சிலுவையில் சிந்திய 7 முத்துக்கள் 05

சிலுவையில் சிந்திய 7 முத்துக்கள் 05

சிலுவையில் சிந்திய 7 முத்துக்கள் 05

5. தாகமாயிருக்கிறேன்

தாகமாயிருக்கிறேன்‘ (யோவான் 19;28) என இயேசு கிறிஸ்து மூன்றாம் மணி நேரம் நெருங்குகின்ற நேரத்தில் இன்னும் சில நிமிடங்களில் தன் ஆவியை ஒப்புக் கொடுக்கும் முன் தாகமாயிருக்கிறேன்என்றார் என்று காண்கிறோம்.

இதிலும் ஒன்றை முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறிய வார்த்தை அவருடைய உலக பரியந்தமான தாகமா? அல்லது ஆவிக்குரிய தாகமா? என்பதை நாம் முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும். பிற்பகல் பொழுதுக்கும் மாலை 3 மணிக்குமிடையே சிறிது அமைதியாக எதுவும் சொல்லவில்லை. அந்த நேரத்திலும் அவர் பிதாவோடு உறவாடிக் கொண்டிருக்க வேண்டும். அதற்குப் பின் தேவனே, தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்ற தாவீதின் சங்கீதத்தில் உள்ள முதலாம் வார்த்தையை சொல்கிறார். அதன் பின் 5ஆம் வார்த்தையாகச் சொல்லும்போது தாகமாயிருக்கிறேன்என்று சொல்லும் வார்த்தையும் தாவீதின் சங்கீதத்திலிருந்த வார்த்தையே என்பதை மனதில் கொண்டு இதற்கு பொருள் காண வேண்டும்.

ஜீவத் தண்ணீர்என்ற இயேசு ‘என்னிடம் தன்னை ஜீவத் வருகிறவன் தாகமடைய மாட்டான்என்று சொல்லிய இயேசு தானே தாகமாயிருக்கிறேன் என்று சொல்லியிருப்பாரா? ஆனால் அவ்விதம் அவர் சொன்னார் என்பது வரலாற்று உண்மை. அப்படியானால் அதன் பொருள் என்ன? இதற்கு விடை காண தாவீதின் வார்த்தைகளைப் பார்ப்போம். தாவீது எந்த நேரத்தில் எதைக் குறித்து சொன்னார் என்றும் பார்ப்போம்.

சாத்தானை விரட்டும்போது இயேசு கிறிஸ்து தானாக எதுவும் சொல்லவில்லை. சத்திய வேத வசனத்தையே சொன்னார். இதுபோன்ற சோதனைக் காலத்தில் இயேசு கிறிஸ்து சத்திய வசனத்தையே மேற்கோள்காட்டி பேசி இருக்கிறார் என்பதை நாம் நன்கு அறிவோம். அதுபோன்று இந்த சூழ்நிலையிலும் இயேசு கிறிஸ்து வேத வசனமாக தேவன் பரிசுத்த ஆவியால் தாவீதுக்கு வெளிப்படுத்திய வசனத்தையே இப்பொழுதும் பயன்படுத்தினார் என்பதே சரியான கருத்தாக இருக்க முடியும். இதற்கு விடை காண முற்பட்டால் நாம் காணும் விடை இயேசு கிறிஸ்து சொன்னது ஆத்தும தாகமே என்பதை புரிந்து கொள்ள முடியும்.

தாகம் பற்றி எழுதிய ஒரு தேவ ஊழியர் தாகத்தை நான்கு விதமாகக் காண்கிறார்.

1. சரீர தாகம், 2. வேத வாக்கியர்கள் மேல் தாகம், 3. ஆத்தும தாகம், 4. தெய்வீகத் தாகம் என்கிறார். ஆனால் கிறிஸ்து சொன்னது சரீர தாகத்தையே குறிக்கிறது என்று பொருள் காண்கிறார். அதற்கு அவர் காட்டும் உதாரணம் தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார் (1 தீமோத்தேயு 3:16), அந்த வார்த்தை மாம்சமானது (யோவான் 1:14). அவர் மாமிசத்திலிருந்தபடியால் சரீர தாகம் அவரை வருத்தியது. தாகத்திற்கு அவர் அப்பாற்பட்டவர் அல்ல. நம்மைப் போலவே வாழ்க்கை முறை அவருக்கும் இருந்தது என்கிறார்.

ஆம், அவர் பசியாயிருந்தார் – (மத் 4:2), களைப்படைந்தார் – (யோவான் 4:6), கோபமுள்ளவரானார் – (மாற்கு 3:5), மனதுருக்க முள்ளவரானார் (மத் 9:36),துயரமுள்ளவரானார் (மத்தேயு – 26:37) இப்படி மனிதனுக்குரிய எல்லா குணாதிசயமுள்ளவருக்கு சரீர தாகம் ஏற்பட்டதில் வியப்பொன்றுமில்லையே!” என்கிறார்.

