வேதாகம ஜாதிகள் : பெலிஸ்தர்கள் -1
இராட்சத தோற்றம்!
பெரிய பனைமரம் மாதிரி ஈட்டி, கால்களிலும் கை களிலும் இரும்பு, மற்றும் வெண்கலத்தினாலான கவசங் கள். கூடவே ஆயுதங்களைப் பிடித்துக் கொண்டு வர ஒரு உதவியாள்.இடிமுழக்கம் போல குரல், திம்… திம்.. என்று நடந்து வந்து.”யார் என்னுடன் சண்டையிட இஸ்ரவேல் தரப்பில் இருந்து வருகிறீர்கள்?” என்று கேட்கும் ஆணவம்.
கோலியாத்!
ஆம், பெலிஸ்தர் என்ற தலைப்பை படித்தவுட னேயே யாருக்கும் சட்டென முதலில் ஞாபகத்திற்கு வரு வது பெலிஸ்தனாகிய கோலியாத்’தான்.
பெலிஸ்தர்கள் தங்கள் நன்றியைக் காட்ட யாருக்காவது சிலை வைக்க வேண்டுமானால் அவர்கள் கோலியாத்துக்குத் தான் வைக்கவேண்டும்.
பெலிஸ்தர்கள் எத்தனையோ போர்களை செய்திருக்கிறார்கள். பெலிஸ்தர்களில் எத்தனையோ பராக்கிரம மான மன்னர்கள் தோன்றியிருக்கிறார்கள். ஆனால் அவர் கள் யாரும் செய்ய முடியாததை வேதத்தில் இரண்டே இரண்டு காட்சிகளில் தோன்றும் கோலியாத் செய்துவிட் டது ஆச்சரியம் தான்.
ஆம். பெலிஸ்தர் என்ற பெயரை நம் மனதில் ஆழமாய்ப் பதித்து அதை இன்று வரை ஞாபகமாக வைத்திருக்க செய்த பெருமை கோலியாத்தையே சாரும்.
உண்மையைச் சொல்லுங்கள். பெலிஸ்தர் என்ற தலைப்பைப் படித்தவுடனே உங்கள் ஞாபகத்திலும் மின்னலாய் பளிச்சிட்டது கோலியாத்’ தானே? வேதத்தில் தாவீது- கோலியாத் தோன்றும் சம்பவம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, யாவருக்கும் ரொம்பப் பிரியமானது.
பள்ளிப்பாட புத்தகத்திலிருந்து காமிக்ஸ் கதைகள், திரைபடங்கள், வீடி யோ படங்கள், ஸ்டிக்கர்கள், பிரசங்கங்கள் என்று இந்த இருவரும் தோன்றாத இடங்களே இல்லை. எனவே தாவீது எப்படி பரிச்சயமானவரோ அதேபோல கோலியாத்தும் யாவருக்கும் பரிச்சயம்.
கோலியாத் ஜீன்களின் சாசத்தினால் இராட்சத தோற்றம் அமையப் பெற்றவர். அதனால் பெலிஸ்தர்கள் எல்லோருமே இப்படித்தான் இராட்சதத் தனமாய் இருப்பார்களோ என்று கிறிஸ்தவர்களில் பலரும் நினைப்பதுண்டு.
என் நண்பரில் ஒருவர் கொஞ்சம் அதிகப்படியாய் வளர்ந்துவிட்ட தன் மகளை பெலிஸ்தியா என்றுதான் செல்லமாக அழைப்பார்.
ஆனால் உண்மையில் பெலிஸ்தர்கள் என்றாலே இராட்சதர்கள் அல்ல. பெலிஸ்தரும் மற்ற இனத்தவர் மாதிரி சாதாரண உடலமைப்பு கொண்டவர் கள்தான். கோலியாத்தும் அவர் தம்பி லாகேமியும் (1நாளா 20:5) இன்னும் ஒன்றிரண்டு பேர்கள் மட்டும்தான் விதிவிலக்குகள், விதிவிலக்குகள் எல்லா இனத்திலுமே உண்டுதானே?
பெவிஸ்தரின் பூர்வோத்திரம்
பெவிஸ்தரின் பூர்வோத்திரம் பற்றி சொல்ல வேண்டுமானால் கொஞ்சம் கஷ்டம், பெலிஸ்திய இனம் பழங்காலம் தொட்டே அதாவது முற்பிதாக்களின் காலத்திற்கு முன்பிருந்தே இருந்து வந்திருக்கிறது.
