அவரது அடிச்சுவடு களைப் பின்பற்றுகிறேனா?

அடிச்சுவடு

அவரது அடிச்சுவடு களைப் பின்பற்றுகிறேனா?

இயேசு போல வாழவேண்டும் என்ற அறிவுரை புதிய ஏற்பாட்டில் எங்கும் காணப்பட்டாலும், அவரது “அடிச்சுவடுகளைப்” பின் பற்றவேண்டுமென்ற குறிப்பான அழைப்பு ஒரே இடத்தில்தான் வருகிறது. அதை எழுதியது இயேசுவின் பாடுமரணத்தின்போது அவரை நெருங்கிக் கவனித்துக்கொண்டிருந்த பேதுருதான். 1 பேதுரு 2:21, “கிறிஸ்து உங்களுக்காகத் துன்புற்று ஒரு முன்மாதிரியை வைத்துச் சென்றுள்ளார். எனவே நீங்கள் அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்; இதற்காகவே அழைக்கப்பட்டுள்ளீர்கள்.” நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க கீழே சில கேள்விகள் தரப்பட்டுள்ளன. அமைதியாகக் கடவுளுக்குமுன் இக்கேள்விகளை வாசித்து நம்மைச் சீர்தூக்கிப் பார்க்க சில மணிநேரம் எடுத்துக்கொள்ளுவோம்.

1.எனது வேதனைகள் மற்றும் கவலைகளைக் குறித்து எனது நண்பர் அலட்சியமாயிருக்கும்போது நான் எரிச்சலடைகிறேனா?

கெத்செமனே தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை சிந்திக் கொண்டிருக்கும்போது அவருக்கு மிக நெருங்கிய சீடரோ தூங்கச் சென்றுவிட்டனர். திரும்பத் திரும்ப அவர் அவர்களிடம் உதவி கேட்டும் அவரது ஆன்மாவின் ஆழ்துயரத்தில் பங்கேற்க அவர்கள் தவறிவிட்டனர். அவரோ அவர்களிடம் கோபப்படவில்லை. ஜெபத் தில் விழிப்புடனிருக்கவேண்டும் என்று மட்டும் அவர்களுக்கு அறி வுறுத்திவிட்டு, “எழுந்திருங்கள், போகலாம்’ என்று சொன்னார்! (மத் 26:36-46).

2.ஜெபத்தில் ஏனோதானோ என்றிருக்கிறேனா? எனது தோல்விகளுக்குக் காரணம் எனது ஜெபமின்மை என்று உணராமல் பிறரையும் சூழல்களையும் குற்றஞ்சாட்டுகிறேனா?

பழிக்கப்பட்டபோதும் துன்புறுத்தப்பட்டபோதும் தெய்வீகக் குணநலன்களைக் கைவிட்டுவிட இயேசுவிற்கு எல்லாவிதத்திலும் சோதனை வந்தது. அவரோ கெத்செமனே தோட்ட ஜெபத்திலேயே பின்னர் வரவிருந்த போராட்டத்திற்கு வெற்றி கண்டுவிட்டார். மாறாக, அவரது சீடரோ ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பரிதாபமாய்த் தோற்றனர். விழிப்புள்ள ஜெபமில்லாது “ஆர்வ மனது” மட்டு மிருந்தால் “வலுவற்ற உடலை” மேற்கொள்ளுவது சாத்தியமல்ல (மாற் 14:35-39).

3. நான் விரும்பும் வகையிலேயே இறைவன் எனது வேண்டுதலுக்குப் பதில் தரவேண்டுமெனச் சாதிக்கிறேனா? “என் விருப்பப்படியல்ல, உம் விருப்பப்படியே நடக்கட்டும், ஆண்டவரே!” எனப் பிரார்த்திக்கப் பயப்படுகிறேனா?

அந்தத் துன்பக் கிண்ணத்தில் பருகுவது எவ்வளவு கசப்பு என்று அறிந்திருந்த இயேசுவிற்கு அதை முழு மனதோடு ஏற்பது எளிதா யில்லை. அக்கிண்ணம் தம்மை விட்டு அகலட்டும் என்று அவர் விண்ணப்பித்தது உண்மைதான்; ஆனாலும் ஒவ்வொரு முறையும் அவரது வேண்டல், “என் விருப்பமல்ல, உம் விருப்பமே” என்றே முடிந்தது (மத் 26:39, 42,44). இத்தகைய அடிபணிதலில் அத் தனையாய் அகங்குளிர்ந்த தந்தையாகிய கடவுள் தமது மகனைப் பலப்படுத்த உடனே விண்ணிலிருந்து ஒரு சிறப்புத் தூதனை அனுப்பிவைத்தார் (லூக் 22:42,43).

4.எவரது குறையாவது எனக்குத் தெரிந்தால் அதற்காய் ஜெபிப்பதற்குப் பதிலாக அதைப் பகடிபண்ணிப் பிரகடனப்படுத்துகிறேனா?

பேதுருவின் விருப்பத்தைவிட அவரது வலுவின்மைதான் பெரிதாயிருந்தது. இயேசு அவரை முன்னெச்சரித்தது மட்டுமல்ல, அவருக்காக மனதுருகி வேண்டுதலும் செய்தார். அவரது உடனா ளிகளுக்கு அவர் பின்னர் எவ்விதம் பணி செய்வார் என்பதையும் முன்னறிவித்து அவரை உற்சாகப்படுத்தினார் (லூக் 22:31-34).

5.என்னையாரோகாட்டிக்கொடுத்துவிட்டால் அந்நபரை வெறுக்கிறேனா? மனிதன் மனிதன்தான் என்பதையும் இறைவன் மட்டுமே 100 சதவீதம் நம்பத் தகுந்தவர் என்பதையும் மறந்துவிடுகிறேனா?

யூதாஸ் ஒரு திருடனாயிருந்தும் நம்பிக்கையோடு இயேசு அவ ரிடம் பணப்பையைக் கொடுத்து வைத்திருந்தார். தனது மனமாற்றத் திற்காய் இயேசு இவ்விதம் கொடுத்த வாய்ப்பை அவர் பயன் படுத்திக்கொள்ளவில்லை. ஆனாலும், கள்ள முத்தம் கொடுத்து இயேசுவை யூதாஸ் காட்டிக் கொடுத்தபோது அவர் அவரைத் “தோழா” என்றழைத்தார்! (யோ 12:4-6; மத் 26:50).

6. எனது விரோதிகளுக்கு எதிராக உலகுசார்ந்த போராயுதங்களைப் பயன்படுத்துகிறேனா? கடவுள் அனுமதித்ததற்கு மிஞ்சி ஒரு மனிதனும் எனக்கு விரோதமாக ஒன்றும் செய்யமுடியாது என்ற உணர்வு எனக்கு இல்லையா?

மல்குஸ் என்ற வேலைக்காரனின் காதைத் தொட்டு இயேசு சுகப்படுத்தியது பேதுருவின் முரட்டுச் செயலைக் கண்டனம் செய்த தாகும். வாள் வைத்திருந்தாலும் அதைப் பயன்படுத்த மறுப்பதே உண்மையான ஆன்மீகம் (யோ 18:10,11; மத் 26: 51,52). பிலாத்துவைப் பார்த்து இயேசு, “மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என்மேல் எந்த அதிகாரமும் இராது” என்றார் (யோ 19:10,11).

7. என்னைப் பாதிக்கும் ஒருவருக்கு நான் புரியும் எதிர்ச்செயல் அவரை உணர்த்துவிக்கிறதா அல்லது தீர்ப்பளித்து ஒதுக்குகிறதா?

பேதுருவைக் குறித்து இயேசு முன்னறிவித்த யாவும் நிகழ்ந்தது. இயேசுவைப் பேதுரு மறுதலித்தது மட்டுமல்ல, சபிக்கவும் செய்தார். இயேசுவை அது எவ்வளவாய்ப் புண்படுத்தியிருக்குமெனச் சிந் தித்துப்பாருங்கள்! ஆனால் அவர் பேதுருவைத் திரும்பிப் பார்த்த பார்வையிலுள்ள கனிவும் பரிவுணர்வும் அவரை நொறுக்கி மனம் நொந்து அழச் செய்தன (லூக் 22:61,62).

8. நான் அநியாயமாய்க் குற்றஞ்சாட்டப்படும்போது வாதாடித் தற்காப்பு செய்கிறேனா, அல்லது எனக்காகப் போராடும்படிக் கடவுளிடம் திரும்புகிறேனா?

இயேசுவிடம் தலைமைக் குரு, “இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி கூறமாட்டாயா?” என்று கேட்டதற்கு இயேசு ஒன்றும் பேசாமல் அமைதியாயிருந்தார் (மத் 26:62,63). அதே கேள்வியைப் பிலாத்து கேட்டபோதும் இயேசு ஒரு வார்த்தைகூட பதில் சொல்லவில்லை! (மத் 27:13,14). மாறாக, அவர் இறை யரசைக் குறித்தும் சத்தியத்தைக் குறித்தும் பிலாத்துவின்முன் அறிக்கையிட்டார் (யோ 18:36,37; 1 தீமோ 6:13).

