அஞ்சனம் பார்க்கும் பெண் கண்டது சாமுவேலா இல்லையா?
1 சாமு 28:11-19 அஞ்சனம் பார்க்கும் பெண் கண்டது சாமுவேலா இல்லையா?
(1) சாமுவேல் கர்த்தருடைய உத்தமமான ஊழியனாக இருந்து மரித்தவர். அவர்மேல் அசுத்த ஆவிகளுக்கு அதிகாரம் இல்லை. அவற்றால் சாமுவேலைக் கொண்டுவருவதற்கு இயலாது. மரணமடைந்த தேவனுடைய மக்கள்மீது அசுத்த ஆவிகளுக்கோ, மந்திரவாதிகளுக்கோ, அஞ்சனம் பார்க்கிறவர்களுக்கோ எந்த அதிகாரமும் கிடையாது.
(2) அசுத்த ஆவிகள் அநேகம் பொய்களைச் சொல்லும் வழக்கமுடையன.
(3) சவுல் கர்த்தருக்கு எதிரியாக மாறியிருந்தபடியால் அந்த ஆவி என்னோடிருப்பீர்கள்’ என்று கூறியதுபோல சவுல் மரணமடைந்தபோது பரிசுத்தமான சாமுவேல் இருந்த இடத்திற்குப்போக முடியாது (வச.19).
(4) கர்த்தர் சவுலின் ஜெபங்களுக்குப் பதில் கொடுக்காமல் இருக்கும்போது சாமுவேல் கர்த்தரின் நாமத்தில் சவுலுக்குப் பதில் கொடுக்கமாட்டார் (வச.16).
(5) மற்ற வழிகளில் பதில் தராத கர்த்தர் அஞ்சனம் பார்க்கிற பெண் மூலமும் அசுத்த ஆவி மூலமும் பதில் தந்தார் என்பது ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல.
எனவே அஞ்சனம் பார்க்கும் பெண்ணுடன் பழகின ஆவி (Familiar spirit) சாமுவேல் போன்று நடித்தது என்பது தெளிவு. கடந்த கால நிகழ்ச்சிகள் அதற்குத் தெரியும் என்பதால் அவற்றைக் கூறியது. கர்த்தர் இஸ்ரவேலரோடு இல்லாததால் இஸ்ரவேலர் தோற்பார்கள் என்றும் சவுலின் கோழைத்தனத்தால் அவர் வெற்றிபெறாமல் மடிவார் என்றும் அது தான் எதிர்பார்த்ததைக்கூறியது.
எந்தவொரு நிகழ்ச்சியும் நடக்குமா இல்லையா என்பதை யார் கூறினாலும் அவ்வாறு கூறுவதில் ஒருசில நடந்து விடும். நடந்ததை மட்டும் நினைவில் வைத்து நடக்காதவற்றை மறந்து அவ்வாறு கூறுகிறவனை நம்புவது உலகவழக்கு. “சாமுவேல் சவுலை நோக்கி” (வச.15), “அதற்குச் சாமுவேல்” (வச.16) என்றிருப்பதை அந்த ஆவி சவுல் கேட்கும்படி பேசியது என்று கருதக்கூடாது. அந்த ஆவி அந்தப்பெண்மூலம் சாமுவேல்போன்று அவ்வாறு பேசியது. சவுல் உருவத்தைப் பார்க்கவும் இல்லை, அதன் சத்தத்தைக் கேட்கவும் இல்லை.
மரணமடைந்தவர்களில் சிலருடைய ஆவிகள் உலகில் பேய்களாக (அசுத்த ஆவிகளாக, பொல்லாத ஆவிகளாக) இருந்து வருகின்றன என்று பலர் நம்புகிறார்கள். இது சரியல்ல. மனிதனின் ஆவி பேயாக மாற முடியாது. சாத்தானோடு சேர்ந்து தேவனை எதிர்த்துப் போரிட்ட அவனுடைய தூதர்களே பேய்கள். அவை சொல்லும் பலவித பொய்களில் ஒன்று தங்களை மரணமடைந்த ஒரு நபரின் ஆவி என்று கூறுவதாகும். அவ்வாறு மரணமடைந்தவரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளில் அதற்குத் தெரிந்தவற்றைக் கூறி மக்களை நம்ப வைக்கும் ஏமாற்றுதல் இன்றும் நடக்கிறது. மனிதன் அசுத்த ஆவியாக மாற முடியாது. மேலும் இறந்துபோன ஒருவரின் ஆவியை எழுப்பியதுபோன்றும் அந்த ஆவியோடு பேசுவதுபோன்றும் நடிப்பது அசுத்த ஆவிகளின் செயல். இறந்து போனவர்களின் ஆவிகள் அசுத்த ஆவிகளின் கட்டுப்பாட்டில் இல்லை, கர்த்தரின் கட்டுப்பாட்டில் உள்ளன.