சிலுவையில் சிந்திய 7 முத்துக்கள் – 01 

சிலுவையில் சிந்திய 7 முத்துக்கள் - 01 

சிலுவையில் சிந்திய 7 முத்துக்கள் – 01 

1. பிதாவே இவர்களை மன்னியும்

அப்பொழுது இயேசு, பிதாவே இவர்களை மன்னியும். தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்என்றார். – லூக்கா 23:34.

நம்மிடமுள்ள தமிழ் புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலிருந்து நேரிடையாக மொழிபெயர்க்கப்பட்டதாகும். கிரேக்க மொழியில் அபியேமி (APHIEMI) என்ற சொல், தமிழிலே மொழிபெயர்ப்பில் மன்னிப்பு என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. நாம் பயன்படுத்தும் மன்னிப்பு என்ற சொல்லுக்கு கிரேக்கர் பயன்படுத்திய அபியேமி என்ற சொல்லுக்கும் பல வேற்றுமைகள் உண்டு.

ஓர் நீர் நிலையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது அபியேமி என்று கிரேக்க மொழியில் பொருள்பட பயன்படுத்தப்படுகிறது. அது விடுவித்தல் என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. வரி செலுத்துவதிலிருந்து மன்னர் கொடுத்த சலுகையும் கூட மன்னிப்பு என்ற சொல் பொருள்படுகிறது.

சிலுவையில் துன்பங்களுக்கு மத்தியிலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தன் அன்பின் வெளிப்பாட்டை தனக்கு துரோகம் செய்த, விரோதிகளையும் பாவத்திலிருந்து விடுவிக்க பரலோகப்பிதாவிடம் இயேசு வேண்டியிருப்பதாக கருதலாம். பழைய ஏற்பாட்டில் மன்னிப்பு என்ற மொழிபெயர்ப்பு கிப்பர் (KIPPER) ‘மூடுதல்என்ற பொருளிலும், நாசா (NASA) எடுத்துப் போடுதல்என்ற பொருளிலும் வருகிறதைப் பார்க்கிறோம். இவற்றின் அடிப்படையில், முதலாம் வார்த்தையில் வரும் மன்னிப்பு என்ற சொல் அறியாது செய்த இவர்களுடைய குற்றங்களை, பாவங்களை, துரோகங்களை தேவனே மறைத்து விடும் ஆண்டவரேதூக்கிப் போட்டு விடும் ஆண்டவரேஇவர்களை இந்தக் குற்றத்திலிருந்து விடுவித்து விடும் ஆண்டவரே என்று அவருடைய உள்ளத்திலிருந்து எழும்பிய இரக்கம், அன்பு, இவற்றின் பிரதிபலிப்பாக இந்த வார்த்தை இருக்கிறது என்றால் மிகையல்ல.

இயேசு கிறிஸ்து சிலுவையில் சொல்லிய முதலாம் வார்த்தை ஒரு மனிதனாக சொல்லவில்லை. தேவகுமாரனாக தன்னை அனுப்பிய தேவனிடம் தனக்கு துரோகம் செய்து கொடுமைப்படுத்திய மனிதர்களின் பாவத்தை மறைத்துவிடும், தூக்கிப் போடும் என்று தன் பிதாவிடம் முறையிடுவதாக, தன் மனதில் மனித இனத்தின் மேல் அவர் கொண்டிருந்த அன்பின் வெளிப்பாடாக இது காணப்படுகிறது. தனக்கும் வானத்தையும் பூமியையும், படைத்த தேவாதி தேவனின் அப்பா, பிதாவே என்ற குமாரனுடைய உறவை இதில் வெளிப்படுத்துகிறார். சிலுவையில் அறைந்தவர்களும் அருகில் இருந்தவர்களும் இந்த உறவை உறுதி செய்யும் வகையில் பிதாவைக் கூப்பிட்டு சொல்வதைப் பார்க்கிறோம்.

பிதாவே, நீர் எனக்குச் செவி கொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். நீர் எப்பொழுதும் எனக்கு செவி கொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்” – (யோவான் 11:41, 42) என்று இயேசு லாசருவை கல்லறையிலிருந்து எழுப்பியபோது கூறியதை இங்கு நினைவு கூறலாம். பிதா, குமாரன் உறவை வெளிப்படுத்த வேண்டிய காலங்களில் மட்டுமே கிறிஸ்து இயேசு வெளிப்படுத்தியுள்ளார்.

நாம் எதைக் கேட்டாலும் தேவனிடமிருந்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்டால் மட்டுமே பெற முடியும் என்பதை வேதம் உறுதிபட சொல்லுகிறது. தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு இவர்கள் செய்த கொடுமையான பாவத்தை தேவன் மன்னிக்க வேண்டுமானால், அது இயேசு கிறிஸ்துவின் மூலம் கேட்கப்பட வேண்டும் என்பதை இதன் மூலம் அறியலாம்.

இயேசு கிறிஸ்து பிதாவிடம் இவர்களை மன்னியும் என்று கேட்டார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பூலோகத்து மனிதர்களின் பாவத்தை மன்னிக்கும் அதிகாரம் இவருக்கு உண்டே என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். ‘நான் உங்களை மன்னித்தேன்என்று இயேசு கிறிஸ்து சொல்லி இருக்கலாம். ஏன் அவ்விதம் சொல்லவில்லை? மாற்கு 2:10இல் பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறிய வேண்டும்என்று இயேசு சொன்னதைக் காண்கிறோம். மன்னிப்பு இயேசு கிறிஸ்துவின் மூலம் நமக்கு கிடைக்கிறது என்பதை திருமறையில் காண்கிறோம். பாவிகளை மன்னிக்க அதிகாரம் பெற்ற இயேசு கிறிஸ்து இவர்களை தான் மன்னித்ததாகச் சொல்லவில்லை. இவர்கள் பாவத்தை மூடிப் போடும் பிதாவே என்று தேவனிடம் கேட்கிறார்.

பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவத்தை மன்னிக்க கிறிஸ்து அதிகாரம் பெற்றிருந்தார். ஆனால் இயேசு கிறிஸ்துவை, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை, தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவை, சிலுவையில் அறையச் செய்தது ஒரு மனிதன். இது மனிதனுக்கு விரோதமாகச் செய்த குற்றமோ, பாவமோ அல்ல. தேவனுக்கு எதிராக செய்த பாவமாகும். ஆகையால் இயேசு தேவனிடம் விண்ணப்பிக்கிறார் என்று கருதக் கூடும்.

இந்த முதல் வார்த்தையில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய காரியம், பிதாவே இவர்களை மன்னிக்கவும் என்று மாத்திரம் அவர் சொல்லவில்லை. ‘தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களேஎன்பதாகும். இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தது ஒரு மனிதனுக்கு செய்த துரோகமல்ல. தேவகுமாரனை, தேவனால் பூலோகத்திற்கு அனுப்பப்பட்ட அவருடைய குமாரனை அவர்கள் சிலுவையில் அறையச் செய்துதேவனுக்கு விரோதமாக பாவம் செய்தார்கள். ஆனால் அது தேவனுக்கு விரோதமாக செய்யப்பட்ட பாவம் என்று அவர்கள் அறியாதிருந்தார்கள். இயேசு கிறிஸ்துவை தேவகுமாரன் என்று அவர்கள் அறியாதிருந்தார்கள். ஆகையால் இயேசு கிறிஸ்து இவர்களை மன்னியும் என்றார்.

இந்த வார்த்தை இயேசு கிறிஸ்துவின் அன்பின் வார்த்தை மட்டுமல்ல, மன்னிக்கும் வார்த்தை மட்டுமல்ல, அவருடைய இரக்கத்தைக் காட்டும் வார்த்தை மட்டுமல்லமனித குலத்திற்கு இயேசு கொடுத்த எச்சரிக்கை வார்த்தையும் கூட என்பதை கவனிக்க வேண்டும்.

பிதாவே இவர்களை மன்னியும். தாம் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்று சொல்லும்போதுஇயேசு கிறிஸ்துவுக்கு விரோதமாய் செய்யப்படும் பாவமானது தேவனுக்கு விரோதமாக செய்யப்படும் பாவம் என்பதை இவர்கள் அறியாததால் இவர்களை மன்னியும் என்று சொல்லும்போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவ குமாரன் என்று அறிந்தும் அவருக்கு விரோதமாக செய்யப்படும் பாவங்கள், துரோகங்கள் தேவனால் மன்னிக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாக நம் முன் நிறுத்தப்பட்டுள்ளது.

தேவனிடம் நாம் பெற்ற நியாயப்பிரமாணம் சத்திய வசனம் எல்லாம் நாம் எப்படி கிறிஸ்துவுக்குள் வாழவேண்டும், இருக்க வேண்டும் என்பதை நமக்கு காட்டி இருக்க, ஒரு கிறிஸ்தவன், கிறிஸ்துவை தேவநேசன் என்று விசுவாசிக்கிற ஒரு மனிதன், ஒரு விசுவாசி, அவருடைய சத்திய வசனத்தின்படி நடக்காமல் வாழும்போது, அது தேவனுக்கு விரோதமாக செய்யப்படும் குற்றமாக, பாவமாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

இயேசுவை அறியாத காலத்தில் செய்திட்ட பாவம் போல், வாழ்ந்திட்ட பாவ வாழ்க்கை போல், அவரை அறிந்த பின்பும் நாம் வாழ முற்பட்டால் அது மன்னிப்புக்கு உரியதல்ல என்பதை, இது நமக்கு எச்சரிக்கையாக காட்டுகிறது என்று சொல்லலாம்.

இயேசு கிறிஸ்து கபாலஸ்தலம் என்ற இடத்தில் இரண்டு கள்ளர்கள் மத்தியில் அக்கிரமக்காரர்களில் ஒருவராக, கருதப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார். ஆனால் துயரத்தின் மத்தியில் அவர் எந்த நோக்கத்தோடு பூலோகத்திற்கு அனுப்பப்பட்டாரோ அந்த நோக்கம் நிறைவேறத்தக்க, தன்னை சிலுவையில் அறைந்த அக்கிரமக்காரர்களுக்காக.. அவர்கள் பாவத்திலிருந்து விடுபெற தன்னை அனுப்பிய பிதாவிடம் மன்றாடுகிறார். தன் ஜீவனை ஒப்புவிக்கும் கடைசி நேரத்தில் கூட பாவத்தை மன்னிக்க, பாவத்திலிருந்து மனிதனை மீட்க வந்த தேவ ஆட்டுக் குட்டியாக தனது தன் உயிரை ஜீவ பலியாய், ஜீவாதார பலியாய் ஒப்புக் கொடுத்து, தன் இரத்தத்தால் அவரை சிலுவையில் அறைந்தவர்களை பாவத்திலிருந்து மீட்டார். ஆமென்! அல்லேலூயா

ஆசிரியர்: உறையூர் வளவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *