கிறிஸ்துவின் இரகசியம்

கிறிஸ்துவின் இரகசியம்

இதன் மையக் கருத்து கொலோசெயர் 4:3-4

3 கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக்குறித்துப் பேசவேண்டியபிரகாரமாகப் பேசி, அதை வெளிப்படுத்துவதற்கு, 

4 திருவசனம் செல்லும்படியான வாசலைத் தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள். 

கிறிஸ்துவினுடைய ரகசியத்தின் நிமித்தம் கட்டப்பட்டிருக்கிறேன் என்று பவுல் கூறுவதன் பொருள் என்னவென்றால் இயேசுவே கிறிஸ்து என்று அதாவது இயேசுவே தேவனுடைய குமாரன் (தேவன்) இன்று சொல்ல வேண்டிய விதத்தில் யாவருக்கும் சொல்லுவதற்காக தெரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறேன் அதற்காகவே அழைக்கப்பட்டு இருக்கிறேன் இந்த வேலையை செய்ய அவரோடு கட்டப்பட்டு இருக்கிறேன் என்பதாகும்.

கிறிஸ்துவின் இரகசியம் என்பது குமாரனாகிய இயேசுவே தேவன் என்பதை வெளிப்படுத்துவதை குறிக்கிறது. எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் இயேசு என்ற நாமம் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் இந்த இரகசியம் அறிந்து கொள்ள அவருடைய பெயர்களை நாம் ஆராய வேண்டி இருக்கிறது. ஏனென்றால் கிறிஸ்துவின் இரகசியம் அவருடைய பெயரோடு தொடர்புடையதாக உள்ளது.

தேவனின் பெயர்கள்

A. இம்மானுவேல் (இந்தப் பெயர் இயேசுவின் பிறப்போடு தொடர்புடையது)

மத் 1:23; ஏசாயா 7:14 இந்தப் பெயர்கள் இயேசு இந்த உலகத்திற்கு கொடுக்கும் இரட்சிப்பை குறித்து விவரிக்கிறது. இயேசுவுக்கு கொடுக்கப்பட்ட பெயர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பெயராக இது இருக்கிறது. இம்மானுவேல் என்பதன் பொருள் தேவன் நம்மோடு இருக்கிறார் என்பதாகும். இந்தப் பெயரை இயேசுவுக்கு கொடுத்ததின் நோக்கம் இயேசுவே தேவன் என்பதை வெளிப்படுத்துவது ஆகும்.

B. கிறிஸ்து (இது இயேசுவின் ஊழியத்தோடு தொடர்புடையது)

கிறிஸ்து என்றால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று பொருள். இதன் மற்றொரு பெயர் தான் மேசியா என்பதாகும். கிறிஸ்து என்பதும் மேசியா என்பதும் ஒரே பொருளை உடையது ஒரே பெயரை குறிப்பது ஆகும். அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்பதற்கு தேவனுடைய குமாரன் (தேவன்) என்று பொருள். இயேசுவுக்கு அபிஷேகம் பூமியில் அல்ல பரலோகத்தில் கொடுக்கப்பட்டது. தேவகுமாரன் என்பது தேவன் என்பதை குறிக்கும்.

எதற்காக அபிஷேகம் பண்ணப்பட்டார்

ஏசாயா 61:1 கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார், சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார், இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், 

மேலே உள்ள வசனத்தில் சொல்லப்பட்ட ஊழியத்தை செய்வதற்காக இயேசு அபிஷேகம் பண்ணப்பட்டார். தேவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள எல்லா பெயர்களும் காரண பெயர்களாகவே உள்ளன.

C. இயேசு (இது அவருடைய மரணத்தோடு தொடர்புடையது)

மத் 1:21; 2:11; எபி 9:11-12,22 இயேசு என்பதற்கு இரட்சகர் என்று பொருள். அவர் ஜனங்களுக்கு எப்படி இரட்சிப்பை கொடுக்கிறார் என்றால் ரத்தம் சிந்தி தன்னுடைய ஜீவனைக் கொடுப்பதன் மூலம் ஆகும். 

இந்த மூன்று நாமங்களில் வழியாக அப்போஸ்தலனாகிய பவுல் என்ன ரகசியத்தை நமக்கு வெளிப்படுத்துகிறார் என்றால்,

இயேசு கிறிஸ்துவை அறிக்கை செய்ய வேண்டும் 1 யோவான் 4:2-3

2 தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. 

3 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல. வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திகிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. 

இயேசு கிறிஸ்துவை அறிக்கை செய்ய வேண்டும் என்று இந்த வசனம் வலியுறுத்தி கூறுகிறது அப்படி அறிக்கை செய்யாத எந்த ஆவியும் தேவனுடைய ஆவி அல்ல அது அந்திக்கிறிஸ்துவின் ஆவியாக இருக்கிறது ஏன் அறிக்கை செய்ய வேண்டும் என்றால் அக்காலத்திலே இயேசுவைக் கிறிஸ்து என்று அறிக்கை செய்யாதவர்கள் இருந்தனர்.

என்ன அறிக்கை செய்ய வேண்டும்

1 யோவான் 4:15; 5:1,5; மத் 16:13-17; யோவான் 20:31 இந்த வசனங்கள் இயேசுவை தேவனுடைய குமாரன் அதாவது தேவன் என்று அறிக்கை செய்ய வேண்டும் என்றும் அவர் தேவனுடைய குமாரன் என்பதை விசுவாசிக்க வேண்டும் என்றும் இயேசுவே கிறிஸ்து என்று அறிக்கை செய்து விசுவாசிக்க வேண்டும் என்றும் கூறுகிறது. ஏன் இப்படி விசுவாசித்து அறிக்கையிட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது என்றால் அக்காலத்திலே அநேகர் இயேசுவை கிறிஸ்த்து என்று அதாவது தேவகுமாரன் (தேவன்) என்று ஏற்றுக் கொள்ளவில்லை.