துவக்க காலத்தில் பெலிஸ்தரின் பெயர் புலுக்ஷடி என்றுதான் குறிக்கப் பட்டும், அழைக்கப்பட்டும் வந்தது. பிற்காலத்தில் யாராவது பெயர் மாற்றும் ஆட்சியாளர்கள் பெலிஸ்தியாவில் தோன்றினார்களோ என்னவோ, புலுசடி பெலிஸ்தர் என்றாகிவிட்டது. ஆனால் இதுவும் நன்றாகத்தானிருக்கிறது.
பெவிஸ்தரின் தொழில்
பண்டைக்காலங்களிலிருந்த பெரிய இனம் ஒன்றில் உள்ளடங்கியி குந்த கடல் சார்ந்த தொழில் செய்யும் இனத்தவர்கள் தான் இந்த பெலிஸ்தர்கள்,
கி.மு. 2000ல் இவர்களது இனம் சற்று விருத்தியடைந்து தனிப் பெரும் இனமாக வளரத்துவங்கியது. தொழிலிலும் வியாபாரத்திலும் இவர்களது அசாத்திய உழைப்பு இவர்களை கொஞ்சக் காலத்திலெல்லாம் உயர்த்தியது. அரசியல், பொருளாதாரம், சமூக அமைப்பு என்று எல்லாவற்றிலும் வளரத் துவங்கினார்கள்.
கோலியாத் அளவுக்கு! பெலிஸ்தர்கள் தங்களை பிற இனத்திலிருந்து தனிப்படுத்திக் கொள்ள துவங்கி தங்கள் எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ள ஆரம்பித்தனர். இதனால் தங்களது நகரங்களை கடல் பகுதிகளை விட்டு தூரத்தில் அதாவது நாட்டின் உட்பகுதியிலேயே அமைத்துக்கொண்டார்கள்.
நகரங்களையும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏராளமாக பெலிஸ்தர்கள் குடிபுகுந்ததால் காலப்போக்கில் தங்கள் கடல் தொழிலையே மறந்து விட்டனர். பிள்ளைகள்,” கடல்’னா என்னம்மா? கடலை விளைகிற இடமா” என்று கேட்க ஆரம்பித்தார்கள்.
பெலிஸ்தரின் வம்சாவளி
பெலிஸ்தரின் வம்சாவளி என்று பார்த்தால் இவர்கள் காமின் சந்ததியைச் சேர்ந்தவர்கள் என்றே வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. காமின் வழியில் தோன்றியவர் மிஸ்ராயிம் (Mysrayim) இந்த மிஸ்ரா யீமின் குமாரர்களில் ஒருவன் பெயர் கஸ்லூகீம். இவர்தான் பெலிஸ்தர்களின் தலைவர் (ஆதி 10:14)
எகிப்தியர்களை தமிழில் எகிப்தியர் என்கிறோம். ஆங்கிலத்தில் ஈஜீப்ஷியன் என்று அழைக்கிறார்கள். கிரேக்குவில் அய்ஜிப்டோஸ் (Aygyptos) என்பார்கள். ஆனால் எபிரெய மொழியில் எகிப்தியரை மிஸ்ராயீம் என்று தான் அழைக்கிறார்கள். காரணம் எகிப்தியர்கள் காமின் வழித்தோன்றலாகிய மிஸ்ராயீம் சந்ததியை சேர்ந்தவர்கள் என்பதே.
இந்த மிஸ்ராயீமின் வம்சத்திலிருந்தே பெலிஸ்தர்களும் தோன்றியுள்ளதால் பூர்வத்தில் எகிப்தியர்களாக இருந்தவர்கள் தான் பிற்காலங்களில் வேறு இன மக்களுடன் கலந்து பெலிஸ்தர் என்று புதிய இனமாக மாறியுள்ளனர் என்று சரித்திர நிபுணர்கள் கருதுகின்றனர். இதற்கு ஆராய்ச்சியில் கண்டுபிடிக் கப்பட்ட சில ஆதாரங்களும் துணைபுரிகின்றன.
