சிலுவையில் சிந்திய 7 முத்துக்கள் 03

சிலுவையில் சிந்திய 7 முத்துக்கள் 03

சிலுவையில் சிந்திய 7 முத்துக்கள் 03

3. அதோ உன் மகன்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் சொல்லிய மூன்றாவது வார்த்தையாக இது வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

அப்பொழுது இயேசு தம்முடைய தாயையையும் அருகே நின்ற தனக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி, ஸ்திரியே அதோ உன் மகன் என்றார்.

பின்பு அந்த சீஷனை நோக்கி, அதோ உன் தாய் என்றார். அந்நேர முதல் அந்த சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக் கொண்டான்.” – யோவான் 19:26, 27.

இந்த ஏழு வார்த்தைகளில் நான் அதிகமாக தியானித்தது இந்த மூன்றாம் வார்த்தை என்றால் மிகையல்ல. இன்று சிலுவை வார்த்தைகளாகிய இந்த ஏழு வார்த்தைகளைப் பற்றி என்னை எழுதத் தூண்டியது இந்த மூன்றாம் வார்த்தையே. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் இந்த ஏழு வார்த்தைகள் பற்றிய புத்தகங்களை வாங்கி படித்தபோது இதோ உன் தாய் என்று யோவானிடம் இயேசு கூறியதாக எல்லாரும் எழுதி இருக்கின்றனர். ஏனோ என் மனம் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. பலமுறை இந்தப் பகுதியை திருமறையில் படித்தேன். இதுபற்றி எழுதிய எல்லா பரிசுத்தவான்களும், நல்ல வெள்ளிக்கிழமையன்று செய்திதரும் சுவிசேஷர்களும் யோவானிடம் இது சொல்லப்பட்டதாகவே எழுதியும் சொல்லியும் வந்தனர். அதற்கு காரணமாக அவர்கள் எடுத்துக்காட்டுவது அன்பாயிருந்த சீஷன் யோவான் என்று திருமறையில் சொல்லப்பட்டிருப்பதை மட்டுமே காரணம் காட்டுவதை அறிந்தேன். அதுபற்றி பின்னர் பார்ப்போம்.

பலவித கஷ்டங்கள், அவமானங்கள், கேலி பேச்சுக்கள், நிந்தனைகள் இவைகள் மத்தியில் உடலில் ஏற்பட்ட வலியும் வேதனையும் ஒருபுறமிருக்க, இயேசு தான் தன் ஜீவனை ஒப்புவிக்கும் முன்பாக, இயேசு தன் தாய் மீது கொண்டிருந்த அன்பு, கடமை உணர்வு இவைகள் இந்த வார்த்தை மூலம் வெளிப்பட்டது என்று காண முடிகிறது. இயேசு தான் இந்த உலகத்தில் வாழ்ந்த நாட்களில் தன் அன்பை தன் தாயாரிடம் காட்டவில்லை. அதை தன் உள்ளத்தில் மறைத்து வைத்திருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

இயேசு விரைவில் இந்த உலக உறவை விட்டு விண்ணுலகத்திற்கு எடுத்துக் கொள்ளப் போவதை அறிந்திருந்தார். அந்தப் பிரிவால் தன் தாய் படப் போகும் துன்பத்தையும் அவர் அறிவார். ஆகையால் உலக வாழ்க்கையில் பட்டும் படாமல் தன் குடும்ப உறவை வைத்திருந்தார் என்றே கருத முடிகிறது.

இயேசுவிடம் உம் தாயும் சகோதரரும் உம்மைக் காண வந்திருக்கிறார்கள் என்று சொன்னபோது, நீங்களே என் தாயும் சகோதரருமாயிருக்கிறீர்கள் என்றார். தன் தாயிடம் ஏன் என்னைத் தேடுகிறீர்கள். நான் விண்ணில் பிதாவோடு இருக்க வேண்டியவன் என்றார். இவைகள் எல்லாம், இயேசுவிற்கு தாய்பற்று இல்லை என்று சொல்ல முடியாது. விரைவில் இந்த உலகை விட்டு விண்ணுலகம் செல்லப் போவதை அறிந்துபெரிய பாசத்தை, எதிர்பார்ப்பை தன் தாயின் உள்ளத்தில் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்று எண்ணி இப்படி செயல்பட்டார் என்றே எண்ண முடிகிறது.