நல்லவேளை மனிதனுக்குரிய எல்லா குணாதிசயமுள்ளவருக்கு பாவமும் இருந்தது என்ற முடிவிற்கு வரவில்லை. அல்லேலுயா! மனிதனுக்குரியவைகளை மனிதனுக்குரியதாகவும், தேவனுக் குரியதை தேவனுக்குள்ளதாகவும் சிந்திக்க வேண்டும் என்ற வார்த்தையின்படி சிந்திப்போம். அவர் மனிதனாக அவதரித்தால் மனித குணமுள்ள அவரிடம் சரீர தாகம் இருந்தது என்பதை நாம் மறுக்க முடியாது. அவர் மனிதனாக வாழ்ந்த காலத்தில் ஏற்பட்ட தாகம் சரீர தாகமாக இருக்கலாம். ஆனால் பரலோகம் செல்லும் நேரத்தில் தேவனுடைய சித்தத்தை வெளிப்படுத்தும் இந்த நேரத்தில் இயேசு இப்படி கூறியிருப்பது சரீர தாகம் என்று சொல்லக் கூடுமானால் இயேசு கிறிஸ்து ஏன் கடைசி நான்கு வார்த்தைகளையும் வேதத்திலிருந்து, தாவீதின் சங்கீதத்திலிருந்து சொல்லியிருக்க வேண்டும்? ஒரு சாதாரண மனிதனாக, தண்ணீர், தண்ணீர் என்றோ, தண்ணீர் தா என்று வேறு வார்த்தைகளையோ பயன்படுத்தி இருக்கலாமே.

இப்பொழுது சங்கீதத்தில் தாவீது கூறும் இந்த வார்த்தைகளைச் சற்று காண்போம். அதன் பின் எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேத வாக்கியம் நிறைவேறத்தக்கதாக, தாகமாயிருக்கிறேன் என்றார் யோவான் 19:28. வேத வாக்கியம் நிறைவேறத்தக்கதாக தாகமாயிருக்கிறேன் என்று அவர் சொன்னதால்.. அவர் சொன்ன தாகம் பற்றி வேத வசனம் என்ன சொல்கிறது என்று பார்ப்பது நமது கடமையாகும். “என் ஆத்துமா உம் மேல் தாகமாக இருக்கிறது” சங்கீதம் 143:6.

பூர்வ நாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளை யெல்லாம் தியானிக்கிறேன். உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன். என் கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன். வறண்ட நிலத்தைப் போல என் ஆத்துமா உம் மேல் தாகமாயிருக்கிறதுஎன்று சங்கீதத்தில் தாவீது கூறுகிறார். மதியம் முதல் எண்ணி, எண்ணி தேவனோடு உறவாடி எதுவும் பேசாமல் இருக்கிறார். அதன்பின் என் ஆத்துமா உம் மேல் தாகமாயிருக்கிறது என்கிறார்.

சங்கீதம் 63:1இல் “என் ஆத்துமா உம் மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறதுஎன்கிறார் சங்கீதம் 63:2இல். “இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப் பார்க்க ஆசையாயிருந்து, உமது மகிமையையும் உமது வல்லமையையும் கண்டேன். இன்னும் சில நிமிடங்கள் கிறிஸ்து பரிசுத்த ஸ்தலத்திற்கு போகப் போகிறார். ஆவியின் தேவ மகிமையையும் வல்லமையையும் காண்கிறார். விரைவில் அங்குச் செல்ல அவருடைய ஆத்துமா தாகமாக இருந்தது என்று சொல்லியிருக்கலாம் அல்லவா?

இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனிதனாக அவதரித்து தேவனால் தமக்கு கொடுக்கப்பட்டு காரியம் முடிவுபெறும் கடைசி நேரம்அவர் மகிமை உயிரோடு எழுந்து சாத்தானை வெற்றி காணப் போகும் கடைசி நேரத்தில் அவர் இருக்கிறார். அந்த நேரத்தில் அவர் நினைவுகூறும் வேத வசனம் தாகமாயிருக்கிறேன்.. அவர் நினைவு கூர்ந்த வேத வசனம் எதுவாக இருக்கும்?

சங்கீதம் 42:1,2. “மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவது போல, தேவனே என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.”

என் ஆத்துமா தேவன் மேல், ஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறது. நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? என்ற தாவீதின் வார்த்தை போல, தேவனுடைய சந்நிதிக்குச் செல்லும் நேரம் நெருங்கி விட்டது. அங்கு தேவனோடு இருக்க, ஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறது என்று இயேசு கிறிஸ்து தாவீதின் வார்த்தையை நினைவுகூறுகிறார்.

அவர் இந்த உலகத்தில் வாழ்ந்த காலங்களில் அவருக்கு ஏற்பட்ட தாகத்தையும், உலக வாழ்க்கையை, மனித சரீரத்தை விட்டு தேவனோடு சேர இருக்க வேண்டிய இந்த நேரத்தில் கிறிஸ்து ஆவியால் நிறைந்தவராய், தேவனால் தாவீதுக்கு ஆவியில் தெரிவித்த வசனங்களையே கூறினார் என்று சொல்லலாம். கன்மலையிலிருந்து தண்ணீர் தந்த தேவனிடம் தன் ஆத்தும தாகத்தை போக்க, பரிசுத்த ஸ்தலத்தை தேடுவது அவருடைய ஆத்தும தாகமாகவேயிருந்தது. அல்லேலுயா!

ஆசிரியர்: உறையூர் வளவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *