சிலுவையில் சிந்திய 7 முத்துக்கள் 04
4. என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்?
சில ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஆலயத்தில் சாட்சி கூறிய ஒரு பெண் ஒரு கடைக்காரர் தன்னிடம் நான் இயேசுவை கடவுளாக ஏற்றுக் கொள்ள மாட்டேன். அவர் கடவுள் என்றால் என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்று சொல்லி இருப்பாரா? என்றார் என்று சொன்னது என் நினைவிற்கு வருகிறது.
அவருடைய எண்ணமும் கேள்வியும் உண்மையும் நியாயமான தாகும். கிறிஸ்தவர்கள் சிந்திக்க வேண்டியவைகளாகும். நாமும் கிறிஸ்தவர்களாக இல்லாமல் அவர் நிலையில் இருந்தால் அப்படித்தான் சொல்லியிருப்போம். நானும் வேதத்தை ஆராய தவனாக இருந்தால் அப்படித்தான் எண்ணத் தோன்றும்.
இது ‘அவர் சொன்னதுதான். ஆனாலும் அவர் சொன்னது இல்லை என்று நான் சொன்னால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்? ஆம் இயேசு தான் சொன்னார். ஆனால், அது அவருடைய வார்த்தை இல்லை.
சங்கீதம் 22:1-இல் ‘என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று தாவீது சங்கீதத்தில் சொல்வதைப் பார்க்கிறோம். இந்த வார்த்தை அரமேய மொழியில் இயேசு கூறியதாகக் காண்கிறோம். இயேசு கிறிஸ்து பாடுகள் மத்தியிலே இதைச் சொன்னார் என்றும், உலக மக்களின் பாவங்கள் அவரைப் பற்றிய போது, தேவபிரசன்னம் அவரிடம் இல்லாமற் போயிற்று என்றும், ஆகையால்தான் இயேசு இவ்விதம் கூறினார் என்கிறார்கள்.
நீதியின் சூரியனான தேவன், இந்த உலகத்திற்கு நம்மை மீட்க ஒளியின் பிள்ளையாக அவதரித்த இயேசு கிறிஸ்துவுக்கும் இளைய மக்கள் பாவம் என்ற மேகம், காரிருள் அவர்களிடையே உள்ள பிரசன்னத்தை விலக்கி நிற்க, அந்த வேளையில் இயேசு இதைச் சொன்னார் என்பதே பலரும் கூறுகிறார்கள்.
“ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம். ஆத்துமாவையும், சரீரத்தையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்” – மத்தேயு 10:28-இல் சொல்லுகிற இயேசு இப்படிச் சொல்லியிருப்பாரா?
தேவன் தம் சித்தத்தின்படி நம் பாவங்களை சுமக்க, மீட்க அனுப்பிய தன் குமாரனை கை விடுவாரா? ஆபிரகாமிடம் உன் மகனை பலியிடு என்று தேவன் சொல்ல, ஆபிரகாம் கீழ்படிந்து தன் மகனை பலியிடச் சென்றபோது, பலியிடட்டும் என்று தேவன் காத்திருந்தாரா? அதன் பின் தன் மீது ஆபிரகாம் வைத்திருந்த விசுவாசத்தைப் பற்றி பேசினாரா? இல்லையே. அவர் பலியிடும் முன்பே அதைத் தடுத்து நிறுத்திய தேவன், தன் மகனை கைவிடுவார் என்று எப்படிக் கருத முடியும்?
அப்படியே உலக பாடுகள் மத்தியில் இயேசு தன் உடலில் ஏற்பட்ட துன்பத்தால் சொல்லியிருந்தால் ‘அய்யோ, அப்பா வலிக்குதே‘ என்று சொல்லியிருக்க மாட்டாரா? சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் தாவீது எழுதிய சங்கீதத்தின் வரியைத் தான் சொல்ல வேண்டுமா? அவர் வேறு விதத்தில் அல்லது வேறு வார்த்தையில் தன் துன்பத்தைச் சொல்லி இருந்தால், இயேசு பாவத்தின் நிழல் அவர் மீது படிய இப்படிச் சொன்னார் என்று கருத இடமுண்டு. இயேசு கிறிஸ்து பாவத்தைச் சுமக்க உலகில் வந்தார் என்பதால் பாவம் அவரைப் பற்றியது என்று எப்படிச் சொல்ல முடியும்?
உலகத் தோற்றத்தைப் பற்றி எழுதும் யோவான், “ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று. உண்டானதென்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. அவருக்குள் ஜீவனிருந்தது. அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை” யோவான் 1:1-5.
இருளில் ஒளியாக வந்த இயேசு கிறிஸ்துவை பாவ இருள் பற்றிக் கொள்ளவில்லை. பற்றிக் கொள்ளவும் முடியாது.