ஆனாலும் கடைசி நேரத்தில் தன் தாய் அன்பையும் தன் கடமை உணர்வையும் சிலுவையில் வெளிப்படுத்தி இதோ உன் தாய், இதோ உன் மகன் என்றார் என்றும் சொல்லலாம்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும்போது இருந்த வரலாற்று பின்னணியை சற்று பார்ப்போம். சீஷர்களில் யோவான் மிகவும் சிறியவனாக இருந்தார். இயேசு கிறிஸ்துவின் மார்பில் சாய்ந்து கொண்டிருந்த அவன் சீஷர்களில் சிறியவன் என்றே சொல்ல முடியும். திருமறை வசனத்தின்படி இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது இயேசு சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலேயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்று கொண்டிருந்தார்கள்” – யோவான் 19;25. அங்கு அவர்களோடு யோவானோ வேறு சீஷர்களோ உடன் இல்லை என்று அறிகிறோம். இயேசு இருந்தபோது அவரால் சுகம் பெற்றவர்கள், அவர் மீது அன்பு கொண்டவர், அவரால் உயிர்த்தெழுந்தவர்கள், உறவினர் என்று பலரும் இருந்தனர். ஆனால் அவர்களில் யாரும் அங்கு இல்லை. இதற்கு காரணம் காண முற்பட்டால் ரோம வீரர்கள் யாரையும் சிலுவையின் அருகே அனுமதிக்கவில்லை என்றே அறியலாம். சாதாரண விபத்து என்றாலே ஆயிரமாயிரமாய் கூடும் மக்கள் கூட்டம், இயேசுவின் சிலுவை மரணத்தின் போது உடன் இல்லை. ஏன் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். இது ஒரு காரணம் இருக்க திருமறையை நன்கு ஆராய்வோம். அப்பொழுது சிலுவையின் பாடுகள்போது இயேசுவின் சிலுவை அருகில் இருந்த சீஷன் யார்? யோவானா? பேதுருவா? அல்லது வேறு யாராவதா? என்ற வினாவிற்கு விடை காண முடியும்.

இயேசுவுக்கு எத்தனை சீஷர்கள் என்றால் எந்த தயக்கமும் இல்லாமல் 12 என்று எல்லாரும் சொல்வார்கள். ஆனால் இந்த 12 பேர்களும் சீஷர்கள் மட்டுமல்ல, சீஷர்களிடமிருந்து அப்போஸ்தலர்களாக பிரித்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை நாம் அறிய வேண்டும். லூக்கா 6ஆம் அதிகாரத்தில் “அந்த நாட்களில் அவர் ஜெபம் பண்ணும்படி ஒரு மலையின் மேல் ஏறி, இரா முழுவதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார். பொழுது விடிந்தபோது அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பெயரிட்டார்.” – லூக்கா 6:12,13

இதன் மூலம் இந்த பன்னிரண்டு பேரும் வெறும் சீஷர்கள் மட்டுமல்ல, அப்போஸ்தலர்களாக தேவ ஊழியத்திற்காக, அதற்கு மட்டும் இயேசு கிறிஸ்துவினால், தேவ சித்தத்தின்படி பிரித்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. இயேசுவைப் பின்பற்றியவர்கள், விசுவாசித்தவர் எல்லாருமே இயேசுவின் சீஷர்கள் என்றே அழைக்கப்பட்டனர்.

இதோ உன் தாய்என்று இயேசு கிறிஸ்து அன்பாயிருந்த அப்போஸ்தனைப் பார்த்து என்று சொல்லப்பட்டிருந்தால் நாம் நிச்சயமாக அது யோவானிடம் சொல்லப்பட்டது என்று சொல்லலாம். யோவான் 21:7இல் ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்துஎன்றும் எழுதப்பட்டிருக்கிறது என்பதையும் நினைவுகூற வேண்டும்.

மாற்கு 15:40, 41இல் சில ஸ்திரீகளும் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவிலிருந்தபோது அவருக்கு பின் சென்று ஊழியம் செய்து வந்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருடனே கூட எருசலேமுக்கு வந்திருந்த போதே, அநேக ஸ்திரிகளும் அவர்களோட இருந்தார்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆகையால் இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது, ஆண்கள் யாரும் அருகில் இருக்க அனுமதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இயேசுவிடம் கோபமாயிருந்த யூதர்கள் அவருடைய சீஷர்களை, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபின் அவர்கள் மேல் கோபமாகத்தான் இருந்திருப்பார்கள். அவர்கள் இவர்களை அனுமதித்திருப்பார்களா? போன்ற வினாவிற்கு விடை காணவேண்டும்.

இயேசு பிடிக்கப்படும்போது என்ன நடந்தது? “அப்பொழுது எல்லாரும் அவரை விட்டு ஓடிப் போனார்கள்மாற் 14:50.

லூக்கா 23:48,49-இல் இந்த காட்சியை பார்க்கும்படி கூடி வந்திருந்த ஜனங்களெல்லோரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபோது, தங்கள் மார்பில் அடித்துக் கொண்டு திரும்பிப் போனார்கள். அவருக்கு அறிமுகமானவர்கள் எல்லோரும் கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின் சென்று வந்த ஸ்திரிகளும் தூரத்திலே இவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.”

இவற்றை சற்று கூர்ந்து கவனித்தால் அருகில் சீஷர்கள் யாரும் இருந்திருக்க அனுமதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். அப்படியானால் இதோ உன் தாய்என்று இயேசு சொன்ன சீஷன் யார்? அவன் மட்டும் எப்படி சிலுவை அருகில் இருக்க அனுமதிக்கப்பட்டான்? என்று கேட்கக் கூடும்.

இயேசுவைப் பிடிக்க பட்டயத்தோடும் தடியோடும் வருகிறார்கள். இயேசு நான் தினமும் உங்கள் மத்தியில் உபதேசம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். அப்பொழுது நீங்கள் என்னை பிடிக்கவில்லையே” என்று அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். இது மத்தேயு 26:55இல் பார்க்கிறோம். அடுத்த வசனத்தில் சீஷர்களெல்லோரும் அவரை விட்டு ஓடிப் போனார்கள்” என்று மத் 26:56இல் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

யோவான் 16:32இல் இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன் தன் இடத்திற்குப் போய், என்னைத் தனியே விட்டு விடுங்காலம் வரும், அது இப்பொழுது வந்திருக்கிறது. ஆனாலும் நான் தனித்திறேன், பிதா என் கூடவே இருக்கிறார்என்ற இயேசு கிறிஸ்துவின் கூற்றைக் காண்கிறோம்.

இந்த வசனங்களின் அடிப்படையில் நாம் ஆராய முற்பட்டால் மிகவும் வயதில் சிறியவனாக இருந்த யோவான் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது உடன் இருந்திருக்க முடியாது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மறைந்து பல வருடங்கள் ஆன பின்னும் கூட யோவான் தனித்து தன் ஊழியத்தைச் செய்யவில்லை என்றும் காண்கிறோம். சவுல், பர்னபா இருவரும் ஊழியம் செய்து கொண்டிருக்கும்போது, பல நாடுகளுக்குச் சென்று தங்கள் ஊழியத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். இவர்கள் கப்பல் மூலம் சீப்புரு தீவுக்குச் சென்று அதன் பின்னர் சாலமி பட்டணத்திற்கு வந்து தங்கள் இறை பணியைத் தொடர்ந்தார்கள் என்று அப்போஸ்தலர் 14:4,5ல் காண்கிறோம். அப்போஸ்தலர் 13:5இல் இவர்கள் சாலமி பட்டணத்திற்கு வந்தபோது அவர்கள் யூதருடைய ஜெப ஆலயங்களில் தேவ வசனத்தைப் பிரசங்கித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாக இருந்தான்என்று காண்கிறோம். அவர்களோடு இணைந்து ஊழியம் செய்யும் வயதில் யோவான் இல்லை என்று இதனால் அறிய முடிகிறது. அதன் பின்னர் தேவன் யோவானுக்கு இரண்டாம் வருகையின் வெளிப்பாட்டை அவனுக்குத் தந்து வல்லமையாகப் பயன்படுத்தினார் என்பதை பின்னர் அறிகிறோம்.

இதோ உன் தாய்என்று 12 அப்போஸ்தலர்களில் ஒருவனாக இருந்த யோவானிடம் சொல்லவில்லை என்றால், வேறு யாரிடம் சொல்லி இருக்க முடியும்? என்ற குழப்பம் இதைப் படிக்கும்போது ஏற்பட்டிருக்கும். இதை கிறிஸ்து யோவானிடம் மட்டுமல்ல மற்ற எந்த அப்போஸ்தலரிடமும் சொல்லி இருக்க மாட்டார் என்று சொல்ல சில ஆதாரங்களைப் பார்ப்போம்.

இயேசு கிறிஸ்து இரவு முழுவதும் ஜெபத்திலிருந்து 12 பேரை சீஷர்களிடமிருந்து பிரித்து அவர்களை தேவனுடைய ராஜ்ஜியத்தைப் பற்றி பிரசிங்கிக்கவே தெரிந்து கொண்டார்.

இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காக பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல்” ரோமர் 1:1 என்று அப்போஸ்தலரைப் பற்றிய விளக்கத்தை பவுல் இதில் தருகிறார். இந்த 12 அப்போஸ்தர்களும் இறைப் பணிக்கென்றே தனியே பிரித்தெடுக்கப்பட்டவர்கள். இதில் எந்த மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது. இப்பொழுது இயேசு எதற்கு அவர்களைத் தெரிந்து கொண்டார் என்று பார்ப்போம்.

