விக்கிரகம் – IDOL, IMAGE
ஆராதனை செய்வதற்காக ஓர் அடையாளத்தை அல்லது ஓர் உருவத்தை உண்டுபண்ணுவது விக்கிரகம் எனப்படுகிறது. வேதாகமத்தில் விக்கிரகம் என்பது பொதுவாகப் புறஜாதியாரின் விக்கிரக வழிபாட்டில் பயன்படுத்தப்படும் பொருட்களையே குறிப்பிடுகிறது. இவை மனுஷனால் உண்டாக்கப் பட்டவை. ஜீவனுள்ள மெய்யான தேவனை ஆராதிப்பதற்குப் பதிலாக ஜனங்கள் விக்கிரகத்தை உண்டுபண்ணி, அதைத் தெய்வமென்று எண்ணி வழிபடுகிறார்கள் (லேவி 26:1; 2நாளா 33:7).
வேதாகமத்தில் பலவிதமான விக்கிரகங்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவை பலவிதமான பொருட்களினால் செய்யப்பட்டவை. அவை உண்டுபண்ணப்பட்ட விதங்களும் வெவ்வேறாக உள்ளன. ஒருசில விக்கிரகங்கள் வெட்டப் பட்டவை. வேறுசில விக்கிரகங்கள் வார்ப்பிக்கப் பட்டவை.
நியா 17:3 ஆவது வசனத்தில் வெட்டப்பட்ட சுரூபத்தையும், வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் பற்றிய குறிப்பு உள்ளது.
ஒருசில விக்கிரகங்களை உலோகத்தினாலும், மரத்தினாலும் செய்தார்கள். வேறுசில விக்கிரகங்களை உலோகத்தை உருக்கி, அதை அச்சுகளில் ஊற்றி, வார்த்துச் செய்தார்கள். வெள்ளியினாலும், பொன்னாலும் செய்யப்பட்ட விக்கிரகங்கள் பொதுவாக வார்ப்பு விக்கிரகங்களாகும். மண்விக்கிரகங்கள் கையால் செய்யப்பட்டவை. நேபுகாத்நேச்சார் தன்னுடைய சொப்பத்தில் ஒருசிலையைக் கண்டான். அது பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, களிமண் ஆகியவற்றினாலானது (தானி 2:32-33).
ஏசாயா தீர்க்கதரிசி விக்கிரகாராதனைக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் கூறியிருக்கிறார் “விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணாமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள். ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை உருவாக்கி, விக்கிரகத்தை வார்ப்பிக்கிறவன் எப்படிப்பட்டவன்?” (ஏசா 44.9-20).
விக்கிரகங்களைச் செய்யும் தொழிலாளிகள் நரஜீவன்களே. கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி, உலையிலே காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன் புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான்; பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான்; தண்ணீர் குடியாமல் களைத்துப்போகிறான். தச்சன் நூல்பிடித்து, மட்டப் பலகையால் மரத்துக்குக் குறிபோட்டு, உளிகளினால் உருப்படுத்தி, கவராசத்தினால் அதை வகுத்து, மனுஷ சாயலாக மனுஷரூபத்தின் படி உருவமாக்குகிறான்; அதைக் கோவிலிலே நாட்டி வைக்கிறான்.
“சித்திரவேலைக்காரன் தட்டானையும், சுத்தியாலே மெல்லிய தகடு தட்டுகிறவன் அடைகல்லின்மேல் அடிக்கிறவனையும் உற்சாகப்படுத்தி, இசைக்கிறதற்கான பக்குவமென்று சொல்லி, அது அசையாதபடிக்கு அவன் ஆணிகளால் அதை இறுக்குகிறான்” (ஏசா 41:7)
மெய்யான தெய்வமாகிய கர்த்தரைத் தவிர வேறு எதையும் நாம் தேவனாகப் பாவித்தால் அது விக்கிரகமாக இருக்கும். இது நமக்கும், தேவனுக்கும் இடையில் தேவனுக்குப் பதிலாக உண்டாக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு பொருளாகவோ, பணமாகவோ, பெருமையாகவோ இருக்கலாம்.