ஆட்டை பலியிடும்போதும், ஆட்டை போக்கடாவாக விடும்போதும் பண்டைய யூத மக்களும், எபிரேய மக்களும் அந்த ஆட்டின் தலையில் கையை வைத்து தங்கள் பாவங்களை அது சுமந்ததாகச் சொல்லி பலியிட்டும், போக்கடாவாக விட்டும் வந்தனர் என்பதை பழைய ஏற்பாட்டில் காண்கிறோம். அதனால் ஆடு அவர்கள் பாவத்தை சுமந்ததா? அது ஒரு அடையாளமாகத்தானே கருதப்பட்டது. இயேசு கிறிஸ்து நம் பாவத்திற்கு பிராயச் சித்தமாகத்தானே கருதப்பட்டார். இயேசு கிறிஸ்து நம் பாவத்திற்கு பிராயச்சித்தமாக, ஜீவபலியாக தம்மை ஒப்புக் கொடுத்தார் என்பதால் பாவங்கள் அவர் மீது வந்தது, அவர் பாவியானார் என்று எப்படிச் சொல்ல முடியும்?
‘பிதாவும் நானும் ஒன்றாய் இருக்கிறோம்‘ என்று சொன்னார். பரிசுத்தரான தேவன் மீதும் பாவ சுமை இருந்ததா? இருளும் ஒளியும் ஒன்று சேர முடியுமா? ‘என்னை அனுப்பினவர் என்னுடனே கூட இருக்கிறார். பிதாவுக்கு பிரியமானவைகளை நான் எப்போதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை.’ யோவான் 8:29 என்று இயேசு கிறிஸ்து சொன்னாரே. அப்படியிருக்க பிதா எவ்விதம் அவரை கைவிட முடியும்? தேவகுமாரனை மனித குமாரனாக எண்ணி பொருள்பட ஏற்பதுதான். இந்த வார்த்தை தேவன் கூறியதாக எண்ண முடியும். மேலும் ‘நான் சுயமாக பேசவில்லை. தேவனிடம் நான் கேட்டதையே பேசுகிறேன்‘ என்றெல்லாம் இயேசு சொன்னாரே, அவைகள் எல்லாம் பொய்யாகி, என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்பது மெய்யாயிற்றா? இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? வல்லமையுள்ள வார்த்தையாக இன்னும் இயேசு கிறிஸ்துவின் வார்த்தை வலிமை பெற்று இருக்கிறது என்பதை உணர்வோம். சாத்தானையும், வியாதியையும் விரட்டி, பாபக் கட்டுகள், சாபக் கட்டுகள் எல்லாவற்றையும் போக்க வல்ல அந்த வார்த்தைகளை வீண் வார்த்தைகளாக இருக்க முடியுமா?
ஒரு சமயம் மார்ட்டின் லூத்தர் “ஏன் என்னைக் கைவிட்டீர்‘ என்ற வார்த்தையின் பொருளை அறிந்து கொள்ள முயன்றார். உபவாசமிருந்து யாருடனும் பேசாமல் அதை ஆழ்ந்து சிந்தித்தார். சில மணி நேரம் அமைதியான நிலையில் தியானித்தார். பின்னர் இருக்கையிலிருந்து எழுந்து அறையில் அங்குமிங்கும் உலாவினார். பின்னர் ‘தேவன் தேவனால் கைவிடப்படுவதா? யாரால் அதை அறிந்து கொள்ள முடியும்?’ என்று அவர் சொன்னதை அருகில் இருந்தவர்கள் கேட்டனர் என்று ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்.
‘நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரகங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்” – ஏசாயா 53:5 என்பது உண்மையே. தேவன் நமது பாவத்திற்காக தம்மைத்தானே ஒப்புக் கொடுத்தார் என்பதால், நம்மை மீட்டுக் கொள்ள நம் மீது சுமத்தப்பட்ட தண்டனையை அவர் ஏற்றுக் கொண்டார் என்பதாம். அந்த பாவத்திற்கு அவர் காரணமாக முடியுமா? ஒரு தீவிரவாதியை தன் நாட்டிற்காக தன் உயிரைக் கொடுக்க மனித வெடிகுண்டாக மாறி, தன்னைத் தானே பலி கொடுக்க முன்வரும்போது… மகிழ்ச்சியுடன் அதை அவன் ஏற்றுக் கொள்ளும்போது, இந்த உலகத்தில் பிறக்கும் போது அதற்காகவே பிறந்த இயேசு கிறிஸ்து அந்த சோதனையை அடைந்தபோது வருந்தி இவ்விதம் சொன்னார் என்று எப்படி எண்ண முடியும்? அப்படியானால் அவருடைய பிறப்பே வீண் அல்லவா? இல்லை. இயேசு இந்த வார்த்தையை சொல்லுமுன் பிதாவுடன் உறவாடியிருந்த இயேசு தாவீதின் சங்கீத வார்த்தையை நினைவுகூர்ந்தார் என்றே சொல்லலாம். அதுவே பொருத்தமாக இருக்கும்.
ஆசிரியர்: உறையூர் வளவன்