வரலாற்று ஆதாரங்கள்
பாபிலோனிய சரித்திர பதிவுகளான கப்டோரா (Kaptara) மற்றும் எகிப்தியர்களின் சரித்திரப் பதிவான டைவ் (Kftyw) ஆகியவற்றில் பெலிஸ்தியர்களின் பூர்வ வரலாறுகள் மற்றும் அவர்கள் வாழ்ந்த இருப்பிடங்கள் பற்றி ஆங்காங்கே நிறையக் குறிப்புகள் காணப்படுகின்றன. இவை யாவும் பெலிஸ் தியர்கள் எகிப்திய இனங்களுள் ஒன்று என்று தலையிலடிக்காத குறையாக சத்தியம் செய்கின்றன. பெலிஸ்தர்கள் எகிப்திய இனத்தவர் என்பதில் நமக் கொன்றும் சங்கடம் இல்லை. இருந்துவிட்டுப் போகட்டும்.
மட்டுமல்ல பெலிஸ்திய நகரங்களான காசா, மற்றும் அஸ்கலோன் பகுதிகளில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள பெலிஸ்தியர் பயன்படுத் திய பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் யாவும் எகிப்தியர் பயன்படுத்தும் பொருட்களை ஒத்துப்போகின்றன.
பெலிஸ்தியரின் சமுதாய அமைப்பு, வாழ்க்கை முறை
பெலிஸ்தியரின் சமுதாய அமைப்பு, வாழ்க்கை முறை இவற்றை ஆராயும்போதும் அவர்கள் வாழ்க்கை முறை அப்படியே எகிப்தியருடன் ஒத்துப்போகிறது என்று கண்டறிந்துள்ளனர்.
வேதத்தில் பெலிஸ்திய நாடு என்று குறிக்கப்படும் பகுதி மத்திய தரைக்கடற்கரையில் யோப்பாவிற்கும். காசாவிற்கும் இடையில் அமைந்துள்ளது.
நாடு என்றவுடனே நீங்கள் இந்தியா மாதிரியோ, சீனா மாதிரியோ விஸ்தீரணமாக கற்பனை பண்ணிவிடக்கூடாது.
பெலிஸ்த நாட்டின் மொத்த அளவே ஐம்பது மைல் நீளமும், இருபது முழ அகலமும் தான். அதாவது 1000 சதுர மைல் பரப்பளவுதான். ஆனாலும், தங்கள் தேசத்தைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதிலும், வளம் கொழிக்கப்பண்ணுவதிலும் பெலிஸ்தர்கள் சமர்த்தர்கள். கொள்ளையடித்தாவது. தம் நாட்டை அழகுப்படுத்திவிடுவார்கள்.
இஸ்ரவேலர்கள் தோன்றுவதற்கு முன்பாகவே தனிப்பெரும் இனமாக இருந்து வந்தவர்கள் இந்த பெலிஸ்தர்கள். முற்பிதாக்களின் காலத்திற்கு முன்பெல்லாம் மக்கள் நாடோடிகள் போல தனித்தனி இனங்களாக கூட்டம் கூட்டமாகத்தான் வாழ்ந்து வந்தனர். இராஜா, ராணுவம் போன்ற அமைப்பெல் லாம் அப்போது அவர்களுக்கு இருந்ததில்லை.
இவ்வகையான கூட்டங்களுக்கு ஏதாவது ஒரு தலைவன் இருப்பான். பெரும்பாலும் இந்த தலைவர்கள் நிறைய கால்நடைகளையும், வேலைக்காரர்களையும் கொண்டுள்ள ஒரு பெரிய பனக்காரர்களாகவே இருப்பார்கள்.
வேறு கூட்டத்தை சேர்ந்தவர்கள் இவர்களது கால்நடைகளை கொள்ளையடிக்க கருதி ஆட்களுடன் வரும்போது இந்த வேலையாட்கள் தான் ராணுவம் மாதிரி செயல்பட்டு அவர்களுடன் சண்டை செய்வார்கள். மற்ற நாட்களில் சாதுவாய் ஆடு, மாடு மேய்க்கப் போய்விடுவார்கள்.
இவர்கள் ஒருவேளை பிற இனமக்களை கொள்ளயடிக்கப் போனால் கூட இதே வேலையாட்கள் தான் தங்கள் தலைவனுடன் படைமாதிரி புறப்படுவார்கள். மீதி நாட்களில் மந்தை மேய்ப்பார்கள்.
இதுதான் அந்தக் காலத்தில் மக்களின் வாழ்க்கை முறை.
ஆனால், இப்படிப்பட்ட காலகட்டத்திலேயே பெலிஸ்தர்கள் ராஜாவை ஏற்படுத்தி, இராணுவத்தை ஏற்படுத்தி, ஜனங்களை ஒழுங்குப்படுத்த சட்டங்களை ஏற்படுத்தி நகரங்களைக் கட்டி ஒரு கட்டுக்கோப்பான தேசமாக தங்கள் தேசத்தை உருவாக்கியிருந்தார்கள் என்பதுதான் ஆச்சரியம்.
ஆபிரகாம் வாழ்ந்த காலத்திலேயே, அதாவது கி.மு. 1875ல் பெலிஸ்தர்களின் ராஜாவான அபிமலேக்கிற்கும்ஆபிரகாமிற்கும் இடையே நடை பெற்ற பெயர்செபா உடன்படிக்கை பற்றி ஆதி 21 : 31-33 வரையுள்ள வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாசித்துப் பாருங்கள்!
பெலிஸ்தியரின் ராஜா
பெலிஸ்தருக்குு இராஜா இருந்ததையும், இராஜாவுக்கு சேனாபதி இருந்ததையும். இக்காலத்தில் தேசங்கள் ஒன்றோடொன்று உடன்படிக்கை செய்து கொள்வதைப்போல அக்காலத்திலேயே அவர்கள் உடன்படிக்கை முறையை கைக்கொண்டதையும் காணலாம்.
அதுமட்டுமல்ல பெலிஸ்திய ராஜாவான அபிமலேக்கின் வார்த்தைகளில் காணப்படும் நாசூக்கும். அமரிக்கையும் பெலிஸ்த இனம் அக்காலத்தி லேயே ஒரு நாகரிகம் வாய்ந்த இனமாக விளங்கி வந்ததை தெரிவிக்கிறதல்லவா?
காலம் என்ன? இஸ்ரவேல் என்ற பெயரே உலகில் தோன்றாத காலம். எந்த ஜாதியும் நாகரிகம் பெறாமல் நாடோடிகளாய் திரிந்த காலம். இஸ்ரவேலில் கூட ராஜாக்கள் கி.மு. 1095ல் தான் ஏற்படுத்தப்பட்டனர். ஆனால் பெலிஸ்தர்களின் தேசத்தில் இராஜாக்கள் இதற்கு சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆட்சிசெய்து கொண்டிருந்தனர்.
இஸ்ரவேலின் முற்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு ஆகியோரின் காலத்திலெல்லாம் பெலிஸ்தர்கள் இவர்களுடன் சுமுகமான உறவு வைத்திருந்தார்கள்.
ஆதியாகமம் 26ம் அதிகாரத்தில் பெலிஸ்திய ராஜா அபிமெலேக்கு ஈசாக்குடன் உடன்படிக்கை செய்து கொண்டதையும், ஈசாக்கு விருத்தியடைந்து பலவானாக மாறியபோது அபிமெலேக்கு நைச்சியமாகப் பேசி ஈசாக்கை தேசத் தை விட்டு அனுப்பி விட்டதையும் வாசிக்கலாம்.
எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு இஸ்ரவேலர்கள் கானானை நோக்கி பயணம் செய்து வருகையில் அவர்களது வழியில் பெலிஸ்திய தேசம் குறுக்கிட்டது. இதை தவிர்த்து பயணத்தை தொடர வேண்டுமானால் அவர்கள் சுற்று வழியில்தான் செல்ல வேண்டும். இந்நிலையில் இஸ்ரவேலர்கள் எடுத்த முடிவு என்ன தெரியுமா?
சுற்று வழியில் போவதையே! காரணம், அந்நாட்களில் பெலிஸ்தர்கள் மிகவும் பலமான ஜாதியாக தேசத்தில் குடியிருந்தார்கள். தங்கள் படைபலத்தாலும், திரட்சியினாலும் அக்கம்பக்கத்து தேசங்களையெல்லாம் மிரட்டி கொண்டிருந்தனர்.
