You are currently viewing சிலுவையில் சிந்திய 7 முத்துக்கள் 02

சிலுவையில் சிந்திய 7 முத்துக்கள் 02

சிலுவையில் சிந்திய 7 முத்துக்கள் 02

சிலுவையில் சிந்திய 7 முத்துக்கள் 02

2. இன்று என்னுடனே கூடப் பரதீசியிலிருப்பாய்!

இரண்டாவது வார்த்தையாக இயேசு கிறிஸ்து, ‘இன்று என்னுடனே கூட பரதீசியிலிருப்பாய்என்று தனக்கு வலது பக்கத்திலிருந்த கள்ளனைப் பார்த்து கூறுகிறார். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் போது கூட, நாட்டு மக்கள் அவரை தேவகுமாரன் என்றோபுனிதர் என்றோ, நல்லவர் என்றோ எண்ணிவிடக் கூடாது என்று அவரை சிலுவையில் அறைய ஒப்புக் கொடுத்த ரோம அரசுதிருடர்களும், அக்கிரமக்காரர்களுக்கும் அரசை எதிர்க்கும் அடிமைகளுக்கும் தண்டனை தரப்படும் இடமான கபாலஸ்தலம் என்ற இடத்தில் அக்கிரமக்காரர்களில் ஒருவராக அவரும் கருதப்பட வேண்டும் என்று எண்ணி இரண்டு கள்ளர்கள் மத்தியில் கள்ளர்களில் ஒருவரைப் போல சிலுவையில் அறைந்தார்கள் என்று காண்கிறோம்.

ஆனால் தேவன் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பாகவே இவ்விதம் நடக்கும் என்பதை ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் வெளிப்படுத்தி இருந்தார்.

அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரர்களுக்காக வேண்டிக் கொண்டதனிமித்தம் அநேகரை அவருக்கு பங்காகக் கொடுப்பேன், பலவான்களை அவர் தமக்கு கொள்ளையாகப் பங்கிட்டு கொள்வார்ஏசாயா 53:12. இந்த தீர்க்கதரிசன வசனத்தின் அடிப்படையில் நாம் ஆராய முற்படும்போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிதாவிடம் வேண்டிக் கொண்டதால் அவரை சிலுவையில் அறைந்தவர்கள் பாவம் மன்னிக்கப்பட்டு இயேசுகிறிஸ்துவின் பரிசாக கொடுக்கப்பட்டார்கள் என்றும் அவர் தன் பாவத்தை அறிக்கையிட்டு, இயேசு தேவகுமாரன் என்று ஏற்றுக் கொண்ட கள்ளனும் அவர் பரிசாக மாற்றப்பட்டான். அதுமட்டுமல்ல, இயேசு கிறிஸ்து தன் ஆவியை ஒப்புக் கொடுத்தபோது தேவாலயத்தின் திரைச் சீலை மேல் தொடங்கி கீழ்வரை கிழிந்தது – (மத். 27:51) கல்லறைகள் திறந்தன. நித்திரையடைந்த அநேக பரிசுத்தவான்கள் உயிர்த்தெழுந்தார்கள் (மத் 27:52) இதனைக் கண்ட நூற்றுக்கு அதிபதியும், உன்னோடே கூட இயேசுவை காவல் காத்திருந் தவர்களும், பூமி அதிர்ச்சியையும், சம்பவித்த காரியங்களையும் கண்டு மிகவும் பயந்து, மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.” – மத்தே. 27:54.

இந்த வசனங்கள் மூலம் ஏசாயா தீர்க்கதரிசி கூறியது போல் இவர்களும் இயேசு கிறிஸ்துவை தேவகுமாரன் என்று விசுவாசித்து இயேசு கிறிஸ்துவின் பங்காக மாறினார்கள் என்று அறிகிறோம்.

அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்கு பங்காகக் கொடுப்பேன்” என்று ஏசாயா 53:12-இல் தேவன் சொன்ன வார்த்தைகள் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் மூலம் நிறைவேறியது என்று காண்கிறோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இரண்டு கள்ளர்கள் மத்தியில் சிலுவையில் அறையப்படுகிறார். அவர் சிலுவையின் மேலே இவன் யூதருடைய ராஜாஎன்று கிரேக்க, லத்தீன், எபிரேய எழுத்துக்களில் எழுதி வைக்கப்பட்டிருந்தது. இவன் யூதரின் ராஜாவாம். இவன் தன்னை இரட்சித்துக் கொள்ளட்டும் என்று பரிகாசம் பண்ணுகிறார்கள். அவர் அருகே சிலுவையில் அறையப்பட்ட கள்ளர் ஒருவன் கேலியாக இயேசுவிடம் நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக் கொள்என்று இகழ்கிறான் (லூக்கா 23:39). மற்றவன் அவனை நோக்கி நீ இதை ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்து தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாமோ நியாயப்படி தண்டிக்கப்பட்டிருக்கிறோம். நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம். இவரோ தகாத ஒன்றையும் நடப்பிக்க வில்லையே என்று அவனைக் கடிந்து கொண்டு இயேசுவை நோக்கி ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்ஜியத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்” என்றான்.

இயேசு அவனை நோக்கி,இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரிதீசிலித்திருப்பாய் என்று மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன் என்றார்‘ – லூக்கா 23:43. இது இயேசு கிறிஸ்து சிலுவையில் சொல்லிய இரண்டாம் வார்த்தையாக இடம் பெறுகிறது.

இதில் காணப்படும் பரதீசு என்ற இடம் பரலோகத்தையே குறிக்கிறது என்று கருத முடிகிறது. 11கொரிந்தியர் 12:3ல் “அந்த மனிதன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு மனுஷர் பேசப்படாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருந்தேன்என்று பவுல் எழுதுகிறார்.

இந்த வசனத்தின்படி பொருள் கொண்டால் பரதீசு என்பது பரலோகத்தையே குறிக்கிறது எனலாம். ஆங்கிலமொழி பெயர்ப்பில் சொர்க்கம் (PARADISE) என்று காணப்படுகிறது. நியாயப்பிரம்மான ஆதிகாலத்தில் பரலோகம் செல்ல விருத்தசேதனம் கட்டாயம் என்றும், கிறிஸ்துவுக்குப் பின் ஞானஸ்நானம் கட்டாயம் என்றும் கருதப்படுகிறது. ஆனால் இவைகள் என்ன என்றுகூட தெரியாத ஒரு கள்ளன் பரலோகத்திற்கு அழைக்கப்படுகிறான். எப்படி? தேவன் நம்மிடம் எந்த தகுதியை பரலோக வாழ்விற்கு இலக்கணமாக கருதுகிறார் என்று எண்ணத் தோன்றுகிறது.

கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்ட இரண்டு கள்ளர்களில் ஒருவன் தன் தவற்றை உணரவில்லை. அதை எண்ணி வருந்தவில்லை. தன் ஜீவனுக்குப் பின் உள்ள பரலோக வாழ்வைப் பற்றியெல்லாம் கவலைப்படாதவனாக இயேசுவை கேலி செய்கிறான். ஆனால் மற்ற கள்ளனோ தன் தவற்றை உணர்ந்து தன் தண்டனை நியாயமானது என்று அறிக்கையிடுகிறான். ஆயக்காரனைப் போல் தான் பாவி என்பதை ஏற்றுக் கொள்வதோடு மனுஷ குமாரனால் வந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஆண்டவர் என்று ஏற்றுக் கொள்வதோடு நியாய தீர்ப்பின் போது தன்னை நினைவு கூறும் என்று வேண்டிக் கொள்கிறான். இயேசு அவனைப் பார்த்து இன்று என்னுடனே கூட பரதீசிலிருப்பாய் என்று உறுதியாக கூறுகிறார்.

