பாவத்தைத் தேவன் அனுமதித்தது ஏன்?
ஆதி 3:1-7 பாவத்தைத் தேவன் அனுமதித்தது ஏன்? இக்கேள்விக்கு ஒரு விளக்கம் உண்டு. தேவன் தமது மகிமை, ஆற்றல், வல்லமை, ஞானம் போன்றவற்றை எளிதில் வெளிப்படுத்த முடியும். ஆனால் தனது மாபெரும் அன்பை வெளிப்படுத்த வேண்டுமானால் அவருக்கு எதிரிகளும், துரோகிகளும் தேவை. ஏனெனில் எதிரியாக மாறிய, துரோகியாக மாமாறிய, பெலனற்ற, அசுத்தத்தால் நிறைந்த மனிதனை நேசித்து, தன்னுடைய ஒரேபேரான குமாரனுடைய இரத்தத்தைச் சிந்தி மீட்கும் அளவிற்குத் தேவனுக்கிருக்கும் அன்பை வெளிப்படுத்தவேண்டுமானால் துரோகியாக மாறும் மனிதனும் அவனை மதிமயங்கச் செய்யும் சாத்தானும் தேவை. தேவன் லூசிபர் என்ற நல்ல தூதனைத்தான் படைத்தார். அவன் பாவம் செய்ய முற்பட்டு சாத்தான் என்ற கொடியவனாக மாறுவதை அனுமதித்தார். பாவம் தோன்ற அனுமதிக்கப்படாவிட்டால் தேவனின் மாபெரும் அன்பை வெளிப்படுத்த வழியில்லை. எனவே, தேவன் யாவற்றையும் படைத்ததோடு பாவம் தோன்ற அனுமதித்தார். வெளி.13:8 விளக்கத்தை காண்க.
வெளி.13:8 விளக்கத்தை பார்ப்போம்
வெளி 13:8 : இயேசுகிறிஸ்து சிலுவை மரத்தில் அடிக்கப்பட்டு மரண மடைந்தது மனிதன் படைக்கப்பட்டு 4000 ஆண்டுகட்குப் பின்னரே நடைபெற்றது என்று நாம் அறிவோம். அப்படியானால் உலகத் தோற்றத்திற்கு முன் அவர் எவ்வாறு அடிக்கப்பட்டார்?
உலகத் தோற்றத்திற்கு முன்பே, அதாவது மனிதனை உருவாக்குவதற்கு முன்பே பிதா மனிதனுக்குத் தேவையான யாவற்றையும் திட்டமிட்டார். அத்திட்டத்தில் பாவமன்னிப்பும் அடங்கியிருந்தது. உலகத் தோற்றத்தின்போது தம்முடன் தேவனாக இருந்த வார்த்தையுடன் (யோவா.1:1-2) தமது திட்டத்தைக் கூறினார். உடனடியாக அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்குத் தம்மை ‘வார்த்தை’ ஒப்புக்கொடுத்தார் (சங். 40:6-8 விளக்கத்தை காண்க).
சங். 40:6-8 விளக்கத்தை காணலாம்
சங் 40:6-8:- 1) கிறிஸ்து பிதாவை நோக்கிக் கூறியதாக இப்பகுதி அமைகிறது. இவ்வுலகிற்கு மனிதனாக வந்து பாடுபட்டு மரிப்பதற்குக் கிறிஸ்து மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டார். இந்நிகழ்ச்சி உலகத் தோற்றத்திற்கு முன் நடைபெற்றது. இவ்விதமாக தாம் மரிக்கப்போவதைக் கிறிஸ்து முன்னறிந்ததினால் அப்பொழுதுதிருந்தே மனவேதனை அவருக்கு இருந்தது. உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி என்று கிறிஸ்துவை வேதம் அழைப்பதற்கு (வெளி.13:8) இதில் விளக்கம் உள்ளது. எபி.10:5 இல் இப்பகுதி மேற்கோள்காட்டப்பட்டுள்ளது.
2) பெலனற்ற, பரிசுத்தமற்ற, மண்ணினால் உருவாக்கப்பட்ட, துரோகியான மனிதனுக்காகக் கொடூரமான பாடுகளைச் சகித்து, இரத்தத்தைச் சிந்தி, தனது உயிரைப் பலியாகத் தருவதற்குக் கிறிஸ்து தம்மை ஒப்புக்கொடுத்த மாபெரும் தியாகத்திற்கு ஈடு இணையுண்டோ? இதற்குக் கைமாறாக நாம் செய்யக்கூடியவை எவையென்று சிந்தித்துச் செயல்படுங்கள்.
எனவே, தாம் உலகில் மனிதனாக வந்து பாடுபட்டு மிகவும் கோரமான மரணத்தைச் சந்திக்கவேண்டும் என்ற எண்ணத்தினால் அப்பொழுதிருந்தே அவரது சிந்தனையில் அவர் அடிக்கப்பட்டார் (லூக்.12:50).
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்பவை.
1) சாத்தான் வீழ்ச்சியடைவதற்கு முன்பே அதன் விளைவுகளுக்காகக் கிறிஸ்துவைப் பலியாகச் செலுத்துவது திட்டமிடப்பட்டது என்பதால் சாத்தான் புரட்சி செய்வான் என்பது தேவனுக்கு அதற்கு முன்பே தெரிந்திருந்தது. புரட்சி செய்யும்படி தேவன் சாத்தானைத் தூண்டவில்லை. ஆனால் வருங்கால நிகழ்ச்சிகளை தேவன் முன்கூட்டியே அறிந்திருந்தார் என்பதே உண்மை.
2) பாவம் செய்யும்படி தேவன் மனிதனைத் தூண்டவில்லை. ஆனால், மனிதன் கீழ்ப்படியாமற்போவான் என்பது தேவனுக்கு முன்பே தெரிந்திருந்தபடியால் கிறிஸ்துவின் பாடுகளுக்கு ஏற்கனவே திட்டமிட்டிருந்தார். மனிதன் பாவம் செய்யுமுன்பே பாவமன்னிப்பு தயார் செய்யப்பட்டது.
3) கிறிஸ்துவின் மரணத்தினால் பாவமன்னிப்பாகிய மீட்பு உண்டாகும் என்று தெரிந்திருந்தும் நியாயப்பிரமாணம் முழுவதும் நீக்கப்படும் என்று (2 கொரி.3:6-11; கொலோ.2:14-15) தெரிந் திருந்தும் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார். நியாயப்பிரமாணத்தைக் கொடுப்பதற்கு முன்பே அது ஒழிக்கப்படும் என்று தேவன் அறிந்திருந்தார். மனிதன் தனது பாவ நிலையை உணர்ந்து கிறிஸ்துவை அடைவதற்கு மனிதனுக்குப் போதிப்பதற்காக ஆசிரியராகச் செயல்படும்படியாக நியாயப்பிரமாணம் அருளப்பட்டது (கலா.3:24-25). யூதரல்லாதோருக்கு அவர்கள் மனச்சாட்சி அவர்களுக்கு நியாயப்பிரமாணமாகச் செயல்பட்டது (ரோம.2:14 15).சங்.40:6-10; எபி.10:5-9; 1 பேது.1:20 காண்க.