பெலிஸ்தியாவும் இஸ்ரவேலும்
இஸ்ரவேவர்கள் பயணப்பட்டு வரும் போதும் சரி, இஸ்ரவேலர்கள் தங்கள் வழியில் காணப்பட்ட தேசங்களையெல்லாம் தேவபெலத்தால் ஜெயித் துக் கொண்டே வரும் போதும் சரி, அவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காத பெலிஸ்தர்கள், இஸ்ரவேல் கானானில் காலூன்றி கொஞ்சம் செழிக்கத் துவங்கிய போதுதான் அவர்களை கவனிக்கத் துவங்கினர்.
இஸ்ரவேல் ஒரு தனிநாடாகப் பிரகடனம் பண்ணப்பட்டு, நியாயாதிப் திகள் இஸ்ரவேலை நியாயம் விசாரிக்கத் துவங்கின வேளையில்தான் பெலிஸ் தர்கள் இஸ்ரவேலருக்கு அடிக்கடி தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர்.
இஸ்ரவேலரின் வயல்நிலங்கள் விளைந்து அறுப்பிற்காக காத்திருக்கும் சமயங்களில் பெலிஸ்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து பயிர்களை அறுவடை செய்து கொண்டு போய்விடுவார்கள்.
எதிர்க்கும் வயலுக்கு சொந்தமானவர்களை பிடித்துக்கொண்டோ, அல்லது கொன்றொழித்துவிட்டோ செல்வார்கள். பெலிஸ்தர் போன்ற படைபலமோ, கட்டான இராணுவ அமைப்போ இல்லாததினால் இஸ்ரவேலர்கள் இதுபோன்ற சமயங்களில் திணறித்தான் போனார்கள்.
சமயா சமயங்களில் இஸ்ரவேலில் சில தலைவர்கள் எழும்பினாலும் அவர்களாலும் பெலிஸ்தரை நிரந்தரமாக வெற்றிகொள்ள முடியவில்லை.
பெலிஸ்தர்களும் அடிக்கடி இஸ்ரவேலர்களின் மேல் படையெடுத்த காரணம், ராஜா இல்லாத தேசம். படை பலங்களை பெருக்கி கொள்ளாத தேசம். எந்தவிதமான கட்டமைப்பும் இல்லாமல் ஜனங்கள் தனித்தனி கூட்டங்களாக வசிக்கும் தேசம். எனவே இதை சுலபமாக பிடித்துக் கொள்ளலாம் என்பதே.
உலக ஞானத்தின்படியும், அறிவின்படியும், அமைப்பின்படியும் பார்க் கப் போனால் பெலிஸ்தரின் கணிப்பு சரிதான். ஆனால்…. இஸ்ரவேலுக்கு பின்னணியில் தேவனும் அவருடைய வாக்குத்தத்தங்களும் இருந்ததால் அவ்வளவு உறுதியான பெலிஸ்திய ராணுவங்கள் முயன்றும் இஸ்ரவேலைப் பிடிக்க முடியவில்லை.
அதுசரி ஐயா, இஸ்ரவேலின் பின்னணியில் தேவனும் அவரது வாக்குத்தத்தங்களும் இருந்ததென்றால் அவர்களாவது பெலிஸ்தியரை ஜெயித்திருக்கலாமே என்ற ஒரு கேள்வி உங்களிடமிருந்து புறப்படுமானால் அது நியாயமானதே!
உண்மைதான். நியாயாதிபதிகளின் காலத்தில் தொடங்கிய பெலிஸ்த ருடனான பகை காலம் காலமாக பின் தொடர்ந்தே வந்துள்ளது, இஸ்ரவேலரை பலமுறை நிம்மதி இழக்கச் செய்திருக்கிறது. பின்னாட்களில் இஸ்ரவேலில் எத்தனையோ புகழ் பெந்த ராஜாக்கள் தோன்றிய போதிலும், பெலிஸ்தியர்களை அவ்வப்போது அடக்கி வைத்தார்களேயொழிய முற்றிலுமாக ஜெயித்துவிடவில்லை.
அதற்கும் காரணம் இருக்கிறது. முழுக்காரணம் யூதர்கள் தான், கானானில் இஸ்ரவேலர்கள் பிரவேசித்தபோது, தேசம் அவர்களுக் குள் பங்கு வைத்துக் கொடுக்கப்பட்டது. எந்தெந்த கோத்திரங்களுக்கு எந்தெந்த பகுதிகளென்று சீட்டுப் போட்டுப் பார்த்து தீர்மானிக்கப்பட்டது.