இயேசு அவனை நோக்கி இன்றைக்கே நீ என்னுடனே கூடப் பரிதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன்என லூக்கா 23:43-இல் கூறுகிறார். அதில் இன்றைக்கேஎன்று குறிப்பிடுவதைப் பாருங்கள். நீ போய் ஞானஸ்நானம் எடு. ஆசாரியனிடம் காட்டு, காணிக்கை செலுத்து என்றெல்லாம் பரலோக வாழ்விற்கு நிபந்தனை சொல்லப்படவில்லை. அந்த நிலையிலும் இவரும் இல்லை. பாவ அறிக்கை, ஒப்புரவாகுதல், விசுவாசித்தல் இவைகள் முதலிடம் பெற்றன. பரலோக வாழ்விற்கு காலதாமதம் இல்லை. இன்றைக்கே என்பதோடு தான் உயிர்த்தெழவும், பரலோகம் செல்வேன் என்பதையும் காட்டும் வகையில் நீ என்னுடனே கூடஎன்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும்.

அந்த கள்ளன் இயேசுவை அறியாதபோது குற்றவாளியாக இருந்தான். தான் மரிக்கும் தறுவாயில் இயேசுவை இன்னாரென்று அறிந்து கொண்டான். தன் குற்றத்தை மறைக்க வில்லை. ஆதாமைப் போல் நீர் கொடுத்த ஸ்திரியானவள் கொடுத்தாள், சாப்பிட்டேன் என்று தன் தவறுக்கு தப்பிக்க காரணம் காட்டவில்லை. தன் குற்றத்தை உணர்ந்தான். அறிக்கையிட்டாள். பாவமன்னிப்பும் தேவனுடைய தயவும் பெற்றான். தேவனோடு பரலோகத்தில் இடமும் பெற்றான்.

தான் இறக்கும்போது அவன் தன் மரணத்தைப் பற்றிய பயத்தை பெரிதாக கருதவில்லை. அது உடலோடு நின்று விடுகிறது. அவன் மரணத்திற்குப் பின் தன் ஆத்துமா என்னவாகும் என்று எண்ணியவனாக இயேசுவிடம் ஆண்டவரே என்று விண்ணப்பிக்கிறான், தேவ கிருபை பெற்றான்.

என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” யோவான் 6:37 என்றும், “என்னை அனுப்பினவரை விசுவாசிக் கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட் படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன் என்றார்என்று யோவான் 5:24-இல் காண்கிறோம்.

நான் உலகத்துக்காக வேண்டிக் கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக, வேண்டிக் கொள்கிறேன். அவர்கள் உம்முடையவர்களாக இருக்கிறார்கள்” – யோவான் 17:9 என்று இயேசு சொல்கிறார்.

கர்த்தராகிய இயேசு தான் சொல்லியபடியே நிறைவேற்றினார். கள்ளனாய் வாழ்ந்து மரிக்கும் நேரத்தில் புனிதனாய் மாறி இயேசுவோடு பரலோகம் செல்லும் பாக்கியத்தை சில மணி நேரத்தில் அவன் பெற்றான்.

இயேசுவோடு பல வருடங்கள் உடன் இருந்தவர்கள், அவரால் சுகம் பெற்றவர்கள், அவருக்கு பணிபுரிந்தவர்கள், அவரால் உயிர்த்தெழுந்தவர்கள் என்ற பலவகை மக்கள் இருக்கிறார்கள். ஆனால் பரலோக வாழ்வின் நிச்சயத்தை தேவன் தெரிவிக்கவில்லை. அவர்களும் அறியவில்லை. சமாரியப் பெண், பாவியாக இருந்தாலும் இயேசுவை மேசியா என்று தெரிந்து இரட்சிக்கப்பட்டாள். இவர்கள் விசுவாசத்தின் மூலம் நீதிமான்களாக்கப்பட்டார்கள். என்னிடம் வருகிறவனை புறம்பே தள்ளுவதில்லை என்ற இயேசு, கள்ளனைத் தெரிந்துகொண்டார். நமது நிலை என்ன? பரலோக வாழ்வின் நிச்சயம் நமக்கு உண்டா? இல்லையேல் அதற்குரிய தகுதியுடைய பாத்திரமாக மாறுவோம்.

ஆசிரியர்: உறையூர் வளவன்

Leave a Reply