இந்த பன்னிருவரையும் அனுப்புகையில் அவர்களுக்கு கட்டளையிட்டு சொன்னது என்னவென்றால், “நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும் பிரவேசியாமலும், காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள். போகையில் பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள். வியாதியுள்ளவர்களை சொஸ்தமாக்குங்கள். குஷ்ட ரோகிகளை சுத்தம் பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத்துரத்துங்கள். இலவசமாய் பெற்றீர்கள், இலவசமாய் கொடுங்கள்‘ – மத்தேயு 10: 5, 6, 7, 8.

என்று வியாதியின் மேலும், பிசாசின் மேலும், தன் வல்லமை யையும் அதிகாரத்தையும் அவர்களுக்கு தந்தார்.

இயேசு கிறிஸ்து ஊழியத்திற்காக பிரித்தெடுத்த அப்போஸ்தலர் களிடம் அவர்கள் தங்கள் ஊழியத்தை எப்படிச் செய்ய வேண்டும் என்று சில வழிகாட்டுதலை (GUIDELINES) தருகிறார்.

ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது, இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாக என்று முதலாவது சொல்லுங்கள். சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும். இல்லாதிருந்தால் அது உங்கள் இடத்திற்கு திரும்பிவிடும். அந்த வீட்டிலே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைப் புசித்து குடியுங்கள். வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான். வீட்டிற்கு வீடு போகாதீர்கள். ஒரு பட்டணத்திலுள்ள பணியாளர்களை சொஸ்தமாக்கி தேவனுடைய ராஜ்ஜியம் உங்களுக்கு சமீபமாய் வந்திருக்கிறது என்று அவர்களுக்கு சொல்லுங்கள்லூக்கா 10:5-9.

ஒரு வீட்டின் சமாதானத்திற்கு ஏதுவாக வியாதிகளை சொஸ்தமாக்கி, தேவ ராஜ்ஜியத்தின் செய்திகளை சொல்லவே அவர்களை அனுப்பினார். மற்றும் தனியே செல்ல சொல்லவில்லை. இருவராகச் செல்ல சொல்கிறார். இந்தப் பணி தான் தெரிந்து கொண்ட 12 பேர்களுக்கு மட்டுமல்ல.. அவருடைய சீஷர்களாக வந்த எழுபது பேர்களுக்கும் சொல்லப்பட்டது லூக்கா 10:17இல் காண்கிறோம்.

அவருடைய சீஷர்களாக வந்தவர்கள் பலர் இருந்தார்கள். ஆனால் அவர்களில் அப்போஸ்தலராக 12 பேரை மட்டுமே அவர் தெரிந்து கொண்டார்.

சட்டசபையில் 233 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள் என்றால் அவர்களில் 20 அல்லது 30 பேரை மட்டும் அமைச்சராக தெரிந்து கொள்ளப்பட்டு, அவர்களுக்கு அரசுப் பணி ஒதுக்கப்படுகிறது. அமைச்சர்கள் தன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பணியை செய்ய முற்பட மாட்டார்கள். அதுபோன்றே ஒரு நிலை சீஷர்களுக்கும், அப்போஸ்தலர்களுக்கும் இருந்துள்ளது என்று கருதலாம். இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.

தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்கு பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்கு பாத்திரன் அல்ல. தன் சிலுவையை எடுத்து கொண்டு என்னை பின்பற்றாதவன் எனக்கு பாத்திரன் அல்லமத்தேயு 10:37, 38.

முழுநேர ஊழியத்திற்காக தெரிந்து கொள்ளப்பட்ட சீஷர்களுக்கு, அப்போஸ்தலர்களுக்கு குடும்பம் ஒரு சுமையாக இருக்கக் கூடாது என்கிறார்.

மத்தேயு சுவிசேஷம் 8ஆம் அதிகாரத்தில் மற்றொரு நிகழ்ச்சியையும் காண்கிறோம். ‘அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி, ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம் பண்ண எனக்கு உத்தரவு கொடுக்க வேண்டும் என்றான். அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும். நீ என்னை பின்பற்றி வா என்றார்.” – மத்தேயு 8:21,22.

தன் தந்தையின் மரணத்திற்கு, உடலை அடக்கம் செய்ய போய்வர அனுமதி கேட்கும்போது இயேசு இவ்விதம் சொன்னதாகப் பார்க்கிறோம். அப்படியிருக்க ஊழியத்திற்காக பிரித்தெடுக்கப்பட்ட தன் சீஷனான யோவானிடம் தன் தாயை காக்கும் பொறுப்பை தந்திருப்பாரா? தன் தாயை காக்கும் நிலையில் யோவான் இருந்திருக்க முடியுமா? தாய், மகன் என்ற உலக உறவிற்கு தன் சீஷனை அழைத்திருப்பாரா? என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது.

இவற்றின் அடிப்படையில் இயேசு யாரிடம் இதோ உன் தாய் என்று சொல்லியிருக்கக் கூடும்? அதற்கு திருமறையில் எந்த வசனத்தின் அடிப்படையில் பதில் காண முடியும் என்று, நாம் திருமறையை பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு விடை காண்போம்.

நமது திருமறையில் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர் பன்னிரண்டு பேர்களின் பெயரை காண்கிறோம். இந்த பன்னிரண்டு சீஷர்கள் இல்லாமல் இன்னொரு சீஷன் பெயரை மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான், சுவிசேஷ புத்தகங்களில் காண முடிகிறது.

அந்த சீஷன் யார்? எப்படிப்பட்டவன்? என்ன தகுதி பெற்றவன்? இயேசுவின் உள்ளத்தில் இடம் பெற்றவனா? சமுதாயத்தில் அவன் தகுதி என்ன? என்பதை நன்கு ஆராய்ந்தால், ‘இதோ உன் தாய்என்று இயேசு கிறிஸ்து அவனிடம் சொல்லியிருக்கக் கூடும் என்ற முடிவிற்கு நாம் வரக் கூடும். அவனைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

மத்தேயு 27:57,58 – “சாயங்காலமானபோது இயேசுவுக்கு சீஷனும் ஐசுவரியமானுமாயிருந்த யோசேப்பு என்னும் பேர் கொண்ட அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனுஷன் வந்து, பிலாத்து வினிடத்தில் போய், இயேசுபிரான் சரீரத்தைக் கொடுக்கும்படி கேட்டான். அப்பொழுது சரீரத்தைக் கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டான்“.

இந்த வசனத்தின் அடிப்படையில் யோசேப்பு தகுதியை ஆராய்வோம். இவன் இயேசுவுக்கு சீஷன். ஐசுவரியவான், பெரும் பணக்காரன். அரிமத்தியா என்ற ஊரைச் சேர்ந்தவன்.

பிலாத்துவிடம் இயேசு கிறிஸ்துவின் உடலைத் தரும்படி கேட்கக் கூடிய தகுதி, தைரியம் பெற்ற இவன் ரோமர்கள் ஆட்சி காலத்தில் மதிப்புப் பெற்ற ஒருவனாக இருக்க வேண்டும் என்று அறிகிறோம். மற்றும் இயேசு மரிக்கும்போது ஐசுவரியனோடு இருந்தார் என்ற வேத வார்த்தையையும் நினைவுகூற வேண்டும்.

மாற்கு 15:43 – ‘கனம்பொருந்திய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரானும் தேவனுடைய ராஜ்ஜியம் வரக் காத்திருந்த வனுமாகிய யோசேப்பு என்பவன் வந்து பிலாத்துவிடம் துணிந்து போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான்.”

இந்த வேத வசனம் இவனை கனம் பொருந்தியவன் என்கிறது. சமுதாயத்தில் மதிப்பும், பதவியும் உடையவனாக இருக்க வேண்டும்.

ஆலோசனையில் வல்லவன். தேவ ராஜ்ஜியத்தைப் பற்றி கேட்டு அறிந்து விசுவாசித்து அதற்காக காத்திருக்கும் உண்மையான பக்தியை உடையவன். பெரும் பதவியிலிருந்த பிலாத்துவிடம் துணிந்து போய் கேட்கும் அளவிற்கு துணிவுடையவன் என்று காண்கிறோம்.

இயேசு கிறிஸ்து பிடிபட்டபோது பேதுருவைத் தவிர யாரும் உடன் இருந்ததாக வேதத்தில் இல்லை. எல்லாம் ஓடி மறைந்து கொண்டனர். பேதுருவும் தன்னை இயேசுவின் சீஷன் என்று சொல்ல பயந்து மறுதலித்தான். யோவானோ அருகில் இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. யோசேப்பு மட்டுமே தகுதியுடையவனாக இருந்தான்.

லூக்கா 23:49,50,51.- “அவருக்கு அறிமுகமானவர்களெல்லாரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின் சென்று வந்த ஸ்திரீகளும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். யோசேப்பு என்னும் பேர் கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான்; அவன் உத்தமனும் நீதிமானுமாயிருந்தான். அவன் யூதருடைய பட்டணங்களிலொன்றாகிய அரிமத்தியாவி லிருந்து வந்தவனும், தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு காத்திருந் தவனும், யூதர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம்மதியாதவனுமாயிருந்தான்” என்று லூக்கா எழுதுகிறார். அவருக்கு அறிமுகமானவர்கள் தூரத்திலிருந்து வேடிக்கை பார்க்கிறார்கள். இவர்களில் ரோமர் கூட்டத்திற்கு எதிர்த்து அருகில் வர முடியாது. அந்த நேரத்தில் யோசேப்பு என்ற ஆலோசனைக்காரன் இயேசுவின் உடலைக் கேட்டு அடக்கம் செய்கிறான்.

