாழ்ந் திருந்த அமலேக்கியர்கள் தேவஜனத்திற்கு எதிராக எழும்பியதன் மூலம் தங்கள் அழிவைத் தாங்களே தேடிக் கொண்டார்கள். தேவனுக்கும் தேவனுடை யவர்களுக்கும் எதிராக எழும்பின எந்த ஜாதியும், எந்த நாடும் நிலை நின்ற தில்லை என்பதற்கு அமலேக்கியர்களே முன்னுதாரணம்.

வேதம் சொல்லுகிறது: இடறுதல்கள் உங்களுக்கு வருவது அவசியம். ஆனால் எவன் மூலம் இடறுதல்கள் வருகிறதோ அவனுக்கு ஐயோ. அமலேக் மாத்திரமல்ல, இன்றைக்கும், தேவனுக்கும் அவருடைய ஜனங்களுக்கும் விரோதமாக எழும்பும் அநேக தேசங்கள் அழிகிறதை சரித்திரம் கண்கூடாகக் காட்டிக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் ஜனங்கள் தான் திருந்தியபாடாயில்லை.

[su_heading size=”24″ align=”left” id=”H2″]அமலேக்கியர் Pdf file[/su_heading]

[su_button url=”https://charlesmsk.blogspot.com/2022/08/pdf.html” target=”blank” style=”3d” size=”9″ wide=”yes” center=”yes” radius=”round” icon=”icon: download”]Download PDF Now[/su_button]

Leave a Reply