9. எனது எதிரிகளைத் தண்டிக்கும்படிக் கடவுளிடம் வேண்டுகிறேனா, அல்லது அவர்கள் ஆசீர்பெற ஜெபிக்கிறேனா?

இயேசு கலிலேயாவிலுள்ள மலையில் அருளுரையாற்றியதின்படி கல்வாரி மலைமீது நடந்துகாட்டினார் (மத் 5:44; லூக் 23:34).

10. சுய பரிதாபத்தில் அமிழ்ந்து பிறரது தேவைகளையும் வேதனைகளையும் மறந்துவிடுகிறேனா?

தமக்காக ஒப்பாரி வைத்து அழுத பெண்மணிகளை இயேசு பார்த்து, “எனக்காக அழவேண்டாம்; உங்களுக்காகவும் உங்கள் பிள் ளைகளுக்காகவும் அழுங்கள்,” ஏனெனில் அவர்கள் சந்திக்கவேண் டிய காலங்கள் கொடியவை என்றார் (லூக் 23:27-29). உடலில் கொடிய வேதனையால் துடிதுடித்தபோதும் தம்முடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளன் ஒருவனின் ஆன்மீகத் தேவையைச் சந்தித் தார் (லூக் 23:39-43). தமது இடத்தை நிரப்ப தமது தாயைப் பரா மரிக்க அன்னை மரியாளுக்கு ஒரு சீடனை மகனாய் அருளினார் (யோ 19:25-27).

11. ஜெபத்தையும் அருள் வரங்களையும் எனது ஆன்மீகத்தை வெளிக்காட்டி மக்களைக் கவருவதற்காய்ப் பயன்படுத்துகிறேனா, அல்லது இவை மூலம் கடவுளுக்குப் புகழ் நாடுகிறேனா?

விண்தூதர் தம்மைப் பாதுகாக்கவேண்டுமென இயேசு தமது தந்தையிடம் வேண்டியிருந்தால் அவருக்காகத் தூதர்களின் பேரணித் திரள் உடனே விண்ணிலிருந்து வந்திருக்கும். அப்படியானால் அவரது பாடுகளை முன்னறிவித்த இறைவாக்கியங்கள் எப்படி நிறை வேறமுடியும்? (மத் 26:53,54). அவ்விதமே, “சிலுவையிலிருந்து இறங்கிவா’ என்று அவரை ஏளனம் செய்தவர்களின் சவாலை ஏற்றுச் சிலுவையிலிருந்து இறங்கி வருவது இயேசுவுக்கு இயலாத காரிய மல்ல. அப்படியானால், பாவங்களுக்காய்ப் பரம தந்தையின்முன் குறை வற்ற பலி எப்படிச் செலுத்தப்பட்டிருக்க முடியும் ? (மாற் 15:29-32).

12. ஓர்இக்கட்டு அல்லது சிக்கலைக் கடந்து நான் வெற்றியாய் வெளிவரும்போது, எனக்கு மனப்பூர்வமாய் உதவாதவர்களைக் குற்றவுணர்வடையச் செய்கிறேனா?

கிறிஸ்துவின் சீடர் அவரைக் காட்டிக்கொடுத்தனர், மறுதலித்தனர், சபித்தனர், விட்டு ஓடினர்; ஆனால் அவரோ உயிர்த்தெழுந்த பின்னர் ஒருமுறையேனும் அவர்களது தோல்விகளை அவர்களுக்குச் சுட்டிக்காட்டவில்லை. மாறாக, முன்னதாகவே அவர் அவர்களுக்குக் கொடுத்துவிட்ட வாக்கு இதோ: “எனக்கு ஏற்பட்ட சோதனைகளில் என்னோடுகூட இருந்தவர்கள் நீங்களே. எனவே என் ஆட்சி வரும் போது நீங்கள் என்னோடு பந்தியில் அமர்ந்து உண்டு குடிப்பீர்கள்… அரியணையில் அமர்வீர்கள்!” (லூக் 22:28-30). அவர் அவர்களை உலகெங்கும் பணி செய்ய அனுப்பி அவரும் அவர்களோடு சென்றார் (மாற் 16:15,20).

[su_button id=download” url=”https://www.mediafire.com/file/an68q0sd912b47o/அவரது+அடிச்சுவடுகளைப்+பின்பற்றுகிறேனா.pdf/file” target=”blank” style=”3d” size=”9″ wide=”yes” center=”yes” radius=”round” icon=”icon: download”]Download PDF Now[/su_button]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *