எசேக்கியேல் 28:11-19 விளக்கம் 

எசேக்கியேல் 28:11-19 விளக்கம் 

28:11-19 விளக்கம் 

இப்பகுதியில் தீருவின் அரசன் என்பது தீருவின் அரசரை நடத்திக் கொண்டிருந்த, சாத்தானாக மாறிய லூசிபரைக் குறிக்கிறது. ஏனெனில் இதில் வரும் குறிப்புகள் மனிதருக்குப் பொருந்தாமல் க-ேருபிற்குப் பொருந்துகிறது. ஏசா.14:12-17; ஆதி.3:1-7 விளக்கத்தை காண்க. விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரை மோதிரம் (வச.12), சிருஷ்டிக்கப்பட்டவன் (பிறந்தவன் அல்ல) (வச.13,15), காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப், தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் வைக்கப்பட்டவன், அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினவன் (வச.14) என்ற குறிப்புகள் ஒரு மனிதனுக்குப் பொருந்தாது என்பதைக் கவனிக்க. சாத்தான், கட்டுரை காண்க.

28:13 விளக்கம் 

எசேக்கியேல் 28: 13

நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகலவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது; நீ சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.

ஏதேன் என்பது ஆதாம், ஏவாள் இருந்த தோட்டத்தைக் குறிக்காமல், லூசிபர் பூமியில் இருந்த தோட்டத்தைக் குறிக்கிறது. உலகில் எந்த அரசரும் ஏதேனில் வாழ்ந்ததில்லை என்பதைக் கவனிக்க. சாத்தான், படைப்பின் வரலாறு, கட்டுரைகள் காண்க.

சில தமிழ்ப் பிரதிகளில் ‘மூடிக் கொண்டிருந்தது’ என்பது, ‘மூடிக்கொண்டிருக்கிறது’ என்று தவறாக எழுதப்பட்டிருக்கிறது.

28:14 விளக்கம் 

எசேக்கியேல் 28: 14

நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்; அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய்.

கேருப்: கேருபீன் என்பதின் ஒருமை என்று கருதப் படுகிறது. கேருபீன்களைக் குறித்து ஆதி.3:24; எசே.1:5-22; 10:1 -19; 11:22 காண்க. மனிதன் அபிஷேகம்பண்ணப்பட்ட கேருபாக இருக்கமுடியாது.

ஆதி 3:24 விளக்கம் 

கேருபீன்கள் தேவபிரசன்னத்தில் வாழும் உயிர்கள். அவை செய்யும் பணிகளில் ஒன்று ஜீவ விருட்சத்திற்குப் போகும் வழியைப் பாதுகாப்பது. மேலும் தேவன் பயணம் செய்யும்போது கேருபீன் களைப் பயன்டுத்துகின்றார் (2 சாமு.22:11; சங்.18:10). தேவனது சிங்காசனத்தை (அவர் பயணம் செய்யும்போது பயன் படுத்தும் சிங்காசனத்தை) எடுத்துச் செல்லும் பணி கேருபீன்களுடைய தாகும் (எசே.10:1-22 உடன் எசே.1:4-27).   வேதத்தில் ஒருமையாக கேருப் என்று மூலமொழியில் 26 இடங்களில் எழுதப்பட்டுள்ளது. எசே.28:14,16 ஆகிய இரு இடங்களிலும் கேருப் என்றும் மற்ற 24 இடங்களிலும் கேருபீன் என்றும் தமிழாக்கம் செய்து வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. கேருப் என்பதின் பன்மை கேருபீன்கள் என்று கருதப்படுகிறது.

28:14-16 விளக்கம்

எசேக்கியேல் 28: 15

நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள் துவக்கி உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டதுமட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய்.

எசேக்கியேல் 28: 16

உன் வியாபாரத்தின் மிகுதியினால், உன் கொடுமை அதிகரித்து நீ பாவஞ்செய்தாய்; ஆகையால் நான் உன்னை தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேருபாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு அழித்துப்போடுவேன்.

28:14-16 அக்கினிமயமான கற்களின் நடுவில் லூசியர் உலாவியதும் அங்கிருந்த அகற்றப்பட்டதும் ஆதாம் படைக்கப்படுவதற்கு முன்பு நடந்தவையாகும். ஏனெனில் உலகில் அநேக மக்கள் இருந்தபோது (தீரு அரசன் ஆட்சி செய்த போதும்) யாரும் ஏதேன் தோட்டத்தில் இல்லை.

28:15 லூசிபர் படைக்கப்பட்டவன். அவன் பிறக்கவில்லை (வச.13,15).

28:17 விளக்கம் 

எசேக்கியேல் 28: 17

உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய்; உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன்; ராஜாக்கள் உன்னைப்பார்க்கும்படி உன்னை அவர்களுக்கு முன்பாக வேடிக்கையாக்குவேன்.

1) இவ்வசனத்தில் ராஜாக்கள் என்பது மனிதர்களைக் குறிக்காமல் லூசிபர் தரையில் தள்ளிவிடப்பட்டபோது அரசாட்சி செய்த தேவதூதர்களைக் குறிக்கிறது என்று கருதப்படுகிறது.

2) அழகினாலும் மினுக்கினாலும் உண்டான பெருமை, லூசிபரின் பாவத்திற்கும் புரட்சிக்கும் அடித்தளமாக அமைந்தது. மனிதரிலும் அநேகர் பல காரியங்களுக்காகப் பெருமைகொள்கின்றனர். நமக்கு இருக்கும் யாவும் கர்த்தர் தமது கிருபையினால் தந்தவை என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்திருந்தால் பெருமைப்படுவதற்கு நம்மில் ஒன்றுமில்லை என்பதை அறிந்து தாழ்மையுடனிருப்போம். தேவன் பெருமையுள்ளவர்களுக்கு (பெருமையுள்ள ஊழியருக்கும்) எதிர்த்து நிற்கிறார் (யாக்.4:6).

28:18-19 விளக்கம்

எசேக்கியேல் 28: 18

உன் அக்கிரமங்களின் ஏராளத்தினாலும், உன் வியாபாரத்தின் அநீதத்தினாலும் உன் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினாய்; ஆகையால் உன்னைப் பட்சிப்பதாகிய ஒரு அக்கினியை நான் உன் நடுவிலிருந்து புறப்படப்பண்ணி, உன்னைப்பார்க்கிற எல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னைப் பூமியின்மேல் சாம்பலாக்குவேன்.

எசேக்கியேல் 28: 19

ஜனங்களில் உன்னை அறிந்த அனைவரும் உன்னிமித்தம் திகைப்பார்கள்; மகா பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்று உரைக்கிறார் என்று சொல் என்றார்.

28:18-19 சாத்தான் இறுதியில் அக்கினியினால் தண்டனை பெற்று (வெளி.20:9) இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலில் தள்ளப்படுவான் (வெளி.20:10). அதன் பின்னர் அவன் பூமியிலும் வானத்திலும் இருக்கமாட்டான். சாம்பலாக்குவேன் என்பது சாம்பலைப்போலத் தாழ்மைப்படுத்துவேன் என்று பொருள்படும்.

 

Leave a Reply