இதை இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், கர்த்தர் தாமே முன்னிருந்து அவரவர்க்கு உண்டான பங்கு வீதத்தை நிர்ணயித்துக் கொடுத் தார்.
ஒவ்வொருவருக்கான பங்கு வீதங்களிலும் இரண்டுவிதமான பகுதிகள் இருந்தன. ஒன்று, இஸ்ரவேலர்கள் ஏற்கனவே சுதந்தரித்துக் கொண்ட பகுதி, சீட்டுப் போட்டு பிரித்தவுடன் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் தட்டுமுட்டு சாமான்களுடன் குடியேறிவிட வேண்டியதுதான்.
இரண்டாவது, இனிமேல் அவர்கள் சுதந்தரிக்க வேண்டியபகுதி. அதாவது சீட்டுப்போட்டு பிரித்தவுடன் எந்தப் பகுதியின் பெயருக்கு சீட்டு விழுகிறதோ அந்தப் பகுதியின்மேல் படையெடுத்து அங்குள்ள இராஜாவை யும், ஜனங்களையும் துரத்திவிட்டு அதைக் கைப்பற்ற வேண்டும்.
தங்கள் பகுதிக்கு சீட்டு விழுந்த எந்தப் பகுதியின் மேலும் அந்தக் கோத்திரத்தார் படையெடுத்துச் சென்றால் நுறு சதவீத வெற்றி நிச்சயம், சந்தேகமேயில்லை!
அந்தப்படி சீட்டுப்போட்டு பங்கு வைத்ததில் யூதா கோத்திரத்திற்கு விழுந்த பகுதியில் அவர்கள் சுதந்தரிக்க வேண்டிய பகுதியாக வந்தது பெலிஸ்திய தேசம்.
சீட்டில் இந்த தேசம் யூதாலின் பெயருக்கு விழுந்த போது, பெலிஸ்திய தேசத்தை பெலிஸ்தர்கள் தான் ஆண்டு கொண்டிருந்தனர்.
கர்த்தருடைய வார்த்தையின்படி அப்போதே யூதா. பெலிஸ்தர்கள் மேல் படையெடுத்திருந்தால் சுலபமாக ஜெயித்து, பெலிஸ்திய இனத்தை வேரோடு நிர்மூலமாக்கியிருக்கலாம்.
ஆனால் யூதா அப்படி செய்யவில்லை. இஸ்ரவேலர்களால் ஏற்கனவே சுதந்தரிக்கப்பட்ட பகுதிகளை மட்டுமே வைத்துக்கொண்டு பெலிஸ்தியாவை விட்டுவிட்டார்கள்.
பெலிஸ்தர்கள் ஜெயிக்கப்பட வேண்டிய காலத்திலேயே ஜெயிக்கப் படாததினால் தான் காலம் காலமாக இவர்களை ஜெயிக்கவே முடியாமல் போய்விட்டது.
பெலிஸ்தர்கள் தேசத்தை சுதந்தரிக்கும்படி யூதாவின் பெயருக்கு சீட்டு விழுந்த போதிலும், யூதா பெலிஸ்தியாவின் மேல் படையெடுக்காததற்கு காரணம் இல்லாமலில்லை. பயணம் செய்து வந்த காலத்தில் ஓட்டு மொத்தக் கோத்திரமான இஸ்ரவேல் கோத்திரங்கள் முழுவதுமே பெலிஸ்தியரை எதிர்க்க துணியாமல், சுற்று வழியாகப் பயணம் செய்திருக்க, தாங்கள் ஒரு கோத்திரம் மட்டுமே அவர்களை எதிர்ப்பது எப்படிச் சாத்தியம் என்று யூதர் எண்ணியிருக்கலாம்.
சற்று நிதானித்து, தேவனுடைய வாக்கை நம்பி, யூதர்கள் பெலிஸ்தியரை எதிர்க்கப் புறப்பட்டிருப்பார்களேயானால், பெவிஸ்தருக்கு இவ்வளவு நீண்ட வரலாறு நிச்சயமாய் இருந்திராது.
எது எப்படியோ – எதையும் ஜெயிக்க வேண்டிய காலத்தில் ஜெயிக்காவிட்டால் பிறகு காலம் பூராவும் கஷ்டப்பட வேண்டியதுதான். யூதாவைப் போல!