ஆலோசனைக்காரன் என்பதற்கு ஆங்கிலத்தில் என்ன பொருள்பட வருகிறது என்பதைப் பார்ப்போம். ஆங்கிலத்தில் ஆலோசனைக்காரன் என்பதை HONOURABLE COUNSELLOR என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. மதிப்பிற்குரிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக யோசேப்பு இருந்திருக்க வேண்டும். பெரும் பதவியில் இருந்தாலும் அவன் நீதிமானாக இருந்தான். இயேசு கிறிஸ்துவுக்கு எதிராக யூதர்கள் திட்டம் தீட்டுவதை அவன் அறிந்திருந்தான். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத இயேசு கிறிஸ்துவின் அன்பிற்குரிய அந்தரங்க சீஷனாக யோசேப்பு இருந்துள்ளான் என்று இதன் மூலம் அறிய முடிகிறது.

யோசேப்பைக் குறித்து யோவான் என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம். யோவான் 19:38 – “இவைகளுக்குப் பின்பு அரிமத்தியா ஊரானும் யூதருக்கு பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக் கொண்டு போகும்படி பிலாத்துவிடம் உத்தரவு கேட்டான். பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகையால், அவன் வந்து இயேசுவின் சரீரத்தை எடுத்துக் கொண்டு போனான்” என்று எழுதுகிறார்.

புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலிருந்து நேரிடையாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அந்தரங்க சீஷன் என்பது தமிழ் மொழிபெயர்ப்பின்படி PERSONAL என்றும் பொருள்படக் கூடும். ஆங்கில மொழிபெயர்ப்பின்படி ரகசிய’ சீஷன் என்று பொருள்பட எழுதப்பட்டுள்ளது.

தமிழ் மொழிபெயர்ப்பின் படி PERSONAL ‘தனிஎன்ற பொருள்பட கண்டால், உதாரணமாக ஒரு அமைச்சருக்கு பல தனி அலுவலர்கள் இருப்பார்கள். அவர் அவருடைய துறை சார்ந்தவற்றை மட்டும் கவனிப்பார்கள். அவர்களில் ஒருவர் அமைச்சருக்கு நெருங்கிய நம்பிக்கைக்குரிய ஒருவராக இருப்பார். அமைச்சரின் தனிப்பட்ட துறை சார்ந்த காரியங்களை அவர் கவனிப்பார்.

மொழிபெயர்ப்பில் மாறுபட்ட கருத்துக்கள் தோன்றுவதால் அந்தரங்க சீஷன் என்பதை எப்படி ஏற்பது என்று உறுதியாகச் சொல்ல முடியாத நிலை இருப்பினும், இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு சீஷர்களுக்கும் இல்லாத தகுதி இந்த யோசேப்பிற்கு உண்டு என்பதை மறுக்க முடியாது. இதோ உன் தாய் என்று இயேசு யோசேப்பிடம் சொல்லி இருக்க வேண்டும் எனலாம்.

இயேசு சிலுவையில் அறைந்தபோது அருகில் அவருடைய சீஷர்கள் யாரும் உடன் இருந்திருக்க முடியாது. ஆனால் பெரும்பகுதி, செல்வாக்கு இவற்றின் அடிப்படையில் யோசேப்பு மட்டுமே உடன் இருந்திருக்க வேண்டும்.

இது தொடர்பாக இன்னொரு நிகழ்ச்சியையும் நினைவு கூறலாம்.

சீமோன் பேதுருவும் வேறொரு சீஷனும் இயேசுவுக்குப் பின் சென்றார்கள். அந்த சீஷன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாக இருந்ததினால், இயேசுவோடு கூடப் பிரதான ஆசாரியனுடைய அரண்மனைக்குள் பிரவேசித்தான். பேதுரு வாசலருகே வெளியே நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்த மற்ற சீஷன் வெளியே வந்து, வாசல் காக்கிறவர்களுடனே பேசி, பேதுருவை உள்ளே அழைத்துக் கொண்டு போனான்.” – யோவான் 18:16.

இங்கு யோவான் குறிப்பிடும் மற்ற சீஷன் யாராக இருக்க முடியும்? பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமாக இருந்தவன், பிரதான ஆசாரியனின் அரண்மனைக்குள் செல்ல அனுமதி பெற்றவன், அங்கு காவல் காக்கும் சிப்பந்திகள் மத்தியிலும் மதிப்பு மிக்கவன், இப்படிப்பட்ட சீஷன் திருமறையில், நாம் காணும் சீஷர்களில் யாராக இருக்க முடியும்?

யூதர்கள் மத்தியிலும், ரோம ஆட்சியாளர்கள் மத்தியிலும் கனம் பொருந்தியவன் யாராக இருக்க முடியும்? இயேசுவை கடைசி வரை பின்பற்றிச் சென்றவன் பேதுருவாகத்தானே வேதம் காட்டுகிறது. இதை எழுதிய யோவான் தானும் உடன் சென்றான் என்று எழுதவில்லையே!

இப்படி உள்ளத்தில் எழும்பும் வினாக்களுக்கு விடை காண முற்பட்டால் அது திருமறையில் நான்கு சுவிசேஷங்களிலும் சொல்லப்பட்ட, இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு சீஷர்களைத் தவிர ஒரே ஒரு சீஷன் யோசேப்பு மட்டுமே என்பதை மறுக்க முடியாது.

இவற்றை எல்லாம் மனதில் கொண்டு இதை ஆராய முற்பட்டால், இயேசு கிறிஸ்து இதோ உன் தாய்என்று சொன்ன வார்த்தை, அவர் அருகில் இருந்த, அதிகாரம், தகுதி இவைகளுக்குரிய ஒரே சீஷனாக யோசேப்பாகவே இருக்க முடியும் எனக் கூறலாம்.

இதுபற்றி எழுதிய பரிசுத்தவான்கள், தேவ ஊழியர்கள் எல்லாரும் யோவானிடமே இதைக் கூறினார் என்று எழுதியுள்ளார்கள். திருமறை இருபுறம் கருக்குள்ள பட்டையம். தேவனுடைய வெளிப்பாடு எனக்கு மாறுபட்டதாக இருக்கக் கூடும். பின்னால் சொல்லப்பட்ட நான்கு வார்த்தைகளுக்கும் எனது கருத்து மாறுபட்டதாகவே இருக்கிறது. ‘ஆவிக்குரியவன் நிதானித்து அறிகிறான்என்ற வேதவாக்கின்படி, திருமறையை படிப்பவர்கள் ஆவிக்குரியவர்களாக படித்து, தேர்ந்து பயனடைய வேண்டும் என விரும்புகிறேன்.

மற்ற பரிசுத்தவான்கள் எழுதியது, கருதியது தவறு என்று நான் எண்ணவில்லை, சொல்லவில்லை. இதுவரை நான் எழுதிய புத்தகங்கள் எல்லாம் சமய வரலாற்று ஆய்வின் பிரதிபலிப்பாகவே இருக்கும். பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள் பற்றியும் நான் கண்ட கருத்து மற்றவர்கள் கருத்துக்கு வேறுபட்டதாக இருந்தாலும், என் ஆய்விற்கும் சிந்தனைக்கும் முடிவிற்கும் அடிப்படை ஆதாரம் நமது திருமறையாகவே இருக்கும்.

திருமறையின் அடிப்படையில்தான் ஆய்வும் தொடக்கமும், முடிவும் இருக்கும் என்பதை படிப்பவர்கள் நன்கு அறிவார்கள். அடுத்து நான்கு வார்த்தைகளையும் பார்ப்போம்.

இடைப்பட்டநேரம்

இயேசு கிறிஸ்து சிலுவையில் சொன்ன மூன்று வார்த்தைகளுக்குப் பின் சில மணி நேரம் மௌனமாக இருந்திருக்கிறார். பின்னர் மதியம் 3 மணி அளவில்தான் கடைசி நான்கு வார்த்தைகளையும் பேசி இருக்கிறார் என்று வேத பண்டிதர்கள், வரலாற்று சமய ஆய்வாளர்கள் எல்லாரும் கருதுகிறார்கள்.

சிலுவை நேரத்தைப் பற்றிய வேத பண்டிதர்கள் கருத்தைக் காண்போம். இயேசு கிறிஸ்து சிலுவையில் முதல் மூன்று வார்த்தைகளை காலை 9 மணி முதல் மதியம் வரை சொன்னதாக வரிசைப்படுத்தி இருக்கிறார்கள். மதியம் முதல் 3 மணி வரை இயேசு கிறிஸ்து எதுவும் பேசவில்லை. பிற்பகல் 3 மணிக்கு கடைசி நான்கு வசனங்களைப் பேசி இருக்கிறார்

இவர்கள் கருத்தின்படி, திருமறையில் சிலுவை வசனமாகச் சொல்லப்பட்ட மூன்று வார்த்தைகள் இயேசு இந்த பூலோகத்திலுள்ள மனிதர்களுக்காக, மனிதர்களைக் குறித்து பேசியதாகக் காண்கிறோம்.

