சிலுவையில் சிந்திய 7 முத்துக்கள் 06
6. முடிந்தது
சிலுவை வார்த்தைகளில் 6வது வார்த்தையான ‘முடிந்தது’ என்ற வார்த்தை யோவான் 19:30இல் மட்டுமே காண முடிகிறது. மற்ற மூன்று சுவிசேஷங்களிலும் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூவரும் இதைக் குறிப்பிடவில்லை என்பதை காண்கிறோம்.
“இயேசு காடியை வாங்கிய பின்பு முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து ஆவியை ஒப்புக் கொடுத்தார்” யோவான் 19:30.மத்தேயு இதைக் குறிப்பிடும்போது, “இயேசு மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஆவியை விட்டார்” மத் 27:50 என்றும், மாற்கு இதை எழுதும்போது, “இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார்” – மாற்கு 15:37 என்றும், லூக்கா சுவிசேஷத்தில் இதைப்பற்றி எழுதும் லூக்கா “இயேசு, பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாகக் கூப்பிட்டுச் சொன்னார். இப்படிச் சொல்லி ஜீவனை விட்டார்” – லூக்கா 23:46 என்றும் எழுதுகிறார்.
ஆனால் யோவான் மட்டுமே ‘முடிந்தது‘ என்று சொல்லி தன் ஜீவனை விட்டார் என்கிறதைப் பார்க்கிறோம். இவர்கள் மூவரும் இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டார் என்று சொல்வதைப் பார்க்கும்போது இதற்கு முன் சொல்லப்பட்டபடி இயேசு தன் துன்பத்தால் சோர்ந்து போகவில்லை என்பதையும், நான் எதற்காக வந்தேனோ அந்தக் காரியத்தைச் செய்து முடித்து விட்டேன் என்று வெற்றியை முழக்கமிட்டார் என்றே கருத முடிகிறது. இந்த நிலையில் இதற்கு முன் சொன்ன நான் தாகமாயிருக்கிறேன் என்பது ஆத்துமதாகமே, சரீரதாகமல்ல என்றும் எண்ணத் தோன்றுகிறது.
‘கர்த்தர் எனக்காக யாவற்றையும் செய்து முடித்தார்‘ என்று தாவீது கூறிய வெற்றியின் குரல் போன்று ஒரு வெற்றி முழக்கமே என்று கருதலாம்.
ஏதேன் தோட்டத்தின் நடுவில் இருந்த மரத்தின் கனியை ஆதாம் மூலம் உண்ட மனித இனம் பாவத்திற்குள்ளானது. கபாலஸ்தலம் நடுவில் இருந்த கல்வாரி மரத்தில் தேவ ஆட்டுக்குட்டியான இயேசு கிறிஸ்துவின் தியாகக் கனியில் மனித பாவம் நீங்கிப் போனது.
யோவான் 19:28இல் ‘அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேத வாக்கியம் நிறைவேறத்தக்கதாக தாகமாயிருக்கிறேன் என்றார்” என்று காண்கிறோம்.
இதில் யோவான் குறிப்பிடும் வேதவாக்கியம் எது என்று பார்ப்போம். “என் ஆகாரத்தில் கசப்பு கலந்து கொடுத்தார்கள். என் தாகத்திற்கு காடியைக் குடிக்க கொடுத்தார்கள்” – சங்கீதம் 69:21.
இதில் குறிப்பிடப்பட்ட வேதத்தின் தீர்க்கதரிசன வசனத்தை யோவான் குறிப்பிடுகிறதைக் கண்டு நாம் ஒரு முடிவுக்கு வரக் கூடும். இயேசு கிறிஸ்து சிலுவையில் சொல்லிய வார்த்தைகள் எல்லாம் தாவீதின் தீர்க்கதரிசன வசனமே என்று சொல்லலாம். ஆகையால் கடைசியாக சொல்லப்பட்ட வசனங்கள், இயேசு சரீர துன்பத்தால் சொல்லப்பட்டவைகள் அல்ல. தீர்க்க தரிசன வசனங்கள். இயேசுவின் மூலம், அவர் மரணத்தின் மூலம் எப்படி நிறைவேறியது என்பதை தேவன் வெளிப்படுத்த இயேசு அதைச் சொன்னார் என்று அறிகிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்ட பிறப்பு, வளர்ப்பு இவைகள் எல்லாம் முன்னமே நிறைவேறப்பட்டது. இப்பொழுது அவர் மரணம் பற்றிய தீர்க்கதரிசனமும் நிறைவேறிற்று என்றும், தான் வந்த நோக்கம், தெய்வ சித்தம் மனுக்குல மீட்பு, இரட்சிப்பு இவைகள் எல்லாம் நிறைவேறிற்று என்பதை, தான் பெற்ற வெற்றியை முடிந்தது என்று குறிப்பிட்டு, இனி மனுஷ குமாரனாக உலகில் தனக்கு வேலை இல்லை என்பதைக் காட்டினார்.
ஆசிரியர்: உறையூர் வளவன