பேதுருவின் அறிக்கை

மத் 16:13-17 இந்தப் பகுதியில் பேதுரு இயேசு கிறிஸ்துவை நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்று அறிக்கை செய்தார். அப்பொழுது இயேசு கிறிஸ்து அவனுக்கு சொன்னது பிதா உனக்கு அதை வெளிப்படுத்தினார். அப்படி என்றால் இயேசுவே கிறிஸ்து என்று பிதா ஒருவனுக்கு தெரிவிக்காவிட்டால் தானாக ஒருவனும் அந்த ரகசியத்தை அறிய மாட்டான் என்பது பொருளாக உள்ளது.

பிதா பேதுருவுக்கு வெளிப்படுத்தினாரா?

பிதாவாகிய தேவன் மனிதரோடு நேரடியாக தொடர்பு கொள்வது இல்லை. பேசுவதாக இருந்தாலும் தரிசனம் கொடுப்பதாக இருந்தாலும் தன்னை வெளிப்படுத்துவதாக இருந்தாலும் பிதா நேரடியாக ஒரு மனிதனிடம் இடைபடுவது இல்லை. மாறாக குமாரனே பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு என இரண்டு காலங்களிலும் மனிதனோடு தொடர்பு உடையவராக இருக்கிறார். அப்படியானால் பேதுருவுக்கு பிதா வெளிப்படுத்தினார் என்று இயேசு சொல்லுவதன் காரணம் என்னை கண்டவன் பிதாவை கண்டான் என்பதே ஆகும்.

இயேசுவை கிறிஸ்த்து என்று அறிக்கை செய்யாததற்கு காரணம்

யோவான் 9:20-23 இந்த அதிகாரத்தின் முதல் வசனத்தில் இருந்து நாம் வாசிக்கும் போது ஒரு மனிதனுக்கு இயேசு சுகம் கொடுத்த சம்பவம் சொல்லப்பட்டிருக்கும். சுகத்தைப் பெற்றுக் கொண்ட அந்த மனிதனின் பெற்றோர் இயேசு கிறிஸ்து தான் சுகத்தை கொடுத்தார் என்று அறிக்கை செய்ய மறுத்து விடுகின்றனர். இதற்குக் காரணம் இயேசுவை கிறிஸ்து என்று அறிக்கை செய்தால் யூதர்கள் அதற்கு தண்டனை கொடுப்பார்கள். தண்டனைக்கு பயந்து கிறிஸ்துவை அறிக்கை செய்ய மறுத்து விடுகின்றனர். யூதர்கள் தண்டனை கொடுப்பதற்கான காரணம் அவர்கள் இயேசுவை கிறிஸ்த்து என்று ஏற்றுக் கொள்ளவில்லை.

யார் அந்தி கிறிஸ்து

1 யோவான் 18,22 இயேசுவை கிறிஸ்த்து அதாவது தேவகுமாரன் என்று அறிக்கை செய்யாத எவனும் அந்த கிறிஸ்துவின் ஆவி உடையவனாக இருக்கிறான்.

அப்போஸ்தலர்கள் இயேசுவை கிறிஸ்த்து என்று அறிக்கை செய்தனர்

அப் 18:5,28; 17:3; 9:20,22; 5:42; 2:36; யோவான் 8:17-18; 15:26; லூக் 10:21-22; ரோம 1:5 ஆகிய இந்த வசனங்களில் இயேசுவே கிறிஸ்து என்று யூதர்களுக்கு வெளிப்படுத்தி காண்பித்தனர். நியாயப்பிரமாணங்கள் (வேதவாக்கியங்கள்) இயேசுவே கிறிஸ்து என்பதை வெளிப்படுத்துவதை அவர்களுக்கு விளக்கி காண்பித்தனர். இயேசுவே தேவகுமாரன் என்றும் அதை பிதாவும் பரிசுத்த ஆவியானவரும் சாட்சியாக அறிவித்ததையும் விளக்கி கூறுகின்றனர்.

இயேசு தேவன் என்று பிசாசுகள் அறிக்கை செய்தன

லூக் 4:41,34; மாற் 3:11; 1:24; இந்த வசனங்களில் இயேசுவே தேவன் என்றும் இயேசு இன்னார் என்றும் அவர் தேவனுடைய பரிசுத்தர் என்றும் பிசாசுகள் அறிக்கை செய்த காரியங்கள் சொல்லப்பட்டுள்ளது.

இயேசு தன்னை தேவகுமாரன் என்று அறிவித்து நிரூபித்தார்

யோவான் 10:24-25; 7:26,41-42; 8:24-25; 4:25-26; 14:61-62; லூக் 22:67,70 இந்த வசனங்களில் இயேசு செய்த அற்புதங்களைக் கண்ட யூதர்கள் இவர் தேவனா என்ற சந்தேகம் எழுந்தது. மேலும் இந்த வசனங்களில் இயேசு நானே அவர் நானே ஆதி முதலாய் இருக்கிறவர் நானே மேசியா என்று தன்னைக் குறித்து பேசி இருக்கிறார்.

கிறிஸ்துவின் ரகசியத்தை குறித்து ஆய்வு செய்வதற்கு இதோ சில வசனங்கள்

  • எபே 3:5-6,11
  • எபி 1:1-3
  • 1 கொரி 2:7
  • கொலோ 1:27
  • எபே 5:32
  • 1 கொரி 1:4-5

 

Leave a Reply