மதியம் முதல் மாலை மூன்று மணி வரை அவருடைய மௌனத்தை, பாடுகளின் நேரம் என்று கருத முடியாது. இயேசு கிறிஸ்து ஆவியில் பிதாவாகிய தேவனோடு உரையாடிக் கொண்டிருந்தார் என்பதே சரியான முடிவாகும்.

முதல் மூன்று வார்த்தை இயேசு கிறிஸ்து தானாக கூறப்பட்டிருப்பதையும், கடைசி நான்கு வார்த்தைகளும், தாவீதின் குமாரனாகிய இயேசு கிறிஸ்து தாவீது கூறிய வார்த்தைகளை மட்டுமே பேசி இருப்பதையும் ஆய்வு கண்ணோட்டத்தில் காண வேண்டும். தேவன் பரிசுத்த ஆவியினால் தாவீதுக்கு வெளிப்படுத்தி எழுதச் செய்த சங்கீத வசனங்களில் உள்ளவற்றை மட்டுமே இயேசு கிறிஸ்து கடைசி நான்கு வார்த்தைகளாக சிலுவையில் சொன்னார் என்பதை இயேசுவை மனிதனாக எண்ணி சிந்தியாமல் தேவகுமாரனாக எண்ணிப் பார்க்கும் போது புலப்படும்.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றி தீர்க்கதரிசனமாக வெளிப்படுத்திய ஏசாயா தீர்க்கதரிசி, “ஈசாயென்னும் அடி மரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அதன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.” ஏசாயா 11:1 என்று எழுதுகிறார். திருமறையில் பல இடங்களில் தாவீதின் குமாரன் என்று இயேசு கிறிஸ்து அழைக்கப்படுகிறார். ஆகையால், இயேசு கிறிஸ்து பற்றி தேவன் தாவீதுக்கு பரிசுத்த ஆவியால் பின்னர் நடக்கப் போகும் காரியத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதன்படி தாவீது எழுதிய சங்கீதத்திலிருந்து இயேசு கடைசி நான்கு வார்த்தைகளையும் பேசினார் என்று எண்ணத் துணியலாம்.

வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டானது எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே” யோவான் 5:39 என்று இயேசு கூறுகிறார்.

வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்க்கும் நாம் வேதம் கூறுவது போல தேவனுக்குரியவைகளை தேவனுக்குரியவைகளாகவும் மனிதனுக்குரியவைகளை மனிதனுக்குரியதாகவும் பொருள் காண முற்பட வேண்டும்.

இந்த நேரத்தில் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்ட சில காரியங்களை நினைவு கூறுவது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

உங்களுடைய விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு என் பேச்சும் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்பட்டதாயிருந்தது.

அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப்

பேசுகிறோம். இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்து போகிறவர் களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தாலல்ல.

உலகத் தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும் மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்.

அதை இந்தப் பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை. அறிந்தவர்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறைய மாட்டார்களே” – 1 கொரி 2:48. (சிலுவையில் அறையப்பட்டது கர்த்தராகிய இயேசு, மனிதரல்ல, தேவகுமாரனாக தேவசித்தத்தின்படி அனுப்பப்பட்டவர். சிலுவை வசனங்கள் அவரால் கூறப்பட்டது என்பதை மனதில் கொண்டு நாம் பார்க்க வேண்டும்

மேலும் பவுல் என்ன எழுதுகிறார் என்று பார்ப்போம்.

எழுதியிருக்கிறபடி தேவன் தம்மில் அன்பு கூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை,

காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இதயத்தில் தோன்றவுமில்லை. நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியாலே வெளிப்படுத்தினார். அந்த ஆவியானவர் எல்லாவற்றையும் தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருந்தார். மனுஷரிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறிய மாட்டான்.

நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியைப் பெற்றோம். அவைகளை நாங்கள் மனுஷ ஞானம் போதிக்கும் வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம்.

ஜென்ம சுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரிய வைகளை ஏற்றுக் கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்ற பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவும் மாட்டான். ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்பட்டான்.” – 1 கொரிந்தியர் 2:9-15

என்று பவுல் எழுதினார். இயேசு நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்கள் என் சுயமாய்ச் சொல்லவில்லை. என்னிடத்தில் வசமாயிருக்கிற பிதாவானவரே இந்த கிரியைகளைச் செய்து வருகிறார்” – யோவான் 14:10.

இவைகளின் அடிப்படையில் மீதி நான்கு சிலுவை வார்த்தைகளை ஆராய்வோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நீண்ட இடைவெளிக்குப் பின் 4வது வார்த்தையைப் பேசுகிறார்.

ஆசிரியர்: உறையூர் வளவன்

Leave a Reply